சதுரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, எண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களைப் பற்றி, அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம் என நான்கு கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழினி’ மாத இதழ் அவற்றை வெளியிட்டது. விஜயா பதிப்பக வெளியீடான ‘சிதம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் அவற்றைக் காணலாம். அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சிதான் ‘சதுரம்’ எனும் இந்தக் கட்டுரையும்.
இந்தக் கட்டுரைகள் சொல் தேடல், தகவல் தேடல் அன்றி வேறல்ல. கோட்பாட்டுச் சிக்கல்கள், சம்பவ முரண்கள் என்று எதுவுமே இங்கு காணக் கிடைக்காது. இவற்றுள் எதுவும் ஆய்வுகளோ, கண்டு பிடிப்புகளோ அல்ல. பெரும்பாலும் பேரகராதி, நிகண்டுகள் என்பனவற்றுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
சதுரம் எனும் சொல், ஐயத்துக்கு இடமின்றி, வடமொழிப் பிறப்பு. சதுர் எனும் சொல்லிலிருந்து கிளைத்தது. சதுர் என்றால் நான்கு என்று பொருள். அதன் அர்த்தம் சதுர் எனும் சொல் பிறந்த பின்பே நான்கு என்ற சொல் பிறந்தது என்பதல்ல. நமக்கு ஒரு சிக்கல், இருபக்கத்துக் குறைமதியாளர்களாலும்.
பிரம்மாவாகிய நான்முகனைச் சதுர்முகன் என்றார்கள். சதுர் என்றாலும் சதுர்முகன் என்றே பொருள். சதுர் முகனை, சதுமுகன் என்றும் குறிப்பிட்டார்கள். சிலப்பதிகாரம், நாடு காண் கதையில், இளங்கோ அடிகள், ‘சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்’ என்பார்.
சதுர் என்றால் சாமர்த்தியம் என்றும் பொருள். Smartness எனலாம்.

”கோலாலம் ஆகி, குரை கடல்வாய், அன்று எழுந்த
ஆலாலம் உண்டான், அவன் சதுர்தான் என்?”

என்கிறார் மாணிக்க வாசகர், திருச்சாழல் பகுதியில். ‘கொந்தளிக்கும் பாற்கடலில் அன்று பேரொலியோடு எழுந்த ஆலகால விடம் உண்டான். அவன் திறமைதான் என்னே!’  என்பது பொருள்.  சதுரன் என்றாலும் சமர்த்தன் என்றே பொருள். சதுரம் என்றாலும் அஃதே. விவேகம் என்றும் பொருள் கொள்கிறார்கள். சதுர் வேறு, சதிர் வேறு என்பதை அறிக.

‘தந்தது என் தன்னை, கொண்டது உன் தன்னை யார் கொலோ சதுரர்?’

என்பது தேவாரம். ’என்னைத் தந்தேன், உன்னைக் கொண்டேன், இதில் யாரப்பா சாமர்த்தியசாலி?’ என்பது கேள்வி.
மாணிக்க வாசகர், ‘திரு வார்த்தை’ பாடும்போது,

‘அங்கணன், எங்கள் அமரர் பெம்மான்!
            அடியார்க்கு அமுதன்! அவனி வந்த
எங்கள் பிரான்! இரும் பாசம் தீர,
            ’இக- பரம் ஆயது ஓர் இன்பம்’ எய்த,
சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும்,
            சதுரன், பெருந்துறை ஆளி, அன்று
மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த
            வகை அறிவன் – எம்பிரான் ஆவாரே!’

என்கிறார். அழகிய கண்களை உடையவன், எங்கள் விண்ணவர் தலைவன், அடியவர்க்கு சாவா மருந்தாவான், அவனியில் வந்த எங்கள் பிரான், மும்மலம் அறும்படி இம்மை மறுமையாகிய பேரின்பம் அடையும் பொருட்டு, அன்று சங்கு வளை விற்க மதுரை வந்தவன், அவன் பெருந்துறை ஆறும் சமர்த்தன். அது பாடலின் பொருள்.
சதுரம் என்றாலும் விவேகம் அல்லது சாமர்த்தியம்தான். ஆனால் சதுரம் என்றால் Square என்ற பொருளிலேயே இன்று ஆள்கிறோம். ’நேர்கோணம் உள்ளதும், அளவு ஒத்த நான்கு எல்லை வரம்பு உடையதுமான உருவம்,’ என்கிறது பேரகராதி. கணிதப் பாடத்தில் நீள் சதுரம் என்றும் சாய் சதுரம் என்றும் கற்றிருக்கிறோம்.
இனிமேல் சதுர் அல்லது சதுரம் அடிப்படையில் அமைந்த சொற்கள் சில காண்போம்.

