நிறப்பிரிகை

Nirappirigai

 
“அப்பா உங்க கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்! எங்க கமலா டீச்சர் பொண்ணுக்கு மெடிகல் ஸீட் கிடைச்சுடுத்தாம்பா, ஸ்கூல்லே எல்லாரும் பேசிக்கிட்டாங்க!”
“ஆமாம்மா! கோபால் அங்கிள் கூட இன்னிக்கு எங்கிட்ட சொன்னார்.”
அப்பா ரெட் காயினை குறி பார்த்துக் கொண்டே சொன்னார்.
எங்க கமலா டீச்சர் கணவரும், அப்பாவும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்கிறார்கள்.
“அதுக்கு நிறய மார்க் எடுத்திருக்கணும் இல்ல?”
“கண்டிப்பா! அவ நல்ல மார்க் எடுத்ததாலதான் கிடைச்சிருக்கு! பாவம் நல்லா படிக்கட்டும்!”
ரெட் விழுந்தது. ஃபாலோவிற்கு இப்போது பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஏம்பா பாவம்?”
ஃபாலோ விழுந்தது.
“இல்லம்மா! சும்மா சொல்ல மாட்டமா, சில வார்த்தைகளை! அந்த மாதிரி சொன்னேன். தமிழ் இலக்கணத்தில கூட அதுக்கு ஏதோ பேர் இருக்கு இல்ல?”
“இல்ல, அந்த அங்கிள் உங்க கூட வேலை பாக்கறார். அவங்க மிஸஸ் எங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. அதனால, அவங்களும் நம்மளை மாதிரி ஓரளவு வசதி படைச்சவங்கதானப்பா? பின்ன ஏன் பாவம்?”
“குறிப்பா ஒரு பாவமும் இல்ல! ஜஸ்ட் லைக் தட் வாயில வந்துடுத்து, விட மாட்டேங்கறயே! இந்தா இப்போ உன் டர்ன், ஆடு.” ஸ்டிரைக்கரை என்னிடம் கொடுத்தார்.
நான் யோசிப்பதைப் பார்த்து, கண்ணாடியை மூக்கிலிருந்து இறக்கி விட்டுக் கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “தோக்கற மாதிரி இருந்தவுடனே ஏதோ கேள்வி எல்லாம் கேட்டு என்னன்னோவோ யோசிக்கறயே, விளையாடாம!” உசுப்பி விட்டார்.
“போங்கப்பா! இதோபாருங்கோ, உங்களை தோக்கடிச்சுட்டுத்தான் மறு வேலை.”
ஆக்ரோஷத்தோடு அடித்தேன், மைனஸ் விழுந்தது, அப்பா சிரித்தார்.
 

~oOo~

என்னுடைய ஆறாம் வகுப்பு ஆசிரியை கமலா டீச்சருக்கு என்னைக் கண்டால் அவ்வளவாகப் பிடிக்காது. இது என்னைத் தவிர, வேறு யாருக்கும் வெளிப்படையாக தெரியாதவாறு ஒரு மாதிரி பூடகமாகவும், நைச்சியமாகவும் வெளிப்படுத்துவார். இத்தனைக்கும் அவர் கணவரும், எங்க அப்பாவும் ஒரே அலுவலகம், அதான் போன பாராவிலே சொன்னேனே! தவிர ‘வகுப்பின் முதல் மாணவியை எப்போதும் ஆசிரியருக்குப் பிடிக்கும்’ என்கிற எல்லாக் காலத்துக்கும் செல்லுபடி ஆகக்கூடிய தங்க விதிக்கு ஒரு விலக்காகவும் இருந்தது அவரின் என் மீதான பிடித்தமின்மை. நான் ஏதாவது தவறிழைக்கிறேனா என்று பார்த்துக் கொண்டே இருப்பார். தவறிழைக்கவே வேண்டாம், தவறிழைத்ததாக சந்தேகம் வந்தாலே போதும் என்னை எழுப்பி,
“ஏண்டி! ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை! சொல்லு! இப்பிடி பக்கத்துல இருக்கறவளோட சளசளன்னு பேசறத்துக்கா பள்ளிக்கூடம் வந்த? சரி, உனக்கு கவனிக்க வேண்டாம், பக்கத்தில இருக்கறவ படிப்பை ஏன் கெடுக்கற?”
