உலகின் வரலாற்றில் மக்கள் தாம் பிறந்த நிலப்பரப்புகளை விட்டு விட்டுப் பல விதங்களில் பிற நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் பெயர்தலில் அனேக நிலங்களிலிருந்து மக்கள் ஒரு நிலத்துக்குக் குடியேறியது என்பது சிறிதாவது வினோதமானது. இப்படிப்பட்ட குடிபெயர்தல் அமெரிக்காவிற்கு நேர்ந்தது. அமெரிக்கா எனும்போது யு.எஸ் என்று அறியப்படும் அமெரிக்கக் கூட்டமைப்பையே சொல்கிறோம். இப்போது வசிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வந்தேறிகளே. ஆதி குடிகள் மிகச் சிறு தொகையாகிப் போனார்கள். அந்த வன்முறை வரலாறு இன்னமுமே ஒழுங்காக அங்கீகரிக்கப்பட்டு சமூகப் பிரக்ஞையில் இறங்கவில்லை.
இங்கு எந்தெந்த நாடுகளிலிருந்து என்ன காலகட்டத்தில் மக்கள் குடி பெயர்ந்தனர் என்பதை இய்க்கமுள்ள ஒரு காணொளிப் படத்தின் வழியே இந்த வலைப்பக்கம் காட்டுகிறது. இதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி அந்தப் படத்தை அமைத்தவர் சுட்டுவது கவனிக்கப்படலாம்.
இன்று அனேக யூரோப்பிய நாடுகளும் தம் எல்லைகளை அன்னிய நிலத்து மக்களுக்கு எப்படி அடைப்பது, குடி பெயர்வை எப்படித் தடுப்பது என்று பார்க்கத் துவங்கியுள்ளன. பிரிட்டனில் நடந்த கருத்துக் கணிப்புத் தேர்தலோ குடியேறிகளுக்கு எதிரானதே. இந்தக் கட்டத்தில் அமெரிக்காவிலும் குடியேறிகளுக்கு எதிரான அரசியல் தலையெடுத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
ஆனால் முதலில் குடியேறியவர்கள் பின்னே வருவோரை இழிவாகக் கருதுவது என்பது மாறாததொரு நிலை என்றாலும் கடைசியில் வந்து சேர்ந்த ஆசியரின் நிலை இன்று மேலாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து கடை நிலையில் இருக்கும் மக்கள் குழுவில் கருப்பினத்து மக்களும், ஓரு பகுதி ஹிஸ்பானியர்கள் என அறியப்படும் லத்தின் அமெரிக்கக் குடியேறிகளுமே. அதெல்லாம் மாறத் தேர்தல் முறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வேண்டி இருக்கும்.