சேரிடம் அறிந்து சேர்

தான் இருப்பதை பழுதாகும் வரையில் உணர்த்தாத எந்த ஒரு இயக்கத்துடனும் மின்மாடத்தை (லிஃப்ட் அல்லது எலிவேட்டர்) ஒப்பிடலாம். மின்மாடங்கள் இல்லாத கட்டடங்கள் இன்றைக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு வணிக வளாகங்களிலும், வசிப்பிடங்களிலும், அலுவலகங்களிலும் மின்மாடங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பார்ப்பதற்கு மேலே கீழே சென்று வரும் ஒரு கருவியாகத் தோன்றினாலும், விண்ணுயர் மாளிகைகளில் மின்மாடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகளை அவரவர் இருக்கும் மாடிக்கு அனுப்பிவைக்கும் தலையாய பணியையும் செய்துகொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு கட்டடத்தின் போக்குவரத்திற்காக செங்குத்தாகச் சென்றுவரும் வாகனங்கள்தான் மின்மாடங்கள். இதில் நமது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கதவுகளும் ஒரு அறையும். அறைக்குச் சென்று செல்லவேண்டிய தளத்தின் பொத்தானை அழுத்துகிறோம், செல்ல வேண்டிய தளம் வந்ததும் இறங்கிச் செல்கிறோம்.
அந்தக் குறிப்பிட்ட சுற்றிற்கான இயக்கத்தைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு தளத்திற்குச் செல்வதற்கான பொத்தானை அழுத்தியதும், மின்மாடத்தின் மேல்மாடியில் இருக்கும் மைக்ரோப்ராசருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
*பத்தாவது மாடிக்குச் செல்*
தகவலை எடுத்துக்கொண்ட மையம், பத்தாவது மாடியின் கதவுக்கு அருகில் இருக்கும் விசைக்கு ஒரு ஆணையை அனுப்புகிறது. ஆணையை ஏற்றுக்கொண்ட பத்தாவது மாடியின் விசை தனக்கு அருகில் மின்மாடம் வந்தவுடன் அந்தத் தகவலை மையத்துக்கு அனுப்புகின்றது. மையம், மேலே கீழே மாடத்தை இயக்கும் மோட்டாருக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்த உத்தரவிடுகின்றது. மின்மாடம் நின்றதை உறுதி செய்துகொள்கிறது. அதன் பின்னர் கதவுகளுக்கு மேல் இருக்கும் மோட்டாருக்கு உத்தரவைப் பிறப்பித்து, கதவைத் திறக்கின்றது.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueமாடத்திற்கு உள்ளிருந்து குறிப்பிட்ட மாடியின் எண்ணை அழுத்தினால் மின்மாடம் அந்த மாடிக்குச் செல்வதைப் போலவே, குறிப்பிட்ட மாடியின் முகப்புக்கூடத்திலிருந்து (லாபி) மின்மாடத்தை அழைக்கும் பொத்தானை அழுத்தியதும் நிகழ்வதும் அதே சுற்றுதான். ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால், தகவல் மின்மாடத்திலிருந்து செல்லாமல் முகப்புக்கூடத்திலிருந்து செல்கிறது.
ஒரேஒரு மின்மாடம் மட்டுமே இயக்கத்தில் இருக்குமானால், இந்த முறையில் மாற்றம் ஏதும் இல்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட மின்மாடங்கள் பணியில் இருந்தால், செயற்கை நுண்ணறிவுள்ள செயலியின் உதவி அவசியமாகின்றது. இந்தச் செயலியின் பணி என்னவென்றால், குறிப்பிட்ட முகப்புக்கூடத்திலிருந்து அழைப்பு வந்ததும் அந்த இடத்திற்கு வசதியான மின்மாடத்தைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது. அழைக்கப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் மின்மாடம் இருக்கிறது, எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது, இன்னும் எத்தனை தளங்களுக்குச் செல்லவேண்டும் எல்லாவற்றையும் கணக்கிட்டு எந்த மின்மாடம் மிகக்குறைந்த நேரத்தில் சேவைக்கு வர இயலுமோ அதனைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றது.
