செழிப்பை நல்கிய குரூரக் கப்பல்கள்- மணிலா காலியன்கள்

இன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்க ஒரு முக்கிய காரணி மணிலா காலியன்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பெரும் லாபத்தையும், அளவிடமுடியாத துயரங்களையும் அளித்தன.
டேவிட்மோரிஸ் தொழில்நுட்பம் குறித்தும், கலைகள் குறித்தும் பார்சூன், சிக்னல் டு நாய்ஸ் இதழிலும் எழுதுகிறார். ஃப்ளோரிடாவில், டாம்பா நகரில் வசிக்கிறார்.

 
header_ESSAY-Galleon-541328823
பதினேழாம் நூற்றாண்டின் முடிவில் ஜெமெல்லி கரேரி எனும் இத்தாலியக் கடலோடி பூமிப்பந்தை வலம் வந்தார். அப்பயணங்களில், மணிலா காலியன்கள் எனப் பெயர்கொண்ட 1697ல் ஆழ்கடலுக்கென கட்டப்பட்ட பெரிய பாய்மரக்கப்பற் பயணங்களில் மணிலாவிலிருந்து அக்காபுல்கோ சென்ற பயணமே மிகவும் அபாயகரமானது. இவ்வாணிபக்கப்பல்கள் இரு நூற்றாண்டுகளாக வாசனைப்பொருட்களையும், விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச்சென்றன. ஆசியாவிலிருந்து, உலகில் புதிதாகக் கண்டுபிடித்த நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் நடந்த இந்த வர்த்தகத்தால், மணிலாவில் இருந்த ஸ்பெயினின் காலனிய வாணிபர்களுக்கும், பணமுதலைகளுக்கும் பெரும் லாபம் கிடைத்தன. இக்கப்பல் மாலுமிகளின் நிலை குறித்த கரேரியின் வர்ணனை ‘உலக சுற்றுப்பயணம்(Giro del Mondo-1699)” எனும் குறிப்பில் காணக்கிடைக்கிறது.
‘குளிர், பசி, தாகம், பிணிகள் மற்றும் பல்வேறு துன்பங்கள்.. பைபிளில் இறைவன் எகிப்திய பாரோக்களுக்கு அனுப்பியதைப் போல மாலுமிகளுக்கு பிளேக்குகளை அனுப்பினான்.. கப்பல் முழுதும் கார்கோஹோஸ் என அழைக்கப்படும் பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருந்தன… மோசஸ் தன்னுடைய தண்டத்தை ஒரு பாம்பாக மாற்றினால், காலியனில் எந்த விதமான இறையதிசயமும் இல்லாமல் தண்டமாக மறுபடி மாறிவிடும்.(அதாவது இறையதிசயங்களை விஞ்சிய கொடூரச்சாவு) .. முடிவற்ற பயணங்கள், கொடூரமான கடல், கெட்டுப்போன உணவுகள். ஏராளமான ஏழை மாலுமிகள் நோய்வாய்ப்பட்டனர்’
பணக்கார, பணம் கொடுத்து பயணம் செல்லக்கூடிய கரேரிக்கு கொஞ்சம் நல்ல வசதிகள் கிட்டி இருக்கும். ஆனாலும் கடற்பயணத்தில் உயிருக்கு உத்திரவாதம் என்பது வசதிவாய்ப்பு சார்ந்ததல்ல. அவருடைய பயணத்தின் முடிவில் இரண்டு கப்பல் அதிகாரிகள், ஒரு மாலுமி, ஒரு மாலுமித்தலைவன் ஆகியோர் இறந்தனர். பெரிய மண்பாண்டங்களை காலில் கட்டி, இறக்கி, கடலில் ஈமச்சடங்குகள் முடிந்தன.
மாலுமித்தலைவன், ‘பெர்பென்’ எனும் நோயால் உடல்வீங்கி, நிறம்மாறி இறந்தான் என்று கரேரி குறிப்பிடுகிறார். கப்பல்களில் பெர்பனை அடுத்து மிகவும் அச்சப்படவைத்தது ‘டச்சுநோய்’. வாய்ப்புண்கள் பெருகி, ஈறுகள் அழுகி, பற்கள் விழுந்து விடும். இன்று நாமறிந்த நோய்தான் அது. ஸ்கர்வி. இரண்டரை நூற்றாண்டுகள் காலியன்களின் மாலுமிகள் கொத்துகொத்தாக இதைப்போன்ற மர்மமான பயங்கர நோய்களால் உடல்முழுக்க அழுகியும், பற்கள் விழுந்தும் கரும்பூக்களாக உதிர்ந்தனர்.
பெர்க்லி வரலாற்றாசிரியர் ஜான் டீவ்ரைஸ், 580 லிருந்து 1795 வரையான காலத்தில் இரண்டு மில்லியன் ஐரோப்பியர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிட்டுகிறார். அவர்களில் 920,412 பேர் உயிர்தப்பி இருக்கிறார்கள். ஐம்பத்துநான்கு சதவிகிதம் கடற்சமாதிதான். டீவ்ரைஸ், ஒவ்வொரு 4.7 டன் பொருட்கள் ஐரோப்பா சேர ஒரு மனித உயிரை பலிகொடுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கூடவே, சென்ற ஒவ்வொரு நாட்டிலும், பல்வேறு வியாதிகளை ஐரோப்பியர்கள் பரப்பி இருக்கிறார்கள், கடும் வன்முறைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வேற்றுநாட்டவர்கள் அடைந்த துயரம் கப்பல் பயணங்களை விட கொடூரமானவை. இந்தத் கொடூரங்களும், பெரும் துன்பங்களும், மாலுமிகளின் உயிர்களுமே நாமிருக்கும் இன்றை உலகத்தைச் செதுக்கியவை.
