ஒலியின் உருவம்

 

நாம ரூபம் ச பூதானாம்
க்ருத்யானாம் ச ப்ரபஞ்சானாம்
வேத சப்தேப்ய ஏவது
தேவதீனாம் சகார சஹ

வேத ஒலிகளைக் கொண்டு ப்ரபஞ்சத்தில் உள்ள பொருட்களின் பெயர்கள் மற்றும் வடிவங்களையும், செயல்களையும், தேவதைகளையும் மற்ற உயிரினங்களையும் ஆதியில் பிரம்மன் உருவாக்கினான்.

 
ஒலி,  வடிவமும் உருவமும் இல்லாதது என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிர்வுகளால் ஆன,  காதால் மட்டும் கேட்டுணரப்படும் புலனான ஒலியில் ஒரு குறிப்பிட்ட வீச்சுக்கு அப்பாற்பட்ட அதிர்வெண்கள்   சாதாரண மனிதப்புலன்களுக்கு எட்டாதது என்பதும் அறிவியல் உண்மைகளில் ஒன்று. கேளா ஒலி என்று அறியப்படும் இந்த வகை ஒலி அதிர்வுகள் சில உயிரினங்களால் உணரக்கூடியது என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேட்கக்கூடிய, அதன் அதிர்வுகள் மூலம் உணரக்கூடிய ஒலியை சில வடிவங்களாகக் காணவும் செய்யலாம் என்பது உலக அறிவியல் வரலாற்றின் அண்மைக்காலத்திய ஆராய்ச்சிகளின் முடிவு.
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் சிலர், ஒலி அதிர்வுகள் தூசு படிந்த தட்டுகளில் உணரப்படும்போது, அந்தத் தட்டுகளின் பரப்பில் துகள்களால் ஆன சில வடிவங்கள் உருவாவதைக் கண்டார்கள். ஜெர்மானிய இயற்பியலாளரும் இசை வல்லுனருமான  எர்ன்ஸ்ட் க்ளாட்னி 1787ம் ஆண்டு ஒரு உலோகத்தட்டில் மணலைப் பரப்பி, அதில் வயலின் வில்லால் அதிர்வுகளை ஏற்படுத்திய போது, அந்த மணல் துகளில் உருவான வடிவங்களை ஆவணப்படுத்தினார். அதிர்வெண்களுக்கு ஏற்ப மாறுபடுகின்ற இவை,  ‘க்ளாட்னி வடிவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. (பார்க்க படம்)

