லேப்டாப் வாங்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தார் நண்பர். 12 ஆண்டுகளாக கட்டிக்காத்த மேஜைக்கணிணியில் ஏதோ தகராறு. வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதாலும் இப்படியொரு முடிவுக்கு வந்திருந்தார். உண்மைதான். பத்துக்கு எட்டடி அறையின் பாதியை கபளீகரம் செய்தபடி ஒரு பெரிய மேஜை. அதன் ஒரு மூலையில் 14 இன்ச் திரை. இருபுறமும் பெரிய ஸ்பீக்கர். மேஜைக்கு கீழே சிபியூ. பக்கத்திலேயே ஒரு யூபிஎஸ். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவரது வீட்டுக்கு சென்றபோது பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மேஜையோடு சேர்த்து மேஜைக்கணிணியையும் கடாசிவிட்டு லேப்டாப் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவுதான்.
ரிச்சி ஸ்ட்ரீட்டிடன் சகல இடுக்குகளிலும் நுழைந்து, கிடைத்த அனைத்து பிட் நோட்டீஸ்களையும் அலசி, ஆராய்ந்து ஒருவழியாக தன்னுடைய லேப்டாப்பை தேர்வு செய்திருந்தார். இன்டெல் பென்டியம் 1.5 பிராசசர், 8 ஜிபி ராம், 1 TB ஹார்ட் டிஸ்க், 2 MP HD வெப்காம், ஹெச்டி கிராபிக்ஸ் கார்ட் என ஏகப்பட்ட அம்சங்களை காட்டி 52 ஆயிரம் ரூபாய்க்கு பில் கிழித்திருந்தார்கள். ‘பேஸ்புக், ஜிமெயில், யுடியூப் பார்க்குற நமக்கெல்லாம் எதுக்குங்க இது?’ என்னும் கேள்விக்கு சரியான பதிலை நண்பரால் சொல்ல முடியவில்லை.
தனிநபர்கள் மட்டுமல்ல பெரிய நிறுவனங்களும் இதே தவறைத்தான் செய்கின்றன. நம்முடைய தேவை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இருப்பதில்லை. வாங்கி குவிக்கும் வரை யோசிப்பதில்லை. இன்னும் ஒரு சிலர் வாங்கிய பின்பு கூட யோசிப்பதில்லை! காலம் மாறிக்கொண்டிருக்கிறது. 300 ஜிபி கொள்ளளவு கொண்ட வன்தட்டில் 30 இயங்குதளத்தை நிறுவி, அதை 3000க்கும் அதிகமானோர் எவ்வித இடையூறும் இன்றி, பயன்பாட்டுக்கு கொண்டுவருவது இன்று சர்வ சாதாரணமாகியிருக்கிறது. ஒரே ஒரு மொபைல் டேட்டா தொடர்பை பயன்படுத்தி ஒட்டுமொத்த குடும்பமே இணையத்தில் உலா வரமுடிகிறது.
மெய்நிகராக்கம் (Virtualization), சிக்கனத்தை வலியுறுத்துகிறது. சேமிப்பின் சின்ன தம்பி. சிக்கனம் என்றால் பணம் மட்டுமல்ல. இடம், பொருள், ஆசாமிகள் என அனைத்திலும் சிக்கனம். சரி, அப்படி என்னதான் செய்யமுடியும்? ஒரு கணிணியையோ அல்லது எந்தவொரு கணிணி தொடர்பான இயங்குபொருளை ஒரே நேரத்தில் பல கணிணியாகவோ அல்லது பல இயங்கு தளத்தோடு இயக்க வைப்பதுதான் மெய்நிகராக்கம் என்னும் தொழில்நுட்பம்.
மெய்நிகராக்கம் என்பது புதிதல்ல. அறுபதுகளில் ஆரம்பித்து இன்றுவரை தொடரும் ஒரு சிக்கன நடவடிக்கைதான். மெயின்பிரேம் கணிணிகளை இயக்குவதும், நிர்வகிப்பதும் அன்றிலிருந்து இன்றுவரை பெரிய சவாலான காரியம். ஏராளமான மனித ஆற்றலும், பணமும் சம்பந்தப்பட்ட விஷயம். மெய்நிகராக்கலின் முதல் புள்ளி, மெயின்பிரேம் கணிணிகளின் எண்ணிக்கையை அதன் பிரம்மாண்டமான வடிவத்தை குறைப்பதில்தான் ஆரம்பமானது.