முதல் மணிலா காலியன் கப்பல் 1565 வாக்கில் மணிலாவுக்கும் அகாபுல்கோவுக்கும் இடையே உலகத்தை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அடுத்தடுத்து, 1815 வரை ஒவ்வொரு வருடமும் இப்பயணங்கள் தொடர்ந்தன. இந்தக் கடல்வழியின் மூலம், அனைத்துக் கண்டங்களின் இணைப்புக்கும் இருந்த கடைசித்தடையும் உடைத்தெறியப்பட்டது. ஸ்பானிஷ் இலக்கியப் பேராசியர் ஆர்டுரோ ஹிரால்தேஸ் ‘மணிலாவில் வந்திறங்கிய ஸ்பானியர்கள் எல்லா நிலப்பகுதிகளுக்குமிடையேயான நிரந்தர இணைப்பை உருவாக்கி’ யதாக குறிப்பிடுகிறார்.
ஐரோப்பிய வரலாறு முழுக்கக் காணப்படும் புனைக்கதைகளில் வரும் அபாரமான தங்க நகரங்களுக்கானத் தேடலாக அன்றி, காலியன்களும் அதன் முதலாளிகளும், மாலுமிகளும், இன்றைய ‘மெர்ஸ்க்’ போன்ற வாணிப நிறுவனங்குக்கு என்ன குறிக்கோளோ அக்குறிக்கோளுடன்தான் கப்பலோட்டினர். வாணிபத்துக்காக கடலோடுதல், அதற்காக தூரநாடுகளையும் நிலப்பகுதிகளையும் அறிந்து வாணிபத்தில் ஈடுபடுதல், அவ்வளவே.
இவ்வியாபாரங்களில் முதலிடம் பிடித்தவை வாசனாதி திரவியங்கள். சிலுவைப்போர்களின் மூலம் மத்தியக்கிழக்கு நாடுகளிலிருந்து அறிமுகமான ஆசிய வாசனைப்பொருட்கள், அவற்றின் சுவைக்காவும், மருத்துவக்குணங்களுக்காகவும் ஆக்கூடிய விலையில் ஐரோப்பாவில் விற்பனை ஆயின. பல்லாண்டுகளாக மிகவும் விரும்பப்பட்ட ஜாதிக்காயும் கிராம்பும், பசிபிக்பெருங்கடல் மோலுக்காஸ் என்ற சிறிய தீவில் விளைந்தவை. இவை சிக்கலான வாணிப வழிகளில் ஆசிய, அரேபியத் தரகர்களின் மூலம் ஏகப்பட்ட விலையில் ஐரோப்பா வந்தடைந்தன.
இந்த இடைத் தரகை ஒழிக்கக் கிடைத்த ஆயுதம்- கப்பல் தொழிநுட்பம். முன்பு மத்தியத்தரைக்கடல் பகுதியில் சிறிய துடுப்புப் படகுகளிலேயே வாணிபம் ஆமைவேகத்தில் நகர்ந்தது. அவை ஆழ்கடலுக்கு ஏற்ற கலங்கள்அல்ல . பதினேழாம் நூற்றாண்டில் கப்பல் கட்டும் நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், பல பாய்மரங்களுடனும், உறுதியான சுக்கான்களுடனும், பெரும் கொள்ளவு கொண்ட மாபெரும் கலங்கள் கட்டப்படன. காலியன்களின் வியாபார முதுகெலும்பாக இப்பெரும் கப்பல்கள் புயல்களைத் தாங்கக்கூடிய, நிறைய சரக்கை ஏற்றக்கூடிய, பலமான பீரங்கிகளைகொண்டவைகளாவும் உருவாயின.
இப்புதிய நுட்பங்களைக் கைக்கொண்டு, போர்த்துகீசியர்கள், தென்கிழக்காசியத் தீவுகளுக்கு கிழக்கு நோக்கி ஆப்ரிக்கா வழியாக பதினைந்தாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்தனர். ஆனால் ஸ்பெயினுக்கு இதில் ஒரு பிரச்சனை. 1494ம் வருடம் போட்ட டோர்டிஸீயஸ் ஒப்பந்தத்தின் (Treaty of Tordesillas) படி அவர்களால் அதே கடல் வழியில் வியாபாரத்தில் ஈடுபடமுடியாது. ஆகையால் அவர்கள் மேற்குநோக்கிய வழிகளைத் தேட ஆரம்பித்தனர்.
இப்படியான பயணங்களில் பெரும் முயற்சி எடுத்தவர் நாம் நன்கறிந்த ஃபெர்டினான்ட் மெகல்லன். மெகல்லனின் ஸ்பானிஷ் கடற்குழு (அவர் ஒரு போர்த்துகீசியர், உண்மையான பெயர் பெர்னாவோ டீ மகலேஸ்). அவர் 1519ம் வருடம் செவில் நகரிலிருந்து கிளம்பி, தென்னமரிக்காவை கடந்து 99 நாட்களில் ஆசியாவை அடைத்தார். இச்சிறு பயணமே எதிர்பார்த்ததை விட கடும் பயணமாக அமைந்தது. குவாமை வந்தடைவதற்குள்ளாக மாலுமிகள் பசியினால் கப்பலின் கப்பிலில் இருந்த தோல் பொருட்களை உண்ண வேண்டிய அளவு பட்டினி.
