கடவுளின் தொள்ளாயிரம் கோடி நாமங்கள்

Nine_Billion_Names_Of_God

“இது கொஞ்சம் வித்தியாசமான கோரிக்கையா இருக்கே” என்றார் டாக்டர் வாக்னர். ஏதோ பாராட்டும்படியான தன்னடக்கத்துடன் பேசிவிட்ட நம்பிக்கையில் அவர் மேலும் தொடர்ந்தார். “எனக்குத் தெரிஞ்சவரையில் தன்னியக்க வரிசைக் கணினிய ஒரு டிபெட்டிய துறவிமடத்துக்கு அனுப்பும்படி உலகத்துலேயே முதல் முறையா இப்பதான் கேட்கப்பட்டிருக்கு. மூக்க நுழைக்கிறேன்னு நெனச்சுக்காதீங்க, ஆனா உங்க மாதிரி – என்ன சொல்றது, ஆ – நிறுவனத்துக்கு இந்த மாதிரி இயந்திரம்லாம் தேவைப்படும்னு நான் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டேன். நீங்க இத வெச்சு என்ன செய்யப் போறீங்கங்கறத கொஞ்சம் விளக்க முடியுமா?”
“ஓ! தாராளமா” நாணய மாற்றத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருந்த நழுவுச்சட்டத்தை லாமா கவனமாக தள்ளி வைத்தார். தன் பட்டு அங்கிகளை சரிப்படுத்திக் கொண்டே “உங்க மார்க் ஃபைவ் கணினியால எந்த சராசரி கணித செயலியையும் பத்து இலக்கம் வரையிலும் செய்து முடிக்க முடியும். ஆனா எங்க காரியத்த செய்யறதுக்கு எங்களுக்கு எண்கள் இல்ல எழுத்துக்கள் தான் எல்லாம். நாங்க சொல்ற மாதிரி நீங்க வெளியீட்டு மின்சுற்றுக்களை மாத்திக் கொடுத்தீங்கனா இயந்திரம் எண்களாலான நிரல்களுக்கு பதிலாக வார்த்தைகள அச்சடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று பதிலளித்தார்.
“எனக்கு இன்னும் சரியா புரியல…”
“இந்த திட்டத்த மடம் நிறுவப்பட்ட தினத்திலிருந்தே கடந்த மூன்று நூற்றாண்டுகளாக அமுல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு வழியில இது உங்க சிந்தனை மரபிற்கு அன்னியமானதுதான், இருந்தாலும் நீங்க திறந்த மனதோடு என் விளக்கங்களை கேட்பீங்கன்னு நான் நம்பறேன்.”
“கண்டிப்பா”
“உண்மையில் இது மிகவும் எளிதான ஒன்றுதான். கடவுளுக்கு சாத்தியமான எல்லா பெயர்களையும் கொண்ட ஒரு பட்டியல நாங்க தொகுத்துக்கிட்டிருக்கோம்”
“என்னது..?.”
“நாங்கள் உருவமைத்துள்ள அகரவரிசையின் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டே அம்மாதிரியான பெயர்கள் அனைத்தையும் எழுதிவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.” லாமா அமைவுறுதியுடன் தொடர்ந்தார்.
“ நீங்க இத தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளா செஞ்சிக்கிட்டு இருக்கீங்களா? “
“ஆமாம்: இந்த காரியத்த முடிக்கிறதுக்கு கிட்டத்தட்ட பதினஞ்சாயிரம் வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.”
“ஓ!” டாக்டர் வாக்னர் ஒருவிதமான குழப்பத்திலிருந்தார். “இப்ப புரியுது, நீங்க ஏன் எங்க இயந்திரத்த வாடகைக்கு எடுக்கறீங்கன்னு. ஆனா இந்த பிராஜெக்டோட இறுதி நோக்கம் என்னனு சொல்லமுடியுமா?”
லாமா ஒரு கணம் பதில் சொல்ல தாமதித்ததால் அவரை புண்படுத்திவிட்டோமா என்று வாக்னர் நினைத்துக் கொண்டார். அப்படியே செய்திருந்தாலும் லாமாவின் பதிலில் ஒரு துளி எரிச்சல்கூட தென்படவில்லை.
