மரபணு ஆய்வாளரான ஸ்டீவ் ஜோன்ஸ், “நோ நீட் ஃபார் ஜீனியஸஸ்” என்ற தன் புத்தகத்துக்கு எழுதும் முன்னுரையில், “ஃப்ரெஞ்சுக்காரர்கள் அவ்வளவு நகாசு இல்லாத ஆனால் கருக்கான சொல்லான ’வல்கரைஸேஷன் ஸைண்டிஃபீக்’ என்பதால் வருணிக்கும்” ஒரு முயற்சியில் தான் திளைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அதன் பின் வருவதென்னவோ, பாரிஸ் மாநகரின் அறிவியல் வரலாற்றுக்கு, ஒரு அதியுக்தி நிறைந்த வழிகாட்டியான புத்தகம். தெளிவான, கல்வி ஞானம் செறிந்த உரைநடையில் எழுதப்பட்டிருக்கிற இது, நிச்சயமாக இங்கிலிஷ்காரர்கள் கொச்சை மொழி என்று சொல்லும் விதமாக இல்லை.
ஜோன்ஸுடைய வழிகாட்டிப் பயணம் துவங்குவதும் முடிவதும் எஃபெல் கோபுரத்திலிருந்து. அந்த கோபுரம், 1889 இல், பாஸ்டீய்ய (bastille) சிறையின் வீழ்ச்சி நடந்து நூறாண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாகத் திறக்கப்பட்டது. அதன் கட்டமைப்பாளர், க்யுஸ்தாவ் எஃபெல், “18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுந்த பிரமாதமான அறிவியல் இயக்கம் வழி வகுத்துக் கொடுத்ததால் உருவானதும், நாம் இப்போது வாழ்வதுமான தொழில் துறையுடைய, அறிவியலுடைய நூற்றாண்டுக்கு” குறியீடாக இது இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். முதல் கட்டத்தில், இந்தக் கோபுரத்தில் உடல் கூறியலுக்கான சோதனைக் கூடம் ஒன்று இருந்தது, அதிலிருந்த ஆய்வாளர்கள், இந்தக் கோபுரத்தின் படிக்கட்டுகளை ஏறி வருவதன் தாக்கம் சுற்றுலாப் பயணிகள் மீது எப்படி இருந்தது என்பதைச் சோதித்து வந்தார்கள். இந்த கோபுரத்தில், ஒரு விண்வெளி ஆய்வுக் கூடமும், தட்ப வெப்ப நிலைக் கண்காணிப்பு நிலையமும் இருந்தன. இந்த கோபுரம் உலகின் முதல் வானொலி ஒலிபரப்புக்குக் களமாகவும் இருந்தது: அந்த நூற்றாண்டைக் கொண்டாட முன் வைக்கப்பட்ட இன்னொரு திட்டமாக இருந்த 300 மீட்டர் உயரமுள்ள கில்லடினோடு ஒப்பிட்டால், இதுதான் எத்தனை மேன்மையான அமைப்பு.
பாரிஸில் அறிவியல் நிலையின் கதை மீது ஃப்ரெஞ்சுப் புரட்சி மையப் புள்ளியாக இருந்து, கதையைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. “அதனுடைய அரசாட்சி முறை நொடித்து வீழ்ந்த போது, உலகின் இதர பகுதிகளில் இருந்த சோதனையாளர்கள், மேலும் கோட்பாட்டாளர்களை எல்லாம் விட அதிகமானவர்கள் பாரிஸில் இருந்தார்கள். பாஸ்டீய்ய சிறை உடைக்கப்பட்டபோது இருந்த கிறுகிறுப்பூட்டும் நாட்களில், அந்த மாநகர் அறிவியலில் ஊறித் ததும்பியது.” அவர் ’ஃபிலாஸஃபிஸ்’ எனப்படும் சிந்தனையாளர்களின் பட்டியல் ஒன்றைத் தொகுத்துக் கொடுக்கிறார். இந்தச் சிந்தனையாளர் குழாமில் இருப்பவர்கள் புரட்சி அரசியலில் இறங்கியவர்கள். அந்தப் புரட்சி, இயற்கை மற்றும் சமூக அறிவியல் துறைகளை முற்படுத்துவதன் மூலம் மனிதகுலத்தை தவிர்க்க முடியாத முன்னேற்றத்தைக் கொணரும் ஒரு யுகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நம்பியவர்கள் அவர்கள்.