INLINE-1750_Anson_Map_of_Baja_California_and_the_Pacific_w-_Trade_Routes_from_Acapulco_to_Manila_-_Geographicus_-_MerDuSud-anson-1750

1750ல் கடல் வரைபடம். பசிபிக் பெருங்கடலில் ஸ்பானிஷ் காலியன்களின் அகாபுல்கோ(மெக்சிகோ)- மணிலா (பிலிபைன்ஸ்) இடையேயான கடற்பாதைகள். நன்றி:விக்கிமீடியா

அதைவிடக் கொடுமை மெக்சிகோவிற்கு திரும்பும் வழியே தெரியவில்லை. இன்றைய எரிபொருள் கப்பல்களால் எந்த கடற்சூழலையும் லாகவமாகக் கடந்து நேர்க்கோட்டில் பயணிக்கமுடியும். ஆனால் அன்றைய கப்பல்களுக்கு காற்றின் திசை, கடல்நீரோட்டம், பாய்மரம் இவையே எரிபொருள். அடுத்து நிலவின் ஈர்ப்புவிசை, காலநிலை,பூமியின் சுழற்சி இவையனைத்தும் சேர்ந்து சில பாதுகாப்பான வளைந்து நெளிந்த கடல் வழிகளை அளிக்கிறது. இந்த வழியேதான் ஐரோப்பியக் கடல் வாணிபங்கள் அனைத்தும் நடைபெற்றன. ஆசியாவை அடைய மேற்குநோக்கிய வழிகளை அறிந்திருந்த மெகல்லனுக்கு திரும்ப வரவேண்டிய வழி தெரிந்திருக்கவில்லை.
ஏப்ரல் 27, 1951ல், மெகல்லன் பிலிப்பைன்சில் நடந்த உள்ளூர்க் கலவரங்களில் கொல்லப்பட்டார். அவருடைய மாலுமிகள் சிதறிப்போயினர். ஆனாலும் அவருடைய ‘ட்ரினிடாட்’ கலம் பசிபிக்கை கடக்க முயன்றது. பலமாதங்கள் கடந்தபிறகும் மீண்டும் மீண்டும் ஆசியாவுக்கே பின்தள்ளப்பட்டது. இன்றைய மின்படிக்கட்டுகளை எதிர்திசையில் ஏறுவதற்கு சமமான முயற்சி அது. கடைசியில், அம்மாலுமிகள் அங்கிருந்த போர்துகீசிய அரசாங்கத்திடம் சரண்டைந்துவிட்டனர். ஆனால் செப்டெம்பர் 1522ல், அவருடைய ‘விக்டோரியா’ வேறுவழியில்லாமல் ஏற்கனவே அறிந்த (ஆசியாவிலிருந்து) மேற்குநோக்கிய வழியில் ஆப்பிரிக்க முனை வழியாக- முதன்முறையாக முழுதாக உலகத்தை வலம் வந்து-ஸ்பெயினை வந்தடைந்தது.
இது பெரிய வரலாற்று மைல்கல், ஆனால் கடல்வாணிபத்துக்கும் முற்றும் உதவா(லாபமளிக்காத) கடல்வழி. இதனால் ஸ்பானியர்கள் மணிலாவிலிருந்து மெக்சிகோவிற்கு கிழக்குநோக்கிய பசிபிக் சுழலைத்தாண்டி வந்துசேரவேண்டிய வழியைக்கண்டுபிடிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. பல்லாண்டுகள் அதைத்தேடி கடைசியில் ஆண்ட்ரே டீ உர்தாநேடா எனும் துறவி-மாலுமி கண்டறிந்தார்.
இவர் மெகல்லனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். மெகல்லனுடன் நாம் நினைவில் வைத்து போற்றத்தக்கவர். உர்தாநேடா ஒரு சிந்தனையாளர், பக்திமான். 1525ல் ஸ்பெனியிலுருந்து கிளம்பிய அவர் ஒரு துரதிர்ஷ்ட்டப் பயணத்தினால் மோலுக்காஸ் (இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் அருகே ஒரு சிறிய தீவு) வந்து, அங்கேயே ஒன்பது வருடங்கள் தங்கி இருந்தார். அவருக்கு அப்பகுதி அத்துப்படி. பின் மெக்சிகோ திரும்பி இருந்தார். அவர் ஸ்பானிய அரசால் மெக்சிகோ சிட்டியிலிருந்து 1564ல் மெகல்லனின் பணியை முடிக்க பணிக்கப்பட்டார்.