“ இதை நீங்க சடங்கு என்று அழைக்கலாம் ஆனால் எங்க கோட்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் இதுவும் ஒன்று. பரம்பொருளின் அனைத்து பெயர்களுமே – கடவுள், யெஹோவா, அல்லா, இதைப்போன்ற பல்வேறு பெயர்களுமே – மனிதனால் உருவாக்கப்பட்ட முத்திரைகளே. இங்க கொஞ்சம் கடினமான ஒரு தத்துவப் பிரச்சனையும் இருக்கு, ஆனா அதப்பத்தி நான் இப்போ விவாதிக்க போறதில்ல. எழுத்துக்களின் சகலவிதமான் புணர்ச்சிகளின் கூட்டுத் தொகைக்குள்ள நாம கடவுளோட உண்மையான  நிஜப் பெயர்கள் என்று அழைக்கக் கூடியவையும் அடங்கியிருக்கும். எழுத்துக்களின் திட்டமிட்ட வரிசை மாற்றத்தைக் கொண்டு நாங்க எல்லா பெயர்களையும் பட்டியலிட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
“ஆஹா. அப்படீன்னா அஅஅஅஅஅஅ… –வுல தொடங்கி ஃஃஃஃஃஃஃ–வரைக்கும் போக முயற்சி செய்யறீங்க”
“மிகச்சரி–  ஆனா நாங்களே உருவாக்கியுள்ள ஒரு பிரத்தியேக அகரவரிசைய இதுக்கு பயன்படுத்தறோம். இத செய்யறதுக்காக எலெக்ட்ரோமாடிக் தட்டச்சுப்பொறிகள மாத்தி அமைக்கிறது சாதாரண விசயம்தான். ஆனா எழுத்துக்களின் அபத்தமான சேர்க்கைகளை தவிர்க்கறதுக்காக பொருத்தமான மின்சுற்றுகளை வடிவமைக்கறது ஒரு சுவாரசியமான புதிர்தான். உதாரணத்துக்கு, மூன்று முறைக்கு மேல எந்தவொரு எழுத்தும் தொடர்ச்சியா வரக்கூடாது என்பது போன்ற தடைகள்…”
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issue“மூன்றா? நிச்சயமா நீங்க சொல்ல வந்தது இரண்டுன்னு நெனைக்கிறேன்.”
“இல்ல மூன்றுதான் சரி: அதெல்லாம் ஏன்னு விளக்கறதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும், எங்க மொழிய நீங்க புரிஞ்சுக்கிட்டாலும்கூட.
“கண்டிப்பா எடுக்கும்,” வாக்னர் அவசரமாக இடைமறித்தார். “ ஸாரி, நீங்க சொல்லிக்கிட்டிருந்தீங்க…”
“அதிர்ஷ்டவசமா உங்க தன்னியக்க வரிசைக் கணினிய இதற்காக மாத்தி அமைக்கிறது சுலபமான காரியம்தான். ஏன்னா, ஒரு முறை சரியாக நிரல்படுத்திவிட்டால் போதும், ஒவ்வொரு எழுத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைமாற்றம் செய்து முடிவை அச்சடித்து விடும். நாங்க பதினஞ்சாயிரம் ஆண்டுகளில் செய்து முடித்திருக்கக் கூடிய காரியத்த அது நூறே நாள்ல செஞ்சு முடிச்சிடும்,”
கீழே மிகத் தொலைவிலிருந்து ஒலிக்கும் சப்தங்களை டாக்டர் வாக்னர் மிக அருகலாகத்தான் உணர்ந்தார். அவர் இப்போது வேறொரு உலகத்தில் இருந்தார். மனிதனால் உருவாக்கப்படாது இயல்பாகவே உயரும் மலைகளாலான ஒரு உலகத்தில்….அங்கே உயரத்தில் அவர்களின் சேய்மையான மலைமுகட்டு அரண்களில் இந்தத துறவிகள் தலைமுறை தலைமுறையாக தங்கள் அர்த்தமற்ற வார்த்தைகளை பட்டியல்களாக பொறுமையடன்  தொகுத்திருக்கிறார்கள். மனிதகுலத்தின் மடமைக்கு அளவேதும் இருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும், அவர் இம்மாதிரியான அந்தரங்கமான சிந்தனைகளை துளிகூட வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது. எப்போதுமே வாடிக்கையாளர்கள் சொல்வதுதான் சரி…
“மார்க் ஃபைவ மாத்தி அமைச்சு இந்த மாதிரியொரு பட்டியல எங்களால் அச்சடித்துத் தர முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் பொருத்திப் பராமரிப்பதிலிருக்கும் சிடுக்குகள் பற்றித் தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. இந்த சமயத்தில் டிபெட்டிற்கு போய்வருவதென்பது சுலபமான காரியமாக இருக்காது.”
