செயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0

AI_Chess_Artificial_Intelligence

காலப் பயணம் பற்றிய தமிழ்த் திரைப்படங்களின் காலமிது என்பதால் அதிலிருந்து துவங்கலாம். கால எந்திரம் ஒன்றில் பயணித்து 1750களில் வாழும் மனிதர் ஒருவரைப் பிடித்து 2016க்குக் கூட்டி வந்து இன்றைய உலகைக் காணச் செய்தால் என்ன ஆவார்? ‘வந்தியத்தேவன், குதிரை மேல் ஏறினால் வாயு வேகம், மனோ வேகத்தில் பயணித்தான்’ என்று படித்தாலும் ஓரளவு நம்பத்தக்க விதமாக‌ கண்முன்னே குதிரை மேல் பயணம் செய்வதே அதிவேகப் பயணமாக அவர் கண்டிருப்பார். இன்றோ வானில் சீறிப் பாயும் விமானங்களும், அறியப்பட்ட நம் சூரிய குடும்பத்தின் எல்லையைத் தாண்டியே சென்று கொண்டிருக்கும் வாயேஜர் செயற்கைக் கோளும்! புறா விடு தூது அனுப்பிய செய்திகள் சில பல நாட்களுக்குப் பிறகு நெஞ்சைக் கவர்ந்தவரை அடைந்த நிலைமைக்குப் பழகியவர், அதற்கு  மாறாக கடலுக்கு அப்பால் வாழும் அன்பு மனைவியோடு ஸ்கைப்பில் முகம் பார்த்தபடி உரையாட முடிவது.  நேரடியாகக் காதால் கேட்ட ஒரு கலைஞனின் இசையை, நினைவுகளில் மட்டுமே மீட்டியெடுத்து மகிழ்வதற்குப் பதிலாக, நாற்பது ஆன்டுகளுக்கு முன்னால் ஒரு ஸ்டூடியோவில் இசைக்கப்பட்ட ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடலை, விரலளவுக் கருவியின் மூலம் நுணுக்கமாக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ முடிவது. ஆங்கிலத்தில் ‘mind is blown’ என்று ஒரு உயர்வு நவிற்சி உண்டு. காலத்தில் பயணித்த அம்மனிதர், ஆச்சர்யங்கள் தாள முடியாமல் மெய்யாகவே சிந்தை வெடித்துச் சிதறி இறக்கவும் வாய்ப்புண்டு.
இப்போது அடுத்த கேள்வி – இன்றைய உலகில் வாழும் நம்மில் ஒருவர், அதே கால எந்திரத்தில் ஏறி முன்னோக்கி எத்தனை ஆண்டுகள் பயணித்தால், அதே போன்று சிந்தை சிதறும் ஆச்சர்யங்களை அடைவார்? ‘முன்னூறு ஆன்டுகள்’ என்று உங்களில் யாராவது சொல்லியிருந்தால் நீங்கள் வெல்ல முடியாது ஒரு கோடி ஒரு நயா பைசா கூட. தவறான பதில். நீங்கள் நினைத்திருக்க வேண்டியது முன்னூறு ஆண்டுகள் நெடில் அல்ல, முப்பதே ஆண்டுகள் குறில். இதற்கு முக்கிய காரணமாக இருக்குமென்று பரவலாக அறிவியலாளர்கள் மத்தியில் நம்பப்படுவது, செயற்கை நுண்னறிவுப் (Artificial Intelligence) புலத்தில் வர இருக்கும் புரட்சிகள். அல்லது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரட்சிகள்.
செயற்கை நுண்ணறிவு என்பது, கவிப்பேரரசு அளித்த தெளிவுரைப்படி – “எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து,  வயரூட்டி உயிரூட்டி,  ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி,  அழியாத உடலோடு,  வடியாத உயிரோடு, ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி,  ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி”. சுருக்கமாக செயற்கை அஃறிணைகளுக்கு, அதாவது மனிதர்கள் உருவாக்கிய எந்திரங்களுக்கு, குறிப்பாக கணினிகளுக்கு, அறிவேற்றுவது.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஇந்தத் துறைக்கு செயற்கை நுண்ணறிவு எனப் பெயரிட்டவராக ஜான் மெக்கார்த்தி (John McCarthy, 1927 – 2011) அறியப்படுகிறார். எம்.ஐ.டி. மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் ஆய்வும் கற்பித்தலும் செய்தவர். 1955ல், ஐ.பி.எம். நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு ராக்கஃபெல்லர்  அமைப்பிடம் உதவி வேண்டி சமர்ப்பித்த திட்ட வரைவில், இப்படி எழுதுகிறார் –