vilakku
புகைப்படம்: Thanks – anands.net

சதுர மாடம்-            நான்கு புறமும் அளவொத்து அமைந்த மாடப் புரை. மாடப்புரை என்ற சொல் சுவரில் அகல் விளக்கு ஏற்றி வைக்கும் கன சதுரத்திலான பொந்தைக் குறித்தது. இன்று எந்த வீட்டுப் புதுச்சுவரிலும் மாடப் புரை இல்லை. எனில் அந்தச் சொல் எங்கே இருக்கும்?
சதுர வரம்- அதாவது சதுர அரம். Square file.
சதுர வளவு- சதுர அளவு. அகலத்தையும் நீளத்தையும் பெருக்கி வந்த அளவு. அதாவது 6 அடி நீளம் x 4 அடி அகலம் எனில் அது 24 சதுர அடி.
சதுரம்- நாம் இன்று Square feet என்பதை, அன்று கொத்தரும் தச்சரும் சதுரம் என்றனர்.அல்லது சதுர அடி என்றனர்.
சதுவகை-                 நால் வகை
சதுரப் பாலை-       பாலை யாழின் வகை
சதுரப் பிரண்டை-   பிரண்டையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் சதுரம் ஆனபடியால்,பிரண்டையின் இன்னொரு சொல் சதுரப் பிரண்டை.
சதுரக் கள்ளி-      கள்ளி வகைகளில் திருகுக் கள்ளி, சப்பாத்திக் கள்ளி, கொடுக்கள்ளி போல, சதுரக் கள்ளி. நான்கு விளிம்புகளிலும் முட்கள் உள்ள கள்ளி.
சதுரப்பாடு-         திறமை, விவேகம், சாமர்த்தியம்
சதுரக் கல்-         சதுர வடிவிலான செங்கல். சதுர வடிவிலான தரை ஓடு
சதுரக் கம்பம்-       நாற்கோணமாக அமைந்த தூண்
சதுர் வேதி-         நான்கு வேதங்களிலும் வல்லமை உடைய அந்தணன். வட நாட்டில் துவி வேதி, திரிவேதி, சதுர்வேதி என்பன குலப்பெயர்கள். அதாவது Surnames.அவர்களுக்கும் வேதங்களுக்கும் எத்தொடர்பும் இருப்பதாக எமக்கு அறிவில்லை.
சதுர்க்கோணம்-     நாற்கரம். Quadrangle. நாற்கோணம்
சதுர்ப் புயன்-       நான்கு புயங்களை உடையவன். திருமால், சிவன்
சதுர்த்தசம்-        பதிநான்கு
சதுர்த் தசி-        பதினான்காம் திதி
சதுர்த்தம்-         நான்கு சுரம் உடைய ராகம். அவை என்ன ராகங்கள் என்று தெரிந்தவரிடம் கேட்க வேண்டும்.
சதுர்த்தர்-         நான்காம் வருணத்தினன். சூத்திரர், வேளாளர்
சதுர்த்தர்-         சமர்த்தர்
சதுர்த்தி-          நான்காம் திதி, நான்காம் வேற்றுமை
சதுர்த்தியறை-       திருமணமான நான்காம் நாள், மணமக்கள் கூடி முயங்கும் அறை
சதுர்முகன் –       நான்கு முகங்களை உடைய பிரம்மன். நான் முகன். திரு உந்தியாரில் மாணிக்க வாசகர் பாடுகிறார்.

’திருமால் அவிர்ப்பாகம் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீ பற!
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற!