இந்த ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை குற்றச்சாட்டு, எல்லாத் திட்டுக்களுக்கும் பூர்வ பீடிகையாக வரும். நாங்கள் பெரிய ஜமீந்தாராக இருந்தோமா, இல்லையா என்பது இன்று வரை எனக்குத் தெரியவில்லை. எங்கள் நகரத்தை மிக ஒட்டி இருந்த கிராமத்தில், எங்கள் கூட்டுக் குடும்பத்துக்கு பல ஏக்கர்கள் நிலம் இருந்தது. அது முழுக்க குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அதிலிருந்து வருடத் தேவைக்கான அரிசி எங்கள் குடும்பத்துக்கு வரும். தவிர, எப்போதாவது, மனம் இருந்தால் குத்தகைக்காரர்கள் போனால் போகிறது என்று ஏதோ கொஞ்சம் பணமும் தருவார்கள். இது, நான் ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை என்பதற்கு போதுமான காரணமா என்று தெரியவில்லை.
கமலா டீச்சர் மனம் குளிரும்படியான ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நானே உருவாக்கிக் கொடுத்தேன்.
எங்கள் வகுப்பில் தனம் என்று ஒரு பெண் இருந்தாள். எங்கள் அனைவரைக் காட்டிலும் ஒரு மூன்று-நான்கு வயது பெரியவள் என்று நினைக்கிறேன். எங்கள் வகுப்பிலேயே அவளொருத்திதான் தாவணி போட்ட பெண். நல்ல சிவப்பு நிறம். உயரமும், பருமனுமாக நல்ல அழகாக இருப்பாள். இடுப்புக்கு கீழ் வரை வரும் கரிய, தடித்த பின்னல். அவள் பத்து, பதினந்து நாட்கள் பள்ளிக்கு வரவில்லை.
சுப்புத்தாயி சொன்னாள் “இன்னிக்கு மத்தியானம் சாப்பாட்டு இன்டெர்வல்ல அவ வீட்டுக்குப் போலாமா?”
“ஏன்?”
“அவ பெரிய பிள்ளை ஆயிட்டா! சடங்கு கூட சுத்திட்டாங்க! சும்மா போய் பாக்கலாமா?”
எல்லாருக்கும் சும்மா ஒரு ரவுண்ட் வெளியில சுற்றி வர ஆசை இருந்ததால் ஒப்புக் கொண்டோம்.
“ஆனா எல்லாரும் அஞ்சு நிமிஷத்தில சாப்பிடணும், சாப்பிட்ட உடன கிளம்பினா, போக இருபது நிமிஷம், வர இருபது நிமிஷம், அவங்க வீட்டுல அஞ்சு நிமிஷம், அப்பிடியும் ஒரு பத்து நிமிஷம் பாக்கி இருக்கும் மதிய இடைவேளையில, சரியா?” என்று மிலிடரி ஜெனெரல் மாதிரி உடனேயே வியூகம் வகுத்தாள் சுப்புத்தாயி.
நாங்களெல்லாம் ஏதோ சாஹஸம் செய்யப் போகிற மாதிரியான உற்சாகத்தில் தலையை ஆட்டினோம்.
அவுக் அவுக்கென்று ஐந்து நிமிஷத்தில் அரக்கப் பரக்க சாப்பிட்டு விட்டு, எல்லாரும் ஓட்டமும் நடையுமாக கிளம்பினோம்.எங்கள் பள்ளியை ஒட்டி இருந்த அழகான மரங்களடர்ந்த பங்களாக்கள் இருந்த தெருக்களைத் தாண்டி, முக்கிய சாலையில் வந்ததும் வலது புறம் திரும்பி, முக்கால் கிலொமீட்டர் நடந்து, அரசு அலுவலகங்கள் இருந்த வளாகத்தைத் தாண்டி, காளியம்மன் கோவிலைக் கடந்து, காவலர் குடியிருப்பைத் தாண்டி என்று போய்க் கொண்டே இருந்தோம். உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. வேர்வையைத் துடைத்து மாளவில்லை. பாவாடை தடுக்கத் தடுக்க நடந்தோம். பெரிய வயல் வெளியில் வரப்புகளின் மீது நடந்து கொண்டிருக்கும் போது பயம் வந்து விட்டது.
