வாசகர் தேவை

InnerVision-Deepreading
சிறுவயதில் ஆங்கிலப் பாடம் என்றால் நடுக்கம் எடுக்கும். வகுப்புக்குப் போக பிடிக்காது. ஆசிரியர் என்றால் பயம். ஆங்கிலக் கவிதைகளை மனனம் செய்து  காலையில் ஒப்பிக்கவேண்டும். அப்படித்தான் அமெரிக்க கவிஞர் லோங்ஃபெல்லோ எழுதிய under a spreading chestnut tree பாடலைப் பாடமாக்கினேன். ஆனால் ஆசிரியருக்கு முன்னால் அது மறந்துவிட்டது. ஒப்பிக்கமுடியவில்லை. அந்தப் பாடலை, அதை எழுதிய லோங்ஃபெல்லோவின்  கையெழுத்தில் சமீபத்தில் பார்த்தேன். பொஸ்டன்  நகரில் அவர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். அதே வீட்டில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்கடனும் அதற்கு முன்னர் வாழ்ந்திருக்கிறார். லோங்ஃபெல்லோ  பாடலில் குறிப்பிட்ட செஸ்நட் மரத்தை தறித்து  அதில் நாற்காலி செய்து பொஸ்டன் நகரத்துக் குழந்தைகள் அவருக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். அந்த  நாற்காலியும் அங்கே பார்க்கக் கிடைத்தது. லோங்ஃபெல்லோ அவருடைய கையெழுத்துக் கவிதையில் பல  இடங்களில் வார்த்தைகளை வெட்டி வேறு வார்த்தைகள் சேர்த்திருக்கிறார். வரிகளை வெட்டியிருக்கிறார். மிகவும் கடினமாக உழைத்துத்தான் அந்தக் கவிதையை நிறைவு செய்திருக்கிறார். கவிஞரின் சிந்தனை ஓட்டத்தை  கவிதையை கூர்ந்து நோக்கி ஒருவாறு புரிய முடிகிறது.   
லோங்ஃபெல்லோவின்  கவிதையை படித்தபோது கம்பர் நினைவுக்கு வந்தார். 10,000 பாடல்களுக்கு மேலேயுள்ள ராமாயணத்தை இயற்றியவர். கையிலே ஓலையை பிடித்துக்கொண்டு இரும்பு எழுத்தாணியால் எழுதியிருப்பார். எத்தனை பாடல்களை திருத்தியிருப்பார். ஓலைகளில் திருத்த முடியாது. ஆரம்பத்திலிருந்து புதிதாக எழுதவேண்டும். எத்தனை ஓலைகளை கிழித்துப் போட்டிருப்பார். அவருடைய மனித உழைப்பை யோசித்தபோது பிரமிக்க வைத்தது. ஒரு நாளைக்கு எத்தனைப் பாடல்களைப் படைத்திருப்பார்? 20, 50, 100.  எத்தனை முறை திருத்தியிருப்பார்? அவருடைய கவிதைத் திறனிலும் பார்க்க உடல் உழைப்புதான் ஆச்சரியப்பட வைக்கிறது.
ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோய் ’போரும் அமைதியும்’ நாவலை ஏழு தடவை எழுதியதாகப் படித்திருக்கிறேன். 1300 பக்க நாவல் அது. அவர் வெட்டி வெட்டித் திருத்த அவருடைய மனைவி சோஃபியா அதைத் திரும்பவும் எழுதிக் கொடுப்பாராம். அப்பொழுதெல்லாம் தொட்டெழுதும் பேனாதான். மை பட்டதும் ஊறிவிடும் பேப்பர். அப்படியும் களைக்காமல், சலிக்காமல் பலதடவை இருவரும் எழுதி முடித்திருக்கிறார்கள்.  அச்சுக்குப் போன பின்னரும் ரோல்ஸ்ரோயுக்கு திருப்தி கிடையாது. இறுதிவரை திருத்திக்கொண்டே இருந்தாராம்.
