தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் பீகாரின் கரிச்சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு வண்டியில் இரண்டு மாதங்களாகப் பழுது. என்ன செய்வது என்று தெரியும். ஒரு நுணுக்கமான அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும். இரண்டு நிமிட வேலை. ஆனால், அந்தப் பாகத்தைத் தொட புதிதாகப் பிறந்த எனக்கெல்லாம் அனுமதி கிடையாது. தலைமைக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் ஒரு வல்லுநரை அனுப்ப முடிவெடுத்து, அவருக்கு நேரம் கிடைத்து, கிளம்பி வரும் வழியில்…
அவர் வந்த ரயில் விபத்துக்குள்ளானது.
சோகம்தான், வருத்தம்தான்… இருந்தாலும் பலகோடியைப் போட்டு வாங்கிய வண்டி இன்னும் பல கோடிகளை விழுங்கிக்கொண்டு படுத்திருக்கிறது. இன்னொரு வல்லுநர் இந்தியாவிலேயே (அன்று) இல்லை. வெளிநாட்டு ஆசாமி வருவதற்குள் இந்த இரண்டு நிமிட வேலை செய்த விரயத்தை நியாயப்படுத்தவே முடியாது.
தொழில்நுட்பம் முன்னேற முன்னேற இதுபோன்ற செலவுகள் குறையத்தான் செய்தன. வேகமான தகவல் பரிமாற்றத்தினாலேயே சில வாரங்கள் குறைந்தன. அதிக வல்லுநர்களை பயிற்சிப் பட்டறைகள் மூலம் உருவாக்குகிறார்கள். இருந்தாலுமே கூட வல்லுநர்கள் வண்டிக்கு அருகே செல்லவேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது.
இதை எப்படி மாற்றுவது?
ஒரு புது ஆசாமி வண்டிக்கு அருகே நிற்கிறான், வல்லுநர் சிகாகோவிலோ சின்னாளப்பட்டியிலோ தன் கணினி முன் இருக்கிறார். புது ஆசாமி கண்ணாடி மாட்டிக்கொள்கிறான். அந்தப் பிம்பம் வல்லுநருக்குத் தெரிகிறது, வல்லுநர் கழட்டவேண்டிய நட்டைத் தன் விரலால் தொட்டுக் காட்டுகிறார். வல்லுநர் விரலைப் புது ஆசாமி கண்ணாடி காட்டுகிறது. புது ஆசாமி அட்ஜஸ்ட்மெண்ட்டைச் செய்கிறான். வல்லுநர் வழிகாட்டுகிறார். இரண்டு நிமிட வேலை இரண்டு நிமிடத்திலேயே முடிகிறது.
இப்படி ஒரு கற்பனைக் காட்சியைச் சமீபத்தில் ஒரு மாநாட்டில் பார்த்தபோது, “எப்படி இருந்த நாம” என்பதெல்லாம் நினைவலைகளில் புரள, உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.
இன்னும் நடக்கவில்லை என்றாலும் இது நிஜமாக அதிகக் காலம் இல்லை. Augmented Reality என்ற மெய்நீட்சித் துறையில் பலகோடி பணம் கொட்டப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மெய்நிகர் என்று சொல்லப்படும் Virtual Reality இல்லை இது. இல்லாத ஒன்றை இருப்பதாக உணர வைக்கும் தோற்ற மயக்கம் Virtual Reality. கண்ணாடி ஹெட்போனை மாட்டிக்கொண்டால் நகரத்து வணிகவளாகத்தில் காட்டைக் காட்டுவார்கள். எதிரே யாரும் இல்லாதபோதும் புலி வருகிறது என்று பயந்து ஓடவைக்கும் கண்ணுக்குள் தெரியும் 3டி காட்சி.
Augmented Reality என்னும் மெய்நீட்சி, நிஜக்காட்சியை மறைப்பதில்லை. அதை அப்படியே வைத்துக்கொண்டு, அதன் மேல் அடுக்குகளாக இன்னும் தகவல்கள், இன்னொரு இடத்திலிருந்து வரும் காட்சி, அனிமேஷன்கள் சிமுலேஷன்களை வைத்து, நிஜக்காட்சியை மேம்படுத்துவது. இப்போதும் இது ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது.
இப்போதே கூட, கிரிக்கெட் ஒளிபரப்புகளில் இதை நிறைய இடங்களில் பார்க்கலாம். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து செல்லும் பாதையைக் கோடுபோட்டுக்காட்டுகிறார்கள், பந்து எட்ஜ் வாங்கியதா என்று கருப்பு வெள்ளையில் கச்சிதமாகக் காட்டிவிடுகிறார்கள், மைதானத்தின் புல்தரையில் செதுக்கியது போல ஸ்கோரைக் காட்டுகிறார்கள்.