image00

இந்த ஆராய்ச்சிக்கு முழு உருவம் கொடுத்த பெருமை, சுவிஸ் விஞ்ஞானியான ஹான்ஸ் என்னியையே சேரும். 1960ல் காதுகேளாத மாணவர்களுக்கான பள்ளி ஒன்றிற்காக, ‘டோனோஸ்கோப்’ என்ற இயந்திரத்தை அவர் உருவாக்கினார். அது மனிதக் குரலை வடிவங்களாக மாற்றிக்காட்டும் தன்மையுடையது. அதைக் கொண்டு, அந்த மாணவர்களுக்கு வாய் மூலம் எழுப்பும் ஓசைகளின் வேறுபாடுகளை அவர் கற்பித்து வந்தார். இதை மேலும் விரிவுபடுத்தி, பல்வேறு அதிர்வெண்களில் ஒலியை எழுப்பக்கூடிய இயந்திரத்தையும், ஒலிபெருக்கியையும் பல விதமான உலோகத் தட்டுகளோடு இணைத்தார். பின் அதன் மேல் லைக்கோபோடியம் பௌடர் மற்றும் அதிர்வுகளுக்கு எளிதில் எதிர்வினை புரியக்கூடிய திரவங்கள் ஆகியவற்றைப் பரப்பி, பல்வேறு அதிர்வெண்களில் ஒலியை அந்தத் தட்டுகளின் மேல்  செலுத்தினார். இதன் காரணமாக தட்டுகளின் மேல் இருந்த பௌடர் அதிர்வுகளுக்கேற்ப விதவிதமான வடிவங்களை எடுத்தது. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண், ஒரு குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்குவதைக் கண்ட என்னி, தமது ஆராய்ச்சிகளை படச்சுருள்களில் பதிவு செய்தும், புத்தங்கள் எழுதியும் பிரபலப்படுத்தினார். ஒலியின் அதிர்வுகளை அலை வடிவங்களாகப் பதிவு செய்யக்கூடிய இந்த அறிவியல் பிரிவுக்கு  ஸைமாட்டிக்ஸ் என்ற பெயரையும் அவர்தான் சூட்டினார்.
ஸைமாட்டிக்ஸ் என்ற பெயர் கிரேக்க மொழியில் அலைகள் என்ற பொருளைக் குறிக்கும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. உலோகத் தட்டு போன்ற அதிரக்கூடிய ஒரு பரப்பில், அதிர்வுக்கு எதிர்வினை புரியக்கூடிய பொருட்களைப் பரப்பி, அந்தத் தட்டில் ஒலியை செலுத்தும்போது, அந்தப் பொருட்கள் பலவிதமான வடிவங்களை எடுக்கின்றன. இந்த வடிவங்களை ஆராயும் துறைதான் ஸைமாட்டிக்ஸ். ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட வடிவம்தான் தோன்றும் என்பது இங்கு கவனிக்கவேண்டிய விஷயம். அப்படி உருவான சில வடிவங்களை கீழே காணலாம்.

image02

நம்மைச் சுற்றியுள்ள அதிர்வுகளை நம்மால் காண முடிந்தால், பலவிதமான கலைடாஸ்கோப் வடிவங்களாக, வண்ணங்களாக அவை தெரியும். சரி, ஒலி அதிர்வுகளால் உருவாக்கப்படும் இது போன்ற வடிவங்களை ஆராய்வதால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். இதற்குப் பதில் காண, நாம் என்னி செய்த ஆய்வுகளைத் தொடர்வோம்.
ஒரு தட்டில் அதிர்வுகள் ஏற்படும் போது மூன்றுவிதமான தன்மைகள் அங்கே வேலை செய்கின்றன என்று என்னி கூறினார். துகள்களோ அல்லது ஒரு திரவமோ, தட்டில் ஏற்படும் அதிர்வுகளால் வடிவங்களை உருவாக்கும்போது, அந்த ஒலியை அவரால் கேட்க முடிந்தது ஒருவிதமான தன்மை. அந்த ஒலி உருவாக்கும் வடிவங்களைப் பார்க்கமுடிந்தது இரண்டாவது.  அந்தத் தட்டை தொடும்போது அந்த அதிர்வுகளை அவர் உணர்ந்தது மூன்றாவது. ஆக ஒலியின் மூலம் ஒன்றாக இருந்தாலும் அது மூன்று விதமாக தன்னை வெளிப்படுத்துகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் இந்த மூன்று தன்மைகளை நாம் அறிந்துகொள்வதில்லை. நம்மிடையே பிரபலமான ‘யானையும் நான்கு குருடர்களும்’ என்ற கதையை இதை விளக்க அவர் எடுத்துக்கொண்டார். ஒவ்வொருவரும் யானையின் ஒரு பாகத்தை மட்டுமே அறிந்திருக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த யானை உருவம் ஒன்றே, அதன் பாகங்கள்தான் அவர்கள் ஒவ்வொருவரும் பார்த்தது என்பது கண் பார்வையுள்ள ஒருவருக்குத்தான் தெரியும். அதை ஒட்டுமொத்தமாகக் கண்டறிந்து அறிவிக்கும் வரை, யானை என்பது காது போன்றோ அல்லது துதிக்கை போன்றோ இருக்கும் என்பதே ஒவ்வொருவரின் புரிதலாக இருக்கும். இதைப் போலவே மேற்குறிப்பிட்ட மூன்று தன்மைகளையும் ஒன்றிணைத்து இந்த ஆய்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி தனித்தனியாக அல்ல என்றார் என்னி.
பல விதமான ஒலி அலைகளைப் பயன்படுத்தி என்னி செய்த ஆராய்ச்சிகளில் உருவான வடிவங்கள், இயற்கையாக அமைந்த பல வடிவங்களை ஒத்திருந்ததை அவர் கண்டார். ஒலி அலைகள் திரவப் பொருள்களிலும் துகள்களிலும் இணையும் போது பல உயிரினங்களைப் போலவோ அல்லது உடலில் உறுப்புகளைப் போலவோ உருவெடுப்பதையும் அவர் பதிவு செய்தார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குழம்பாக, திரவ நிலையில் விரவியிருந்த உலகின் பல வடிவங்கள் ஒலியினால் உருவாகியிருக்கக்கூடும் என்பது அவரது கணிப்பு. உதாரணமாக கீழே உள்ள படத்தைப் பாருங்கள், லைக்கோபோடியம் பௌடரை உலோகத்தட்டில் மேல் பரப்பி, 10,101 ஹெர்ட்ஸ் ஒலி அதிர்வை அதன் மேல் செலுத்தினால் உருவாகும் வடிவங்கள் சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகளை ஒத்திருக்கின்றன.