அவர் ‘மிகுவேல் லோபஸ் டீ லெகாஸ்பி’ எனும் பெயர்கொண்ட தலைவனுக்குக் கீழ் ஒரு தலைமை மாலுமியாக பயணத்தைத் தொடங்கினார். மெகல்லனின் மேற்குநோக்கிய வழியில் மெக்சிகோவிலிருந்து ஒரு சிறுபடையைக் வழிநடத்திச் சென்று, பிலிப்பைன்ஸ் தீவுகளை ஸ்பானிஷ் காலனியாகப் பிடித்தனர். மணிலாவை வர்த்தகத் தலைமையிடமாக ஆக்கிக் கொண்டனர். 1565ல், அப்பகுதியை நன்கு அறிந்தமையால், ‘சான் பாப்லோ’ எனும் ஒரு கப்பலை மணிலாவிலிருந்து வடக்கு நோக்கி செலுத்தி ஜப்பான் கரையோரமாகப் பயணித்தார். அவ்வழியில் குரோஷியோ நீரோட்டத்தைக்கண்டறிந்தார். அந்த நீரோட்டப்பாதை கிழக்குநோக்கித்திரும்பி மேக்சிகோ அருகில் கொண்டுவந்தது. கடைசியில் ‘டோர்னாவியாயே(tornaviaje)’ எனும் திரும்பிவருதல் எனும் கனவு (அந்தக்கனவுக்கு ஒரு பெயரையே வைத்துவிட்டார்கள்) மெய்ப்பட்டது. உர்தாநேடாவின் ஆகப்பெரிய சாதனை இது.

‘ஆடம் ஸ்மித்துக்கு முன்பே காலியன்கள் நாடுகளின் வளத்துக்கு தனியாற்றல் அவசியம் என்பதை உணர்த்திவிட்டது: யார் தூரங்களைக்கடக்கிறார்களோ அவர்கள் அதற்கான அறுவடையைப் பெறமுடியும்’

மணிலாவையும் அகாபுல்கோவையும் இணைக்கும் இந்தக் குறுகிய கடற்பாதை மிகவும் கடினமானது. இந்த 11,500 மைல் பாதைதான் அதுவரை மனிதன் பயணித்தவைகளில் கரையைத்தொடாமல் பயணித்த மிக நெடிய பாதை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு உணவயோ தண்ணீரையோ நிரப்பிக்கொள்ள வழியில்லாத பயணம் அது. ஒரு நூற்றாண்டுக்குப்பிறகும் கூட அந்தப் பாதையின் பயங்கரங்களைக் கணக்கிட்டால் உர்தாநேட்டாவின் பயணம் அசாத்தியமானது.
அப்பயணத்தின் முடிவில் குற்றுயிரும் குலையுயிருமாக, பட்டினியால் வாடிய மாலுமிகள் கரை சேர்ந்தனர்.
அடுத்த இரண்டரை நூற்றாண்டுகளுக்கு, வருடத்துக்கு ஓரிரு கப்பல்கள் அப்பாதையில் பயணித்துக் கரையை அடைந்தன. மணிலா காலியன்கள் இந்த அதிதீரத்துக்குப் பரிசாகக் கொள்ளை லாபங்களை வழங்கின. அதில் பெரும்பங்கு மணிலாவில் இருந்த ஸ்பானிய வர்த்தகர்களுக்கும், பணமுதலைகளுக்கும் போய்ச்சேர்ந்தது. மெக்சிகோவிலிருந்து கப்பல்கள் வெள்ளிக்கனிமத்தை நிரப்பிக்கொண்டு சென்று சீனர்களிடம் விற்றது. சீனர்கள், அதை நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டு, ஸ்பானியர்கள் விரும்பிய வாசனைப்பொருட்களை மட்டுமன்றி, சீனப்பட்டையும், பீங்கான் ஜாடிகளையும், ஜப்பானிய நகைகளையும் வணிகம் செய்தனர்.
மணிலாவில் வாழ்க்கை இன்பமயமானது. காலியன்கள் வந்து சேரும் ஓரிரு மாதங்கள் மட்டும் செப்பனிடுவது, சரக்கேற்றுவுது, இறக்குவது என்று வேலை. எஞ்சிய பலமாதங்களில் காலனியாதிக்க ஸ்பானியர்கள், படாடோபமான விருந்துகள், வண்டிகளில் விடு சவாரி என்று பொழுதைப் போக்கினர். காலனியாதிக்கம் என்றாலும் பிலிப்பனைஸின் உள்ளுர் பொருளாதாரத்தில் எவ்விதமான ஈடுபாடும் காட்டவில்லை. வெறும் கப்பல்கள் சார்ந்த வேலைகள், கப்பலில் வரும் சரக்கு வியாபாரம் மட்டுமே. பிலிப்பைன்சில் கிடைத்த தங்கத்தை வெட்டி விற்பதைக்கூட செய்யவில்லை. இன்றைய கணக்கில் உலகின் தங்கக்கனிம வளத்தில் பிலிப்பைன்ஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அவர்களின் ஒரே குறிக்கோள் லாபமான தொழில், காலனிய மக்களின் வாழ்வை எந்தவிதத்திலும் இவர்கள் வளப்படுத்தவில்லை.
மற்ற எல்லாக் காலனிகளிலும் ஸ்பானியர்கள் கொள்ளையடித்ததைப் போல இங்கே இல்லை. நாட்டின் எந்த வளத்தையும் அவர்கள் தொடவில்லை. மணிலாவில் கிடைத்த மற்ற கனிமங்கள், பொருட்கள், ஓபியம் எதையும் வணிகம் செய்யவில்லை. அவர்கள் கடல் வாணிபத்துக்கு முக்கியக் கேந்திரமாக அதன் பயன்பாட்டைமட்டும் கட்டுப்படுத்தினர். லாபகரமான ஒரு நாட்டுக்கு ஏற்றுமதி இறக்குமதி மூலமே பொருளாதாரத்தை வளர்க்கமுடியும் என்று ஐரோப்பியக் கண்டம் உலகப்பொருளாதாரத்தை அணுகியபோது, காலியன்கள் மட்டுமே, ஆடம் ஸ்மித்துக்கு மிகவும் முன்னரே, நாடுகளின் வளத்துக்கு ஏதோ ஒரே ஒரு தனியாற்றல் மூலம்கூட அதிக வளத்தை பெற முடியும் என்றும் ஒரு நாட்டின் அவசியம் மற்ற நாடுகளுக்கு மிகவும் தேவை என்பதை உணர்த்திவிட்டது: யார் தூரங்களைக்கடக்கிறார்களோ அவர்கள் அதற்கான அறுவடையைச் பெறமுடியும்.
