தொழில் நுட்பம் வளரும் அளவுக்கு, அதே வேகத்தில் அதைக் கையாளும் சமூகத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய சட்டம் வளர்வதே இல்லை. வளர முடிவதும் இல்லை. காரணம் சட்டத்திற்கு பொறுப்பு அதிகம்.
தொழில் நுட்பம் மனிதத் தேவையின் அடிப்படையில் வளர்வதைப் போலவே, எதிர்பாராவிதமாகவும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன. ஆக தொழில் நுட்ப வளர்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் பயணிக்கின்றது. எதுவாயினும் அதைப் பயன்படுத்துபவர்கள் அதை எதிர்மறை செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அதனால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிய வருபவர்களையும், நம்பக்கூடியவர்களையும் காப்பாற்றவும் முயலும் சட்டம் அதே வேகத்தில் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொண்டு, அதற்குத் தோதான சட்டங்களை இயற்ற இயலவில்லை என்பதற்கு சட்ட வல்லுனர்களின் தொழில் நுட்ப அறிவுத் தட்டுப்பாடு மட்டும் காரணம் அல்ல. சட்டத் திருத்தம் செய்வதில் உள்ள வரைமுறைகளுமே ஆகும்.
இக்காரணத்தால் அந்த வரைமுறைகளில் மாற்றம் ஏதும் செய்ய இயலாதுதான். ஏனெனில் சட்டத்தின் ஓட்டையை அடைப்பது என்பது சல்லடையின் ஓட்டையை அடைப்பதற்குச் சமானம். சட்டத்தின் பயன் அற்றுப்போய் விடும்.
எல்லா தொழில் நுட்பங்களையும் நேர்மறையாகப் பயன்படுத்த முடிவது போலவே, எதிர்மறைச் செயல்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதாலேயே அதைச் சமூக நெறியாளராக இருக்கும் சட்டம் கையாள வேண்டி இருக்கிறது.
காவலன் தயாராகும் முன் கள்ளன் தயாராகி விட்ட நிகழ்வு நாட்டிற்கு நல்லதல்ல.
உதாரணமாக சமீபத்தில், நடந்த தமிழக தேர்தலில், தேர்தல் ஆணையம் ஊடக விளம்பரங்கள் செய்வது மற்றும் அதற்கான செலவுக் கணக்குகளை ஆணையத்திடம் ஒப்படைப்பது குறித்து சுற்றறிக்கை ஒன்றை அறிவித்திருந்தது. அதில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகச் செய்யும் விளம்பரங்களில் ஆன்லைன் விளம்பரங்களும் அடங்கும். எனவே அதற்கான செலவுக் கணக்கையும் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்கிறது ஆணையம். ஆனால், ஆன்லைனில் விளம்பரம் எனில் ‘எவை ஆன்லைன்?” “எவை விளம்பரங்கள்?” “எவை ஆன்லைன் விளம்பரங்களுக்கான செலவு?” அந்தச் செலவுக் கணக்கை ”எப்படிக் கணக்கிடலாம்?” என பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் சொல்லவில்லை.
ஏனெனில், சமூக வலைதளங்களில் கட்சி சார்பாக செய்யப்படும் விளம்பரங்களுக்கான செலவை அதன் கணக்கில் வைக்கலாம். ஆனால், கட்சித் தொண்டர்கள் அல்லது பொது சனம் அதே கட்சி சார்பில் விளம்பரம் செய்தால் அவற்றை விளம்பரக் கணக்கில் சொல்ல இயலாது. அதே சமயம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களும் ஸ்டேடஸ் ஆக போடும் பகுதியில் விளம்பரங்களை அனுமதிப்பதும் இல்லை. விளம்பரங்களுக்கென உள்ள விதிமுறையின் படியான விளம்பரங்களை மட்டுமே அவை அனுமதிக்கின்றன. காரணம் விளம்பரங்களால் மட்டுமே அவை இயங்குகின்றன.
ஆனால், சமூக வலைதளங்களின் உண்மை நோக்கம். அதிகப் பார்வையாளர்களைக் கொண்டு வருவது. எனவே அதிகப் பார்வையாளர்களை ஒரு விளம்பரம் கொண்டு வருமாயின், அவை எந்த வடிவில் இருந்தாலும் மேற்படி ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.