“ஏய்! என்னப்பா! ரொம்ப தூரம் வந்தா மாதிரி இருக்கு, இன்னும் அவ வீடு வரலை! யார் கிட்டயும் கடிகாரமும் இல்ல, நேரமும் தெரியல! பயமா இருக்கு! திரும்பிடலாம்பா!” என்றேன். இதற்காகவே காத்திருந்தது மாதிரி மற்றவர்களும் என்னோடு சேர்ந்து கொண்டனர்
“ஆமாமா! போயிடலாம்! பயமா இருக்குடி!”
சுப்புத்தாயி மட்டும் கொஞ்சம் யோசித்தாள்.
“இவ்வளவு தூரம் வந்துட்டோம்! இன்னும் கொஞ்ச தூரம்தான்” என்றாள்.
“இல்ல! நாங்க வரல! நேரமாச்சுப்பா! ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க. வாங்கடி, போலாம்.” என்றேன்.
அரை மனதாக “சரி! உங்க இஷ்டம்! எனக்கென்னா? நான் நெதம் அவளைப் பாக்கறேன்!”
திரும்பிப் போகும் பொழுது கிட்டத்தட்ட ஓடினோம். எவ்வளவு வேகமாக ஓடினாலும் பாதை வளர்ந்து கொண்டே போவது போல இருந்தது. நாக்கு வரண்டது. முதுகில் வேர்வை ஆறாக ஓடியது. முகத்து வேர்வையில் தலை முடியெல்லாம் ஒட்டிக் கொண்டு கண்ணை மறைத்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. பள்ளிக் கட்டிடம் கண்ணில் பட்டதும்தான் அப்பாடா என்று இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று தவறாகத் தெரிந்தது!
 

~oOo~

பள்ளி மைதானத்தில் ஈ, காக்கா இல்லை. ஒரே மயான அமைதியாக இருந்தது. நடு நடுவில் ரொம்ப தூரத்தில் சில வகுப்புகளில், டீச்சர்களின் குரல்கள் அந்த மத்தியான வேளையின் நிசப்தத்தைக் கலைப்பதற்கு மன்னிப்பு கேட்பது போல மெதுவாக ஒலித்தன.
“அடியே! மத்தியான பெல் அடிச்சுட்டாங்கடி!” ராணி கிட்டத்தட்ட அழும் குரலில் சொன்னாள்.
மெதுவாக வகுப்பறையின் வாயிலை அடைந்தோம்.
கமலா டீச்சர் போர்டில் எழுதி விட்டுத் திரும்பியவர் எங்களைப் பார்த்தார்.
“வாங்கடி, ராசாத்திகளா வாங்க! வலது காலை எடுத்து வச்சு வாங்க! எங்கே இவ்வளவு தூரம்?” என்று நக்கலான குரலில் வரவேற்றார். மத்தியான சாப்பாட்டுக்கப்புறம் அரை குறைத் தூக்கத்திலிருந்த வகுப்பு விழித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தது.
எல்லாரும் பேசாமல் இருந்தோம்.
அடுத்த நிமிஷம் குரலில் கோபம் கூடியது.
“எங்க ஊர் சுத்திட்டு வரீங்க?”
“தனம் வீட்டுக்குப் போனோம், டீச்சர்” சுப்புத்தாயி.
“எதுக்கு?”
“அவ பெரிய மனுஷியாயிட்டா!”
“அதுக்கு?”
யாரும் பதில் பேசவில்லை.
“அதுக்கு?” குரலில் ரௌத்ரம் கூடியது.
“இல்ல, சும்மா பாக்கலாம்னு…” அம்சவேணி தணிந்த குரலில் சொன்னாள்.