பொருள்முதல்வாதத்தின் மற்றொரு கோரமுகத்தையும் காலியன்கள் காண்பித்தன. பழைய லண்டன் நகரை வர்ணிக்கும் ஏங்கல்ஸ் நோயாளிகளையும், துன்பங்களையும், பசியையும் பட்டினியையும் கொண்ட ஏழைகளின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிப்பிட்டு எழுதுகையில் ‘ இங்கே காணப்படும் குரூரமும் அவலமும், சமீபத்தில் உருவானவை, தொழில் புரட்சியால் உருவானது’ என்கிறார். ஏங்கல்ஸ் சொன்னது தவறு. அதற்கும் முன்பே, வர்த்தகக் கடலோடிய காலத்திலேயே இதைவிட கொடும் அவலங்கள் நிகழ்ந்தன.
உர்தாநேடாவுக்கு நான்கு மாதம் எடுத்த பயணம் மற்ற மாலுமிகளுக்கு அதைவிட அதிகக் காலம் பிடித்தது. சிலருக்கு ஐந்துமாதங்கள், சிலருக்கு எட்டுமாதங்கள். மழையைத்தவிர குடிதண்ணீரோ, கடல்வாழ் உயிரினங்களைத்தவிர புத்துணவுகளோ இல்லாத கொடும் பயணம். அதற்கு முன்பு இதைப்போன்று மனிதர்களின் இயல்பான நிலச்சூழலைத்தாண்டி இவ்வளவு அதிக காலம் விலகி இருந்ததில்லை. தொழில்புரட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே தங்கள் மலங்களிலேயே உழன்ற, பசியால் உயிரிழந்த, வியாதிகளால் இறந்த – நரகம் ஒரு சிறிய கப்பலுக்குள்ளேயே இருந்தது. சில நேரங்களில் அதைவிடக்கொடூரமான நிகழ்வுகளால் மேலும் அழிவு நேரும். 1657ல் சான்ஹோசே எனும் கப்பல் அகாபுல்கோவின் கடற்கரையில் ஒரே ஒரு மாலுமியின் உயிர்கூட எஞ்சாமல் ஒதுங்கியது.
ஒரு வணிகக்கப்பலில், சாதரணமாக உணவுப்பொருட்களென உப்பிட்ட பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள், வைன், எண்ணெய், வினிகர், பீன்ஸ் இருக்கும். மிகக்குறைந்த அளவில் (அதிக விலையாதலால்) தேன், சாக்லேட், அரிசி, பாதாம், உலர்ந்த திராட்சைகளும் ஆகியவையும் எடுத்துச்செல்வர். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மாலுமிகளுக்கு முக்கியமானது இன்றைய க்ரனோலாத்துண்டு போல கெட்டிப்பட்ட மாவால் உருவான-ஹார்ட்டாக்(hardtack) எனப்படும் கல்போன்ற ஒரு பிஸ்கட். இதை இப்படிக்கடினமான மாவால் செய்யக்காரணம் கெட்டுப்போகாமல் இருக்கவே, ஆனால் கடல் இரக்கமற்றது. கரேரி கெட்டுப்போன பிஸ்கட்டுகளை உண்ணுவதை இவ்வாறு விவரிக்கிறார், ‘ஒவ்வொரு வாய் பிஸ்கெட்டிலும் பெரிய பெரிய புழுக்களும், வண்டுகளை ஒத்த பூச்சிகளையும் மென்று வாயெல்லாம் புண்ணாகும்’ இப்புழுக்கள் மாலுமிகளின் உடலையும் புழுவைத்து உணவையும் அழித்தன. மாலுமிகளுக்கு வேறு வழியே கிடையாது. இதையே உண்ணவேண்டிய பெருங் கொடுமை.
‘தன் கண்களாலேயே தசைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதையும், தோலில் பூஞ்சை வளர்ந்ததையும் கண்டனர்’
 
 
இக்கொடுமையை மறக்கடிக்கக்கூடிய ஒரே பொழுதுபோக்கு கடலில் மீன்பிடிப்பதுதான். ஆனாலும் பழங்களும், காய்கறிகளும் இல்லாமல் வாழ்வது பெருங்கொடுமை. மணிலாவில் ஓரளவுக்கு சரக்கேற்றினாலும், இவை அனைத்தும் அலுவலர்களுக்குப் போய்விடும். அதுவும் சில வாரங்களில் தீர்ந்துவிடும். அறிவியல் வளராக் காலத்தில் ஏன் எப்படி எல்லாப்பொருட்களும் வேதிவினையால் கெட்டுப்போகின்றன என்றெல்லாம் யாரும் அறிந்திருக்கவில்லை.
bg
தரையையே காணாமல், வியாதிகளுடனும், நல்லுணவுகள் இன்றியும் மூன்றுமாதங்களுக்கு மேல் மாலுமிகளுக்கு ஈறுகள் வீங்க ஆரம்பிக்கும். உற்சாகம் குறைந்து தன் நிலையிழக்கவும் ஆரம்பிப்பார்கள். சிலர் ஈறுகளை வெட்டி எறிந்துவிடுவார்கள். கொஞ்சம் கூட வலியே இராது. தங்கள் தோல்களில் பூஞ்சைகள் வளர்வதையும், தசைகள் கரும்புண்கள் கொண்டு சிதைவதையும் கண்முன்னே காண்பார்கள். சிறிது சிறிதாக உடலினுள் உட்பாகங்கள் பாதிக்கப்பட்டு கடைசியில் மரணிப்பர்.
பதினாறாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில் ‘ஸ்கர்வி’ நோய்க்கான காரணமாக பசிபிக்கின் துர்நாற்றம் கொண்ட நீராவிதான் காரணம் என்று கருதினார்கள். கரேரியும் மற்றோரும் இந்நோய்க்கான ‘முக்கியமான தீர்வு தரையிறங்குவதுதான்’ என்று நினைத்தார்கள். சிலர் பழங்கள் உண்டால் இந்நோய் தீர்வதாகக் கருதினார்கள். சிலர் ஒரு படி மேலே போய், கழுத்தளவு மண்ணில் புதைந்து இருந்தால் இந்நோய் தீர்வதாகக் கருதினார்கள்.
வைட்டமின் ‘சி’ குறைபாடுதான் இந்நோய்க்கான காரணம் என்று அறிந்திருக்கவில்லை. வைட்டமின் ‘சி’ அதாவது ‘அஸ்கார்பிக்’ அமிலக் குறைபாடுதான் பிரச்சனை. வைட்டமின் ‘சி’ திசுக்களுக்கும், தோலுக்கும் இணைப்புப் பசையாக இயங்கும் ‘கொலாஜன்’ உருவாக முக்கிய காரணி. வைட்டமின் சி குறைவு உடலை உருக்கிவிடும். இதில் ஒரு குரூரமான உண்மை என்னவெனில் காலியன்களில் சரக்காக, மருத்துவத்துக்கும் உணவிலும் வாசனைக்கும் பயன்படுத்திய சீனத்தின் இஞ்சி கையிருப்பில் இருந்தது. இஞ்சி வைட்டமின் ‘சி’க்கான அபாரமான உணவுப்பொருள்.
ஸகர்வியினால் பாதிக்கப்படாமல் தப்பித்தாலும் கூட கப்பலின் கூட்ட நெருக்கடியிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. கடவுள் திருப்பணி செய்பவர்கள் என பாதிரிகளுக்கு இவலசப் பயணம் கிட்டும். அவர்களின் அறைகளில்கூட படுத்தால் மற்றொருவர் காலில் தலையை வைத்துத்தான் தூங்கமுடியும். ‘சான் கார்லோஸ்’ கப்பலில் (1767ஆம் ஆண்டு) 20 பேர் கொள்ளளவு கொண்ட அறைகளில் 62 பேர் தங்கி இருந்தார்கள். பின் அதே அறையில் 25 படைவீரர்களும் ஒரு பன்றிக்கூட்டமும் அடைக்கப்பட்டது. பாதிரிகளுக்கு கிடைத்த இடமே வசதி படைத்தவர்களுக்கானது. மாலுமிகளின் நிலை அதைவிடப்பரிதாபம்.
கிடைக்கும் இடம் அவர்களுக்கு.
எல்லாக்கப்பல்களிலும் இதே தான் நிலை எனினும் காலியன்களில் வேறு ஒரு பிரச்சனை வேறு இருந்தது. அக்காபுல்கோ திரும்பி வரும் கப்பல்களில் இடம் மேலும் அளவிட முடியாத மதிப்புமிக்கது. ஜாக் டர்னர் எனும் வரலாற்றாசிரியர் இதை ‘அபூர்வங்களின் விதி’ என்று குறிப்பிடுகிறார். ‘தூரதேசங்களுக்கு சென்று திருப்பும் கப்பல்கள் புதிய பொருட்களையும், ஆபூர்வமான வாசனாதி திரவியங்களையும் கொண்டு வருவார்கள். அவை எவ்வளவு அபூர்வமோ அத்துணை அதிக விலையைப் பெற்றது’. கிழக்கிலிருந்து திரும்பி வரும் சிறிய சரக்குக்கப்பல்கூட பெரும் லாபத்தை அளித்தது.
இதனால் விளைந்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. தண்ணீர் கொண்டுசெல்லும், மழைத்தண்ணீர் பிடிக்கவென இருந்த தொட்டிகளில் எல்லாம் கப்பல் அதிகாரிகளின் நண்பர்களுக்கு என சரக்குகள் அடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட இது கொலைக்கு சமானமானது. மாலுமிகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்று ஏற்கனவே ரேஷன் இருந்த நிலையில் இப்படி வேறு தண்ணீர் பஞ்சம். கிழிந்துபோனால் பயன்படுத்தவென பாதுகாத்து வைக்கவேண்டிய பாய்மரங்கள், செப்பனிடும் கருவிகள், அது ஏன், பாதுகாப்புக்கான பீரங்கிகளைக்கூட அப்புறப்படுத்திவிட்டு, கடல்கொள்ளைக்காரர்களிடம்கூட மொத்த சரக்கையும் பறிகொடுக்கக்கூடிய அபாயத்துடன் சாமான்களைக் கொண்டு சென்றனர்.