மாறிவரும் உலகில் எந்த நேரத்திலும் பிஸினெஸ் முடிவுகள் எடுக்கப்படலாம். தாமதமான முடிவுகளால், தலைகுப்புற வீழ்ந்த நிறுவனங்கள் நிறைய உண்டு. விரைவான முடிவுகள் மட்டுமல்லாமல் சரியான முடிவுகளுக்கும் துணை நிற்கவேண்டுமானால் எந்தவித சவாலுக்கும் தயாராக இருந்தாகவேண்டும். சிறு மற்றும் மத்தியதர நிறுவனங்கள் மற்ற பெரிய நிறுவனங்களோடு போட்டியிடும்போது குறைந்த செலவில் நிறைவான தரத்தை தந்தாகவேண்டும். ஆக்கபபூர்வமான முயற்சிகள் உண்டு, ஆற்றல் படைத்த திறமைசாலிகளான ஊழியர்ளும் உண்டு. ஆனால், வலுவான உள்கட்டமைப்பு உண்டா?
கஷ்டமான கேள்வி. பெரிய நிறுவனங்களிடம் கூட உடனடி பதில் இல்லை. தங்களுடைய உள்கட்டமைப்பின் பலம் மற்றும் பலவீனம் தெரியாமல் பணிகளை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை காணமுடியாமல் திணறும் நிறுவனங்களே நம்மிடைய அதிகம். தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும்போது, உள்கட்டமைப்பை சரிவர நிர்வகிப்பது, தேவையில்லாத தலைவலி. ஒரு பன்னாட்டு வங்கியோ அல்லது தொலைதொடர்பு நிறுவனமோ தங்களுடைய தொழில்நுட்ப உள்கட்டமைப்பை சரிசெய்வதற்காகவோ அல்லது தொடர்ந்து பராமரிப்பதற்காகவே பணத்தையும், நேரத்தையும் செலவழித்துக்கொண்டிருந்தால், சந்தையிலிருந்து காணாமல் போகவேண்டியதுதான். சரி, வேறு வழி? ஒரே வழிதான் உண்டு. மெய்நிகராக்கம் (Virtualization)
மெய்நிகராக்கம் என்பது ஒரு மென்பொருளின் துணைகொண்டு ஒரு இயங்குதளத்தை அமைத்து, நிர்வகிப்பது. தொழில்நுட்ப சேவைக்காக செலவழிக்கப்படும் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே இருக்கும் கணிணிகளின் திறனை மேம்படுத்தி, இன்னும் பல சேவைகளுக்கு விரிவுபடுத்தவும், உள்கட்டமைப்பை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுவது மெய்நிகராக்கம்தான்.
மெய்நிகராக்கம் இல்லாத துறையே தற்போது இல்லை என்று சொல்லலாம். மென்பொருளை எடுத்துக்கொண்டால் இயங்குதளம் (Operating System) தொடங்கி, செயலி (Applications), சேவை (Services) என அனைத்திலும் மெய்நிகராக்கல் வெற்றிகரமாக சாத்தியப்பட்டிருக்கிறது. வன்பொருளில் மெய்நிகராக்கம் (Software Virtualization) என்பது இன்னொரு உச்சம். நினைவகங்களும்(Memory) , வன்தட்டுகளும் (Hard disk) பயன்படுத்தப்படாத இடங்களை, ஆக்கப்பூர்வனதாக ஆக்கியிருக்கின்றன. மெய்நிகர் வலையமைப்புகளால் (Network Virtualization), இணையம் இன்னும் பரவலாகியிருக்கிறது. தகவல் மெய்நிகராக்கல் (Data Management Virtualization) இன்னொரு பெரிய கடலாக மாறியிருக்கிறது.
500 மில்லியன் டாலரை கொட்டி ஹார்ட்வேர், சாப்ட்வேர் வாங்கி, ஒரு சர்வரை நிறுவி, மற்றதையெல்லாம் கிளையண்ட் சர்வராக்கி, அதில் பல்வேறுபட்ட செயலிகளை நிறுவி, அதற்கான பயன்பாட்டு உரிமையை தொலை தூர நாடுகளில் பணிபுரியும் அடிமைகளுக்குக் கொடுத்து, அவர்களை நிர்வகித்து, குறித்த நேரத்திற்குள் பணியை செய்ய வைத்து, அதன் மூலம் லாபம் ஈட்டி, சந்தையில் தொடர்ந்து தன்னை தக்கவைத்துக்கொள்வது என்பது பன்னாட்டு நிறுவனங்களின் பழைய சமர்த்தியம். காலம் மாறிவிட்டது. இன்றைய நிறுவனங்கள் எதையும் வாங்குவதில்லை.
