நாணயத்துண்டு – பிட்காயின் ஒரு எளிய அறிமுகம்

Bitcoin_Money_Dollar_Cash_BlockChains

காசு, பணம், மணி, துட்டு என்பது நானும் நீங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு காகிதமோ, நாணயமோ நானும் நீங்களும் ஒத்துக்கொள்ளும் ஒரு மத்திய நிறுவனம் வெளியிடுகிறது. அந்த ஒரு காகிதம்\ நாணயம் அதற்கு ஒரு மதிப்பு இருப்பதாக நானும் நீங்களும் ஒப்புக்கொள்கிறோம். உங்கள் வங்கியில் இருபதாயிரம் உள்ளது. வங்கியில், உங்கள் பெயருக்கு எதிரில் வெறும் எண்தான் பற்று வைக்கப்பட்டு இருக்கிறது. நீங்களும் நானும் அந்த எண்ணுக்கு ஒரு மதிப்பு அளிக்கிறோம். இருபதாயிரத்துக்கு ஒரு கார் வாங்கலாம். என்ன, காரா? என்பார்கள் இந்தியாவில். அதையே அமரிக்காவில் ஆமாம் முடியுமே என்பார்கள். அதாவது ஒரு பணத்தாள்களுக்கு நிகராக பொருட்களை இணையாக வைக்கிறோம்.
பரிவர்த்தனைகளை சரிபார்த்து வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனம் அதை கவனித்து இந்தாள் இவ்ளோ காசு வைத்திருக்கிறார், இந்த எண்ணுக்கு இத்துணை மதிப்பு என்று காசு மேலாண்மை செய்கிறது. வங்கி அல்லது இதைப் போன்ற மத்திய நிறுவனங்களின் பணி இன்னும் ஒன்று உண்டு. அதாவது பரிவர்த்தனை உரியவர்களுக்கு இடையே தான் நடந்ததா என்று சரி பார்ப்பது. இரண்டு உதாரணங்கள். ஒன்று வங்கி. வங்கிகளில் காசோலை, இணையப் பரிவர்த்தனைகளின் முறைமைகள் எல்லாம் நாம் நன்கறிந்தது. இரண்டு, பத்திரப்பதிவுத்துறை போன்ற நிறுவனங்கள். ஒரு நிலம் வாங்குகிறீர்கள். சார்பதிவாளர் அலுவலகம் இன்னாரும் இன்னாரும் இந்த இடத்தை இத்துணை பணம் கொடுத்து இந்த தேதியில் வாங்கியிருக்கிறார்கள் என்று பதிவு செய்து பத்திரப்பதிவு செய்கிறது. அதுவும் ஒருவகையில் வங்கிதான். இன்னும் இதே போல் பாடல்களை பதிவு செய்யும், சினிமாக்களை பதிவு செய்யும் காப்புரிமை நிறுவனங்கள், கடனட்டை நிறுவனங்கள் என்று நிறைய நிறைய மத்திய நிறுவனங்கள் அதாவது இடைத்தரகு நிறுவனங்கள் உள்ளன.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஇவையெல்லாம் கடைசியில் பயனருக்கு என்ன சேவைவை வழங்குகின்றன?
1) சமூகமாக ஏற்றுக்கொள்ளல் – அதாவது நம்பிக்கையான இடைத்தரகர்
2) பெறுநர், அனுப்புநர் இருவரில் யாரும் யாரையும் ஏமாற்றவில்லை என்பதற்கான அத்தாட்சி.
இவை இரண்டையும் பாதுகாக்கின்றன. இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். நீங்கள் ஒரு ஐம்பதாயிரம் கொடுத்து ஒரு நிலத்தை கிரையம் செய்கிறார்கள். அந்தப்பணத்தை வங்கியில் கட்டுகிறீர்கள். வங்கிகள் என்ன செய்கிறது. பணத்தைக்ககொடுத்தவர் வீட்டு பின்புறத்தில் இந்தப்பணத்தை அச்சிடவில்லை என்று உறுதி அளிக்கிறது. விற்றவர் உங்களிடமும் வேறு ஒருவரிடமும் ஒரே இடத்தை இரண்டு பேரிடம் விற்கவில்லை என்று பத்திரப்பதிவு அலுவலகம் உறுதி அளிக்கிறது. ஒரு பரிவர்த்தனையில் இவை இரண்டும் நிகழ்கின்றன. அமேசானில், ப்ளிப்கார்ட்டில் எல்லாம். பரிவர்த்தனை நிகழ்ந்ததற்கான ஆதாரம். பரிவர்த்தனையின் உண்மைத்தன்மை இரண்டையும் பாதுகாக்கின்றன. இதில் நிறைய ஓட்டைகளும் இருக்கின்றன. ஒரே ஒரு முக்கியமான ஓட்டை என்பது, எல்லா இடைத்தரகு நிறுவனங்களும் ஒரு குறைந்தபட்ச அளவில் திருட்டை, ஃப்ராடுகளைக் களைய முடியாமல்தான் இயங்குகின்றன.
