குளக்கரை


[stextbox id=”info” caption=”ஆள் எடு”]

Kosovo_ISIS_Mosque_Prayers_Islam

மேற்காசியா ஒரு கொதி உலையாக இருக்கிறது. இதில் தினம் நெருப்பில் உருக்கப்படுவோர் பாட்டாளி மக்களும், ஏழைபாழைகளும்தான்.
ஏழை பாழை என்றால் இந்திய, வங்க தேச, ஆஃப்ரிக்க நாடுகளின் வறியோரை ஒத்தவர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அரபு நாடுகளில் இன்னமும் எண்ணெய் வளம் கொண்டு கொட்டிய ஏராளமான உலகச் சந்தையின் விளைவுகள் மக்களுக்கு ஏதோ கொஞ்சமாவது கிட்டுகின்றன.
ஆனாலும் வறுமை என்பது ஆழம் காண முடியாத ஒரு பாழ். அதில் சிக்கிய மக்களுக்குத் தாம் மேல் மட்டத்தில் இருக்கும் வறியவரா, இல்லை அதல பாதாள வறுமையில் சிக்கியவரா என்பதெல்லாம் அதிக பொருட்படுத்த முடியாத வேறுபாடுகள். தனிமனிதரைச் சூழ்ந்த சமூகமும், சுற்றமும் என்ன நிலையில் இருக்கின்றனர், தாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்ற உணர்தல்தான் புரிதலாக மாறுகிறது. அதன் படி ஏராளமான அரபுகளும் வறியவர்களே.
இந்த ஏழை பாழைகளில் எல்லாரும் அரபுகள் என்றும் இல்லை. பல கலப்பின மக்களும் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் பிடித்தாட்டும் சில பிரச்சினைகளில் ஒன்று அமைதி மார்க்கம் என்ற பேருரு. இது அதைச் சார்ந்த மக்களுக்கு என்ன விதங்களில் எல்லாம் புரிபடுகிறதோ, அல்லது கிட்டுகிறதோ, அவை எல்லாம் ஒருமித்த வகை/ உரு கொண்டன அல்ல. இந்தப் பல வித வடிவுகள் அல்லது வார்ப்புகளில் அவற்றைச் சார்ந்த ஒவ்வொரு குழுவும் தம் சார்புதான் உன்னதம் மற்றதெல்லாம் கைவிடப்பட வேண்டியவை என்ற கருத்தோடு இயங்குவது என்பது ஒரு பிரச்சினை. மற்றவற்றில் சில நிலப்பகுதிகளின் உரிமை யாருடையது என்பது குறித்த இழுபறியில் எழுபவை. மற்றவை காலனியம் விட்டுச் சென்ற பலவகை குரோதங்களின் நீட்சிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணெய் வளம் கொடுத்த நிதியை வைத்துக் கொண்டு உலகை ஆளும் சக்தியாகி விடலாம் என்று மனப்பால் குடித்த, இன்னும் குடிக்கிற ஒரு சிறு சமூகக்குழுவின் விஷப்பிரச்சாரம் ஒரு பெரும் பிரச்சினை என்றும் சொல்லலாம். தம் வழி ஒன்றே உலக மக்களுக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டியது, அதை ஒட்டியே வாழ்க்கை நடத்த உலக மக்களைக் கட்டுப்படுத்துவது, வற்புறுத்துவது எல்லாம் தம் உரிமை என்று இந்திய முற்போக்குகள் பன்னெடுங்காலமாகப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அதே