அனுமன் போல் பறக்கும் கார்கள்

Self_driving_car_Automotive_Vehicles

எதிர்காலத்தை கணிப்பது கடினமானது ஆனால் சுவாரசியமானதும் கூட. குறிப்பாக அறிவியல், தொழிற்நுட்ப முன்னேற்றங்களை கணிப்பது ஒரு சுவாரசியமான சவால். இருபது வருடங்களுக்கு முன்னர் யாராவது ஒருவர் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த விரல் நுனி உலகத்தை கணித்திருந்தால் நல்ல புனைவென நகைத்து கடந்திருப்போம். அப்போது தொலைபேசி/செல்பேசி என்பது தகவலை குரல் வழியே பரிமாற்றும் ஒரு சாதனம் அவ்வளவே. வெறும் போனாக இருந்தது மெசேஜ், மியூசிக் ப்ளையர், கேமரா, இணையம், டார்ச்லைட், எப் எம் ரேடியோ 🙂 உடன் இணைந்து ஸ்மார்ட் ஃபோனாக உருவெடுத்தது. இன்றைக்கு நம் தினசரி தேவைகளில் 99% சதவீகிதத்தை மொபைலின் உதவியுடனே செய்யுமளவுக்கு பெருவளர்ச்சியடைந்திருக்கிறது. செல்பேசியைப்போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சியும் கடந்த பத்து வருடங்களில் வெறும் டிவியிலிருந்து ஸ்மார்ட் டிவியாக மாறியிருக்கிறது. இந்த வரிசையில் அடுத்த இருபது வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தையடையும் என நிபுணர்களின் கணிப்பது – கார்கள்.

நீங்கள் உங்கள் அலுவலகத்தின் எட்டாவது மாடியிலிருந்து கிளம்பும்போது உங்கள் தானியங்கி காரை அலுவலக பார்க்கிங்கிலிருந்து அலுவலக வாயிலுக்கு வரச்சொல்லி அழைக்கலாம். நீங்கள் லிஃப்டில் தரைத்தளத்தை வந்தடையுமுன் உங்கள் கார் வாசலுக்கு வந்திருக்கும். காரின் பின்னிருக்கையில் ஹாயாக அமர்ந்து காரிலிருக்கும் பெரியத்திரை தொலைக்காட்சியில் காரின் wifi உதவியுடன் நெட்ஃப்ளிக்ஸில் ஒரு ட்ரெண்டிங் வீடியோ ஒன்றை பார்த்து ரிலாக்ஸாகலாம். காலையில் வூட்டம்மணி சொன்ன மளிகைச்சமான்களை நல்ல டீலில் வாங்க, போகிற வழியில் ஏதாவது கடையிருக்கிறதா எனக்காரை கேட்டால், உங்கள் கார் தனது நேவிகேசன் சிஸ்டம் உதவியுடனும், டீல்ஸ் ஆப்ஸ் உதவியுடனும் கடையை கண்டறிந்து கடை வாசலில் நிறுத்தும். ஷாப்பிங்கை முடித்துவிட்டு ரெண்டு செட் தோசை சாப்பிட நினைத்தால் zomatoவில் நல்ல ரேட்டிங் இருக்கிற, அந்த நேரத்தில் திறந்திருக்கிற ஒரு ஹோட்டலை கண்டறிந்து, உங்கள் காரே அங்கே கொண்டு போய் நிறுத்தும். சாப்பிட்டு காரேரினால் ஆன்சைட் கடன்காரன் அந்த நாளைய ஸ்டேடஸ் அப்டேட் கேட்டிருப்பதை உங்கள் காரின் மெசேஜ் ஆப் நினைவுபடுத்தும். அவனுக்கு அப்டேடிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டால் கார் உங்கள் வீட்டின் பார்க்கிங்கில் தன்னை நிலைநிறுத்தியிருக்கும். காரிலிருந்து இறங்கி உங்கள் பெட்ரூமுக்கு போவது மட்டும்தான் உங்கள் வேலை. காரிலையே மறந்து விட்ட லஞ்ச் பாக்ஸை கூட, ஞாபகப்படுத்தி வூட்டம்மணியிடமிருந்து உங்களை பாதுகாக்கும்.

