ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் 22-6-16 அன்று நடைபெற்ற தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில், துடிப்புடன் விளையாடிய ஜிம்பாப்வேயைத் தட்டுத்தடுமாறி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
முன்னதாக 0-3 என்ற கணக்கில் ஒரு-நாள் கிரிக்கெட் தொடரை இந்தியாவிடம் பரிதாபமாகத் தோற்றிருந்த க்ரேம் க்ரீமர் ( Graeme Cremer) தலைமையிலான ஜிம்பாப்வே, டி-20 தொடரில் நம்பமுடியாத உற்சாகத்துடன் களமிறங்கியது. முதல் போட்டியில் இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனியினால் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்ட ஜிம்பாப்வே, உத்வேகத்துடன் ஆடியது. ஒருகட்டத்தில் ரன்கள் ஏறுவதும், விக்கெட்டுகள் சரிவதுமாக இருக்கையில்,சுமார் 130 வரை ஸ்கோர் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏழாவது வீரராக பேட் செய்ய வந்த எல்டன் சிகும்புரா ( Elton Chigumbura) 7 சிக்ஸர்கள் விளாசி 26 பந்துகளில் 54 ரன்னெடுத்துவிட்டார். ஜிம்பாப்வேயின் ஸ்கோரை 170-ல் கொண்டுபோய் நிறுத்தி தோனி & கோ-விற்கு கிலி ஏற்படுத்தினார். தோனியின் இளம் இந்தியா (ஐந்து புதிய வீரர்கள்) இலக்கை விரட்டுவதில் திக்கித் திணறியது. கடைசி ஓவரில் 8 ரன் எடுக்க வேண்டியிருந்தது. தோனி ஆடியும் பிரயோஜனமில்லை. ஆஃப் ஸ்டம்ப்பிற்கு வெளியே யார்க்கர் மேல் யார்க்கராகப் போட்டு ரன் எடுக்கவிடாமல் இந்தியாவை நெருக்கினார் வேகப்பந்துவீச்சாளர் நெவில் மட்சிவா ( Neville Madziva). கடந்த சில வருடங்களில் ஜிம்பாப்வே பௌலர் ஒருவரின் அசத்தலான டெத் ஓவராக ( death over)அது அமைந்துவிட்டது. இறுதியில் இரண்டு ரன்களில் ஜிம்பாப்வே வென்றது.
வெற்றியைச் சந்தித்து வெகுநாளாகிவிட்ட ஜிம்பாப்வேக்கு இது அதீத உற்சாகத்தை ஏற்படுத்தியது. நியாயம்தானே. ஆனால் மூக்குடைபட்டிருந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் ஆவேசம் காட்டியது. ஜிம்பாப்வே பேட்ஸ்மன்களின் மோசமான ஷாட் செலக்ஷனால் விக்கெட்டுகள் தாறுமாறாக சரிய 99 ரன்கள் மட்டுமே அதனால் எடுக்க முடிந்தது. இந்தியாவுக்காக தன்னுடைய முதல் டி-20 மேட்ச் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன் ( Barinder Sran), ப்ரமாத ஸ்விங் காட்டி 4 விக்கெட்டுகளைக் காலி செய்தார். வழக்கம்போல் ஜஸ்ப்ரித் பும்ராவும்( Jasprit Bumrah) நெருக்கித் தள்ளி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா தன் பதிலில் விக்கெட் இழப்பின்றி 103 எடுத்து வென்றது. துவக்கவீரர்கள் கே.எல்.ராகுல் 47 ரன்கள் மந்தீப் சிங் 52 ரன்கள் என அபார ஆட்டம் ஆடி மைதானத்தில் ஒரு புறம் குவிந்து கொடி அசைத்துக்கொண்டிருந்த இளம் இந்திய ரசிகர்களுக்கு குஷியூட்டினர்.
