அணு விவாகம்

கல்பாக்கத்தில் இருந்து ஆரம்பித்து உலகெங்கிலும் ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களும் சரி, செர்நோபில், புகுஷிமா போல விபத்துக்குள்ளாகி பேரிடர் நிகழ்வித்த அணு மின் நிலையங்களும் சரி, மின்சார உற்பத்திக்கு அணுவைப்பிளக்கும் (Nuclear Fission) தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கின்றன. ஒழுங்காய் இருக்கும் குடும்பத்தை உடைத்துப்போடும் விவாகரத்தை போல, அணுவைப்பிளந்து இரண்டாக உடைக்கும்போதும் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகளை சரியாக கையாள்வது மிக அவசியம். கூடங்குளத்தின் தயவில் சமீபத்தில் இந்த விளைவுகளைப்பற்றி சரியும் தவறுமாய் ஊடகங்கள் நிறைய விவாதித்திருக்கின்றன.
அந்த விவாகரத்து/குடும்பத்தை உடை என்கிற முறைக்கு பதிலாக இரண்டு அணுக்களுக்கு விவாகம் செய்வித்து ஒன்றாக்கி (Nuclear Fusion) அதன் மூலமும் ஆற்றலை (Energy) வெளிக்கொணரலாம். அப்படி வெளிவரும் சக்தியை திறமையாக கையாள முடிந்தால் மின்சாரமும் தயாரிக்கலாம்.

Fusion_Reactor_Image

நன்றாக நடந்து முடியும் திருமணங்களைப்போல, அணுக்களை இணைக்கும் போதும் நேரும் பின் விளைவுகள் யாவும் மகிழ்ச்சிகரமானவையே. இத்துறையில் இருப்பவர்களுக்கு இது வெகு காலமாகவே தெரிந்த விஷயம்தான் என்றாலும், இந்த திருமணத்தை முறையே நடத்தி வைப்பது மிகவும் கடினம் என்பதால், இதைப்பற்றி அதிகம் யாரும் பேசுவதில்லை. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ் முதலிய பல அரசாங்கங்கள் இணைந்து சில ஆய்வகங்களிலும், தனித்தனியே நடத்தும் பல சோதனை முயற்சிகள் மூலமாகவும் இந்த அணுக்கரு இணைப்பு தொழில் நுட்பத்தை முன்னேற்ற முயன்று கொண்டிருக்கின்றன. பத்து இருபது வருடங்களுக்கு முன் வரை இது கவைக்கு உதவாத அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயமாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் சில முன்னேற்றங்களால் பல சிறிய நிறுவனங்கள் இதை நடத்தி வெற்றி பெறுவோம் என்று சத்தம் போடாமல் களமிறங்கி இருக்கின்றன.
ஒரு அணுவை இரண்டாக பிளப்பதற்கும் இரு அணுக்களை ஒன்றாக இணைப்பதற்கும் தேவையான இயற்பியல்/வேதியல் வினைகளுக்கிடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. அணுப்பிளவை நிகழ்த்த யுரேனியம் போன்ற கனரக தனிமங்களை (Heavy Elements) நிறைய சுத்தம் செய்து நியூட்ரான் என்ற நுண் துகள்களால் அதை தாக்குகிறார்கள். அடி வாங்கும் யுரேனிய அணு கோபத்துடன் வெடித்து இரண்டாக உடைவதுடன் வெப்பத்தையும் இன்னும் சில நியூட்ரான்களையும் பிரசவிக்கிறது. அந்த நியூட்ரான்கள் அருகில் இருக்கும் வேறு யுரேனியம் அணுக்களை தாக்கி உடைக்க, இந்த வினை முடிவில்லாமல் யுரேனியம் பாக்கி இருக்கும் வரை தொடரும்.

