கானல் காலங்கள்

marapachi

“ஏன்னா ! எனக்கு கார்த்திக் குரல் கேக்கறது. அவன் பக்கத்தாத்துல இருக்கானான்னு போய்ப் பார்த்துட்டு வாங்கோ” திரும்பத் திரும்ப ருக்மணி கொடுத்த குடைச்சலால் கோபமானார் ராமமூர்த்தி.
”அவன் எங்கடி இங்க இருக்கான், உனக்கு எத்தனை தடவை சொல்றது. அவன் வெளி நாட்ல வேலையா இருக்கான். யாரையுமே நிம்மதியா இருக்க விட மாட்டடி நீ,” குமைந்தபடியே மாடிக்குச் சென்று மாமியின் துணிகளையும் சேர்த்து உலர்த்தச் சென்றார். சற்று நேரம் மாடிப்படியில் அமர்ந்தபடியே ஸ்ரீ ருத்ரம் ஜபித்தார்.
மனது ஒரு லயத்தில் கட்டுப்பட மறுத்தது. ஆயிற்று, மாமியின் மனம் பிரள ஆரம்பித்து 15 வருடங்கள். சலிக்காமல் செய்கிற மந்திர ஜபமும், நாள் தவறாமல் தஞ்சைப் பெருவுடையாரையும், பெரிய நாயகியையும் தரிசிப்பதாலும் தான் சித்தம் கலங்காமல் ஒரு மாதிரி வண்டி ஓடுகிறது அவருக்கு.
வீட்டுக்கு வீடு வாசப்படி; எல்லார் ஆத்துலயும் பிரச்சனை இல்லாமலா இருக்கு? நம்மாத்துல முதலுக்கே மோசம்! ஆத்துக்காரிக்கு மனசு விட்டுப்போச்சுன்னா வீடென்ன நன்னாவா இருக்கும்? அவர் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது ஓர் அணில். வீட்டைச் சுற்றி கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை என மரங்கள். வெய்யில் மாசி மாதத்திலேயே நன்றாகக் கொளுத்த ஆரம்பித்து விட்டிருந்தது.
மணி 12 ஆச்சு. தபால்காரரைப் பார்த்துட்டுப் போய்ச் சாப்பிடணும். சமையல்கார மாமி பண்ணி வெச்சுட்டு போய் இருக்கார். கார்த்தாலே ஒரு வாட்டியும், சாயங்காலம் ஒரு வாட்டியும் வந்து சமைச்சு வெக்க ஏற்பாடு. போன வருஷம் வரைக்கும் நானே சமாளிச்சுட்டேன்.இப்போ தான் எனக்கும் வயசாயிடுத்து, தள்ளலைன்னு ,குழந்தைகள் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கா.
தஞ்சாவூருக்குக் குடி புகுந்து முப்பது வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. வந்த புதுசுல, கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும் வயல் தான். ஆடி மாசம் காவேரில தண்ணி தொறந்து விட்டான்னா அவ்ளோ ரம்யமா இருக்கும். இப்போ மாரி நிலத்தைத் தரிசா போட்டு பிளாட் போடல அப்போ எல்லாம்.
தெருவில இறங்கி நடந்தா – ஜி, நல்லா இருக்கீங்களா ஜி என அடிக்கொரு ஜி போட்டு பேசற அளவுக்கு இங்க நிறைய பேரைத்தெரியும்; கல்யாணசுந்தரம் ஹை ஸ்கூல்ல, ஹிந்தி வாத்தியாராய் வேலை பார்த்து,ரிட்டயர் ஆகி பத்து வருஷம் ஆயிடுத்து.
இப்போ எல்லாம் எல்லா நாளும் ஒரே மாதிரி தான் ;செக்கு மாடு மாரி , சாப்பாடு, தூக்கம், கோவில்னு தான் போறது பொழுது. குழந்தைகள் வளர்ந்து அவ அவா வாழ்க்கைன்னு ஆனப்புறம் இது ஒரு காலிக்கூடு தானே.