ரசாயன ஆய்வாளர் ஆண்ட்வான் லவோய்ஸியெ “தொழில் நுட்பத்தையும் அரசியலையும் இணைத்த அந்த சகாப்தத்தின் சுருக்க உரு” ஆக இருந்தவர். பெஞ்சமின் ஃப்ராங்க்லினின் நண்பரும், நிதிவளம் மிக்க மேன்மக்கள் குழுவினருமான லவாய்ஸியே, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், மேலும் நைட்ரஜன் ஆகியவற்றை இனம் கண்டு கொடுத்தவர். தன் அன்றாட வேலையை சோதனைக் கூடத்திற்கும், பொதுப் பணிக்குமிடையே கறாராகப் பகுத்துக் கொண்டவர். அவருடைய ‘ட்ரெய்ட் எலெமெண்டேர் டு ஷிமி’ (Traité élémentaire de chimie) என்ற புத்தகம் நவீன வேதியலுக்கான அஸ்திவாரத்தை நிர்மாணித்தது. அது 1789 இல் புரட்சி துவங்கியபோது வெளியிடப்பட்ட நூல். அவருடைய பற்பல சாதனைகளிடையே, லவாய்ஸியே வெடியுப்பை (ஸால்ட்பெர்ட்/ ஸால்ட்பெட்ர்) வெடிமருந்தாக்க உதவும் செப்பு விரைவேகச் சுழற்றியைக் கண்டு பிடித்தவர். புரட்சியின் போது பாரிஸின் மிகப் புராதன மடாலயமான ஸான் ஜெர்மான் டெ ப்ரெ அபெ என்ற கட்டடத்தின் பெயர் அடெலியெ டு லூனிடெ என்று மாற்றப்பட்டு, அது நாளொன்றுக்கு 100 டன் வெடியுப்பைச் சுத்திகரிக்கும் ஆலையாக இயங்கியது. 1792 இல் போர்த்தளவாடங்களின் திருவிழா ஒன்று நடந்து அது வேதியலாளர்களின் வெற்றிகளைக் கொண்டாடியது. அதில் லவாய்ஸியேயின் விரைவேகச் சுழற்றி, ”மார் ஹொஸெ டிரான்” (”கொடுங்கோலர்கள் ஒழிக”) என்று முழங்கிய ஒரு பதாகையின் கீழ் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஆனால் இரண்டே வருடங்கள் கழிந்த பின், அவர் ‘கிலடின்’ எந்திரத்தால் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். பழைய அரசின் கீழ் ‘விவசாய’ வரிகளை வசூலித்து லாபம் பார்த்தவர் என்றும், கலப்படம் செய்யப்பட்ட புகையிலையை விற்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு இந்த தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஜோன்ஸ் தன் புத்தகத்தின் தலைப்பை, லவாய்ஸியெ மீது வழங்கப்பட்ட கட்டுக்கதையான தீர்ப்பிலிருந்தே பெற்றிருக்கிறார் என்று தோன்றுகிறது. அந்தச் சொல் இது, ‘லா ரிபப்ளீக் நா பா பூஸ்வான் டு ஸவான்’ (La République n’a pas besoin de savants). ஜோன்ஸ் ’சவான்’ என்கிற சொல்லை ‘ஜீனியஸஸ்’ (மேதைகள்) என்று மொழி பெயர்க்கிறார். ஆனால் ‘அறிவியலாளர்கள்’ , ‘கல்விமான்கள்’, மேலும் ‘பகட்டுக்காரர்கள்’ ஆகிய வேறு பொருட்களும் இந்த சொல்லுக்கு உண்டு. கூட்டத்திலிருந்து பிரித்துக் காட்டப்படும் குணம் எதைக் கொண்டவர்களையும் ‘புரட்சியாளர்கள்’ ஒட்டு மொத்தமாக வெறுத்தனர்.