fissionT

சும்மா இஷ்டத்துக்கு வெடிக்கட்டும் என்று விட்டுவிட்டால் இதுதான் அணுகுண்டு. ஓரிரு வினாடிகளில் ஊரையே ஒழித்து விடும். அதற்கு பதில், வெளிவரும் பெருவாரியான நியூட்ரான்களை வினை நடக்கும் அணு உலையில் இருந்து உறிஞ்சி அகற்றிவிட்டு மிக சிலவற்றை மட்டும் தப்பிக்க விடுவதன் மூலம் தேவையான அளவு மட்டும் வெடிக்கும் சரவெடியாய் வாண வேடிக்கையை கட்டுப்படுத்தி தொடர வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை வைத்து நீராவி தயாரித்து, ஜெனெரேடர்ளை சுற்றவிட்டு மின்சாரம் தயாரிக்கலாம்.
இந்த மாதிரியான அணு பிளவு வினைகள் இயற்கையில் சாதாரணமாக எங்கும் நிகழ்வதில்லை. நாம்தான் செயற்கையாய் அணு எடை மிகுந்த ஒரு தனிமத்தை வம்புக்கு இழுத்து, அடித்து உதைத்து துவக்கிவிட வேண்டியிருக்கிறது. இதை நிகழ்த்த இந்த உலைகளுக்கு எரிபொருளான, பூமிக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் யுரேனியம் போன்ற கிடைப்பதற்கு அரிதான கனரக தனிமங்களை தோண்டி எடுக்க வேண்டும். யுரேனியம் உடையும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு போர்த்தி மறைத்து பாதுகாக்க வேண்டிய நிறைய கதிர்வீச்சு உள்ள விஷயங்கள் வேறு வெளிவந்து பயம் காட்டுகின்றன.
அணுக்கரு இணைவு இந்த எல்லா குணாதிசயங்களில் இருந்தும் வேறு பட்டது. இந்த வினையில் சும்மா இருக்கும் ஒரு பெரிய அணுவை இரண்டாய் உடைப்பதற்கு பதில், இரு சிறு அணுக்கள் எக்கச்சக்கமான வெப்பமும் அழுத்தமும் இருக்கும் இடத்தில் ஒன்றோடு ஒன்று மோத வைக்கப்படுகின்றன. மோதலினால் அதன் கருக்கள் ஒன்றிணைய, புதிய சற்றே பெரிய அணு ஒன்று உருவெடுக்கிறது. அந்த புதிய அணுவின் எடை ஒன்றிணைந்த இரு சிறிய அணுக்களின் மொத்த எடையை விட சிறிதே குறைவாக இருக்கும். அந்த எடை வித்யாசம் (M), ஐன்ஸ்டைனின் E=MC2 என்ற சமன்பாட்டை மதித்து, சக்தியாக மாறி நிறைய வெப்பத்தையும் அழுத்ததையும் உமிழும். அதனால் அருகில் உள்ள அடுத்த இரண்டு சிறிய அணுக்கள் மோதி திருமணம் செய்து கொள்ள சங்கிலித்தொடராய் வினை தொடரும்.
அனுப்பிளவைப் போலன்றி இயற்கையில் சூரியன் மற்றும் உலகில் உள்ள எல்லா நட்சத்திரங்களிலும் நாள்தோறும் வினாடிக்கு வினாடி தொடர்ந்து நடைபெற்று வரும் வினைதான் இந்த அணுக்கரு இணைப்பு. இந்த திருமணம்தான் சூரியனின் வெப்பத்திற்கும் வெளிச்சத்திற்கும் காரணம்.

