குளக்கரை


[stextbox id=”info” caption=”நின்று கொல்லும் அல் நினோ”]

solv-1

“நான் நிரபராதி” என்று கதறிக்கொண்டு இருக்கும்போதே இழுத்து, கில்லட்டினில் சொருகப்பட்டு, ”சொத்” என்று தலை வெட்டுப்பட்டான் 16ம் லூயி. சுற்றி இருந்த கோபாவேசக் கும்பல் நீதி வென்றது என்றது. அவனுக்கும் தெரியாது, அவர்களுக்கும் அப்போது புரியாதது அல் நினோ.
தென்னமெரிக்கக் கடற்கரை வெப்பமடைகையில் ஆரம்பிக்கும் அல் நினோ பருவச் சுழற்சி, ஃப்ரெஞ்சு புரட்சிக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பஞ்சங்களுக்கும் 18ம் நூற்றாண்டில் காரணமானது. அதன் கொடூர தாண்டவம் அதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பும் பல நாகரிகங்களை முடித்து வைத்தது.
காலனியாதிக்கத்துக்கு வந்த ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருந்து அறிவுச் செல்வத்தையும் பெற்றனர். இந்த புதிய பார்வைகள், மத்திய நூற்றாண்டுகளில் இருந்த மதம் சார்ந்த ஐரோப்பிய அரசியல்-சமூகங்களுக்கு சிறந்த மாற்றுகளை யோசிக்க வைத்தது. அறிவொளி காலத்தை ஐரோப்பாவில் உருவாக்கியது.
ஆனால், மாற்றுகளை அறிவதே மாற்றங்களை உடனடியாக உருவாக்கி விடாது. சமுதாயப் பரப்பில், புதிய கருத்துகள் தனக்கான ஆற்றல்களை, நீண்டு செல்லும் காலத்தில், சிறிது சிறிதாகப் பெற்றே, அதிகார பீடத்தை அடைகின்றன.
ஆனால், இயற்கை விரும்பினால் மாற்றங்களை விரைந்து பீடமேற்றி விடும். ஃப்ரெஞ்சுப் புரட்சியை விரைவாக வெற்றி பீடமேற்றியதும் இந்த இயற்கை மாற்றமே என்கிறார் ப்ரையன் ஃபாகன்.
அவருடைய நூலான Floods, Famines, and Emperors: El Niño and the Fate of Civilizationsல் அல் நினோ வானிலை மாற்றத்தால் ஃப்ரான்ஸில் உருவான பஞ்சமே, ஃப்ரெஞ்சு புரட்சியை உருவாக்கியது என்று தெரிவிக்கிறார். அல் நினோ போன்ற இயற்கை மாற்றங்களால் வீழ்ந்த, எழுந்த அரசியல், மத, நாகரிகங்களை விவரித்துப் பேசுகிறார்.
ஃப்ரெஞ்சு பஞ்சத்துக்குக் காரணம் அப்போது ஏற்பட்ட அல் நினோ. வறுமை பற்றிக் கவலைப்படாத அரசியலமைப்புதான் அதற்குக் காரணம் என்றன அறிவொளி இயக்க போதனைகள். பரவிய போதனைகளோடு, பஞ்சமும் சேர்ந்ததால், தலைகளை வெட்டித் தள்ளிய கில்லட்டின் வழியே ஃப்ரான்ஸில் புதியவகை அரசமைப்பை பீடமேற்றியது அல் நினோ.
அதே அல் நினோ இந்தியாவில் மாபெரும் பஞ்சத்தை 1877ல் உருவாக்கியது. பாரம்பரிய இந்திய சமூகம் சேகரித்து வைத்திருந்த தானியங்கள் முழுவதையும் ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். சுதேசிகளுக்குக் கொஞ்சமாவது சோறு வேண்டும் என்று வில்லியம் டிக்பை போன்ற ஆங்கிலேயர்கள் வேண்டினர். அவர்கள் வேண்டுகோள்களை மறுத்து, சுதந்திர மார்கெட் பொருளாதாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்றார் வைஸ்ராய் லைட்டன். விளைவு ?
அரசின் தவறுகளை குறைத்து மதிப்பிடும் அரசு அறிக்கையே 58, 500, 000 இந்தியர்கள் அந்த மாபெரும் பஞ்சத்தில் இறந்தனர் என்கிறது.
இந்த பஞ்ச நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மிக மிகக் குறைந்த சம்பளத்தையே தந்தது பிரிட்டிஷ் ராஜ். சற்றுக் கூட்டித் தந்தால்கூட இந்தியர்கள் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்று சொல்லி விட்டார் லார்ட் லைட்டன். அதிகம் சம்பாதித்தால் சுக போகங்களில் ஈடுபட்டு ஒழுக்கம் தவறி கெட்டுப் போய்விடுவார்கள் என்று அவர் சொன்னதுதான் செல்லுபடியானது.
இங்கனம் இந்தியர்களின் ஒழுக்கத்தைப் பாதுகாத்ததோடு, “இந்தியாவின் ஏகபோக அரசி” (Kaiser-i-Hind) என்று விக்டோரியாவுக்கு பட்டாபிஷேகமும் செய்து வைத்தார் லார்ட் லைட்டன்.
16ம் லூயியின் தலைவாங்கிய அல் நினோ, பஞ்சத்தில் குவிந்த இந்தியப் பிணங்களின் மேல் ஏறி முடிசூடிக்கொண்ட விக்டோரியாவையும் கண்டது.

