‘அது’கள்

Internet_Of_Things

செல்பேசித் திரையில் அரும்பிய தகவலைப் பார்த்துச் சிரித்தாள் ஆஷா. ஓர் இனம் புரியாத சந்தோஷம். ’அது’ அனுப்பிய மின்னஞ்சல்.
“லட்சுமி, ஸ்டார்ட் ஆயிடு.” என்று ரஜினி காரிடம் பேசிப் பார்த்திருக்கிறோம். கார் நம்மிடம் திருப்பிப் பேசும் காலம் வந்து விட்டது. மிகச் சமீபத்தில் வாங்கிய அவளுடைய கார். அவ்வப்போது தன் நிலவரம் குறித்து மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ அனுப்புகிறது. டயரில் காற்று குறைந்தால் ஆஷாவுக்கும், தலை போகிற பிரச்சனையாயிருந்தால் நேரடியாக சர்வீஸ் டீலருக்கும் தகவல் அனுப்பி விடுகிறது.
அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் என்றால் இயந்திர மனிதன் என்றே சராசரி பொது ஜனம் கற்பனை செய்து வைத்திருந்தது. அப்படியே கதை எழுதினார்கள். சினிமா எடுத்தார்கள். எண்பது, தொண்ணூறுகளின் வாக்கில்தான் அது சும்மா டெஸ்க்கின் மேல் உட்கார்ந்திருக்கும் வஸ்து. கணக்குப் போடும். லெட்ஜர் பராமரிக்கும். சற்றே புத்திசாலியான தட்டச்சு சாதனம் அவ்வளவுதான் என்ற தெளிவு பிறந்தது.
அதன் பின் கணினித் தொழில்நுட்பத்துடன் இணைந்து ரொபாட்டிக்ஸ் வளர ஆரம்பிக்க – கதை எழுதுபவர்களும், சினிமா எடுப்பவர்களும் கம்ப்யூட்டரை விட்டு விட்டு ரோபோ-வுக்குத் தாவி விட்டார்கள். கோலிவுட்டின் எந்திரன் அல்லது ஹாலிவுட்டின் பிக் ஹீரோ 6 சினிமாவில் கூட ஒரு ரோபோ, மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களையும் செய்தது. அவ்வகைத் திரைப்படங்களுக்கே உரிய பாணியில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரம் பெற்று வில்லனாகி நம்மையே ஆளப் பார்த்தது.
அது இன்னமும் சுவாரஸ்யமான கதையாகவே உள்ளது. நிஜத்தில் அறிவியலின் ஆக்கிரமிப்பு சிட்டி ரோபோ போல ஸ்பஷ்டமாய் இல்லாமல் வேறு மாதிரி அரூபமாய் ஊடுருவிக் கொண்டிருக்கிறது.
இப்போது இயந்திரங்கள் நம்மிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டன. சினிமாவில் காட்டியது போல பச்சை சில்லுக்கு பதிலாக சிகப்புச் சில்லை மாட்டி ஒரே நாளில் இது நிகழவில்லை.
முதலில் ஒரு கம்ப்யூட்டர் இன்னொரு கம்ப்யூட்டருடன் இணைந்ததில் தொடங்கியது இது. ஒரு அலுவலகத்தினுள் – ஒரு வீட்டுக்குள் என்று குறுகிய வட்டமாயிருந்த இந்தத் தொடர்பு இணையம் என்ற பெரும் சங்கிலியாய் ஆனது மிகப் பெரிய முன்னேற்றம்.
அது வரை நத்தை போல ஊர்ந்து ஊர்ந்து நிகழ்ந்த மின்னணுவியல் பரிமாண வளர்ச்சி இணையம் வந்த பிறகு கியரை மாற்றிக் கொண்டு லேஸர் வேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது.
கோடிக் கணக்கான கணினிகளால் ஆன மாய வலை உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நொடியில் தகவல் பரிமாறுவதை சாத்தியமாக்கியது. அதனாலெல்லாம் என்ன ஆனது? மனிதர்கள் அரட்டை அடித்தார்கள். குழு மனப்பான்மை பெற்றார்கள். புதிதாய் வருபவர்களைக் கூட்டு சேர்ந்து கொண்டு கும்மியடித்தார்கள். இந்த மாய உலகம் பழகிப் போனதும் உப்புமாவை ஃபோட்டோ எடுத்துப் போட்டு கருத்துப் பசியுடன் அலைந்தார்கள் – என்று மட்டும் சொல்லி விட முடியாது. அலுவலக செயல்பாடுகள் வீரியம் பெற்றன. அரசு நிறுவனம் முதற்கொண்டு தனியார் நிறுவனம் வரை எல்லாப் பணிகளிலும் செயல் திறன் அதிகரித்தது.