தானியங்கி ஸ்மார்ட் கார்களை தயாரிக்கும் முயற்சியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் களமிறங்கிவிட்டன. மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளில் சிலவற்றை இப்போதே தங்களது உயர்ரக கார்களில் பயன்படுத்தி பரிசோதிக்கத்தொடங்கிவிட்டன. இதில் சுவாரசியமாக கார் தயாரிப்பில், நாம் கேள்விப்படாத மூன்று நிறுவனங்கள்தான் ஸ்மார்ட் கார்களில் முக்கிய பங்களிக்கப்போவதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவை கூகுள், டெஸ்லா மற்றும் உபர். இவர்கள் ஒவ்வொருவரின் திட்டம், முயற்சியை பற்றி தனித்தனி கட்டுரைகளாக எழுதினால்தான் சரியாக இருக்கும். இந்தக்கட்டுரை பொதுவாக அடுத்த இருபது வருடங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்றளவில் மட்டும்.
அடுத்த ஓரிரு வருடங்களில் …
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_IssueCar Connectivityயில் மிகப்பெரிய மாற்றம் வரும். செல்போனில் 4G LTE சிம்கார்டுகளை இணைப்பதுபோல உங்கள் காரிலும் இணைக்கும் வசதி வரும், அதன் மூலம் உங்கள் கார் எப்போதும் இணையத்தொடர்பிலிருக்கும். பழைய கார்கள் உடையவர்கள் Android Auto, Apple Carplay போன்றவற்றை பயன்படுத்த தொடங்குவார்கள். உங்கள் கார் ஹாட்ஸ்பாட்டாக மாறி உங்கள் லேப்டாப்பை வைபையில் இணைக்கலாம். Car Dashboardலியே போன் பேச இயலும், கூகுளின் உதவியோடு வாய்ஸ் டு டெக்ஸ்ட் பயன்படுத்தி SMS அனுப்பலாம். Spotifyயில் பிடித்த பாட்டைக்கேட்கலாம். போகிற வழியிலிருக்கிற நல்ல ஹோட்டலை கண்டறியசொல்லி கூகுளை பணிக்கலாம்.
10 இஞ்சுக்கும் சிறிய நேவிகேசன் சிஸ்டமில் கண்களை சுருக்கி வழிதேடும் காலம் மலையேறும். உங்கள் காரின் windscreenயே பெரிய திரையாக மாறும். உங்களுக்கு தேவையான அனைத்து நேவிகேசன் தகவல்களும் windscreenலியே தெளிவாக தெரியும். இப்போதே சில ஆப்களின் உதவியோடு இதை செய்யமுடியும் என்றாலும், பகல் இரவு சூழல் , வெளியிலிருக்கு ஒளியளவில் இருக்கும் மாறுதல்களால் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் களையப்பட்டு Head-up Displayவில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
கார்களை திறக்கவும் இயக்கவும் கீ தேவைப்படும் என்கிற நிலையிலிருந்து இப்போதே ரீமோட்டில் இயங்கும் கீ-லெஸ் முறைக்கு மாறிவிட்டோம். இதிலிருந்து அடுத்தபடியாக ரிமோட்டும் தேவைப்படாத வகையில் fingerprint sensorன் உதவியோடு உங்கள் காரை திறக்கவும் இயக்கவும் முடியும். காரின் உள்ளிருக்கும் கேமராவும் சென்சாரும் ஓட்டுனரை தொடர்ந்து கவனிக்கும். ஓட்டுனர் சற்று கண்ணயர்ந்தாலோ, சோர்வடைந்தாலோ உடனே எச்சரிக்கை ஒலித்து, கார் தானாகவே சாலை ஓரத்தையடைந்துவிடும். அதுபோலவே காரின் உள்ளிருக்கும் சென்சார் ஓட்டுநரின் இதயத்துடிப்பையும், மூச்சுக்காற்றையும் தொடர்ந்து கண்காணிக்கும். எதிர்பாராமல் அவருக்கு மாரடைப்பு மாதிரியான அவசர நிலை ஏற்பட்டால் கார் தானாகவே இந்த அலெர்ட் மோடுக்கு மாறிவிடும். ஓட்டுநர் மது அருந்தியிருந்தால் இந்த லட்சுமிக்கள் கண்டறிந்து ஓடமறுக்கும்.