போன்ற பகல் கனவை இந்த அரபு நிலத்துச் சமூகக் குழுவும் கண்டு வருகிறது. ஆனால் இதுவோ உலக மக்கள் தொகையில் மிக மிகச் சிறு குழு. தம் கனத்துக்கு மிக மீறிய அளவில் உலகரங்கில் கொக்கரிக்க முயலும் இந்த நாட்டுடைய உலக அதிபத்தியப் பேராசையால் உலகில் பல நாடுகளும் இன்று குருதிக் களமாகி இருக்கின்றன. அதுதான் என்ன நாடு? செய்தியைப் படியுங்கள் புரியும்.
இந்த நாட்டின் கூட்டாளி நாடு ஒன்று, உலகரங்கில் பெரும் ராணுவ சக்தியாக உள்ள நாடு. அது ஏனோ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இந்தச் சிறு மேற்காசிய பாலை நாட்டின் ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் ஆமாம் சாமியாக இயங்குகிறது. இந்தச் செய்தியை அளிப்பது நியுயார்க் டைம்ஸ்.
அமெரிக்கப் பத்திரிகைகளில் பெரும்பாலானவற்றை இந்தியர் நம்பக் கூடாத நிலை இன்று நிலவ இந்தப் பத்திரிகையும் ஒரு முக்கியக் காரணம். இது பொதுவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருவியாகச் செயல்படுகிறது என்றே உலக இடது சாரியினர் கருதுகின்றனர். இந்தப் பத்திரிகையின் செய்திகளை நாம் நம்பகத்தன்மை என்ன என்று சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்து எடுத்துக் கொள்வது அவசியம்.
இந்தச் செய்தியில் கோசவோ என்னும் சிறு பகுதியில்- இது முன்னாளில் யூகோஸ்லாவியா என்ற ‘கம்யூனிஸ்டு’ அடக்கு முறை நாட்டில் ஒரு பகுதியாக இருந்து, அடையாள அரசியலின் தாக்கத்தால் சில்லு சில்லாக ஆன பல பகுதிகளில் ஒன்று- வஹ்ஹாபியம் என்னும் கொடும் நோய் எப்படிப் பரவி முன்பொரு காலத்தில் தாராளமான யூரோப்பிய இஸ்லாம் நிலவிய பகுதி இன்று தீவிர வாதத்துக்கு ஊற்றாக மாறி இருக்கிறது என்று செய்தி சொல்கிறது.
இச்செய்தியை எத்தனை நம்பலாம் என்பது தெளிவில்லை, ஏனெனில் எந்த இந்தியப் பத்திரிகை கோசவோ பகுதிக்குப் போய் செய்திகளைச் சேகரித்து நம்பகத் தனம் கூட்டி அவற்றைத் தொகுத்துக் கொடுக்கப் போகிறது.
தமிழகத்துச் செய்திகளைக் கூட இந்தியச் செய்தித்தாள்களால் நியாயமான முறையில் கொடுக்க வழியில்லை. அதைக் கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு திரிப்பும், புனை சுருட்டும் சேர்த்தே அளிக்கின்றன. அந்த நோய் தீர்ந்தால்தான் உலகச் செய்திகளை நாம் நம்பகத்தன்மை கொண்ட ஆதாரங்களில் இருந்து பெற முடியும். அதுவரை நியுயார்க் டைம்ஸ் எழுதியதை இதைத்தான் படித்துத் தீர்க்க வேண்டி இருக்கிறது.