பிட்காயினும் உண்மையில் இவை அனைத்தையும் செய்கிறது. வெறும் மேம்பட்ட அல்காரிதம் (கணக்குதான்) மற்றும் மென்பொருளினாலேயே. உள்ளே புகுமுன், ஒரு குட்டி வரலாறு.
‘சடோஷி நாகாமோடோ’ எனும் ‘ஜப்பானியர்’ ஒரு ஆராய்ச்சித்தாளை மே 2008 வெளியிடுகிறார். அதன் (சாராம்சத்தின்) சாராம்சம் என்பது
1) ஒரு மின்னணு பணப்பரிமாற்ற முறைமை
2) இடைத்தரகர் இன்மை அதாவது அனுப்புநர், பெறுநர் அவ்வளவே ( peer to peer) கொண்ட வலைப்பின்னல்
3) சான்று.
இதற்கான ஒரு வரைவு கணினி நுட்பத்தை முன்வைக்கிறார். மெள்ள மெள்ளக் கனன்று, காலச்சக்கரத்தில் ஏறி இறங்கி பிட்காயின் என்பது அறிந்த ஒரு நம்பிக்கையான வழிமுறை என்று இன்று கருதப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இன்றுவரை இந்த சடோஷி நாகோமோடோ யாரென்று யாருக்கும் தெரியாது. கடோஷி நாமாசோடோவின் எழுத்துத்திரிபு-புனைப்பெயர் என்றும் டோரியன் நாகோமோடோ என்னும் ஒரு இராணுவ காண்ட்ராக்டர் என்றும் கதைகள் உலவின. இன்னும் ஒன்று சாம்சங், டோஷிபா, நகமிச்சி மற்றும் மொடொரோலா ஆகிய நாலு நிறுவனங்களும் உருவாக்கிய இரகசியம் இது என்றும் ஒரு கதை. ஒன்றை உருவாக்கிவிட்டு அதற்கு பெயர் வாங்கிக்கொள்ளாத நல்ல மனிதர். ஆனால் என்ன ஒரு மில்லியன் பிட்காயினை வைத்துக்கொண்டு இருக்கிறார்/கள். ஒரு பிட்காயின் இன்றைய தேதியில் 450 அமரிக்க டாலர். கூட்டிக்கழித்து பார்த்துக்கொள்ளவும்.
தற்போது 400 வகையான மின்காசுகள் உள்ளன. பிட்காயினும் மின்காசுகளில் ஒன்று. மின்காசுகள் சில தீர்க்காத பல பிரச்சனைகளை பிட்காயின் தீர்க்கிறது.
Bitcoin என்பதை நாணயத்துண்டு என்று தமிழ்ப்படுத்த உரிமை எடுத்துக்கொள்கிறேன். பல்வேறு வகையாக மொழிபெயர்க்கலாம் இருப்பினும் நாணயத்துண்டு என்பது இதன் பயன்பாட்டு அடிப்படையை விளக்க, நினைவில் கொள்ள மிகவும் உதவும். கணினித்துறையில் இருப்போரைக்கேட்டாலுமே முக்காலே மூணுவீசம் பேர் ஏதோ டிஜிட்டல் கரன்சியாம்பா என்று கடந்துவிடுவர். தெளிவாகப் புரிந்து கொள்ள முதலில் வண்டிவண்டியாக கணக்குப்பயிற்சியும் கணினிக்கோட்பாடுகளும் புரிய வேண்டும்.
எப்படிப்பட்ட கணக்குப்பயிற்சி எனில்… தொடர்ந்து முழக்க இக்கட்டுரையை வாசிப்பேன் என்று துண்டைப்போட்டுத்தாண்டி சத்தியம்செய்துவிட்டு இந்த விக்கிப்பீடியா சுட்டியில் எட்டிப்பார்த்து, தைரியமாக பயந்துவிட்டு திரும்ப வந்துவிடவும். சரியா? நீளவட்ட வளைவு எண்ம ஒப்பவினைச்சரம் elliptical curve digital signature algorithm புரிந்தால் போதுமானது. சரி.. சரி..பொறுமை வேண்டும். நாம் அத்துணை தூரம் இதில் புகப்போவதில்லை. சும்மா ஒரு ரெண்டு மூன்று பத்தி அளவு பாப்போம்.
