[stextbox id=”info” caption=”கம்முனு கிட”]
சென்னையிலோ, வேறெந்த இந்தியப் பெரு நகரத்திலோ பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பரிச்சயமான காட்சி ஒன்று இது. அனேகம் பேர் ஏதோ ஒரு தொலைபேசியின் கண்ணாடித் திரையில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அல்லது அதிலிருந்து வரும் ஒலிபெருக்கிக் கேபிள்களின் நுனிகளைக் காதில் பொருத்திக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் ஏதோ ஒரு விளையாட்டை அந்த ஃபோனில் விளையாடுவார்கள். ஆனாலும், எப்படியோ இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி, வீட்டுக்கோ, பள்ளிக்கோ, அலுவலகத்துக்கோ, மருத்துவ மனைக்கோ போய்ச் சேர்ந்து விடுகிற அளவுக்கு கவனம் எங்கோ மூலையில் ஒழுங்காகவே வேலை செய்கிறது என்றும் நாம் பார்ப்போம்.
இவர்களெல்லாம் ஒரு பத்துப் பதினைந்தாண்டுகளுக்கு முன் என்ன செய்திருந்திருப்பார்கள் என்று யோசித்தால் அது புரியத்தான் இல்லை. அப்போதும் யாரும் புத்த்கங்கள் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டிருந்திருப்பார்களா என்றால் பெருநகர மக்கள் பக்கத்தில் அமர்வாரிடம் அப்படி எல்லாம் சகஜமாகப் பேசுவதில்லை.
இப்படி ஒரு பெரும் திரளைத் தம்மில் ஆழ்த்துமளவு இந்தச் சாதனங்கள் என்ன அப்படி ஒரு கவர்ச்சி கொண்டவை என்று யோசித்தால் அதுவும் புரிபட மாட்டேனென்கிறது. தொலைக்காட்சிகளை ஓரளவு சக்தி குறைந்த சாதனங்களாக இவை ஆக்கி இருக்கின்றன என்று வேண்டுமானால் நாம் மகிழலாம். இத்தனைக்கும் இந்தியாவில் இந்த சாதுரியமான தொலைபேசிகளைக் கையில் வைத்திருப்பவர் எண்ணிக்கை இன்னும் 100க்கு 30 சதவீதம் கூட இராது என்று தோன்றுகிறது. ஒப்பீட்டில் தென் கொரியாவில் 50 மிலியன் மக்களில் 80 சதவீதத்தினரிடம் இத்தகைய தொலைபேசிகள் இருக்கின்றனவாம். இவற்றில் மூழ்கி இருக்கும் இந்த மக்களுக்குச் சமீபத்தில் பலவகை மன அழுத்த நோய்கள் ஏற்படத் துவங்கி இருப்பதால் இவற்றிலிருந்து விடுபட்டு இருப்பது சாலச் சிறந்த தேர்வு என்று சிலர் கருதத் துவங்கி இருக்கின்றனராம்.
அப்படி யோசிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டி சமீபத்தில் நடந்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது. தலை நகரான சோல் நகரில், சுமார் 60 பேர் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைப் பயின்றனராம். 90 நிமிடங்கள் தொலைபேசிகள், கணினிகள், ஏன் கைக்கடிகாரத்தைக் கூட பார்க்காமல் சும்மா இருக்க வேண்டும் என்பது போட்டி. ஒரு பூங்காவில் நல்ல வெப்பம் நிலவிய போதும் இந்த 60 பேர் அப்படி அமர்ந்திருந்தனராம். சோல் நகர கௌன்ஸில் நடத்திய இந்தப் போட்டியில் கலந்து கொள்ள 1500 பேர் விண்ணப்பித்திருந்தார், அவர்களில் 60 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியிட்டனர்.
இவர்களின் இதயத் துடிப்பு மட்டும் கண்காணிக்கப்பட்டது. அதில் மிக நிலையாக இருந்த இதயத் துடிப்பு கொண்டவரே வென்றவராக அறிவிக்கப்பட்டார். அவர் ஒரு ‘ராப்’ இசைக் கலைஞர். (இதில் ஏதும் அங்கதம் இருக்கிறதா என்று சோதித்தால்தான் தெரியும். அதை யார் செய்வது?)