அமேசானிடம் ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள். பத்து சிஸ்டம், 500 ஜிபி, என்னென்ன அப்ளிகேஷன். மொத்தமாக ஒரு பட்டியலை அமேசானிடம் கொடுத்துவிட்டால், மெய்நிகராக்கப்பட்ட உள்கட்டமைப்பு ரெடி. எத்தனை நாளைக்கு, என்னவிதமான சேவைகள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் அமேசானும், கூகிளும் கைகட்டி நின்று, பணத்தை கறந்துவிட்டு நாம் கேட்டதைக் கொடுத்துவிடும்.
அட, இதுதானே மேகக்கணிமை( cloud computing)? மெய்நிகராக்கத்திற்கும் (Virtualization) மேக கணிமைக்கும் (Cloud Computing) வித்தியாசம் உண்டா? குழப்புவதற்காக வெவ்வேறு வார்த்தைகளை கையாளுகிறார்களோ? இந்த சந்தேகம் ஏகப்பட்ட பேருக்கு உண்டு. உண்மையில் இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் சொல்கின்றன. ஆனால், இரண்டுக்கும் நடுவே மெல்லிய வித்தியாசமும் இருக்கத்தான் செய்கின்றன. .
மெய்நிகராக்கம் என்பது மென்பொருள் துணைகொண்டு வன்பொருட்களை வசப்படுத்துவது. மேகக்கணிமை என்பது அத்தகைய செயல்பாட்டின் மூலமாக கிடைக்கும் தீர்வையை இன்னும் நிறைய பேருக்கும் சாத்தியப்படுத்தி, பணமாக்குவது. மெய்நிகராக்கம் என்பது ஒரு புதிய நுட்பம், அதை சேவையாக தருவது மேகக்கணிமை.
மெய்நிகராக்கம் ஈன்றெடுத்த மேக்கணிமை, நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி உள்ளகட்டமைப்பை நிர்வகிக்கும் வசதியை அளிக்கிறது. ஏற்கனவே உள்ள வன்பொருள்களை விடுத்து, மேக்கணிமைக்கு மாறுவது என்பது நிறுவனங்களுக்கு லாபமளிக்காது. நிரந்தர தீர்வாகவும் அமையாது. ஆகவே, மெய்நிகராக்கல் பற்றி தீவிரமாக பேசவேண்டியிருக்கிறது. இதனால் விளையும் பயன்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஆக்கத்திறனை அதிகரிப்பது – மெய்நிகராக்கல், வன்பொருளின் பயன்பாடுகளை குறைப்பதோடு நம்மிடம் ஏற்கனவே உள்ள மென்பொருள்களின் அதிகபட்ச பயன்பாட்டுக்கு உத்திரவாதம் அளிக்கிறது
பல்முனை மையங்கள் – ஒரே ஒரு வன்பொருளின் மீது ஏராளமான இயங்குதளங்கள் அல்லது செயலிகளை நிறுவி, பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிகிறது. இதனால் ஊழியர்களை நிர்வகிப்பதுடன், செயலிகளின் செயல்பாட்டையும் கண்காணிப்பது எளிதாகிறது.
சிக்கன நடவடிக்கைகள் – உள்கட்டமைப்பு செலவுகளை கட்டுப்படுத்துவதுடன், தொழில்நுட்ப சேவை சார்ந்த தளத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் முடிகிறது.
சந்தேகமேயில்லை. மெய்நிகராக்கலின் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் பயன் அளப்பரியது. கண்ணை மூடிக்கொண்டு மெய்நிகராக்கலுக்கு அனைத்து நிறுவனங்களுமே ஜே சொல்லிவிடலாம். ஆனால், இதை எப்படி செய்துமுடிப்பது? அதில்தான் ஏகப்பட்ட சிக்கல்கள்.
நேரம், பணம். இரண்டும்தான் முக்கியமான காரணிகள். நம்முடைய வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு மெய்நிகராக்கலில் இறங்கிவிடலாம். ஆனால் நமக்கு நேரமே இல்லாதபோது என்ன செய்வது? நேரம் இருந்தாலும் செய்து முடிக்க திறமைசாலிகள் வேண்டும். எல்லாவற்றையும் விட எதிர்பார்த்த பலன் கிடைத்தாகவேண்டும். ரிஸ்க் எடுக்க தயங்கும் நிறுவனங்கள், மேக்கணிமை சேவை நிறுவனங்களை நாடும். எதையும் நீண்டகால நோக்கில் பார்க்கும் தன்மையுள்ள நிறுவனங்கள், மெய்நிகராக்கலில் இறங்கிவிடும்.
