‘ஹோம்வொர்க் மறந்துடாதேடா’ – அம்மா அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பாள். நானும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன். அம்மா விடமாட்டாள். ‘சரி, ஹோம்வொர்க் முடிச்சிட்டு மீண்டும் விளையாட வரலாம்’ என்று எண்ணிக்கொண்டு நானும் வீடு திரும்பி சுறுசுறுப்பாக வீட்டுப்பாடம் செய்து முடிப்பேன். முடித்துவிட்டு மைதானத்துக்கு போனால் நண்பர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இருட்டாகிவிடும். தனியாகத்தான் விளையாட வேண்டியிருக்கும்.
ஆனால் அதையும் செய்யவேண்டிய காலம் வந்தது. எப்படி ?
பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் பந்து வீசுகிறார். அதை நான் மட்டையால் அடிக்கிறேன். பந்து மைதானத்தின் எல்லைக்கோட்டை தாண்டிச் செல்கிறது. நான்கு ரன்கள் ! பார்வையாளர்கள் எழுப்பும் கரவொலி விண்ணைக் கிழிக்கிறது. மதிப்பெண் பலகை ‘டெண்டுல்கர் – 100 ரன்கள்’ என்று காட்டுகிறது. டெண்டுல்கர் வானத்தைப் பார்த்து தன் மட்டையை உயர்த்திக் காட்டுகிறார். வர்ணனையாளர் ‘டெண்டுல்கர் அபாரமாக விளையாடுகிறார். இந்தியா இந்தப் போட்டியில் நிச்சயம் வெல்லும்’ என்று இறும்பூது எய்துகிறார். மைதானத்தில் திருவிழாக்கோலம். இது தான் விளையாட்டு.
ஆம். நான் தான் சச்சின் டெண்டுல்கர்!
என்ன, இது தான் விளையாட்டா?! ஆம். இதில் எது நிஜம் (real), எது மெய்நிகர் (virtual) என்பதே இங்கே கேள்வி. மைதானமும், என் கையில் இருக்கும் மட்டையும் மட்டுமே உண்மை. பந்து, வர்ணனையாளர், பார்வையாளர்கள், மதிப்பெண் பலகை, அனைத்தும் கற்பனைக் காட்சிகள் மட்டுமே. நானும் சச்சின் அல்ல !
மெய்நிகர் உலகம் என்றாலே பலருக்கு முதலில் நினைவிற்கு வருவது குழந்தைகள் விளையாடும் காணொளி விளையாட்டு (video games) தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய உலகம் இந்தத் துறையில் உள்ளது.
மெய்நிகர் உலகமும் தொழில்நுட்பங்களும்
மெய்நிகர் உலகில் மூன்று முக்கியமான தொழில்நுட்பங்கள் உள்ளன :
- மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality) : உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே ஒரு மெய்நிகர் யதார்த்தக் கண்ணாடியைப் பொருந்திக்கொண்டால் போதும். வீட்டில் அமர்ந்தபடியே லண்டன் அருங்காட்சியகத்துக்குப் போகலாம். அங்குள்ள ஒவியங்களை, சிற்பங்களைப் பார்க்கலாம். நீங்கள் கால் அசைத்தால் அருங்கட்சியகத்துக்குள் நடப்பது போலிருக்கும். வேகமாக அசைத்தால் ஓடுவீர்கள். கை அசைத்தால் படியேறி செல்லலாம். மெய்நிகர் யதார்த்தம் உங்களை லண்டன் அருங்காட்சியகத்துக்கே அழைத்துச்சென்று, அச்சூழலில் முற்றிலும் மூழ்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், மெய்நிகர் யதார்த்தம் = மெய்நிகர் உலகம் (virtual world) + நிஜ உள்ளீடுகள் (real inputs)
- மெய்நீட்சி (Augmented Reality) : மெய்நீட்சியில் இது மாதிரி மாயாஜாலம் எதுவும் சாத்தியம் இல்லை. லண்டன் அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் லண்டனுக்கே போகவேண்டும். அங்கே சென்ற பிறகு, அருங்காட்சியகத்தின் முகப்பை நோக்கி உங்கள் நுண்ணறிப்பேசியில் அல்லது மாத்திரைக்கணினியில் உள்ள பயன்பாட்டை (app) இயக்குகிறீர்கள். உடனே அந்த இடத்தின் வரலாறு உங்கள் திரையில் வந்துவிடுகிறது. அடுத்து அருங்காட்சியகத்தின் வரவேற்பறைக்குச் சென்று அதே பயன்பாட்டை தட்டி விடுகிறீர்கள். அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன என்ற பட்டியல் உங்கள் திரையில் காட்சியளிக்கின்றன. பிறகு ஒரு குறிப்பிட்ட சிற்பத்தின் முன் நின்றுகொண்டு மீண்டும் பயன்பாட்டை தட்டுகிறீர்கள். அச்சிற்பம் எந்த நாட்டில், எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டது போன்ற விபரங்கள் இப்போது உங்கள் விரல்நுனியில். இது தான் மெய்நீட்சி. நீங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் நிஜ உலகைப் பற்றிய கூடுதல் விபரங்களை அளித்து உங்களையே அது வழிநடத்துகிறது. சுருக்கமாக, மெய்நீட்சி = நிஜ உலகம் (real world) + மெய்நிகர் அடுக்குகள் (virtual layers)
- கலந்த யதார்த்தம் (Mixed Reality) : இவ்விரு தொழில்நுட்பங்களின் கலவையே கலந்த யதார்த்தம் எனப்படுகிறது.