http://www.nytimes.com/2016/05/22/world/europe/how-the-saudis-turned-kosovo-into-fertile-ground-for-isis.html?_r=0
[/stextbox]


[stextbox id=”info” caption=”துப்பாக்கிக் கலாச்சாரம்”]

NYT_Black_Victims_White_Shooters_Law_Crime_US_Gun_Violence_Dead_Deaths

ஏற்கனவே எச்சரிக்கை செய்து விட்டபடியால் நியுயார்க் டைம்ஸின் நம்பகத்தன்மை இல்லாத செய்திகளைப் பற்றி மறுபடி புலம்பத் தேவை இல்லை. இந்தச் செய்தியும் அதே தாளில் இருந்து பெறப்படுவது.
இதே செய்திக்கு ஒரு மாற்று ஆதாரம் நமக்குக் கிட்டுவதால் இந்தச் செய்தியில் கொஞ்சம் நம்பகத் தன்மை உண்டு என நாம் கருதலாம். அந்த மாற்று பிரிட்டிஷ் இடது சாரிப் பத்திரிகை என்று கருதப்படும் த கார்டியன் செய்தித்தாளில் தினம் கிட்டும் ஒரு செய்தி. கடந்த ஒரு வருடமாக கார்டியன் பத்திரிகை தன் வலைப்பக்கத்தின் நடுவில் அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை என்னவென்று கொடுத்து வருகிறது. அன்றன்று யாராவது கொல்லப்படுவதால் இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தச் செய்திக் குறிப்பு எழுதப்படும் அன்று இந்தத் தொகை 389 பேர்கள் என்று கார்டியன் சொல்கிறது. சுட்டி இதோ: http://www.theguardian.com/us-news/ng-interactive/2015/jun/01/the-counted-police-killings-us-database
ஆனால் இங்கு பேசப்படும் குறிப்பு அமெரிக்கக் காவல் துறை கொல்லும் மக்களைப் பற்றியது அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள், மூன்றில் இரண்டு பங்கினருக்கும் மேல் என்று சொல்லலாம், கருப்பின மக்கள் என்பது நமக்குத் தெரியும். அதைச் செய்தியில் படிக்காமலே நாம் ஊகிக்க முடியும். வேறென்ன செய்யப் போகின்றனர் அமெரிக்கக் காவல் துறையினர் என்று கூட நாம் நினைக்க வாய்ப்பிருக்கிறது.
எனினும் இந்த நியுயார்க் டைம்ஸ் செய்திக் குறிப்பு என்ன சொல்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. மையச் செய்தியாக, கருப்பினச் சமூகத்தில் துப்பாக்கிகளால் பரவியுள்ள வன்முறையால் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்படுவதில்லை என்பதோடு அந்த வன்முறைக்கு ஒரு கட்டுப்படுத்தும் முயற்சியும் அமெரிக்க அரசாலோ, காவல் துறையினராலோ, மேலும் சுற்றியுள்ள சமூகத்தினராலோ மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை என்கிற செய்தியும் நமக்குக் கிட்டுகிறது. 2015 இல் மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவங்களை மட்டும் கணக்கிட்டால், 358 சம்பவங்கள் நடந்திருக்கின்றன, 462 பேர் கொல்லப்படுவதும், 1330 பேர் காயப்படுவதும் நடந்திருக்கின்றன.
இந்த சம்பவங்கள் மத்திய தரச் சமுதாயங்கள் நடுவே இல்லை, ஏழை பாழைகள் நடுவேதான். இவற்றில் 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அனேகமாக இறக்கிறார்கள். இறப்பவர்களில் நான்கில் மூன்று பேர் கருப்பினத்தவர். இறந்தவர்களில் நான்கில் மூன்று பங்கினர் ஆண்கள்.
இவற்றில் பெருமளவும் கருப்பினத்தவரே கருப்பினத்தவரைக் கொல்வதாக அமைவதால் நாடோ, சுற்றுச் சமுதாயமோ இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை, எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை என்று கருப்பின மக்கள் சொல்கிறார்கள். அரை மணிக்கு ஒரு குழந்தை அமெரிக்காவில் துப்பாக்கியால் கொல்லப்படுகிறது என்று அமெரிக்க குழந்தை வைத்தியர்கள் அமைப்பு ஒன்று அறிவித்திருப்பதாக இன்னொருவர் இதே பக்கத்தில் குறிக்கிறார்.
இதுதான் உலகுக்கு நாகரீகம் என்றால் என்ன, ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாடம் நடத்த முயலும் நாடு. இந்த நாட்டு அறிவாளர்கள் பலர், தம் நாட்டில் நடக்கும் பண்பாட்டுக் கொலை, இன அழிப்பை எல்லாம் பற்றி ஏதும் கவலைப்பட்டு செய்தித்தாள்களில் பத்திகள் எழுதாமல், நம் ஊர் செய்தித்தாள்களில் இந்து ஃபாசிசம் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகிறார்கள். அதைப் படித்துப் புல்லரித்து மகிழும் அறிவு ஜீவிகளும் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கணிசம்.

http://www.nytimes.com/2016/05/23/us/americas-overlooked-gun-violence.html?hpw&rref=us&action=click&pgtype=Homepage&module=well-region&region=bottom-well&WT.nav=bottom-well
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஆடலுடன் பாடலை (மட்டும்) கேட்டு ரசி”]

