“வணக்கம் நண்பர்களே! இன்று அதிகம் பேசப்படாத சிறுகதையைப் பற்றிப் பேசப்போகிறோம்.
மா.அரங்கநாதன் எழுதிய “சித்தி” கதை. தன்ராஜ், ஆரம்பிக்கிறீர்களா?” என்று ஆரம்பிக்கிறார் கிரிதரன்.
தன்ராஜ், சரளமான குரலில் ஆரம்பிக்கிறார்.
“நன்றி கிரி. இந்த கதை சித்தி என்ற உறவைப் பற்றியது அல்ல, முக்தி என்ற அர்த்தத்தில் வரும் சித்தி (siddhi) பற்றியது என்பதை கதை படிக்கும் போதே நான் உணர்ந்தேன்.
கதை ஒரு மராத்தன் ஓட்டப்பந்தய வீரனைப் பற்றியது. அவன் விளையாட்டை ஊக்குவிக்காத அல்லது விளையாட்டைத் தொழிலாய் வைத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வழி இல்லாத நாட்டில் வசிக்கிறான். அவனை யதேச்சையாய் சந்திக்கும் காவலாளர் அறிமுகப்படுத்தும் ஓர் நல்ல பயிற்சியாளரிடம் நன்றாகப் பயிற்சிப் பெற்று அந்நாட்டிலேயே சிறந்த ஓட்டக்காரனாகி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுகிறான். அவனுக்கு தன் ஓட்டத்தை பற்றி உள்ள எண்ணமும், மற்றவர்களுக்கு அவன் மேல் இருக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே உள்ள முரணே கதையில் மையம்.
மா. அரங்கநாதனின் கதையை இப்போதுதான் முதன் முறையாகப் படிக்கிறேன். செறிவான சிறிய கதை, மிக குறைவான வார்த்தைகளில் கூறிச் செல்கிறார்.
சென்று சேரும் இடத்தை விட, அதற்கான பயணமே முக்கியமானது என்று ஒரு ஆங்கில சொலவடை உண்டு. கதையின் நாயகனுக்கு நாடே அவன் சென்று சேரும் இடமென நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் பதக்கம் பெரிய மன எழுச்சியை அளிப்பதில்லை. அவன் அனுதினம் ஓடிக்கொண்டிருப்பதே அவனுக்குப் பேருவகை அளிப்பதாய் இருக்கின்றது.
இவ்வுலகில் நீங்கள் ஒரு உயரிய இடத்திற்குச் சென்று சேரும் வரை யாருக்கும் உங்கள் பயணம் பற்றி அக்கறையில்லை. சென்று சேர்ந்த பிறகும் கூட உங்கள் பயணத்தில் இருந்து அவர்களுக்கு ஏதாவது பயன்படுமா என்ற ஆராய்ச்சிகள் நிகழுமே தவிர அவன் வாழ்க்கையை கொண்டாடும் விதமான பார்வை இருப்பதில்லை. வெல்லாதவனின் பயணங்கள் அவனுடேயே அவன் கல்லறை சென்று சேர்கின்றன. தன் பயணத்தில் உவகை கொள்ளாமல் குறிக்கோள்களில் கவனம் செலுத்துபவர்கள் தன் வாழ்க்கையை வாழாமலே இவ்வுலகை விட்டு நீங்கிச் செல்கின்றனர்.
மேற்கூறியவற்றையெல்லாம் அரங்கநாதன் கதையில் நீட்டி முழக்கவில்லை. ஆனால் படித்தவுடன் இவையே என் மனதில் சில மணி நேரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இக்கதையின் கடைசி வரி உங்களில் ஒரு சிந்தனை திரியை சிறிதாக கிள்ளிப் போடுகிறது. அதுவே இக்கதையின் வெற்றி என நினைக்கிறேன்“
என்று தன்ராஜ் முடித்தவுடன் அனைவரும் சற்றே இலகுவாகின்றனர்.