“எங்களால் அதை ஏற்பாடு செய்துதர முடியும். இயந்திரத்தின் பாகங்கள் சிறிதாக இருப்பதால் அதை விமானம் மூலமாகவே அனுப்ப முடியும். உங்க எந்திரத்த நாங்க  தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். நீங்க இந்தியா வரையில் கொண்டு சேர்த்திட்டீங்கன்னா, அங்கிருந்து நாங்க தகுந்த போக்குவரத்து ஏற்பாடு செய்து தருவோம்.”
“எங்க பொறியாளர் இரண்டு பேர்கூட உங்களுக்குத் தேவை, இல்லயா?”
“ஆமாம். இந்த பிராஜெக்ட் முடியும் வரையிலும் தேவை, மூன்று மாதங்களுக்கு.”
“கவலை வேண்டாம், எங்க மனிதவள அலுவலர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள்.” டாக்டர் வாக்னர் மேசையிலிருந்த தனது ஒட்டுத்தாளில் எதையோ கிறுக்கிக் கொண்டார். “அப்பறம், இரண்டே இரண்டு விசயம் – “
அவர் பேசி முடிப்பதற்குள் லாமா ஒரு துண்டு சீட்டை வெளியில் எடுத்தார்.
“இது ஏசியாடிக் வங்கியில் என் கணக்கிலிருக்கும் இருப்பிற்கான அத்தாட்சி.”
“ நன்றி. இப்போதைக்கு இது போதுமென்று தோன்றுகிறது. நான் சொல்ல வந்த இரண்டாவது விசயம் மிகச் சாதாரண ஒன்று, சொல்லப்போனால் அதைக் கேட்பதற்கே தயக்கமாக இருக்கிறது – ஆனால் மிகவும் கண்கூடான விசயங்களைத் தான் நாம் அதிக அளவில் கவனிக்கத் தவறுகிறோம். உங்களிடம் எந்த விதமான மின் ஆற்றல் இருக்கிறது?”
“நூற்றிப்பத்து வோல்டுகளில் ஐம்பது கிலோவாட்கள் அளிக்கக்கூடிய ஒரு டீசல் மின்யியற்றி இருக்கிறது. அதைப் பொருத்தி ஐந்து வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்னமும் நம்பத்தக்க வகையில்தான் வேலை செய்கிறது. துறவிமட வாழ்க்கையை அது மிகவும் சௌகரியப் படுத்தியிருக்கிறது. ஆனால் உண்மையில் ஜபச்சக்கரங்களை இயக்கும் மோட்டார்களுக்குத் தேவையான மின்சக்தியை அளிப்பதற்காகத்தான் அது பொருத்தப்பட்டது.”
“ஆமாமாம்,” டாக்டர் வாக்னர் எதிரொலித்தார். “நான் அதை முன்னமே நினைத்திருக்க வேண்டும்.”
 
 
மதில் சுவற்றிலிருந்து விரிந்த காட்சி கிறக்கியது. ஆனால் காலம் எல்லாவற்றையுமே பழக்கப்படுத்தி விடுகிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, பாதாளம் வரை பாயும் அந்த இருபதாயிர அடி வீழ்ச்சியாலோ, கீழே பள்ளத்தாக்கில் ஆட்டப்பலகையை போல் தோற்றமளிக்கும் தொலைதூர விளைநிலப்பரப்புகளாளோ ஜார்ஜ் ஹென்ரியை கவரமுடியவில்லை. காற்றால் வழவழப்பாக்கப்பட்ட கற்களின் மீது ஊன்றியபடி தூரத்தில் தெரிந்த மலைகளையே அவன் சிடுசிடுப்புடன் உற்று நோக்கியிருந்தான். அவற்றின் பெயர்களை அறிந்து கொள்வதற்குக் கூட அவன் முயர்சி செய்ததில்லை.
