முகப்பு » அனுபவம், ஆளுமை, பயணம்

சாப்பாட்டுக் கடை

| இதழ் 150 | 29-05-2016|

Akshaya_Restaurant_Chennai_Madras

 

திருநவேலியில் தேடித் தேடி சாப்பிட்டது போக, சென்னையில் சாப்பிட்ட சாப்பாட்டுக் கடைகளின் பட்டியல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் பழையன கழிந்து புதியன பல புகுந்து விட்டன. சாலிகிராமத்திலிருந்த  ‘முத்துலட்சுமி பவன்’ ஹோட்டலை கழுகுமலை அண்ணாச்சி மூடி விட்டார். சுடச் சுட இட்லியும், பருப்பு சாம்பாரும், ரகசியமாக எனக்கு மட்டும் (ஊர்ப்பாசம்) கெட்டிச் சட்னியும் கொடுப்பார். அவர் கொடுக்கும் உணவையும், உபசாரத்தையும் மறப்பதற்கில்லை. ‘ஸார்! வாருங்கோ! சும்ம இருக்கேளா?’ என்று கடைக்குள் ஏறும் போதே அவரது அன்பான வரவேற்பில் சாலிகிராமம் மறைந்து சேரன்மகாதேவி வந்து விடும். ‘ஏட்டி! இன்னா யாரு வந்திருக்கா பாரு’! உள்ளிருந்து கிரைண்டரில் மாவரைத்துக் கொண்டிருந்த அண்ணாச்சியின் வீட்டம்மா வந்து எட்டிப் பார்ப்பார்.
‘இட்லித் தட்ட எடுக்கறதுக்குள்ள ரெண்டு புரோட்டாவப் பிச்சுப் போடுதென். சாப்பிடறதுக்குள்ள இட்லி அவிஞ்சுரும்’. தயக்கத்துடன் மறுக்க முற்படும் முன்பே இடைமறித்துச் சொல்லுவார்.
‘ஒங்களுக்குப் போயி குருமா ஊத்துவெனா? சாம்பார்தான்’. சொன்ன கையோடு புரோட்டாவும், சாம்பாரும் கொண்டு வருவார். ‘எலைல தண்ணி தொளிங்கோ’. புரோட்டாவை அவர் கையாலேயே பிய்த்துப் போட்டு சாம்பாரும் ஊற்றுவார்.
‘ஒங்களுக்கு புரோட்டாவப் பிச்சுப் போட்டு சாம்பார் விடும் போதெல்லாம் என் பேத்தி சிரிப்பா. பூங்காவனம் படத்துல ஒங்களப் பாத்துட்டு சட்டுன்னு சொல்லிட்டா. ஆச்சி! இந்த மாமாதானெ புரோட்டால சாம்பார் ஊத்தி சாப்பிடுவாங்கன்னு’!

இதற்குள் அண்ணாச்சி புகுந்து, ‘ஏ மூதி! அது தூங்காவனம். அவள எங்கெட்டி? டியூசன் விட்டு வரலயோ! வந்தா ஸார காமிக்கலாம்லா!’

அந்தக் குழந்தை வருவதற்குள் இட்லி வெந்து சாப்பிட்டுவிட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்ததால் அன்றைக்கு எதுவுமே ருசிக்கவில்லை.

முத்துலட்சுமி பவன் இருந்த இடத்தில் இப்போது ஏதோ ஒரு அக்மார்க் அசைவக் கடை இருப்பதாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் போக மனம் வரவில்லை. அதற்கு அருகிலேயே இருக்கும் சரவண பவனின் சாலிகிராமக் கிளை ஊழியர்கள் அனைவருக்கும் என் முகம் பரிச்சயம். ‘ஸார்! என்ன ஆளையே காணோம்’!

‘காலைலதானடே வந்து பொங்கல் சாப்பிட்டேன்!’

‘மதியம் மீல்ஸுக்கு வரலேல்லா! அதான் கேக்கென்!’

சரவண பவனின் எந்தக் கிளையிலும் திருநவேலிக்காரன் யாரேனும் சிக்கி விடுவான். சொல்லி வைத்த மாதிரி இருவருமே பரஸ்பரம் ‘யூ ஆர் அப்பாயின்ண்டெட்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சிநேகமாகி விடுவோம்.