அன்னித்த நாள்ல எல்லாம் இப்போ மாரி சட்டுனு வேலை கிடைக்காது; யாராவது மாமா, சித்தப்பான்னு வேலை பண்ணி வெக்கறேன்னு சொன்னா பம்பாய்க்கும் சென்னைக்குமா போவா. எனக்கு அப்டியும் யாரும் இல்ல. அப்பாவுக்கு பெரிய குடும்பம். நாங்களே மொத்தம் ஆறு குழந்தைகள்.
எங்கம்மா சாதம் போட்டு மோர் விடும்போது நிறைய நாள் கேலி பண்ணி இருக்கேன். ஏனம்மா, மோர்ல கங்கை, யமுனை எல்லாம் ஓடரதேன்னு. அவ பாவம் ஒரு சுகமும் அனுபவிக்காம வறுமையோடயும், வயத்துப் பசியோடயும், பிரசவத்துல போய்ட்டா.
எங்க கிராமத்துல இருந்த கோவில்ல கொஞ்ச நாள் உதவி பண்ணிண்டே, ஹிந்தி பரீட்சை பாஸ் ஆனதுல, இந்த வாத்தியார் வேலை கிடைச்சுது. கல்யாணம் பண்ணிக்கரச்சே எனக்கு வயசு 30. அந்த நாள்ல அது பாதி கிழம் வயசு. அப்போ எல்லாம் நன்னா தான் இருந்தா ருக்மணி .

சமையலுக்கு வர மாமி, இன்னிக்கு சீக்கிரம் கிளம்பிட்டா.
முன்ன ஒரு நாள், காய்கறி கடைல இருந்தப்போ, சென்னையிலிருந்து என் செல்லுல ஒரு போன் ” ஏம்பா மூர்த்தி. என்ன இப்படி பண்றா ருக்மணி ?. நான் உங்காத்துலேந்து 20000 ரூபாயை உனக்கு தெரியாம எடுத்துண்டு வந்துட்டேன்னு போன் பண்ணி திட்டிண்டே இருக்கா. டாக்டரை பாக்கரெளொனொ?” ருக்மணியோட அண்ணா சாமா தான் பேசினார்.
ஆத்துக்கு வந்து பேசினேன். “நம்மாத்துல நான் பணம் எதுவும் வெக்கல. நீயா கற்பனை பண்ணிண்டு சாமாக்குப் பேசி இருக்கே. இனிமே யாருக்காவது போன் பேசறதுக்கு முன்னால என் கிட்ட கேளு ருக்கு. ”
“. நானா ஒண்ணும் கற்பனை பண்ணல. நீங்க சும்மா இருங்கோ. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாம் நம்மளை ஏமாத்த பாக்கறா.” சுவத்துல அடிச்ச ரப்பர் பந்தாட்டம் வேகமா பதில் சொன்னா ருக்கு.
யாரு கிட்டவாவது பேச வேணும்னு தோணிட்டால் அடுத்த நிமிஷமே போனை கைல எடுத்துடறா.
இந்த கூத்து முடிஞ்சு கொஞ்ச நாள் ஒரு பிரச்சனையும் இல்ல.
சமையலுக்கு வர மாமி, இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்டா.
தபால்கார் போயிட்டார்.
“வா ருக்மணி சாப்டலாம்.”
தட்டை எடுத்து வெச்சேன் .ஒரு வார்த்தையும் பேசாம சாப்பாட்டுக்கடை ஆயிடுத்து.
ஹிந்தி பிரச்சார் சபா விஷயமான வேலையா,மன்னார்குடி வரைக்கும் போக வேண்டி இருக்கு.; திரும்பி வர சாயங்காலம் ஆயிடும்.
ஆத்தைப்பூட்டிண்டு இருன்னு சொல்லிட்டு பையை எடுத்துண்டு வந்தேன்.