அதுவரையிலும் அவன் வாழ்நாளில் நிகழ்ந்தவற்றில் இதுவே மிகவும் கிறுக்குத்தனமானதாக இருக்கும் என்று ஜார்ஜ் எண்ணிக் கொண்டான். அமெரிக்காவில், தனது சோதனைக்கூடத்தில் எவனோ ஒரு அறிவுக்கொழுந்து இதற்கு “பிராஜெக்ட் ஷாங்கிரிலா” என்று பெயர் சூட்டியிருக்கிறான். கடந்த பல வாரங்களாக மார்க் ஃபைவ் பொருளற்ற வார்த்தைகளால் நிரம்பிய தாள்களைக் ஏக்கர் கணக்கில் கொட்டித் தீர்த்திருக்கிறது. கணினி அசாத்திய பொறுமையுடன், விதியால் சபிக்கப்பட்டது போல் இடையறாது அகரவரிசையை அதன் சகலவிதமான வரிசைமாற்றங்களிலும், ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு வகையையும் ஆராய்ந்து வரிசைப்படுத்தியது. அச்சிடப்பட்ட தாள்கள் எலெக்டிரோமாடிக் தட்டச்சுப்பொறிகளிலிருந்து வெளியேறுகையில், துறவிகள் அவற்றை கவனமாகக் கத்தரித்து மிகப்பெரிய புத்தகங்களில் ஒட்டி வைத்தார்கள்.
கடவுள் புண்ணியத்தில் இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் முடித்து விடுவார்கள். எந்த வினாபூதக் கணக்கின் பேரில் அவர்கள் ஒன்பது எழுத்துக்களோடு நிறுத்திக் கொண்டு, பத்து, அல்லது இருபது, ஏன் நூறு எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் வரையிலும் செல்லவில்லை என்பது ஜார்ஜிற்கு புலப்படவில்லை. திட்டம் மாற்றப்பட்டு லாமா தீடீரென்று பிராஜெக்டை கி.பி 2060 வரையிலும் நீடித்துவிடும் கொடுங்கனவு மட்டும் மீண்டும் மீண்டும் அவனை வாட்டியது. அவர்களும் அப்படிச் செய்யக்கூடியவர்கள் தான்.
சக் கைப்பிடிச்சுவர் இருக்கும் தளத்திற்கு வெளியேறி அவனருகே வந்தபோது கனமான மரத்தாலான கதவொன்று காற்றில் படாரென்று மூடியதை ஜார்ஜால் கேட்க முடிந்தது. எப்போதும் போல் சக், அவனை துறவிகளிடம் பிரபலமடையச் செய்த சுருட்டுகளில் ஒன்றை புகைத்துக் கொண்டிருந்தான். வாழ்வின் அனைத்து சிற்றினபங்களையும், அனேகமான பேரின்பங்களையும் இந்தத் துறவிகள் ஏற்றுக் கொள்வார்கள் போலிருந்தது. இந்த ஒரு விசயத்தில் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும் : கிறுக்கர்களாக இருக்கலாம் ஆனால் முகம்சுளிக்கும் நுணுக்கநாணிகள் அல்ல. அடிக்கடி கீழே கிராமத்துக்கு சென்று வருகிறார்களே, உதாரணமாக….
“ஜார்ஜ், கவனமாகக் கேள்” சக் அவசரமாகக் கூறினான். “நான் இப்போது தான் கேள்விப்பட்டேன், நமக்கு இது நல்லதல்ல.”
“என்ன பிரச்சனை? இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லையா?. ஜார்ஜால் இதைக் காட்டிலும் மோசமான தற்செயல் நிகழ்வுகளை கற்பனை செய்ய முடியவில்லை. அவன் சற்றுத் தாமதமாக வீடு திரும்பலாம், அதைவிடக் கொடூரம் வேறெதுவுமே இல்லை. இப்போது அவன் இருந்த நிலையில், தொலைகாட்சி விளம்பரமொன்றை பார்ப்பது கூட சொர்க்கத்திலிருந்து கிடைக்கப் பெற்ற அமுதுணவைப் போலிருக்கும். குறைந்தபட்சம் வீட்டுடன் ஏற்படும் இணைப்பாகவாவது அது இருக்கும்.