‘ஊருக்குப் போனியாடே?’

‘எங்கண்ணே போக! சேந்தாப்ல ஒரு ரெண்டு மாசம் லீவு கெடச்சா போகலாம். இல்லென்னா போகவேப்படாது பாத்துக்கிடுங்க. வெள்ளிக்கெளம ராத்திரி பஸ் ஏறி, ஞாயித்துக் கெளம ராத்திரி பஸ்ல திரும்பறதுக்கு என்ன மயித்துக்கு ஊருக்குப் போகணும்கென்?’

‘ரெண்டு மாசம்லா லீவு வேணுமாம். தாயளி திருநவேலிக்காரன் வெளங்கவே மாட்டான்’ என்று மனதுக்குள் சொல்லியபடி, ‘சரி. ஆனியன் ரவா கொண்டாரியா’ என்பேன்.

சென்னையில் சைவ உணவுக்காரர்களுக்கான உற்ற நண்பன், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ‘சரவண பவன்’தான். ஆனால் திருநவேலியிலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு சரவணபவன் சரிப்பட்டு வராது.

‘செறுக்கியுள்ள. இம்புட்டு போலல்லா பொங்கல் வைக்கான். கூடவே வைக்கற வடயப் பாத்தேராவே! கல்கோனா மிட்டாய் மாரில்லா இருக்கு. நம்ம கல்லூர்ப் பிள்ள ஹோட்டல்ல வட ஒவ்வொண்ணும் நம்ம பாக்கியத்துப் பெரியம்ம தண்டிக்குல்லா இருக்கும்! இவனுகளையெல்லாம் அங்கக் கொண்டு போயி வாய்ல வச்சுத் திணிக்கணுங்கென்’.

அபூர்வமாக சில சாப்பாட்டுக் கடைகள் சிக்கும். அண்ணா நகரின் சாந்தி காலனியில் ஒருநாள் நானும், கவிஞர் ரகனும் ‘ஶ்ரீ அக்‌ஷயம்’ என்னும் அதிசயத்தைக் கண்டோம். இதுவரை என் வாழ்வில் வீடு தவிர இட்லிக்கு எள்ளு மொளகாப்பொடி சாப்பிட்டது மேற்படி ‘ஶ்ரீ அக்‌ஷயத்தில்தான்’. கூடவே கொடுக்கிற கொத்தமல்லி சட்னியும் அப்படி ஒரு ருசி.

சாலிராமத்தின் சூர்யா ஆஸ்பத்திரிக்கு அருகே இருக்கும் திருநவேலி ஹோட்டலுக்கு இப்போதெல்லாம் போவதேயில்லை. உரிமையாளன் கதிர் எப்போது கடையைத் திறந்து வைத்திருப்பான் என்பதை கணிக்கவே முடியாது. ஆசை ஆசையாகச் சாப்பிடப் போனால், டேபிள்களுக்கு மேலே ஸ்டூல்கள் ஒருச்சாய்த்துப் படுத்துக் கிடக்கும். எப்படியும் கதிர் கடை இருக்காது என்று நாமாக முடிவு செய்து வடபழனியில் பள்ளத்துக்குள் இருக்கும் ‘முருகன் இட்லி’க்குப் போய் இட்லி சாப்பிட்டு வயிறு நிறைந்துத் திரும்பி வரும் போது அன்றைக்குப் பார்த்து கதிரின் திருநவேலி சைவாள் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அந்த இடத்தைக் கடக்கும் போதே எண்ணெ தோசயின் மணம், மனசுக்குள் புகுந்துக் கிளர்த்தும். இப்போதெல்லாம் திருநவேலி ஹோட்டலென்றால் அது பரணி ஸ்டூடியோவுக்கு எதிரே உள்ள திருநவேலி ஹோட்டல்தான். கிழக்கு பதிப்பகத்தின் மேலாளரும், எழுத்தாளரும், கவிஞரும், ரஜினி ரசிகரும், அக்மார்க் திருநவேலிக்காரருமான ஹரன் பிரசன்னாவை ஒரு முறை பரணிக்கு எதிரே உள்ள திருநவேலி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். வெளியே சிமெண்டு தொட்டியில் இருந்து தண்ணீர் கோரிக் கை கழுவும் போதே கவிஞருக்கு பரவசம் துவங்கி விட்டது.