இக்கட்டுரையில் பேசப்போவது மெய்நீட்சி பற்றியே.
மெய்நீட்சி அமைப்பின் முக்கிய கூறுகள் (components) என்னவென்று பார்ப்போம் :
- பயனர் இடைமுகம் (user interface) : நுண்ணறிப்பேசி (smartphone), மாத்திரைக்கணினி (tablet computer) அல்லது அணியப்படும் கருவிகள் (wearable device)
- இந்தக் கருவிகளில் இயங்கக்கூடிய பயன்பாடு (app)
- பொருட்களை உணர்விக்கும் மென்பொருள். இது பயன்பாட்டின் அங்கமாக இருக்கலாம். அல்லது பின்தளத்தில் (backend) இயங்கலாம்
- மேற்கூறிய அமைப்பு செயல்பட தேவையான இணைய இணைப்பு மற்றும் பிற உள்கட்டுமானங்கள் (infrastructure)
தொழில்நுட்பம் வளர்ந்த கதை
‘கணினி வரைகலையின் தந்தை’ என்று அழைக்கப்படும் இவான் சதர்லாண்டும், அவருடைய மாணவரான பாப் ஸ்ப்ரௌல் என்பவரும் 1968-இல் முதன்முதலாக மெய்நீட்சிக் கருவிகளைக் கண்டுபிடித்தனர். இவர்கள் அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் செய்த பரிசோதனைகளின் விளைவாக தலையில் ஏற்றப்பட்ட காட்சிச் சாதனங்களை (head-mounted displays) உருவாக்கினர். இவர்கள் கண்டுபிடித்த சாதனத்தின் அளவைப் பார்த்தால் இக்காலத்து கணிப்பொறியாளர்களுக்கு சிரிப்பு வரும். நீண்ட வடிவமும், மிகப்பெரிய அளவும் கொண்ட இந்தக் காட்சிச் சாதனத்தை அவர்கள் ‘டமொக்லீஸின் வாள்’ (Sword of Damocles) என்று பெயரிட்டார்கள்.
மெய்நீட்சி என்ற கருத்துப்படிவத்தை முதலில் முன்வைத்தவர் பால் மில்கிராம் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர். ‘யதார்த்த உலகமும் மெய்நிகர் உலகமும் ஒரு தொடரகத்தின் இரு விளிம்புகள் (two ends of a continuum). இவ்விரு விளிம்புகளுக்கு இடையே தான் மெய்நீட்சியும் மெய்நிகர் யதார்த்தமும் காணப்படுகின்றன’ என்று அவர் விளக்கினார்.
1990-களில் இந்த தொழில்நுட்பம் அமெரிக்க ராணுவத்திலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் பயன்படுத்தப்பட்டது. இவைதான் மெய்நீட்சியின் ஆரம்பநிலை பரிணாமங்கள். பின்னர் பட்டைக் குறியீடுகளை உணர்விக்கும் கருவிகள் (Bar code scanners) பிரபலம் ஆகின. ஒரு பொருளின் பட்டைக் குறியீட்டை வைத்து அந்தப்பொருளின் பெயர், விலை கணினியில் வெளியிடும். இதை பல்பொருள் அங்காடிகளில் பார்த்திருப்போம்.
