முகப்பு » உலக அரசியல், தீவிரவாதம், பன்னாட்டு உறவுகள்

கல்லறையின் மீதொரு தேசம் – 2

முந்தைய பகுதி:பகுதி ஒன்று

rwanda genocide

2004 இலா அல்லது 2005 இலா என நினைவில்லை. ஹோட்டல் ரவாண்டா என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை டிவிடி யில் பார்க்க நேர்ந்தது. அன்றுதான், 1994ல் ரவாண்டாவில் நிகழ்ந்த இன அழிப்பைப் பற்றிய ரத்தமும் சதையுமான ஒரு பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. 1990 களில் நடந்து முடிந்த ரவாண்டா மற்றும் போஸ்னியா இன அழிப்புகள் வெறும் செய்திகள், புள்ளி விவரங்கள் எனக் கடந்து சென்றிருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது. கிட்டத் தட்ட 1 லட்சம் உயிர்களைக் காவு கொண்ட போஸ்னியக் கலவரம் பேசப் பட்ட அளவுக்கு, அதை விட பத்து மடங்கு உயிர்கள் மடிந்த ரவாண்டாவின் பிரச்சினை பேசப்படவில்லை. ஏனெனில், கருப்பு ரத்தத்தின் விலை மலிவு.

ரவாண்டா அதிபர் ஹப்யாரிமனாவும், புருண்டி அதிபரும் கொல்லப்பட்ட ஏப்ரல் 6 ஆம் தேதி மாலையில், க்ரைஸிஸ் கமிட்டி என்னும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ரவாண்டா ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் அகஸ்டின் ந்டிண்டிலியிமனா (Augustin Ndindiliyimana) மற்றும் கர்னல் தியோனெஸ்டே பகோசோரா (theoneste Bagosora) போன்ற உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அது. அதிசயமாக, பல உயர் அதிகாரிகள் இருக்க, ஜூனியரான பகோசோரா இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார். இதிலிருந்து, ரவாண்டா அரசு ராணுவத்தின் உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. பகோசோரா, ஹப்யாரிமனாவின் மனைவி மற்றும் தீவிரவாதத் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர். அன்று மாலை, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் தலைவரான ரோமியோ டலேர், பகோசோராவைச் சந்தித்து, ரவாண்டா அதிபர் மரணமடைந்த நிலையில், அடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்க்கப் படவிருந்த, மிதவாதத் தலைவர் அகாத்தே விலிங்கியிமனா (Agathe Uwilingiyimana) சட்டப்படி தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனக் கோருகிறார்.

அகாத்தே மக்களின் நம்பிக்கையைப் பெற்றவரல்ல எனச் சொல்லும் பகோசோரா, அவருக்கு ஆளும் தகுதிகள் இல்லையென்றும் கூறி அகாத்தேவுக்குத் தலைமைப் பொறுப்பைத் தரமறுத்துவிடுகிறார்.  அதிபரின் மரணத்தால், கட்டுமீறிச் சென்றிருக்கும் அதிபரின் காவலர்களை அடக்கி அமைதியை நிலைநாட்டுவதே தமது குழுவின் நோக்கம் எனவும், அமைதி திரும்பியவுடன், ஆருஷா ஒப்பந்ததை நிறைவேற்றுவதே தமது நோக்கம் எனவும் கூறுகிறார்.

