அறத்தை தொலைக்கும் அறிவியல்

Camel_Cigarettes_Ad_Doctors_Smoking_Cancer_Medical_Dead

அறிவியல் நிருபண அடிப்படையில் இயங்கும் துறை. அதில் அரசியலும், அரசாங்கமும் புகுந்து குழப்பினால் என்ன ஆகும்? விபரீதமான விளைவுகளே உண்டாகும். அறிவியல் என்பது நீதிதேவதை சிலை சினிமாவில் கண்களை கட்டிகொண்டு பாரபட்சம் பாராது தீர்ப்பளிப்பதுபோல இருக்கவேண்டும் என நாம் விரும்புகிறோம். ஆனால் உண்மை அப்படி இல்லை. இன்றைய அறிவியல் துறைகளில் நம்பகமான துறை என்பது துளியும் லாபம் வராத துறைகளே. பணமும், அரசியலும் புழங்கும் அறிவியல் துறைகள் பலவும் அரசியல் சூதாட்டத்தில் சிக்கி தவிக்கின்றன.
“சிகரெட் பிடித்தால் கான்சர் வரும்”… குழந்தைக்கும் இன்று தெரியும் இந்த உண்மை வெளிவர சுமார் 25 ஆண்டுகள் பிடித்தன. 1939இல் முதல் முதலாக நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் (Franz Muller) சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். அத்துடன் நில்லாமல் வியப்பூட்டும் வகையில் அஸ்பெஸ்டாஸால் புற்றுநோய் வரும், செகண்ட்ஹாண்ட் ஸ்மோக்கிங்காலும் புற்றுநோய் வரும் என்பதை எல்லாம் நாஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதை எல்லாம் மற்ற நாடுகள் ஏற்க, பல பத்தாண்டுகள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
“மாஸ்டர் ரேஸ்” எனப்படும் “உயர் ஆரிய வகுப்பை” உருவாக்கும் கனவில் இருந்த ஹிட்லருக்குச் சிகரெட் ஒரு பெரும் தீமையாகத் தோன்றியது. அதே சமயம் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் இதெல்லாம் நாஜி பிரச்சாரம் எனச் சொல்லி இதைப் புறக்கணித்தார்கள். ஆனால் ஹிட்லர் சும்மா இருக்காமல் “புகையிலை எதிர்ப்பு மையம்” ஒன்றை தொடங்கினான். நிகோடினின் தீமைகள் அங்கே விரிவாக ஆராயப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issue1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உலகில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. அதனால் சிகரெட்டின் தீமைகள் ஆராயப்படவில்லை. அது கெடுதலானது எனும் விஷயமே பலருக்கும் தெரியவில்லை. 1940, 1950களில் சிகரெட் விற்பனை கொடி கட்டிப் பறந்தது.
அதே சமயம் நுரையீரல் புற்றுநோய் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அமெரிக்க விஞ்ஞானிகள் சிகரெட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அமெரிக்கப் புகையிலை உற்பத்தியாளர் சங்கம், இதைக் கடுமையாக மறுத்தது. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை இச்சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது.
அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஆய்வுகளில் எலிகளைக் கூண்டில் விட்டு, சிகரெட் புகையைக் கூண்டில் செலுத்துவார்கள். சில மாதம் கழித்து எலிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும். ஆனால் “எலிகளை வைத்து நடத்தும் ஆய்வு மனிதர்களுக்குப் பொருந்தாது” எனச் சிகரெட் கம்பனிகள் சாதித்து வந்தன. மனிதர்களைக் கூண்டில் கட்டி வைத்து, சிகரெட் புகையை விட்டு ஆய்வு செய்ய முடியாது என்பதால் அவர்கள் கேட்டதுபோல், மனிதர்களை வைத்து ஆய்வுகள் செய்ய முடியவில்லை.
இந்த யுத்தத்தில் அறிவியல் இருபுறமும் பந்தாடப்பட்டது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும் என்பதை எப்படி நிருபிப்பது எனும் வாத, பிரதிவாதங்கள் சிகரெட் கம்பனி தரப்பு விஞ்ஞானிகளாலும், சிகரெட் எதிர்ப்பு தரப்பு விஞ்ஞானிகளாலும் கடுமையாக நிகழ்த்தப்பட்டன. எலிகளை கூண்டில் அடைத்து சிகரெட் புகைக்கு அவற்றை உள்ளாக்கி அவற்றுக்கு கான்சர் வருவதை உதாரணமாக எடுத்துகாட்டினார்கள் விஞ்ஞானிகள். ஆனால் சிகரெட் கம்பனிகளிடம் நிதியுதவி, கிராண்ட் ஆகியவற்றை பெற்ற விஞ்ஞானிகள் “இது சரியான அறிவியல் முறையல்ல. எலிகளின் உடலமைப்பு வேறு, மனிதரின் உடலமைப்பு வேறு” என வாதம் செய்தார்கள்.