சதுர்ப்பாதம் –       சிவ ஆகமங்கள் நான்கு.  சரியை, கிரியை, யோகம், ஞானம்.
சதுர்யுகம்-         நான்கு யுகங்கள் கூடிய பெருங்காலம். நாலூழி.கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம்.
இப்போது நடப்பது கலியுகம் என்கிறார்கள்.
சதுர்வர்ணம்-         நால் வர்ணம். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர். அஃதாவது பிராம்மணர்,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால்வகைக் குலம். ‘நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை’ என்பது  திவ்யப் பிரபந்தம்.
நாலாம் வர்ணத்தவன் பெருமை பேசும் ஔவையார் பாடல்:

’நூல் எனிலோ கோல் சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம்
கோல் எனிலோ அங்கே குடி சாயும்- நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணை ஆவான்
அந்த அரசே அரசு!”

முப்புரி நூல் அணிந்த அந்தணர் அமைச்சராக அமைந்தால் அந்த அரசின் செங்கோல் சாய்ந்து விடும். உறவினரான அரச குலத்தவனான க்ஷத்திரியன் அமைச்சனானால், கொடிய போரினை மூட்டி விடுவார்கள். நாலாவது வகுப்பான வேளாளனோ நல்ல அமைச்சராக இருப்பான், அரச நெறிக்கு உற்ற துணையாக விளங்குவான். அவனைத் துணையாகக் கொண்டதே,நல்லரசாகவும் இருக்கும்.
சதுர்விதோபாயம்- அரசு புரிவதற்கு என்று அற நூல்கள் கூறும் நான்கு செயல்கள். சாமம், தானம்,பேதம், தண்டம். சதுர் வித உபாயம்.
சதுர் வேதம்-            நான்கு வித வேதங்கள். இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம். நான் மறை. சதுர் மறை என்கிறார் பத்ரகிரியார்.

‘சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அழிப்பது எக்காலம்?”

என்பது பாடல் வரி.
திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி,’நால்வகை வேதம், ஐந்து வேள்வி, அறங்கள் வல்லார்,’ என்கிறது.
சதுரகராதி-    18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் தொகுத்த அகராதி.பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்பன.
சதுரங்க சேனை- நான்கு படைப்பிரிவுகள் கொண்ட முழுமையான சேனை. இரத,கஜ, துரக, பதாதி என்பர். நாற்படை.
சதுரச் சந்தி-   நாற்சந்தி
சதுரப்பாடு-  சதுரம்
சதுவகை-    நால்வகை
சதுக்கம்-    நாற்சந்தி. Square
சதுக்க பூதம்- நாற்சந்திகளில் நிற்கும் பூதம். கொடியவரைப் பிடித்து விழுங்குவது.
சிலப்பதிகாரம் சதுக்க பூதம் பற்றிப் பேசுகிறது.
சதுமுகன் தேவி-நான்முகன் தேவி. சரசுவதி
சதுரர்-             நாகரிகர், அமைச்சர்
சதுர்த் தந்தம்- நான்கு தந்தங்களை உடைய யானை. ஐராவதம்.
எட்டுத் திக்குகளில் பூமியைத் தாங்கும் யானைகளில் ஒன்று. பாற்கடல் கடையும்போது வந்தது. இந்திரனுக்கு வழங்கப்பட்டது.
step-wellசதுர எனும் வட சொல்லின் அடியாகப் பிறந்த சொற்களில் பல கண்டோம். நான்கு என்ற சொல், சதுர் எனும் சொல்லின் நேர். தமிழனின் தொல்லிலக்கியங்களில் நான்கு, நாற்பது, நானூறு என்பன சிறப்பான எண்கள். ஔவாயோ நான்கு பொருட்கள் கொடுத்து விட்டு மூன்று தமிழும் கேட்கிறாள். அவள் காலத்தில் ஐந்து தமிழ் இல்லை, ஐந்தமிழ் அறிஞரும் இல்லை.

’பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!’

