ராணுவ மற்றும் பாதுகாப்பு உலகம்

ராணுவம் என்றவுடன், உடனே நம் மனதில் தோன்றுவது வீரர்கள், டாங்குகள், பீரங்கிகள் போர் விமானம் மற்றும் போர் கப்பல்கள். இந்த காட்சி சரியாக இருந்தாலும், கடந்த 25 ஆண்டுகளாக, தொழில்நுட்பம் மேற்குலகப் போர்களில் மிக முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துள்ளது.

  • 1990 –ல் நடந்த முதல் வளைகுடா போரில், அமெரிக்கா மேற்சொன்ன தளவாடங்களை மட்டும் பயன்படுத்தி வெற்றி பெறவில்லை. இதில் பெரும் பங்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் பல புதிய மின்னணுவியல் கருவிகள் துணை போனது. லேசர்களால், வழிநடத்தப்பட்ட ஏவுகணைகள், அகச்சிவப்பு பைனாகுலர்கள் மற்றும் உணர்விகள் என்று தொழில்நுட்பத்தை அள்ளி வீசி எதிரிகளை திக்கு முக்காட வைத்தனர்
  • 2003 –ல் நடந்த இரண்டாம் வளைகுடா போர், அமெரிக்காவுக்கு வெற்றியைத் தராவிட்டாலும், ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் பல புதிய தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. 2003 இரண்டாம் வளைகுடாப் போரில், முதன் முதலாக, ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரருக்கும் ஒரு இணைய முகவரி அளிக்கப்பட்டது. உலகின் முதல் பெரிய கருவி இணைய முயற்சி இதுவாகத்தான் இருக்க வேண்டும். கத்தாரில் உள்ள கட்டுப்பாடு மையத்திலிருந்து, ஒவ்வொரு ராணுவ வீரரும் கண்காணிக்கப்பட்டார்
  • ஆப்கானிஸ்தானில் சிறுவர்களுக்கு கூட அமெரிக்க போர் முறையின் கருவி இணையச் செயல்பாடுகள் தெரியும் – இவர்கள் அடிக்கடி பார்த்தது, தானியங்கி குண்டு வீசும் குட்டிப் போர் விமானங்கள் (aerial automatic drone bombers). வளைகுடா போரில் செங்கடலிலிருந்து லேசர் வழிநடத்தப்பட்ட டோமோஹாக் ஏவுகணைகள் தாக்கியது போல, ஆஃப்கானிஸ்தான் போரில், எங்கோ அமெரிக்க நிவேடா பாலைவனத்திலிருந்து இணையம் மூலம் ஒரு உயரே பறக்கும் விமானத்திலிருந்து, தானியங்கிக் குட்டிப் போர் விமானங்கள் (unmanned aerial vehicles or UAVs) அதிரடித் தாக்குதல்கள் நடத்தின. இவ்வகை தாக்குதல்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது

ஒன்று மட்டும் நிச்சயம் – போரில் ஈடுபடும் அரசாங்கங்கள், மிகவும் அச்சப்படும் விஷயம், வீரர்களின் சடல எண்ணிக்கை. மக்களவையில் சடல எண்ணிக்கை அதிகமானால், எதிர்கட்சிகள் கிழித்து விடுவார்கள். உயிர்சேதமற்ற போர் முறைகள் இதனால் மிகவும் ஊக்குவிக்கப்படுகின்றன. இனிமேல், சினிமாவில்தான் துப்பாக்கி, கத்திச் சண்டை எல்லாம். மற்றபடி போர் என்பதும் ஒரு இணைய, அதுவும் கருவி இணைய விஷயமாகிவிடும்.