மெய்நிகராக்கம், பணி நேரத்தை குறைக்கிறது. மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு (Centralized Control) இருக்கும் பட்சத்தில், அலுவலக செயலியை மேசைக்கணிணி மட்டுமல்லாமல் மொபைல் மூலமாகவும் இயக்கமுடியும். மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு செயலியை மட்டுமல்லாது தகவல்களையும் பாதுகாக்கிறது. கட்டமைப்பை நிர்வகிக்க திறமையான ஊழியர்கள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் மேகக்கணிமை சேவை தரும் நிறுவனங்களை அணுகவேண்டியதுதான். கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எது வேண்டும் என்பதை நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப முடிவு செய்தாகவேண்டும்.
ஃபேஸ்புக், டிவிட்டர், ஜிமெயில் என இணையத்தில் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தும் அத்தனை செயலிகளும் மெய்நிகராக்கத்தால் சாத்தியப்பட்டவை. இணையம் முழுக்க பல்வேறு விதங்களில் மெய்நிகராக்கல் பயன்பாட்டில் இருந்துவருகிறது. 200 பில்லியன் டாலர் புழங்கும் மெய்நிகராக்கல், ஏராளமான மாற்றங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது. கணிணியோ அல்லது மொபைல் செயலியோ எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இணையத்தின் மூலம் எத்தகைய தகவல்களை பெறுவது சாத்தியம். ஒரு சில நொடிக்குள், ஏகப்பட்ட எம்பி டேட்டா உங்கள் கைவசமாகிறது. அதுதான் பிரச்னை, பாதுகாப்பு பிரச்னை.
மேக்கணிமை சேவை தரும் அமேசான், கூகிளில் போன்ற நிறுவனங்களில் தீராத தலைவலி, வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதுதான். தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பது, தினந்தோறும் எதிர்கொள்ளும் சவால். முற்றிலும் பாதுகாப்பான சேவை ஒன்று இதுவரை சாத்தியப்படவேயில்லை.
டேட்டா சென்டர், பல நிறுவனங்களின் இதயம் போன்ற இடம். இதை பத்திரமாக பாதுகாத்து, நிர்வகிப்பதில்தான் பெரும்பாலான நிறுவனங்களின் பணம் விரயமாகிறது. இவற்றை முற்றிலுமாக மேக்கணிமைக்கு மாற்றுவது என்பது மிகப்பெரிய சவால், கடுமையான விளைவுகள் ஏற்படலாம். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், தகவல்கள் அழிந்துபோனால் பொறுப்பிலிருந்து நாம் தப்பித்துவிடமுடியாது.
மேக்கண்ணிமை சேவையாளர்கள் நமது தகவல்களை பாதுகாப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்மைப்போல் பத்திரமாக பாதுகாப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. அவர்களது சேவைக்கு நாம் தரும் கட்டணத்தை விட, நம்முடைய பிரத்யேக தகவல்கள் நிறைய பணத்தை தரும் பட்சத்தில் எதுவும் நடக்கலாம்.
இணையத்தின் வழியாக தகவல்களை திருடுவது சர்வசாதாரணமாகிவிட்டது. அதை தடுப்பதற்கு ஒரு பக்கம் முனைந்தாலும் அதைவிட அதிகமான சாமர்த்தியத்தோடு திருடுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் பாதுகாப்பு அரண்கள் உடைந்து, வீழ்வதற்கு உள்ளிருப்பவர்களே காரணமாகிவிடுகிறார்கள். விளைவு, ஒரு சில விநாடிகளில் ஒட்டுமொத்த தகவல் களஞ்சியமே அழிந்துபோகிறது. மேகக்கணிமைகளில் தகவல் திருடுவது 45 சதவீதம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அலெர்ட் லாஜிக் கிளவுட் சப்போர்ட் 2014ல் மேற்கொண்ட ஆய்வில் உலகம் முழுவதும் ஏறக்குறைய 800,000 பாதுகாப்பு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனால் மூவாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. கோட் ஸ்பெஸ் என்னும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தகவல் களஞ்சியமும் சூறையாடப்பட்டது. நிறுவனத்தால் இன்றுவரை மீளமுடியவில்லை. மேகத்தில் (Cloud) சேமிக்கப்படும் தகவல்களை பாதுகாக்க வேண்டியது சேவையாளர்களின் கடமை என்று என்று நிறுவனங்கள் தவறாக நினைத்துவிடுகின்றன. உண்மையில், அத்தகைய கடமையும் பொறுப்பும் இரு தரப்பிற்கும் இருக்கவேண்டியது முக்கியம். .