அதை நம்பாத, டலேர், அகாத்தே, ரவாண்டா வானொலியில் மக்களுக்கு உரையாற்ற ஏற்பாடுகள் செய்கிறார். அவரின் பாதுகாப்புக்காக பத்து பெல்ஜிய வீரர்களை அனுப்புகிறார். ஆனால், அதற்குள், ரவாண்டா வானொலி நிலையத்தை அதிபரின் காவற்படையினர் கைப்பற்றி விட, அகாத்தே உரையாற்ற முடியாமல் போகிறது. அதிபரின் காவற்படை, ஏப்ரல் ஏழாம் தேதி காலை, அகாத்தேயின் வீட்டை முற்றுகையிட்டு, அவருக்குக் காவலிருந்த பெல்ஜிய வீரர்களைச் சரணடைய வைக்கிறது. அதன் பின்னர் அகாத்தேயின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைகிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக ஒளித்துவிட்டு, அவர்களைக் காக்க அகாத்தேயும் அவர் கணவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  அவர்களே அங்கேயே கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்குக் காவலாக இருந்த பெல்ஜிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்கள் பிறப்புறுப்புகள் அறுக்கப் பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப்படுகிறார்கள்.  பெல்ஜியத்தை, அமைதிப்படையில் இருந்து பின்வாங்கச் செய்யும் உத்தி. அந்த உத்தி வெற்றி பெறுகிறது. அகாத்தேயின் குழந்தைகள் பின்பு பத்திரமாக மீட்கப்பட்டு ஹோட்டல் மில் காலின்ஸில் சேர்க்கப்படுகிறார்கள்.(ஹோட்டல் ரவாண்டா திரைப்படம் இந்த ஹோட்டலைப்பற்றியதுதான்)

இந்த சமயத்தில், ரவாண்டா தேசபக்த சக்தியின் பால் ககாமே, டலேருக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அனுப்புகிறார். ஏப்ரல் ஏழாம் தேதி மாலைக்குள் அமைதி திரும்பவில்லையெனில், போரைத் துவக்குவேன் என. தேவைப்பட்டால், கட்டுமீறிப்போன அதிபரின் காவற்படைகளை வழிக்குக் கொண்டு வர, ரவாண்டா ராணுவத்துக்குத் துணையாக தமது படைகளை அனுப்புகிறேன் என்று செய்தியும் அனுப்புகிறார். ஆனால், அதை பகோசோரா மறுத்துவிடுகிறார்.  சுற்றி வளைத்துப் பார்க்கையில், ரவாண்டா ராணுவமே அதிபரின் காவற்படையின் பின்னணியில் இருந்து இயக்குவது டலேருக்குப் புரிகிறது. ஆனால், ஒன்றும் செய்ய முடியாத நிலை.

ஏப்ரல் ஏழாம் தேதி மதியத்துக்குள், ஹப்யாரிமனா இறந்த 24 மணி நேரத்துக்குள் ரவாண்டாவின் மிதவாதத் தலைவர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள்.  அரசமைப்பு நீதிமன்றத் தலைவர் ஜோஸஃப் கவுருகண்டா (Joseph Kavruruganda), வேளாண்மை அமைச்சர் ஃப்ரடெரிக் ந்சமுரம்பஹோ (Frederic Nzamurambaho), ஆளும் கட்சியின் மிதவாதத் தலைவர் லாண்ட்வால்ட் ந்டசிங்வா (Landwald Ndasingwa), ஆருஷா ஒப்பந்தப் பேச்சுவார்த்தையாளரும், லாண்ட்வால்டின் கனடிய மனைவியான போனிஃபேஸ் ந்குலின்சிரா (Boniface Ngulunzira).  ஃபாஸ்டின் ட்வகிராமுங்கு (faustin Twagiramungu) என்னும் முக்கிய மிதவாதத் தலைவர் மட்டுமே தப்பிக்கிறார். நாட்டின் மிதவாதத் தலைமை ஒரே நாளில் அழிக்கபட்டது, தீவிரவாதிகளின் முக்கியத் திட்டம். இதனால், மக்களின் நடுவே ஒரு பீதியை ஏற்படுத்த முடிந்தது. நடுநிலைவாதத் தரப்பில் நின்று பேச எவருமில்லை.