http://nautil.us/blog/el-nio-has-ended-kingdoms-and-civilizations
[/stextbox]


[stextbox id=”info” caption=”சூழலைக் கொல்லாத போர்கள் சாத்தியமா?”]

“எண்ணி வெறும் 60 நாட்களில் போர் முடிந்துவிடும்” என்று சொல்லித்தான் அமெரிக்க அரசு ஈராக்கிற்கு ராணுவத்தை அனுப்பியது. அவர்கள் சொன்னதை நம்பி, அமெரிக்க ராணுவமும் தனது போர் வீரர்களின் குடியிருப்பு, உணவு, தளவாடங்கள், மற்றும் பிற தேவைகளை அமைத்துக் கொண்டது. உதாரணமாக, சமையல் அறைகள் அமைக்கவில்லை. உடனடி உணவுப் பொட்டலங்களை வீரர்களுக்கு விநியோகித்தது. இத்தகைய தற்காலிக ஏற்பாடுகளோ சுற்றுச் சூழலை பெரிதும் பாதிப்பவை. எதிர்பாராவிதமாக, போரானது நீண்ட நாட்கள் நீடித்தபோது பாதிப்பின் அளவும் பெரிதாகியது.
அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் செலவானது, மிகப் பெரிய தனியார் விமானத் துறையின் செலவழிப்புக்கு சமமானது. இங்கனம் ராணுவத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, தொழில்மயமான தனியார் நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புக்குச் சற்றும் குறைந்தது இல்லை.
ராணுவப் பயிற்சி மையங்களின் ஆக்கிரமிப்புகளும், பயிற்சிகளும் அவை இருக்கும் இடங்களின் சூழலியலை பெரிதும் பாதிக்கின்றன. அத்துடன், தட்பவெப்ப நிலைகளில் ஏற்படும் மாறுதல்கள் ராணுவத்தை பாதிக்கின்றன. இங்கனம் ராணுவ செயல்பாடுகளும், இயற்கையும் ஒன்றையொன்றை பாதித்து வருவது பற்றி யோசித்தார் ஜெஃப்ரி மார்க்விஸீ. அமெரிக்க ராணுவ வீரரான இவர் தனது நண்பரோடு இது குறித்து ஆய்வுகளை நடத்தினார்.
இந்த ஆய்வுகளை அமெரிக்க ராணுவத் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது. அவர்களது ஆய்வானது அரசியல் வட்டாரங்களில் எப்படி ஏற்கப்படும் என்பது குறித்த கேள்விகள் இருந்தன. சூழலியல் குறித்த கவலைகளை இடதுசாரிகள் மிக முக்கியமாகவும், வலதுசாரிகள் ஏளனமாகவும் கருதுவது போன்ற பிம்பமே பிரபலமானது. இத்தகைய பொதுப் பிம்பங்களின் உலகில் ஜெஃப்ரி மார்க்விஸீ தனது ஆய்வு முடிவைச் சொன்னபோது, அவருடைய கருத்துக்கு ராணுவத் தலைவர்கள் மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தனர்.
ராணுவத் தளவாடங்கள், சார்ந்த தொழிற்சாலைகள், மற்றும் உள்கட்டமைப்புகளால் பாதிக்கப்படுவது அமெரிக்காவே. எனவே, நாட்டைப் பாதிக்கும் இந்த விஷயத்தை தேசத்துக்கான ஆபத்தாகவே அமெரிக்க ராணுவம் கருதியது.
இந்தச் சூழலியல் சார்ந்த பாதிப்புகளை தேச அச்சுறுத்தலாகவே கருதிய அமெரிக்க ஆட்சியாளர்களும் வலதுசாரி, இடதுசாரி அரசியல் கோஷங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையாக நாட்டைக் காக்க விழைகின்றனர்.
இங்கனம் தேச நலனுக்காக அரசியல்வாதிகளே ஒன்றிணைந்தாலும், இந்த நல்ல முயற்சிக்கான தடைகள் வழக்கம்போல ஒரே ஒரு அமைப்பில் இருந்தே வருகிறதாம். அதுதான் ப்யூரோக்ரஸி எனும் அதிகாரபீடங்கள் !
அமெரிக்கா எனும் மாபெரும் இயந்திரத்தின் இயக்கிகளான அதிகாரபீடங்களோ குறுகிய பார்வையும், உண்மைகளை ஏற்காத பிடிவாதமும் கொண்டவையாக இருக்கின்றன என்று இப்பேட்டியில் சொல்கிறார் மார்க்விஸீ.
இந்த அதிகாரபீடங்களின் தடைகளை எந்த அரசமைப்பும் மீறிவிட முடியாது – அந்த அரசமைப்பு கத்தோலிக் சர்ச்சாகவோ, ஸ்டாலினிய அரசாகவோ இருந்தாலும் என்கிறார் அவர்.