பாதுகாப்புச் சட்டங்களை பலப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இணையத்தில் பரப்பப்படும் தகவல்களை பரிசோதித்து, அதன் சாதக பாதகங்களை கண்டறியும் முயற்சிகளுக்காக நாடுகள் ஏராளமான நிதியை ஒதுக்கி, செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றன. இணையம் வழியான தாக்குதல்களை மட்டுமே நம்மால் சமாளிக்க முடியாது என்கிற நிலைதான் காரணம்.
இன்னொரு பக்கம், மெய்நிகராக்கலும், மேகக்கணிமையும் இன்னும் சரிவர முறைப்படுத்தப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, இழந்தவற்றை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் மேகக்கணிமையை விடுத்து, மெய்நிகராக்கலின் மற்ற சாத்தியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதின் மூலமாக அசம்பாவிதத்தை தடுக்க முடியும்.
- மேகக்கணிமை கூட்டு பாதுகாப்பு குழு (Consensus Assessment Initiative Questionnaire (CAIQ)) அளித்திருக்கும் பரிந்துரைகளை பின்பற்றலாம். உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களால் (Cloud Security Alliance (CSA)) பரிந்துரைக்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு இது.
- பாதுகாப்பு நடைமுறைகளை இன்னும் கடுமையாக்குவது மட்டுமல்லாமல் இது சம்பந்தமான நடைமுறைகளை Security, Trust, and Assurance Registry (STAR) வசம் ஆய்வுக்கு அனுப்பலாம்
- ஒப்பந்தத்தில் தகவல் பாதுகாப்பு குறித்த அம்சங்களை தனியாக பட்டியலிட்டு சம்பந்தட்ட மேக்கணிமை நிறுவனங்களின் ஒப்புதலை பெறலாம்
- ஆய்வுகளை செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெருக்கடி தரலாம். CSA வசம் ஆய்வுக்கான நடைமுறைகள், அவற்றை எளிதாக முறைப்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ள. அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவருமாறு கட்டயப்படுத்தலாம்.
- ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், மாற்று ஏற்பாடுகளை எப்போதும் தயராக வைத்திருப்பது.
- இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம், எந்தவிதமான தகவல் திருட்டுகள் நடைபெறக்கூடும், அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்னரே அறிந்து வைத்திருப்பது. எதை, எங்கே வைத்திருக்க வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.
மேக்கணிமை, மெய்நிகராக்கலால் விளைந்த ஒரு அற்புதம். ஆரம்பத்தில் மேக்கணிமை நிறுவனங்கள் இதை கைக்கொண்டாலும் காலப்போக்கில் நிறுவனங்கள் சுயசார்பு அடைந்து மெய்நிகராக்கலுக்கு திரும்புவது நிச்சயம் சாத்தியப்படும். ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட முறைதானா, சேவையை தரும் நிறுவனத்தின் பின்னணி திருப்தி அளிக்கிறதா என்பதெல்லாம் கருத்தில் கொள்ளப்படவேண்டியவை. பின்னாளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு ஏதுவான உள்கட்டமைப்பை தரும் நிறுவனங்களும், புதிய தொழில்நுட்பங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி, கட்டமைப்பை மேம்படுத்தும் சேவை நிறுவனங்களால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்.
பயன்பாட்டுக்கு ஏற்றபடி கட்டணம் வசூலிப்பதுதான் மேகக்கணிமை சேவை தருபவர்களின் நியதி. எனவே, மேக்கணிமை தொடர்ந்து காஸ்ட்லியான விஷயமாகவே இருக்கப்போகிறது. கட்டணங்கள் விண்ணைத்தொடும்போது நிறுவனங்கள், சுயசார்பை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும். நிரந்தர தீர்வு என்பது எந்தளவுக்கு மெய்நிகர் கட்டமைப்பை மேம்படுத்துவது என்பதில்தான் முடியும்.