இந்தத் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு பயனரும் ஒரு வங்கியே. பரிவர்த்தனைகளை சரிபார்ப்பது தலையாய பணி. யாரிடம் எவ்வளவு உள்ளது, அனுப்புநரும் பெருநரும் அனுப்ப வேண்டிய அளவு நாணயத்துண்டு இருக்கிறதா என்று. நடந்த பரிவர்த்தனைக்கான அத்தாட்சிகள் அனைத்தையும் உலகிலுள்ள அத்தனை நாணயத்துண்டுப் பயனரும் சரிபார்த்தல் செய்துகொண்டே இருக்கிறார்கள். அத்தனை பரிவர்த்தனையையும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பயனரும் சரிபார்த்து ஒத்துக்கொள்வதுதான் இதன் சிறப்பே. நீங்கள் என்றால் உங்கள் மென்பொருள் இதைச் செய்கிறது. அதனாலேயே நாம் முதலில் பார்த்த வங்கியின் பணியில் ஒன்றான நம் பணத்தை ‘ஏற்றுக்கொள்வது’ இங்கு நடக்கிறது. மேலும் ஒட்டுமொத்த வலையுமே அதாவது நாணயத்துண்டை ஏற்றுக்கொண்ட பயனாளிகளின் வலைப்பின்னலில் இருக்கும் தரவுத்தளம் என்பது பகிரப்பட்டு, ஓரிடத்தில் குவிக்கப்படாத தரவுத்தளம். அதாவது ஆங்கிலத்தில் distributed database இது. இதனாலேயே இடைத்தரகு என்ற பேச்சுக்கு இடமில்லை, தேவையில்லை.
நாணயத்துண்டுத் தொழில்நுட்பத்தில் அடிப்படையில் இரண்டு முக்கிய சங்கதிகளை மட்டும் பார்ப்போம்.
நாணயத்துண்டு என்று ஏன் சொல்கிறோம் என்றால் ஒவ்வொரு நாணயமும் தனியான ஒரு நாணயமாக இருப்பதில்லை. எல்லா நாணாயமும் ஏதோ ஒரு பரிவர்த்தனையின் தொடர்ச்சியாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்னொருவருக்கு ஒரு நாணயத்துண்டை அனுப்பினால் அந்த செய்தி எல்லோருக்கும் பரப்பப்படும். எல்லோரும் அந்த பரிவர்த்தனை சரிதானா என்று சரிபார்த்துக்கொள்வர் எப்படி எனில் அனுப்பியவரிடம் எவ்வளவு பணம் அனுப்பினார் அவரிடம் எப்படி அத்தனை பணம் வணந்தது என்றதுக்கான இதற்கு முன்னான அத்தனை பரிவர்த்தனைகளையும் மென்பொருள் சரிபார்க்கும். (ஆம். ஒரு பரிவர்த்தனை நடைபெற முன் நடந்த அத்தனை பரிவர்த்தனைகளையும் மென்பொருள் சரிபார்க்கும்). அதனால் எந்த நாணயத்தை எடுத்தாலும் அந்தத்துண்டை வைத்தே பரிவர்த்தனை நடந்ததையும் பரிவர்த்தனையின் நம்பகத்தன்மையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அப்படி என்றால் ஆதி அப்பா ஆதி அம்மா பரிவர்த்தனை எப்படி வந்தது என்ற கேள்விகளெல்லாம் அல்காரிதம் பார்த்துக்கொள்ளும்.
இப்படி யாருமே பொதுவாக ஒரிடத்தில் சரிபார்க்காமல் யார்யாரோ பரிமாற்றத்துக்கான வினைச்சங்கிலையை மட்டும் பார்த்தால் எப்படி திருட்டுகளைத் தவிர்க்க முடியும். அதற்காக பிளாக்செயின் (BlockChain) எனப்படும் பரிவர்த்தனைக்களைத் தொகுத்த ஒரு சங்கிலித்தொடரும் உண்டு. இதுவே இந்த வங்கியின் மேலே குறிப்பிட்ட ஓரிடத்தில் குவிக்கப்படாத தரவுத்தளம். அதாவது ஒரு பேரேடு. எல்லாப் பரிவர்த்தனைகளுக்குமான சங்கிலி. ஒருவர் இன்னொருவருக்கு ஒரு நாணயத்துண்டை அனுப்பினால் அந்த செய்தி எல்லோருக்கும் பரப்பப்படும், சரிபார்க்கப்படும் என்று பார்த்தோமல்லவா, அப்படிச் சரிபார்த்தபின் பரிவர்த்தனை நடந்த காலத்தையும் குறித்து இந்தப் பேரேட்டில் குறித்துக்கொள்ளும். இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகளை எப்படி ஒரே பேரேட்டில் குறித்துக்கொள்வது. இப்படி பொதுவில் பகிரப்படும் பரிவர்த்தனைக்குறிப்புகள் ஒரு சங்கிலி போல பிணைக்கப்படுகிறது (பரிவர்த்தனை நடந்த நேரத்தின் அடிப்படையில்) இப்படி சங்கிலியாகப் பிணைப்பதை சில ஆயிரம் பரிவர்த்தனைகள் கொண்ட துண்டுகளாக புழங்கும். ஏதாவது ஒரு துண்டை எடுத்து சில கணக்குகளின் அடிப்படையில் அதை சரிபார்க்கும் இந்த பரந்துபட்ட இணையவலை.
