கன்றின்பின் போக்கினேன் எல்லே பாவமே!

தனது கண்ணின் கருமணியான கிருஷ்ணனை  முதன்முதலாக மாடுமேய்க்க அனுப்பின தினத்தன்று, யசோதை துயரத்தின் எல்லையில் நின்று தன்னையே நொந்து கொள்கிறாள்.
அவளுக்கென்ன தெரியும்? எவ்வளவு குறும்புகள் செய்தாலும் அவன் கேட்டதையெல்லாம் கொடுக்கத்தூண்டும் அந்தச் சுட்டிக்கண்ணனின் வடிவழகொன்றே போதாதா? எடுத்தபிறவி கடைத்தேறாதா? அவன் ஆசையாய்க்கேட்டான் என்று இப்போது அவனை மாடுமேய்க்க அனுப்பிவிட்டுக் கிடந்து தவியாய்த்தவிக்கிறாள் பாவம்!
அப்படித்தான் இன்று விடியற்காலை, பெரிய பானையில் தோய்த்த கட்டித்தயிரைக் கடைந்து கொண்டிருக்கிறாள் யசோதை. கொண்டை அவிழ்ந்து ஒருபுறம் சரிந்து கிடக்கிறது; கழுத்தாபரணங்களும், கைவளையல்களும் ‘கலின் கலின்’ என ஒரு லயத்தோடு ஒலிக்கின்றன. கள்ளக்குட்டன், அவ்விடியலிலேயே எழுந்துவந்து அவள் தோளைக்கட்டிக்கொண்டு கையில் ஒரு பெரிய பந்தளவு வெண்ணையையும் வாங்கி உண்டாயிற்று. மேலும்மேலும் வெண்ணை கேட்கும் அவனுக்கு இன்று என்னாயிற்று? சமர்த்தாக அவளருகே அமர்ந்துகொண்டு பொறுமையாகக் காத்திருக்கிறான். கடைவதை நிறுத்தாமல் அவனை நோக்கிக் கடைக்கண்ணால் புன்னகைக்கிறாள் இவள். பாசத்தில் நெஞ்சம் விம்முகிறது. கண்களில் நீர் துளிர்க்கின்றது- ‘அட! எத்தனை அழகாகக் குட்டிக் கருமேகம் போல இருக்கிறான் என் குழந்தை! எவ்வளவு விரைவாக வளர்ந்து விட்டான்,’ என்றெல்லாம் எண்ணிப் பூரிக்கிறாள்.
ஒருவழியாகக் கடைந்து முடித்து, வெண்ணையை விற்பதற்காகப் பெரிய ஒரு சட்டியில் திரட்டி வைக்கிறாள். மேலும் ஒரு பெரிய உருண்டையாக உருட்டி எடுத்து, அவனுடைய குட்டிக் கைகளில் வைக்கிறாள். ஆசையாக அவனது சுருண்ட கேசத்தை விரல்களால் அளைகிறாள். ‘கொழுகொழு’க் கன்னத்தில் முத்தமிடுகிறாள். வாரி நெஞ்சோடுசேர்த்து அணைத்துக்கொண்டு புளகாங்கிதம் அடைகிறாள்.
“அம்மா,” எனக் கொஞ்சியவாறே அவனும் ஏதோ சொல்லமுனைகிறான். “என்ன குழந்தாய்? என்ன வேண்டுமடா உனக்கு என்கண்ணே?” என்பவளிடம் தன் கோரிக்கையை வைக்கிறான் அவன். கேட்ட அவள் விக்கித்து நிற்கிறாள். அப்படி என்னகேட்டான் அவன், அந்தக் குட்டிக்கிருஷ்ணன்?
“அண்ணா பலராமன், இன்னும் மற்ற இடைச்சிறுவர்களுடன் இன்று நானும் மாடுமேய்க்கச் செல்கிறேன் அம்மா,” என்றான். கண்முன் உலகமே இருண்டுவிடுகிறது யசோதைக்கு. என்னவெல்லாமோ கூறி அவனிடம், ‘போகவேண்டாம்,’ என்று தடுக்கப்பார்க்கிறாள்.
‘மாடுமேய்க்கக் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்
    காய்ச்சின பாலு தரேன் கையில் வெண்ணெய் நெய்யும் தரேன்
    வெய்யிலிலே போகாதே கையில் வேண்ணெய் உருகுமே (மாடு மேய்க்க)’ என்று கெஞ்சுகிறாளாம்.
(எனது பாட்டியார் பாடும் ஒருபாடலின் சிலவரிகள்- இவையே நினைவில் உள்ளன.)
ஆனால் கிருஷ்ணன் அன்னையிடம் கொஞ்சிக்கெஞ்சி அண்ணன் பலராமனுடன் செல்ல எப்படியோ அனுமதிபெற்று விடுகிறான்.
யசோதையும், கட்டித்தயிர் விட்டுப் பிசைந்த தயிரன்னத்தினையும், இன்னும் அப்பம், முறுக்கு எல்லாம் கட்டிக்கொடுத்து, நூறுமுறை  புத்திமதிகூறி, தன் ஆசைமகனை மாடுமேய்க்க அனுப்பிவைக்கிறாள். ‘அவனும்தான் வளர்ந்து வருகிறான். அவன் ஆசையைக் கெடுப்பானேன், ஒருநாளில்லாவிடினும் மற்றொருநாள் மாடுமேய்க்கப் போகவேண்டியவன் தானே’ எனும் தாயுள்ளம்.
(இது தற்காலத்தில் மூன்று-நான்கு வயதுக் குழந்தைகளை பாலர்பள்ளிக்கு அனுப்பிவிட்டுப் பள்ளிக்கூடத்தின் நுழைவாயிலிலேயே தவம் கிடக்கும் அன்னையரின் மனநிலையை ஒத்தது!)
சிறுவர்களுடன் கிருஷ்ணனும் மாடுகள், கன்றுகளை ஓட்டிக்கொண்டு காட்டிற்கு அவற்றை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றாகி விட்டது. மோர், தயிர், வெண்ணை எல்லாம் விற்கவும் ஆட்களிடம் கொடுத்து அனுப்பியாயிற்று. எஞ்சியபாலைக் காய்ச்சித்தோய்த்தும் வைத்தாயிற்று. இப்போது சிறிது ஓய்வாக அமர நேரம் கிடைக்கிறது யசோதைக்கு. நினைப்பெல்லாம் கண்ணன்பேரில்தான். ‘அவன் என்ன செய்கிறானோ?’ என எண்ணிப்பார்க்கிறாள்.
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த* வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள்.
(*கம்சனை அழித்த செயல் ஆய்ப்பாடியினின்று கண்ணன் சென்றபிறகே நிகழ்ந்தது. யசோதைக்கு இப்போது இதனைப்பற்றித் தெரிந்திருக்க வழியில்லை. பெரியாழ்வாரின் ஆர்வத்தில் எழுந்த பாடல்கள் இவை; அவ்வாறே படித்துப் பொருள்கொள்ள வேண்டும்).
அஞ்சன வண்ணனை ஆயர்குலக் கொழுந்தினை
    மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே,
    கஞ்சனைக் காய்ந்த கழலடிநோவக் கன்றின்பின்
    என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே!