நுண்ணறிப்பேசிகளும் மாத்திரைக்கணினிகளும் வெளிவந்த காலத்தில் தான் மெய்நீட்சியின் வளர்ச்சி ஆரம்பித்தது. QR குறியீடுகள் வெளிவந்தன. எந்த ஒரு பொருளையும் QR குறியீடாக உருவகிக்கும் தொழில்நுட்பம் வந்தது. உதாரணமாக நீங்கள் வாசிக்கும் செய்தித்தாளில், இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய கட்டுரை வந்திருக்கிறது என்றால், அந்தக் கட்டுரைக்கு ஒரு QR குறியீடு இருக்கும். அதன் திசையில் உங்கள் நுண்ணறிப்பேசியை காட்டினால் பிரதமரின் சொற்பொழிவு பற்றிய விவாதங்களையோ, அல்லது சொற்பொழிவின் காணொளிக் காட்சியையோ பார்க்கலாம்.
மெய்நீட்சி பொதுமக்களிடம் பிரபலம் அடைந்தது தொலைக்காட்சியில் தான். உதாரணமாக கிரிக்கெட் ஒளிபரப்பில் ஹாக்-ஐ (hawkeye) என்றொரு தொழில்நுட்பம் உண்டு. பேட்ஸ்மேனின் காலில் பட்ட பந்து ஸ்டம்ப்பை அடித்திருக்குமா என்று கணிக்க உதவும் தொழில்நுட்பம். பந்து காலில் படும் காட்சியை வைத்துக்கொண்டு, பந்தின் போக்கு (trajectory) எப்படி இருந்திருக்கக்கூடும் என்று வரைபடம் இட்டுக்காட்டும். அந்த வரைபடத்தின் மூலம் பேட்ஸ்மேன் ‘அவுட்’ அல்லது ‘அவுட் இல்லை’ என்று அம்பயர் தீர்ப்பளிப்பார்.
2008ல் விக்கிட்யூட் நிறுவனம் ஜியோ-டேகிங் (Geo-tagging) என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பயணிகளுக்கு வழிகாட்டும் செயல்பாடு (Travel Guide App) ஒன்றை உருவாக்கியது. நாம் இருக்கும் இடத்தை GPS தொழில் நுட்பம் மூலம் அறிந்துகொண்டு நம்மைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய விபரங்களை அளிக்கும். லண்டன் அருங்காட்சியகம் பற்றிய எடுத்துக்காட்டு இங்கே நினைவிருக்கலாம்.
ஆனால் இவற்றையெல்லாம் கபளீகரம் செய்யும் விதத்தில் கூகுள் நிறுவனம் 2014ல் அதிரடி ஆட்டம் ஆடியது. ‘கூகுள் கண்ணாடி’ (Google Glass) என்னும் ‘அணியப்படும் கருவி’யை அறிமுகப்படுத்தி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நவீன நுண்ணறிப்பேசிகள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரமுடியும் என்று நிரூபித்தது கூகுள் கிளாஸ். பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய கருவியாக உருவானது. கூகுளின் இந்த கண்டுபிடிப்பு மெய்நீட்சித் துறையில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியது. பல்வேறு நிறுவனங்கள் இது போன்ற கண்ணாடிச் சாதனங்களை உருவாக்கத் தொடங்கினர். அதற்குத் தேவையான மென்பொருள் தளம் (software platform), கட்டமைப்பு (architecture), இடைமுகம் (interfaces) ஆகியவற்றறைத் தயாரிக்க நிறுவனங்கள் களமிறங்கினார்கள். இன்று மெய்நீட்சித் தொழில்நுட்பத்தில் இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை சில நூற்றுக்கணக்கில் இருக்குமென்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா ? ஆனால் உண்மை.
மெய்நீட்சியின் அபார வளர்ச்சி
‘இதுவரைக்கும் பார்த்ததெல்லாம் வெறும் டிரெய்லர் தானா ?’ என்று வியக்கவைக்கும் அளவிற்கு நாளொரு மேனியும் இந்தத் துறையில் புதுப்புது செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. 2015ல் ஆப்பிள் நிறுவனம் மெடாயோ (Metaio) என்ற நிறுவனத்துடன் இணைந்து பல ரகசியத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. கூகுள், மெடாஸாப்ட் (Metasoft) என்ற நிறுவனத்தை வாங்கி, பல புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ‘ஒகுலஸ்’ (Oculus) என்னும் மெய்நிகராக்கக் கண்ணாடியின் வெற்றியைத் தொடர்ந்து, பேஸ்புக்கின் பார்வை மெய்நீட்சி பக்கம் திரும்பியுள்ளது. இவர்கள் இப்படியென்றால் மைக்ரோஸாஃப்ட்டும் சளைத்தவர்கள் அல்ல போலும். ‘கலந்த யதார்த்த’ கண்ணாடியான ஹாலோலென்ஸ் (Hololens) தயாரித்த மைக்ரோசாஃப்ட் இப்போது மெய்நீட்சித் தலையணிகள் (headsets) உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தத்துறை அடுத்த ஐந்தாண்டுகளில் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள துறையாக மாறும் ஆற்றல் வளம் கொண்டது என்று டிஜி-காபிடல் நிறுவனம் தன் ஆராய்ச்சியில் சொல்லியிருக்கிறது.