fusionT

இப்படி மோதி ஒன்றாகும் வினையில் வழக்கமாக பங்கேற்கும் அல்லது உபயோகப்படுத்தப்படும் அணுக்கள் எளிதில் கிடைக்கும் ஹைட்ரஜன் வாயு குடும்பத்தை சேர்ந்த டியூடிரியம் மற்றும் ட்ரைடியம் (Isotopes of Hydrogen) என்பதால், வினைக்கு தேவையான எரிபொருள் அரிதில் கிடைக்கும் யுரேனியம் போன்ற சுரங்கம் வெட்டி தோண்டி எடுக்கவேண்டிய கனரக தனிம விஷயம் ஏதும் இல்லை. இந்த வினையில் இருந்து கதிர்வீச்சு எதுவும் பிரமாதமாக புறப்படுவதில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு. வினையில் இருந்து கொஞ்சமாய் வெளிப்படும் நியூட்ரான் நுண் துகள்கள் அருகில் உள்ள வேறு ஏதாவது அணுக்களை தன்னிச்சையாய் போய் துளைக்காமல் பார்த்துக்கொண்டால் போதும். ஆகையால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு மூடி மறைத்து பாதுகாக்கப்பட வேண்டிய நச்சுப்பொருட்கள் பற்றிய கவலை ஏதும் இல்லை. இதிலிருந்து வெளிப்படும் சற்றே பெரிதான அணு ஹீலியம் வாயுவுடையது. பலூனில் போட்டு பயப்படாமல் பாப்பாக்களிடம் விளையாட கொடுக்கலாம். இந்த வினையில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அணுபிளவில் இருந்து கிடைப்பதை விட நான்கைந்து மடங்கு அதிகம்!
இப்படி சுத்தமான, சுற்றுபுறசூழலுக்கு பாதுகாப்பான என்று பல நல்ல ‘ன’ நிறைந்த முறை இது, சக்தியை நிறைய கொடுக்கிறது, எரிபொருளும் எளிதாக கிடைக்கும் என்றால் இந்த விவாகத்தை நடத்தாமல் ஏன் அந்த தலைவேதனை பிடித்த அணுப்பிளவு விவகாரத்தை அல்லது விவாகரத்தை கட்டிக்கொண்டு முழிக்கிறோம் என்று தோன்றுகிறதல்லவா? பிரச்சினை இந்த விவாக வேள்வியை நடத்த தேவையான வெப்பமும் அழுத்தமும் தலை சுற்ற வைக்கும் அளவு அதிகமாக இருப்பதுதான். சூரியனிலும் மற்ற நட்சத்திரங்களிலும் அவற்றின் எடை மிக அதிகமாக இருந்து தேவையான அழுத்தத்தை உருவாக்கி கொடுத்து விடுகிறது. நிகழும் அணுக்கரு இணைப்பு வினையில் இருந்து வெளிப்படும் ஏராளமான வெப்பம் வினை தொடர வழி செய்கிறது. எனவே அங்கெல்லாம் வெப்பம், அழுத்தம் இரண்டுக்குமே குறைவில்லை.