இரு அணிகளும் ஆளுக்கொன்றாக வென்றிருந்ததால் தொடர் வெற்றிக்கான மூன்றாவது போட்டி ரசிகர்களிடையே உற்சாகத்தைக் கிளப்பியிருந்தது. இந்த முறை ஜிம்பாப்வே டாஸ் வென்று இந்தியாவை உள்ளே இறக்கியது. துவக்க வீரர் மந்தீப் சிங் மலிவாக வெளியேற கே.எல்.ராகுல் அருமையாக ஆரம்பித்தார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மட்சிவாவின் வெளியே சீறிய ஒரு பந்தை க்ராஸ்-பேட் செய்ய முயன்று தமது ஸ்டம்ப்பின் மீதே திருப்பிவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பினார். வந்ததும் வராததுமாய் இல்லாத ரன்னுக்காகக் குடுகுடுவென ஓடிய மனிஷ் பாண்டே நேரடித் த்ரோவில் ரன் அவுட். நிலைமை தடுமாறுகையில் அம்பத்தி ராயுடுவும் கேதார் ஜாதவும் கைகோர்த்தனர். ஓடி ஓடி ரன் அவ்வப்போது பௌண்டரி என இந்திய ஸ்கோர் சீராக உயர்த்தப்பட்டது. ராயுடு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தபின் உள்ளே வந்த கேப்டன் தோனியை பிட்ச்சில் நிலைப்பதற்குமுன் க்ளீன் – போல்ட் செய்தார் ஜிம்பாப்வேயின் வேகப்பந்துவீச்சாளர் டொனால்ட் திரிப்பானோ ( Donald Tiripano). ஏழாவதாக இறங்கிய ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் 11 பந்தில் 20 எடுத்து அசத்தியதால் இந்தியா 138 என்கிற கௌரவ ஸ்கோரை எட்டமுடிந்தது. ஆட்ட நாயகன் கேதார் ஜாதவ் எடுத்தது 58 ரன்கள்.
இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வேக்கு அணியின் சீனியர் வீரர்கள் ஹாமில்டன் மசகாட்சாவும் ( Hamilton Masakadza), சமு சிபாபாவும் ( Chamu Chibaba) துவக்க ஏமாற்றம் தந்தனர். ஆனால் மூன்றாவது நான்காவதாக முறையே வந்த வுசி சிபாந்தாவும் ( Vusi Sibanda), பீட்டர் மூரும்( Peter Moore) வேகமாக உயிரூட்ட ஜிம்பாப்வேயின் ஸ்கோர் எகிற ஆரம்பித்தது. மத்திய ஓவர்களில் பந்து வீசிய தவல் குல்கர்னி ( Dhawal Kulkarni) இரண்டு விக்கெட்டுகளை சரித்தார். இறுதி ஓவர்களில் இரண்டை பும்ராவை வீச வைத்து எதிரியின் வேகத்திற்குத் தடை போட முயன்றார் தோனி. ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட மைதானத்தில் பீர் அடித்து ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த ஜிம்பாப்வே ரசிகர்களுக்கு மலைப்புத் தட்டியது. தோனி கடைசி ஓவரை ஸ்ரனிடம் கொடுத்தார். எல்டன் சிகும்புரா இன்னும் இருந்ததால் ஜிம்பாப்வே நம்பிக்கை இழந்துவிடவில்லை.
ஸ்ரன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு எகிற விட்டது சிகும்புராவோடு நின்றிருந்த டிமிசென் மரூமா ( Timycen Maruma). பௌலரின் முகத்தில் பதற்றம். விளைவு ? இரண்டாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு மகா ஒயிடாக( wide) ஆனது. ஒரு ரன். இரண்டாவது பந்தை மீண்டும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீச அது ஒரு நோ-பால் ஆனதோடு கவர் திசையில் பௌண்டரிக்குப் பறந்தது. ஐந்து ரன்கள். டென்ஷன் எகிறியது. சமாளித்துக்கொண்ட ஸ்ரன் அடுத்து வீசிய ஃப்ரீ ஹிட் பந்தை ஆஃப் சைடிற்கு வெளியே யார்க்கராக வீச ரன் இல்லை. ஓவரின் மூன்றாவது பந்தையும் அவ்வாறே வீச இன்னொரு டாட்-பால் ( dot ball). தந்திரமான பௌலிங். நான்காவது பந்தை மீண்டும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இறக்க மரூமா அதில் ஒரு சிங்கிள் தட்டி விட்டு ஓடினார். இதுவரை 13 ரன்கள் இந்த ஓவரில். கடைசி இரண்டு பந்துகளில் தேவை 8 ரன்கள். ஐந்தாவது பந்தை சிகும்புரா அனாயாசமாக முன்னேறி கட் செய்து ஆட அது தர்ட்-மேன் திசையில் பாய்ந்து பவுண்டரியைத் தொட்டது. 