இதுதான் பெரும்பாலும் மின்மாடங்கள் இயக்கப்படும் முறை. முகப்புக்கூடத்திலிருக்கும் பொத்தானை அழுத்துவது, மின்மாடம் வருவது, கதவைத் திறப்பது, உள்ளே சென்று செல்லவேண்டிய தளத்தின் பொத்தானை அழுத்துவது, தளத்திற்குச் செல்வது. பயனருக்கு எந்தச் சிக்கலும் இல்லாத எளிமையான முறை.
இந்த எளிதான நுணுக்கத்தின் இயக்கத்தை மாற்றி யோசித்தார்கள்.
நான்கு, ஆறு, எட்டு என அதிகமான மின்மாடங்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு செயற்கை நுண்ணறிவுச் செயலியால் தேவைப்படும் தளங்களுக்கு மாற்றிமாற்றி அனுப்பப்பட்டு சேவை செய்யும்பொழுது, எல்லா மாடிகளுக்கும் செல்லும் பயணிகள் அனைவரும் ஒவ்வொரு மின்மாடத்திலும் பயணம் செய்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் பயணம் செய்கிறார்கள். அதாவது, நான்கு மின்மாடங்கள் குழுவாகச் செயல்படும்போது, ஒரு மின்மாடம் ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லும், அடுத்து வரும் பயணிகளும் ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் செல்லும் பக்கத்தில் அடுத்த மின்மாடமும் அவர்களை ஏற்றிச் சென்று ஐந்திலும் ஆறிலும் இறக்கிவிடும்.
இதில் உள்ள அதிகப்படியான பணி என்ன? இரண்டு முறை, இரண்டு மின்மாடங்கள் ஐந்தாவது மாடியிலும் ஆறாவது மாடியிலும் நிற்கின்றன.
இப்படி ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் செல்பவர்களைப் பிரித்து ஒரு மின்மாடத்தை ஐந்தாவது மாடிக்கும், இன்னொரு மின்மாடத்தை ஆறாவது மாடிக்கும் அனுப்பினால் என்ன என்று மாற்றி யோசித்தார்கள்.
அதன் பலன், “சேரும் இடம் முதன்மைப்படுத்தப்பட்ட அமைப்பு” என்னும் புதிய அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் என்ன பயன்?
சேரும் இடத்திற்கு ஏற்றாற் போல மின்மாடங்களைப் பிரித்து அனுப்புவதால், ஒரே மின்மாடம் பல மாடிகளில் நின்று நின்று செல்வது குறைக்கப்படுகிறது, அதனால், நுழைவாயிலின் முகப்புக்கூடத்தில் மின்மாடத்திற்காகக் காத்திருக்கும் நேரம் குறைகின்றது. பயணிகள் குறைவாக இருக்கும் கட்டடங்களில் இந்த அமைப்பு பொருத்தப்படுவதில்லை. மாடிகளின் எண்ணிக்கையும், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்போது ‘சேருமிடம் முதன்மைப்படுத்தப்பட்ட அமைப்பு’ அவசியமாகின்றது. குறிப்பாக, கட்டடத்தின் பயன்பாடு அலுவலகங்களுக்காக என்றால் சமீபகாலங்களில் புதிய கட்டடங்களில் இப்படியான அமைப்பு மின்மாடங்களில் பொருத்தப்படுகின்றது.
இதனைச் செயலாக்கும் முறைகளைப் பார்க்கலாம்.
மொதுவாக மின்மாடத்துக்கு உள்ளே சென்ற பின்னரே பயணி தான் செல்லவேண்டிய தளத்திற்கான பொத்தானை அழுத்துகிறார். மின்மாடத்துக்கு உள்ளே இருக்கும் அந்த விசைப்பலகை மின்மாடத்துக்கு வெளியே முகப்புக்கூடத்தில் வைக்கப்படுகிறது. அந்த விசைப்பலகையில், கூடுதலாக இன்னொரு பகுதியில் மின்மாடங்களின் எண் தெரிவதற்கான சட்டம் அமைக்கப்படுகின்றது. நான்கு மின்மாடங்கள், ஆறு மின்மாடங்கள், எட்டு மின்மாடங்கள் என எத்தனை மாடங்கள் இயக்கத்தில் இருந்தாலும் குறைந்தபக்கமாக ஒரு விசைப்பலகை முகப்புக்கூடத்தில் இருந்தால் போதுமானது. அடுத்து, ஒவ்வொரு மின்மாடத்தின் முகப்பிலும் அதற்கான எண் ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ அல்லது ‘1’, ‘2’, ‘3’, ‘4’ என எழுதி வைக்கப்படுகின்றது.