நல்ல நேரமா பஸ்ல கூட்டம் இல்ல. ஜன்னலோரமா இடமும் கிடைச்சுடுத்து. மாசா மாசம் ஏதாவது ஒரு பிரச்சனை.
போன வாரம், என் தங்கை போன் பண்ணினா. ” அண்ணா. மன்னி நேத்திக்கு என்னை கூப்டா. என் மாப்ளையும் பொண்ணும் விவாகரத்து வாங்கிக்க போறாளானு கேக்கறா. எனக்கு கை காலெல்லாம் நடுங்கிப் போச்சு அண்ணா. நன்னா இருக்கற பொண்ணை போய் இப்படி எல்லாம் கற்பனை பண்றா மன்னி.”
“விடு. .மன்னி கதை உனக்கு தெரிஞ்சதுதான். அவ மனசால யாருக்கும் கெடுதல் நினைக்கமாட்டா. அவ உன்னை வேணும்னு அப்டி பேசல அம்மா. உனக்கும் இது தெரியும். டாக்டர் சொல்ற போல இது Schizophrenia, ஒரு மோசமான மன நோய். இந்த நோய் இருக்கறவாளுக்கு தன்னைச் சுத்தி நடக்கறது எல்லாமே தப்பா தான் தெரியும். உடஞ்ச கண்ணாடி பிம்பம் மாதிரி தான் இருக்கு அவ மனசு.
நம்ம நிழல், வெளிச்சத்துக்கு ஏத்த மாறி எப்படி சின்னதாவும் பெருசாவும் விழறதோ, அதை மாரி தான், இல்லாத விஷயங்கள் எல்லாம் இருக்கற மாரி அவ மனசுல பெருசா விஸ்வரூபம் எடுக்கறது. நாம என்ன பண்ண முடியும் சொல்லு? நீ இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்காதே.” ன்னு சொல்லி சமாதானப்படுத்தினேன்.
“என்னவோ போ அண்ணா. எப்டித் தான் நீ தனியா சமாளிக்கறியோ?”- புலம்பிண்டே போனை வெச்சுட்டா.
வயசான காலத்துலதான் ஒரு மனுஷனுக்கு இன்னும் பேச்சுத் துணைக்கு ஆம்படையா வேணும். ருக்மிணி இருக்கற நிலைல என் மனசு பல நேரங்கள்ல தனியா யோசனை பண்ணியே காலத்தைக் கடத்தறது.
என் பெரிய பையனுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுத்து. அவனுக்கு சிங்கப்பூர்ல வேலை.அங்கேயே ஜாகை.
என் மாட்டுப் பொண் சொல்றா. யாரா இருந்தாலும் ஒரு நல்ல வடிகால் வேணும்பா; மனசு சும்மா இருந்தா எதையாவது சிந்தனை பண்ணிண்டே தான் இருக்கும்.
மாட்டுப் பொண் வந்தா சொல்லிண்டே இருப்போ. அப்பா, இந்தாத்துல ஒரு பொண் குழந்தை இருந்திருக்கலாம்; அம்மாவைத் தாங்கி இருப்பா. இவ்ளோ தூரம் ஆகி இருக்காதுன்னு.
ருக்மிணிக்கு என் மாட்டுப் பொண்ணைப்பிடிக்கும். எப்போ நல்ல சேதி சொல்லுவேன்னு எல்லாரும் குடையறா, மனசு வலிக்கறது அவளுக்கு.
அவளை ருக்மிணி மட்டும், குழந்தை இல்லைன்னு , ஒண்ணும் சொல்ல மாட்டா. அவளும், அவ இங்க வர நாட்கள் முழுக்க ’அம்மா கோலம் போடுங்கோம்மா, வாக்மன்ல பாட்டுகேளுங்கோ அம்மா,’ அப்டி இப்டின்னு சுத்திச் சுத்தி தன்னால அம்மாவை இந்த நிலமைலேந்து வெளில கொண்டு வர முடியுமான்னு பாக்கறா.