Part17-Pic2

சாதாரணர்கள் இன்று பயன்படுத்தும் விடியோ காமிராக்கள், ராணுவ பயன்பாடுகளின் பாக்கியாகும். ராணுவப் பயன்பாடுகள் பெரும்பாலும் மிகவும் சக்தி வாய்ந்த விடியோ காமிராக்கள் (பின் லாடெனைக் கண்காணித்த வகை) மற்றும் அகச்சிவப்பு காமிராக்கள் (infrared cameras). மேலும், பலவகை உணர்விகளை ராணுவப்  போர் விமானங்கள், மற்றும் ஊர்த்திகள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளன. தானியங்கி பறக்கும் ஊர்த்திகளில் பெரும்பாலானவை கண்காணிப்பு வகையைச் சேரும். இவற்றில் சக்தி வாய்ந்த காமிராக்கள், படம் பிடித்து ஒரு கட்டுப்பாட்டு மையத்திற்கு டிஜிட்டல் தரவுகளாக அனுப்பிய வண்ணம் பறக்கும். இவற்றைத் தவிர, பூமிக்கு மேலே பறக்கும் ராணுவ செயற்கைக் கோள்கள், பகை நாட்டின் நிலப்பறப்பை துல்லிய காமிரா மூலம் கண்காணித்த வண்ணம் உள்ளன. கருவி இணைய விஷயங்கள் அனைத்தும் ராணுவத்தில் ஆரம்பமானவைதான்.
’சொல்வனத்தில்’, ‘நேரம் சரியாக’ என்ற தொடரில், ரகசிய ஜி.பி.எஸ். பற்றி எழுதியிருந்தேன். ராணுவ கருவி இணைய அமைப்பில் ரகசிய ஜி,பி.எஸ் –ம் ஒரு முக்கிய கருவி. ஒரு ராணுவ வீரரின் சரியான இருப்பிடம் (நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ். நம் இருப்பிடத்தை யார் வேண்டுமானாலும் எளிதில் அறிந்து கொள்ளலாம்) எதிரி நாட்டிற்குத் தெரியக்கூடாது.
ஆக, ராணுவக் கண்கள் பல வடிவங்களில் வரும்:

  1. வானில் பறக்கும் தானியங்கி பறக்கும் ஊர்த்திகள்
  2. ராணுவ செயற்கை கோள்கள்
  3. போர் விமானங்கள்
  4. ரகசிய ஜி.பி.எஸ்

இவை அனைத்தும் டிஜிட்டல் குறிகைகளால் (digital signals) , பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டு மையத்துடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் சக்தி வாய்ந்தவை.
இன்று அமெரிக்க ராணுவ முயற்சிகள், கட்டுப்பாட்டு மையத்துடன் நிற்காமல், எதிரி நாட்டில் உள்ள ராணுவ வீரருக்கு எப்படி இவ்வகைச் சிக்கலான, மற்றும் ஏராளமான கண்காணிப்பு தரவுகளை (விடியோக்கள், வெப்பப் படங்கள், ஜி.பி.எஸ். தரவுகள்) உடனே கொண்டு சேர்ப்பது என்பது. நம்முடைய 5-ஜி திறன்பேசி முறைகள் பாதுகாப்பற்றவை. இவற்றின் வேகமும் தேவை, மற்றும் பாதுகாப்பும் தேவை. வெற்றிக்கும் தோல்விக்கும் உடனுக்குடன் கிடைக்கும் எதிரி முயற்சிகளின் விடியோக்கள், மற்றும் எதிரி இருப்பிட மற்றும் ராணுவ அமைப்பு பற்றிய தரவுகள் மிகவும் முக்கியம். யுத்த பூமியில் இவ்வகைத் துல்லிய கருவி இணைய தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான தேவை.