(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 2)

“இப்போது என்ன செய்கிறானோ என்குழந்தை! மாடுகன்றுகளை விரட்டிக்கொண்டு சாப்பிடவும் மறந்து பசியுடன் அலைவானோ? யார் அவனுக்கு சாப்பிட நினைவு படுத்துவார்கள்? அண்ணன் பலராமன் செய்தால் உண்டு.  ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்களுடன் தானும் சென்று அவர்கள் அரைத்துவைத்த பற்றும் மஞ்சளைத் தன் உடலிலும் பூசிக்கொண்டு திரிவானே! ஆற்றங்கரை மணலில் ஆய்ச்சிறுமியர்கள் கட்டிய சிற்றிலை அழித்து விட்டுக் கைகொட்டி நகைப்பானே! அந்தச் சிறுவனை கொலைவேடர்கள் திரியும் காட்டிற்கு கன்றுகளை மேய்க்க அனுப்பி வைத்தேனே! என்ன பாவம் செய்தேனோ.
“அழகழகான நகைகளை அணிந்து விளங்கும் அயல்வீட்டுச் செங்கமலம், வசந்தி ஆகிய அவனுடைய தோழிகளுடன் என் நீலநிறக் கண்ணன் விளையாடுவானே! மேனி புழுதிபட விளையாடமுடியாதபடி அவனைக் காட்டுவழியினில் அனுப்பியிருக்கிறேனே! அங்கு மலைகளிலிருந்து கேட்கும் பெருத்த எதிரொலிகள் சிறுவர்களை அச்சமுறுத்துபவை அல்லவோ? மாடுமேய்க்கக் கண்ணனை இவ்வாறு அனுப்பியது நான் செய்த தீவினையாலன்றி வேறு எதனால்?” எனத் தன்னையே நொந்துகொள்கிறாள் யசோதை.

