ஆயுர்வேதமும் அறிவியலும் – 1

காலனியமும் ஆயுர்வேதமும்

Medicine_Herbs_2

அண்மையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் டாக்டர். சச்சின் பாட்டிலும், ஹோமியோபதி மருத்துவராக இருக்கும் அவரது மனைவி டாக்டர். சுசித்ரா சச்சின் பாட்டிலும் சேர்ந்து, முறையே தங்களது ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி பட்டப்படிப்பை எம்.பி.பி.எஸ் ஆகத் தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் நிகழ்ந்த பல்வேறு RCT களில் (மருந்து பரிசோதனைகளில்) இவ்விரண்டு மருத்துவ முறைகளும் தோல்வியடைந்ததாக பல ஆய்வு அறிக்கைகளை ஆதாரங்களாக சமர்ப்பித்தார்கள். குறிப்பாக COCHRANE அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் தேர்ந்தவர்களுக்கே இதைப் படிக்க அனுமதி என மகாராஷ்டிர அரசு விதிமுறை வகுத்துள்ளதையடுத்து, நாங்கள் இவை அறிவியல் பூர்வமான மருத்துவ முறை என நம்பிப் பயின்றோம். ஆனால் நாளடைவில் குருட்டுத்தனமாக மூலிகை கலவைகளை அளித்துவிட்டு நோயாளி குணமடைய கடவுளைச் செய்துகொள்வதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை என உணர்ந்துகொண்டோம்.” மேலும் ஆயுர்வேத மருத்துவத்தின் நிவாரண கோரல்கள் ஒன்று பிளாசிபோ விளைவினால் நேர்ந்ததாக இருக்கும் அல்லது நவீன மருந்துகளைக் கலப்பதினால் இருக்கும் என்றார். அரசு தங்களை ஏமாற்றி எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. நாங்கள் நவீன மருத்துவர்களுக்கு இணையாக ஒருபோதும் நடத்தப்படுவதும் இல்லை. இழிவாகவும், இரண்டாந்தரமாகவும் தான் நடத்தப்படுகிறோம். மிகக்குறைந்த வருமானமே ஈட்ட முடிகிறது. நாங்கள் வெற்றிகரமாக ஆயுர்வேத மருந்துகளுடன் நவீன மருந்தைக் கலந்து மூன்றாண்டுகளாக அளித்து வருகிறோம். எவ்வித பின்விளைவையும் காணவில்லை. இன்னும் சொல்வதானால் நவீன மருந்துகள் அளிப்பதால் வரும் பின்விளைவுகள் கூட இதில் இல்லை. ஆகவே நாங்கள் போதுமான அளவுக்கு நவீன மருத்துவம் பரிச்சயம் உடையவர்களாக ஆகிறோம்.” இந்த அடிப்படைகளில் அவர்கள் நவீன மருத்துவர்களாக தங்களை மேம்படுத்திக்கொள்ளச் சட்டத்தின் உதவியை நாடினார்கள்.