நெருக்கடியினால் பல தொற்று நோய்கள் பரவின. டைபஸ்(கப்பல் ஜூரம்), டைபாய்டு போன்ற வியாதிகளும் பரவின. இதோடு சேர்ந்து, சென்ற நாடுகளிலிருந்தும் மஞ்சள் ஜூரம், சிபிலிஸ் போன்ற தொற்று வியாதிகளை ஐரோப்பியாவுக்கும் பின்பு ஆசியாவுக்கும் பரப்பினர்.
அன்றைய ஐரோப்பியர்களின் சுகாதாரம் குறித்த அறிவீனம் வியாதிகளை மேலும் அதிகப்படுத்தியது. கப்பலில் கழிவறைகள் இருந்தாலும்(கழிவுகள் நேரடியாகக் கடலில் நேரடியாக விழும்படி கழிப்பறைகள் கட்டப்பட்டு இருந்தன), பல மாலுமிகள், கப்பலின் தளத்தின் ஓரங்களையும், அறைகளையும் கழிப்பறையாக்கினர். அதற்கும் ஒரு காரணம் உண்டு, கடும் குளிரில் மேல் தளத்துக்குச்சென்று கழிவறைகளை பயன்படுத்துவது பெரும் பிரச்சனையாக இருந்தது. மேலும் இது எல்லாக்கப்பல்களிலும் இப்படித்தான். ஃப்ரெஞ்சு மாலுமி ‘ப்ராங்வா பைரார் டி லாவல்’ இதை வர்ணிக்கும்போது, இந்தியாவில் இருந்த போர்த்துகீசியக்கப்பல்கள் ‘கொடும் வீச்சத்துடனும், துர் நாற்றத்துடனும் இருந்தன. முக்கால்வாசிப்பேர் மேல்தளத்துக்கு செல்வதே இல்லை’ என்று குறிப்பிடுகிறார்
புவியியல் பற்றிய அறிவு, கப்பலோடுதலில் இருந்த முன்னேற்றத்தைக் காணும் போது, உடற்கூறு அறிவியல் பற்றி மிக எளிய அறிவே இருந்தது. காலியன்கள் போன்ற பயண முயற்சிகளின் மூலம் உலகம் உருண்டை என்பன போன்ற பேருண்மைகளை அறிந்திருக்கிறோம். ஆனால் பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் உணவு, ஊட்டச்சத்து, தொற்றுநோய், வியாதிகள், சுகாதாரம் ஆகியவற்றில் நாம் எத்தனை பின்தங்கி இருந்து இருக்கிறோம் என்று அறியமுடிகிறது. பல கப்பல்களில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை, சவரம் செய்யும் நாவிதரே மருத்துவராகவும் கருதப்பட்டார். அவர்களிடம் இருந்த பெரிய மருத்துவ உபகரணங்கள் என்பன பல்பிடுங்கி, மற்றும் இனிமா கொடுக்கும் சிரிஞ்சு.
இதற்கு ஆழமான அறிவியக்கம் சார்ந்த பெரும் காரணம் ஒன்று இருந்தது. பதினைத்து பதினாறாம் நூற்றாண்டு வரை, மருத்துவத்துறை கிட்டத்தட்ட ஒரு பின்னோக்கிய போக்கிலேயே சென்று கொண்டிருந்தது. மேலும் மேலும் இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க மருத்துவர் கேலன் வழங்கிய ‘உடல் தோஷங்களுக்கான கோட்பாடு’ சார்ந்தே இயங்கினர். அவரின் தத்துவத்தின் படி உடலினுள் நான்கு விதமான காரணிகள் உள்ளன, அவை எல்லாம் ஒன்றோடு ஒன்று சம அளவில் இயங்கவேண்டும் என்று நினைத்தார்.
‘உலகப் பொருளாதாரத்தின் கலப்பை மாடுகளாக நுகத்தடியை இழுத்துசென்ற மாலுமிகள் உயிரைக்கொடுத்தார்கள்’
இதைத்தாண்டி அவர்களால் ஆராய்ச்சியும் செய்ய இயலாமல், மதக்கட்டுப்பாட்டுக் கட்டளை அவர்களைத் தடுத்தது. உடலைக்கிழித்து எந்த ஆராய்ச்சியையும் செய்யக்கூடாது என்ற மத சட்டம் 1482 வரை இருந்தது. இது மருத்துவத்தை வளரவிடாமல் தடுத்தது. அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என்பது வளர மேலும் பல நூற்றாண்டுகள் ஆயின. ‘சோதனை’ என்ற கோட்ப்பாட்டைச்சொன்ன ரெனே டெஸ்கார்டஸ் 1596ல் முன்வைப்பதற்கு முப்பது வருடங்களுக்கு முன்பு காலியன்கள் இந்தப்பயணங்களை மேற்கொண்டன. ‘செல்’ என்ற சொற்பயன்பாட்டை 1665ல் உருவாக்கிய ராபர்ட் பாயிலுக்கு சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இப்பயணங்கள் நடைபெற்றன. 1752ல் ஜான் பிரிங்கிள்ஸ், ‘ராணுவத்தில் நோய்களின் ஆராய்ச்சிக்குறிப்புகள்’(Observations on the Diseses of the Army) என்ற நூலில் திட்டவட்டமாக சுகாதாரத்துக்கும் தொற்றுக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் வரை இதைப் பற்றி யாரும் ஆராய்ச்சி செய்ததில்லை. ஜேம்ஸ் லிண்ட், சிட்ரஸ் பழங்கள் ஸ்கர்வியை குணமாக்கும் என்று 1747ல் முறைப்படுத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார். மருத்துவத்தில் முறையான ஆராய்ச்சி முறைகளோடு நடைபெற்ற முதல் ஆராய்ச்சியும் இதுவே.