பொது வெளியில் ஒருவன் ஒரு கட்சிக்காக மெனக்கெட்டு விளம்பரம் செய்தல் அரிதான ஒன்று. ஆனால், சமூக ஊடகத் தளங்களில் எந்த ஒருவர் போடும் விளம்பரமுமே இருநூறு பேர் வரை சென்றடையும். இந்நிலையில், ஒரு கட்சிக்காக போடப்படும் விளம்பரம் என்பது அந்த கட்சியால் பணம் கொடுத்து போடப்படாவிட்டாலும் கூட அந்த விளம்பரத்தை அதன் வாசகங்களை அந்தக் கட்சி ஏற்கிறது எனும் அத்தாட்சி இருப்பதே நியாயம். எப்படி ஒரு விளம்பர நோட்டிசில் அச்சடித்தவர் பெயர் இருக்க வேண்டுமோ அப்படி விளம்பரம் எனில் அதில் கட்சி அனுமதி இருப்பதே நியாயம். சமூக தள விளம்பரங்களைப் பொறுத்த வரை தேர்தல் ஆணையம் அப்படி ஏதும் கட்டாயப்படுத்தவில்லை.
தேர்தல் தேதியின் முந்தைய 48 மணி நேரங்களில் கட்சி விளம்பரங்கள் கூடாது என ஆணையம் சொல்லி இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் ரி ட்வீட், ஷேர் ஆகும் கட்சி வாசகங்கள் பற்றி ஆணையம் ஏதும் குறித்துச் சொல்லவில்லை.
ஒரு ப்லாக் ஸ்பாட், வலைதளத்தில் பார்வையாளர் எத்தனை முறை க்ளிக் செய்கிறாரோ அதைப் பொருத்து விளம்பரதாரரிடம் பணம் சம்பாதிப்பார். இதற்கு CPC பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இதை ஆணையம் கட்டாயப்படுத்தவில்லை.
ஆணையம் மொத்தமாக சமூக வலைதள விளம்பரங்களுக்கான கணக்குகள் காட்டப்படவேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறது அதற்கான விதிகளை தெளிவாக்காமல்…
~oOo~
ட்ரோன்கள் (Drones) எனப்படுபவை ஆளில்லா பறக்கும் விமானங்கள். இவற்றில் சிறிய அளவில் உள்ளவற்றை நாமே தயாரித்து விட முடியும். ஆனால் இவற்றைப் பறக்க விட அனுமதி பெற வேண்டும். அநேக நாடுகள், இவற்றைப் பறக்க விட என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவைப் பொருத்த வரையில் இதை தமது சொந்த நிலத்தில் பறக்க விட அனுமதி உண்டு. ஆனால், பொது இடத்தில் பறக்க விட Directorate General of Civil Aviation(DGCA) Air Navigagtion Service Provider, Ministry of Defence, The Ministry of Home Affairs மற்றும் அது போன்ற ஏஜன்ஸிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.
பறக்க விட மட்டுமே இத்தனை விதிகள். ஆனால் பறக்க விடப்பட்ட ட்ரோன்களை என்ன உபயோகத்திற்கு பறக்க விடுகிறோம் என்பதும் அது குறித்த விதிகளும் இன்னும் ஏற்படுத்தப்படவே இல்லை. உதாரணமாக, சொந்த நிலத்தில் அனுமதியோடு ட்ரோன் பறக்கவிடப்பட்டாலும், அதில் கேமிராவைப் பொருத்தி(commercial) படம் எடுப்பது குறித்த விதி இல்லை. இப்படி கேமிராவைப் பொருத்தி சொந்த நிலத்தில் இருந்தபடியே அடுத்த கட்டிடங்களின், ரகசிய தகவல்களைப் படம் எடுக்கலாம் அல்லவா? இப்படிச் செய்யும் முயற்சிகளைக் கட்டுப்படுத்தச் சரியான விதிகள் இல்லை. இருப்பினும் இதைப் பயன்படுத்தி திரைப்படங்களும் திருமணப் புகைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் சென்னை வெள்ளத்தைக் கூட ட்ரோன் பயன்படுத்தி படம் எடுத்தார்கள். ஆனால் எடுத்த எவருமே அதை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்ததாகவே சொல்லிக் கொண்டதை நாம் அறிவோம்.
ட்ரோன்களைப் பயன்படுத்தி சிறிய அளவிலான பொருட்களை இடம் பெயர்க்கவும் பயன்படுத்தலாம் என்றாலும் அப்படி எந்த எடை அளவுள்ள பொருளைக் கொண்டு செல்லலாம்..என்ன வடிவில் கொண்டு செல்லலாம் என்பதற்கெல்லாம் வரையறுக்கும் விதிகள் இல்லை.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குள் ஊடுருவுவது குறித்த இண்டர்னேஷனல் ஒப்பந்தங்கள் இல்லை அல்லது தெளிவாக இல்லை.