‘அண்ணாச்சி! அப்படியே நம்ம ஊர் மாரியே இருக்கே! இங்கெல்லாம் எங்கய்யா சிமிண்டுத் தொட்டில்லாம் இருக்கு!’

வாழை இலை போட்டு தண்ணீர் தெளித்தபடியே விலைப்பட்டியலைப் பார்த்த பிரசன்னா, ‘சே! என்னா சீப்பா இருக்கு! நம்ம ஊருக்காரன் நம்ம ஊர்க்காரன்தாம்யா!’

‘முதல்ல சின்ன அட சாப்பிடுவோமா, பிரசன்னா?’

‘அது ஏன்யா சின்ன அட. நல்லா பெருசா உள்ள அடயே சாப்பிடுவோம்’.

‘யோவ்! இங்கெ சின்ன சைஸ் அடதான்யா உண்டு. தம்பி, ரெண்டு அட கொண்டுட்டு வாப்பா’.

எண்ணெ தோசயும், ஆம வடையும் இலையில் வந்து அமர்ந்தவுடனேயே பிரசன்னாவுக்குக் கண்கள் கசிய ஆரம்பித்தன.
அடுத்து வந்த செவப்பு மெளகா சட்னி வந்த உடனேயே கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது. ஏதோ சொல்ல வாயெடுத்தவரைத் தடுத்து, ‘இதெல்லாம் எந்த ஊர்ல கெடைக்கும்? அதானே பிரசன்னா?”

அதற்குள் அவர் வாய்க்குள் ஆம வடை அடைப்பட்டதால், வெறுமனே தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தார்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த ஹரன் பிரசன்னா உண்மையாகவே நெகிழ்ந்து போயிருந்தார். ‘அண்ணாச்சி! ரொம்ப நன்றி’ என்றார். அந்தக் குரல், நிரம்பிய வயிற்றிலிருந்து வந்த குரலல்ல. நிறைந்த மனதிலிருந்து வந்தது என்பதை உணர முடிந்தது. கிட்டத்தட்ட ஹரன் பிரசன்னாவின் மனநிலையை நான் ஒருமுறை கடையத்தில் பெற்றிருந்தேன்.

ஒரு கோடையின் மதியப் பொழுதில் எங்கெங்கோ சுற்றிவிட்டு கடையத்துக்குள் நுழைந்த போது, அங்கு முன்பு இருந்த  செட்டியார் மெஸ் அப்போது இல்லை என்றார்கள். அதற்கு அருகில் உள்ள பெயர்ப் பலகை இல்லா இன்னொரு மெஸ்ஸில்  நுழைந்தோம். மின்சாரம் இல்லை. அரையிருட்டில்தான் சாப்பாடு பரிமாறினார்கள். இலை போட்டு சுடச் சுட புழுங்கல் அரிசிச் சோறு போட்டு வழக்கமான பருப்பு(நெய்யுடன்) சாம்பார், தக்காளி ரசம் போக, வத்தக் குழம்பும், நல்லெண்ணெயும் ஊற்றிக் கிறங்கடித்தார்கள்.

‘சித்தப்பா! ரசம் வாங்கண்டாம். கருணக்கெளங்கு போட்ட வத்தக்கொளம்பு எங்கெயும் கெடைக்காது. இன்னொரு மட்டம் வாங்கி சாப்பிடுங்க’.

சாப்பிடுவதிலும், சாமி கும்பிடுவதிலும் மீனாட்சிசுந்தரம் சொல்லை என்றைக்கும் தட்டுவதில்லை. ரசத்தைப் புறக்கணித்த மீனாட்சி, மோர்ச்சோறு சாப்பிடும்போதும் மறக்காமல், ‘அண்ணாச்சி! ரெண்டு கருணக்கெளங்கோட கொஞ்சம் வத்தக் கொளம்பு ஊத்துங்க’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். அதோடு விட்டிருந்தால் அவன் மீனாட்சியே இல்லை. கை கழுவி விட்டு, சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கும் போது சொன்னான்.