மார்க்கி த கொண்டார்ஸெ என்ற இன்னொரு ‘சவான்’ அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அளவுக்கு, அறிவுத் தேட்டையிலும் ஈடுபட்டிருந்தவர். கணிதவியலாளரும், அகடெமி டெஸ் ஸியான்ஸின் (ஃப்ரான்ஸின் அறிவியல் ……… ) நிரந்தர செயலாளருமாக புரட்சிக்கு முன்பு இருந்த இவர், 1789க்குப் பிறகு ஒரு குடியரசு அமைக்கப்பட வேண்டுமென முதலில் குரல் கொடுத்த அரசியலாளர்களில் ஒருவராக இருந்தார். துவக்கத்திலேயே பெண்ணியவாதியாக இருந்த இவர், ஆண்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் சமமாகப் பெண்களுக்கும் வேண்டும் என வாதிட்டவர். தான் ஒரு நாள் கூட அரசியலியல் பற்றி யோசிக்காமல் இருந்ததில்லை என்று சொன்னவர். பயங்கரம் ஆட்சி செய்த கட்டத்தில் இவர் சிறையில் வைக்கப்பட்டார், சிறையில் இறந்தவராகக் காணப்பட்டார். தானாகவோ அல்லது அவருடைய காவலர்களில் ஒருவராலோ விஷமருந்தி இறந்திருந்தாராம். ’மனித புத்தியின் முன்னேற்றம் குறித்த வரலாற்றுச் சித்திரத்துக்காரன் ஒரு முன்வரைவு’ என்ற அவரது புத்தகம் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. பாரிஸ் நகரைச் சுற்றிக் காட்ட முயலும் ஜோன்ஸ், புகழ் பெற்றவர்களின் நினைவுக் கட்டடத்தில் இருக்கும் கொண்டார்ஸேயின் சவ அடக்கப்பெட்டி காலியாக இருந்ததைச் சுட்டுகிறார்: அவரது எலும்புகள் தொலைந்து போய் விட்டன.
அதற்கு மாறாக, எரியூட்டுபவராகத் திகழ்ந்த பத்திரிகையாளரான ஜான் பௌல் மஹா (Marat) வின் எலும்புகள் இந்த நினைவுக் கட்டடத்திலிருந்து அவமதிப்போடு அகற்றப்பட்டன. புரட்சிக்கு முன்பு, ஒளி, வெப்பம், மின்சாரம் மேலும் பாலுறவு மூலம் தொற்றும் நோய்கள் ஆகியன குறித்து ஆராய்ச்சிகள் செய்தவர் இந்த மஹா. நியூட்டனின் ‘ஒளி ஆய்வுகள்’ புத்தகத்தை ஃப்ரெஞ்சுக்கு மொழி மாற்றம் செய்தவர் இவர், ஆனால் ஆன்ஸியான் ஹொஜீம் (முந்தைய முடியாட்சியில்) நடத்திய மேன்மை பொருந்தியவர்களுக்கான அரசக் கல்வியாளர் அமைப்பில் (ராயல் அகடமி ஆஃப் ஸைன்ஸஸ்) உறுப்பினராகும் இவரது பெருவிருப்பு அலட்சியப்படுத்தப்பட்டது. 1789க்குப் பிறகு அந்த அகடமி அழிக்கப்படும், தனக்குக் கிட்டி இருக்க வேண்டிய இடத்தில் தான் அமர்த்தப்படுவோம் என்று இவர் நம்பத் தொடங்கி இருந்தார். ஷாஹ்லாட் கோஹ்டே எனும் பெண் இவரை இவரது சிகிச்சைக்கான குளியல் தொட்டியில் படுகொலை செய்தபோது, புரட்சிக்காகத் தியாகியானவராக மரியாதை செலுத்தப்பட்டவராக இருந்தார், ஆனால் இவரே ஊக்குவித்து, முன்னின்றும் நடத்திய பயங்கரத்தின் வெறியாட்டம் அடங்கிய பின், இவரது சவப்பெட்டி நினைவுக் கட்டடத்திலிருந்து அகற்றப்பட்டு சாதாரணமான ஓரிடத்தில் வைக்கப்பட்டது.