Krishna_Kannan_Cows_Calf_Bulls_Milk

நன்மணி மேகலை நங்கைமாரொடு பாடியில்
    பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே
    கல்மணி நின்று அதிர்கான்- அதரிடைக் கன்றின்பின்
    என்மணி வண்ணனைப் போக்கினேன்; எல்லே பாவமே!

(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 2)

“பன்னிருமாதம் கிருஷ்ணனை வயிற்றில் சுமந்து பெற்றதாய்** நானல்லவோ? இளஞ்சிங்கம் போன்ற அவன் அதிகாலையில் என்னை மயக்கிக் கெஞ்சினான் என்பதற்காக அவனை கால்கள் நோகும்படிக் கன்றுகளை மேய்க்க அனுப்பிவிட்டேனே! எல்லே பாவமே!
“காட்டில் செல்லும் வழியெல்லாம் பூமி வெப்பமாக இருக்குமே! கூரான கற்கள் அவனுடைய பிஞ்சுப்பாதங்களை உறுத்துமே! அவன் சின்னஞ்சிறு திருவடிகள் நோகுமே! நான் என்ன தாய்? அவனுக்கு நிழலுக்குக் குடையையும் காலுக்குச் செருப்பையும் கொடுத்தனுப்பாமல் கொடியவளாகி விட்டேனே! என் சிறுமகனைக் கன்றின்பின் அனுப்பிவைத்தது பாவமே,” எனவும் எண்ணி உருகுகிறாள்.
(** இது என்ன குழப்பம், தேவகி அல்லவோ அவனை வயிற்றில் சுமந்தவள்? இவள் வளர்த்தவளல்லவோ என நாம் எண்ணலாம். இதுவும் பக்தி வெளிப்பாட்டில் பாசமிகுதியில் அடியார் திருவாய்மொழியாகப் பிறந்த பாடலானதால், அப்படியே எடுத்துக் கொள்வது தான் பொருத்தம் என்பது அடியேன் கருத்து!)
குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
    உடையும் கடியன ஊன்றுவெம் பரற்கள்உடைக்
    கடியவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
    கொடியேன் என்பிள் ளையைப் போக்கினேன்: எல்லே பாவமே!

(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 2)

