சித்த மருத்துவம்- தமிழரின் சிறப்பு அடையாளம்

Ayurvedha_Siddha_Medicines

தொன்மைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானிகள் தமது ஓக(யோக) ஆற்றலின் பயனாகப் பல உண்மை விளக்கங்களை உலகிற்கு எடுத்துரைத்தனர். அவர்களின் இலக்கு நலவாழ்வு (Healthy life), உயர்ஞானம் (Wisdom), அமைதி (Peace), பேரின்பம் (Bliss) போன்றவற்றை அடைவதாக இருந்தது. இவற்றை அந்தத் தமிழ்ஞானிகள் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அப்போது வாழ்ந்த மக்களுக்கும் அதனைக் கற்றுக்கொடுத்தனர். அப்போது வாழ்ந்த மக்கள் பயனடைந்ததோடு மட்டுமல்லாமல் பன்னெடுங்காலத்திற்கு அவை மக்கள் பயன்பாட்டில் இருக்கவேண்டுமென்றெண்ணி ஓலைச் சுவடிகளிலும் உலோகப்பட்டைகளிலும் கற்களிலும் பதித்து வைத்தனர். அவை இன்றைய தமிழர்களின் கலைகளாக விளங்குகின்றன. அவற்றில் ஒன்றுதான் தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவம்.
தமிழோடு இணைந்து உருவான சித்த மருத்துவம் கி.மு.10,000 லிருந்து கி.மு.4000 க்குள் எப்போதாவது தோன்றியிருக்கலாம் என்ற கருத்தினை தொல்லியல் ஆய்வாளர்களும் இலக்கிய ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றார்கள். அதற்கும் முன்பே  தோன்றியிருக்க வேண்டும் என்பது பாவாணர் போன்ற அறிஞர்களின் நம்பிக்கை.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஎப்படியிருந்தாலும் குறைந்த பக்கம் (பட்சம்) 5000 ஆண்டுகள் தமிழரின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து சமுதாயத்திற்குப் பயன்பட்டு வந்த மருத்துவமுறைதான் சித்த மருத்துவம்.
சித்த மருத்துவம் தோன்றிய இடம் தமிழ் தோன்றிய இடமாகக் கருதப்படும் குமரிக் கண்டம் என்கிற இலெமூரியாக் கண்டத்தில்தான். குமரிக் கண்டம் கடற்கோளினால் (இன்று சுனாமி என்று நாம் தவறாக அழைத்துக் கொண்டுள்ளோம்) அழிக்கப்பட்ட போது அங்கு தமிழரின் வாழ்வியல் பண்பாடு கலை இலக்கியம் போன்றவை எல்லாம் கடலிற்குள் போன போது சித்த மருத்துவத்தின் பெரும் பகுதி கடலுக்குள் காணாமல் போய்விட்டது.
கடற்கோள் குமரிக் கண்டத்தின் பெரும்பகுதியை அழித்த போது எஞ்சியுள்ள தமிழர்கள் தற்போது உள்ள நிலப்பரப்பிற்கு நகர்ந்து வந்தனர். அவர்களிடம் இருந்த எஞ்சியுள்ள சித்த மருத்துவ இலக்கியங்களைக் கொண்டு தான் தற்போதைய சித்த மருத்துவம் வாழ்ந்து கொண்டுள்ளது.

சித்த மருத்துவத்தின் அடிப்படை

உலக தத்துவத்தை மிகவும் துல்லியமாக ஆய்ந்து அறிந்தவர்கள் சித்தர்கள். சித்த மருத்துவத்தின் அடிப்படையினைத் தெளிவாக விளக்கும் சட்டமுனிவர் எனும் சித்தர்

“அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே”

எனத் தெரிவிக்கின்றார்.
உலகம், பிற கோள்கள், பால்வீதி மண்டலம், பிற நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய வெளி அண்டம் எனப்படும். பிண்டம் என்பது உடல். அண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிண்டமாகிய உடலில் உள்ளதாக இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
தொல்காப்பியம் ஐந்து பூதங்களும் இணைந்து உருவானதே உலகம் எனக் குறிப்பிடுகின்றது.