Lifts_Elevators_Tech_Chari

மின்மாடங்களின் மையக் கட்டுபாட்டுப் பகுதியில் கூடுதலாக இன்னொரு செயற்கை நுண்ணறிவுப் பகுதி பொருத்தப்படுகின்றது. இதன் வேலை, முகப்புக்கூட விசைப்பலகையில் இருந்து குறிப்பிட்ட தளத்திற்குச் செல்வதற்கான அழைப்பு வந்ததும், அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து மின்மாடங்களும் எங்கெங்கு இருக்கின்றன, எந்தெந்த திசையில் சென்றுகொண்டிருக்கின்றன, எந்தெந்த தளங்களில் நிற்கும் என்பதைக் கணக்கிடுகின்றது. கணக்கிட்ட பின் இப்படியான சூழலில் பயனருக்கு எந்த மின்மாடத்தை ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என முடிவு செய்கின்றது. விசைப்பலகையின் மேலிருக்கும் சட்டத்தில் அந்த மின்மாடத்தின் எண்ணை ஒளிரச் செய்கின்றது. பயணி, அந்தக் குறிப்பிட்ட மின்மாடத்தின் அருகே சென்று நின்றுகொள்ளவார். மின்மாடம் வந்ததும் அதில் ஏறிய பின் எந்த விசைப்பலகையையிலும் செல்லவேண்டிய தளத்திற்கான பொத்தானை அழுத்தவேண்டிய அவசியம் இல்லை. மின்மாடம் குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று கதவுகளைத் திறந்து பயனருக்கு சேவை செய்கின்றது.
முன்பு குறிப்பிட்டது போல, எல்லா தளங்களுக்கும் ஒரே மின்மாடம் பயணிகளை ஏற்றிச் சென்று அதனால் பல மாடங்களில் மின்மாடம் நின்று நின்று புறப்படும் நிலை வெகுவாக் குறைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, நான்கு மின்மாடங்கள் பயன்பாட்டில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் இப்படியான சேருமிடம் முதன்மைப்படுத்தப்பட்ட அமைப்பு இல்லையென்றால், ஒவ்வொரு முறை தரைத்தளத்திலிருந்து புறப்படும் மின்மாடத்திலும் மேலே செல்லவேண்டிய அனைத்துப் பயணிகளும் ஏறிக்கொள்வார்கள். ஒவ்வொரு மின்மாடமும் தான் செல்லும் திசையில் இருக்கும் தளங்களுள் பயணி பொத்தானை அழுத்திய எல்லா தளங்களிலும் நின்று நின்று புறப்படும். சேருமிடம் முதன்மைப்படுத்தப்பட்ட அமைப்பு இருக்குமானால், முகப்புக்கூட விசைப்பலையில் தளத்திற்கான எண் பதியப்பட்டதும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லும் மின்மாடத்தின் எண் பயனருக்கு அறியத்தரப்படுகின்றது. எல்லா மின்மாடங்களும் எல்லா தளங்களிலும் நிற்பதில்லை. செயற்கை நுண்ணறிவுச் செயலி அவற்றைப் பிரிக்கின்றது. மின்மாட எண் ‘அ’ இந்தப் பயணத்தில் 5, 8, 13, 20 தளங்களுக்குச் செல்லவேண்டும் என்றும், மின்மாட எண் ‘ஆ’ 3, 10, 25 தளங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் சூழ்நிலைக்கேற்றவாறு பிரித்துக்கொள்கிறது. அடுத்த பயணம் தரைத்தளத்திலிருந்து புறப்படும்போது மின்மாட எண் ‘அ’ செல்லவிருக்கும் தளங்கள் 2, 15, 18, 25ஆகவும் இருக்கலாம். அதேபோல் மின்மாட எண் ‘ஆ’ செல்லவிருக்கும் தளங்கள் 7, 12, 19, 24ஆகவும் இருக்கலாம். தரைத்தள முகப்பில் எண் பதியப்படும்போது மின்மாடங்களின் நிலை என்ன என்பதைக் கணக்கில்கொண்டு நுண்ணறிவுச் செயலி வெவ்வேறு முடிவுகளை எடுத்து மின்மாடங்களை ஒதுக்கித்தரும்.