இந்த வழக்கு ஆயுர்வேத மருத்துவர்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டது. பலரும் எங்கள் உளநிலையை அப்படியே பிரதிபலிக்கிறார் எனப் பாராட்டினர். வேறு சிலர் அவர்களுக்குத் தத்தமது மருத்துவ முறைகள் மீது போதிய நம்பிக்கை இல்லை எனச் சாடி காட்டமான மறுப்புகளை எழுதினர். சில பத்தாண்டுகளாக இந்திய மருத்துவர்களால் இவ்வினா பெரிதும் விவாதிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பெரும்பான்மையான ஆயுஷ் பட்டதாரிகள் நவீன மருத்துவத்தைத் தொழிலாக ஏற்கவே விரும்புகிறார்கள் என்பதே இன்றைய நிதர்சனம். அக்கோரிக்கையில் நியாயம் இல்லாமலும் இல்லை. இது அவர்களின் வாழ்வாதார சிக்கல். ஏறத்தாழ நவீன மருத்துவத்தின் அதே பாடங்களையே இவர்களும் பயில்கிறார்கள். நவீன மருந்தாளுமை மட்டுமே பயிலவில்லை. உடற்கூறியல், உடலியங்கியல், மருத்துவம், அறுவை மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவம், குழந்தை மருத்துவம், சமூகம் மற்றும் நோய் காப்பு மருத்துவம், தடயவியல் மருத்துவம் என இவை அனைத்துமே நவீன மருத்துவ வழியிலேயே போதிக்க படுகிறது. உயிர் வேதியல், நுண்ணுயிரியில், மருந்தாளுமை ஆகியவை கற்பிக்கப்படுவதில்லை. ஓர் எளிய பயிற்சி வகுப்பளித்து ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை ஆயுஷ் மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தியா போன்ற மக்கட்தொகை கொண்ட தேசத்தில், கிராமப்புறங்களில் இன்னும் முழுமையான மருத்துவ தற்சார்பு ஏற்படாத சூழலில் அரசு இதைத் தீவிரமாக பரிசீலிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இந்த முடிவை இந்திய மருத்துவ சங்கம் முழு பலம் கொண்டு எதிர்க்கிறது. ஒவ்வொரு மாநிலமாக உயர்நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கிறது. மகாராஷ்டிரத்தில் தோல்வியடைந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வெற்றி பெற்றது. இதில் உள்ள நகைமுரண் யாதெனில், தமிழகத்தின் பெரும்பான்மையான 24 மணிநேர ஆஸ்பத்திரிகளில் இரவுநேர மருத்துவர்களாகவும், பகுதிநேர மருத்துவர்களாகவும் ஆயுஷ் மருத்துவர்களே இருக்கிறார்கள். எட்டுமணிநேர பணிக்கு குறைந்தபட்சம் நாளைக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டிய இடத்தில் ஆயுஷ் மருத்துவர்கள் ஐநூறு ரூபாய்க்கு வரத் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரிகளை நிர்வகிக்கும் மருத்துவர்கள் தான் இந்திய மருத்துவ சங்கத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் தான் ஆயுஷ் மருத்துவர்கள் நவீன மருத்துவம் புரியக்கூடாது எனப் போராடி கொண்டிருக்கிறார்கள். மக்களின் மீது அக்கரைக்கொண்டு நடத்தப்படும் போராட்டமாக இது இல்லை. இவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன் கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயமாக்கப்பட்டபோது கடுமையாக எதிர்த்தவர்கள். ஆயுஷ் மருத்துவர்கள் நவீன மருத்துவம் புரிவது கூட இரண்டாம் பட்சம் தான், அவர்களுக்குக் கட்டுப்பட்டு மருத்துவம் செய்யும் வரை எவ்வித மறுப்பும் இல்லை. தங்களது முற்றாதிக்கம் பறிபோகும் எனும் அச்சம் தவிர இந்தச் சந்தர்ப்பவாத இரட்டை நில
க்கு வேறு காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. எவ்வித கடுமையான கண்டன குரல்கள் இதுவரை உள்ளிருந்து எழவும் இல்லை. நல்லெண்ணம் கொண்ட தனிப்பட்ட மருத்துவர்களுக்கு அப்பால் ஆயுஷ் மருத்துவர்கள் உழைப்பு சுரண்டப்படுவதை குறித்து எவருக்கும் இங்கு எந்த அக்கறையுமில்லை.

ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரும்? நவீன மருத்துவர்கள் ‘மருத்துவ தரம்’ இழிந்து போவதை குறித்து எழுப்பும் சிக்கல்கள் ஒரு புறமிருக்கட்டும், மிக முக்கியமாக அது ஆயுஷ் மருத்துவ முறைகளை மொத்தமாக அழிக்கும். நவீன மருத்துவம் புரிய அரசாங்க அனுமதியுள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இதுவே நிகழ்கிறது. நவீன மருத்துவத்திற்குச் செல்ல செலவற்ற பின்வாசல் வழியாக இவை மாறிவிடும். உண்மையிலேயே ஆர்வம் உள்ள மருத்துவர்கள் சிறுபான்மையினராக எங்கோ ஒடுங்கிப் போயிருப்பார்கள். இருபது முப்பது வருடங்களில் அறிவு தொடர்ச்சி இன்றி ஆயுர்வேதம் அதன் அன்னை பூமியில் முற்றழியும். மிஞ்சிப் போனால் பல்கலைக்கழக இந்தியவியல் துறைகளில் ஒரு நாற்காலியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் ஆயுர்வேத மருத்துவர்கள் விழைகிறார்களா? தங்கள் இன்றைய வாழ்வாதார சிக்கலுக்கு அப்பால் இங்கே ஒரு பண்பாட்டு சரடு அறுந்து விழுவதைப் பற்றிய கவலை பெரும்பான்மை ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இல்லை. ஆயுர்வேத மருத்துவ சங்கங்களின் முதன்மை கோரிக்கையாக நவீன மருத்துவம் புரிவதற்கான அனுமதியாகவே இருக்கிறது.
ஆயுர்வேதம் சந்திக்கும் இப்பிரச்சனையின் ஆதாரம் எங்கிருக்கிறது? ஆயுர்வேதம் நவீன நிருபனவாத அறிவியலுக்கு முரணான (சிலருக்கு அப்பால்) மாறா சொற்களை கொண்ட இறுகிய துறை எனும் சித்திரம் மிக வெற்றிகரமாக இங்கு விதைக்கபட்டுவிட்டது. இதிலும் ஒரு வேடிக்கை என்னவெனில், ஆயுர்வேத அடிப்படைவாதிகளும் சரி, அதை முற்றாக முட்டாள்தனம் என ஒதுக்குபவர்களும் சரி, இரண்டு தரப்புமே இதையே தங்களது கருத்துக்களாக முன்வைக்கிறார்கள். பரிசீலிக்கப்படாத உயர்வுணர்ச்சியும், தாழ்வுணர்ச்சியும் காலனிய ஆதிக்கம் விதைத்த கருத்தின் இரு வேறு எதிர்வினைகள் அன்றி வேறில்லை.
 