சிக்கல்கள் என்ன ?
இந்தத் தொழில்நுட்பம் வளர்வதில் உள்ள சில சிக்கல்களைப் பார்ப்போம் :
- தனியுரிமை (privacy) சார்ந்த சிக்கல்கள் : நாம் பொது இடங்களில் இருக்கும்போது, நமக்கு முன்னால் இருப்பவர் கூகுள் கிளாஸ் அணிந்து நின்றால் நாம் என்ன நினைப்போம் ? ‘இவர் பார்வையில் நான் எப்படித் தெரிகிறேன் ? என் தனியுரிமை பறிக்கப்படுகின்றதா ?’ என்று தானே நினைக்கத் தோன்றும் ! அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கூகுல் கிளாஸ் போன்ற கருவிகளுக்கு இன்னும் வெகுஜன சமூகத்திடமிருந்து ஏற்பு இல்லை என்பதே நிதர்சனம்.
- விலை: மெய்நீட்சிக் கருவிகள் இன்னும் விலை உயர்ந்ததாக இருக்கின்றன. ஒரு கூகுள் கிளாஸின் விலை 1500 அமெரிக்க டாலர் ! பெருமக்கள் நுகர்வு வளர வேண்டுமெனில் இந்த நிலை மாற வேண்டியது அவசியம்.
- இடைசெயல் அம்சம் இல்லாமை (lack of interoperability) : மெய்நீட்சியில் எத்தனையோ மென்பொருள் தளங்கள் இருந்தாலும், அவற்றில் மிக்கச்சிலவையே ஒன்றுக்கொண்டுடன் செயல்படக்கூடியனவாக இருக்கின்றன.
- பயன்பாடுகள் : மற்ற மொபைல் பயன்பாடுகள் போலல்லாமல், இங்கே இன்னும் வெகுஜன மக்கள் உபயோகிக்கும் அளவுக்கு பிரபலாமான பயன்பாடுகள் இல்லை.
- வன்பொருள் (hardware) : மெய்நீட்சியின் முழுத்திறனையும் உணர உயர்தெளிவு காட்சித்திரைகள் (high resolution screens) அவசியம். இந்தத் தேவையை சீன உற்பத்தி நிறுவனங்கள் நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
பயன்கள்
இந்த தொழில்நுட்பத்தால் எந்தெந்த துறைகள் பயனடையலாம் ?
- சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு : விடுமுறைக்கு குடும்பத்தோடு சிங்கப்பூரில் இருக்கிறீர்கள். அங்குள்ள முக்கிய வீதி ஒன்றில் உலா வருகிறீர்கள். உங்கள் மகன் ‘எனக்கு பாஸ்தா சாப்பிடனும். எங்கே போகலாம் அப்பா ?’ என்று கேட்கிறான். உடனே உங்கள் மாத்திரைக்கணினியில் உள்ள பயன்பாட்டை இயக்குகிறீர்கள். அத்தெருவில் உள்ள அனைத்து உணவகங்களின் பட்டியல் வந்தாச்சு. நீங்கள் ‘பாஸ்தா இருக்கும் உணவகங்கள்’ என்று தேடுகிறீர்கள். ஐந்து உணவகங்களின் பெயரும் அவற்றுக்கான மதிப்பீடும் திரையில் தெரிகின்றன. சிறந்த மதிப்பீடு கொண்ட உணவகத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் விலைப்பட்டியலைப் பார்க்கிறீர்கள். விலை கையை கடிக்கவில்லை. அப்புறம் என்ன ? பையனுக்கு பாஸ்தா வாங்கிக்கொடுக்க நீங்கள் ரெடி !