“அவ சடங்கானா, நீங்க ஏண்டி போணும்? அவளுக்கு அத்தையா, மாமியாடி நீங்க? நீங்க போய் சடங்கு சுத்தலைன்னா, போட்ட பந்தலை பிரிச்சுடுவாங்களாடி?”
“இல்லை டீச்சர்! வெள்ளிக் கிளமையே சடங்கு சுத்திட்டாங்க!” கீச்சுக் குரலில் சொன்னாள் கலா.
ஐய்யோ என்ற அலறல் வாயிலிருந்து வெளி வராமலிருக்க நாங்கள் அரும் பாடு பட்டோம்.
இந்த கலா சரியான இரண்டும் கெட்டான். அவளுக்கு யார் பேசினாலும் அந்த வார்த்தைகளின் நேரடியான அர்த்தம் மட்டுமே புரியும். பேசுகிறவரின் உடல் மொழி, முகக் குறிப்பு, குரலின் ஏற்ற, இறக்கம் இவற்றுக்கும், பேசுகிற வார்த்தையின் அர்த்தத்துக்கும் சம்பந்தம் உண்டு என்பது பற்றி அவளுக்குப் புரிதல் இருந்ததா என்பது சந்தேகம்தான்.
“அடடா! அப்பிடியா விஷயம்? சடங்கு வெள்ளிக் கிழமையே முடிஞ்சு போச்சா? என்ன இப்பிடி ஆகிப் போச்சு? அதான் இன்னிக்குப் போய் பாக்கி இருக்கிற சாங்கியத்தையெல்லாம் முடிச்சு வைக்கலாம்னு நீங்க எல்லாரும் போனீங்களாக்கும்?” என்று செயற்கையான அக்கறை தொனிக்கும் குரலில் கேட்டார் டீச்சர்.
கலா ‘ஆமாம்’ என்ற பாவனையில் தலையை மேலும், கீழும் ஆட்டினாள்.
கிக்கிக்கென்று யாரோ வகுப்பின் மூலையில் சிரிப்பை அடக்க முயற்சி செய்து தோற்க வகுப்பு முழுக்க கெக்கெக்கென்று சிரிப்பு பெரிதாக வெடித்துப் பரவியது.
“இந்த மக்குப் பிள்ளையை கூடக் கூட்டிப் போன முட்டாத்தனத்துக்கு இன்னிக்கு நாம எல்லாம் அடி வாங்கி சாகப் போறோம்டி!” காதருகில் சுப்புத்தாயி ஆருடம் சொன்னாள். “அதிலயும் உன் நிலமை ரொம்ப கஷ்டம்டி!” என்று எனக்கு விசேஷ ஆருடம் வேறு!
விஷயத்தின் விபரீதம் ஒருவாறு அவளுக்கு உறைக்க, ‘இல்லை’ என்ற பாவனையில் கலா தலையை வேகவேகமாக அசைத்தாள்.
திருப்பியும் வகுப்பில் குபீர் சிரிப்பு!
என் முகத்தில் உணர்ச்சிகளேதும் காட்டாமல் பொம்மை போல் வைத்திருக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
இத்தனை கேள்விகளையும் டீச்சர் எல்லாருக்குமாக கேட்டாரே தவிர, முழு நேரமும் அவர் கண்கள் என் முகத்தை விட்டு அகலவேயில்லை, கலாவைப் பார்த்த ஒன்றிரண்டு தருணத்தைத் தவிர.
“படிக்கற பிள்ளைக செய்யற வேலையா இது? எல்லாரும் படிக்க வந்தீங்களா? இல்ல ஊர் சுத்த வந்தீங்களா? வாயில என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லுங்கடி!”
நான் பேசாமல் இருந்தேன்.
“இங்க வாடி ஜமீந்தார் வீட்டுப் பொண்ணு! நீ பெரிய மனுஷின்னு அவங்க வீட்டுக்குப் போனயா? அவங்க யாரு தெரியுமில்லை? ……… ஜாதி!! அவங்க வீட்ல போய் விருந்து சாப்பிட்டுட்டு வந்தேன்னு போய்ச் சொல்லு உங்க வீட்டுலே! நீட்டுடி கையை!”