மனிதரை வைத்து இந்த பரிசோதனையை எப்படி நிகழ்த்துவது? ஒருவர் சிகரெட் பிடித்து 20, 30 ஆன்டுகளில் புற்றுநோய் வரும். ஆய்வை 20, 30 ஆண்டுகளுக்கு தொடரமுடியுமா? சிகரெட் பிடிக்கும் பலரும் புற்றுநோயால் பாதிக்கபட்டதை எடுத்து காட்டியபோது “Correlation doesn’t imply causality ” எனும் வாதத்தை பயன்படுத்தி எக்ஸ்பெரிமெண்டல் டிசைன் முறையிலான கோல்ட் ஸ்டான்டர்ட் ஆய்வாக (Double blind study) அது அமையவில்லை என சிகரெட் கம்பனி தரப்பு விஞ்ஞானிகள் வாதாடினார்கள். அப்படி எக்ஸ்பெரிமெண்டல் டிசைன் முறையில் ஆய்வுகளை நடத்த வேண்டுமெனில் எலிகளை வைத்து தான் ஆய்வுகளை நடத்த முடியும். அப்படி செய்தால் “மனிதர் வேறு, எலிகள் வேறு” என சொல்லி அந்த ஆய்வுகளை புறக்கணித்தார்கள்.
ஆக 1950 முதல் 1960 வரை அறிவியல் இப்படி இருதரப்பிலும் இழுத்தடிக்கபட்டது. பத்திரிக்கைகள், மருத்துவ அமைப்புகள் பலவும் சிகரெட் கம்பனிகளின் விளம்பரம், ஸ்பான்சர் பணத்துக்காக அவர்கள் பக்கம் சாய்ந்தார்கள். ஆனால் அதே சமயம் புற்றுநோய் விகிதங்கள் எகிறவும், மக்கள் சிகரெட்டின் அபாயங்கள் குறித்து விவாதிக்க துவங்கினார்கள்
அறிவியலின் பக்கம் நின்றிருக்க வேண்டிய அமெரிக்க மருத்துவர்கள் சங்கம், சிகரெட் கம்பனிகள் பக்கம் நின்றது. மருத்துவர்கள் பலர், சிகரெட் விளம்பரங்களில் தோன்றி “சிகரெட்டில் கெடுதல் இல்லை” என விளம்பரம் செய்தார்கள்.
ஆனால் நுரையீரல் புற்றுநோய் விகிதங்கள் பெருகவும், சிகரெட் கம்பனிகளின் சுதி மாறத் தொடங்கியது. மக்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை லாபி செய்யத் தொடங்கினார்கள். 1960இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கென்னடியிடம் “சிகரெட்டால் புற்றுநோய் வருமா?” எனக் கேட்கப்பட்டது. புகையிலை விவசாயிகளின் ஓட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால் மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பினார் கென்னடி.
ஆனால் உலகின் மற்ற நாடுகளில் அமெரிக்கர்களுக்காகக் காத்திராமல் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாகப் புகையிலையால் புற்றுநோய் வரும் என அறிவித்ததும் வேறு வழியின்றி 1964இல் அமெரிக்க சர்ஜன் ஜெனெரல் “புகையிலையால் புற்றுநோய் வரும்” என அறிவித்தார். அதன்பின் வேறு வழியின்றி அமெரிக்க மருத்துவர் சங்கம் அதை ஏற்றுக்கொண்டது.
அதன்பின் புகையிலை பிடிக்கும் வழக்கம், கணிசமாகக் குறைந்தது. நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்தது போல் விமானங்களிலும் பொது இடங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிகரெட் கம்பனிகள் சும்மா இராமல் “பாதுகாப்பான சிகரெட்டுகளை உருவாக்க ஆராய்ச்சி செய்கிறோம்” என சொல்லி அரசிடம் மக்களின் வரிப்பணத்தை ஆய்வு நிதியாக பெற்று பில்டர் சிகரெட்டுகளை உருவாக்கி வெளியிட்டன. பில்டர் சிகரெட்டால் எப்பயனும் இல்லை என்பதை நிரூபிக்க மேலும் சில ஆண்டுகள் கழிய வேண்டி இருந்தது.