image01(படம் நன்றி Cymatic source)

 
என்னிக்குப் பின் ஸைமாட்டிக்ஸ் ஆராய்ச்சிகள் விரிவடைந்தன. இந்த சமயத்தில், இணை அணுவியல் துகள்களைப் பிரிக்க நடத்தப்படும் ஆய்வுகளில், அவை துகள்களாக இல்லாமல் ஆற்றல் அலைகளாக வெளிப்படுகின்றன என்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் உலகில் உள்ள பொருட்கள் அனைத்திலும் ஏதோ ஒருவிதமான அதிர்வுகள் இருந்துகொண்டேயிருக்கின்றன என்பது கண்டறியப்பட்டது. ஸைமாட்டிக்ஸ் ஆய்வுகளும் இதன் அடிப்படையிலேயே தொடர்ந்தன. இயற்கையில் நாம் காணும் பெரும்பாலான பொருட்களின் அடிப்படை வடிவம் குறிப்பிட்ட சில மாதிரிகளாகவே அமைந்திருந்தது ஏன் என்ற கேள்வி அறிவியலாளர்கள் முன் பலகாலமாகவே இருந்துவந்தது. ‘கோல்டன் மீன் ஸ்பைரல்”, நீள்வட்டம், உருளை, அறுகோணம் ஆகிய வடிவங்களே பல இயற்கைப் பொருட்களில் மீண்டும் மீண்டும் காணப்பட்டன. ஒரு செல் உயிரினமாக இருந்தாலும் சரி, விண்வெளியில் உள்ள காலக்ஸிகளாக இருந்தாலும் சரி, இந்த வடிவங்கள் பரவலாகக் காணப்பட்டன. இந்தக் கேள்விக்கு விடை காண ஸைமாட்டிக்ஸ் முயன்றது.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஅண்டத்தில் உள்ள நட்சத்திரக்கூட்டங்களில் ஏற்படும் அதிர்வுகள் முதல் விலங்கு செல்களில் ஏற்படும் அதிர்வுகள் வரை ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக விலங்குகளின் குரல்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ஏற்படும் வடிவங்கள் ஆராயப்படுகின்றன. உதாரணமாக குரல்கள் மூலம் தங்கள் கூட்டத்தை வழிநடத்தக்கூடிய டால்பின்களின் ஒலிகள் வடிவங்களாக ஸைமாஸ்கோப் மூலம் பதிவு செய்யப்பட்டு ஒரு அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவை நடந்துகொள்ளும் விதத்தைக் கணிக்க இது உதவியாக இருக்கின்றது. காது கேளாதோர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பேச முடியாத சூழ்நிலையில் இருப்போர் ஆகியோரது குரல் ஒலிகளும் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சொல்ல வருவது என்ன என்பது வடிவங்கள் மூலம் கண்டறியப்படுகின்றது. முக்கியமாக, ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் பலர் காணும் திறனை அதிகமாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளும் புலனறிவு படைத்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு இந்த ஆய்வுகள் பேருதவி புரிகின்றன.
தவிர, ம்யூசிக் தெரபி என்ற இசை மூலம் உடல்நிலைக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதிலும் ஸைமாட்டிக்ஸ் உதவும் என்ற நோக்கிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பல மருத்துவர்கள், இந்த முறை எலும்பு முறிவு போன்ற சிகிச்சைகளில் பலன் தருவதாகக் கூறினாலும், இன்னும் உறுதியான முடிவு எதுவும் காணப்படவில்லை.
