அறிவியல் பார்வை

மார்ச் மாதம் 14ம் நாள் 1938ம் ஆண்டு வியன்னாவின் ஹேல்டன்ப்ளாட்ஸ் சதுக்கம் கரை புரளும் மகிழ்ச்சியுடைய மக்களால் சூழப்பட்டிருந்தது பெரும் திரளாக ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சதுக்கத்தில் குவிந்திருந்தனர்.
பெரும் வரலாற்று நாயகனுக்காக காத்திருப்பதாக அந்த மக்கள் நம்பினார்கள். உற்சாகம் கரை புரள கொடிகளை விசிறி கொண்டு குடும்பங்கள் ஆவலுடன் இருந்தனர்.
அந்த சதுக்கத்தில் இருந்து 950 மீட்டர் தொலைவில் வியன்னா பல்கலைகழகம் இருந்தது. 1900களில் வியன்னா நவீனத்த்துவ சிந்தனைகளின் உச்சத்தில் இருந்தது. அதில் வியன்னா பல்கலை கழகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இசை,ஓவியம்,கட்டிட கலை, குவாண்டம் அறிவியல், வேதியியல், உயிர் பொறியியல், பொருளாதாரம், இயற்பியல்,இலக்கியம் , தத்துவம் என பல அறிவுஜீவிகள் 414 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வியன்னாவில் அரும் பெரும் சாதனைகளை புரிந்து இருந்தனர்.
உதாரணத்துக்கு சிலர். 1900களில் வியன்னாவின் அறிவுலகை நோக்க , இது சிறு பட்டியல்
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issue1. எர்ன்ஸ்ட் மாக் – இயற்பியல் மற்றும் தத்துவம் – ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டுக்கு முந்தையவர்.
2. லூட்விக் விட்கைன்ஸ்டைன் – தத்துவம்
3. சிக்மண்ட் ப்ராய்ட் -உளவியல்
4. அடால்ப் லூஸ், ஓட்டோ வாக்னர் – கட்டிட கலை
5. எட்வின் ஷ்ராடிங்கர் – குவாண்டம் இயற்பியல், தத்துவம்
6. க்ஸ்டாவ் க்ளிம்ட், ஆஸ்கர் கொக்காஷ்ச்கா — ஓவியம்
7. ஆர்னால்ட் ஷ்னோன்பெர்க் – இசை
8. ஹுகோ ஹாப்மான்ஸ்தால், ராபர்ட் ம்யூசில் – இலக்கியம்
9. லூட்விக் போல்ட்ஸ்மன் – இயற்பியல்
10. கார்ல் பாப்பர் – அறிவியல் தத்துவம்
11. ரிச்சர்ட் கூட்  – உயிர் வேதியல்
12. க்ளமென்ஸ் ப்ரிக்வெட் – மருத்துவம்
இத்தனை பெரும் அறிவியல் திறனுடைய பல்கலை அறிவுடைய நகரத்தில் 250,000 மக்களின் உணர்ச்சிகரமான வரவேற்பின் நடுவில் ஹிட்லர் வியன்னாவுக்குள் நுழைந்தார்.  அவரை நகரம் தங்கள் காவியத் தலைவனாகவே பார்த்தது. சிறு எதிர்ப்பு மட்டுமே இருந்தது.
இத்தனை பெரிய அறிவுலக அறிவியல் பார்வையின் பங்களிப்பு இருந்தும் , இனவெறி உணர்ச்சி பெருக்கெடுத்து நின்றது. அறிவுலகம் பெரும்பாலான மக்களின் அகவுலகை தொடவில்லை.
பிரபஞ்சம் பெரும் லீலைகளை கொண்டது. பிரபஞ்ச லீலைகளின் உள்ளசைவையும், அழகியலையும் கேள்விகளால் தொடர்வது அறிவியலையும், அழகியலையும் மனிதருக்கு அளிக்கிறது. பிறக்கும் பொழுதே மனிதன் கேள்விகளால் உலகை அறிகிறான். குதூகலாமான கேள்விகளுடனே குழந்தைகள் இந்த உலகை சந்திக்கிறது. தனது புலனறிவை கொண்டும், அனுபவத்தினை கொண்டும் உலகினை அள்ள விழைகிறது. அழகை ரசிக்கிறது, புதிய பார்வைகளை உண்டாக்கி கொள்கிறது.
வளரும் பொழுது பேரார்வத்துடன் , மனமகிழ்வுடன் கேள்விகளை நுண்மையாக்கும் ஆற்றல் அமையும் பொழுது அறிவியலோ, அழகியலோ சுதர்மமாகிறது.
அழகியல் கட்டமைப்பை நோக்கி செல்லும் விழைவு இசை, கட்டிடம் , நடனம், ஓவியம், இலக்கியம் போன்றவை மீது படருகிறது.
காற்றின் அசைவு, நீரின் நகர்வு, உடையும் திட பொருள்கள், வளரும் செடி, சுற்றும் கோள்கள், மலரும் பூக்கள், கடலின் அலைகள், எதிரொலிக்கும் ஓலி , மனித மனம் , உயிரியல் , சுற்றுச்சூழல் போன்ற பல ஆயிரம் பிரபஞ்ச லீலைகளின் உள்ளசைவை நோக்கி ஓளிரும் கேள்விகள் மனித இனத்தினை மேலும் மேலும் அறிதலின் விளிம்புகளை விரிவு படுத்திக் கொள்ள உதவுகிறது.
கல்வி அமைப்புகளின் மனித வள பங்களிப்பினை நான்கு வகையாக பிரிக்கலாம்
1. ஞானத்தினைத் தொகுத்து வைக்கும் களஞ்சியமாக இருக்க வேண்டும்.
2. ஞானத்தினைப் பெருக்கும் புதிய கேள்விகளை அணையா பெரு நெருப்பென வளர்க்கும் களமாக இருக்க வேண்டும்.
3. ஞானத்தினைத் தொடரும் மனங்களை தொடர்ந்து உள்ளிழுத்துக் கொள்ளும் வல்லமை வேண்டும்.
4. சமூக அக உலகையும், புற உலகையும் மேலே இட்டுச் செல்லும் திறனுடையதாக இருக்க வேண்டும்.
முறையாக கேள்விகளை உருவாக்க, விவாதிக்க, புரிந்து கொள்ள முன் வருவதே உதவுவதே அக வாழ்வின் மேம்பாட்டுக்கு தேவையான கருவிகளை புற வாழ்வில் உருவாக்க உதவும்.
ஞானச் சூழலில் உருவாகும் அறிவியல் பார்வையை அன்றாட மனித வாழ்வுடன் இணைப்பது அவசியமாகும்.
பிரஞ்சத்தின் லீலைகளை பார்க்கும் புதிய பார்வைகளை கொண்டு மனித உணர்வினை பண்படுத்திக் கொண்டிருத்தலும் ஒரு தொடர் செயலாக இருக்க வேண்டும். கல்விச் சூழலுக்கு அதற்கான கடமை உண்டு. அது இல்லாமல் இருக்கும் சூழல் 950 மீட்டர் தூரத்தில் இரு வேறு மனநிலைகளை உண்டாக்கியதை வரலாற்றில் காணலாம்.