Beyonce_Sweat_Shop_Wear_Dress_Sell_India

அடுத்த இரு சுட்டிகளும் வறுமையைப் பற்றியும் அவை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு களங்களில் எப்படி விதம் விதமாகப் பொருள் கொள்கின்றன, ஒவ்வொரு நாடும் வறுமையை எப்படிப் பார்க்கிறது, மக்கள் தாம் வறுமையை விட்டு வெளியேறுவதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பனவற்றைச் சொல்கின்றன.
முதல் சுட்டியான டெர் ஷ்பீய்கல் பத்திரிகை ஒரு ஜெர்மன் சஞ்சிகை. இதில் சில ஜெர்மன் பிரஜைகள், வெவ்வேறு நகரங்களில் வசிப்பவர்கள், வறுமைக்குள் வீழ்ந்தவர்களோ, அல்லது தற்காலிகமாக வறுமையில் சிக்கியிருப்பவர்களோ, அல்லது வழியில்லாமல் வறியவர்களாக இருப்பவர்களோ, ஒவ்வொருவரும் (அவர்கள் குடும்பங்களும்) எப்படி வறுமையைப் பார்க்கிறார்கள், அதை எப்படி எதிர் கொள்கிறார்கள், அந்நாட்டின் அரசு எப்படி இவர்களை நடத்துகிறது ஆகியன குறித்த வாழ்வுச் சித்திரங்களைக் கொடுக்கிறது. பக்கம் பக்கமாக எண்களால் தொகுக்கப்பட்ட ஒரு கட்டுரை நமக்குச் சொல்லி விளக்க முடியாத ஒரு விஷயத்தைச் சட்டெனச் சொல்லி விளக்க இந்த முறை பயன்படும். இதை நாட்டளவு விரித்து எடுத்துப் போய் ஜெர்மனியில் வறுமை எப்படி இருக்கிறது, அதை அந்நாடு எப்படிக் கையாள்கிறது, அது தீர்க்க முயலும் வழிமுறைகள் வேலை செய்கின்றனவா என்றெல்லாம் பெருமளவில் யோசிக்க இந்த வழிமுறை உதவாது, அதாவது அரசுக்கோ, அரசின் அதிகாரிகளுக்கோ, நாட்டின் சட்ட மன்ற/ பாராளு மன்ற உறுப்பினர்களுக்கோ முடிவுகள் எடுக்க இந்த வழி முறை உதவாது. அதற்கு எண்களின் தொகுப்பும், அவற்றைச் சொற்களில் மாற்றி முடிவுகளைச் சுருக்கிக் கொடுக்கும் ஆய்வு முறைகளும் அவசியம். ஆனால் அதே மனிதர்களை, திட்டமிடும் அரசு நிர்வாகிகள், திட்டங்களை வழி நடத்தும் களப்பணியாளர்கள், திட்டங்களுக்கு நிதியும், எதிர்காலப் பாதைகளையும் தீட்டித் தரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்/ மந்திரிகள் ஆகியோரை தனிமனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அவலங்களை, துன்பங்களை மனித அளவில் தரிசிக்க வைக்க இந்த வாழ்வுச் சித்திரங்கள் நிச்சயம் உதவும் என்று நாம் கருத முடியும்.
தற்கால ஜனநாயக அமைப்புகள் பெரும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டவை. இவற்றை உணர்ச்சிக் கொந்தளிப்பும், ஆர்ப்பாட்டமும், அலங்காரச் சொற்களும் கொண்ட அரசியல் நாடகங்களால் வழி நடத்த முடியாது, அதிகாரத்தைக் கைப்பற்ற இவை உதவலாம். ஆனால் அதிகாரத்தில் வந்து அமர்ந்த எந்த மனிதரையும், அவரிடம் நியாய உணர்வு சிறிதேனும் இருந்தால், நடைமுறைப் பிரச்சினைகளின் பூதாகார உரு அச்சுறுத்தும், ஜாக்கிரதையாகச் செயல்பட்டு, தீர்க்கமாக யோசித்து, மனிதர்களை நசுக்காத நடைமுறைகளையே பேணும்படி வற்புறுத்தும். ஜெர்மனியில் முன்னாளில் அதிகாரத்தில் இருந்த ஒரு அரசியல் கருத்தியல், ஓரளவு இடது சாரியும், சமூகத்தில் நலிந்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கத்துடன் இருந்ததுமான