அதன்பின் மேற்கத்திய நாடுகளில் பிசினஸ் படுத்தவுடன், சிகரெட் கம்பனிகள் ஆசியச் சந்தையைக் குறிவைத்துக் களம் இறங்கின. இப்போது அங்கும் வரிகள், சட்டங்கள் மூலம் சிகரெட் விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் சிகரெட் கம்பனிகள் மேல் வழக்கு தொடரப்பட்டது. பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கொடுத்த பின்னரே சிகரெட் தொழில் நசிவடையத் தொடங்கியது. ஆனால் 1940இல் நாஜி ஜெர்மனியில் தொடங்கிய சிகரெட்டுக்கு எதிரான போர், 1990களில் அமெரிக்காவில் ஒரு தெளிவான முடிவுக்கு வருவதற்குள் உலகில் பல மில்லியன் மக்கள் சிகரெட்டால் தம் உயிரை இழந்துவிட்டார்கள். உடல்நலம் பாதிக்கபட்டார்கள். குடும்பங்கள் சிதைந்தன. அரசும், மருத்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் மக்களின் உயிரில் எத்தனை அலட்சியமாக இருப்பார்கள் என்பதற்குப் புற்றுநோய்க்கு எதிரான இந்த யுத்தமே சான்று. அறிவியல் முறைகள் இதற்கு எப்படி வளைக்கப்பட்டு, அறம், நெறிமுறைகளை தாண்டி பயனாகும் என்பதற்கும் சிகரெட் மீதான இந்த யுத்தம் ஒரு சான்று
சிகரெட் மட்டுமின்றி டயட் விவகாரத்திலும் அறிவியல் தன் அறத்தை தொலைத்து பன்னாட்டு உணவுக்கம்பனிகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்துவிட்டதை உதாரணமாக கூறலாம். ஒரு உதாரணமாக சமீபத்தில் தென்கரோலின பல்கலைகழகம் ஒன்று “எனெர்ஜி பேலன்ஸ் இன்ஸ்டிட்யூட்” எனும் நிறுவனத்தை துவக்கியது. அரசு பல்கலைகழகமான இப்பல்கலைகழகம் இந்த நிறுவனம் மூலம் செய்த ஆய்வில் “எதை உண்கிறோம் என்பது முக்கியமல்ல. உண்ட உனவை உடல்பயிற்சி மூலம் எரித்தால் உடல் பருமன் வராது” என்ற கருதுகோளை முன்வைத்து “உடல்பயிற்சி செய்தால் கோக், பெப்ஸி மாதிரி குளிர்பானங்களை பருகுவதால் உடல்பருமன் உண்டாகாது” எனவும் கூறியது
அதன்பின் தான் அந்த தகவல் வெளியானது. இந்த எனெர்ஜி பேலன்ஸ் அமைப்பு முழுக்க, முழுக்க கொக்கொகோலாவின் நிதியுதவியுடன் நடத்தபடுகிறது என்ற தகவல் வெளியானது. அதன்பின் அந்த அமைப்பின் முகநூல் பக்கத்தில் மிக கடுமையான பின்னூட்டங்கள் பதியப்பட்டன. ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியானவுடன் எனெர்ஜி பேலன்ஸ் அமைப்பு கோக் அளித்த ஒரு மில்லியன் டாலர் நிதியை கோக்குக்கே திருப்பி கொடுத்துவிட்டு, அமைப்பை இழுத்து மூடியது.
இன்றைக்கும் பல டயட் சங்கங்கள் நடத்தும் கருத்தரங்குகள் கோக், பெப்ஸி மற்றும் மெக்டானல்ட்ஸ் போன்ற நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யபடுகின்றன. அரசின் உணவு பிரமிட்டை தீர்மானிக்கும் விஞ்ஞானிகள் அனைவரும் உணவுகம்பனியில் வேலைபார்த்தவர்கள், அல்லது அவற்றிடம் பெரும்தொகையை ஆய்வுநிதியாக பெற்றவர்கள். இவர்கள் எழுதும் டயட் வழிமுறைகள் சார்பற்று இருக்கும் என்பதை எப்படி நம்புவது? அமெரிக்க ஹார்ட் அசோசியேசன், அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் ஆகியவை கெல்லாக்ஸ், ஜெனெரல் மில்ஸ் மாதிரி கம்பனிகளிடம் பல லட்சம் டாலர் ஸ்பான்சர் தொகை பெற்றுள்ளன. அதனால் குறைந்த கொழுப்பு சத்துள்ள சீரியல் மாதிரி உணவுகளை ஆரோக்கிய உணவுகளாக பரிந்துரைக்கின்றன. இது சார்பற்ற பரிந்துரை என நம்மால் எப்படி நம்ப முடியும்?
அதனால் பல பில்லியன் டாலர் புழங்கும் உணவு, டயட் துறைகள் அறிவியலை தம் விருப்பபடி வளைத்து அதிலுள்ள அறத்தை தொலைக்க வைத்ததை அறியாத பொதுமக்கள் இவ்வமைப்புகளின் பரிந்துரைகளை நம்பி தம் உடல்நலனை தொலைத்து வருவதை வேதனயுடன் சுட்டிகாட்ட விழைகிறேன். அதிகரிக்கும் வியாதிகள், உடல்பருமன் ஆகியவை இவற்றின் விளைவே ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.