ஹப்யாரிமனா கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பல்வேறு பிராந்தியங்களில் இருந்த ராணுவ அதிகாரிகள், மக்களைக் கூட்டி, “அதிபர் ஹப்யாரிமனாவை டூட்ஸிகளின் ராணுவமான ரவாண்டா தேசபக்த சக்தி கொன்று விட்டது. எனவே, அனைவரும் கிளம்பி, எதிரிகளை அழிக்கத் துவங்குங்கள்”, என அறிவிப்பு வெளியிட்டனர்.  அழிப்பதற்கான பட்டியல்கள் உள்ளூர் தலைவர்களிடம் இருந்தது. அவர்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. எனவே கற்பழிப்பு, சித்திரவதை, கொலை, கொள்ளை என அனைத்தும் மின்னல் வேகத்தில் துவங்கின.  புட்டாரே என்னும் பிராந்தியத்தில் பாப்டிஸ்ட் ஹப்யாரிமனா என்னும் டூட்ஸி கவர்னர் இருந்ததால், அங்கு, இது போன்ற திட்ட மிட்ட கொலைகள் நடக்கவில்லை. மே மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் அங்கும், இன அழிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்றது.

கொலைகள் கிராமங்களில், மிக எளிதாகச் செய்யப்பட்டன. பெரும்பாலான ஹூட்டுக்களுக்கு, கிராமத்தில் யார் யார் டூட்ஸிகள் என்பது தெரிந்திருந்தது. அவர்களின் பட்டியல் ஏற்கனவே இருந்ததால், கொலை செய்வது எளிதாக இருந்தது. கிகாலி போன்ற நகர்ப்புறங்களில், டூட்ஸிகளை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனவே, சாலைகளில், அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டிச் செல்லும் மக்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டியிருந்தது. டூட்ஸிகள் உடனே கொல்லப்பட்டனர்.  அது மட்டுமில்லாமல், அடையாள அட்டைகள் இல்லாதவர்கள், டூட்ஸிகள் போலத் தோற்றம் இருப்பதாக நம்பப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள் – என, அந்த அரணில் நிற்கும் தீவிரவாதிக்கோ / ராணுவ வீரருக்கோ சந்தேகம் வந்தால், அவர்களும் கொல்லப்பட்டனர்.

கொலைகள் நிகழ்த்தப்பட்ட விதம் ரத்தத்தை உறைய வைத்து விடும். பெண்கள் பெரும்பாலும் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். அவர்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டன. கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள், கிழித்து எடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. சிறு குழந்தைகள் வானில் எறியப்பட்டு, கீழே விழுந்ததும், சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.  சிறைகளிலும், மருத்துவமனைகளிலும் இருந்து விடுவிக்கப்ட்ட எய்ட்ஸ் நோயாளிகள், டூட்ஸிப் பெண்களைக் கற்பழிக்குமாறு பணிக்கப்பட்டனர். இவ்வாறு எய்ட்ஸ் தொற்றிய பெண்கள் இன்று பல ஆயிரம் இருக்கின்றனர்.  பெரும்பாலும் பெண்கள் அவர்கள் குடும்பத்தின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டனர்.  கொலைகளைச் செய்ய ஹூட்டு இன மக்கள் யாரும் தயங்கினால், அவர்களும் கொல்லப்பட்டனர். ஆண்கள் பலத்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கை கால்கள் வெட்டப்பட்டு, மெல்லச் சாகும்படி விடப்பட்டனர். ஆண்களின் பிறப்புறுப்புக்கள் வெட்டப்பட்டு, அவை வெற்றிக் கோப்பைகள் போல ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பயங்கரங்களைக் கண்ட ஐநா அமைதிப்படையில் பெரும்பான்மையான வீரர்கள் மன நலம் பாதிக்கப்பட்டனர்; தீவிர மன நல சிகிச்சைக்குப் பின்னரே சாதாரண மனநிலைக்குத் திரும்ப முடிந்தது. அதில் ஐநா அமைதிப்ப்டை தளபதி டலேரும் ஒருவர். இதைக் கண்காணித்த குழுவுக்கே இந்நிலை எனில், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

இந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம்?  ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது.  RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.