சமூக ஜனநாயகக் கட்சி. இருந்தும் அதே கட்சிதான் அரசுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு சில சட்ட/ விதி முறைகளை உருவாக்கி அமல்படுத்தி இருக்கிறது. இதன் உள் நோக்கம் மக்கள் நூறு சதவீதம் அரசையே நம்பி வாழ்வை அமைக்க முடியாது, தாமாகவும் நல்ல முடிவுகளை எடுப்பதன் மூலமும், நல்ல முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் தம் வாழ்வை வடிவமைத்துக் கொள்வது அவசியம், பொறுப்பு என்பது அரசுக்கும் உண்டு, தனிமனிதர்/ குடும்பங்களுக்கும் உண்டு என்ற சமரசப் பார்வையைக் கொண்டு இந்த நடைமுறைகளை அமலாக்கியிருக்கிறது. ஆனால் இத்தகைய திட்டங்களின் பருந்துப் பார்வை அணுகல் எப்படிப் பல வகை மனிதர்களைக் கருத முடியாது அவர்கள் வாழ்வைத் தொலைத்து விடுகிறது என்று மென்மையாகச் சுட்டுகிறது டெர் ஷ்பீய்கலின் இந்தக் கட்டுரை. படித்துப் பாருங்கள். தமிழகத்திலும், இந்தியாவிலும் மக்களின் வறுமைக்கு அரசுடைய கொடையே வழி என்று தொடர்ந்து வாதிடும் அரசியலே இன்னமும் ஜனநாயக அரங்கில் வென்று கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் நம் நாட்டளவு ஊழலும், சுரண்டலும் இல்லாத ஜெர்மன் அரசு கூட மக்களின் வறுமைக்கு முழுத் தீர்வு காண முடியாமல் திணறுகிறது என்பதை நாம் காண்போம். பொறுப்பு என்பது பல தரப்பினராலும் பங்கு போட்டுக் கொள்ளப்படும்போதுதான் வறுமைக்கு ஏதேனும் விடை கிட்டும் என்பதை நாம் அப்போது அறிய முடியலாம்.
இரண்டாம் சுட்டி ஒரு கருத்துக் கட்டுரைக்கு இட்டுச் செல்லும். அதுவும் பியான்ஸெ என்கிற ஒரு சூப்பர் ஸ்டார் பாடகியைப் பற்றிய கட்டுரை. இதற்கும் வறுமைக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் இருக்கிறது என்பது கட்டுரையில் புரியும். பியான்ஸே சமீபத்தில் ஒரு இசைக் காணொளியில் (விடியோவில்) சில காட்சிகளில் ஒரு வட இந்தியப் பெண்ணின் உடையில் தோன்றுகிறாராம். இந்த வகைக் காட்சிகள், பிற பண்பாடுகளில் இருந்து பல குறியீடுகளைக் கடன் வாங்கிப் பயன்படுத்துகின்றன, ஆனால் அந்தக் குறியீடுகளின் பொருளைப் பற்றிச் சிறிதும் மரியாதையோ, அக்கறையோ இன்றி அவற்றைக் கொச்சைப்படுத்துகின்றன என்பது உடனே எழும் விமர்சனம். இப்படி ஒரு சித்திரிப்பு ஒரு வகைப் பண்பாட்டு ஏகாதிபத்தியம், சுரண்டல் என்றும் விமர்சனம் எழுகிறது.
அமெரிக்கச் சூழலில் வெள்ளையினப் பாடக/ பாடகிகள், நடிக/ நடிகைகள் இப்படிக் கருப்பின மக்களை அல்லது அன்னிய நாட்டினரைச் சித்திரித்து நிறைய விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக ஆசிய ஆஃப்ரிக்க மக்களை இவர்கள் சித்திரிப்பது அனேகமாக இழிவாகவே இருக்கும் என்பதை நாம் காணலாம். இந்த விமர்சனங்களை வெள்ளையினத்துக் கலைஞர்களை நோக்கி முன்வைப்பதில் பலரும் கருப்பின விமர்சகர்கள், ஆசிய விமர்சகர்கள் இத்தியாதி. அப்படி இருக்க ஒரு கருப்பினப் பாடகி இந்தியப் பண்பாட்டை இழிவு செய்வதோ, அல்லது மரியாதை இன்றிப் பயன்படுத்துவதோ மட்டும் எப்படிப் பொறுத்துக் கொள்ளப்படலாம் என்று வெள்ளையினக் கலைஞர்கள் கேட்கிறார்கள், விமர்சகர்களும் சுட்டுகிறார்கள்.