Nuclear-Fusion

பூமியில் அதே வினையை நிகழ்த்த வேண்டுமானால் ஒரு குட்டி நட்சத்திரத்தில் நிலவும் வெப்ப அழுத்த நிலைகளை இங்கேயே உருவாக்க வேண்டும். அதெல்லாம் முடிகிற காரியமா என்றால், ஒரு விதத்தில் போன நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே செய்து காட்டப்பட்ட காரியம்தான் அது. அணு குண்டுக்கு மேலாக ஹைட்ரஜன் குண்டு (அல்லது thermonuclear explosion) என்று ஒன்று கேள்விப்பட்டிருந்தீர்களானால் அதுதான் இது. ஹைட்ரஜன் குண்டில், முதலில் சாதாரண அணுகுண்டில் நிகழும் அணுப்பிளவை நடத்தி, அதனால் உண்டாகும் அளவுக்கதிகமான வெப்பத்தையும் அழுத்தத்தையும் உபயோகித்து ஹைட்ரஜன் அணுக்களை மோதவிட்டு அணுக்கரு இணைப்பை நிகழ்த்தி இன்னும் பெரிய வாண வேடிக்கை காட்டுகிறார்கள். ஆகவே மனிதர்களால் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பதற்காக இதை செய்ய முடியும். ஆனால் அமைதியாக மின்சாரம் தயாரிக்க முனையும்போது, தேவையான வெப்ப அழுத்த நிலைகளை உருவாக்க அணுகுண்டு ஒன்றை வெடிப்பது புத்திசாலித்தனமான யோசனை இல்லை. வேறு ஏதாவது சுமுகமான முறையில் திரியை பற்ற வைத்தாலும், அதன் பின் தொடரும் வினையை வெடித்தும் சிதறாமல், அதே சமயம் அணைந்தும் போகாமல் சரியான அளவில் தொடரச்செய்வது எப்படி என்பது இன்னும் விடை கிடைக்காத பெரிய புதிர்.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஅணுக்கரு இணைப்புக்கு அப்படி எவ்வளவுதான் வெப்பம் தேவை என்று புரிந்து கொள்ள 24×7 அந்த வினை விடாது நடந்து கொண்டிருக்கும் சூரியனை நெருங்கி பார்க்கலாம். உதாரணத்திற்கு சூரியனின் மேற்பரப்பிலேயே வெப்பம் 5,000 டிகிரி செண்டிக்கிரேடுக்கு மேல். அதன் மிக நடுவில் வெப்ப நிலை 2.7 கோடி டிகிரியை தாண்டி விடுகிறது! சூரியனின் எடையோ பூமியை போல் 3.3 லட்சத்திற்கும் மேல். அதனால் புவி ஈர்ப்பு விசைக்கு இணையாக அங்கே நிலவும் சூரிய ஈர்ப்பு விசையும் எக்கச்சக்கம்! சூரியனையொத்த அவ்வளவு பெரிய பரப்பளவில் வெப்பம் அழுத்தம் எல்லாவற்றையும் நாம் ஏற்படுத்துவது இயலாத காரியம். அது தேவையும் இல்லை. நமது தேவைக்கேற்ப ஒரு மிகச்சிறிய பரப்பளவில் பூமியில் அத்தகைய வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தி அணுக்கரு இணைவை நாம் நிகழ்த்தினாலே போதும். அதை செய்யமுடிந்தாலும், எரிபொருள் (ஹைட்ரஜன்) சூரியனில் இருக்குமளவுக்கு அதே நிலையில் இருக்கப்போவதில்லை என்பதால், மூன்று கோடி டிகிரிக்கு பதில், இங்கே 10 கோடி டிகிரி அளவுக்கு வெப்பத்தை உருவாக்கினால்தான் வேலை நடக்கும்!
அவ்வளவு வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உட்படுத்தப்படும்போது ஹைட்ரஜன் அணுக்கள் திட, திரவ, வாயு நிலைகளை எல்லாம் துறந்து, பிளாஸ்மா என்ற நான்காம் நிலைக்கு போய் விடுகின்றன. அந்த நிலையில் அது எதன் மேல் பட்டாலும் அது உடனே பஸ்பமாகிவிடும்! ஆகவே அந்த வஸ்துவை எப்படி கையாள்வது என்பதே ஒரு பெரிய பிரச்சினை. அது மின்காந்தத்தால் பாதிக்கப்படுகிறது என்பதால், அது பிளாஸ்மா ஆக மாறும் கணத்திலிருந்தே காந்த சக்தியால் அதை சிறையும் வைத்து அதே சமயம் அழுத்தத்தையும் அதிகரிக்கும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் முயற்சி நடந்து வருகிறது.
சுருங்கச்சொன்னால், அணுக்கரு இணைப்பை நிகழ்த்த இரு பெரும் பிரச்சினைகளை நாம் சமாளித்தாக வேண்டும்.
1. முதல் பிரச்சினை இதற்கு தேவையான மிக மிக அதிகமான வெப்பத்தையும் அழுத்தத்தையும் ஒரு சேர உருவாக்கி அங்கே ஹைட்ரஜன் போன்ற எரிபொருளை கொண்டுவந்து சேர்த்து மோத வைப்பது.
2. இரண்டாவது பிரச்சினை வெற்றிகரமாய் இந்த வினையை துவக்கினாலும், அதை முறையாக கையாண்டு தொடர வைத்து வெப்பத்தை அறுவடை செய்வது.
சூரியனில் இருப்பதை விட அதிகமாக வெப்பத்தையும் அழுத்ததையும் பூமியில் சிறிய பரப்பளவில் உருவாக்குவது எப்படி என்று முயற்சிக்க 35 நாடுகள் சேர்ந்து ஃபிரான்ஸ்சின் தென் பகுதியில் சர்வதேச வெப்பாற்றல் சோதனை அணு உலை (International Thermonuclear Experimental Reactor) என்று ஒன்றை ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் (இருபது பில்லியன் டாலர்கள்) முப்பத்தைந்து வருட பிளான் போட்டு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிற்கும் இதில் பங்குண்டு. உலகின் மிகப்பெரிய சர்வதேச ஆய்வு முயற்சிகளில் ஒன்று என்று சொல்லப்படும் Large Hadron Collider கட்ட செலவிடப்படும் பணம் இதில் கால்வாசி கூட கிடையாது! சமயம் கிடைக்கும்போது அந்த ITER ப்ராஜக்டின் வலைதளத்தை ஒரு நடை சென்று பார்த்து விடுங்கள்.
ITER விஞ்ஞானிகள் இத்துறையில் வழக்கமாக உபயோகப்படுத்தப்படும் டோக்கமாக் (Tokamak) என்ற ரஷ்யாவினால் 1950களில் உருவாக்கப்பட்ட அமைப்பை உபயோகித்து அணுக்கரு இணைப்பை நடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். டோக்கமாக் என்பது உலோகத்தால் செய்யப்பட்ட உட்புறம் காலியான பெரிய ஒரு வளையம். வெளிப்புறம் அதைசுற்றி நிறைய காயில்களை அமைத்து, அதில் மின்சாரத்தை செலுத்துவதன் மூலம் உள்ளே மிகச்சக்தி வாய்ந்த மின்காந்த புலத்தை (Electromagnetic Field) உருவாக்கி அதன் மூலம் வளையத்தினுள் சுற்றும் பிளாஸ்மாவை சொன்னபடி கேட்டு நடனமாட வைப்பதுதான் திட்டம்.