ஒரு கட்டத்தில், RGF, பால் ககாமே தன் முயற்சியில் பின் வாங்கவில்லையெனில், மில் காலின்ஸ் (ஹோட்டல் ரவாண்டா) வில் இருக்கும் டூட்ஸிகளை அடியோடு அழித்து விடுவதாக மிரட்டல் விடுகிறது.  இதை டலேர், ககாமேயிடம் சொல்கிறார். ககாமே, இந்த மிரட்டலை, புறங்கையால் தள்ளி விடுகிறார். “இது ஒரு பழைய தந்திரம். அவர்களால், முடிந்தால் செய்யட்டும்”, என அலட்சியமாகப் பதில் அளிக்கிறார். இதை டலேர் தமது சரிதையில் பதிவு செய்திருக்கிறார்.  வெற்றி ஒன்றே இலக்கெனப் பாயும் ஒரு போர்த்தளபதியின் பதில் இது. மிகக் கடின சித்தம் இருந்தால் ஒழிய இது போன்ற முடிவுகளை எடுப்பது கடினம். (இறுதி வரை, மில் காலின்ஸ் விடுதியில் இருந்த டூட்ஸிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது, பால் ககாமேயின் உளவியல் போர் வெற்றியைக் குறிக்கிறது).

பால் ககாமேயின் மூர்க்கம் பற்றிய இன்னுமொரு சம்பவமும் இருக்கிறது. அவரின் கெரில்லா யுத்தம் பலத்த சேதத்தை ஏற்படுத்த, வேறு வழியின்றி, அதிபர் ஹப்யாரிமனா, பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, ஆருஷா பேச்சு வார்த்தைக்கு வருகிறார். பேச்சு வார்த்தைகளில், இடைக்கால அரசு ஒத்துக் கொள்ளப்படும்போது, ஹூட்டு அடிப்படைவாதிகள், மற்றும் ஹப்யாரிமனா சார்ந்த சக்திகள், தங்கள் மீது, போர்க் குற்றங்கள் எதுவும் சுமத்தப் படக் கூடாது என்றும் முடிந்தால் அமைதியாக  வெளியேறும் வாய்ப்பு வேண்டும் என்றும் கேட்கிறார்கள். பேச்சு வார்த்தை மேசையில், பலமான இடத்தில் அமர்ந்திருந்த ககாமேயின் குழு இதை மூர்க்கமாக மறுக்கிறது. குற்றங்கள் புரிந்தவர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்னும் தம் ஷரத்தை வலுக்கட்டாயமாக ஆருஷா ஒப்பந்தத்தில் திணிக்கிறது. அரசியல் தலைமையை, அதுவும் பெரும்பான்மை மக்களின் அரசியல் தலைமையை இவ்வளவு இழிவாக நடத்தியிருக்க வேண்டியதில்லை என்னும் ஒரு எண்ணம் பெரும்பான்மையோருக்கு இருந்திருக்கிறது. இப்படி ஒரு ஷரத்தைத் திணித்தால் என்ன ஆகும் எனத் தெரியாத சிறு பிள்ளையல்ல ககாமே. இதைப் படிக்க நேர்ந்த போதுதான், ககாமேயின் மீதுள்ள நல்லெண்ணம் மிகக் குறைந்து போனது. மிகத் தெளிவாக, போரில் வென்று ரவாண்டாவைப் பிடிப்பதுதான் அவர் நோக்கமாக இருந்திருக்கிறது. பேச்சு வார்த்தை என்பது போரில் ஒரு யுக்தி மட்டுமே, தீர்வல்ல என்னும் தெளிவு படைத்த, கடின சித்தம் கொண்ட தலைவராக வெளிப்படுகிறார் ககாமே.