ஆளில்லா பறக்கும் விமானங்களில் உள்ள வேறுபாடு என்பது அதன் பயன், மற்றும் அது பறக்கும் இடம் இவற்றைக்கொண்டே அது சட்டபூர்வமானதா அல்லவா எனச் சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் ட்ரோன்கள் சட்ட அங்கீகாரத்தை முழுதுமாகப் பெறவில்லை. குறிப்பாக ட்ரோன்களை அங்கீகரிக்கும் நாடாயினும், அரசு அலுவலகங்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள் இவற்றின் மீதெல்லாம் பறக்கத் தடை இருக்கும், இவை தெளிவாக்கப்படவில்லை.
இந்தியாவில் ட்ரோன்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், ஆன்லைனில் ஏராளமாக இந்தியாவில் விற்பனை ஆகிறது. மும்பையில் கமிஷனர் அலுவலகத்திற்கு மிக அருகிலும் கூட சுடச்சுட விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலை ட்ரோன்களைப் பயன்படுத்தி படம் எடுத்த ஒன்பது உக்ரேனியர்கள் பிடிபட்டது நினைவிருக்கிறதுதானே? அதே போல ஒரு அமெரிக்கர் கஜுஃபஹுவா கோவிலை ட்ரோன் கேமிரா பயன்படுத்தி படம் எடுத்து பிடிபட்டார்.
இந்திய சுங்க விதியின் படி சில பொருட்கள் தடை செய்யப்பட்ட அல்லது வரி கட்ட வேண்டிய பொருட்கள் என பிரித்து வைத்திருக்கிறது. அந்த பட்டியலிலேயே ட்ரோன்களும் உள்ளன. எனவே எவரேனும் ட்ரோன்களை வெளி நாட்டிலிருந்து வாங்கி வந்திருந்தால் சுங்கப் படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இவற்றை இறக்குமதி செய்வது தடை செய்யப்படவில்லை என்றாலும் அவற்றின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் அவற்றினால் வரக்கூடிய பாதுகாப்பின்மை, தனி நபர் உரிமை பறிபோதல், மற்றும் விபத்து நேர்தல் போன்ற இதர ஆபத்துகள்.
ஆனால், அமெரிக்காவில் இவற்றைக் குறித்த FAA Modernization and Reform Act of 2012 சட்டம் ஓரளவுக்கு அந்தக் குறையைக் களைகிறது.
~oOo~
ஆன்லைன் என்பது அட்சய பாத்திரம் போல. ஆனாலும் அதை 100% நம்ப இயலாது என்பதே அது குறித்த சட்ட வகையங்கள் உருவாகத் தடையாக உள்ளன. ஒருகுற்றம் இணையத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்டிருந்தால், அக்குற்றவாளியை கண்டு பிடித்தாலும் அதை ஐயந்திரிபற நிருபிப்பது சுலபமல்ல. பல சமயங்களில் இதனாலேயேயும், benefit of doubt காரணமாகவும் குற்றவாளியை விடுவிக்க வேண்டி இருக்கிறது. வெப் சைட்கள் ஒவ்வொன்றும் போஸ்டல் முகவரியோடிருக்க வேண்டும் என எவரையும் கட்டுப்படுத்த இயலாது.
ஆன்லைனில் பயன்படுத்தக்கூடிய BIT COINS என்பவை, ஆன்லைனில் ஒருவர் செய்த சர்வீசுக்கு தரும் ரிவார்ட் போல பண மதிப்பு கொண்டு பயன்படுத்தப்பட்டு வருவன. அது தனி மார்கெடைக் கொண்டு விளங்குகிறது. இந்த ஆன்லைன் பணமானது நிஜ உலக பணத்துக்கு மாற்று செய்யமுடியக்கூடியதுதான் என்றாலும், நிழல் உலகத்தில் இதன் பயன்பாடு காரணமாகவே சட்ட நிபுணர்கள் இதை ஏற்கவும் இதற்கென தனி வழி முறைகளைப் புகுத்தவும் செய்தனர். உண்மையில் 2009ல் இந்த பிட்காயின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஓரளவுக்கேனும் ஏற்கப்பட்டது எனில் அது சமீபத்தில்தான். அதற்குள்ளாகவே அதாவது சட்ட ஆதிக்கம் வரும் முன்பே பிட் காயின்களுக்கென்று ப்லாக்செயின் எனும் லெட்ஜர் போன்றவை பயன்படுத்தபட்டு இத்திட்டம் செயல்பட ஆரம்பித்திருந்தது. இது குறித்த தெளிவான ஒத்த விளக்கம் நாடுகளிடையே இல்லாததால், வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு முடிவை எடுத்திருக்கின்றன. சில நாடுகள் இதை தடை செய்திருக்கின்றன. சில வெளிப்படையாகவே ஏற்றிருக்கின்றன. இதை ஏற்பதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன. நிஜ உலக பணத்திற்கு சம மாற்றாக இதைக் கருத இயலாது என்பதும் இதற்கான விளக்கத்தை சரியாக எழுத ஒரு பொருளாதாரம் அறிந்த சட்டமேதை தேவை என்பதை விட, அப்படி ஒருவர் வரும்முன்பே இதில் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன என்பதே நிஜம்.