Lifts_Elevators_Tech_Chair_2

இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த அமைப்பு பயன்பாட்டில் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டால் மின்மாடங்களை தினசரி பாவிப்போர்க்கு வியப்பாக இருக்கும். இதன் காரணம், இந்த அமைப்பு அனைத்துக் கட்டடங்களிலும் நிறுவப்படுவதில்லை. அதிகமான தளங்கள் இருக்கும் அலுவலகக் கட்டடங்களிலும், பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் கட்டடங்களிலும் மட்டும் இந்த அமைப்பு நிறுவப்படுகின்றது.
கட்டடங்களில் இருக்கும் நுழைத்தடைக்குள் (டர்ன்ஸ்டைல்) நுழைவதற்கு அடையாள அட்டையைக் கணினிக்கண் (கார்ட் ரீடர்) முன்னே காட்டி தடையைத் திறக்கும் இடத்திலேயேகூட மின்மாட எண்ணைக் காட்டுகின்ற கருவி வைக்கப்படுவதற்கான வசதியும் இருக்கின்றது. அடையாள அட்டையில் பதியப்பட்டிருக்கும் தளத்திற்கான எண்ணுக்கேற்ப மின்மாடம் ஒதுக்கப்படும்.
இந்த அமைப்பின் முதன்மைப் பலன், மேம்படுத்தப்பட்ட செயல் திறன்.
நிலைமைக்கு ஏற்றாற்போல் மின்மாடங்கள் பிரிக்கப்படுவதால், நின்று நின்று செல்வது குறைக்கப்படுவதோடு, தரைத்தள முகப்புக்கூடத்தில் ஏற்படும் நெரிசலும் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு முறை எதாவது ஒரு மின்மாடம் தரைத்தளத்தை அடையும்போதும் அதன் அருகே பயணிகள் கூட்டமாக நிற்கும் நிலைமை அல்லாமல், தாங்கள் செல்லவேண்டிய தளத்திற்குச் செல்லும் மின்மாடத்தின் அருகில் மட்டுமே பயணிகள் நிற்பதால் இது சாத்தியப்படுகின்றது.
இன்னும் எளிதாகச் சொல்வதென்றால், கடற்கரைச் சாலையில் செல்லும் இரண்டு பேருந்துகள் லைட் ஹவுஸ், குயின் மேரீஸ், எழிலகம், ரிசர்வ் வங்கி, பீச் ஸ்டேஷன் என்று எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று செல்வதற்கும், மற்ற இரண்டு பேருந்துகள் – ஒன்று லைட் ஹவுஸ், எழிலகம், பீச் ஸ்டேஷனில் நிற்பதாகவும் இன்னொன்று குயின் மேரீசிலும் பீச் ஸ்டேஷனில் மட்டும் நிற்பதாகவும் இருந்தால் பயணிகளுக்கு எத்தனை வசதியாக இருக்குமோ அத்தனை வசதியானது மின்மாடங்களில் இந்த அமைப்பு.

4 Replies to “சேரிடம் அறிந்து சேர்”

  1. நல்ல தொழில்சார்ந்த, பயனுள்ள கட்டுரை. பயணப்படும் விற்பனைப்பிரதிநிதியின் பிரச்சனையைத் தீர்க்கும் அல்காரிதத்தையும் ஒருவாறு தொட்டுச்செல்லுமாறு கட்டுரை அமைந்திருக்கிறது.

  2. அருமையான கட்டுரை. தெரியாத பல விடையங்களை தெரிந்து கொண்டேன். அழகிய இலகுவான தமிழ் எழுத்து நடை. உங்கள் ஆக்கங்கள் மேலும் தொடரட்டும்

  3. தெளிவான நடையில், அனைவருக்கும் புரியும்படி எழுதப்பட்டுள்ள நல்லதொரு கட்டுரை.நம் நாட்டிலும் இப்போது பெரு நகரங்களிலுள்ள பெரிய அடுக்குமாடி அலுவலகக் கட்டிடங்களிலும் வந்துவிட்டன. ஆரம்பத்தில், உள்ளே பொத்தான்கள் இல்லாத மின்மாடங்கள் பார்ப்பதற்கு மூளியாகத் தோன்றினாலும்கட்டுரையில் விளக்கியுள்ளது போல்,அதன் பயன்கள் மிகமிக அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.