“இல்லை – அது மாதிரி எல்லாம் இல்லை.” தனது உயரங்களிலிருந்து கீழிறங்கும் வீழ்ச்சிகளைப் பற்றிய பயத்தையும் மீறி சக் பிடிச்சுவர் மீது உட்கார்ந்து கொண்டது. விசித்திரமாக இருந்தது. “இங்க நடக்கறது எல்லாம் இப்பத்தான் புரியுது.”
“என்ன சொல்ல வர? நமக்குத்தான் ஏற்கனவே தெரியுமே”
“உண்மைதான் – அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்திருந்தாலும் ஏன் செய்கிறார்கள் என்பது புலப்படவில்லை. இதைப்போல் கிறுக்குத்தனத்தை…”
“புதுசா ஏதாவது சொல்லேன்” ஜார்ஜ் உருமினான்.
“—ஆனா இப்பதான் ஸாம் எங்கிட்ட எல்லாத்தயும் சொன்னார். உனக்குத்தான் தெரியுமே, ஒவ்வொரு மதியமும் தாள்கள் சுருள்களாக வெளியே வருவதை பார்ப்பதற்காக்வே அவர் இங்கு வருவதை. ஆனால் இம்முறை அவர் சற்று கிளர்ச்சியுற்றது போலிருந்தார். சொல்லப்போனால் அவரைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற கிளர்ச்சிகளே அதிகம். கடைசிச் சுற்றிலிருக்கிறோம் என்று நான் கூறியபோது, அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் எப்போழுதாவது சிந்தித்துப் பார்த்திருந்தேனா என்று அவரது செல்லத்தனமான ஆங்கில உச்சரிப்பில் என்னைக் கேட்டார். “நிச்சயமா..” என்று நான் பதிலளித்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா….”
“பரவாயில்லை சொல்லு…. நான் நம்புகிறேன்”
“கடவுளின் அனைத்து பெயர்களையும் பட்டியலிட்ட உடன் – அவர்கள் கணக்குப்படி கிட்டத்தட்ட தொள்ளாயிரம் கோடிப் பெயர்கள் உள்ளன – கடவுள் தனது குறிக்கோளை நிறைவேற்றியிருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். மனிதகுலம் படைக்கப்பட்டதற்கான பயனும் முடிவடைந்திருக்கும். அதன்பிறகும் அவர்கள் இருந்து எதுவும் ஆகப்போவதில்லை. சொல்லப்போனால் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் கூட ஒரு வகையான தெய்வநிந்தனைதான்.”
“அப்போ நாம் என்ன செய்யனும்னு அவங்க எதிர்பாக்கறாங்க? தற்கொலை செஞ்சிக்கனுமா?”
“அதுக்கெல்லாம் தேவையே இருக்காது. பட்டியல முடிச்ச உடனே கடவுளே முன்வந்து எல்லாத்தயும் முடித்து வெச்சிடுவார்…கதம் கதம்.”
“ஓஹோ, இப்ப புரியுது, நம்ம வேலை முடிஞ்சதும் உலகமும் முடிஞ்சிடும்.”
சக் பதற்றமாகச் சிரித்தான்.
“நானும் ஸாம்கிட்ட அதைத்தான் சொன்னேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? வகுப்பின் மந்தமான முட்டாளப் பார்க்கறதப் போல என்ன ஒரு மாதிரி விசித்திரமா பார்த்துவிட்டு “ இது அவ்வளவு அற்பமான விசயம் கிடையாது” என்று கூறினார்.
இதை ஜார்ஜ் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தான்.
“இதைத்தான் நான் தொலைநோக்குப் பார்வை என்பேன்”  என்று தொடர்ந்தான். “ஆனா இப்ப நாம் என்ன செய்யனும்னு நீ எதிர்பாக்கற? நம்மைப் பொருத்தவரையில் இதனால் ஒன்னும் ஆகப்போறதில்ல. இவங்க கிறுக்குத்தனம்தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே”
“ஆமாம் – ஆனா என்ன நடக்கக்கூடும் என்பதை உன்னால் பார்க்க முடியலையா? பட்டியல் முடிவுற்றதும் இறுதி எக்காளம் அல்லது அதைப்போல் அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஏதோவொன்று ஒலிக்கவில்லை என்றால் நம்மேல் பழி விழக்கூடும். நம் இயந்திரத்தைத்தானே அவர்கள் பயன்படுத்தினார்கள். இது நமக்கு சாதகமா முடியும்கறதுல எனக்கு துளிகூட நம்பிக்கையில்ல.”