சில நேரம் தோண்றது, அவளோட மனசு இவ்ளோ தூரம் ஆனதுக்கு காரணம் நான்தானோன்னு. யாருக்கு புரிஞ்சது அந்த நாள்ல? அவளுக்கும் ஒரு வடிகால் வேணும்; தன் வயசுக்கேத்த மாரி ஸ்நேகிதிகள் வேணும்னு.
வெளி வாசலுக்கு அனுப்பாத ஆத்துக்கு உள்ளேயே பொத்தி வெச்ச வளர்ப்பு. பொறந்த ஆத்துல, கூட்டுக்குடும்பத்துல செல்லப் பொண்ணு; ஆத்துக்குள்ள உக்காந்து பத்து பசைன்னு ஆசாரம் பேசறது, மத்த ஜாதிக்காராளை வீட்டுக்கு உள்ள வர சொல்லாம இருக்கறது, சகுனம் பாக்ரதுன்னு, ஐயராத்துக்குள்ளெ  இருக்கற அத்தனை அசமஞ்ச குணமும் வந்தாச்சு பதினெட்டு வயசுலயே.
ஆரம்பத்துல தனிக் குடித்தனம் வெக்க எங்கப்பா மாட்டேன்னுட்டார். எங்கம்மா என் கல்யாணத்துக்கு முன்னாடியே காலமாயிட்டா. ருக்குக்கு,அவ வயசுல ஒரு நாத்தனார், அவளை விட பெரிய ரெண்டு மச்சினர்கள். அஞ்சு வயசுலயும், ஏழு வயசுலயும் ரெண்டு குட்டி நாத்தனார்னு ஒரு பெரிய பட்டாளம் எங்காத்துல.
அந்த நாள் மனுஷா எல்லாம் கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம் தான்.
 குருவி தலையிலே வெச்ச பனங்காய் மாதிரி,பெரிய குடும்ப பொறுப்புகள்! தாங்க முடியல அவளால.
யார் யார் தன்னை என்ன சொன்னாலும் உதறத் தெரியாம, மனசுக்குள்ள அதையே திரும்பத் திரும்ப நினச்சு… வருத்தப்பட்டு… சிந்தின பால் மாதிரி ஆகி போச்சு வாழ்க்கை!
உங்க தம்பியாத்துப் பூணலுக்கு நான் வரல, என்னைப்பத்தி அவா கேலி பண்ணி பேசறா; நான் வர மாட்டேன்னா. இருவது வருஷமா எங்காத்துல எந்த விசேஷம் வந்தாலும் முதல்ல ஒரு சத்யா க்ரஹம் தான்.
ஆத்துக்கு மூத்த பையன் நான், நம்ம தங்கை தம்பிகளுக்கு நல்லது கெட்டது நடந்தா நாம போகாம இருக்க முடியுமா?
எங்காத்துலயும் ருக்மணியை ரொம்ப மோசமா தான் நடத்தி இருக்கா.
ருக்மிணி சீமந்தம் முடிஞ்சு அவ அம்மாவாத்துக்கு போறச்சே எங்காத்துக்கு புள்ளை வாரிசு தான் வேணும்னு சொல்லிண்டே இருந்திருக்கா எங்காத்துல எல்லாரும். வயத்துல இருக்கறது பொண் குழந்தைனா ஏதாவது சொல்லுவானு பயம் ருக்மணிக்கு.
எங்கப்பாவும் வாயால எப்பவும் தேள் மாரி கொட்டிண்டு தான் இருப்பார்.
முதல் மூணு வருஷம் முழுக்க என்னை பாக்கும்போதெல்லாம் அழுகை தான். நாம தனி குடித்தனம் போலாம்னு.
இங்க தஞ்சாவூருக்கு தனிக்குடித்தனம் வந்த பின்னால, நம்மை யாரும் அதிகாரம் பண்ணல அப்டிங்கற நினைப்பும், வீட்டுக்கு கடைக்குட்டி என்பதால இருக்கற கொஞ்சம் சோம்பேறித்தனமும், அக்கம்பக்கத்துல பிராமண வீடே இல்லைங்கறதும், அவ வெளி உலகத்தோட சேராம பூட்டு போட்டுக்கரதுக்கு வழி ஆகிப் போச்சு.