“செயற்கை நுண்ணறிவு சார்ந்த இந்த ஆய்வில், மனிதர்களால் செய்யக் கூடிய அறிவாற்றல் சார்ந்த (தொடர்ந்து விரைவாகக் கற்பது உள்ளிட்ட) எந்த அம்சத்தையும் ஒரு எந்திரம் செய்யக் கூடிய வகையில் தெளிவாக வரையறுத்து விளக்கிவிட முடியும் என்ற கருதுகோளின் அடிப்பைடையில் தொடர இருக்கிறோம்..”
உலக உயிரினங்களில் ஆறாவது அறிவை அடைந்த ஒரே உயிரினம் என்று தம்மைத்தாமே நம்பிக் கொள்ளும் மனிதர்கள் (“அவன் ரொம்ப அறிவாளியாம்!” “அப்படியா? யார் சொன்னது?” “அவனே சொல்லிக்கிட்டான்!” – நன்றி: கவுண்டர் மஹான்!) இந்த செயற்கை நுண்ணறிவைப் பற்றி ஆராயத் துவங்கியபோது, அதை எப்படி நிகழ்த்துவது என்பது ஒரு கேள்வியாக இருந்தது.
முதல் படியாக மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் எந்திரங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். (Machines mimicking human behavior.) ரோபோ என்று மனித வடிவிலேயே இருக்கும் எந்திரங்(ன்)கள், இதில் அடக்கம்.
அடுத்தபடியாக மனிதர்களைப் போல சிந்திக்கும் எந்திரங்க‌ளின் உருவாக்கம். (Machines mimicking human thought process.) ஆப்பிள் ஐஃபோன்களில் ஒலிக்கும் ‘சிரி’, இத்தகைய செயற்கை நுண்ணறிவு என்று ஓரளவு சொல்லலாம். குரல் தவிர வேறு எந்த விதத்திலும் ‘மனிதத் தன்மையற்றது’ அது. தவறாகப் புரிந்து கொள்ள‌ வேண்டாம் – உள்ளதை உள்ளபடி விருப்பு வெறுப்பின்றி சொல்லும் என்பதால். ☺
தற்போது மனித அறிவின் விரிவுகளும் எல்லைகளும் பற்றிய‌ மயக்கங்கள் விலகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கடுத்த கட்டமாக நுண்ணறிவோடு இயங்கும் எந்திரங்களை உருவாக்க முயற்சிப்பது. (Machines with intelligence. Dot.) இது எப்படி இருக்கும் என்பது வந்தால் தான் தெரியும்.
செயற்கை நுண்ணறிவில், அது எந்த அளவு நிபுணத்துவம் அடைந்துள்லது என்பதை வைத்து மூன்று வகைகளுண்டு. முதலாவது செயற்கைக் குறு நுண்ணறிவு (Artifical Narrow Intelligence.) இது weak AI எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணத்துவம் வெளிப்படுத்துவது இது. இருபதாண்டுகளுக்கு முன்பாகவே, அப்போதைய உலக செஸ் சாம்பியன் காஸ்பரோவ்-வை ஒரு போட்டியில் வீழ்த்திய IBM Deep Blue என்ற கணினியை இந்த வகையானது எனலாம். அந்தக் குறிப்பிட்ட துறையில் மட்டுமே மேலும் மேலும் படித்தும் பயிற்சிகள் செய்தும் தன்னை முன்னேற்றிக் கொள்வது இதன் பணி. வேறு துறைகளில் கவனம் செலுத்தாது. “மேத்ஸ்ல மட்டும் என் பையன் சூரப் புலி, ஆனா மத்த சப்ஜெக்ட்ஸ் எதுலயும் கவனம் வைக்கா மாட்டேங்கறான்” என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மாணவனைப் போன்றது இந்த நிலை..
இரண்டாவது, செயற்கைப் பொது நுண்ண‌றிவு (Artifical General Intelligence). இது strong AI எனவும் அழைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளில், அறிவார்ந்த செயல்பாட்டை வெளிப்படுத்துகின்ற கணினிகளை இப்படிச் சொல்லலாம். மனித அறிவுக்கு ‘சபாஷ், சரியான போட்டி’ என்று டஃப் கொடுக்கக் கூடியது. குறிப்பாக, தர்க்கபூர்வமான சிந்தனை, திட்டமிடுவது, திட்டப்படி செயல்படுவது, வேகமாகப் புதியன கற்பது, தெளிவற்ற அல்லது வரையறையற்ற‌ கருத்தோட்டங்களை (abstract ideas) எளிதாகப் புரிந்து கொள்வது, இப்படி இவையும் இன்னும் பலவுமாக, ஒரு மனிதன் ஈடுபட‌க் கூடிய அறிவார்ந்த செயல்பாடுகளில் இயங்கக் கூடியதாக இந்த வகைக் கணினிகள் இருக்கும். எல்லாப் பாடங்களிலும் உயர் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைப் போன்றது இது. ஆனால், இந்த இரண்டாம் வகை செயற்கை நுண்ணறிவை அடைவது கடினமான ஒன்று. இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை.  