iter_fusion

இது ஒரு சர்வதேச அரசாங்க பல்கலைகழக முயற்சி என்பதால், முதலில் போட்ட பட்ஜெட்டை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நிறைய பணத்தையும் வருடங்களையும் சாப்பிட்டுக்கொண்டு ஆமை வேகத்தில் ப்ராஜக்ட் தொடர்ந்து வருகிறது. கட்டுமான வேலை முடியும்போது உலகிலேயே மிகப்பெரிய அணுக்கரு இணைய உலை இதுவாகத்தான் இருக்கும் என்றாலும், இதை கட்டி முடிக்க 2027 ஆகி விடும் என்கிறார்கள். இவ்வளவு பொருட்செலவில் கட்டப்பட்டாலும், இது இயங்கும்போது வெறும் ஆராய்ச்சிகூடமாக மட்டுமே இருக்கும். இதிலிருந்து கிடைக்கும் சக்தியை கொண்டு மின்சாரம் தயாரித்து நாலு வீடுகளில் விளக்கேற்றிவைக்க ஜெனரேட்டர்கள் ஏதும் இங்கே கிடையாது.
இதற்கு இணையாக, சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் லாரன்ஸ் லிவெர்மோர் தேசிய ஆய்வகத்தில் வேறு ஒரு முயற்சி நடந்து வருகிறது. அங்கே National Ignition Facility என்ற அடுத்த படத்திலிருக்கும் ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் சுமார் மூன்று கால் பந்து மைதானங்கள் கொள்ளும் சைஸில் பத்து மாடி உயரத்திற்கு மிகப்பெரிய லேசர்களை வைத்து, அமெரிக்கா முழுதுக்கும் தேவைப்படுவது போல் ஆயிரம் பங்கு ஆற்றலை சேர்த்து மிகமிக குறைந்த நேரம் (ஒரு வினாடியில் 200 கோடியில் ஒரு பங்கு!) ஹைட்ரஜன் அணுக்களின் மேல் அடித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாட்டுக்கு Inertial Confinement Fusion என்று பெயர்.

fusion-reactor-lasers

இந்தத்துறையை பற்றி கிண்டலடிப்பவர்கள் பலகாலமாக அடித்துவரும் ஜோக் “இன்னும் ஒரு இருபது வருடங்களில் வெற்றிகரமாக அணுக்கரு இணைப்பின் மூலம் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்து விடுவோம் என்ற இவர்களின் அறிவிப்பு கடந்த ஐம்பது வருடங்களாக கொஞ்சமும் மாறாமல் நிலையாக இருந்து வருகிறது, இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்தும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறோம்”, என்பதுதான்!
ஆனால் சென்ற நூற்றாண்டு போலில்லாமல் இப்போது இது விரைவில் சாத்தியம் ஆகும் என்று பலரும் நம்ப ஆரம்பித்திருப்பதால், முன் சொன்னதுபோல் தனியார் கம்பனிகள் களத்தில் குதித்திருக்கின்றன. உதாரணமாக கனடாவில் இயங்கிவரும் ஜெனரல் ப்யுஷன், அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கும் ஹிலியான் எனர்ஜி, கலிபோர்னியாவில் ஒளிந்திருக்கும் ட்ரை ஆல்ஃபா எனர்ஜி, என்று பலவற்றை சொல்லலாம். IT துறைகளில் புகுந்து நிறைய பணம் பார்த்த அமேசானின் ஜெஃப் பெஸோஸ், மைக்ரோசாப்டின் பால் ஆலன், பே-பால் (PayPal) கம்பனியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான பீட்டர் திஇல் போன்றவர்கள் இந்த தனியார் கம்பனிகளில் நிறைய முதலீடு செய்திருக்கிறார்கள். ரொம்ப காலமாக அமெரிக்க ராணுவத்திற்கு F-16 போன்ற ஃபைட்டர் விமானங்களையும் ராணுவ தளவாடங்களையும் தயாரித்தளித்துவரும் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் கூட இதில் புகுந்து இன்னும் ஐந்தே வருடங்களில் ஒரு லாரியின் பின்னே வைத்து ஒட்டும்படியான அணுக்கரு இணைப்பை உபயோகித்து இயங்கும் குட்டி ஜெனரெட்டரை உருவாக்கி காட்டுகிறோம் என்று போன வருடம் சவால் விட்டிருக்கிறார்கள்.
தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் அனைவரும், அரசாங்க, பல்கலைகழக ஆய்வாளர்கள் போல் நாங்கள் விடியும்வரை கட்டுரைகள் எழுதிக்கொண்டும் மாநாடுகளில் அரட்டை அடித்துக்கொண்டும் பொழுதுபோக்கப் போவதில்லை. ஏதாவது ஒரு விஷயம் ஒழுங்காக வேலை செய்தால் அது எப்படி வேலை செய்கிறது என்றும் அலசி காலவிரயம் செய்யப்போவதில்லை. அதற்கு பதில் IT துறையினர் வேலை செய்வதுபோல் தயாரிப்புகளை எவ்வளவு விரைவில் முடித்து விற்று சமுதாயத்திற்கு பலனளிப்பதுடன் நாங்களும் பணம் பண்ண முடியும் என்று பார்ப்போம் என்று சொல்லி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