‘வத்தக்கொளம்புக்கு சுட்ட அப்பளம்தான் சரியா சேரும். நீங்க அப்பளத்தப் பொரிச்சுட்டிய. கொறயாச் சொல்லல. நாக்கு சுட்ட அப்பளத்தத் தேடுச்சு’.

Shimore_Rooseveltமீனாட்சியைப் போல, பிரசன்னாவைப் போல திருநவேலிக்காரர்கள் எங்கிருந்தாலும் சாப்பாடு விஷயத்தில் இப்படித் தேடி அலைந்து ருசியாகச் சாப்பிடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த ஷீமர் ரூஸ்வெல்ட்டை நான் ஷிமோர் என்றுதான் அழைப்பேன். ஷிமோர் சென்னைக்கு வந்து இருபதாண்டுகளுக்கு மேலாகிறது. தேர்ந்த புகைப்பட நிபுணர். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். Leviticus, Jonquil போன்ற பயமுறுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லி என் ஆங்கில அறிவின் வளர்ச்சிக்கு உதவுபவர். ஆனால் அவர் அதையும் தூத்துக்குடி, திருநவேலி தமிழிலில்தான் சொல்வார். ஷிமோரின் உயரம் ஆறடிக்குக் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். என்னைப் போல கிரே கலர். முழுக்கை சட்டைக்கு துணியெடுக்க வேண்டுமென்றால் எப்படியும் மூன்று கிலோமீட்டராவது எடுக்க வேண்டும். அப்போதுமே கவர்ச்சியாக தொப்புள் தெரியும். அப்படி ஒரு வளமான ஆகிருதி. சென்னையில் தனது உருவத்துக்கு சற்றும் பொருந்தாத மாருதி Ritz காரில் தன்னைத் திணித்துக்கொண்டு  நல்ல சாப்பாட்டுக் கடைகளைத் தேடி அலைவது, ஷிமோரின் (ஒரே) பொழுது போக்கு. சென்னையின் ஏதாவது புதிய பகுதியில் சென்று கொண்டு கொண்டிருக்கும் போது அந்த ஏரியாவில் இருக்கும் நல்ல ஹோட்டல்கள் குறித்து ஷிமோருக்குத்தான் ஃபோன் பண்ணுவேன்.

‘ஷிமோரு! இங்கன சேத்துப்பட்டுல நல்ல கட ஏதும் உண்டுமா?’

‘அங்கெ எங்கெ போனிய? இப்பம் எங்கெ இருக்கிய? ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நாலாவது லெஃப்டு போயி, அங்கன பிள்ளையார் கோயிலத் தாண்டின ஆறாவது ரைட்டு. அந்த முக்குலயே ஒரு பெரியம்மா ஹோட்டல் நடத்துது. வெந்தய தோச எப்பிடி இருக்குங்கிய? சிக்கிரம் ஒரு அளுத்து அளுத்துங்க. ஏளே முக்காலுக்கு மேல ஒண்ணும் இருக்காது’.

சென்னையின் ஹோட்டல்கள் குறித்து இத்தனை விவரங்கள் சொல்லும் ஷிமோர், பரணி ஸ்டூடியோவுக்கு எதிரே இருக்கும் திருநவேலி ஹோட்டலை அறிந்திருக்கவில்லை. முதன் முறையாக அங்கு அழைத்துச் சென்றேன். மாவு காலியாகும் வரை கல் தோச, எண்ணெ தோச, அடை மற்றும் வடைகளைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

‘என்ன சுகா இது! அவமானமால்லா இருக்கு! நெதம் இந்தப் பக்கந்தான் க்ராஸ் பண்ணிப் போறேன். தாயோளி, இத கவனிக்கலயேய்யா! நான்லாம் இத்தன வருசம் மெட்ராஸ்ல இருந்து என்னத்துங்கென்!’

அதற்குப் பிறகு பெரும்பாலான மாலை நேரங்களில் பரணிக்கு எதிரே உள்ள திருநவேலி ஹோட்டல் வாசலில் ஷிமோரின் மாருதி Ritz கார் இளைப்பாறிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சென்ற வாரம் ஒரு நாள் ஷிமோர் அழைத்தார்.