ஆனால் இன்னொரு இடத்தில் பியான்ஸே ஒரு வகை ஆடைக்கு விளம்பர மாதிரிப் பெண்ணாக வருகிறார். அந்த ஆடைகள் பெண் விடுதலைக் கருத்துகளை விளம்பரப்படுத்துவன என்பது பியான்ஸே தரப்பு வாதம். அந்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுவதோ இலங்கை, வங்கதேசம், மேலும் இந்தியா போன்ற சில வறிய நாடுகளில். இந்நாடுகளில் இத்தகைய உயரிய விலைக்கு மேற்கு நாடுகளில் விற்கப்படும் ஆடைகளைத் தயார் செய்யும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கடுமையான உழைப்புக்கு ஆட்படுத்தப்படுவதோடு, வேலை செய்யும் நிலைகளும் மோசமாக இருக்கின்றன, ஊதியமும் அடிமாட்டு ஊதியம் என்பது நாம் தொடர்ந்து கேட்கும் விமர்சனம். அதுதான் இந்தக் கட்டுரையிலும் இருக்கும் என்று எதிர்பார்த்துப் படித்தால் கட்டுரை மாற்றுத் திசையில் போகிறது.
இந்தப் பெண்கள் (ஆடை உற்பத்தித் தொழிலில் இருப்பவர்கள் அனேகமாகப் பெண்கள்தான்) இந்தத் தொழிற்சாலைகளில் கடுமையாக உழைக்க வைக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், இங்கு பெறும் ஊதியம் அவர்கள் வேறெங்கும் பெற முடியாத அளவு உயரிய ஊதியமாகவே இருக்கிறது என்றும், அவர்களுடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த ஊதியம் நிச்சயம் பொறுக்கப் படக்கூடிய நிலைக்கு உயர்த்துகிறது என்றும் இந்தக் கட்டுரை வாதிடுகிறது.
இங்கும் இந்த வாதம் ஓரளவு சரி என்றே நமக்குப் படும். ஆனால் இத்தகைய வாழ்வுச் சித்திரக் கட்டுரைகள் நம்மை எதார்த்தத்தை வெவ்வேறு கோணங்களில் பார்த்து அறிவது அவசியம், எத்தனைக்கு எதார்த்தத்துக்கு அருகில் நாம் சென்று தரிசிக்க முடிகிறதோ அத்தனைக்கு நாம் காண விரும்பும் விடைகளில் சாத்தியப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவத்தையும், கற்பனை உலகை உடனடியாக அணுகத் துடிப்பதை அத்தனை முக்கியமாகக் கொள்ளாததையும் நாம் கடைப்பிடிப்போம் என்பது உண்மை. அதே நேரம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் ஏராளமான தகவல்களைப் பெற்று, எண்களைக் குவித்து அலசி நாட்டில் ஆடை உற்பத்தித் தொழிலாளர்களின் பொருளாதார, வாழ்க்கை நிலைகளின் அசல் நிலை என்ன என்று கண்டறிவது அவசியம். அதை நம் அரசு (இந்தியாவிலோ, தமிழ் நாட்டிலோ, இதர அண்டை நாடுகளிலோ) அத்தனை கருக்காகச் செய்வதில்லை என்பதுதான் நம் பிரச்சினை. தகவலையே ஒழுங்காகத் திரட்டத் துப்பில்லாத அரசுகள் என்ன நடைமுறைகளைக் கொணர்ந்து அமல்படுத்தி தொழிலாளர் வாழ்வை எப்படி முன்னேற்றப் போகின்றன என்பதும் நாம் கேட்க வேண்டிய கேள்வி. இதை நாம் கைவிடாது, ஊக்கமிழக்காது வருடந்தோறும் கேட்பதும், பாராளுமன்ற/ நாடாளுமன்ற அவைகளில் அரசியலாளர்களைக் கிடுக்கிப் பிடியில் மாட்ட வைக்கப் பயன்படுத்துவதும் செயலூக்கத்தைக் கேட்பதும் ஜனநாயக அமைப்பின் சிக்கல்களை மீறி நல்ல சமுதாயத்தை அடைய நமக்கிருக்கும் சில வழிகள்.