ஜாதி பற்றிய வலியான, வலுவான மறு அறிமுகம், சுளீரென்று பிரம்படி வலியாக என் கைகளில் இறங்கியது.
உண்மையில் அது வரையில் அந்தப் பெண்ணோ, என் வகுப்பில் வேறு யாருமோ என்ன ஜாதி என்ற கேள்வி ஒரு போதும் என் மனதில் வந்ததேயில்லை. ஜாதிகள் பல உண்டு என்பது தெரியும். ஒவ்வொருவரும் பேசுகிற மொழிக் கொச்சையும், சாப்பிடுகிற சாப்பாட்டின் ருசியும், பழக்க வழக்கங்களும் வேறு வேறு என்று தெரிந்ததே தவிர, அதனால் மனிதர்களை வேறு வேறு மாதிரி நடத்த வேண்டும் என்றோ, நினைக்கவேண்டும் என்றோ தோன்றியதேயில்லை.
உள்ளங்கையில் பட்ட அடியின் வலியிலும், அவமானத்திலும் கண்ணிலிருந்து நீர் வராமல் கஷ்டப்பட்டுத் தடுத்துக் கொண்டிருந்தேன். என் முதுகுக்குப் பின்னால், சுரீர் சுரீரென்ற பிரம்படியும், ஐய்யோ, அம்மா என்ற அலறலும், கேட்டுக் கொண்டிருந்தன.
 

~oOo~

நானும், ராணியும்தான் எப்பொழுதும் பள்ளிக்கு ஒன்றாக நடந்து போவோம். ஒன்பதரை பள்ளிக்கு எட்டே காலுக்கெல்லாம் கிளம்பி விடுவோம். போகிற பாதையில் இருக்கிற கிருஷ்ணர் சிலை வைத்த வீடு எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய காம்பவுண்டோடு கூடிய பெரிய பங்களா. கேட்டிலிருந்து வீடு ரொம்ப தூரம். சுற்றி நிறைய மரங்கள், நிறைய வண்ண வண்ண பூச்செடிகள். கேட்டிலிருந்து வீட்டுக்குப் போகிற பாதையில் பாதி தூரத்தில் நடு மத்தியில் ஒரு அழகான கிருஷ்ணர் சிலை உயரமான பீடத்தில், சுற்றிலும் பெரிய வட்ட வடிவமான நீர் தொட்டி , நீருற்றுக்களுடன். அன்று அந்த வீட்டை கடக்கும் பொழுது கமலா டீச்சரைப் பற்றிப் பேச்சு வந்தது.
“அவங்க பொண்ணு நிறய மார்க் எடுத்து மெடிகல் சேந்துடுச்சுன்னு டீச்சர் இவ்வளவு பெருமையா ஆயிட்டாங்களா? ஏன் இப்பிடி திட்டி அடிக்கறாங்க எல்லாரையும்?” என்று கேட்டேன்.
“ஆமா 60% எடுத்து மெடிகல் சேந்துருக்கு, ஆனா அதனால எல்லாம் இல்லப்பா! அவங்க எப்பவுமே ரொம்ப கண்டிஷனான டீச்சர்தான!” என்றாள் ராணி.
“என்னது? பின்ன எப்பிடி…” நான் பேசி முடிப்பதற்குள்,
“குழந்தே! குழந்தே! இப்பிடி கொஞ்சம் வரயா?” என்று யாரோ மெல்லிய பலவீனமான குரலில் கூப்பிடுவது கேட்டது. ஒரு வயதான பாட்டி நார்மடி புடவை கட்டிக் கொண்டு கையில் ஒரு சாக்குப் பையை மூட்டை மாதிரி சுருட்டிக் கொண்டு நின்றார். அந்த வீட்டின் குட்டையான காம்பவுண்ட் சுவரை ஒட்டி வெளியே வளர்ந்திருந்த மரத்தடியில் நின்றிருந்தார்.முகம் வாடி, சுருங்கிப் போய் இருந்தது.