அமைதியாக இருப்பதைக் கூட ஒரு போட்டியாகவா வைக்கவேண்டும்? பின் அங்கு எப்படி அமைதி கிட்டும் என்று ஒரு வாசகர் கேட்கிறார்.
நம் ஊரிலோ சும்மா இருப்பதே சுகம் என்று எப்போதோ சொல்லி விட்டிருக்கிறார்கள். சடமாக இருப்பதை இருப்பதிலேயே உன்னத நிலை என்று கூட நம் பண்பாடு சொல்கிறது. சிவம் என்பதே சடத்துவம் என்று கூடச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பயின்ற நம்மை இன்று இந்தச் சாதனங்கள் நோய்க் கூறு கொண்ட மக்களாக மாற்றுகின்றனவா? இது பற்றி நம் வாசகர்கள் கருத்து என்ன?
http://www.theguardian.com/world/2016/may/22/screen-addicted-south-koreans-compete-in-space-out-contest
[/stextbox]
[stextbox id=”info” caption=”கழற்றி விடுறாங்க”]
தொழில் புரட்சி என்ற ஒன்று இங்கிலாந்தில் எழும்போது எந்திரமயமான உற்பத்தி முறைகளால் ஏராளமான மரபுவழி பொருள் தயாரிப்பாளர்களுக்குப் பிழைப்புக்கு வழி இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. அவர்களில் ஒரு சாரார் தம்மை ஒரு கூட்டணியாக அமைத்துக் கொண்டு, யாரும் இல்லாத நேரத்தில் தொழிற்சாலைகளுக்குப் போய் எந்திரங்களை அடித்து உடைப்பதை ஓர் இயக்கமாகவே நடத்திப் பார்த்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. லட்டைட்டுகள் என்று இவர்கள் இன்றும் அறியப்படுகிறார்கள். பேரலையாக எழுந்து வரும் தொழில் உத்தி, அறிவியல் மாறுதல்கள், நுட்ப மேம்படுத்தல்கள் ஆகியவற்றை எதிர்க்கும் கூட்டம் ஒன்று எக்காலத்தும், எல்லா நாடுகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
அகல் விளக்கில் படித்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, மின் விளக்கில் படித்தால் எரிச்சல் என்று என் சிறு பிராயத்தில் பாட்டிகள்/ தாத்தாக்கள் சொல்வார்கள். சமீபத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் ஒரு வாரம் மின்சாரம் இல்லாமல் தத்தளித்த போது திரி போட்ட அகல் விளக்குகளை வைத்துக் கொண்டு படித்த போது கண்ணுக்கு இதமாக இருப்பதாகவே உணர்வு எழுந்தது. பிற்பாடு சூழலில் எங்கும் இருள் இருந்ததே கண்ணுக்கு இதமாக இருந்திருக்கலாம் என்று ஒரு காரணம் இருக்கலாம் என்றும் தோன்றியது.
மாறுதல்கள் நசிவுக்கு இட்டுச் செல்பவை என்று கண்டனம் தெரிவிக்கும் இந்தக் கரடி அல்லது பூதம் அடிக்கடி மேலெழுந்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில மின்சார பல்ப் வந்தால் கண்ணெல்லாம் கெட்டுப் போயிடும்னு அதை எதிர்த்ததை நாம் கண்டிருக்கிறோம். இன்று ஜனத்தொகையில் முக்கால் வாசிப்பேர் கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியாமல் போனவர்களாக இருப்பது கூட மின் விளக்கால்தான் நடந்ததாக நாம் கருதவியலாது. வேறு காரணங்களாலும் கண்பார்வை மக்களுக்குக் கெட்டிருக்கலாம் என்று ஒரு விளக்கம் கொடுக்க முடியும். தவிர இன்று கண்பார்வை கெட்டது என்று கண்டறிவதை மிகச் சிறு பிள்ளைப் பிராயத்திலேயே நாம் அறிகிறோம். அதற்கு மாற்று முன்னைப் போல இல்லாமல் உடனடியாகக் கிட்டுவதாலும் அனேகர் கண்ணாடி அணிகிறார்கள் என்று சொல்லலாம்.
எந்திரங்கள் வந்த பிறகு மக்களின் தோள் வலிமை, தசை வலிமை எல்லாம் க்ஷீணித்துப் போய் விட்டது என்று புலம்புவாரைப் பார்த்திருக்கிறேன். அதற்கும் மாற்று விளக்கங்கள் இருக்கும்.