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issue

பதினெட்டாம் நூற்றாண்டுவரை இயல்பாக பல்வேறு விஷயங்களை உள்வாங்கி வளர்ந்த செவ்வியல் ஆயுர்வேதம் அதற்குப் பின்னர் அதை ஆதரித்து முன்னெடுக்கும் அமைப்புகள் ஏதுமின்றி மெல்ல வலுவிழந்தது. சீன மருத்துவத்துக்கு நோபல் கிடைத்தது. இந்திய மருத்துவத்துக்குக் கிடைக்குமா? எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இரண்டுக்கும் மிக முக்கியமான வேறுபாடு காலனியாதிக்கம் தான். சீனத்தில் நவீன மருத்துவம் பயில்பவர்களுக்கு கூடப் பாரம்பரிய மருத்துவ முறையின் விரிவான அறிமுகமும் அறிவும் உண்டு. இங்கே பெரும்பான்மையான நவீன மருத்துவர்களுக்குப் பாரம்பரிய மருத்துவம் மீது எவ்வித மரியாதையோ ஈடுபாடோ அறிதலோ இல்லை. சஞ்சீவ் ரஸ்தோகி அவருடைய கட்டுரையில் இந்திய மனநிலையைச் சொல்கிறார். “ஆயுர்வேதத்திற்கு அறிவியல் அடிப்படைகளைத் தேடும் லட்சியவாத, மிகுந்த பொருட்செலவுடன் செய்யப்படும் ஆய்வுகள் ‘போனால் போகட்டும்..உனக்காக உதவுகிறேன்’ எனும் போக்கிலேயே செய்யப்படுகிறது. செல்வந்தரான இளவரசரும் சாமானிய குடிமகனும் சந்தித்துக்கொள்ளும் போது, இளவரசன் அவனுடைய நிலையின் காரணமாக ஆளுகையுடையவன் ஆகிறான்.” நவீன அறிவியல் மருத்துவம் ஆயுர்வேதத்தைச் சமமான அறிவுத் துறையாக ஒருபோதும் கருதுவதில்லை என்பதைத்தான் இப்படிச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்திய தாவரங்களின் மருத்துவ பண்புகளை அங்கீகரிக்கும் அதேவேளையில் இவ்வறிவை உருவாக்கித் தொகுத்தளித்த பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து எவ்வித மரியாதையும் இல்லை ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இல்லை. ஐரோப்பியர்கள் இந்திய தாவரங்களின் மருத்துவ குணங்களை கண்டுபிடித்தனர் என்றும் அவை குறித்து இந்தியர்களுக்கு எவ்வித பரிச்சயமும் இல்லை, அதை மீறி அட்ன்ஹா தாவரங்களின் மருத்துவ பயன்பாடு தற்செயலானது எனும் தொனியே ஒலிக்கிறது என்கிறார் ராசேல் பெர்கர் (Ayurveda and the Making of the Urban Middle Class in North India, 1900–1945).
நவீன மேற்கத்திய மருத்துவம் பிராந்திய மருத்துவத்தின் மீது கொண்ட முழுமுதல் ஆதிக்கம் என்பது அவை பேரழிவை உண்டாக்கிய தொற்றுநோய்களை எதிர்கொண்ட விதத்தினால் என உறுதிப்பட கூறலாம். காலராவும் மலேரியாவும் சின்ன அம்மையும் ஏற்கனவே ஊட்டமின்றி நோயெதிர்ப்பு ஆற்றலின்றி வாடிய மக்களைக் கொத்து கொத்தாகக் கொண்டு சென்றது. தகழியின் தோட்டியின் மகன், பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, ஜெயமோகனின் ‘ஓலைச் சிலுவை, காடு’ ஆகிய புனைவுகள் அளிக்கும் சித்திரங்கள் நம்மை உலுக்குகிறது. ‘ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில்’ ஓரிடத்தில் ஆயுர்வேத வைத்தியரிடம் வாங்கி வந்த ஹேமாதி பானகம் உயிர்க்காக உதவும். ஆனால் அதன் பின்னர் மற்ற சமயங்களில் போத்தல் போத்தலாக குடித்தும் கூட எவ்வித பலனும் அளிக்காது. இது என்னுள் ஆழ்ந்த கேள்விகளை எழுப்பியது. இம்மாதிரி சமயங்களில், உயிர்காக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும் காலங்களில், ஆயுர்வேத மருத்துவம் சச்சின் பாட்டில் நொந்து கொள்வது போல் வெறும் ஆறுதல் மருத்துவமாகவோ, ஊழின் அல்லது கடவுளின் கருணையையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலையை அடைகிறதோ? எனத் தோன்றியது.