ஆனால் இது போன்ற காரணிகள் இருந்தாலும் ஒரு மிகச்சிறிய அறியாமை இந்த பெரும் துன்பத்துக்கு காரணமாக இருந்தது. எல்லாக் கப்பல்களிலும் அநியாயத்துக்கு நெருக்கடியாகக் கூட்டம் சேர்க்கப்பட்டது. 40 மாலுமிகள் ஒரு கப்பலை செலுத்த தேவைப்படும் என்றால் 75பேர்கள் சென்றனர். கப்பல்கள் பெரிதாக ஆக 200க்கும் அதிகமான மாலுமிகள் சென்றனர். ‘சாம்ராஜ்யங்களின் முன்னோடிகள்( Vanguard of Empire 1993) ‘நூலில் ரோஜர் சி ஸ்மித் மிகச்சரியாக இதைப்பற்றி பெரும்பான்மையான மாலுமிகள் இறந்துவிடுவார்கள் என்றே மேலும் கூட்டம் சேர்க்கப்பட்டது என்று விளக்குகிறார்.
நல்ல உணவு இறப்பு எண்ணிக்கையைக் குறைத்தது. அவசரகாலத்தேவைக்கென உயர்தர உணவுகள் நோயாளிகளுக்கு என சேமிக்கப்பட்டது(கரேரி குறிப்பிடுவது போல அவ்வுணவோ அதிவேகமாக கப்பல் தலைவனின் மேசையை அடைந்தது). ஆனால், பணமுதலைகளுக்கோ உயர்தர உணவு பெரும் செலவை வைத்தது. ஒரு கப்பல் போய்ச்சேருமா சேராதா என்றே கவலைப்பட்ட அவர்களுக்கு இது பெரும் பொருட்டாகத்தெரியவில்லை. அதிலும் ஒரு முழுப் பயணத்தின் முடிவில் திரும்பி வந்தாலேயே ஊதியம் அளிக்கப்படுவதால் எத்தனை பேர் இறக்கிறார்களோ அத்தனை செலவு மிச்சம். இவ்வாறாக உலகப் பொருளாதாரத்தின் கலப்பை மாடுகளாக நுகத்தடியை இழுத்துசென்ற மாலுமிகள் உயிரைக்கொடுத்து மறைந்தார்கள்.
மணிலா காலியன்களின் மாபெரும் வெற்றியே சரிவுக்கும் காரணமாயிற்று. இதே பாதையில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் சட்டத்தைமீறி வாணிபம் செய்தன. மேலும் மேலும் அபூர்வமான திரவியங்கள் விலைகளை ஏற்றினாலும் மோலுக்காஸின் ஜாதிக்காயையும், கிராம்பையும் இந்தியப்பெருங்கடலில் பிரான்சின் பியர் பாவ்ர வெற்றிகரமாக பயிரிட்டு மோலுக்காஸின் வாசனைப்பொருட்களின் ஆதிக்கத்தை முறியடித்தார். 1815ல் கடைசி காலியன்கள் ஓடும்போது பாதிக்கப்பல்களில் சரக்கு இல்லாமல் அடிக்கடி நஷ்டத்தை அளித்தன.
இது ஒரு பெரிய சரக்குப் பொருளாதாரத்தின் நீண்ட வலைப்பின்னலில் ஒரு பகுதிதான்.1807ல் ஹட்சன் நதியில் தொடங்கிய நீராவிக்கப்பல்களின் அதிவேகப்புரட்சிக்குப் பிறகு இன்னும் வேகமடைந்தது, அபாயங்களையும் குறைத்தது. பசிபிக் கடலைக் கடக்க பலமாதங்கள் பிடிக்கக்கூடிய, பல்லாயிரம் மனித உயிர்களைக்காவு வாங்கிய நெடும்பயணம், இப்போது மெதுவாக நகரும் ஒரு மிகப்பெரிய ராட்சச டீசல் சரக்குக்கப்பலில் இரண்டே வாரங்களில் சாத்தியமாகும்.
உலகப்பொருளாதாரம் இன்று பல மனித உயிர்களை பகிர்ந்தளித்து வளப்படுத்துகிறது. மேலும் நியாயமான உலகில் வளங்களை பரந்துபட்டு பகிர்ந்து அளிக்கவும் கூடும். ஆனால் தொழில்நுட்பத்தால் பலம்பெற்ற, வலிமையான இணைப்புகளால் உறுதியான உலகப் பொருளாதாரம் ஒரு பலமான அடித்தளமின்றி இவ்வளவு தூரம் வளம்பெற்று இருக்காது. அந்த அடித்தளம் அராஜகமான, பெரும்சுரண்டல்கொண்ட, நம்பகத்தன்மையற்ற – பல நேரங்களில் அதற்கு உயிர்களை பலிகொடுத்த, கொடூரமான முறைகளில் உருவானது.

ஆங்கில மூலம்:
https://aeon.co/essays/the-manila-galleons-that-oceaneered-for-plague-and-profit

One Reply to “செழிப்பை நல்கிய குரூரக் கப்பல்கள்- மணிலா காலியன்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.