இரண்டு பரிமாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடுத்து, முப்பரிமாணத்திலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பரப்புகளில் சிதறும் போது உருளை வடிவத்தை எடுத்துக்கொள்ளப்படும் பாதரசத்தைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறைந்த ஒலி அளவுகளில், அது தன் உருளை வடிவத்தைத் தக்கவைத்துக்கொண்டாலும், ஒலி அளவு அதிகரிக்க அதிகரிக்க, பாதரசம் வட்ட வடிவை எடுத்து, உள் வட்டத்திற்குள் வட்டம், அதற்குள் இன்னொரு வட்டம் என்று   வட்டங்கள் அதிர்வு ஏற்படும் பரப்பின் மேல் உருவாகத்தொடங்கின. இதைப் போலவே விண்வெளியில் ஒலி அதிர்வுகளின் விளைவுகளைக் கண்டறிவதற்காக, ஒரு வாயுவின் மீது ஒலி அதிர்வுகள் செலுத்தப்பட்டன. முதலில் அருவியைப் போன்ற வடிவத்தை எடுத்த அந்த வாயுவில் போகப் போக சுழற்சி மையங்கள் உருவாகத் தொடங்கின. தயிர் கடையும் போது ஏற்படுவதைப் போல், ஒரு அச்சின் மையத்தில் அந்த வாயு சுழலத்தொடங்கியது. ஒலி துண்டிக்கப்பட்டவுடன், அது விரைவாகப் பழைய வடிவத்தையே அடைந்தது. இவையெல்லாம், விண்வெளியில் உள்ள பல பொருட்களும் ஏதோ ஒரு அதிர்வினால் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக இருக்கிறது. இதை வைத்து மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
உலகிலுள்ள பொருட்களின் தோற்றம் அனைத்தும் அடிப்படையாக ஏதோ ஒரு கண்ணுக்குப் புலப்படாத அதிர்வினால் ஆனாது என்பது ஸைமாட்டிக்ஸின் கொள்கை. ஆகவே நாம் பார்க்கும் உலகம் நம்முடைய பார்வையைப் பொறுத்ததேயன்றி, நம்மீது திணிக்கப்பட்டதல்ல என்கின்றனர் ஸைமாட்டிக்ஸ் ஆய்வாளர்கள் சிலர். இங்குதான் ஸைமாட்க்ஸ் அறிவியல் தளத்தைத் தாண்டி தத்துவத்திற்குள் புகுகின்றது. கீழை நாட்டுத் தத்துவங்கள் பலவற்றோடு இந்தப் பார்வை ஒத்துப்போகின்றது. எனவே, ஸைமாட்டிக்ஸ் ஆய்வாளர்கள் பலர் கீழை நாட்டு நூல்களைப் படிக்க ஆர்வம் கொண்டார்கள்.
அவர்களில் ஒருவரான ஸ்டீவன் ஹால்பெர்ன், பிரமிட்டின் உள்ளே ‘ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரித்து, அந்த ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளைப் பதிவு செய்தார். பிறகு அதை டோனோஸ்கோப் இயந்திரத்தில் ஓட விடும்போது என்ன நிகழ்கின்றது என்று ஆராய்ந்தார். ‘ஓம்’ என்ற அந்த ஒலி உருவாக்கிய வடிவங்கள் ‘நீள்வட்டமாக’ இருந்தன.  பிரபஞ்சத்தில் கோள்களும், நட்சத்திர மண்டலங்களும், காலக்ஸிகளும் பெரும்பாலும் சுற்றிவருகின்ற ‘நீள்வட்டப் பாதை’ வடிவங்கள் உருவானது தற்செயலான விஷயமல்ல. விண்வெளியில் நிறைந்திருக்கும் அதிர்வுகளின் அடிப்படை ஓம் என்ற ஒலியே என்பது அவரது வாதம். அந்த ஆய்வை இங்கே பார்க்கலாம்

