படிவமும் மனமும்

Brain_Butterfly_Thinking_Monkey_Schema

“அமைதியான இடத்துல கூட மனசு அமைதியா இருக்க மாட்டேங்குதே?” பிஸ்வாஸ் சொன்னதை மவுனமாக ஆமோதித்தேன். பேச விருப்பமில்லை. மழை பெய்து ஓய்ந்திருந்த, புழுக்கமான மாலை நேரம். சுவர்க்கோழிகளின் சப்தம்கூட பெரிதாகக் கேட்ட பேரமைதிச் சூழல். பாதுகாப்பு மிகுந்த , மரங்கள் அடர்ந்த சுத்தமான குவாட்டர்ஸ் பகுதி ஒன்றில் மாலை நடையாக இருவரும் சென்றுகொண்டிருந்தோம்.
பதில் வராததால் பிஸ்வாஸ் திரும்பிப் பார்த்தார். “ஓ. ஸாரி, எதேனும் சிந்தனையிலிருந்தீர்களோ?”
“அதில்லை“ என்றேன். “இந்த அமைதியை உடைக்கும் விதமாய் சத்தமிட்டுக் கொண்டிருக்கிற குரங்குகளும், வண்டுகளும் அமைதியை உணர்வதை அதிகரிக்கவே செய்கின்றன இல்லையா? “
“அமைதிக்கு, ஒலி  தேவை. ஒலி கேட்டவன் அதன்மூலமே அமைதியை உணர்கிறான். ஓசை கேட்டவன் அமைதியை நாடுகிறான்.” பிஸ்வாஸ் இருமினார். பில்ட்டர் இல்லாத சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து, நான் முகம் சுளிப்பது கண்டு அதனை அணைத்து ஸாரி என்றார்.
“நாடுதலும் ஒரு உணர்வுதான் என்றாலும், வேண்டியது  கிடைக்காதிருக்கும் போதான உணர்வு வேட்கை மட்டுமே. வேண்டியது கிட்டும்போது வேட்கை மறைந்து. அனுபவிக்கும் உணர்வு மட்டுமே ஓங்குகிறது. வேட்கை மறைந்து போனது நினைவுக்கு வரும்போது மீண்டும் நாம் திகைக்கிறோம். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”
“நீங்கள் வேட்கை, ஆசை, அனுபவம், உணர்தல் என்பதாக வேறு வேறு படிவங்கள் மூலம் தூண்டுதலின் தொடர்பைப் பார்க்கிறீர்கள். எல்லாம் மொத்தமாக ஒரு படிவ கூட்டம் என்று அடைத்துவிட முடியும். பகுத்துச் செல்வதில் ப்ரமிப்புதான் மிஞ்சும்.” என்றார் பிஸ்வாஸ். அவருக்கு அதிசயம், ப்ரமிப்பு என்பதெல்லாம் கிடையாது. எல்லாவற்றையும் ஒரு முன்முடிவுடன் சந்திப்பார். பெரும்பாலும் அது எதிர்மறைச் சிந்தனையாக இருக்கும்.
இப்படி பல வகை படிவங்களைக் கொண்டு  உணர்வதை, அறிவதை ஸ்கீமா Schema வழியான உணர்தல் என்பார்கள். உங்கள் மனதில் எந்த படிவம் அல்லது அவற்றின் கூட்டு வேலை செய்கிறதோ, அதனைப் பொறுத்து உங்களது அனுமானம், அறிதல் அமையும். அதற்கேற்ற எதிர்விளைவும் இந்த படிவங்களைக் கொண்டே அமையும். படிவம் உணர்வதின் முழுப்பொருளை முன்பே உணர்ந்ததால் வந்த ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நான் என்றோ, எங்கோ மூளையில் சேமித்த தொடர்புகளுள்ள, தொடர்பற்ற உணர்வுகளாலான ஒரு கலவையாக இருக்கலாம்.
ஒரு ஓவியத்தை நீங்களும் உங்கள் நண்பரும் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அதில் ஒரு யானை மறைந்து நிற்பதைப் போலத் தோன்றுகிறது. நண்பரோ “அது தென்னை மரத்து நிழல் சார்” என்கிறார். காட்சி ஒன்றுதான். காணப்படும் விதம் உங்களது மனதில் இருந்த படிவமும், அவரது படிவமும் கொண்டு மாறுகிறது.. படிவம், உள்வாங்கும் உணர்வுகளுக்கு மட்டுமல்ல.எதிர்வினைகளுக்கும் உரித்தது.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueசில மாதங்களுக்கு முன் அந்தேரி ரயில்வே ஸ்டேஷனில், நெரிசலான மாலை நேரத்தில் ஒரு பெண் , திடீரென திரும்பி அருகே நடந்துகொண்டிருந்த ஒருவனை பளீரென கன்னத்தில் அறைந்தாள். “ராஸ்கல், அசிங்கமா இடுப்பைத் தொடுவே இனிமே?”
அவன் நிலை குலைந்து போனான். சுதாரித்துக் கொண்டு கோபத்தில் அவளைத் தள்ளினான் “ இடியட், நானே ஒரு இறப்பில் அதிர்ந்து போயிருக்கிறேன். இதுல உன் சொறி பிடிச்ச இடுப்பைத்தான் கிள்ளணும்னு தோணுமா எனக்கு? ஐஸ்வர்யா ராய்னு நினைப்போ?”  அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