ஆனாலும் இதெல்லாமே அடிப்படையில் கணினியுடன் மனிதரும், மனிதரிடம் கணினியும் பேசிக் கொள்ளும் சமாசாரங்களாகவே இருந்தன.
சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாகத்தான் அண்மைத் தொடர்பு வலையின் முக்கியத்துவம் அதிகரித்தன. ப்ளூடூத், என்ஃஎப்சி என்று பல ரேடியோ அலைவரிசைகள் குறுகிய எல்லைக்குள் இருக்கும் சாதனங்கள் ஒன்றோடொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாயின.
மவுசை அசைப்பதற்கும், பாடல் ஒலிப்பான்களை இணைப்பதற்குமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தத் தொழில்நுட்பங்கள் சற்றே மெருகேறி சுங்கவரிச் சாலைகளில் ஸ்மார்ட் டேக் கொண்டு வரி வசூலிப்பது போன்ற வேலைகளுக்குப் பயன்பட ஆரம்பித்தன. RFID என்ற சற்றே பலம் வாய்ந்த தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்கியது. கார்களில் ஸ்மார்ட் டேக் என்ற ரெஸ்பாண்டர் இருக்க – சுங்க வரிச்சாலைகளில் ரிசீவர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கார்கள் சாலையைக் கடக்கும்போது அடையாள எண்ணைப் படித்து இணையம் வழியே கணினிக்கு அனுப்பி விடும். கணினி கார் உரிமையாளரின் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு தலையாட்ட சுங்கக் கதவு திறக்கப்படும்.
இதே போன்ற தொழில்நுட்பம் வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் பொருட்கிடங்குகளிலும் பயன்பட ஆரம்பித்தது. ஆர் எஃப் ஐடி பொருத்தப்பட்ட பொருட்கள் இடம் விட்டு இடம் மாறும்போது – கையிருப்பைக் குறைக்கவோ கூட்டவோ செய்யவும், இருப்பு குறைந்தால் தானாகவே கணினிகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் செய்யவும் ஆரம்பித்தன.
எல்லாமே அடிப்படையில் இணைய வலைதான். ஆனால் ஒரு மிக முக்கிய வேறுபாடு இங்கே நிகழ்ந்திருப்பதை நாம் உணர வேண்டும். முன்னர் மனிதரிடம் கணினியும், கணினியிடம் மனிதரும் பேசிக் கொண்டிருந்தது மாறி இங்கே உரையாடல் ஒரு சாதனத்துக்கும், இன்னொரு சாதனத்துக்குமாக மாறி விட்டது. ஸ்மார்ட் டேக் – அந்தச் சுங்க வரி ரிசீவரிடம் வணக்கம் ஸார், இன்னார் வந்திருக்கிறேன் என்று பேசுகிறது. ரிசீவர் எங்கோ தொலைவில் இருக்கும் இணைய கணினியிடம் இவனை என்ன செய்யலாம் என்று கேட்கிறது. அந்த கணினி அய்யாவின் அக்கவுண்ட்டில் பணம் இருக்கிறது. எடுத்துக் கொண்டேன், ஆளை அனுப்பி விடு என்று பதில் அளிக்கிறது. எல்லா சம்பாஷணைகளும் அஃறிணைப் பொருட்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
டாய் ஸ்டோரி போன்ற கார்ட்டூன் படங்களில் பொம்மைகள் எல்லாம் பேசிக் கொண்டே தத்தம் வேலையைப் பார்க்குமே அதுதான் நடக்கிறது.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மவுசை அசைப்பதற்கும், பாடல் கேட்பதற்கும் அண்மை வலைத் தொடர்பை உபயோகித்தபோது அந்தத் தொடர்பு வலை மவுஸ் – வீட்டுக் கணினி, பாடல் கருவி – வீட்டுக் கணினி என குறுகிய வட்டத்துக்குள்ளேயே நின்று விட்டது. ஆனால் இந்தச் சாதனங்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை இணையம் வழியே எங்கோ தொலைவில் உள்ள கணினிக்குத் தெரிவிக்கின்றன. அடிப்படையில் இவை எல்லாமே இணையத்தில் இணைந்துள்ள சிறிதும் பெரிதுமான சாதனங்களாயுள்ளன. மனிதர்கள் குறுக்கிட வேண்டிய அவசியமில்லாமல் தங்களுக்குத் தாங்களே பேசி முடிவெடுத்து பல காரியங்களைச் செய்து முடிக்கின்றன. தேவைப்படின் மனிதர்களிடமும் பேசுகின்றன.
இதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே! இணையவெளிப் பொருட்கள் (Internet of Things) சுருக்கமாய் ஆங்கிலத்தில் IoT என்கிறார்கள்.
வீடுகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் அகலப்பாதை இணையம் மிக மலிவாக ஆகி விட்ட நிலையில் எல்லோர் கையிலும் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இணையத்தொடர்புடன் சாத்தியமாகி விட்ட பிறகு ‘இணையவெளிப் பொருட்கள்’ என்பது மந்திரச் சொல்லாக சூடு பிடித்து விட்டது.
பொருட்கள் தானே கையிருப்பை நிர்வாகம் செய்வதெல்லாம் பெரிய நிறுவனங்களுக்குத்தான் சாத்தியம் என்பது போய் உங்கள் வீட்டு வாஷிங் மெஷினும், ஃப்ரிட்ஜும், காஃபி இயந்திரமும் கூட சலவைத் திரவம் தீர்ந்தாலோ, காஃபிக் கொட்டை காலியானாலோ தானாகவே ஆர்டர் செய்யும் காலம் வந்து விட்டது. அதன் முதற்கட்டமாக இந்த அமேசான் பட்டன்கள் உருவாகியிருக்கின்றன.
இன்னும் பலப்பல ‘இணையவெளிப் பொருட்கள்’ நகருணரிகள் (Movement sensors), தட்பவெப்ப உணரிகள் (weather sensors) போன்றவை மூலமாக உருவாகத் தொடங்கியிருக்கின்றன.
சமீபத்தில் ஒரு நிறுவனம் மழை பெய்யும் முகாந்திரம் தெரிந்தால் உங்கள் ஃபோனுக்குத் தகவல் கொடுக்க, ஃபோன் உங்களைக் கூப்பிட்டு உடனே வந்து உலரப் போட்ட துணியை எடுக்கச் சொல்லும் துணி க்ளிப்புகள் தயாரித்திருக்கிறது.

உங்கள் அலாரம் கிளாக் காபி இயந்திரத்துடன் பேசி காலையில் நீங்கள் எழுந்த பின் குளித்து விட்டு வருவதற்குள் காபி போட்டு வைத்திருக்கச் சொல்லப் போகிறது.
இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு வாக்கில் இருபது பில்லியன் இணையவெளிப் பொருட்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டு – நீங்கள் தலையிடத் தேவையற்ற விஷயங்களில் தானே முடிவெடுத்தும், உங்கள் ஆலோசனை வேண்டுமென்றால் உங்களைக் கலந்தாலோசித்தும் காரியமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றன என்று கணித்திருக்கிறார்கள்.
இனி மனிதர்களுக்கும், பொருட்களுக்குமான இடைவெளி குறையும். இந்தக் கட்டுரையின் முதல் பாராவில் சொன்னது போல மனிதர்களோடு மனிதர்களாய் அவைகளும் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு, குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு, ஆப்பிள் சிரி அல்லது அலெக்ஸா போலப் பேசிக் கொண்டு உங்களுடன் இரண்டறக் கலந்து விடப் போகின்றன.
அவைகளில் நீங்கள் உயிரோட்டத்தைக் காணப் போகிறீர்கள். உங்களை அவைகள் தங்களைப் போன்ற அஃறிணைகளாகவே கருதப் போகின்றன. ஆமாம், இணையத்தில் இணைந்தால் நீங்களும் ஓர் இணையவெளிப் பொருளே.
அப்போது தாத்தாவும், ஹம்பர் சைக்கிளும் என்றோ, வெண்ணிலாவின் வெஸ்பா என்றோ அஃறிணைகளுடனான ஆசாபாசம் பற்றி இலக்கியக் கதை எழுதினால் அவ்வளவாய் எடுபடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.