Part17-Pic3

ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், நான் இதுவரை இந்தத் தொடரில் பார்த்த தொழில்நுட்பங்கள் ராணுவத் துறையால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒன்று. ஆனால், இன்று ராணுவ மையங்கள் இந்தத் தொழில்நுட்பங்களை முற்றிலும் தவிற்கின்றன! உடைகளில் உணர்விகள், மற்றும் திறன்பேசியில் எதையாவது திருடும் மென்பொருள் என்ற எதையும் ராணுவ மையங்களில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இன்றைய பாதுகாப்பு உலகின் மிகப் பெரிய கவலை, எப்படி ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை, வேறு ஒரு பாதுகாப்பு பிரச்னையை உருவாக்க பயன்படுத்துவார்களோ என்ற அச்சம். உதாரணத்திற்கு, ஒரு  ரகசிய ராணுவ மையத்தில் இருக்கும் எல்.ஈ.டி. மின் விளக்கு பழுதானதை இணையத்தில் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை எளிய முறையில், இணைய விஷமிகள், இந்த ரகசிய ராணுவ மையம் இருக்கும் இடத்தை அறியப் பயன்படுத்தலாம். ஒரு மிக உயரக் கட்டிடத்தில் உள்ள காற்று மாசு அளக்கும் கருவி, எத்தனை உயரத்தில் தடைகள் இல்லாமல் அந்த நகரின் மேல் தானியங்கி பறக்கும் ஊர்த்தி பறக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடப் பயன்படுத்தலாம்.
மிகவும் போரடிக்கும் போர் பயன்பாடு
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ராணுவ கருவி இணையப் பயன்பாடுகளின் மிகப் பெரிய பயன்பாடு – பொருட்களின் இருப்புப் பட்டியல். பொதுவாக, ராணுவமாகட்டும், விமான படையாகட்டும், கப்பற்படையாகட்டும், யாவுமே மிகவும் விலையுயர்ந்த எந்திரங்களைப் பயன்படுத்தும் அமைப்புகள். ஒரு போர் விமானம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்க ஒன்றும் திறன்பேசியல்ல. பல வருடங்கள், இவ்வகை எந்திரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். பராமரிப்பு என்பது பாதுகாப்பு படையினரின் மிகப் பெரிய பிரச்னை.
RFID தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான ஒன்று. ராணுவ தளவாடங்களின் பல கோடி உதிரி பாகங்களின் இருப்பை கண்காணிக்க வேண்டியது ராணுவ, விமான, கப்பல்துறையின் முக்கிய வேலை. கோடிக் கணக்கில் விலை உயர்ந்த உதிரி பாகங்களை கண்காணிக்க RFID  மிகவும்  உதவும் – ஒரு உதிரி பாகம் எந்த டிப்போவில் உள்ளது என்பதோடு நிற்காமல், டிப்போவின் எந்த தளத்தில், எந்த அலமாரியில் உள்ளது என்று எங்கிருந்து வேண்டுமானாலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு ராணுவ எந்திரம் அல்லது ஊர்த்தி பயன்படும் வகையில் இருக்க இவ்வகைச் செயல்திறன் மிகவும் அவசியம்.
உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும், இது மிகவும் தோதான விஷயம். பல தரமான ராணுவ காண்ட்ராக்டர்கள், உதிரி பாக்ங்களை, உடனுக்குடன் தயாரித்து ராணுவத் தேவையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இவ்வகை RFID தாங்கிய பாகங்களை ரோபோக்கள் கொண்டு கையாளவும் பயன்படும்.
இவ்வகை பராமரிப்பு வேலைகளில் உதிரி பாகங்களை வைப்பில் வைத்திருப்பது, மாற்றுவது என்பது பழைய முறை. இன்று, மேற்குலகில், பழுது அடையுமுன், எப்படி இவற்றை மாற்றி எந்திரத்தை தயார் நிலையில் வைத்திருப்பது என்று கருவி இணைய முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். உதிரி பாகங்களின் இயக்க நேரத்தை அளவிடுவது, அவற்றின் சூழல் அளவுகளை அளப்பது (வெப்பம், அழுத்தம், உராய்வு) போன்ற கருவி இணைய முயற்சிகள், தகுந்த நேரத்தில், பாகங்களை மாற்றப் பயன்படுகிறது.