~oOo~

cowherd

தாயான யசோதை  இவ்வாறு தனக்குள் புலம்ப, தனயன் காட்டிலும் சென்று தன் தெய்வத் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறான்!
மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி இயற்றியுள்ள நாராயணீயத்தில் ஒரு அழகான தசகம் இது- 52-வது:
படைப்புக் கடவுளான பிரம்மா ஒருமுறை விஷ்ணுவின் வலிமையைப் பரீட்சை செய்ய முயன்றார். கிருஷ்ணாவதாரத்தின்போது, மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தபோது அவற்றின் கன்றுக்குட்டிகளை ஒளித்துவைத்து விட்டார். பதறிப்போய் இடைச்சிறார்கள் பாதி உண்ட உணவைக் கையில் வைத்துக்கொண்டு கவலையோடு கன்றுகளை இங்குமங்குமாகத் தேடியலைகின்றனர். கிருஷ்ணனும் அவர்களுடன் தேடுவதாகப் பாவனை பண்ணிக்கொண்டு காணாமல் போய்விடுகிறான். இதுதான் தருணமென பிரம்மா, அந்த இடைச்சிறுவர்களையும் மறைத்துவைத்து விடுகிறார். எல்லாம் அறிந்த பரம்பொருளான கிருஷ்ணனுக்கு இதுமட்டும் தெரியாதா என்ன?
கிருஷ்ணன் தனது மாயையால் காணாமல்போன கன்றுகளாகவும் இடையர்களாகவும் மாறிப் பலவடிவங்களெடுத்துக்கொண்டு அவர்களுடைய ஊதுகொம்புகள், புல்லாங்குழல், கவண்கல் முதலியனவற்றுடன் தானே அத்தனை பேர்களாகக் கோகுலத்திற்குத் திரும்புகிறான். இந்தக் கன்றுகளும் இடைச்சிறுவர்களும் வீடு திரும்பியதும் தங்கள் தாய்மார்களான பசுக்களாலும் கோபிகைகளாலும் எப்போதையும்விட மிகுந்த அன்போடு வரவேற்றுப் போஷிக்கப்படுகின்றனர். ‘கிருஷ்ணனே தங்களுடைய குழந்தைகளாக இருக்கிறான்’ என்று மட்டும் அவர்கள் உணர்ந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்கிறார் பட்டத்ரி.
ஜீவம் ஹி கஞ்சிதபிமான வசாத்ஸ்வகீயம்
    மத்வா தநூஜ இதிராகபரம் வஹந்த்ய:
    ஆத்மாநமேவ து பவந்தமவாப்ய ஸூநும்
    ப்ரீதிம் யயூர்நகியதீம் வனிதாச்ச காவ:

        (நாராயணீயம்- தசகம் 52.5)

ஓராண்டின் முடிவில் பிரம்மாவாலேயே தான் ஒளித்துவைத்த இடைச்சிறுவர்களுக்கும், கிருஷ்ணனே அவர்களாக மாறிக் காட்சியளித்த சிறுவர்களுக்குமிடையே ஆன வித்தியாசத்தினைக் காண இயலவில்லை. எண்ணற்ற நாராயணர்களைக் கண்ணுற்ற பிரம்மாவிற்குத் தன்னையே அடையாளம் கண்டுகொள்ள இயலாத குழப்பம் உண்டாயிற்று. இவை அனைத்தும் கிருஷ்ணனின் மாயையினாலேயே நிகழ்ந்தது. அப்போது பிரம்மாவிற்குத் தனது சிறுவனாகிய வடிவினைக் காட்டியருளினான் கிருஷ்ணன்.
இவ்வாறு படைப்புக்கடவுளான பிரம்மாவின் கர்வத்தை அழித்தான் கிருஷ்ணன். பின் இடைச்சிறுவர்களை மீட்டு அழைத்துக்கொண்டு கோகுலம் சென்றான் என்கிறார்.
இக்கதையைத்தான் 52ம் தசகம் அழகுறக் கூறுகிறது.
ஆக, வ்ரஜபூமி எனும் கோகுலத்தில் கிருஷ்ணன் நடத்திய லீலைகள் மிகப்பலவாம். ஒவ்வொன்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு அதிசயமான கதைதான்.