இப்பொழுது எல்லாம் கணினியிலே எளிதாக எழுதமுடிகிறது. அதிலே சொற்களை மாற்றலாம். வெட்டலாம். திருத்தலாம். வசனத்தையே  இடம் மாற்றலாம். ஒரு பாராவை தூக்கி முன்னுக்குப் போடலாம். முன்னுக்குப் போட்டதை எடுத்து நடுவிலே சேர்க்கலாம். சொற்களை தேடலாம். தேடி அவற்றை மாற்றலாம். வார்த்தைகளை எண்ணலாம். ஒரு வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று பார்த்து திருத்தலாம். பேப்பர் வீணாவதில்லை. மை வீணாவதில்லை. அத்தனை திருத்தமும் அலுங்காமல் செய்து முடித்துவிடலாம். இந்தக் கணினி, கம்பரிடமோ, ரோல்ஸ்ரோயிடமோ, லோங்ஃபெல்லோவிடமோ இருந்திருந்தால் எத்தனை வசதியாக இருந்திருக்கும். எவ்வளவு மனித உழைப்பைச் சேமித்திருக்கலாம். ரோல்ஸ்ரோய் இன்னும் நாலு ’போரும் அமைதியும்’ போன்ற நாவல்களை எழுதித் தள்ளியிருப்பார்.
என்னுடைய ஐயா ஓலைச் சுவடி படிப்பதைப் பார்த்திருக்கிறேன். எங்கள் கிராமத்து சாத்திரியார் ஓலைச்சுவடியில் சாதகம் கணிப்பதையும் கண்டிருக்கிறேன். நான் படித்தபோது பயன்படுத்தியது தொட்டெழுதும் பேனாதான். பள்ளிக்கூடத்துக்கு போகும்போது பேனாக்கட்டையையும் மைப்புட்டியையும் காவிக்கொண்டு போவேன். மேசையில் வலது பக்கம் ஓர் ஓட்டை இருக்கும் அதிலே மைப்புட்டியை வைத்துவிடுவோம். திரும்பும்போது மைப்புட்டி காலியாகிவிடும்;  உடையிலே மை நிரம்பியிருக்கும்.  ஊற்றுப்பேனா வந்தது. பின்னர் போல்பொயிண்டும் வந்து எழுதுவதை இலகுவாக்கியது.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஒருநாள் எங்கள் கிராமத்துக்கு தட்டச்சு மெசின் வந்தது. தமிழ் தட்டச்சு மெசின். அதைப் பார்ப்பதற்காக என்னை அண்ணர் அழைத்துப் போனார். மெசினில் ஒருத்தர் தட்டச்சு செய்தார். அன்று முழுக்க என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்திருக்கும். பேப்பரைத் திருகுவதும், அது மேலே உயர்ந்து சொல்லப்பட்ட இடத்தில் நிற்பதும், எழுத்துக்கள் நடனமாடியபடியே எழுந்து வந்து பதிவதும், நூதனமாக இருந்தது.  ஒரு விசையை அழுத்தியதும் கறுப்பு எழுத்துக்கள் சிவப்பாக மாறின. தட்டச்சு செய்யும்போது ஏதாவது தவறு ஏற்பட்டால் அதை கோட்டினால் வெட்டி விட்டு புதிதாக வார்த்தை அடிக்கக்கூடிய வசதியும் இருந்தது. என்னைத் தீராத ஆச்சரியத்தில் ஆழ்த்திய விசயம் என்ன வென்றால் ஓர் எழுத்தின் மீது இன்னொரு எழுத்து விழவே இல்லை. சரியாகப் பக்கத்தில் விழுந்தது. வீடு வந்தபின்னரும் அந்த அதியம் மறையாமல் மனதிலேயே தங்கியது.