அவரைப் போலவே ஜான் ஸ்டூவர்ட் ரீட் என்பவர் பிரமிடுகளில் உள்ள ‘கிங்ஸ் சாம்பர்’ என்ற இடத்தில் பலவிதமான குரல் ஒலிகளைப் பதிவு செய்து அதை ஸைமோஸ்கோப் எனும் இயந்திரத்தில் ஓடவிட்டபோது, பின்வரும் வடிவங்கள் கிடைத்தன.

அளவில்லாத இந்தப் பிரபஞ்சத்தை ஒத்திசைவே நிலைநிறுத்துகிறது என்பது தற்கால ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. ஒருபுறம்,  இணை அணுவியல் துகள்களை ஒன்றிணைப்பதும் இன்னொரு பக்கம், விண்வெளியில் உள்ள ஈர்ப்பு சக்திகளின் அடிப்படையாக இருப்பதும் இந்த ஒத்திசைவுதான். இந்த ஒத்திசைவு எப்படி வேலை செய்கிறது என்பதற்கான விடை ஸைமாட்டிக்ஸிலிருந்து வரக்கூடும். துகள்களும் திரவங்களும்  உயிரினங்களில் காணப்படும் அடிப்படை வடிவங்களை அதிர்வினால்     உருவாக்குவதை காணும்போது, நம்முடைய பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எது என்பதற்கான மூலத்தை நாம் காணக்கூடும்.

One Reply to “ஒலியின் உருவம்”

 1. தெளிவான அறிமுகக் கட்டுரை.
  டோனோஸ்கோப் விடியோக்கள் இத்துறையைப் புரிந்து கொள்ள உதவின.மொஸார்ட், இளையராஜாவின் இசையில் உள்ள அதிர்வுகள் சிசுக்கள், மற்றும் விலங்குகளை கவரும் என்பது பல செய்திகளாக வெளிவந்துள்ளன.
  மனிதக் குரல்களில் ஹார்மோனிக்ஸ் அதிகம். ஒரு சந்தேகம் – ஒரு சொல்லின் டோனோஸ்கோப் படம் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் மாறுபடுமா? எத்தனை வேறுபாடு இதிலிருக்கும்?
  இளையராஜாவின் இசையை ஆராய்ச்சி செய்கையில், அவரது இசையில் உண்டாகும் உணர்வுகளை வண்ணங்களாக சித்தரிக்கும் ஒரு முறையை ஒரு ஜெரிமனிய ஆராய்ச்சி மூலம் அறிந்தேன். இதில் சில சிக்கல்களும் உருவாகின. மேற்குலக இசையில் உள்ள உணர்வுகள் நமது இசையிலிருந்து சற்று மாறுபட்டது. உதாரணம், விரக்தியான உணர்ச்சி மேற்கத்திய இசையில் அதிகம் வெளிவருவதில்லை. அத்துடன் பக்தி என்பது கலாசாரத்திற்குத் தகுந்தவாறு மாறுபடும்.
  http://geniusraja.blogspot.ca/2009/01/moods-of-raja.html
  அறிமுக கட்டுரைக்கு நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.