~oOo~

மாலைப்பொழுதாகி விட்டது; கன்றுகாலிகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற இடையர்கள் வீடு திரும்பலாயினர். கிருஷ்ணனும் அவர்களுடன் உற்சாகமாக வருகிறான். இந்த ஒருநாட்பொழுதிற்குள் மற்ற இடையர்களிடமிருந்து என்னவெல்லாமோ கற்றுக்கொண்டுவிட்டான் அவன். யசோதைக்கு அவனைப் பார்த்துப் பார்த்துப் பெருமிதம் பொங்குகிறது. ஒருகாதில் சீலையைச் சுருட்டி அடைத்த தக்கை, இன்னொன்றிலே செங்காந்தள்மலர், அதுவும் ஒரு அழகாக உள்ளது. அவன் அணிந்துள்ள ஆடை, புழுதி படிந்திருப்பினும் அவனுக்கு வெகு அழகாகப் பொருந்துகிறது. அதையும் மாடுமேய்க்க வாகாக வாரி எடுத்து கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறான். கழுத்தில் முத்துமாலை அழகாகப்புரள்கிறது. பார்க்கக் கண்நிறைந்த பரமானந்தக் காட்சி! கன்றுகளின் பின்னால் அவைகளை வழிநடத்திக்கொண்டு வெகு கம்பீரமாக பெரிய மனிதனைப்போல் நடந்து வருகிறான் யசோதையின் பிள்ளை; ஆயர் குலக்கொழுந்து! “பெண்களே! இந்தக் காட்சியைப் பாருங்கள். என்னைப்போல இத்தகைய ஒரு மகனைப் பெற்றவள் இந்த உலகத்தில் வேறு யாருமே கிடையாது தெரியுமா?” எனப் பூரிக்கிறாள் அவள்.
சீலைக் குதம்பை ஒருகாது, ஒருகாது
        செந்நிறமேல் தோன்றிப்பூ;
    கோலப் பணைக்கச்சும் கூறை உடையும்
        குளிர்முத்தின் கோடாலமும்
    காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
        வேடத்தை வந்து காணீர்!
    ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார், நங்கைமீர்!
        நானே மற்று ஆரும் இல்லை.

(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 3)

“இந்தக்குட்டனை விளையாட அனுப்பாமல், மாடுமேய்ப்பதே வாழ்க்கை என அனுப்பி வைத்தேனே! என் மகனே, எனக்கோர் முத்தம் தா!”
மாடுமேய்க்கச் சென்ற முதல்தினமல்லவா? அவை இங்குமங்கும் சென்றுவிடாமல் மடக்கி மடக்கி ஓட்டி மேய்த்தமையால், எழுந்த புழுதி உடலெங்கும் படிந்திருக்கிறது. அவன் நீராட வேண்டும்; உணவு உட்கொள்ள வேண்டும். “கிருஷ்ணா, நீ நீராடத் தேவையான எல்லாவற்றையும் வைத்திருக்கிறேன். நீராடி விட்டு விரைவில் வா அப்பா! உன்னோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று உன் தகப்பனாரும் இதுவரை உண்ணவில்லை, காத்திருக்கிறார். விரைவில் வா,” என வேண்டுகிறாள். அன்பான தகப்பன் நந்தகோபன்; மகனைப்பற்றிய பெருமையும் பூரிப்பும் அவனுக்கும் உரிமையுடையது தானே!
‘நீராட்டு அமைத்து வைத்தேன்;
    ஆழ அமுதுசெய், அப்பனும் உண்டிலன்;
        உன்னோடு உடனே உண்பான்.

(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 3)