“நீ சொல்றதும் சரிதான்,” ஜார்ஜ் மெதுவாகத் தொடங்கினான். “ஆனா இதைப் போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கிறது தெரியுமா. லூசியானாவில் நான் சிறுவனாக இருந்தபோது உலகம் அடுத்த ஞாயிறு அழியப்போகிறது என்று கிறுக்குப் பாதிரியொருவர் ஒரு முறை கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் அவரை நம்பினார்கள் – தங்கள் வீடுகளைக்கூட விற்றுவிட்டார்கள். ஆனால் அப்படியேதும் நடக்காத போது அவர்கள் நாம் எதிர்பார்ப்பது போல் கோபமுற்று மோசமாக நடந்து கொள்ளவில்லை. பாதிரியார் கணக்கில் சிறு பிழை இருந்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்து மீண்டும் ஏதும் நடக்காததைப் போல் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்தார்கள். இன்னும்கூட சிலர் அதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.”
 
“ நீ சரியா கவனிச்சியான்னு சரியாத் தெரியல, இது ஒன்னும் லூசியானா கிடையாது. நாம ரெண்டு பேர்தான் ஆனா நம்மைச் சுற்றி நூற்றுக்கனக்கான துறவிகள் இருக்கிறார்கள். அவர்களை எனக்குப் பிடிக்கும், மேலும் ஸாமின் வாழ்க்கைப்பணி அவருக்கே தீங்கு இழைத்தால் நான் மிகவும் வருத்தப்படுவேன். இருந்தாலும்கூட, இப்போது வேறெங்காவது இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறேன்”
“நான் அதை பல வாரங்களா கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஆனா காண்டிராக்ட் தேதி முடிந்து நம்மை அழைத்துச் செல்லும் விமானம் வரும் வரையில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.
“அதென்னவொ சரிதான், ஆனா நாம் நாசவேலை எதையாவது செய்து பார்க்கலாம்”
“கிழிச்சோம்! அது நிலமைய இன்னமும் மோசமாக்கத்தான் செய்யும்.”
“இல்ல, நான் அந்த விதத்தில் சொல்லவில்லை. இப்படி யோசிச்சுப் பாரு. இப்போதுபோல் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை செஞ்சுதுன்னா இன்னும் நாலு நாள்ல கணினி தன் வேலைய் முடித்துவிடும். போக்குவரத்து இன்னும் ஒரு வாரத்துல இங்க வந்திடும், சரியா – அப்போ நாம செய்ய வேண்டியதெல்லாம் பழுது பார்க்கும் வேளையில் மாற்றிப் பொருத்தும்படியான ஏதாவது ஒரு பாகத்தைத் கண்டெடுப்பது மட்டும் தான்.. வேலை நடப்பதை இரண்டு நாட்கள் வரையில் தள்ளிப் போடும்படி செய்துவிட்டால் போதும். அதை நாம் கண்டிப்பாக சரி செய்துவிடுவோம் ஆனால் சற்றுத் தாமதமாக….நாம் இதைச் சரியாகச் செய்தோம் என்றால் கடைசிப் பெயர் ரெஜிஸ்டரிலிருந்து வெளிவரும் போது  நாம் அனேகமாக விமானத்திடலில் இருப்போம்.
“”எனக்கு இது சுத்தமாப் பிடிக்கல”  என்று ஜார்ஜ் கூறினான். “ நான் பணியை விட்டு ஓடிச் செல்வது இதுவே முதல் முறையாக இருக்கும். மேலும் அவர்கள் இதைச் சந்தேகிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இல்லை, வருவது வரட்டும், நான் ஒன்றும் செய்யப் போவதில்லை.”