“என்ன பாட்டி? என்ன வேணும்?”
“எனக்கு ஒரு சின்ன ஒத்தாசை செய்யறயா?”
“சொல்லுங்கோ பாட்டி, என்ன செய்யனும்?”
“ஒரு கடிதாசு எழுதிக் கொடுக்கறயா?”
“சரி பாட்டி! குடுங்கோ.” ராணி “ஆமா, நமக்குத்தான் நேரம் இருக்கே! எழுதிக் கொடு” என்றாள்.
இருவரும் புத்தகப் பைகளை கீழே சுவரை ஒட்டி வைத்தோம். நான் பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தையும், பேனாவையும் எடுத்தேன். பாட்டி ஒரு கார்டை எடுத்துக் கொடுத்தார்.
“சொல்லுங்கோ பாட்டி!”
“கொஞ்சம் சின்ன எழுத்தா எழுதும்மா, நிறய எழுத வேண்டியிருக்கு”
“சரி!பாட்டி”
“க்ஷேமம் போட்டுக்கோ”
கடிதத்தின் இடது பக்க மூலையில் க்ஷேமம் என்று எழுதினேன்.
“ஆச்சு பாட்டி!”
“அன்புள்ள தேசிகனுக்கு, அம்புஜம் சித்தி எழுதறது”
எழுதிக் கொள்வது “ம்…”
“பெருமாள் கிருபையிலே நீயும், பங்கஜமும் ,குழந்தைகளும் சௌக்யமா இருப்பேள்னு நினைக்கிறேன்”
“ம்”
“இங்க என்னை சுந்தாச்சு அவாத்திலேந்து அவாத்துலேந்து…”
எழுதி விட்டு நிமிர்ந்தேன், “பாட்டி மேல சொல்லுங்கோ”
பாட்டி அழுது கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சு பாட்டி?” எனக்கு கஷ்டமாக இருந்தது. புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு “நீ எழுது குழந்தை, துரத்தி விட்டுட்டான்” குரல் தழு தழுக்க தொடர்ந்தாள்.
“எனக்கு வேற போக்கிடம் இல்ல! உங்காத்துக்கு வந்துடறேன்! உங்களுக்கு வீட்டுக் காரியங்களில் எல்லாம் ஒத்தாசையா இருப்பேன்”
“ம்”
“என்னை வராதேந்னு மட்டும் சொல்லிடாதே! நான் சாப்பாட்டுக்கே கஷ்டப் படறேன்”
நிமிர்ந்து பார்த்தேன்,பாட்டியின் முகம் அழுகையில் கோணியிருந்தது. நானும் ,ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
“பாட்டி ! அழாதீங்கோ!”
“பெருமாள் கோவில் ப்ரசாதம்தான் என் வயித்துப் பசிக்கு இப்பொ!
கோவில்லதான் இப்பொ இருக்கேன், ஆன ரொம்ப நா இருக்க விட மாட்டா”
“ம்”
உன் ஊருக்கு வரதுக்கு உண்டான அஞ்சு ரூபாயை பட்டர் விலாசத்துக்கு அனுப்பு! தயவு செய்து அனுப்பு, மறக்க வேண்டாம்”
“ம்”
பட்டர் விலாசம், நீலமேக பட்டச்சாரியார் , ப்ரசன்ன வெங்கடாஜலபதி  கோவில்,……..”சொன்னார் எழுதினேன்.
“பெருமாள் உங்களையெல்லாம் க்ஷேமமா வச்சுப்பார் ,இப்படிக்கு அம்புஜம் சித்தி! அவ்வளவுதான்”
“பாட்டி !தேசிகங்கிறவர் விலாசம் சொல்லுங்கோ!”
“நீ ரொம்ப கெட்டிக்காரியா இருக்கே குழந்தே! இதோ பாரு இந்த பேப்பர்ல!” கசங்கிய பேப்பர் ஒன்றைக் கொடுத்தார்.