அடுத்த 5 – 10 வருடங்களில் …
Driver Assist Technologyயில் மிகப்பெரிய முன்னேற்றம் நிகழும். முன்செல்கிற வாகனங்களின் வேகத்தைப்பொறுத்து, தன்னாலே வேகத்தை கட்டுப்படுத்தும் கார்கள் சாலைகளில் நிறைந்திருக்கும். ஓட்டுநர் பிரேக்கை மிதிக்க தவறினால் கூட கார்களே தேவைக்கேற்ப பிரேக்கை பயன்படுத்தும். ஹைவேயில் லேன் மாறுவது சிங்கிள் பட்டன் க்ளிக்கில் கட்சி மாறுவதை விட எளிதாகும். Vehicle to vehicle communications சாத்தியமாகும். ஒவ்வொரு காரிலும் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் + வீடியோ கேமராக்கள் உதவியோடு கார்கள் தங்களுக்குள் பேசத்தொடங்கும். நம்ம கார் “ஓரம்போ, ஓரம்போ, ருக்குமணி வண்டி வருது” எனப்பாடினால், நமக்கு முன்னால் போகிற கார் “ருக்கு, வழிவிடறதுல எனக்கு பிரச்சனையில்ல. எனக்கு முன்னாடி பேயாட்டாம் போறவனை நீ மோதாம கடக்கணும்னு 3.25 செகண்ட்ல 27.5 டிகிரி இடதுபக்கமாய் வளைத்து 3.55 செகண்ட்ல 140 கிமீயாக ஆக்ஸ்ஸலரேட் செஞ்சாகனும்” என சமூக அக்கறைக் கனியாய் எச்சரிக்கும். Accident Safety Systems இன்னும் வலுப்பெறும். விபத்தை உணர்ந்தவுடன் மோதலைப்பொறுத்து கார் சீட்கள் மைக்ரோ விநாடியில் தானாக இடம் நகரும். இதனால் பயணிகள் பாதுகாப்பு இன்னும் வலுப்பெறும்.
உங்கள் கார்களுக்கும் Software, Firmware update எல்லாம் தேவைப்படும். நீங்கள் போகிற வழியில் உங்களுக்கு முன்னால் பயணித்த கார்களின் அனுபவத்தகவல்கள் உங்கள் காரை உடனுக்குடன் வந்தடையும். டெலிபோன் கேபிளுக்காக தோண்டப்பட்டு பின்னர் சரியாக மூடப்படாத சாலையில் குதித்து இறங்கி/ஏறிய விவரம் உங்கள் காருக்கு உடனே அனுப்பபட்டு, நீங்கள் அந்த இடத்தை நெருங்கும்போது எச்சரிக்கப்படுவீர்கள். திருடுபோன காரைப்பற்றி புகார் தெரிவித்தால் FIR copy ரெடியாகுமுன் remote vehicle shutdown மூலம் உங்கள் கார் மடக்கப்பட்டுவிடும்.
அடுத்த 20 வருடங்களில் …
நீங்கள் உங்கள் அலுவலகத்தின் எட்டாவது மாடியிலிருந்து கிளம்பும்போது உங்கள் தானியங்கி காரை அலுவலக பார்க்கிங்கிலிருந்து அலுவலக வாயிலுக்கு வரச்சொல்லி அழைப்பீர்கள் … பரிசோதனையிலிருக்கும் பறக்கும் கார் ஒன்று உங்கள் ஜன்னலைக் கடக்கும் ..

One Reply to “அனுமன் போல் பறக்கும் கார்கள்”

  1. கட்டுரையில் கணித்திருக்கும் மாற்றங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.