இந்நிலையில் நவீன மேற்கத்திய மருத்துவம் தொற்றுநோய்களை எதிர்கொண்டு அடைந்த வெற்றிக்கு என்ன காரணமிருக்க முடியும்? அங்கு மருந்துகளைத் தொழிற்சாலை அளவில் தயாரிக்க துவங்கிய காலகட்டத்தில் ஆயுர்வேத மருந்துகள் குடிசை தொழில் அளவைத் தாண்டி செல்லவில்லை. அவதிக்குள்ளாகி இருக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களைச் சென்று சேரும் அளவுக்கு மருந்துகளைக் குறுகிய காலத்தில் தயார் செய்து அளிக்கும் வழிமுறை நம்மிடம் இல்லை. மேலும் செவ்வியல் ஆயுர்வேதம் தொற்றுநோய்களை தடுக்கும் முறைகளையே அதிகமும் வலியுறுத்துகின்றன. மிக விரிவாக நோய் தடுப்பு முறைகளையும், ஆரோக்கிய வாழ்விற்கான விதிமுறைகளையும் வகுக்கிறது. மிகுந்த பலனளிக்கும் அவ்வழிமுறைகள் வெகுமக்கள் அன்றாடம் பின்பற்றுவது எளிதல்ல. ஒருவகையில் ராஜ வைத்தியமாகவே செவ்வியல் ஆயுர்வேதம் திகழ்கிறது. நவீன மருத்துவத்தின் மகத்தான செயல்பாட்டை மனமுவந்து பாராட்டும் அதேவேளையில் இந்த இரு காரணங்களையும் பரிசீலிக்கும் போது ஆயுர்வேத மருத்துவத்திற்கு நியாயம் செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. காலனியம் பஞ்சத்தையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும், விளைவாகப் பேரழிவு தொற்றுநோய்களையும் உருவாக்கிவிட்டுத் தீர்வையும் அளித்தது எனப் பெருமை பட்டுக்கொள்வதா? 1921 ஆம் ஆண்டில் 25 ஆக இருந்த சராசரி ஆயுள் 1931 ஆம் ஆண்டில் 23 ஆகக் குறைந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1872 – 1921 வரையிலான காலகட்டங்களில் 20% சராசரி ஆயுள் குறைந்துள்ளதாக மைக் டேவிஸ் குறிப்பிடுகிறார். (http://archaeologyonline.net/artifacts/colonial-legacy) “காலனிய அரசு பொது சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பாரம்பரிய மருத்துவ முறைகள் கேடானவை என்று பிரசாரம் செய்தது. நவீன மருத்துவம் மட்டுமே அவற்றை முழுவதுமாக கட்டுக்குள் வைக்க உதவும் எனவும் சொல்லப்பட்டது. பாரம்பரிய மருத்துவத்துடனான உறவு இயல்பான ஒன்றாக இருந்தது மெல்ல அது நோயாளியின் விருப்ப தேர்வாக மாறியது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்.” என்று தனது கட்டுரையில் முக்கியமான அவதானத்தை வைக்கிறார் ராசெல் பெர்கர்.