X Box Kinect போன்ற விளையாட்டுகள் — நம் அசைவை விளையாட்டின் பொம்மைப்படங்கள் மேல் ஏற்றி நாமே விளையாடுவது போல் தோன்றவைப்பது – இந்த மெய்நீட்சியின் ஒரு திரிபே.
இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகள் அளவே இல்லாதவை. அமெரிக்கா மருத்துவர் ஒரு சர்ஜன் உதவியோடு ஆண்டிப்பட்டியில் ஆபரேஷன் செய்யலாம். வழிதவறிய விருந்தாளிக்கு கண்ணாடியை மாட்டச்சொல்லி “இங்க ரைட் திருப்புங்க” என்று சொல்லலாம், ஏன்?! கண்ணாடியை மாட்டிக்கொண்டு சரியான தேங்காயைத் தேர்ந்தெடுத்து மனைவியிடம் திட்டு வாங்காமல் தப்பிக்கலாம்.
இருந்தாலும் இதன் முழு வீச்சையும் நாம் உடனடியாக உணரமுடியுமா என்றால், கொஞ்சம் நாள் பிடிக்கும். சிலபல ஆயத்தங்களைச் செய்யவேண்டி இருக்கிறது.
எங்கள் தொழில்நுட்பத்துக்கே வந்தால், இயந்திரத்தின் உள் பாகங்களைச் சரியாகக் காட்ட முப்பரிமாண வரைபடங்கள் வேண்டும், ஆயிரம் ஆயிரம் படங்கள் வரையப்பட வேண்டும்.அந்த முப்பரிமாணமும் செல்லக்கூடிய டாட்டா பேக்கேஜ்கள் 5G இல்தான் வரும் என்கிறார்கள். இந்தப்படத்தை இயந்திரத்தின் எந்தப்பகுதியின் மேல் அடுக்காக வைக்கவேண்டும் என்ற Anchoring புள்ளிகள் வரையறுக்கப்பட வேண்டும். இருவழியிலும் துல்லியமான நிஜ, முப்பரிமாணக்காட்சிகள் வேண்டும்.
எல்லாவற்றையும் மீறி, இவற்றின் துல்லியம் சந்தேகத்துக்கு இடமின்றிப் பரிசோதிக்கப்படவேண்டும். ஒரு இயந்திர பாகத்தில் தவறு நடந்தால் அடுத்து ஓட்டப்போகும் ஓட்டுநரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
ஒரு புது மருந்தை அறிமுகப்படுத்துவது போலத்தான், வெள்ளெலியைச் சோதனைப்படுத்தி, முயல் மனிதன் என்று படிப்படியாக முன்னேறி, FDI Approval போலவே வாங்கவேண்டும்.
இதனால் மகிழ்ச்சியடையும் முதல் ஆட்கள் என் ஜாதி மக்கள்தான். ஏனென்றால் இந்தச் சோதனைச் சுண்டெலிகளாக முதலில் வரப்போவது Industrial Training வகை வாத்தியார்கள்தான். பிரச்சினைகள் இல்லாத இடங்களில் முதலில் இவற்றைப் பரிசோதிப்போம், பிறகு Distance Learningக்கு உபயோகப்படுத்துவோம், ஆபத்து எதுவும் இல்லை என்பது உறுதியானவுடன் எல்லார் பயன்பாட்டுக்கும் வரும்.
இவையெல்லாம் எவ்வளவு வேகத்தில் நடக்கும் என்று சரியாக ஊகிப்பது சாத்தியமே இல்லை. மூன்று வருடம் என்போம், எவனாவது ஒருவன் மூன்று நாளில் செய்து காட்டுவான்.
ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். “அந்தக்காலத்துல நாங்க எல்லாம் எவ்ளோ கஷ்டப்படுவோம் தெரியுமா?” என்று கூடிய சீக்கிரமே நாமெல்லாம் சொல்லப்போகிறோம். அந்த “அந்தக்காலத்துல” என்பது 3 நாட்கள் முந்தியதாகவும் இருக்கலாம், மூன்று வருடங்களாகவும்.
மொபைல் போன்கள் மாற்றிப்போட்டது போலவே Wearables-ம் கூடிய சீக்கிரத்தில் நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடத்தான் போகின்றன.
HYPER-REALITY from Keiichi Matsuda on Vimeo.
கடைசி வீடியோ, வருங்காலத்தை காண்பித்தாலும் இப்போதே பயமாக இருக்கிறது.