fortune-general-fusion

தனியார் நிறுவனங்களின் அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, டோக்கமாக் பூதங்களை உபயோகிப்பது நடைமுறையில் மிகவும் சிரமம் மற்றும் அவற்றை கட்டி, பராமரித்து, இயக்க தேவைப்படும் ஏராளமான பணம் பொருளாதாரரீதியில் மின்சாரம் தயாரிப்பதை வெகுகாலத்திற்கு தள்ளிப்போடும் என்று இவர்கள் கருதுகிறார்கள். National Ignition Facility நடத்திவரும் லேசர் உபயோகிக்கும் ஆய்வுகளும் இவர்கள் கருத்துப்படி பணம் குடிக்கும், அளவில் மிகவும் பூதாகரமாக இருக்கும் நடை முறைக்கு சரிவராத முறைகள். என்வே இவர்கள் சின்னதாய் ஒரு வீடு சைஸில் அடுத்த படத்தில் இருக்கும் சிறிய உலை ஒன்றை அமைத்து, எதிரெதிரே இயங்கும் இரண்டு பீரங்கி போன்ற அமைப்புகளில் இருந்து பிளாஸ்மாவை பீய்ச்சி அடித்து அணுக்கரு இணைப்பை நடத்துகிறார்கள். இவர்களால் இப்போதே ஐந்து மில்லிசெகண்ட் வரை பிளாஸ்மாவை சொன்னபடி அழகாக நடனமாட வைக்க முடிகிறதாம். ஐந்து மில்லிசெகண்ட் என்பது ஒரு வினாடியில் இருநூறில் ஒரு பங்குதான் என்றாலும், இத்துறையில் இது ஒரு மாமாங்கத்திற்கு சமம்!