பின்னர் எங்கள் கிராமத்திலிருந்து தமிழ் தட்டச்சு பழகப் போன மயிலனின் கதையும் உலாவியது. கிராமத்தவரின் கேலிக்கும், கேளிக்கைக்குமாக கடவுளால் படைக்கப் பட்டவன் மயிலன். தீக்கோழிபோல காலை எட்டிவைத்து நடப்பான். மூளையும் அதைப் போலவே. ஒரு முரட்டு முன்கோபக் குருவிடம் தட்டச்சு பழகினான். தட்டச்சு செய்துகொண்டிருந்த அவன் ஒரு நாள்  திடீரென்று கத்தினான். ’அண்ணை, புனா எங்கே? காணவில்லை?’ அதற்கு குரு சொன்ன பதில் பிரசித்தமானது. ‘அங்கே கீழேயிருக்கும். ———  —– கண்டுபிடி.’ மயிலன் ஊரைவிட்டு போன பின்னரும் கதை அங்கேயே தங்கிவிட்டது. சிறிது காலம் கழித்து எங்கள் கிராமத்தில் ஒருவரிடம் பழைய தட்டச்சு மெசின் வந்து சேர்ந்தது. அதில் ஊ எழுத்து அடிக்க முடியாது.  வசன அமைப்பை ஊ வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படியும் தவறி அது வந்துவிட்டால் மையினாலே அந்த இடத்தை  ஊ என்று எழுதி நிரப்பவேண்டும். இதுபற்றி நான் ஒரு சிறுகதைகூட அந்த நேரம் எழுதியிருக்கிறேன்.
தமிழ் தட்டச்சு மெசினின் முழுப்பயனையும் ஒரு காலத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். பதின்ம வயதிலேயே நான் கவிதைகளும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன். என் கையெழுத்து மோசமாக இருக்கும். அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் யாரிடமாவது கெஞ்சி தட்டச்சு செய்யவேண்டும். அகில இலங்கை நாடகப் போட்டி ஒருமுறை நடந்தது. அதற்கு  100 பக்கத்தில் கையினால் ஒரு நாடகம் எழுதினேன். அதை ஒரு நண்பர் தட்டச்சு செய்து தந்தார். எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்றவர்மீது எனக்குக் கோபம். அவரைச் சந்தித்ததோ பேசியதோ கிடையாது. 50 வருடம் கழித்து  கனடாவில் அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது என் கோபத்தை சொன்னேன். அவர் நாடகத்தனமாகச் சிரித்தார்.
கணினியில் தமிழ் எழுதலாம் என்று வந்தபோது அதைவிட மகிழ்ச்சி அளித்த விசயம் எனக்கு அந்தக் காலத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். அமெரிக்காவில் தமிழில் எழுதும் செயலியை ஒருவர் உருவாக்கிவிட்டார் என  அறிந்து அவர் வீடு தேடிப்போனேன். சூரிய ஒளிபுகமுடியாத நீண்ட வீடு. இருட்டு தொடங்கும் இடத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு செயலியை இலவசமாகத் தந்தார். நான் உழைப்புக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி 100 டொலர் தந்து அதை வாங்கினேன். அது என் வாழ்க்கையை மாற்றியது. கம்புயூட்டரில் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன். நானே ஆசிரியன்; நானே மாணவன். செயலியில் எல்லா வசதிகளும் இருந்தன. சொற்களைத் தேடலாம். மாற்றலாம். எண்ணலாம். நகல் செய்யலாம். வெட்டி ஒட்டலாம். மனைவி பொறாமைப்படும் அளவுக்கு அதனுடனேயே முழுநேரத்தையும் கழித்தேன். இரண்டுவருடம் அதைப் பாவித்தேன். பிரச்சினை என்னவென்றால் கட்டுரைகளை அச்சடித்து பத்திரிகைகளுக்கு தபால்மூலம்தான் அனுப்பலாம்.
பின்னர் முத்து நெடுமாறனின் செயலி வந்துவிட்டது. அதை வரவழைத்தேன். அவருடன் அப்பொழுது டெலிபோனில் பேசியதும் நினைவுக்கு வருகிறது. அவருடைய செயலியில் பல வசதிகள் இருந்தன. அதிலே எழுதி மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பலாம். ஆனால் அதை பெறுபவரிடமும்  அதே செயலி இருந்தால்தான் அவரால் படிக்கமுடியும். பல பிரச்சினைகள் தீர்ந்த அதேசமயம் புது பிரச்சினைகளும் கிளம்பின. கட்டுரைகளில் ஆ எழுத்து வராது. சிலநேரங்களில்  இ எழுத்து வராது. கிராமத்து உடைந்த தமிழ் தட்டச்சு மெசின்போல பேனாவினால் விடுபட்ட எழுத்துக்களை நிரப்பவேண்டியிருந்தது.