அன்னையரின் உள்ளத்துப் பாசப்பொழிவுகள், எண்ண ஓட்டங்கள் முதலானவை எல்லாக்காலங்களிலும் ஒன்றுபோலவேதான் இருந்தன என்பதற்குப் பெரியாழ்வாரின் பாசுரங்களே சான்று! தன்பிள்ளை முதன்முதலில் வெளியே செல்லும்போது பயன்படுத்த அழகழகான நீர்ப்புட்டிகளும், சுடச்சுட உணவு எடுத்துச் செல்ல வகைவகையான பாத்திரங்களும் வாங்கி வைப்பதில் அவர்களுக்கு இணை அவர்களே! இந்த யசோதை என்ன செய்திருக்கிறாள் தெரியுமா? அழகான குடை, அவன் காலுக்குச்செருப்பு முதலியனவற்றை கிருஷ்ணன் விரும்பிய வகையிலேயே வாங்கி வைத்திருக்கிறாள். போதாக்குறைக்கு ஒரு நல்ல புல்லாங்குழலையும் கூட அவனுக்காக வாங்கி வைத்திருக்கிறாள். மாடுமேய்க்கும்போது மரத்தடியில் இளைப்பாறுவானே! அப்போது வாசிக்கலாமே! “இவற்றையெல்லாம் எடுத்துச் செல்ல மறந்து விட்டாயே கண்ணா! உன் கால்கள் நடந்து நடந்து சிவந்து விட்டன: கண்களும் சிவந்திருக்கின்றனவே! உடம்புகூட இளைத்துவிட்டது பார்!” என்றாள்.
ஒருநாளில் உடம்பு எவ்வாறு இளைக்கும்? இது தாயின் கண்ணிற்கு மட்டுமே புலப்படும் சூட்சுமத்தை யாரறிவார்?! தாய்மார்களே மட்டும் அறிவார்கள்!
…………. நீ உகக்கும்
    குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
        கொள்ளாதே போனாய், மாலே! என்கிறாள்.
“உன்னுடைய மேலாடை, மற்றும் விளையாட்டு வாள் முதலியவற்றையும் கட்டில்மேலேயே வைத்து மறந்துவிட்டுச் சென்றுவிட்டயடா என் சின்னக்கண்ணா!” எனக் கொஞ்சுகிறாள்.
பின்னொருநாள் அவன் மாடுமேய்க்கக் காட்டிற்குச் சென்றபோது கன்றுகள் வடிவில் மறைந்திருந்த அசுரர்களைக் கைகளால் தூக்கி விளாமரத்தின் மீது விட்டெறிந்ததனைக் கேள்விப்படுகிறாள். “பார்த்தாயா கிருஷ்ணா, உனக்குத் தீமை செய்ய வருபவர்கள் இப்படித்தான் அழிந்து போவார்கள்,” என்று தாயுள்ளத்தின் நிச்சயத்துடன் கூறிக்கொள்கிறாள்.
தினம் அவன் தொடர்பான ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மற்ற இடைப்பிள்ளைகளின் வாயிலாகக் கேள்விப்படுபவளின் உள்ளம் அச்சத்திலும் பெருமிதத்திலும் மாறிமாறி மயங்குகிறது. அவனிடம் சொல்கிறாள்: “கண்ணா! இன்றிலிருந்து ஏழாவது நாள் உனது பிறந்தநாள். ஆகையால் அந்த நாளில் விழா கொண்டாடி, திருமுளைச்சாத்து செய்யவும், திருப்பல்லாண்டுபாடவும், இனிய இசைபோலப் பேசும் பெண்களை அழைத்துள்ளேன். அரிசிச்சோற்றையும் கறியமுதையும் கலத்திலிட்டு சமைத்து வைப்பேன். நீ நாளையிலிருந்து கன்றின்பின்னால் அவற்றை மேய்க்கச் செல்லவேண்டாம். அழகாக அலங்காரம் செய்துகொண்டு என்பக்கத்திலேயே இருந்துகொள்.”
குஞ்சைத் தன் சிறகிற்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க எண்ணும் மனிதத் தாய்ப்பறவையின் மனவோட்டங்கள் இவை! அடிக்கடி நம்வீடுகளில் நிகழ்ந்த, நிகழும் நடப்புகள் தாம்!!
திண்ணார் வெண்சங்கு உடையாய்! திருநாள்திரு
        வோணம் இன்று ஏழுநாள்; முன்,
    பண்நேர் மொழியாரைக் கூவி முளைஅட்டிப்
        பல்லாண்டு கூறுவித்தேன்;
    கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து
        அரிசியும் ஆக்கி வைத்தேன்;
    கண்ணா!நீ நாளை தொட்டுக் கன்றின்பின் போகேல்
        கோலம் செய்து இங்கேஇரு.

(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து- 3)

மாடுமேய்த்துவரும் கண்ணனின் அழகை மானசீகமாகக் கண்டு களிக்கிறார் மற்றோர் அடியாரான லீலாசுகர்.
“மாடுகன்றுகளின் பின் ஓடியதால் கிருஷ்ணனுடைய பாதங்கள் ஈரச்சாணத்தினால் பூசப்பட்டுள்ளன. இவை எத்தகைய திருவடிகள்? வேதங்கள் அனைத்தின் சிகரத்திலும் வைத்து கொண்டாடப்படும் பரமபுருஷனாகிய கிருஷ்ணனின் திருவடித்தாமரைகள்; அவற்றை நான் பெரிதும் கொண்டாடிப் போற்றுகிறேன்,” என்கிறார்.
நிகிலாகம-மௌலி-லாலிதம்
        பதகமலம் பரமஸ்ய தேஜஸ:
    வ்ரஜபுவி பஹுமன்மஹேதராம்
        ஸரஸகரீஷ -விசேஷ-ரூஷிதம்