இங்கு கொடுக்கப்படும் கட்டுரையில் கேட்கப்படும் கேள்வி இது போன்றதே-
புத்திசாலி எந்திரங்களின் எழுச்சியால் மனிதர்கள் நசிவுக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் என்ற பீதி கிளப்பப் படுகிறது. இந்த செயற்கை அறிவாளிகளின் (புத்திசாலி எந்திரங்களின்) வளர்ச்சியும் பிற்காலத்தில் சகஜமான ஒன்றாகக் கருதப்படுமா? இன்றைய பீதி தேவை அற்றதா? இந்தக் கேள்விக்கு நம் வாசகர்கள் என்ன விடை வைத்திருக்கிறார்கள்?
அட போய்யா ஜிகா வைரஸெல்லாம் வாழ்க்கையை அழிக்கப் போகுது, இதைப் போய் பெரிஸ்ஸ எடுத்துகிட்டு பேசறியேன்னு சைட் ட்ராக் செய்யாமல் இதை நம்மால் விவாதிக்க முடியுமா? 🙂
https://lareviewofbooks.org/article/removing-humans-from-the-ai-loop-should-we-panic
[/stextbox]
[stextbox id=”info” caption=”ப்ளகைப் பிடுங்கு”]
இன்னொரு சுட்டி இருக்கிறது, ஆனால் அது ஸைண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு மட்டுமே திறக்கும் பக்கம். இது உங்களுக்குத் திறக்கும் என்றால் இந்தப் பக்கத்தையும் பார்க்கலாம்.
இதில் கட்டுரையாளர் ஸ்டூவர் ரஸ்ஸல், சில பத்தாண்டுகள் முன்பு கணிதவியலாளரும், ஸைபர்னெடிக்ஸ் என்ற துறையை உருவாக்கியவர் எனப் பிரசித்தி பெற்ற சிந்தனையாளருமான நார்பர்ட் (உ)வீய்னர் சொன்ன ஒரு கருத்தை முன் வைக்கிறார். அது – ‘நம் இலக்குகளை அடைய நாம் திட்டவட்டமாகக் கட்டுப்படுத்தவியலாதபடி இயக்கம் கொண்ட எந்திர ஆளுமைகளைப் பயன்படுத்துவோமேயானால், ….அந்த எந்திரங்களுக்குள் கொடுக்கப்படும் இலக்குகள் நாம் நிச்சயமாக அடைய விரும்புகிற இலக்குகள்தான் என்று உறுதி செய்து கொள்ள வேண்டுவது மிக அவசியம்.’
ஸ்டூவர்ட் சாதாரண எந்திரங்களுக்கும் தான் என்பதை அறிந்த எந்திரங்களுக்கும் இடையே உள்ள ஒரு தெளிவான வேறுபாட்டிலிருந்து கட்டுரையை முன்னெடுத்துப் போகிறார். சாதாரண எந்திரங்களுக்குக் கொடுக்கப்படும் செயல் திட்டம் ஒன்றுதான் குறிக்கோள். ஆனால் தன்னை அறிந்த எந்திரங்களுக்கு, மனிதரைப் போலவே இன்னொரு குறிக்கோளும் உள்ளே இருக்கும். அது தன்னை அழிப்பிலிருந்து காத்துத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு நோக்கம். தற்பாதுகாப்பு. சீக்கிரமே உலகம் மனிதருக்கும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிக முனைப்புள்ள அதீத புத்திசாலித்தனம் கொண்ட எந்திரங்களுக்கும் இடையே நடக்கும் ஒரு சதுரங்கப் போட்டிக் களமாக மாறிவிடும் என்று பேசுகிறார் ரஸ்ஸல்.
நீங்கள் எந்தப் பக்கம்? எந்திரங்களாவது மனிதரை வெல்லுவதாவது, பயமே வேண்டாம் என்கிற கட்சியா, இல்லை ஐயோ பேராபத்து வருகிறதைச் சற்றும் அறியாமல் இப்படி மெத்தனமாக எந்திரங்களுக்கு சிந்திக்கும் ஆற்றலையும் தன்னிச்சையான செயல்பாட்டுரிமையையும் கொடுக்க முற்படுகிறோமே, இது தகுமா என்று கூவுகிற கட்சியா?
http://www.scientificamerican.com/article/should-we-fear-supersmart-robots/
[/stextbox]