ஜூலை 4 ஆம் தேதி, கிகாலியைக் கைப்பற்றிய RPF, ஜூலை இறுதியில், ரவாண்டா நாட்டின் பெரும் பகுதிகளைத் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வருகிறது.  இந்த வெற்றியின் முக்கிய காரணம் பால் ககாமே என்னும் தலைவரின் உளவியல் போர் தந்திரங்கள் தான் என்கிறார் டலேர். தோல்வி நிச்சயம் என்ற நிலை வந்த போது, ரவாண்டா ராணுவம் மற்றும் ஆட்சியரின் நண்பனான, ஃப்ரான்ஸ், operation turquoise என்னும் பெயரில், அமைதியை நிலைநாட்டும் சாக்கில், உள்ளே நுழைகிறது. நாட்டின் தென் மேற்கே, தப்பி ஓடும் RGF படைகளுக்குப் பாதுகாப்பாக மூக்கை நுழைக்கிறது. (ரவாண்டா அரசுப்படைகளின் தளவாடங்கள் பெரும்பாலும் ஃப்ரான்ஸிடம் இருந்து பெறப்பட்டதால், படைத் தளபதிகளுக்கும், ஹப்யாரிமனாவின் குடும்பத்துக்கும், ஃப்ரான்ஸ் ராணுவத்துக்கும் நல்லுறவு இருந்தது).

ககாமேயின் படைகளுக்கும் RGF க்கும் இடையில், ஃப்ரான்ஸ் படைகள், ஒரு அரண் அமைக்கின்றன. இத்தோடு, நாட்டின் பெரும் போர் முடிவுக்கு வந்து, அடுத்த நடவடிக்கைகள் துவங்குகின்றன.  முதலில் ரவாண்டாவின் அதிபராக பிஸிமுங்கு ஆகிறார். பால் ககாமே துணைத்தலைவராகப் பதவியேற்கிறார். உண்மையான அதிகாரம் ககாமேயிடம் தான்.  2000 ஆம் ஆண்டில், பிஸிமுங்கு பதவி விலக, ககாமே தலைவராகிறார். இதே சமயத்தில், பனிப் போர் முடிந்து விட, அமெரிக்கா, ஆஃபிரிக்காவின் புதிய தலைமுறைத் தலைவர்கள் என பால் காகாமேயை ஆதரிக்கத் தொடங்குகிறது. ரவாண்டா, தீவிர காவல் / ராணுவக் கண்காணிப்பில், மீண்டெழுகிறது. ககாமே ஹூட்டு / டூட்ஸி என்னும் பேதங்களுக்குத் தடை விதித்து, அனைவரும் ரவாண்டர்கள் என அறிவித்து நாட்டை ஆள்கிறார்.  இன்று கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில், மிக நிலையான முன்னேற்றம் கொண்ட பொருளாதாரம், மிகக் குறைவான ஊழல், சுத்தமான நாடு எது எனில் ரவாண்டா தான். இந்நிலைக்கு மிக முக்கிய காரணாம் பால் ககாமே என்பதை அனவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

அரசின் இணையத்தளம், ககாமேயின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகப் பல சாதனைகளை, முன் வைக்கிறது. சராசரி ஆயுட்காலம் 2000 ல், 51 ஆண்டுகளாக இருந்தது, 2012 ல் 65 ஆக் உயர்ந்திருக்கிறது. 96 சதக் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. பாராளுமன்றத்தில் 65 சதம் பெண்கள்.   ப்ளாஸ்டிக் பைகள் தயாரித்தலும், இறக்குமதியும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.  75 சத மக்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளது. இது பல முன்னேறிய நாடுகளை எட்டும் புள்ளி விவரங்கள்.