என்கிறாள். இயல், இசை, நாடகம் என்றபடி முத்தமிழ். சங்க நூல்களான எட்டுத் தொகையினுள், அகநானூறு, புற நானூறு, நற்றிணை, குறுந்தொகை என தலா நானூறு பாடல்களாகத் தொகுத்துள்ளனர். பதிணென் கீழ்க் கணக்கு நூல்களில் நாலடியார் நானூறு பாடல்கள், பழமொழி நானூறு பாடல்கள். நான்மணிக் கடிகை மொத்தம் 106 பாடல்கள், வெண்பாக்கள். நாற்பது என்று கொண்டால் இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது மற்றும் களவழி நாற்பது. ஏன் நாற்பது, நானூறு, நாலாயிரம் என்று தொகுக்கப் பெற்றன என்று தெரியவில்லை.
நான்கு என்றால் அதி சிறப்புத்தான் போலும்! ‘நாலு பேரு என்ன பேசுவா?”, ‘நமக்குன்னு நாலு பேரு வேண்டாமா?’ , ‘நாலு பேர்ட்ட கேட்டுப் பாரு?’, ‘நாலு பேரைக் கூப்பிட்டு நாயம் பேசு!’ என்பன அன்றாட மக்கள் வழக்கு.
பள்ளிப் படிப்பின் போது நான்கு திசைகள் என்றுதான் படித்தேன். பின்புதான் ’சென்றிடுவீர் எட்டுத் திக்கும்’ என்ற எட்டுத் திக்குகள் புலப்பட்டன. மனோன்மணியம் சுந்தரப் பிள்ளை, ‘எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! என்றார். நிலத்தையும் நானிலம் என்றோம். ‘நான்கு’ திருத்தமான தமிழ்ச் சொல். ஆனால் தமிழர் நாவில் வழங்குவது ‘நாலு’ எனும் சொல்லே. அதுபோல ஐந்தும் அஞ்சும்.
திருநாவுக்கரசர், விடந்தீர்ந்த திருப்பதிகத்தில் நான்கு என்பதை நாலு என்றே கையாள்கிறார்.

‘நாலு கொலாம் அவர் தம் முகமாவன
நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலு கொலாம் அவன் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின  தாமே!’

என்று நாலு முறை சொல்கிறார். எம்பெருமான் பிரமனாக இருக்கும்போது அவர் முகம் நான்கு. உயிர்கள் நிலம், கருப்பை, முட்டை, வியர்வை ஆகிய நான்கில் இருந்தும் பிறக்கும். அவர் ஊர்ந்து வரும் வாகனமான இடபத்தின் பாதங்கள் நான்கு. அவர் பாடிய மறை அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு. அல்லது அவரைப் பாடிய மறைகள் நான்கு.
சங்க இலக்கியம் ‘நான் மறை’ பேசுகிறது. பாணரின் பாலைத் திணை

‘நான் மறை முது நூல் முக்கண் செல்வன்
ஆல முற்றம் கவின் பெறத் தை இய’

என்கிறது. முதிய நூல்களான நான் மறைகளை உணர்ந்த மூன்று கண்களை உடைய தெய்வம் அவன். அவன் திருக்கோயில் அமைந்த இடம் ஆல முற்றம் எனும் பொருளில். புற நானூற்றின் காரி கிழார் பாடல், ‘சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே’ என்கிறது. பட்டினப் பாலை, ‘நான் மறையோர் புகழ் பரப்பியும்’ என்கிறது. திருமுருகாற்றுப் படையும் பெரும்பாணாற்றுப் படையும் நான்முகனைப் பேசுகின்றன.
இனிமேல் தனித்த சில சொற்களையும் பார்ப்போம்.
நான்முகன் –  பிரம்மன். கம்பன், இராவண வதைப் படலத்தில் கையாளும் சொல்.
’சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனோ அல்லன்’ என்று இராமனைப் பார்த்து இராவணன் வியப்பதாக. நான் முகனைக் குறிக்க அந்தணன் என்றும் சொல்லையும் ஆள்கிறான். சூர்ப்பணகை மூக்கும் முலைகளும் அறுபட்டு வருவதைக் கண்ட அரக்கர் அரற்றுவதாகப் பாடல். இத் தீமை செய்தவன் யாரென வியந்து.
‘இந்திரன் மேலதோ? உலகம் ஈன்ற பேர் அந்தணன் மேலதோ?’ என்று கூறுவதில் இருந்து நான்முகனை அந்தணன் என்று குறிப்பதை அறியலாம்.
மறுபடியும், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில், சூர்ப்பணகை கூற்று,

‘பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்’
என்கிறாள். போற்றித் திரு அகவலில் மாணிக்க வாசகர்,
‘நான்முகன் முதலானவர் தொழுது எழ’ என்கிறார்.