TrialphaReactor

இந்த அணுக்கரு இணைப்பு உலைகளுக்கு எரிபொருள் பெரும்பாலும் ஹைட்ரஜன் ஐஸோடோப்புகளான டியூடிரியம் மற்றும் ட்ரைடியம் என்றாலும் (D-T Fusion), அதனை உபயோகிக்கும்போதும் நியூட்ரான் நுண்துகள்கள் சிறிதளவு வெளிப்படும். அதை சரியாக கையாள்வது ஒரு வேலை. அதை கவனிக்காமல் விட்டால் பின்னால் அது வேறு எது மீதாவது மோதி கதிர்வீச்சு தொந்தரவுகளை தர வாய்ப்புள்ளது. எனவே ட்ரைஆல்ஃபா நிறுவனத்தினர் ஹைட்ரஜனை எரிபொருளாக உபோயோகிப்பதை தவிர்த்து வெறும் ப்ரோடோன் நுண்துகள்களை போரான் என்ற வேறு ஒரு தனிமத்துடன் மோதி இணைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். போரான் எளிதாக கிடைக்கும் மிக விலை மலிவான தனிமம் என்பதால், எங்கள் முயற்சி வெற்றி பெற்று நாங்கள் அணு உலைகளை விற்கும்போது, அவற்றை வாங்குபவர்களுக்கு இனாமாக வாழ்நாள் முழுதும் எரிபொருள் கொடுத்து விடுவோம் என்று ஜோக் அடிக்கிறார்கள்!
ஒரு சில கணங்கள் இணைப்பை நிகழ்த்திக்காட்டி பிளாஸ்மாவை குட்டிக்கரணம் போட வைத்தாலும், இது வரை நடந்த முயற்சிகளில் இந்த திருமணத்தை நடத்த செலவிடப்பட்ட சக்தி, அதிலிருந்து வெளிக்கொணரப்பட்ட சக்தியைவிட அதிகம்! அணுக்கரு இணைப்பை நடத்த செலவிடப்படும் சக்தியும் அதிலிருந்து வெளிக்கொணரப்படும் சக்தியும் சமமாக ஆகும்போது அது ஆற்றல் சமநிலையை (energy break-even) அடைந்ததாக கருதப்படுகிறது.
பொருளாதார ரீதியாக இத்தகைய உலைகளை ஒட்டி மின்சாரம் தயாரிக்க, உள்ளே போவதைப்போல் பதினைந்து, இருபது மடங்கு சக்தி வெளிவந்து ஒழுங்காக அறுவடையும் செய்யப்பட வேண்டும். ITERஇன் பகாசுர உலை 2027ஆம் ஆண்டு வாக்கில் ஓட ஆரம்பிக்கும்போது பத்து மடங்கு ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறார்கள். அதுவே கம்மிதான் என்பதால் இந்த சிறு நிறுவனங்கள் குறைந்த அளவு சக்தி, சிறிய உலை இவைகளை குறைந்த செலவில் படைத்து ஒட்டி விட்டால் அந்த 20 மடங்கு என்கிற விகிதாசாரத்தை எளிதில் அடைந்து விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். இவர்கள் கணக்கு மட்டும் எப்படியாவது ஓர்கவுட் ஆகி விட்டால், பெட்ரோலியம், நிலக்கரி போன்ற படிம எரிபொருட்களை (Fossil Fuels) நமது ஆற்றல் தேவைகளுக்காக நம்பி இருப்பது சுத்தமாய் நின்று போய், சுற்றுச்சூழலை மாசு படுத்தாத, விலை மலிந்த, என்றென்றும் வற்றாத ஒரு ஆற்றல் அமுதசுரபியாய் இந்தத்தொழில்நுட்பம் வடிவெடுக்கும். அது மனித சமுதாயத்தின் வாழ்வுமுறையையே நம் வாழ்நாட்களுக்குள் மாற்றி அமைத்துவிடும் என்பதில் எள்ளளவும், ஏன் அணுத்துகள் அளவும் கூட சந்தேகம் இல்லை. நடக்கிறதா என்று பார்த்துவிடுவோம்.

—o0o—

2 Replies to “அணு விவாகம்”

 1. தெளிவான கட்டுரை. குறிப்பாக, மிக அழகாக உதாரணங்களை முன் வைத்துள்ளீர்கள்.
  சக்தித் தொழிலில், தொல் எச்சப் பொருட்களை நம்பி காலம் ஓட்ட முடியாது என்றாலும், இம்முயற்சிகள் சற்று ராட்சசத் தனமாக இருப்பதை மறுக்க முடியாது.
  ஆணு மின்நிலயங்களின் அபாயங்கள் போகப் போகத்தான் நமக்குப் புரிந்தது. ப்ளாஸ்மா கையாளலில் வரும் பாதுகாப்புப் பிரச்னைகள் எவ்வளவு தூரம் அலசப்பட்டுள்ளன என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இதுவரை ப்ளாஸ்மா என்பது ஆய்வுக்கூடத்தைத் தாண்டியதாக கேள்விப்படவில்லை.
  இத்தகைய தனியார் நிறூவன முயற்சிகள் வரவேற்கத் தகுந்தவை. மனித ஜினோம் ப்ராஜக்ட் போல உருப்படியாக ஏதாவது பயனுள்ள சக்தி முயற்சி பயனுக்கு வந்தால் நல்லது.
  வாழ்த்துக்கள்
  ரவி நடராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.