டொமினிக் உஜாஸ்டிக் அவருடைய கட்டுரையில் சுதந்திர இந்தியாவின் மருத்துவ சுகாதார கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட போர் கம்மிடியை பற்றி அளிக்கும் சித்திரமும் முக்கியமானது. சுதந்திர இந்தியாவின் மருத்துவ மற்றும் சுகாதார கொள்கையை வகுத்ததில் 1945 ஆம் ஆண்டு உருவான போர் குழுவின் பரிந்துரைகளுக்கு மிக முக்கிய பங்குள்ளது. போர் குழு நவீன மருத்துவத்தையே இந்தியாவின் வருங்காலத்திற்கு உரிய மருத்துவமாகப் பரிந்துரைத்தது. அந்நிலையில் இருந்து இன்று நிலைமை பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.
“உலகில் ஒவ்வொரு தினமும் நடந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் இணையாகத் தன்னை மாற்றிக்கொள்ளாத, மாறாத கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் மருத்துவமுறைகளால் மக்களுக்குச் சிறந்ததை அளிக்க முடியாது.” (போர் 1945, vol 4,74)
மீண்டும் இங்கும் இந்திய மருத்துவ முறைகள் மாறாத இறுக்கமான மருத்துவ முறை எனும் கண்ணோட்டத்துடன் அணுகப் பட்டிருக்கிறது. இந்திய கலாச்சாரம் தொன்மையானது, மாறாதது எனும் நம்பிக்கை பல்வேறு அரசியல் காரணங்களினால் அன்றைய சூழலில் இந்தக் கருத்து கட்டமைக்கப்பட்டது.
போர் குழு பாரம்பரிய மருத்துவமுறைகளுடன் அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபடவே இல்லை என்பது தெளிவு. அதற்கு நேரமின்மையையும் ஆள் பற்றாக்குறையையும் காரணங்களாக அக்குழு முன்வைத்தாலும் உண்மையில் அவர்களுக்கிருந்த முன்முடிவுகளே அறிவுப்பூர்வமாக அணுகவிடாமல் செய்தது. ஒர்வகையில் லார்ட். மெக்காலே இந்திய கல்விக்கு என்ன செய்தாரோ அதைப் போர் இந்திய மருத்துவத்திற்குச் செய்தார் என்கிறார் டொமினிக். காலனி தேசத்தின் பண்பாட்டு பாரம்பரியம் குறித்து அவர்களுக்கு அறியாமை இருந்தது மட்டுமல்ல, அறியாமை குறித்து எந்த அக்கறையும் இல்லாத அப்பட்டமான மேலாதிக்க மனப்பான்மையும் இருந்தது என்பதே சிக்கல்.
1981 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ராமலிங்கசாமி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் போர் குழு போன்றவை எங்கே தவறின என்பதைக் கச்சிதமாக சுட்டிக்காட்டுகிறார். “ சமூகத்துடன் நெருக்கமாக ஒன்றுபட்டுச் செயல்பட்டுவந்த பாரம்பரிய நம்பிக்கை சார்ந்த அமைப்புகளைப் பொருட்படுத்தாமல் ஆங்கிலேய நிர்வாகிகள் இத்தகைய மருத்துவ அமைப்புகளை ஏற்படுத்தினர். ஏற்கனவே இங்கு அமைந்திருந்த அடிப்படைகளை வளர்த்தெடுத்து மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களுடைய தேவைகளுக்கும் உகந்த மாதிரி புதிய மருத்துவ அமைப்பை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏற்படுத்துவதை விட்டுவிட்டு மேற்கத்திய மருத்துவ முறைகளை அப்பட்டமாக முழுமையாகப் புகுத்தியது. மக்களின் பண்பாட்டு பாரம்பரியத்திற்கும் மருத்துவ அமைப்புகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உருவாகக் காரணமானது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆக்கப்பூர்வமாக ஆற்றியிருக்கக் கூடிய பங்களிப்புகளை அது மறுதலித்தது.” என்கிறார்.
இந்நிலையில், ஆயுர்வேதம் அறிவியல்பூர்வமானதா? அறிவியல் நிரூபணம் தேவையா? நவீன அறிவியல் சட்டகத்தை ஆயுர்வேதத்துக்குப் பொருத்துவதில் உள்ள சவால்கள் யாவை? என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன? இனி எந்தத் திசையில் பயணப்பட வேண்டும்? போன்ற சில அடிப்படையான கேள்விகளை எழுப்பிக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.