உள்கட்டமைப்புச் சேவையில் நம்முடைய கணிணி சார்ந்த வளங்களை கட்டுப்படுத்துவதில் முழுச் சுதந்தரம் உண்டு. நமக்குத் தேவையான மென்பொருட்கள், செயலிகளை எப்போது வேண்டுமானாலும், எங்கேயும் நிறுவிக்கொள்ளலாம். அதைத்தொடர்ந்து கண்காணிப்பிலும் வைத்துக்கொள்ளலாம். நல்ல திறமைசாலிகளை ஊழியர்களாக கொண்டிருக்கும் நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு மெய்நிகராக்கலை இன்னும் விரிவுபடுத்தலாம்
தொழில்நுட்ப தீர்க்கதரிசனமாக, கடந்த 40 ஆண்டுகளாக எலெக்ட்ரானிக்ஸ் உலகில் தொடர்ந்து ஆராதிக்கப்படும் மூர் விதி, மெய்நிகராக்கத்திற்கும் பொருந்துவதாக சொல்லப்படுகிறது. கணிணி சிப்புகளில் பொருத்தக்கூடிய டிரான்சிஸ்டட்டர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் இரு மடங்காகி கொண்டே இருக்கும் எனும் மூர் விதியின் கணிப்பு. ஆற்றல் இருமடங்காகும் அதே நேரத்தில் அதற்கான செலவும் குறைந்து கொண்டே போகும் என்பது மூரின் கணிப்பு அல்லது கருத்து. இதுவரை கணிப்பு உண்மையாகியிருக்கிறது. ஒரு காலத்தில் பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்த மெகா சைஸ் கணிணி, இன்று கையடக்க கணிணியாக மாறியிருக்கிறது.
மூர் விதியின் படி இனி வரும் காலங்களில் மெய்நிகராக்கம் அளிக்கும் ஆற்றல் தொடர்ந்து பன்மடங்ககாக வளர்ந்து கொண்டே இருக்கும். இன்னொரு புறம் அதைக் கட்டமைப்பதற்கான செலவும் குறைந்து கொண்டே போகும்.
மெய்நிகராக்கலும், மேக்கணிமையும் முழுமையான தீர்வையாக எந்நாளும் அமையப்போவதில்லை. இவை இரண்டும் கூரான வெவ்வேறு வாள்கள். நம்முடைய தேவைகள் மாறிக்கொண்டேதான் இருக்கப்போகின்றன. அந்தந்த நேரத்து தேவைகளுக்கு ஏற்ப எந்த வாளை தேர்ந்தேடுப்பது என்பதில்தான் நிறுவனங்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
ராம்கி
மெய்நிகராக்கம் பற்றிய நல்ல அறிமுகக் கட்டுரை.
“குழப்புவதற்காக வெவ்வேறு வார்த்தைகளை கையாளுகிறார்களோ? இந்த சந்தேகம் ஏகப்பட்ட பேருக்கு உண்டு. உண்மையில் இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் சொல்கின்றன. ஆனால், இரண்டுக்கும் நடுவே மெல்லிய வித்தியாசமும் இருக்கத்தான் செய்கின்றன. .
மெய்நிகராக்கம் என்பது மென்பொருள் துணைகொண்டு வன்பொருட்களை வசப்படுத்துவது. மேகக்கணிமை என்பது அத்தகைய செயல்பாட்டின் மூலமாக கிடைக்கும் தீர்வையை இன்னும் நிறைய பேருக்கும் சாத்தியப்படுத்தி, பணமாக்குவது. மெய்நிகராக்கம் என்பது ஒரு புதிய நுட்பம், அதை சேவையாக தருவது மேகக்கணிமை.”
மிக அழகாக மெய்நிகராக்கம் மற்றும் மேகக்கணிமை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தமிழில் ரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளீர்கள். இந்த மெய்நிகராக்கம் வளர வளர, மென்பொருள் பொட்டல வியாபாரம் (packaged software business) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது – மேலும் பாதிக்கப்படும். இந்த வியாபாரம், லைசன்ஸ் விற்கும் வியாபாரம் – seats based licensing revenue. எவ்வளவு லைசன்ஸ் தேவை என்பது பயனுக்கேற்றார் போல மாறும். சில மாதங்களில் அதிகமாகவும், சில மாதங்களில் குறைவாகவும் பயன் ஏற்படலாம். பெரிய நிறுவனங்கள், இந்த 50 ஆண்டு பழைய லைசன்ஸ் முறையை மாற்றுங்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
வெறும் நுகர்வோர் மட்டுமல்ல, மென்பொருள் துறையே கையை பிசைக்க வைக்கும் தொழில்நுட்பம் மெய்நிகராக்கம்.