ஏனெனில் இந்த பணத்திட்டத்தை அங்கீகரித்தால், இந்தப்ப் பணம் களவாடப்பட்டால், களவாட முயற்சிக்கப்பட்டால் என்பதில் ஆரம்பித்து, நிஜ உலகப் பணத்தோடு இதை ஈடு செய்ய ஆகும் வழி முறை வரை சிந்தித்து சட்ட நெறிமுறைக்குள் இதைக் கொண்டுவர வேண்டும்.
சட்ட விதிமுறைகளை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்களாலேயே பல புதுத் தொழில்நுட்பங்கள் அங்கீகரிப்பபடாமலேயே போய் விடுகின்றன.
3 D printing மாதிரியான பல தொழில் நுட்பங்கள் என்னவோ சட்டத்தைக் காப்பாற்ற கிரிமினல் வழக்குகளுக்கு உதவத்தான் செய்கின்றன. ஆனால், புதிய புதிய கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் பயன்படுத்தும் வகையில் சட்டத்தால்தான் தொழில் நுட்ப வேகத்திற்கு ஈடு கொடுத்து உதவ இயலவில்லை. தொழில் நுட்பம் உள்ளே என்னென்னெ மறைத்து வைத்திருக்குமோ எனும் அச்சமும் இதற்குக் காரணமே.
இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தவர் தனது பெயரில் பதியும் பேடண்ட் சட்டங்களே பல நுணுக்கங்களைக் கையாண்டே ஆக வேண்டி இருப்பதால் அது ஒரு நெடிய வகைமுறையாகவே இருக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சி வேகத்திற்கும் சட்ட வகைமுறை தயாரிப்பின் வேகத்திற்கும் உள்ள இடைவெளி அதிகமாகியபடியே இருக்கிறது.
ஏனெனில், தொழில் நுட்ப வளர்ச்சி என்பது இயற்கையானது, மனித வளர்ச்சியோடு இணைந்தது. ஆனால் சட்டம் என்பது மனிதனால் அவனை கட்டுக்குள் வைக்க ஏற்படுத்தப்பட்டது செயற்கையானது.
நேரம் ஆகத்தானே செய்யும்?
மிக அருமையான சப்ஜக்ட். நீங்கள் எடுத்திருந்த மூன்று உதாரணங்களும் ஆர்வத்தைத் தூண்டுபவை.
150 வருடங்களுக்கு முன்னால் டெலிகாம் முதலில் தலையெடுத்த போது ஒட்டுக் கேட்கும் முறைகளும் (wire-tapping) வெளி வந்தன. ஒரு காவல் துறை ஒட்டுக் கேட்பதற்கான சட்டங்கள், ஒரு குடிமகன் வீட்டை தேடுதல் மற்றும் சாட்சியங்கள் எடுத்தல் (Search and Seizure) சம்பந்தப்பட்ட (டெலிகாம் காலத்திற்குப் பல நூறு வருடங்கள் முந்தைய) சட்டங்களில் இருந்து derive செய்யப்பட்டன என்று படித்திருக்கிறேன்.
ராணுவம் பயன்படுத்தும் டிரோன்களைப் பொறுத்த வரை அவற்றை கண்ட்ரோல் செய்யும் “பைலட்டுக்கள்” சிவிலியன்களாக இருந்தாலும் அவர்கள் ராணுவ வரையறைக்குள் வருவார்கள் என்றும்; எனவே அவர்களைத் தாக்குவது “தீவிரவாதம்” அல்ல என்றும் அமெரிக்க சட்ட நிபுணர்கள் கருத்து ஒன்று உள்ளது.
சர்வதேசச் சட்டத்தில் இன்னொரு முக்கியமான ethical பிரச்சினை ரோபாட்டுக்களை யுத்தத்தில் பயன்படுத்தும் முறைகள் சம்பந்தப்பட்டது.