அறிவியலாளரும், மருந்து நிபுணரும், உணவுச் சத்து ஆய்வாளரும் ஆன ஆண்ட்வான் – ஒகஸ்டியான் பாஹ்மெண்டியே என்பவருக்குப் புகழ் மாலை சூட்டுகிறார் ஜோன்ஸ். அவர் புரட்சிக்கு இருபதாண்டுகள் முன்னமே உருளைக்கிழங்கை உணவில் சேர்க்கப் பிரச்சாரம் செய்தவர். ஆனால் அவரது முயற்சிகள் பரவலான பஞ்சம் பட்டினியைத் தவிர்க்க முடியவில்லை, அந்தப் பஞ்சமே புராதன அரசமைப்பு கவிழக் காரணமாக அமைந்தது. இருபது உருளைக்கிழங்குப் பண்டங்கள் கொண்ட ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு பெஞ்சமின் ஃப்ராங்க்லினை அழைத்திருந்தார்; மேரி ஆண்ட்வானெட்டை உருளைக்கிழங்குச் செடியின் பூக்களால் ஆன ஒரு மாலையை அணிய இணங்க வைத்திருந்தார், ஆனால் பயங்கரவாதம் உச்ச கட்டத்திற்குப் போகும் வரை உருளைக் கிழங்கு ஏழைகளுக்கேற்ற உணவுப் பொருளாக ஏற்கப்படவில்லை. புரட்சியாளர்கள் கொணர்ந்த சமையல் புத்தகமான ‘லா க்யூஸினியே ரிபப்ளிகன்’ என்பதில் 30க்கு மேற்பட்ட உருளைக்கிழங்கு உணவுத் தயாரிப்புகள் இருந்தன.
அடுத்த அரை நூற்றாண்டில் உலகில் பெருத்து வரும் ஜனத்தொகைக்கு உணவளிக்க வேண்டுமானால் விவசாய உற்பத்தியை உலகம் இரட்டிப்பாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, நமக்குப் புது பாஹ்மெண்ட்டியே தேவையாக இருக்கிறார் என்று ஜோன்ஸ் வாதிடுகிறார். புரட்சிக் கால ஃப்ரான்ஸின் முதல் அமெரிக்க தூதுவராக இருந்த தாமஸ் ஜெஃபர்ஸன்,“ எந்த நாட்டுக்கும் செய்யக் கூடிய பெரிய சேவை, அந்தப் பண்பாட்டின் உணவுக்கு ஒரு உபயோகமுள்ள தாவரத்தைச் சேர்ப்பதுதான்.” என்று குறிக்கிறார். (அமெரிக்க அதிபரானபோது, வெள்ளை மாளிகையில் ஜெஃபர்ஸனுக்கு ‘ஃப்ரெஞ்சு முறையில் எண்ணெயில் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்குகள்,’ பரிமாறப்பட்டன.) நமக்குத் தெரிகிற 4 லட்சம் தாவர வகைகளில், 300க்குக் கீழானவைதான் முக்கிய உணவுப்பொருட்களாக மனிதருக்குத் தெரிய வந்திருக்கின்றன. பாஹ்மாண்டியே உருளைக்கிழங்கில் சோதனை செய்து தக்க வகையைப் பொறுக்கியது போல ஒரு புது பாஹ்மாண்டியே உணவுப் பொருட்களில் சோதனை செய்து புது உணவுப் பொருட்களைக் கண்டு பிடிப்பது மனித குலத்துக்குக் கொணரக் கூடிய நன்மை எந்த அரசியல் மாறுதலையும் விட உறுதியான நன்மை பயக்கும். புரட்சிவாதிகள் இல்லை நமக்குத் தேவை, மேதைகள் தேவை, அதுவும் மிக துரிதமாக.