5 பந்துகளில் 17 ரன்கள். போட்டியின் கடைசி பந்து அனுபவ வீரரான சிகும்புராவின் சவால் ஆனது. ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு தொடர் வெற்றிக்குத் தேவை 4 ரன்கள். ரசிகர்கள் சீட் நுனியில். ஸ்ரனின் லோ ஃபுல்டாஸை ( low-fulltoss) கவர் சைடில் விளாச முயன்ற சிகும்புரா சஹலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜிம்பாப்வேயின் ஸ்கோர் 135-ல் நின்றது ; மூன்று ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.முதன்முறையாக இந்தியாவிற்காக டி-20 கிரிக்கெட்டில் களமிறங்கிய புதிய வீரர்களான கே.எல்.ராகுல் மந்தீப் சிங் ஜயதேவ் உனத்கட் பரீந்தர் ஸ்ரன் தவல் குல்கர்னி யஜுவேந்திர சஹல் ஆகியோர்களை கேப்டன் தோனி திறமையாகக் கையாண்டது தொடரின் சிறப்பம்சம்.
ஜிம்பாப்வே தரப்பில் தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களான ஷான் வில்லியம்ஸ் ( Sean Williams), மற்றும் க்ரெய்க் எர்வின் ( Craig Ervine) ஆகியோர் காயம் காரணமாக தொடரில் ஆடமுடியவில்லை. இருந்தும் சர்வதேச போட்டிகளில் சில வருடங்களாகவே தடுமாறிக்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணி டி-20 கிரிக்கெட்டில் உலகின் 2-ஆவது அணிக்கு எதிராக இந்தத் தொடரில் பெரும் உத்வேகத்துடன் விளையாடியது. நெருக்கடியிலிருக்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு புத்துயிரூட்டும் விஷயம் இது. ஏகப்பட்ட பணத்தில் புரளும் இந்திய கிரிக்கெட் வீரர்களைப்போலல்லாது ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு முறையான ப்ளேயர்-காண்ட்ராக்ட்கள்கூட கிடைப்பதில்லை என்பது நிறையப்பேருக்குத் தெரியாது. ஏற்கனவே விளையாடிய போட்டிகளுக்கான அவர்களது சம்பளப்பணம் தரப்படாமல் நிலுவையில்தான் இருக்கிறது. எங்கும் காணாத பரிதாப நிலை. இத்தகைய கொடுமையான சூழலில் ஜிம்பாப்வே வீரர்கள் உத்வேகத்துடன் தங்கள் நாட்டுக்காகக் களமிறங்கி விளையாடுகிறார்கள் அவ்வப்போது வெற்றியையும் ஈட்டுத் தருகிறார்கள் என்பதை கிரிக்கெட் உலகம் கவனிக்காமல் இல்லை.
குழப்பும் நிர்வாகத்துக்குப் பேர்போன ஜிம்பாப்வே கிரிக்கெட் சமீபத்தில்தான் தங்களின் திறமைமிகு பயிற்சியாளர் டேவ் வாட்மோரை ( Dave Whatmore) அகாலமாக பதவியிலிருந்து நீக்கியது. அபத்தத்தின் உச்சம். எனினும் தற்காலிக பயிற்சியாளர்களாக தென்னாப்பிரிக்காவின் மகாயா நிடினியும் ( Makaya Ntini), லான்ஸ் க்ளூஸ்னரும் ( Lance Klusner) நியமிக்கப்பட்டுள்ளார்கள். கூடவே இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ள முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் ததேந்தா தைய்பு ( Tatenda Taibu) அணி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது. பணநெருக்கடியினால் மூச்சுத் திணறும் ஜிம்பாப்வே கிரிக்கெட் போதிய ஸ்பான்சர்களுடன் நிதிவசதி பெற்று சிறப்பான கிரிக்கெட் நிர்வாகம் மூலம் வளர்ச்சி பெற்றால் ஜிம்பாப்வே மீண்டும் சர்வதேசத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அணியாக வலம் வரும்.