நான்முகனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. சினம் கொண்ட சிவன் ஒரு தலையைத் திருகி எறிந்து பிரம்மஹத்தி தோஷம் நீங்க அலைந்தான். அந்த ஒரு தலை போக, அறாத மீதி நான்கு தலைகளையும், நான் திருகி எறிய மாட்டேனா என்று ஔவை பாடுகிறாள். எதற்கு அத்தனை கோபம்? பாட்டிலேயே விடையும் உண்டு.

‘அற்ற தலை போக, அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்
மரம் அனையானுக்கு இந்த மானை வகுத்திட்ட
பிரமனை நான் காணப் பெறின்’

பட்டுப் போன மரம் போன்றவனுக்கு மானை ஒத்த இந்தப் பெண்ணை விதிப்போல மணம் செய்து வைத்த பிரம்மனை நான் கண்டால், அன்று சிவன் அறுத்த தலை போக, மீதி நான்கினையும் பற்றித் திருகிப் பறித்து எறிய மாட்டேனா என்று கேட்கிறாள்.
திருமழிசை ஆழ்வார், நான்முகன் திருவந்தாதியில் பாடுகிறார்.

‘நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்.’

என்று முதற் பாட்டில்  நான்முகனைச் சொல்கிறார்.
நாற்பால்-      சங்க இலக்கிய காலத்திலேயே சதுர் வர்ணங்கள், நாற்பால் எனக் குறிக்கப்பட்டு வந்திருக்கின்றன. புற நானூற்றில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் ஒன்று.

’வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே’

என்கிறது.
நால்வர்-        இந்தச் சொல் சைவ சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகரைக் குறிப்பது என்கிறது சூடாமணி நிகண்டு. புற நானூற்றில் மதுரைக் கணக்காயனார் பாடல், ‘நால்வர்’ பற்றிப் பேசுகிறது. அந்த நால்வர், காளைக் கொடியும், தீப்போன்ற சடையும், வெல்லுதற்கு அரிய மழு ஆயுதமும் உடைய சிவன். கடற் சங்கு போன்ற வெண்ணிற உடலும், வலிமையான கலப்பை ஆயுதமும் பனைக்கொடியும் உடைய பலதேவன். நீல மணி போன்ற நிறமும், கருடக் கொடியும் கொண்ட கண்ணன். மயில் கொடியை உடையவனும், பிணி முகம் எனும் யானையை வாகனமாகக் கொண்டவனுமான முருகன். அவர்கள் உலகம் காக்கும் வலிமையும், அழியாப் புகழும் கொண்ட நால்வர்.
நால்வாய்-     இது யானையைக் குறிக்கும் சொல். தனிப்பாடல் புலவன் ஒருவன், வள்ளல் ஒருவாய் சோறு கேட்டேன், அவன் நாலு வாய் கொடுத்தான் என்கிறான். இங்கும் நாலுவாய் என்பது யானை.
நாலறிவு-       மாந்தர்க்கு ஆறறிவு, விலங்குகளுக்கு ஐந்தறிவு என்பர். நாலறிவு என்பதைப் பிங்கல நிகண்டு விளக்குகிறது.
’உற்றறி புலன் நா மூக்கொடு கண்ணும்
பெற்ற வண்டு, ஞெண்டாதி நாலறிவின’
உற்றறியும் புலன், நாவு, மூக்கு, கண் – நாலறிவு.
எடுத்துக்காட்டு: வண்டு, ஞெண்டு.
நாற்சீர் – தமிழிலக்கணம் பத்தாம் வகுப்புவரை பயின்றவர் அறிவார்கள். அறியாதவர்க்கு அதைச் சொல்லி என்ன பயன்?
நால் – நான்கு. ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்கிறது பெருந்தொகைப்பாடல். பழகு தமிழின் சொல் அருமை நாலடியாரிலும் திருக்குறளிலும் இருக்கிறது.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்பார்கள். ஆலின் விழுதும் வேலங்குச்சியும் பல்லுக்கு உறுதிதரும் தேய்த்தால். நாலடியாரும் திருக்குறளும் சொல்லுக்கு உறுதி தரும்
நால்கு – நான்கு.நால்கு என்ற சொல்லைப் பெரும்பாணாற்றுப்படை பயன்படுத்துகிறது.