ஆனால், அந்தத் தருணத்தை மிக விரைவில் எதிர்நோக்கி இருக்கிறோம்.
மூன்றாவது, செயற்கை அதி நுண்ண‌றிவு (Artifical Super Intelligence). நாமறிந்த எல்லாத் துறைகளிலும், இருப்பதிலேயே சிறந்த மனித மூளைகளை மிஞ்சும் அறிவு கொண்ட நிலை இது. அறிவியல் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, கலை, சமூக நடத்தை, நிர்வாகம், என்று எல்லாமே இதில் அடக்கம். பாடங்களில் சோபிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டிலும் இன்னும் பல எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் பட்டையைக் கிளப்பும் மாணவர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் தான் இது.  செயற்கைப் பொது நுண்ண‌றிவு நிலையையே இன்னும் எட்டவில்லை என்பதால் செயற்கை அதி நுண்ண‌றிவு நிலை அதற்கடுத்து எதிர்காலத்தில் இருக்கிறது. இப்போதைக்கு, “எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வரும்” என்று சொல்லி அமையலாம்.
குரங்கினத்தை விட பரிமாண வளர்ச்சியில் மனித இனம் முன்னேறி விட்டோம் என்று நாம் சொல்லும் போது அதன் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதர்கள் செய்யக் கூடிய விஷயங்களை குரங்குகள் செய்ய முடியாது என்ற அள‌வில் மட்டும் இயங்குவதில்லை இந்த பரிணாம வளர்ச்சி. மனிதர்கள் கணினியை உருவாக்கினால், குரங்குகளால் உருவாக்க முடியாது தான். ஆனால், மனிதர்களால் கணினி என்ற ஒன்றை உருவாக்க முடியும் என்பதைக் கூட குரங்குகளால் புரிந்து கொள்ள இயலாது. இது போன்ற பல பரிமாணங்கள் இதில் அடங்கி உள்ளன. அதைப் போல், செயற்கை அதி நுண்ணறிவு என்பது, பரிமாண வளர்ச்சித் தொடரில், மனிதனின் அறிவாற்றலை மிஞ்சப் போகும் அடுத்த பாய்ச்சலாக இருக்கப் போகிறது. அது மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் முந்தைய ஐந்தறிவு விலங்கினங்களுக்கும் இடையிலான இடைவெளியை விட மிகப் பெரிய இடைவெளியை செயற்கை அதி நுண்ண‌றிவு அதிவிரைவில் எட்டிச் சென்று விடும் என்று நம்பப் படுகிறது. (மனிதன்: “தள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே..!” அதி செ.நு: “ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…”)
எனவே தான், என்ன, ஏது என்று நம்மால் புரிந்து கொள்ளக் கூட முடியாத பரிமாணங்களில் இந்த அதி நுண்ணறிவு வெளிப்படக் கூடும். அதன் விளைவுகள் எப்படி இருக்கும், மனித இனம் செல்லும் பாதை எதிர்காலத்தை நோக்கியா, அல்லது ‘அதிர்’காலத்தை நோக்கியா என்பது ந‌மக்கு முன் உள்ள சவாலான கேள்வி.

(அடுத்த பாகத்தில் தொடரலாம்.)

AI_Artificial_Computers_Comics_MachineIntelligenceCartoon-BloomCounty

உசாத்துணை

  1. Wait But Why series on Artificial Intelligence (Tim Urban)
  2. Biographical memoir on John McCarthy (Nils J Nilsson, NASA)
  3. Open/web study materials on AI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.