- வணிகம் : சந்தையில் அறிமுகம் ஆகியிருக்கும் புதிய கார் ஒன்றை வாங்க உங்களுக்கு ஆசை. கார் நிறுவனத்தின் காட்சியறைக்குச் சென்றால் நீங்கள் விரும்பும் சிகப்பு நிறக் கார் இல்லை. மாறாக நீல நிறக் கார் மட்டுமே உள்ளது. உங்களுக்கு ஒரே குழப்பம். ‘இருங்க சார்’ என்று சொல்லி, காட்சியறையின் மேலாளர் ஒரு கண்ணாடியையும் சிகப்பு நிறக்காரின் புகைப்படம் கொண்ட சிற்றேடையும் கொடுக்கிறார். கண்ணாடி அணிந்தால், காரின் புகைப்படம் முப்பரிணாம வடிவமாக உருவெடுக்கிறது. அவ்வுருவத்தை சுழற்றிப் பார்த்தல் காரைச் சுற்றுவது போல இருக்கும். காரின் நிறத்தை மாற்றிப் பார்க்கலாம், பாகங்களை அறிந்துகொள்ளலாம். கார் வாங்கும் முடிவையும் உடனுக்குடன் எடுக்கலாம்.
- தொழில்நுட்ப சேவை (Technical support) : புதிய நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களைப் பழுது பார்க்கும் வேலை. பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே ஒரு பெரிய இயந்திரம் பழுதடைந்து விட்டது. அவ்வியந்திரத்தின் செயல்பாட்டை பற்றி உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. விஷயம் தெரிஞ்சவர் வெளியூர் போயிருக்கிறார். நீங்கள் தான் பழுது பார்க்க வேண்டும்.
மெய்நீட்சிக் கண்ணாடி பழுதடைந்த இயந்திரத்தின் பாகங்களையும் அளவுருக்களையும் (parameters) படம்போட்டுக் காட்டுகிறது. எந்தப் பாகம் பழுதடைந்திருக்கக்கூடும் என்ற தகவலையும் கொடுக்கிறது. நீங்களும் அதன் பரிந்துரைகளைப் பின்பற்றிக்கொண்டு கொடுத்த வேலையை முடிக்கிறீர்கள்.
- கல்வி : நாம் ‘படிக்கும் சமூகம்’ அல்லாமல் ‘பார்க்கும் சமூக’மாக மாறிக்கொண்டு வருகிறோம் என்று நீங்கள் நினைப்பதுண்டா ? உங்கள் பிள்ளைகளின் அறிவியல் பாடத்தில் வரும் நீண்ட கட்டுரைகள் அவர்களுக்கு சோர்வூட்டுவதாக இருக்கின்றனவா ? அந்தக் கட்டுரையின் பக்கம் உங்கள் மாத்திரைக்கணினியை வைத்துப் பார்க்கையில், அந்தப் பாடத்தைப் பற்றிய காணொளிகள் வந்தால் எப்படியிருக்கும் ? யோசித்துப் பாருங்கள் !
- மனை வாங்கல், விற்கல் : நம்மூரில் வழக்கமாக நடக்கக்கூடியது தான் ! இன்னும் மூணு வர்ஷத்துல கட்டி முடிக்கப்போகிற உங்கள் கனவு இல்லம் ‘இப்படி இருக்கும், அப்படி இருக்கும்’ என்றெல்லாம் ரியல் எஸ்டேட் கம்பெனிக்காரர் வாயாலேயே வடை சுடுவார். ஆனால் வீடு கட்டியபிறகு அவர் சொன்ன எதுவுமே நீங்கள் நினைத்தது போலிருக்காது. ஆனால் மெய்நீட்சித் தொழில்நுட்பத்தின் உதவி இருந்தால், உங்கள் கனவு இல்லத்தின் முப்பரிணாம வடிவத்தை ஆரம்பத்திலேயே பார்த்து விடலாம். அதில் தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்து பார்க்கலாம்.
இதுமட்டுமல்லாமல், வேறு துறைகளிலும் மெய்நீட்சி அளிக்கும் ஆற்றல் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகும் என்பது தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்து. ஆனால் அதை நிஜமாக்க மேற்கண்ட சிக்கல்களைக் கடந்து செல்வது மிக அவசியம். வரும் ஆண்டுகள் இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தீர்மானித்து விடும்.
உதவியவை :
- Milgram’s Reality Virtuality Continuum : Paul Milgram and Fumio Kishino (1994)
- ubergizmo.com
- Digi-Capital AR/VR Leaders, Q1-2016
- 2016 Digi-Capital Report on AR and VR
- augment.com