தேசிகன் என்று போட்டு ஏதோ திருப்புல்லாணி என்ற ஊர் விலாசம் இருந்தது,எழுதினேன், அது வரை அந்த ஊர் பெயரை கேள்விப் பட்டிருக்காத எனக்கு அந்த ஊர் எப்போதும் மறக்காதபடிக்கு ஆனது, அந்த வினாடியில்.
பாட்டியிடம் கார்டைக் கொடுத்தேன்.பாட்டி கண்களை துடைத்துக் கொண்டே “குழந்தை! அந்த ஆண்டாளே நேர்ல வந்தாப்ல… நீங்க ஐயங்கார் தானே?”
“இல்ல பாட்டி! ஐயர்!”
“அப்பிடியா சரி! சாக்ஷாத் மீனாக்ஷியையே நேரில பாத்தாப்ல இருக்கு! நன்னா இரு! நீயும் நன்னா இருடி குழந்தை” என்று ராணியையும் பார்த்துச் சொன்னார்.
“வரட்டுமா பாட்டி? வேற ஏதாவது வேணுமா?”
“ஒண்ணும் வேண்டாம் கண்ணு! நீங்க போங்கோ!”
நாங்கள் திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தோம்,பாட்டி அந்த குட்டை காம்பவுண்ட் சுவரைப் பிடித்தபடி மெதுவாக போய்க் கொண்டிருந்தார்.
அப்புறம் அந்த கிருஷ்ணர் சிலை வைத்த வீட்டைத் தாண்டிப் போகும் பொழுதெல்லாம் மனது கனமாக இருந்தது. எங்களுக்குள் ஒரு புரிதல் போல அந்த வீட்டைக் கடக்கிற இரண்டு நிமிடம் வரை பேசாமல் இருப்போம்.
அன்று மதிய இடை வேளையில் சாப்பாட்டு டிபன் பாக்ஸைத் திறக்கும் போது
“பாவம் இல்ல அந்த பாட்டி! நம்ம சாப்பாட்டைக் கூட குடுத்திருக்கலாம்!”என்றாள் ராணி.
“குடுத்துருக்கலாம்தான்! ஆனா அவங்க வாங்கியிருப்பாங்களான்னு சந்தேகம்தான்”
“ஏன்? ஓ! புரியுது! புரியுது! என் சாப்பாடு வேணா வேண்டாம்,உன்னோடது? நீயும் ஐயர், அவங்களும் ஐயர்தானே?”
“இல்ல என் சாப்பாடைக் கூட  சாப்பிட்டிருக்க மாட்டாங்க! நான் கார்டைத் திருப்பி கொடுக்கும் போது, என் கையில படாம , ஒரு மூலையைப் பிடிச்சு வாங்கினாங்க! பாத்தியா?”
“ஏன்?”
“தெரியல! எங்க பாட்டி கூட எங்களையெல்லாம் தொட மாட்டாங்க!ரொம்ப நல்லவங்க, ஜாலியா பேசுவாங்க,கேரம். செஸ் ,லூடோ எல்லாம் விளையாடுவாங்க!ஆனா தொட மாட்டாங்க. ராத்திரி சாப்பாடு எல்லாம் ஆனப்புறம் அவங்களைத் தொடலாம்!”
“ஏன் அப்பிடி?’
“சரியாத் தெரியலை! நான் நினைக்கறேன், அவங்களுக்கு அவங்க சுத்தமா இருக்காங்கறது 100% நிச்சயமாத் தெரியுது, ஆனா, மத்தவங்க சுத்தத்தைப் பத்தி அவ்வளவு நிச்சயமா நம்ப முடியலை”
“என்ன பிள்ளை! புத்தகத்தில வரவங்க மாதிரி பேசறே?”
என்னை ரொம்ப பிடிக்கும் தருணங்களில் அவள் என்னை பிள்ளை என்று கூப்பிடுவாள்.அந்த பிள்ளை என்ற அழைப்பில் பிரியம் வழியும்.
“நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
“ம்..சொல்லு!”