‘சொல்லுங்க ஷிமோர்! சத்தத்தயே காங்கல. எங்கெ? அசலூரா?’

‘கரெக்டா கண்டுபுடிச்சுட்டேளே! ஐதராபாத்லல்லா இருக்கென்’.

‘சரிதான். எப்ப ரிட்டர்ன்?’

‘நாளைக்களிச்சு வந்திருவென். இங்க என் மச்சினனப் பாத்தென். அவன் சொன்ன ஒரு தகவல் தூக்கிவாரிப் போட்டுட்டுய்யா’.

‘அப்படி என்னய்யா சொல்லிட்டாரு மச்சினரு? ஏதாவது புது ஹோட்டலச் சொல்லிட்டாரா?’

‘அடிச்சேளேய்யா ஒரு அடி!அதான் திருநவேலிக்காரன்!! திருவல்லிக்கேணில கோஷா ஆஸ்பத்திரிக்கு எதுத்தாப்ல ஒரு ஹோட்டல் இருக்காம்யா. மச்சினன் அதப் பத்தி அப்ப்ப்ப்பிடி சொல்லுதான். அடுத்த வாரத்துல ஒருநா போயி என்னன்னுப் பாத்திருவோம்.’

‘போயிருவோம். திருவல்லிக்கேணில பாரதி மெஸ் போயிருக்கேளா? அதுக்கும் போவோம்’ என்றேன்.

சமீபத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் ரகனுடன் சென்றிருந்தேன். கோயிலில் பேராசிரியரைக் கண்டதும் ஏக வரவேற்பு. பெருமாளுக்கு அருகே கொண்டு நிறுத்தி விட்டார்கள்.

‘அவனாம் இவனாம் உவனாம் மற்றும்பர்
அவனாம் அவனென் றிராதே – அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம்’.

நம்மாழ்வார் பாடலுக்கு விளக்கம் சொன்னார், பேராசிரியர்.

‘அப்படியே பெருமாளைத் தொட்டுரலாம் போல இருக்கே, ஸார்!’

‘அவர் நம்மளத் தொட்டுரப் போறார். பேசாம கும்பிட்டுட்டு வாங்க’ என்றார், பேராசிரியர். உண்மைதான். மீசை வைத்த பெருமாளைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

தரிசனம் முடிந்து வெளியே வந்தவுடன், ‘எங்கே சாப்பிடலாம், சுகா?’ என்று கேட்டார் பேராசிரியர். மைலாப்பூர் என்றால் வழக்கமாக நானும், ரகனும் ‘மாமி மெஸ்’ஸில் சாப்பிடுவது வழக்கம். திருவல்லிக்கேணி அத்தனை பரிச்சயமில்லாத பகுதி. சட்டென்று நம்ம ஊர்ப்பையனான எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி ஞாபகம் வந்து அழைத்தேன்.

‘ஏ தம்பி! திருவல்லிக்கேணில பாரதி மெஸ் பத்தி ஒரு மட்டம் சொல்லியிருந்தேல்லா. அது எங்கடே இருக்கு?’

‘அண்ணே! அங்கன அடயார் ஆனந்த பவனுக்கு எதுத்தாப்ல அக்பர் ரோட்ல இருக்கு’ என்றான்.

தம்பிக்கு நன்றி சொல்லிவிட்டு ‘பாரதி மெஸ்’ அடைந்தோம். வாசலிலேயே ஒரு பெரிய போர்டு. ‘நாங்கள் டால்டா, அஜினோமோட்டோ’ போன்றவைகளை உபயோகிப்பதில்லை. ‘நல்ல சகுனமா இருக்குண்ணே’ என்றார் ரகன். சாப்பிட்டு முடித்த திருப்தி, கடைக்குள் நுழையும் போதே ஏற்பட்டது. சின்னக் கடைதான். நின்றபடிதான் சாப்பிட வேண்டும். உள்ளெ ஆங்காங்கே அலமாரிகளில் பாரதியார் புத்தகங்களை வேடிக்கை பார்த்தபடி நானும், பேராசிரியரும் காத்திருந்தோம். ரகன் சாப்பாடு ஆர்டர் செய்து வாங்கப் போனார். இதற்குள் சமையலறையில் இருந்த பெண்கள் பேராசிரியரை அடையாளம் தெரிந்து வணங்கினர்.