என் தம்பி பொண்டாட்டிகள் ரெண்டு பேரும் சென்னைல வேலைக்குப் போயிண்டே வீட்டையும் நன்னா நிர்வாகம் பண்றா. அவாளைப்பார்த்து மனசுல ஒரு தாழ்வு மனப்பான்மை.
நமக்கு வேலை இல்லை, சொந்த வீடு இல்லை, ஓரகத்திகள் மதிக்கல, சொந்தங்கள் எல்லாம் மட்டமா தானே நினைக்கறது? இது தான் மனசுல எப்பவுமே.
எத்தனை கட்டா இருந்தவ தெரியுமா? ரெண்டு பக்கமும் மூக்குத்தியும், கல்லு வெச்ச தோடும், ஆறு முழ புடவையுமா, அத்தனை களையா இருப்பா.இப்போ உடம்பெல்லாம் வத்தி, தலையெல்லாம் நரைச்சு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கா.
ரெண்டு புள்ள குழந்தைகளுக்கும் பத்து வயசுக்கு மேல ஆற வரைக்கும் எனக்கு ஒண்ணும் பெருசா தோணல; நான் பாட்டுக்கு பள்ளிகூடத்துக்கு போய் பாடம் எடுக்கறது, கோவில் குளம்னு இருக்கறதுன்னு இருந்துட்டேன்.
இப்ப மாரி டிவியும் இல்ல; புத்தகம் படிக்கற பழக்கம் இல்ல; எதுலயும் ஆர்வம் இருக்கற மாரி அவ வெளிப்படுத்தல்ல.
ருக்மிணிக்கு என்னை விட பதினோரு வயசு இளமை. நிறைய நேரத்துல எங்க மன ஓட்டம் வித்தியாசமா இருக்க வயசும் காரணம்.
கொஞ்சம் கொஞ்சமா வீடு வாங்க சேமிச்சுண்டே வந்தேன். அது வரைக்கும் சின்ன சின்ன போர்ஷன்ல வாடகைக்கு இருந்தோம்.
மத்தியான நேரத்துல, பக்கத்து போர்ஷன்காரன் அவன் வீட்டுக்குள்ள, ஏதோ ஆபாசமா பேசி இருக்கான். இது தினம் தினம் தொடரவும், சொல்லவும் முடியாம, மனசுல இதே வார்த்தைகள் திரும்ப திரும்ப வர ஆரம்பிச்சுடுத்து.
என் மாமனார் காஞ்சி பெரியவரோட ரொம்ப நெருக்கம். எனக்கு ஏன் இப்படி கெட்ட வார்த்தைகள் மனசுல வரதுன்னு தன் மனசுக்குள்ள தன்னை வருத்திக்க ஆரம்பிச்சா.
எதிர்த்த வீட்டு பொம்பளை என்னைப் பத்தி பேசறான்னு சொல்ல ஆரம்பிச்சா.சில பேர் காபி பொடி கடன் வாங்க வந்தா, அவாளை முகத்துக்கு நேர நீங்க எங்காத்துக்கு வரதீங்கோன்னே சொன்னா.தொடர்ந்து நாலு நாள் தூங்கல.
டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்தார். ஏதோ பயந்து இருக்கானு மந்திரிச்சுண்டு வந்து கயறு கட்டிப்பார்த்தோம்.
முன்ன எல்லாம் யாருக்கும் மன நோய் பத்தி அவ்வளவா தெரியாது.
கொஞ்ச நாள் நன்னா இருப்பா, கொஞ்ச நாள் மறுபடி மனசுல வெறுப்பு, பயம், ஏறுமாறா எண்ணங்கள்.