 
 
ராணுவத் திறன் ரோபோக்கள்
கன்னிவெடிகளைத் தகர்ப்பது என்பது ராணுவத்தில் நிகழும் அன்றாட செயல். மிகவும் அபாயமான இச்செயலை ரோபோக்கள் மிகவும் எளிதில், அதிக சேதமின்றி செய்ய கருவி இணைய முயற்சிகள் உதவுகின்றன. இவ்வகை ரோபோக்களில், சில முக்கிய உணர்விகள் உதவுகின்றன;

  1. தூரத்தை அளக்கும் துல்லிய காமிரா
  2. கரடு முரடான பாதையைக் கடக்க உதவும் நிலை உணர்விகள்
  3. துல்லியமாக நகர உதவும் ஜி,பி.எஸ். உணர்விகள்
  4. சரியாக கன்னிவெடியைக் குறி பார்க்க உதவும் உணர்விகள்

பாதுகாப்பான தூரத்திலிருந்து கம்பியில்லா தொடர்புமூலம் இவ்வகை ரோபோக்களை இயக்கலாம். கார்பன் நாறுகளால் செய்யப்பட்டிருப்பதால், குண்டு வெடித்து உருவாகும் வெப்பத்தை தாங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் இவை.

 Part16-Pic4

 
இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
கருவி இணைய பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி எழுதும் பொழுது, இணையப் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். 21 –ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பின்னேற்றம் நிழல் போர்கள். எதிரி யாரென்று தெரியாமலே போர் நிகழ்த்துவது இந்த மின்னணுவியல் யுகத்தின் ஒரு அலாதியான விஷயம். இன்று, இந்த நிழல் போர், இணையத்தில் நிகழ்த்தப்படுகிறது.

  1. நிழல் போர்களை உணர்வது என்பது முதற்படி. பெரும்பாலும், இவை, ஒரு நாட்டிற்கு எதிரான தீவிர இணைய டிஜிட்டல் பிரச்சாரம்
  2. இந்த பிரச்சாரத்திற்குப் பின்னால், பல பயங்கரவாத அமைப்புகள், சாதாரணர்களை பிரச்சாரத்தால் மயக்கி ஆயுதம் ஏந்தச் செய்யும் முயற்சிகள்
  3. இவ்வகை நிழல் போர்களைத் தகர்ப்பது மிகவும் கடினமான ஒன்று. எங்கிருந்து இவ்வகைப் பிரச்சாரங்கள் உருவாகின்றன, இந்த அமைப்புகளின் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதெல்லாம் கண்டறிய ஏராளமான மனிதத் திறன் தேவை
  4. இவ்வகை முயற்சிகளை தகர்த்து எறிய கருவி இணைய தொழில்நுட்பம் எப்படி உதவும்? நாம் இதுவரை பார்த்த நம்மால் தொடக்கூடிய கருவிகள் இங்கு பயன்படாது. உலகில் உள்ள அத்தனை நிழல் போராளிகளையும் கண்காணிக்க போதுமான அளவு மனிதவளமும், பயிற்சியும் எந்த அரசாங்கத்திடமும் இல்லை
  5. இதனால், இவ்வகை முயற்சிகளை, சில தேர்ந்த திறமையாளர்களின் முறைகளை, கணினி செயற்கை புத்திசாலி நிரல்கள் கொண்டு (அதாவது, நிழல் கருவிகள்) இணையம் முழுவதும் ஒவ்வொரு நாளும் முளைக்கும் நிழல் அமைப்புகளை தகர்க்க அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் முயன்று வருகின்றன

ராணுவக் கருவி இணைய முயற்சிகள் ரகசியமானவை. இவற்றை உருவாக்கும் பல ஒப்பந்த நிறுவனங்களும் இந்த முயற்சிகள் பற்றி அதிகம் பொதுவெளியில் எதுவும் சொல்வதில்லை. பல மேற்குலக ராணுவங்களின் அடுத்த 25 ஆண்டு திட்டங்கள் பொதுவெளியில் இருந்தாலும், இதில் அதிக விவரங்கள் இருப்பதில்லை. ரகசிய ஜி.பி.எஸ்.,புதிய உணர்விகள்,  தானியங்கி பறக்கும் ஊர்த்திகள் மற்றும் வீரரின் பாதுகாப்பிற்கான புது முயற்சிகள் என்று மேலெழுந்தவாரியாக இந்தத் திட்டங்கள் விளக்கும். ஆனால், உருவாக்கப்படும் கருவிகளின் உண்மையான செயல்பாடுகள், மற்றும் சக்தி பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகம் விளக்கப்படுவதில்லை.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.