 
“இன்னமும் என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது” ஏழு நாட்களுக்குப் பிறகும், வலிமையான, மலைகளில் வசிக்கும் சிறு மட்டக் குதிரைகள் அவர்களை வளைந்து நெளிந்து செல்லும் அந்த பாதையில் சுமந்து செல்லும் போதும் அவன் அதையே கூறிக் கொண்டிருந்தான். “நான் பயப்படுவதால்தான் ஓடிச் செல்கிறேன் என்று மட்டும் நினைக்காதே. பாவம்! அந்த வயதான துறவிகள், தாங்கள் எளிதில் ஏமாறுபவர்கள் என்று அவர்கள் உணரும் சமயத்தில் நான் அங்கு இருக்க விரும்பவில்லை. ஸாம் அதை எவ்வாறு எதிர்கொள்வார் என்று யோசித்தாயா? “இப்ப நெனச்சுப் பார்த்தா சிரிப்பு வருது” சக் பதிலளிக்கத் தொடங்கினான். “ஆனால் நான் விடை பெற்றுக் கொள்ளும் போது அவருக்கு நாம் நழுவிச் செல்வது ஏதோ ஒரு விதத்தில் தெரிந்திருந்தது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது – மேலும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.  இயந்திரம் சீராக ஓடிக் கொண்டிருந்ததால் வேலை விரைவில் முடிந்துவிடும் என்று அவர் நம்பியிருக்கலாம். அதன் பிறகு – அவருக்குத் தான் அதற்கப்புறம் பிறகென்பதே இல்லயே….”
ஜார்ஜ் தன் சேணத்தில் அமர்ந்தபடியே மேலே மலையில் வளையும் பாதையை திரும்பிப் பார்த்தான். துறவி மடத்தை துல்லியமாக பார்ப்பதற்கான கடைசி வாய்ப்பு இந்த இடத்தில் மட்டும்தான் கிட்டும். அஸ்தமனத்தின் பின்னொளியில் கட்டையான, கோணங்கள் நிரம்பிய அந்தக் கட்டிடங்களின் தன்நிழலுருவங்கள் தெரிந்தன.: பயணக்கப்பலின் சாளரங்களைப் போல் விளக்குகள் இங்கும் அங்குமாக ஒளிர்நதன. மின் விளக்குகள்தான், மார்க் ஃபைவுடன் மின்சுற்றுக்களை பகிர்ந்து கொள்ளும் விளக்குகள். இன்னமும் எவ்வளவு நாட்கள் அவை பகிர்ந்து கொள்ளும்? என்று ஜார்ஜ் கற்பனை செய்தான். தங்கள் ஏமாற்றத்தையும் கோபத்தையும் போக்கிக் கொள்வதற்காக துறவிகள் அந்தக் கணினியை உடைத்து நொறுக்குவார்களா? அல்லது அமைதியாக உட்கார்ந்து கொண்டு அவர்களது கணக்குகளை மீண்டும் முதலிலிருந்து தொடங்குவார்களா?
மலையுச்சியில் அந்தக் கணம் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பது அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது. பட்டு அங்கிகளில் மூத்த லாமாவும் அவரது உதவியாளர்களும் அமர்ந்தபடி  தாள்களை பரிசோதனை செய்து கொண்டிருப்பார்கள். தட்டச்சுப்பொறிகளிலிருந்து வெளிவரும் அந்தத் தாளகளை இளநிலைத் துறவிகள் பெரும் தொகுப்புகளில் ஒட்டிக் கொண்டிருப்பார்கள் யாருமே எதுவுமே பேசமாட்டார்கள். தட்டச்சு விசைகள் தாளின் மீது ஓயாது விழும் முடிவேயில்லாத புயல்-மழைச் சத்தத்தைத் தவிர வேறெந்த ஒலியுமே இருக்காது.  ஏனெனில் மின்னல் வேகத்தில் கணப் பொழுதில் நிகழ்த்தும் தனது ஆயிரக்கணக்கான கணக்குகளை மார்க் ஃ\பைவ் சத்தமேயில்லாமல் மௌனமாகத்தான் செய்தது..போதும்டா சாமி, மூனு மாசம் தொடர்ந்து இதையே செஞ்சா எவனுக்கும் பைத்தியம் பிடித்துவிடும் என்று ஜார்ஜ் நினைத்துக் கொண்டான்.
“அதோ தெரிகிறாள் பார்!” பள்ளத்தாக்கை கீழே சுட்டியபடி சக் கத்தினான். “எவ்வளவு அழகா இருக்காள்ல!”