அலை அலையா மனசுல எழும்பற எண்ணங்களுக்கு அவளால பூட்டு போட முடியல.நிறைய சைக்கியாட்ரிஸ்டை பார்த்தாச்சு. மருந்தோட அளவு மாறினால் தூக்கம் தான். அளவு குறைஞ்சா அழுகை. ஒண்ணும் பெருசா முன்னேற்றம் தெரியல. எல்லாரும் என்னைப் பத்திப் பேசறா, கேலி பண்றானு ரகளை கூட்டினா.இந்தப் பிரச்சனையால வீடு மாறிண்டே இருந்தோம்; கடைசில ரிடயர் ஆறதுக்கு மூணு வருஷத்துக்கு முன்னால தான் சொந்த வீடு வாங்கினோம்.
குழந்தைகள் பாசமா தான் இருக்கா. ஆனா எங்கியும் அவளால இயல்பா இருக்க முடியல.இன்னும் எத்தனை வருஷமோ, மாசமோ, ஆண்டவன் கணக்குனு தெரியல.அது வரை எங்க வண்டி இப்படி தான் ஓடியாகணும்.
ஒரு வயசுக்கப்புறம் உலகத்துல யாரும் உண்மைத் துணை இல்ல. தினம் தினம் சுவாமிய தரிசிக்கறது தான் எனக்கு இருக்கற ஒரே ஆறுதல். சுவாமி பாதத்துல பாரத்தை இறக்கி வெக்கலைனா தூக்கம் வர மாட்டேங்கறது.
எனக்கு இதயத்துல கோளாறு. பைபாஸ் ஆபரேஷன் அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆச்சு. குழந்தைகள் சென்னைல இருங்கோ அப்பா அப்டிங்கறா. ஆனா எனக்குத்தான் சென்னை ரொம்ப வேகமா இருக்கறமாரி இருக்கு. நான் பழகின ஊர் தான் வயதான காலத்துல எனக்கு சௌர்யம்.
மன்னார்குடிக்கு நாராயணன்ஜீயை பாக்க வந்தேன்.அவரோட சேந்து, ஹிந்தி பிரச்சார் சபாவுக்கு ஒரு சில புஸ்தகங்களை எழுதிண்டு இருக்கேன்.ருக்குவ தனியா விட்டுட்டு வரதுனால வித்யா ராஜகோபாலனைப்பாக்க போகல. நேர வந்த வேலையை முடிச்சுட்டு, பஸ் ஏறிட்டேன். மணி ஆறாக போறது. இன்னும் பத்து நிமிஷ நடைல ஆத்துக்கு போய்டுவேன்.
ஆத்து வாசல்ல சமையல் மாமி நிக்கறாளே? எதாவது பிரச்சனையா?
நடையை வேகமாக போட்டேன்.
“என்ன மாமி. ஏன் வெளில நிக்கறேள்?” மாமி பதில் சொல்றதுக்குள்ளயே உள்ளேந்து ருக்கு சொன்னா.” அவாளை போக சொல்லுங்கோ. ஆத்துக்கு தூரம் அவா. தீட்டோட நம்மாத்துல வந்து சமைக்கறா. இதெல்லாம் நம்மாத்துக்கு கெடுதல்.”
அந்த மாமிக்கு வயசு அறுவதுக்கும் மேல ஆயிடுத்து.”மன்னிச்சுக்குங்கோ மாமி. மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீங்கோன்னேன்.”
“கொஞ்சம் சொல்லி வைங்கோ மாமா. ரொம்ப நேரமா வாசல்ல நிக்கறேன். கதவையும் திறக்கல; வாய் ஓயாம திட்றா. நானும் சமையலை முடிச்சுட்டு போய் எங்காத்து வேலையும் பாக்கணுமே.”
எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.
வெளி கேட்டோட பூட்டை தொறந்து நான் உள்ளே வரவும், ருக்குவோட குரல் வீதி வரைக்கும் கேக்கறதுக்கும் சரியா இருந்தது.
“அந்த மாமியை நாளைலேந்து வர வேண்டாம்னு சொல்லுங்கோ”.

One Reply to “கானல் காலங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.