http://www.thedailybeast.com/articles/2016/05/21/how-bad-is-beyonce-s-indian-sweatshop.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”அமைதி மார்க்கத்தின் மையத்தில் எங்கும் கொலைக்களங்கள்”]

A Saudi woman looks out over Riyadh from the 99th floor of the Kingdom Tower.

இந்த அறிக்கை ஒரு ஜெர்மன் பத்திரிகையிலிருந்து கிட்டுகிறது. ஜெர்மனியோ, மேலை நாடுகளோ, அமெரிக்காவோ உலகில் எந்த மக்களையும், எந்த நாட்டையும் நோக்கிக் குற்றம் சாட்டும் விரல்களை நீட்டத் தகுதி அற்ற அன்னிய மக்களைக் கொன்ற கறை படிந்த நாடுகள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியாவில் இன்னும் ஏராளமான மூடர்கள், அதுவும் மெத்தப் படித்த மூடர்கள், இந்த நாடுகளையும், இந்த ‘அமைதி’ மார்க்கத்தையும் பயன்படுத்தி இந்து நாகரிகத்தையும், இந்து சமுதாயத்தையும் ஃபாசிஸ்ட் என்றோ, பெரும் வன்முறை நிறைந்த நாகரிகம் என்றோ குற்றம் சாட்டும் அற்பத்தனத்தை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இன்னொரு பக்கம் வைப்போம். இந்த அறிக்கையில் எத்தனை தகவல் நம்பத்தக்கது என்பதை மட்டும் பார்த்து அறிவோம். உங்கள் கையில் கிட்டிய தகவல்களை மட்டும் வைத்துப் பார்த்தாலுமே கூட உங்களுக்கு இது எவ்வளவு பயனுள்ள,நம்பகமான தகவல்களைக் கொண்டது என்பது தெரியும். அதை உங்கள் தீர்மானத்துக்கே விடுகிறோம்.

இதன் சுருக்கம்: ’அமைதி’ மார்க்கத்தின் சில பெரும் சக்திகளான நாடுகள் இப்போது உலக ‘அமைதி’ மார்க்கச் சமுதாயத்தின் மீது அதிகாரம் செலுத்துவது எந்த நாடு என்ற அதிகாரப் பறிப்பில் ஈடுபட்டு உலக மக்களையும், மார்க்கத்தின் தொண்டர்களையும், மார்க்கத்தின் விசுவாசிகளையும் வன்முறைப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்பது அறிக்கையின் சாரம்.
இந்த உந்துதலுக்குப் பின் மார்க்கத்தின் விசுவாசிகளுக்கு நன்மை புரியும் எந்த நோக்கமும் இல்லை என்பதை அவர்கள் இன்னமும் அறிந்த பாடில்லை. அதனால்தான் தமக்குச் சிறிதும் அனுபவப் பரிச்சயமே இல்லாத ஒரு பண்பாட்டின் பயனற்ற குறியீடுகளை எல்லாம் புனிதமானவை என்று இறக்குமதி செய்து அவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் வெப்பத்துக்குச் சிறிதும் உகந்ததல்லாத கருப்பு ஆடைகளை இம்மக்கள் தம் குறியீடாக இப்போது பயன்படுத்தத் துவங்கி இருப்பது ஒரு சிறு சான்று.
அதோடு நிற்காமல் சக இந்தியர்களையும், இந்தியப் பண்பாட்டுக் கூறுகளையும் துச்சமென்று ஒதுக்கி, அவற்றை எத்தனை விலக்குகிறோமோ அத்தனைக்குத் தம் மார்க்கத்தின் விசுவாசிகள் என்று அறியப்படுவோம், மையத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் நாடுகளின் அபிமானத்துக்கு உள்ளாவோம் என்ற பகல் கனவை இந்த மார்க்கத்தின் பிரச்சாரகர்கள் இந்தியாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்துக்களையும், இந்து நாகரிகத்தையும் அழித்து அரபுப் பாலைவனத்தை இந்தியாவில் கொணர்ந்தால்தான் அது முன்னேற்றம் என்று கூடக் கருதுகின்றனர் இந்தப் பிரச்சாரகர்கள்.
இவை எத்தனை பயங்கரமான பகல்கனவு என்பதைச் சிறிதும் அறியாதவர்களுக்கு ஒரு வேளை இந்த ஜெர்மன் பத்திரிகையின் தகவலறிக்கை சிறிது வெளிச்சம் கொடுக்கலாம். ஆனால் தாம் வாழ்ந்த மண், அதன் நெடும் வரலாறு ஆகியவற்றையே இழிவாகக் கருதப் பயின்றவர்களுக்கு, ஜெர்மன் பத்திரிகை உதவும் என்பது அத்தனை நம்பத்தக்கதாக இல்லைதான்.
கூலிக்கு மாரடிக்கும் பிரச்சாரகர்களின் மாய வலையை விலக்கி, சுய வெளிச்சத்துக்கு உலகெங்கும் நோக்கத் துணிபவர்களுக்காவது உதவலாம் என்பது இருக்கிறது.

http://www.spiegel.de/international/world/saudia-arabia-iran-and-the-new-middle-eastern-cold-war-a-1090725.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.