அவள் உண்மையில் அழகாகவே இருந்தாள். உபயோகத்தால் தகர்க்கப்பட்ட அந்த பழைய DC3 ஒடுபாதையின் முடிவில் சிறு வெள்ளிச் சிலுவையைப் போல் காட்சியளித்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் விடுதலை மற்றும் மனநலத்தை நோக்கி அவர்களை அது சுமந்து செல்லும். அந்த எண்ணத்தையே, அருமையான கள்ளைச் சுவைப்பது போல், நீண்டு அனுபவிக்க வேண்டும் போலிருந்தது. மட்டக் குதிரை சரிவில் பொறுமையாக உலைந்து செல்கையில் ஜார்ஜ் அந்த எண்ணத்தையே அசை போட்டுக் கொண்டிருந்தான்.
உயரமான இமயமலையின் விரைவான இரவு அவர்கள் மீது சட்டென கவிய இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதிகளின் சாலைகளைப் பொறுத்த வரையில் அவர்களின் சாலை மிக நன்றாகவே இருந்தது. மேலும் அவர்கள் இருவருமே டார்ச்லைட்களை கையில் பிடித்திருந்தார்கள். சிறு அபாயம்கூட அவர்களுக்கு நேரிட வாய்ப்பில்லை. கடும் குளிரால் ஏற்படும் உபாதை மட்டுமே. மேலே வானம் துல்லியமான ஒரு தெளிவுடன், நன்றாக பழகிவிட்ட, தோழமைமிக்க விண்மீன்களுடன் ஜொலித்தது. குறைந்தபட்சத்தில் வானிலை காரணமாக பைலட் டேக்-ஆஃப் செய்ய முடியாமல் போகும் இன்னல்களேதும் இருக்காது. அந்தக் கவலை மட்டும் தான் அவனுக்கு எஞ்சியது.
அவன் பாடத் தொடங்கினான். ஆனால் சிறிது நேரத்திலேயே அதை நிறுத்தி விட்டான். ஒவ்வொரு பக்கத்திலும் வெள்ளை முக்காடு அணிந்த பேய்களைப் போல் ஒளிர்ந்து, பரந்து விரியும் அந்த மலைச் சூழல் அப்படிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு உகந்ததாக இல்லை. ஜார்ஜ் தன் கைக் கடிகாரத்தை  ஒரு முறை பார்த்துக் கொண்டான்.
“இன்னும் ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்துவிடுவோம்.” தோள்பக்கமாகத் திரும்பி சக்கிடம் கூறினான். பின்னர் ஒரு பின்யோசனையையும் சேர்த்துக் கொண்டான்: “கணினி தன் ஓட்டத்தை முடித்திருக்குமா? இப்போது தான் அதற்கு உரிய நேரம்”
சக் ஏதும் பதிலளிக்காததால் ஜார்ஜ் சேணத்தில் அமர்ந்தபடியே திரும்பினான்.  வானத்தை பார்த்தபடி இருந்த சக்கின் நீள்வட்ட வெள்ளை முகத்தை அவனால் பார்க்க முடிந்தது.
“அதோ பார்,” சக் மெல்லிய குரலில் கூறிய உடன். ஜார்ஜ் கண்களை சொர்க்கத்தை நோக்கி கண்களை உயர்த்தினான். (எல்லாவற்றிற்குமே இறுதி முறை  என்ற ஒன்று இருக்கிறதல்லவா?)
மேலே, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, விண்மீன்கள் அணைந்து கொண்டிருந்தன.

arthurcclarkeஅறிவியல் புனைவு விமர்சகர் ஒருவர் இந்தக் கதையைக் கடவுளுக்குப் படித்துக்காட்டிவிட்டு “ஒளியின் வேகம் போன்ற அடிப்படை அறிவியல் கூற்றைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அறிவியல் புனைவு எழுதுகிறார்கள், முட்டாள்கள்… “ என்று பெருமிதத்துடன் கூறினார்.
கடவுள் அவரைப் பார்த்து முறுவலித்தார். “பிரபஞ்சக் கடையையே இழுத்து மூடப்போறேன்னு முடிவு செஞ்சதுக்கப்பறம் பௌதிக விதி கூர்க்காவை மட்டும் அப்படியே வெச்சுக்கறதுக்கு நான் அவ்வளவு முட்டாளா?”
அ.பு. விமர்சகர் முகம் சிறுக்கையில் அகண்டம் ஆர்த்தர். சி. கிளார்க்கின் சிரிப்பொலியால் நிரம்பியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.