(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-3.10)

மற்றும் இன்னொரு ஸ்லோகத்தில் யமுனைக்கரையில் மாடுமேய்க்கின்ற கிருஷ்ணன் பகலுணவு அருந்துவதைப் பரவசத்துடன் வர்ணிக்கிறார்:
யமுனையாற்றின் ஒரு மணல்திட்டு (காளிந்தீ புலினே); தமாலமரத்தின் நெருங்கிய இலைகள் தரும் அடர்த்தியான நிழல்; அதன் முன்புறம் நீரோடிக்கொண்டிருக்கிறது; அங்கு கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறான். அவன்முன்பு தாமரையிலையே (தோயஜ-பத்ர) உணவுண்ணும் தாலமாக விரித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் தயிர்சாதம் (தத்யன்னம்) வைக்கப்பட்டுள்ளது; அதனை அவன் உண்கின்றான். அவனுடைய இடதுகையில் இனியநாதத்தை எழுப்பும் புல்லாங்குழலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இடுப்பில் கொம்பு (விஷாணம்) எனும் ஊதப்படும் வாத்தியத்தைச் சொருகிக்கொண்டிருக்கிறான். கண்கள் இடையிடயே கவனமாகப் பசுக்கூட்டங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. “அப்படிப்பட்ட கிருஷ்ணனை நான் தியானம் செய்கிறேன்,” என்கிறார் பில்வமங்களர் எனப்படும் லீலாசுகர்.
காளிந்தீபுலினே தமால-
        நிபிடச்சாயே புர:ஸஞ்சரத்
    தோயே தோயஜபத்ரபாத்ர-
        நிஹிதம் தத்யன்ன-மச்னாதி ய:
    வாமே பாணிதலே நிதாய
        மதுரம் வேணும் விஷாணம் கடி-
    ப்ராந்தே காச்ச விலோகயன்
        ப்ரதிகலம் தம் பால-மாலோகயே.

(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-3.82)

இந்தப் பாசுரங்களின், ஸ்லோகங்களின் அழகு என்னவென்றால், இவை நம்கண்முன்பு அந்தக் கிருஷ்ணனை, அவன் செய்யும் நானாவிதச் செய்கைகளுடன் அப்படியே காண்டுவந்து நிறுத்திவிடுகின்றன. நாம் அவனிலும், அவன் செயல்களிலும் ஆழ்ந்து, நம்மை, நமது இடம்,பொருள், ஏவல் அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அவனுடன் ஒன்றி கோகுலத்திற்கோ, யமுனைக்கரைக்கோ, சென்றுவிடுகிறோம். எத்தகைய பேரானந்தம் இது! இது போதாதா கிருஷ்ணானுபவத்திற்கு?
இதனால்தான் பாரதியார் அந்தக் கிருஷ்ணனை, கண்ணனை, குழந்தையாக மட்டுமின்றி, காதலனாக, காதலியாக, நண்பனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, ஆண்டானாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குலதெய்வமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். கிருஷ்ணனோடு வாழ்ந்திருக்கிறார். அந்த அனுபவங்களையே பாடல்களாகப் பதிவு செய்திருக்கிறார்.
என்னிரு கண்ணைமறந்துன்னிரு கண்களையே
        என்னகத்தில் இசைத்துக்கொண்டு
    நின்கண்ணால் புவியெல்லாம் நீ எனவே நான்
        கண்டு நிறைவுகொண்டு…’ எனும் அவருடைய பாடல்வரிகள், தான் கண்ணனிலே கலந்துவிட்ட அனுபவத்தைப்  பாங்குற விளக்குகின்றதல்லவா?
கிருஷ்ணாவதாரம் எல்லோராலும் மிகவும் அனுபவித்து, உணரப்படும் உன்னதமான அவதாரம் எனக்கூற இடமுள்ளது.
 

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

 
 
_

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.