இதைப்பராமரிப்பது, நம்பகத்தன்மையை உருவாக்குவது யாரும் யாரும் அறியாத வகையிலும் இரகசியம் காப்பது என்ற அனைத்தையும் கடினமான கணினிச்சூத்திரங்கள் தகவல்களை குறியாக்கம் செய்வது, வந்த தகவல்களை குறியாக்கம் செய்தது சரிதானா என்று சோதனை செய்வது (இருப்பதிலேயே இதுதான் கடினமான பணி), மேலும் குறியாக்கி சங்கிலிகளை உருவாக்குவாது என்று இந்த வலைப்பின்னல் பணி செய்கிறது. இதைச் செய்யும் ஒவ்வொரு கணினியும் இந்த வலையில் ஒரு வங்கி. அதனால் எல்லாரும் நேரத்தையும், மின்னாற்றலையும் செலவழிக்கிறார்கள். இதனாலேயே ஒவ்வொருவரும் செய்யும் பணிக்கு என்று குறிப்பிட்ட அளவு நாணயத்துண்டு கட்டணமாக -transaction fees போல உருவாக்கி பகிர்ந்தளிக்கப்படுகிறது. இன்னொரு வகையில் புதிதாக உருவாக்கும் சங்கித்தொடர்களை மொத்த வலையும் ஏற்றுக்கொண்டால் அதற்கும் நாணயத்துண்டு கிடைக்கும். அதுவும் கணினிச்சூத்திரங்களில் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட சங்கிலித்துண்டு தேர்வானால் மட்டுமே கிடைக்கும். அதாவது உழைப்புக்கேற்ற ஊதியம். இதையே நாணயத்துண்டுச் சுரங்கவேலை என்றழைக்கப்படுகிறது.அதாவது நீங்கள் காசு சம்பாத்திக்கிறீர்கள். இப்படிச் சம்பாதித்த காசைக்கொண்டு நிழல் உலக கஞ்சா முதல் விர்ஜின் அடலாண்டிக் விமானச்சீட்டு வரை வாங்கமுடியும்.
மேற்குறிப்பிட்டது மிகமிக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். உங்களுக்கு இதில் நிறையக் கேள்விகள் வரும். ஓரிரு முக்கிய தகவல்கள் மட்டும். உங்கள் பெயர் தெரியவே தெரியாது. உங்கள் கணக்கு எண் என்பது குறியாக்கம் செய்யப்பட்டு பகிரப்படும். எல்லாவற்றையும் நிர்வகிப்பது என்பது யாரும் கிடையாது. மேலும் மேலும் நபர்கள் சேரச்சேர வலைப்பின்னல் இன்னும் கடினமானதாகவும், கணினி அல்காரிதம் மேலும் கெட்டிப்பட்டும் பாதுகாப்பை உறுதியளிக்கும். மொத்தம் 21 மில்லியின் முழு நாணயத்துண்டுதான் கணக்கியலின் படி உருவாக்கமுடியும். ஆனால் நாணாயத்துண்டின் மதிப்பு என்பதை வகுத்துகொண்டே செல்லமுடியும். இப்போதே இரண்டாம் தசமத்துக்கு வந்துவிட்டது நாணயத்துண்டின் அளவு, அதாவது மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. சுபம்.

தொடர்புள்ள பதிவு: பிட்காயின் 101

bitcoin_Cartoon_Comics

One Reply to “நாணயத்துண்டு – பிட்காயின் ஒரு எளிய அறிமுகம்”

  1. நீரையும் பனிக்கட்டியாக அள்ளக்கூடிய பொறுமை , இனிய,ஆழமான சொல்லாற்றல் , வாசிப்பவனை கடைசி வரி வரை முழு மனதோடு கருத்துஜீரணிப்பு செய்வித்த எழுத்து வசியம் இவை அனைத்தையும் வெளிப்படுத்தும் கட்டுரையாளர் சத்திய நாராயணன் பணி மேன்மேலும் சிறக்க நன்றி கலந்த வாழ்த்துக்கள். சொல்வனத்தில் ஓர் ஆலமரத்தடி இக்கட்டுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.