அரசியல் ஒரு ஆபாசமான விவகாரம், அதுவும், அனேகமாக ஒத்துழைப்பு மூலம் முன்னேறும் அறிவியலை, அரசியல் முழு முற்றாகவே குலைக்கக் கூடும். ஃப்ரெஞ்சுப் புரட்சியின் உச்சகட்டத்தில் நிறைய அறிவியலாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர், அல்லது கொல்லப்பட்டனர். தப்பித்த அதிருஷ்டக்காரர்கள், உதாரணமாக பெஹ்னாஹ்ட் டு லஸ்ஸிபெட், இவர் இயற்பியலையும், மீன்களையும் ஆராய்ந்தவர், ஒளிந்து தலைமறைவானதால் தப்பித்தார்: ’நான் உலகை மறந்தேன், அண்ட பேரண்டத்தைப் பார்த்தேன்,” என்று எழுதினார். மொன்மொஹாஸி மலைப்பகுதிக்குப் போய் வசித்து காட்டுச் சிலந்திகளை ஆராய்ந்தபடி இருந்தார் லூயிஸ் போஸ்க் என்ற பூச்சியியலாளர். யாரையும் பார்க்காமலும், எந்த அழைப்பையும் ஏற்காமலும், ‘எந்தக் குழுவிலும் சேராமல்’ தனியாக இருந்து தப்பித்தார் ஆண்ட்வான் ஃபூக்வா எனும் வேதியலாளர். நீண்டகால நோக்கில், அரசியலை அறிவியல் வெல்கிறது. பிற்காலத்தவர்கள் அன்று ரத்தக் களரிக்கும், கொடும் துன்பத்திற்கும் இட்டுச் சென்ற பல குழு மோதல்களுக்கான காரணங்களையும், அந்த விவரங்களையும் அனேகமாக மறந்து விட்டார்கள்: உலகை மேலானதாக மாற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நினைவு வைத்திருக்கிறார்கள்.
ஃப்ரெஞ்சுப் புரட்சியின் மையத்தில் ஒரு புதிர் இருக்கிறது, ஏன் அறிவியலில் இத்தனை முன்னேற்றங்கள் அன்று நேர்ந்தன, ஒப்பீட்டில் சமூக அறிவியலில் சிறிதும் முன்னேற்றம் நிகழவில்லை என்பது அது. வேதியலில் லவாய்ஸியேயின் கண்டு பிடிப்புகளால் அவரது சமகாலத்தவர் மிக்க உற்சாகம் பெற்றிருந்தனர், அவர்களில் சிலர் அதே போன்ற முன்னேற்றம் தரும் கண்டு பிடிப்புகளை சமூகத்திலும், அரசியலிலும் காண முடியும் என்று நம்பினர். கொண்டார்ஸே இப்படிப்பட்ட புதுப்பாதைகள் தொடுமெல்லையில் இருக்கின்றன என்ற நிச்சயத்தோடு இறந்தார்- ஆனால் அவர் எதிர்பார்த்த உரிமைகளிலும், வாய்ப்புகளிலும் சமத்துவம் என்பதும், சமூக ஒத்திசைவும் ஒரு போதும் கிட்டவில்லை, ஃப்ரான்ஸிலும் சரி, வேறெங்குமே கூட.த்தான்.
ரூத் ஸ்கரின் புத்தகங்களில் இவை சேர்த்தி: ’ஃபேடல் ப்யூரிட்டி: ரோபஸ்பியெர் அண்ட் த ஃப்ரெஞ்ச் ரெவல்யூஷன்’ மேலும், ‘ஜான் ஆப்ரே: மை ஓன் லைஃப் (விண்டாஜ் பிரசுரங்கள்)
ஸ்டீவ் ஜோன்ஸின் ‘நோ நீட் ஃபார் ஜீனியஸஸ்: ரெவல்யூஷனரி ஸைன்ஸ் இன் த ஏஜ் ஆஃப் த கில்லடீன்’ (லிட்டில், ப்ரௌன் பிரசுரம், 384 பக்)
மூலக் கட்டுரை: இங்கிலிஷில் ரூத் ஸ்கர் எழுதியது. அதை இங்கே காணலாம்: The revolutionary science of eighteenth century France