நான்  கனடாவுக்கு வந்துவிட்டேன். தன்னுடைய சிறுநீரகத்தை விற்று அந்தக் காசில் கனடா வந்த ஒருவரை அப்பொழுது சந்தித்தேன். என்னுடைய வயதிலும் பாதி வயது அவருக்கு. கம்புயூட்டர் படிக்கும் மாணவர். அவர் அப்பொழுது எனக்குச் செய்த உதவியை நான் என்றென்றைக்கும் மறக்க முடியாது. தமிழ் தட்டச்சு செய்யும்போது ஏற்பட்ட எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்த்துவைத்தார். அவர் உழைப்புக்கு கூலியும் வாங்க மறுத்தார். தமிழில் எழுதும்போது நிறைய வைரஸ்கள் தாக்கின. அவற்றை விலக்கினார். ஒருமுறை 100 பக்கம் எழுதிய பின்னர் ஏதோ பட்டனை அமுக்க முற்றிலும் அழிந்துபோனது. அதை மீட்டுத் தந்தார். இன்று என்னிடம் இருப்பதெல்லாம் அந்த இளைஞர் தந்ததுதான். இப்பொழுது அவர் பெயர்கூட மறந்துவிட்டது. ஒரு சிறுநீரகத்துடன் அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. காலத்தினாற் செய்த நன்றி ஞாலத்திலும் பெரிது என்பார்கள். அவரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
அதைத் தொடர்ந்து யூனிகோட் (ஒருங்குறி) வந்துவிட்டது. நான் என்னவென்ன வேண்டுமென்று கற்பனை செய்தேனோ அவை எல்லாம் கிடைத்தன. அது கொடுத்த மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை. தமிழில் மின்னஞ்சல்கள் எழுதக்கூடியதாக இருந்தது. குழந்தைப் பிள்ளைக்கு விளையாட புதுப் பொம்மை கிடைத்ததுபோல மின்னஞ்சல்கள் பலருக்கும்  தமிழில் பறந்தன. பதில்களும் தமிழில் வந்தன. இந்தச் சமயம் எழுத்தாளர் ஜெயமோகனும் கணினி எழுத்து உலகத்துக்குள் நுழைந்திருந்தார். அங்கே அவருக்கு அதிகாலை 2 மணி. எனக்கு ரொறொன்ரோவில் மாலை. மின்னஞ்சல்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதி பயிற்சி எடுத்தோம். அவர் வேகமாக டைப் செய்ய அப்பொழுதே பழகிக்கொண்டார். ஒரு மின்னஞ்சல் எழுதி விரலை எடுக்க முன்னர் பதில் வந்துவிடும்.  அவர் பல கேள்விகளை எழுப்புவார். ஒரு கேள்வி. இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. ’கடைசியாகக் கூட்டுக்கு வந்த பறவை வென்றதா? தோற்றதா?’
யூனிகோட் வந்த பின்னர் எல்லாமே மாறியது. எழுத்தாளர்கள் வேகமாக எழுதினார்கள். எழுதியதை அப்படியே மின்னஞ்சலில் அனுப்பினார்கள். பதிப்பாளர்களுக்கு பதிப்பிப்பது இலகுவானது. அச்சுக்கோர்க்கும் சிரமம் இல்லை. புத்தகங்களும் அதேவேகத்தில் பதிப்பிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. முன்னைப்போல ஆயிரக்கணக்கான நூல்களை அச்சடித்து கிட்டங்கியில் குவித்து வைக்கும் பழக்கம் போனது. எத்தனை தேவையோ அதையே அச்சிட்டார்கள். வேண்டும்போது மீண்டும் பதிப்பித்தார்கள்.