https://www.dissentmagazine.org/article/department-climate-defense-military-climate-change
[/stextbox]


[stextbox id=”info” caption=”விலங்குகளை அழிக்கிறதா இந்திய அரசு ?”]

sol-3

ஒரு குறிப்பிட்ட விலங்கின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அந்த விலங்கின் உணவுச் சுழற்சியில் இருக்கும் மற்ற உயிரினங்களும், பயிர்களும் தேவையான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இந்தச் சமநிலை சிதறும்போது, உணவுச் சங்கிலியில் மேலே இருக்கும் விலங்குகள், உணவுச் சங்கிலியின் கீழ் இருப்பவற்றை அழிக்கின்றன. இதில் இருந்து தப்பிக்க, உணவுச் சங்கிலியின் கீழே இருக்கும் உயிரினங்கள் இடப் பெயர்ச்சியைச் செய்கின்றன.
இதுகுறித்த ஆய்வுகள், அவற்றைச் செய்யக்கூடிய அறிஞர்கள் இந்திய அரசிடம் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல், அறிவியல் பூர்வ முறைகளை கையாளாமல், விலங்குகளைக் கொன்று குவிக்க இந்திய அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்கிறது இந்தக் கட்டுரை.
குறிப்பிட்ட வனவிலங்கானது என் பயிரை பாதிக்கிறது என விவசாயிகள் சொன்னதாகச் சொல்லி, அந்த வனவிலங்கை “பயிர் அழிப்பான்” என்று மாநில அரசு பட்டியல் இட்டு விடுகிறதாம். இந்த பட்டியலுக்குள் வந்த வனவிலங்குகளைக் கொல்வது சட்டப்படி தவறு இல்லையாம்.
இப்படிப் பட்டியலிடப்பட்ட வனவிலங்குகள் இந்தியாவில் மட்டுமே காணப்படும் நீல்கை மான், காட்டுப் பன்றி, மற்றும் ரூஸஸ் குரங்கு வகைகள்.
இவற்றை இந்தப் பட்டியலுக்குள் கொண்டு வந்தது நேர்மையான முறையல்ல என்கின்றனர் பிராணிகள் நல அமைப்பினர். இந்த பிராணிகளின் எண்ணிக்கையையோ, இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்பாடும் சூழல் பாதிப்புகளையோ அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றனர்.
அறிவியல் பூர்வமற்ற முறையில், மாநில ஆட்சியாளர்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டு என்கிற பெயரில் தயாரித்த பட்டியலால் இந்த வனவிலங்குகள் அழியப் போகின்றன என்கின்றனர்.
பெரும்பாலான விலங்கின அறிஞர்களோ இப்படி வேட்டையாடுவது தவிர பயிர்களைக் காக்க வேறு வழிகளும் இருக்கின்றன என்கின்றனர். உதாரணமாக, பயிர்களை விலங்குகளிடம் இருந்து காக்க வேலி அமைக்கலாம். ஆனால், வேலி அமைத்து விலங்குகளைக் காப்பது பணம் செலவழியும் வேலை என்பதால், கொலையானது நியாயமாகி விட்டது.
அறிவியல் முறைகளில் இருந்து விலகும் அரசும் சட்டமும் அழிவை வரவேற்கின்றன.

http://www.smithsonianmag.com/smart-news/india-gives-go-ahead-farmers-cull-vermin-180959460/?no-ist
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.