அத்தொடுதல், நெரிசலின் காரணம் நடந்த நிகழ்வு. பொதுவாக அவள் விலகி நடந்திருப்பாள். அவனும் சாரி என்றிருப்பான். இருவருக்குமான படிவ சிந்தனைகள் உணர்வை உள்வாங்கியது மட்டும் வேறல்ல, வெளிப்பட்ட விதமும் வேறு. அவள் கை நீட்டியிருக்க வேண்டியதில்லை. கத்தியிருக்க வேண்டியதில்லை. அவனும், அவளது இடுப்பைக் குறித்தோ, அழகைக் குறித்தோ சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நிகழ்வை கோபமாக மாற்றி, பழிவாங்க வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்தது எது? கைகளை இயக்கியது எது? இப்படிக் கோர்வையாக சொற்களை அமிலமாக வீச வைத்தது எது?
படிவம். படிவங்களை ஆளும் மற்றொரு படிவம், அதனை ஆளும் உணர்வுப் பகுதி. இது ஒரு சுழற்றி. தன் வாலைக் கவ்விய பாம்பு.
நிகழ்வு ஆபத்தாக உணரப்படுகிறது. நிகழ்வின் உணர்வுகள் ப்ரக்ஞையிலுள் செல்லுமுன் படிவங்கள் வேலை செய்கின்றன.  பல படிவங்கள் அங்கு வந்திருக்கலாம்.ஒன்று பயம் கொண்டு அவனை விலகி ஓட வைத்திருக்கலாம். மற்றொன்று சாரி என்று நாகரிகமாகச் சொல்லி மேலே செல்ல வைத்திருக்கலாம். சூழலை உள்வாங்கி, அங்கு தனக்கு ஆபத்து இல்லை என்று மைக்ரோ செகண்டுகளுக்குள் உள்வாங்கி, எதிர் தாக்குதலை கையாலும் வாயாலும் வர வைத்த படிவம் ஆணாதிக்க சிந்தனை மூலம் வந்ததாக இருக்கக்கூடும். அவமானத்தைத் தாங்க முடியாது, அதே நேரம் பழிவாங்க தருக்க ரீதியாகப் பேசவும் வைத்த சிந்தனை படிவம் அது.
படிவம் – ஸ்கீமா என்பதை முன் அனுபவமென, முன் உணர்வு, முன் கற்றதின் கூட்டமைவு என்றே தத்துவஞானி இம்மானுவல் காண்ட் கருதினார். இதனை ஜோன் ப்யாஜே, ஜெஸ்டால்ட் பரீட்சார்த்தவாத உளவியலாளர்கள் மேலும் விரிவாக்கினர்.
படிவத்தை டானியல் கோல்மன் தனது Vital Lies and Simple Truth என்ற புத்தகத்தில் விரிவாகக் கையாளுகிறார். எல்லாப் படிவமும் சம தளத்தில் மட்டும்  இயங்குவதில்லை. ஒரு படிவத்தை ஆளும் மேலடுக்குத் தளத்தில் இருக்கும் படிவமும் தானாக இயங்கும் அல்லது இயக்கப்படும். ”கோபப்படு” என்று ஒரு படிவம் ஒரு எதிர்வினையை தன்வழியே வழுகி வர வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்த விதமான கோபம்? எப்படிப்பட்ட எதிர்வினை? கையா, வாயா? வாய் என்றால் நையாண்டியா, கண்டிப்பான சொற்களா அல்லது கெட்ட வார்த்தைகளா? இதனை முடிவு செய்வது மற்றொரு படிவக் கூட்டும், நினைவு ஆளுமை, உணர்வுப்பகுதி (awareness).
படிவங்களின் ஆற்றல், அவற்றை அடக்கியாளும் மற்ற படிவங்களின் ஆற்றல் ஒருவரின் சூழ்நிலைக்கேற்ப, முன் அனுபவத்திற்கேற்ப மாறுபடும். படித்த ஒருவரின் கோப மொழிகளும், படிக்காத ஒருவரின் மொழியும் மாறுவதும் படிவ அமைப்பின் இயக்கமே.
“பளார்னு அறைஞ்சிருப்பேன்.. சரி, பெரியவங்க இருக்காங்களேன்னு, அடக்கிக்கிட்டு மெல்ல சிரிச்சுட்டு வந்துட்டேன்” என்ற வார்த்தைகள் பல தட்டுகளில் படிவங்கள் இயங்கியதைப் பேசுகின்றன.
சீதை அசோகவனத்தில், அனுமனுக்குச் சொல்கிறாள். எப்போதோ இவர்களை சுட்டெரித்து என்னால் வந்திருக்க முடியும். ஆனால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு இழுக்கு என்பதால் அவனே போர்செய்து என்னை மீட்கட்டும் என விட்டுவிட்டேன்”

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என் ஒற்றைச்
சொல்லினால் சுடுவேன்; அஃது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என, வீசினேன்.