செல்பேசி வந்தது. அதைத் தொடர்ந்து யூட்யூப் வந்தது. எழுத்தாளருக்கு வேலை இன்னும் இலகுவானது. புத்தகங்களை அச்சடிக்கத் தேவையில்லாமல் கிண்டில் வந்தது. 20 வருடங்களாக நீங்கள் தேடிய ஒரு புத்தகத்தை  நிமிடத்தில் நீங்கள் இறக்கி படித்துக்கொள்ளலாம். நூலகங்களின் தேவை சுருங்கிவிட்டது. அமெரிக்காவில் சமீபத்தில் மாபெரும் நூலகம் ஒன்றுக்குப் போனேன். பத்து லட்சம் புத்தகங்களுக்கு மேல் அங்கே உள்ளன. ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்து படித்தனர். புத்தகங்களை கிண்டிலிலும் ஐபாட்டிலும் மக்கள் படிக்கிறார்கள். ஒருவர் தன் ஐபாட்டில் 1000 புத்தகங்களை காவிச்செல்ல முடியும்.
எழுதுவதைச் சுலபமாக்கிய இன்னொரு முக்கிய காரணம், தமிழ் விக்கிப்பீடியா. இதை உண்டாக்கிய பெருமை இ.மயூரநாதனைச் சேரும். இன்று 84,000 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழிகளில் தரவரிசையில் தமிழ் முதல் இடத்தில் இருக்கிறது. பல விசயங்களை உடனுக்குடனே சரிபார்த்துக் கொள்ள முடியும். சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி வந்துவிட்டன. இலவசமாக இவற்றை தந்தவர் எஸ்.ராஜாராமன் (நீச்சல்காரன்). இலக்கணப்பிழை திருத்தி, நிகண்டு (thesaurus) போன்றவையும்  விரைவில் வந்துவிடும். தமிழ் – தமிழ் அகராதியும், ஆங்கில – தமிழ் அகராதியும் உங்கள் கணினி, செல்பேசி, ஐபாட்டுகளில் ஏற்றி வைத்துக்கொள்ளலாம்.  
எதிர்காலத்தில் அச்சுப்புத்தகங்கள் அருகிவிடும். மக்களுக்கு அவற்றை வைத்துப் பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாக இருக்கும். மின்னூல்கள் அதிகமாகும். பழுதாகாது. தொலையாது. எங்கேயும் காவிச் செல்லலாம். விலையோ பத்து மடங்கு மலிவு. அவற்றை வாடகையிலும் வாங்கலாம். சொந்தமாகவும் ஆக்கலாம். எழுத்தாளர்கள் பத்து மடங்கு அதிகமாவார்கள். புத்தகங்களும் பல மடங்கு கூடும். வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கு வைக்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிடும்.  அவகாசமோ நாளுக்கு 24 மணித்தியாலம்தான். வாசகர்களுக்கு, முக்கியமான புத்தகங்களை இனங்கண்டு வாசித்து முடிப்பது சவாலாக அமையும்.
முன்பெல்லாம் ஒரு புத்தகம் எழுதி அதை வெளியிட இரண்டு வருடம் பிடிக்கும். இப்பவெல்லாம் இரண்டு மாதத்தில் ஒரு புத்தகத்தை பதிப்பித்து விற்பனைக்கு கொண்டுவர முடிகிறது. எழுத்தாளர் கணினியில் எழுதி அப்படியே மின்னஞ்சலில் பதிப்பாளருக்கு அனுப்பிவிடுவார். படங்களும் அப்படியே அனுப்பலாம். பதிப்பகம் நிமிடங்களில் பக்க அமைப்பு செய்து புரூஃப் அனுப்புகிறது. சொற்பிழை திருத்தி இருப்பதால் அதுவும் இலகுவாகிவிடுகிறது. அப்படியே அச்சுக்கு  போகிறது. கட்டமைப்புச் (binding) செய்ய சிறிது நேரம் எடுக்கும். ஆனால் அதுவே மின்புத்தகம் என்றால் சில நாட்களிலேயே உலகம் முழுவதும் கிடைக்கும். ஒரு பட்டனை அழுத்தி யாரும் எங்கேயிருந்தும் நூலை ஐபாட்டிலிலோ கிண்டிலிலோ இறக்கிக்கொள்ளலாம்.