‘என்ன ஸார் சாப்பிடறீங்க?’

‘நண்பர் அங்கே போயி ஆர்டர் பண்ணி வாங்கறாரும்மா. இருக்கட்டும்’.

‘அங்கே என்ன ஆர்டர் பண்ணுனீங்க? அதை சொல்லுங்க. நாங்க தர்றோம். சாப்பிடுங்க’.

வீட்டு உணவை, வீட்டுப் பெண்களின் உபசரிப்பில் உண்டு மகிழ்ந்தோம்.

சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது சொன்னேன்.

‘கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புங்கறது எத்தனை உண்மை! பாருங்க, தமிழ்தானே ஒங்கள அந்தப் பெண்களுக்கு அடையாளம் காமிச்சுது?’

‘அட நீங்க வேற சுகா! அவர் யாருன்னு தெரியாதாடி! அவருதான் ஜெயம் ரவியோட அப்பான்னு அந்தப் பொம்பளப் பிள்ள சொன்னத நீங்க கவனிக்கல’ என்றார், பேராசிரியர்.

5 Comments »

 • Srini vasan said:

  Suga ji…Suga nnu type pannina Sugar nnu varudu. Pasi nerathil , vaerka viruvirukka vatha kulambu+nallennai+sutta appalam sapta tirupti, intha padivai padithavudan…Maelum ivvaru siranda virundinai samaithu parimaravum.Nellai Tamil pasikku neer thaan engalukku tavasupillai. Magizhlchi. Nandri

  [பதிப்புக் குழுவின் உபயம்- மேலே கண்ட இங்கிலிஷ் மறுவினையின் தமிழ் வடிவு இங்கே. ]

  சுகா ஜி… சுகான்னு டைப் பண்ணினா சுகர்ன்னு வருது. பசி நேரத்தில், வேர்க்க விறுவிறுக்க வத்தக் குழம்பு+ நல்லெண்ணெய்+சுட்ட அப்பளம் சாப்ட்ட திருப்தி, இந்தப் பதிவைப் படித்தவுடன்… மேலும் இவ்வாறு சிறந்த விருந்தினை சமைத்துப் பரிமாறவும். நெல்லை தமிழ் பசிக்கு நீர் தான் எங்களுக்கு தவசுப் பிள்ளை. மகிழ்ச்சி, நன்றி.

  # 31 May 2016 at 7:27 am
 • T.P.Meenakshi said:

  நீண்ட இடைவெளிக்குப்
  பிறகு எங்களை பயணக் கட்டணம் இன்றி
  திருநெல்வேலிக்கு அழைத்துச்சென்று
  விட்டார் திரு.சுகா.’ஆமவட’,’இங்கன’,
  அங்கன’,’இம்புட்டுப்போல’தண்ணீர்
  ‘கோரி’_இவைதான் எங்களை ஏற்றிச்
  சென்ற வாகனங்கள்.

  # 1 June 2016 at 2:48 am
 • பொன்சந்தர் said:

  கடையந்தான் என்னோட அம்மா ஊரு. அதுக்கு பக்கத்துல இருக்க புங்கம்பட்டிதான் யே ஊரு. இம்புட்டு அழகான திருநெவேலி தமிழ கேட்டு எம்புட்டு நாளாச்சு. சார்வாள் கலக்கீட்டீய ! !

  # 2 June 2016 at 12:00 am
 • k.balasubrahmanyant said:

  well written with enjoyment. bala

  # 3 July 2016 at 3:31 am
 • raja rc said:

  அன்பின் சுகா,

  கல்கோனாவ நியாபகப்படுத்திட்டீக.தின்னு எவ்வளவு வருசம் ஆச்சு.அதெல்லாம் தெக்குப்புதுத்தெரு சி.எம் பள்ளிக்கூடத்தோட சோலி முடிஞ்சிட்டு.வாயில என்னல கல்கோனாவா ந்னு சாமுவேல் வாத்தியான் கிட்ட கொட்டு வாங்கி மண்டையில கல்கோனா சைசுல வீங்கினது கூட நியாபகத்துல வந்து தொலைக்கி.

  # 27 September 2016 at 10:35 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.