என்னால் செய்திருக்க முடியும் என்பது ஒரு படிவம். அவன் செய்யட்டும் என நினைப்பது ஒரு படிவம். அதனை இயக்கமாக்கி தன்னைச் செய்யாது நிற்க வைத்தது ஒரு படிவம். அதனை உணர்ந்து அனுமனிடம் சொல்வது ஒரு படிவம்.
சிந்தனை என்பது ஒரு நீட்சிக்கோடு அல்ல. தொடர்புடைய, பல கோடுகள், பல பரிணாமங்கள். இதனை கட்டுப்படுத்தி வைப்பது சமூக, தனி ஒழுங்குகள். அதனுள் நின்று  , பலவிதமான சிந்தனையைத் தூண்ட வைப்பது கல்வி. இதைத்தான் நம் மரபு காலம் காலமாகச் செய்து வந்தது. மனப்பாடம் செய்ய வைத்தது ஒரு தளக்கல்வி. அதைத் தாண்டி, தருக்கமும், சிந்தனை செய்வதும், கேள்வி கேட்பதுமாக மற்றொரு தளத்தில்.   உபநிடதுகள் நின்றன . இன்று கல்வி  அனைத்தும் கேள்வி பதில்கள், சான்றிதழுக்கான தகுதிஎன்று ஒரு தளத்தில் கேள்வியும், எதிர்பார்க்கப்பட்ட விடையுமாக பலவீனமடைந்து நிற்கிறது.
பல படிவ சிந்தனை நமக்கு பழக்கப்பட்ட ஒன்று.  அந்த படிவங்களைத் தாண்டி மற்றொரு தளத்தில் நின்று “ நான் இவ்வாறு சிந்திக்கிறேன்’ என்று நம்மையே உணர்வது மற்றொரு அறிவு சார்ந்த நிலை. டெகார்டேயின் I think therefore I am என்பதைத் தாண்டிய நிலை இது. பல படிவங்கள்.. ஒவ்வொன்றிலும் என்ன நிகழ்கிறது.? ஓவ்வொன்றிற்கும், சங்கிலிக் கண்ணிகள் போல என்ன தொடர்பு? கண்ணிகள் சேர்ந்த இறுதியான வடிவம் என்ன? என்பதை மற்றொரு தளத்தில் நின்றே அறியமுடியும். அறிவு சார்ந்த, உணர்வு சார்ந்த வாழ்நிலை என்பது படிவங்களை அறிந்து, அவற்றை ஒரு ஆளுமையில் கையகப்படுத்துவதில் இருக்கிறது.
எத்தனை படிவங்கள் நமக்கு சாத்தியம்? அதில் எது நமக்கு நன்மை பயக்கும்? என்பதை கற்றவர்கள் சமூக, தனியொழுங்கில் பெரும்பாலும் தவறுவதில்லை. இவற்றை உணர்ந்து , செயல்படுத்துவது எந்த வயதிலும் சாத்தியம். எத்தனை படிவங்கள் ஒரே நேரத்தில் சாத்தியம்?
உதாரணமாக இந்த பாசுரத்தில் எத்தனை படிவங்கள் என்பதை கவனித்துப் பாருங்கள்.

“உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்றில்லா
கள்ளத்தே நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்றே
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே”
–  திருமாலை,  தொண்டரடிப் பொடியாழ்வார்.

பிஸ்வாஸ் அதன்பின் பேசவில்லை. அவருக்குக் குரங்குகளின் ஒலி அமைதியை அனுப்பியிருக்க வேண்டும். அவரும் பேசாமல் வந்ததால் எனக்கும் அவருக்கும் ஒரே படிவம் இருந்திருக்க வேண்டியதில்லை. மேலும்,

  • இந்த சாத்தியங்களின் அசாத்தியக் கூட்டல்தான் வாழ்வை சுவையாக்குகிறது.
  • நீங்கள் இதனை ஒத்துக்கொள்ளத் தேவையில்லை.

 
உசாத்துணை
1. Vital Lies & SImple Truths – Daniel Golman
2. Jean Piaget – Wikipedia,

One Reply to “படிவமும் மனமும்”

  1. அனுபவங்களே படிமங்களின் அடிப்படை. இம்மானுவல் சரியாகச் சொன்னார். அதனால்தான் குழந்தைகளுக்கு படிம்ம் தெரியாது. சிறிது வெயிட்டான சப்ஜக்ட். நன்றாக சொல்லியிருக கிறீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.