ஜே.கே ரோலிங் எழுதிய புத்தகங்கள் 400 மில்லியன் உலகம் முழுக்க விற்றிருக்கின்றன.  எத்தனைபேர் புத்தகங்களை வாசித்தார்கள். எத்தனைபேர் பாதிவரை படித்து மூடிவைத்தார்கள் எத்தனைபேர் தொடவே இல்லை போன்ற கணக்கெடுப்புகள் இல்லை..  மின்னூல்கள் வாடகைக்கும் விடப்படும் அல்லது முழுக் காசுக்கும் விற்பனையாகும். அவற்றில் எத்தனை நூல்கள் படிக்கப்பட்டன என்ற விவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க ஒரு புது வழியை உண்டாக்கலாம். முன்பெல்லாம் காட்டு விலங்குகள் கணக்கெடுப்புக்கு ஒவ்வொரு விலங்காக எண்ணினார்கள் அல்லது தானியங்கி காமிராக்களைப் பொருத்தி படம் எடுத்து கணக்கு வைத்தார்கள். இப்பொழுதெல்லாம் அட்டைகளை பொறுக்கி அவற்றின் ரத்தத்தை  பரிசோதித்து  சரியாக எத்தனை, என்ன வகை விலங்குகள் என்று கணக்கு கூறிவிடுகிறார்கள். அப்படி புதுமாதிரியான ஒரு கண்டுபிடிப்பு வரலாம்.
புத்தக வெளியீடுகள் உலகளாவியவிதமாக மாறிவிடும்.  ஸ்கைப் மூலமாகவோ (conference call ) பல்வழி அழைப்பு மூலமாகவோ (live telecast ) நேரலை ஒலிபரப்பு  மூலமாகவோ நடத்தலாம். நாடு நாடாகப் போய் வெளியீடு செய்யத் தேவை இல்லை. கனடாவின் எழுத்தாளர் மார்கிரட் அட்வுட் செய்வது போல எழுத்தாளர் அவரிடத்தில் இருந்தபடியே வாசகரின் புத்தகத்தில் கையெழுத்து இடலாம். வாசகர்கள்  கேள்விகளுக்கு பதிலும் சொல்லலாம். மின்புத்தகம் என்றால் இன்னும் சுலபமாகிவிடும்.
1712ல் முதல் தமிழ் புத்தகம் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டது. இதைச் செய்தவர் டென்மார்க் அரசர் அனுப்பிவைத்த ஜேர்மன்காரர். அவர் பெயர் சீகென்பால்க். முதல் தமிழ் அச்சுப் புத்தகத்தை அந்தக் கால மக்கள் வரிசையில் நின்று தொட்டுப் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள். அதிலிருந்த தமிழ் எழுத்துக்களுக்கும் இன்று புழங்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இன்று உள்ள எழுத்துக்கள் 100 வருடம் பின்னர் எப்படியிருக்கும்? சேக்ஸ்பியருக்கு z எழுத்துப் பிடிக்காது. அதை அவரே லியர் மன்னன் நாடகத்தில் சொல்கிறார். திருவள்ளுவருக்கு ஒள எழுத்து பிடிக்காது. திருக்குறளில் ஒள எழுத்தை காணமுடியாது. இன்னும் 100 வருடத்தில் தமிழ் எழுத்து முற்றிலும் மாறக்கூடும். வாசகர்கள் எழுத்து மாற்றத்தால் சிரமப்படாமல்  எதிர்காலத்தில் கணினி காப்பாற்றும்.