இங்கு ஜனநாயகம் எவ்வாறு உள்ளது? சமீப காலத்திய வாக்கெடுப்பையே நோக்குவோம். 98 சதவீத மக்கள் ககாமே 2034 வரை, தேர்தலில் போட்டியிட ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் கட்சி ஒரு முறை கூட 60 சதம் வாக்கை எட்டியதில்லை. 98 சதம் ஆதரவு என்பதே இங்குள்ள சுதந்திரமின்மையைக் குறிக்கிறது எனச் சொல்லலாம். மாலை மயங்கியவுடன், நாட்டைச் சூழ்ந்து நிற்கும் போலிஸ் என்பது மக்களின் அடிமனதில் ஒரு பீதியை உருவாக்கக் கூடிய விஷயம். அவரை எதிர்த்துப் போட்டியிட முயன்ற தலைவர்கள் சிலர் சிறைப்படவும், சிலர் சில சதவீத ஓட்டுக்களே பெற்றதும், இங்கு முழுமையான ஜனநாயகம் இல்லை என்னும் மிகக் கசப்பான உண்மையைச் சொல்கின்றன. ஆனால், பொருளாதார முன்னேற்றம், நிலையான ஆட்சி, சரியான சட்டம், ஒழுங்கு என்னும் நேர்மறை நிகழ்வுகள் அதை வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் மறைத்து நிற்கின்றன.

பின் குறிப்பு:

3000 வார்த்தைகளின் முடிவில், வாசிப்பவருக்குச் சலிப்பில்லாமல் இருக்க சுபம் போடலாம்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக, கதை இன்னும் முடியவில்லை.  தப்பிச் சென்ற RGF படையினர், காங்கோ நாட்டிற்குள் புகுகிறார்கள். அங்கே ஏற்கனவே அகதிகளாக இருந்த டூட்ஸிகளைக் கொல்ல முயல்கிறார்கள். மட்டுமல்லாமல், அவ்வப்போது ரவாண்டாவுக்குள் புகுந்து, வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதையொட்டி, ரவாண்டாவும், உகாண்டாவும் சேர்ந்து, காங்கோவில் நுழைந்து, ஹூட்டு படைகளைத் தாக்குகிறார்கள். காங்கோவின் சர்வாதிகாரியை ஆட்சியில் இருந்து நீக்கி, கபிலா என்னும் தலைவரை புதிய அதிபராக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.  இது காங்கோப் போர் -1.  சில மாதங்கள் கழித்து, கபிலா, தன் நாட்டில் அந்நியப்படைகள் இருப்பதை விரும்பாமல், அவர்களை வெளியேற்றுகிறார். அவ்வளவு எளிதில் வெளியேற விரும்பாத உகாண்டா / ரவாண்டா / ஜிம்பாப்வே நாடுகளுக்கும், காங்கோவுக்கும், காங்கோ போர்-2 துவங்குகிறது. இப்படி அவசரமாக ஒரு பாராவில் எழுதக் கூடிய கொடுமை அல்ல காங்கோப் போர்கள். ரவாண்டா இன அழிப்பில், 8-10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் எனில், அதன் பின் நடந்த காங்கோப் போர்களில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். காங்கோ உலகின் இயற்கை மற்றும் கனிம வளமிக்க நாடுகளுள் ஒன்று.  1960 ல் அது சுதந்திரம் பெற்ற போது, ஆஃபிரிக்க கண்டத்தில், தென் ஆஃபிரிக்காவுக்கு அடுத்த படியாக தொழில் வளம் மிக்க நாடாக இருந்தது. கோபால்ட் என்னும் தாதுவின் உலகின் மிகப் பெரும் உற்பத்தியாளர். வைரம் மற்றும் செம்புத் தாது உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம். ஆனால், அமெரிக்க / ரஷ்யப் பனிப்போரில் துவங்கி (பாட்ரிஸ் லுமும்பாவின் கொலை நினைவிருக்கலாம்), அமெரிக்கா மாஃபியாவின் கைகளில் வீழ்ந்த காங்கோ, இந்தப் போர்களினால், ரவாண்டா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வேயின் அரசியல் சக்திகளினால் இயக்கப் பட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.  காங்கோவின் கனிம வளங்களை இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து சூறையாடுகிறார்கள் என்னும் ஒரு பெரும் குற்றச் சாட்டைப் பலரும் முன் வைக்கிறார்கள்.

முந்தைய பகுதி: பகுதி ஒன்று

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.