‘நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல்
வளை கண்டன்ன வால் உனைப் புரவி,
துணை புணர் தொழில், நால்கு உடன் பூட்டி’

என்பது பெரும்பாணாற்றுப்படை. குதிரைகளினுடைய இலக்கண நூலில் சொல்லப்பட்டுள்ள, சிறந்த வெண்மையான, பிடரி மயிர்களை உடைய நான்கு புரவிகளைத் (தேரில்) பூட்டி என்று பொருள்.
நால்வகைச் சாந்து – கலவை, வீதம், புலி, வட்டிகை எனும் சந்தனச் சாந்து
நால்வகைத் தேவர் – பவணர், வியத்தகர், கோதிஷ்கர், கப்ல வாசியர் எனும் நால்வகைத் தேவர்கள். கள்ளர், மறவர், அகமுடையர், வெள்ளாளர் அல்ல.
நால்வகைத் தோற்றம் – அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால்வகை உயிர்த் தோற்றம்
நால்வகைப் பூ – கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப்பூ, நிலப் பூ
நால்வகைப் பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
நால்வகை உணவு – உண்ணுதல், தின்னுதல், நக்குதல், பருகுதல்
நால்வர் நான்மணி மாலை – சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய பிரபந்தம், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மீது.
நால்வடிவன் – யானை முகத்தினன். விநாயகன்.
ஐராவதம் எனும் யானையை உடையவன் – இந்திரன்
நாலடி – நாலடியார். பதினெண் கணக்கு நூல்களில் ஒன்று.
ஜைன முனிவர்களால் இயற்றப் பெற்றது. அறம், பொருள், இன்பம் எனும் பகுப்பில் 400 வெண்பாக்கள்.
நாலம்பலம் – அம்பலம் எனில் கோயில். கோயிலுக்குள் ஒரு பகுதி.
நாலறிவுயிர் – சுவை, ஒளி, ஊறு, நாற்றம் என்பன நாலறிவு. வண்டு தும்பி முதலியன.
நாலா – பல. நாலா பக்கமும்
நாலான் சடங்கு – நாலா நீர்ச் சடங்கு. விவாகத்தின் நான்காம் நாள் மணமக்கள் புரியும் நீராட்டச் சடங்கு. நாஞ்சில் நாட்டில் இந்த சடங்கை கல்யாண நாள் இரவு, முதலிரவுக்கு முன்பாகச் செய்கிறார்கள்.
நாலா நீராடுதல் – To take purificatory bath on the fourth day after menstruation.
நாலாம் பாதகன் – கொலை பாதகன்
நாலாம் பொய்யுகம் – கலியுகம்
நாலாம் வருணம் – சூத்திர சாதி
நாலா முறைக் காய்ச்சல் – மலேரியா
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய 4000 பாடல்கள்
நாலாயிரம் – நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
நாலாயிரச் சக்கிரம் – சித்திரக்கவி வகை
நாலாவான் – சூத்திரன்
நாலு கட்டு – நாற்புறமும் சுற்றுக்கட்டுத் திண்ணை கொண்டு வீடு.
நாலு கவிப் பெருமாள் – நாலு வகைக் கவியிலும் வல்லவர். திருமங்கை ஆழ்வார்
நாலு சதுரக் கமலம் – மூலாதாரச் சக்கிரம்
நான்காம் வேதம் – வேதத்துள் நான்காவது. அதர்வ வேதம்.
நான்கெல்கை மால் – நில எல்லை. அதிகார வரம்பு
நான்மணிக்கடிகை – விளம்பி நாதனார் இயற்றிய நீதி நூல்.
சங்க இலக்கியத்துள் பதினெண்கீழ் கணக்கு நூல்
நான்மணி மாலை – அந்தாதித் தொடையாகப் பாடப்படுவது. வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என மாறிமாறி மாலை போல் இசைந்து வரும், நாற்பது செய்யுட்கள் கொண்ட நூல்.
நான் மருப்பு யானை – நாற் கொம்புடைய யானை. ஐராவதம்
நான் மருப்பு யானை  ஊர்தி – ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரன்
நான் மலத்தார் – ஆணவம், கன்மம், சுத்தமாயை, திரோதாயி என்னும் நான்கு மலங்கள் உடைய பிரளயாகலர்.
நான்மறை முதல்வன் – அந்தணன். புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடும் ஒளவையார்,