எண்ணித் தீராத  வசதிகள் இப்போது வந்துவிட்டன. எழுத்தாளர்கள் அதிகமாகிவிட்டனர். புத்தகங்கள் பெருகிவிட்டன. அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படிக்க முடியும். எழுத்தாளர் எழுதும்போது உசாத்துணை நூல்களை தன் முன்னே பரப்பி வைக்கத்தேவையில்;ல. அவை எல்லாமே அவருடைய கணினியிலேயோ, ஐபாட்டிலேயோ ஓர் அழுத்தத்தில் கிடைக்கும். சேக்ஸ்பியர் 32,000 வார்த்தைகளை உபயோகித்து அழியாத இலக்கியம் படைத்தார். திருவள்ளுவருக்கு, உலக வாழ்வியல் நூலான திருக்குறளை படைக்க 14,000 வார்த்தைகள் தேவைப்பட்டன. இன்று ஆங்கிலத்தில் 10 லட்சம் வார்த்தைகளுக்கு மேல் உள்ளன. தமிழ் சொல்வங்கியில் 75 லட்சம் வார்த்தைகள் இருக்கின்றன என்கிறார்கள். இத்தனை லட்சம் வார்த்தைகளை வைத்துக்கொண்டு இத்தனை லட்சம் எழுத்தாளர்கள் அழியா காவியம் படைக்க முடியுமா? இதற்கு கணினி மாத்திரம் போதாது, மனித மூளையும் தேவை.
நிமிடங்களிலும் பார்க்க வேகமாக தொழில்நுட்பம் வளருகிறது. சிந்தனையை சொல்லாக்கி, சொல்லை எழுத்தாக்கி, எழுத்தை அச்சாக்கி, அச்சை புத்தகமாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது. மூளையில் பெருகும் கற்பனையை நேராக புத்தகம் ஆக்கும் காலம் நெருங்கி வரலாம். பருத்தி புடவையாக காய்த்தாலும் காய்க்கலாம். எதுவும் நடக்கும். இன்னும் பத்து வருடங்களில் இப்படி ஒன்றைக் கற்பனை செய்ய முடியும். எழுத்தாளர் தான் எழுத வேண்டியதை எழுதவே தேவை இல்லை. செல்பேசியை எடுத்துப் பதிவு செய்வார். அது அவர் பேச்சை எழுத்தாக மாற்றி அச்சடித்துக் கொடுக்கும். ஒரு பட்டனை அமுக்கி சந்திப் பிழை, எழுத்துப் பிழைகளை சரிசெய்வார். இன்னொரு பட்டனை அழுத்தி இலக்கணப் பிழைகளையும், தரவுகளையும் சரிபார்த்துவிட்டு  மின்பத்திரிகைக்கு அனுப்புவார்.
அடுத்த வாரம் மின் பத்திரிகை 10 கட்டுரைகள், 20 கவிதைகள், 8 சிறுகதைகள், 2 நேர்காணல்கள் இன்னும் பல செய்திகளுடன் வெளியாகும். அதில் இவருடைய கட்டுரையும் இருக்கும். மின்பத்திரிகை உடனுக்குடன்  20,000 பேருக்கு மின்வழியாக அனுப்பப்படும். 18,000 பேர் அதை நிராகரிப்பார்கள். மீதியிருக்கும் 2000 பேரில் 1800 பேர் ஒருவார வாடகைக்கு பணம் கொடுத்து பத்திரிகையை இறக்குவார்கள். அவர்கள் ஒருவருமே படிக்காததால் அது ஒருவாரம் கழித்து திரும்பப் போய்விடும். 200 பேர் காசு கொடுத்து சொந்தமாக வாங்குவார்கள்.  அதில் 100 பேர் படிக்க மறந்துவிடுவார்கள். எஞ்சிய 100 பேரில்  80 பேர்  ஒன்றிரண்டு கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசிப்பார்கள்.  மீதி 20 பேரில் 18 பேர்  முழுப் பத்திரிகையையும் வாசிக்க ஆரம்பித்து பாதியில் நிறுத்திவிடுவார்கள். இரண்டு பேர் முதலில் இருந்து கடைசிவரை வாசித்து முடிப்பார்கள். அதில் ஒருவர் வாசித்ததை உடனே மறந்துவிடுவார்.
 
 

4 Replies to “வாசகர் தேவை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.