“எங்க அம்மா மாட்டுக் கொட்டம் கழுவிட்டோ, இல்ல சாணி தட்டிட்டோ  வரப்போ சொல்லுவாங்க ‘மேல வந்து விழாதீங்கடி, கையை ,காலை கழுவிட்டு வரதுக்குள்ளே! என்ன அவதி! தள்ளி இருங்கடீன்னு!’ கத்துவாங்க! அதனால, சுத்தமா இருந்தாலும் தொட மாட்டாங்க! அசுத்தமா இருந்தாலும் தொட மாட்டாங்க! கரெக்டா?”
“கரக்ட்!” இருவரும் சிரித்தோம்.
அன்று சாயந்தரம் வீட்டு வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா தெரு முனையில்  வருவது தெரிந்தது.அவர் பின்னாலேயே ரண்டு, மூன்று குழந்தைகள். அவர் நடந்து வர வர கூட்டம் அதிகமாகியது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று நின்று அந்தந்த வீட்டுக் குழந்தைகளுடன் ஏதாவது பேசிக் கொண்டே வந்தார்.
“நிலாக்குட்டி! அம்மாவைப் படுத்தாம சாப்பிடும்மா! நீதான் நல்ல குழந்தையாச்சே!” என்பர் அம்மாவிடம் சாதம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையிடம்.
இன்னொரு வீட்டு அம்மா “இதோ பாருங்க அங்கிள்! சட்டைய போடாம ரோட்ல ஓடறான்”என்று புகார் சொல்ல “சுரேஷ்! நீ நல்ல பையனாச்சே! தாத்தா சொன்னா கேப்பையில்லே! நான் இங்கயே நிக்கறேன், நீ சட்டையை போடு”
அவன் சட்டையை மாட்டிக் கொண்டு அப்பா பின்னாலேயே வருவான். அப்பாவின் அடர்த்தியான சுருள்சுருளான வெள்ளைத் தலையினால் அப்பாவை எல்லா குழந்தைகளும் தாத்தா என்றே கூப்பிடும்,அப்பாவிற்கு தாத்தா ஆகும் வயசு ஆகவில்லை என்றால் கூட. அந்த வெள்ளைத் தலைக்கும் , இளமையான முகத்துக்குமான முரண் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
இன்னொரு வீட்டில் அடி வாங்கும் குழந்தை  அப்பாவிடம் தஞ்சம் அடையும் “தாத்தா ,தாத்தா! அம்மா அடிக்கறாங்க!” என்று. அவன் அம்மா சொல்லுவார் “அப்பா! எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்தான்!” அப்பாவை உறவு சொல்லாமல் யாரும் அழைத்து நான் பார்த்ததில்லை. அவர் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, தாத்தா எல்லாம்! அவரவர் எண்ணத்துக்கும், ஆசைக்கும் தக்கபடி.
எல்லா குழந்தைகளும் அப்பாவிடம் ஏதோதோ சொல்லிக் கொண்டே வந்தன.
“வீட்டுக்குப் போங்கடா!”
“இல்ல தாத்தா! உங்களை வீட்டில விட்டுட்டுதான் போவோம்!”
வாசல் வரைக்கும் வந்து டாடா பை பை எல்லாம் சொல்லிவிட்டு ஓடின.
அப்பா அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்றார்.
“உங்களைப் பார்த்தால் பைடு பைப்பர் ஆஃப் ஹேமலின் மாதிரி இருக்குப்பா” என்றேன்.
“அப்பிடியா! உனக்குன்னு ஏதாவது இப்பிடித் தோணும்!” என்னைப் பாராட்டுவது போல முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு சிரித்தார்.”ஆனா  நான் நல்ல பைடு பைப்பர் இல்லயா?”
இப்பொழுது நாங்கள் இருவரும் சேர்ந்து சிரித்தோம்.
“கமலா டீச்சர் பொண்ணை ஏன் பாவம்னு சொன்னேள்னு தெரிஞ்சுதப்பா!”
என் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்து சிரித்தார். பின் என் தோளை அணைத்துக் கொண்டு “வா! உள்ளே போலாம்” என்றார்.

One Reply to “நிறப்பிரிகை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.