கிரிதரன், “நன்றி தன்ராஜ். இக்கதையில் சித்தி எனும் உறவுமுறையைக் குறிப்பிடவில்லை என்பதை நானும் கதை படிக்கும்போதுதான் புரிந்துகொண்டேன். சித்தி என்றால் அதுவாவே ஆகுதல். சித்தியும் முக்தியும் பெற இல்லறம் தடை. பயனென்ன எனக்கேள்வி வருவதே ஒரு செயலை முழுமையாக அனுபவிக்கத் தடையாகிறது. தப்பு கண்டுபிடிக்க வேண்டும், விமர்சனம் எழுத வேண்டும் என்ற காரணத்தோடேயே ஒரு புத்தகத்தைப் படிப்பது ஒரு முழுமையான வாசிப்பு இன்பத்தை அளிக்காது. வாசிப்புக்கு முழுமையாக ஒப்புகொடுத்தல். ஒரு செயலாகவே மாறிவிடுதல் – இந்த நிலை சித்தி (siddhi) தான்.
கறுப்பன் எனும் ஓட்ட வீரன் ஓட்டத்தைத் தவிர எதுவுமே அறியாதவன். அவனுக்கு ஓட்டத்தின் மீதான நாட்டத்தில் போலீஸ் மைதானம் எனத் தெரியாமல் ஓடுகிறான். அவனது நாட்டத்தைப் பார்த்து காவலாளி ஒரு பெரியவரிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார். பலவிதமான பயிற்சிகள் மேற்கொண்டு உலகத் தொடர் ஓட்டக்காரனாக ஆகிறான். இவன் தான் உலகின் அடுத்த சாம்பியன் என எல்லாரும் எதிர்பார்க்கும்போது ஒரு பேட்டியில் உங்கள் வெற்றியால் நாட்டுக்கு விளையாட்டில் எழுச்சி உண்டாகுமா எனக் கேட்கும்போது எனக்கு ஓடப்பிடிக்கும் எனக்கூறுகிறான். இதைக் கேட்ட பெரியவர் மனம் நொந்து அவனிடமிருந்து விலகிச் சென்றுவிடுகிறார்.
சுத்த சைவமே சிவம் எனக்கொள், ஆடலும் ஆடுபவனும் வேறல்ல (கடவுளும் கந்தசாமிப்பிள்ளை) என சைவத்தின் முக்கியமான தத்துவம் செய்யும் செயலும், செய்பவனும் ஒன்றாக ஆகிவிடும் தருணம். கதையில் கருப்பனும் அப்படியே ஓட்டமாகவே இருக்கிறான். இடம் பொருள் தெரியாது ஓட்டத்தின் விதிகளைப் பற்றிய அக்கறையற்று ஓடுகிறான். அவனுக்கானப் பெயர், அவன் புழங்கும் ஊர் எதையும் ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. அவன் ஒரு செயலாக மட்டுமே இருக்கிறான்.
கருப்பனின் திறமைகள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. பெரியவர் அவனது திறமையை உயர்த்துவதன் மூலம் தனது நாட்டின் விளையாட்டு ஆர்வத்தை மீட்க நினைக்கிறார். நிருபர்களிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஒரு விதத்தில் இல்லறத்தில் தலைவனிடம் இருக்கும் எதிர்பார்ப்பு போன்றதுதான். தனிப்பட்ட திறமை என்ற ஒன்றை பயன்படுத்தாவிடின் அத்திறமை வீண் எனும் லெளகீக எண்ணம் சார்ந்தது.
கதையில் கருப்பனின் குறிக்கோள் முழுவதும் ஓட்டத்தைச் சாத்தியப்படுத்துவதில் மட்டுமே இருக்கிறது. வேகம், ஜெயிப்பு, யாருடைய இடம் என்ற எதுவும் தடையல்ல. ஒருவிதத்தில் நுண்கலைகளைப் பேணுபவர்களிடமும் கலைஞர்களிடம் இத்தகைய பண்பு இருப்பதைப் பார்க்கின்றோம்.
ஒரு சிறுகதையின் ஒழுங்கு இல்லாத கதையாக இருக்கிறது – தத்துவத்தின் சாயலை முன்வைக்க எழுதப்பட்ட கதை. கதை எழுதப்பட்ட காலத்தில் இதே தளத்தில் எழுதப்பட்ட அசோகமித்திரனின் திருப்பம், புலிக்கலைஞன், புதுமைப்பித்தனின் காஞ்சனை போன்றவற்றை ஒப்பிடும்போது சுமாரானக் கதையாகவே அமைந்திருக்கிறது எனலாம்.”
நண்பர்கள் வேறு யாரும் எதுவும் பேசாதிருந்ததே தன்ராஜ், கிரிதரனின் வாசிப்பு அனுபவங்களோடு அவர்கள் ஒத்துப்போவதைக் காட்டியது.