‘அறம் புரி கொள்கை நான் மறை முதலவர்
திறம் புரி பசும்புல் பரப்பினர், கிடப்பி’, என்கிறார்

நான் மறையாளன் – நான் மறையோன், பிரம்மன்
நான் முகத்தோன்  – நான் முகன்
நான் முகப்புல் – நாணல்
நான் முகன் கிழத்தி – சரசுவதி, நான்முகன் தேவி.
நான் முலையாயம் – பசுங்கூட்டம். நான்முலை என்பது பசுமடுவின் நான்கு காம்புகளைக் குறிப்பது.
‘நான் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்’
என்று ஆய்ச்சியர் குரவை, உரைப்பாடு மடை   சிலப்பதிகாரத்தில் பேசுகிறது.
நானியம் – குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் எனப்பட்ட நான்கு வகை நிலங்கள்.
நான்மாடக் கூடல் – கூடல் நகரம், மதுரை மாநகர்.
‘ஊடல் பெருமானைக் கூடலார் கோமானை’ என்று தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்றுண்டு.
‘நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்’ என்று சங்க இலக்கியம் பேசுகிறது. புதுமைப்பித்தன், ‘அன்று இரவு’ என்ற அவரது புகழ்ப்பெற்ற சிறுகதையை ‘நான் மாடக்கூடலில் அன்று நால்வர் உறங்கவில்லை. அதிலொருவன் சொக்கேசன்’, என்று தொடங்குகிறார்.
அங்ஙனம் சதுரத்தில் தொடங்கி, நான்கில் முடிக்கிறோம் இந்தக் கட்டுரையை. நான்கு எனும் சொல்லைத் தமிழனின் பழந்தமிழ் நூல்களான அகநானூறு, புறநானூறு, திருமுருகாற்றுப் படை, நெடுநல் வாடை, பரிபாடல் என்பன பயன்படுத்தியுள்ளன. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர்க் கிழார் பாடிய பாடலில்,  ‘திசை இரு நான்கும்’ என்கிறார். எட்டுத் திசையும் என்று பொருள்.
நாலடியார் பயன்படுத்துகிறது ‘நான்கு’ எனும் சொல்லை

‘அறம், புகழ், கேண்மை, பெருமை, இந்நான்கும்
பிறன் தாரம் நச்சுவார்ச் சேர – பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரும் பகை, பழி, பாவம் என்று
அச்சத்தோடு இந் நாற்பொருள்’

என்பது பாடல். தருமம், கீர்த்தி, நட்பு, பெருமை ஆகிய இந்த நான்கு பொருள்களும் பிறன் மனையாளை விடும்புகிறவரிடம் சேர மாட்டர். பகையும் நிந்தனையும், பாவமும், அச்சமுமே அவர்களைச் சேரும் என்பது உரை.
கபிலர், இருங்கோவேளைப் பாடிய பாடலில், ‘நாற்பத் தொன்பது வழி முறை வந்த வேளிருள் வேளே?’ என்று பாராட்டுகிறார். மதுரை இளநாகனார் பாடல் ஒன்று புற நாறூற்றில்.

‘கடுஞ் சினத்த சொல் களிறும், கதழ் பரிய கலிமாவும்
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சுடைய புகல் தேவரும் என
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’

என்று நீளும் பாடல் அது. அருமையான பாடல், கடுமையான சினம் கொண்ட கொல்லும் ஆண்யானை, விரைந்து செல்லும் மனைச் செருக்குடைய குதிரை. நீண்ட கொடி  விளங்கும் உயர்ந்த தேர், நெஞ்சுரமும் வலிமையும் உடைய வீரர் எனப் படைச் செருக்கு பல இருந்தாலும், பெருமையுடைய அரசாட்சி என்பது அறநெறியை முதன்மையாகக் கொண்டது.
இன்றைய அரசாட்சிகளோ அறநெறியைப் பழைய செய்தித்தாள்வாங்கும் கடையில் எடைக்குப் போட்டுவிட்டு, ஆயிரம், பதினாறாயிரம், இலட்சம் கோடிகளே மாண்பு என மயங்கி நிற்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.