                        நிலந் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
                        கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

                                                        –  தொல்காப்பியம், பொருள், 91
புறநானூறு,

                        மண்டிணிந்த நிலனும்
                        நிலனேந்திய விசும்பும்
                        விசும்புதை வரு வளியும்
                        வளித்தலை இய தீயும்
                        தீமுரணிய நீரு மென்றாங்கு
                        ஐம்பெரும் பூதத் தியற்கை போல

எனத் தெரிவிக்கின்றது.
மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்ச பூதங்கள் அண்டத்திலும் நிறைந்துள்ளன. பிண்டமாகிய உடலிலும் நிறைந்துள்ளன. இந்த பஞ்ச பூதங்கள் தான் உடலில் எலும்பு, தசை, இரத்தம், மூளை போன்ற உடல் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. உடலின் அடிப்படைக் கூறுகள் (Fundamental Principles) இந்த பஞ்ச பூதங்கள்தான். இதே போன்று உயிருக்கு அடிப்படையான ஆற்றலை வழங்குவதும் இந்த பஞ்ச பூதங்கள்தான். அதாவது உடல் கட்டமைப்பிற்கும் இயக்கத்திற்கும் (Structure and Functions of Body) அடிப்படையாக பஞ்ச பூதங்களே உள்ளன.
இந்த பஞ்ச பூதங்களின் ஏற்ற இறக்கங்கள் (கூடினாலோ குறைந்தாலோ) வளி, அழல், ஐயம் (வாதம், பித்தம், கபம்) என்கிற உயிரின் அடிப்படை ஆற்றல்களில் தாக்கத்தை உண்டாக்கும். இந்த உயிர் ஆற்றல்களின் (வளி, அழல், ஐயம்) ஏற்றமோ இறக்கமோ நோய்களாக உருவெடுக்கின்றன. இதனையே வள்ளுவர்

“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று”

எனக் குறிப்பிடுகின்றார்.
உடலில் ஏற்பட்டுள்ள இந்த பஞ்ச பூத ஏற்ற இறக்கங்களை (Imbalance of the Basic Elements) அண்டத்தில் உள்ள (உலகில் உள்ள) பஞ்ச பூதப் பொருட்களைக் கொண்டு சீராக்கி நோய் நிலையிலிருந்து உடலை விடுவிப்பதுதான் சித்த மருத்துவம்.
இதற்காக உலகில் உள்ள மூலிகைகளையும், உலோகங்களையும், தாது உப்புக்களையும், சீவராசிகளிலிருந்து கிடைக்கும் பொருட்களையும் (சங்கு, முத்து, பவளம், மான் கொம்பு, சிப்பி போன்றவை) முறையாகப் பக்குவப்படுத்தி அதனை உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமுதாக மாற்றுவதுதான் சித்த மருத்துவ மருந்து செய்யும் கலை.
நோய் நிலையினைத் துல்லியமாகக் கண்டுபிடித்து அதற்கேற்ற மருந்தினைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து நோயினை வேகமாக நீக்குவது சித்த மருத்துவர்களின் தனித் திறமை.
நோய்க் கணிப்பது, மருந்தினைத் தேர்ந்தெடுப்பது, உணவு மற்றும் பிற அறிவுரைகளை வழங்குவது இவை எல்லாமே நோயருக்கும் மருத்துவருக்கும் இடையே மட்டுமே நடக்கும். இவற்றிற்கெல்லாம் பிறர் உதவி தேவைப்படாது. இதுவும் இம்மருத்துவத்தின் சிறப்பு.

சித்த மருத்துவத்தின் பிற தனிச்சிறப்புகள்

வர்மம்(life centers in the human body),, இரசவாதம் (Alchemy -Study of transmutation of elements, forerunner of modern chemistry and pharmacology), , காயகல்பம் (procedures of rejuvenating the entire human system and ultimately produces immortality), ஓகக் கலை(Eight divisions of YOGA), சிறப்பான நோய் கணிப்பு முறைகள் (நாடி, சிறுநீர் பரிசோதனைகள் உள்ளடக்கிய எண்வகை பரிசோதனை முறைகள் – Eight unique type of diagnostic parameters, ), மணிக்கடை நூல் -The wrist portion just proximal to the hand is measured with a rope and health condition of a patient is ascertained based on the actual measurement by the patient’s  finger), சிறப்பான மருந்துகள் ( முப்பு, கட்டு, களங்கு, சுண்ணம், குரு குளிகை ), சிறப்பான வெளிப்புற மருத்துவ முறைகள் (External medical applications),  சரக்குவைப்பு (Art of preparing naturally available salts, minerals and other materials artificially) போன்ற சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கிய தனித்துவம் சித்த மருத்துவ முறைக்கு உண்டு.
சித்த மருத்துவம் என்பது மருத்துவத்தைத் தாண்டி,  கோள்களைப்பற்றிய அறிவியலையும்  வான சாத்திரத்தையும் கணித சாத்திரத்தையும் நிலவியலையும் மனவியலையும் இன்னும் பல கலைகளையும் உள்ளடக்கியது.
தமிழரின் தனிச் சிறப்பு அடையாளம் சித்த மருத்துவம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.