கல்லறையின் மீதொரு தேசம் – 1

AfroRwanda”ஹைதர்”, விஷால் பரத்வாஜின் ஒரு முக்கியமான திரைப்படம். கஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் திரைப்படம். காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப் பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து, காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடலொன்றைப் பாடத் துவங்குகிறாள்.  பலநாட்கள் மனத்தை அதிரச் செய்த காட்சி அது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அக்காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.
“அமைதி” என்று பெயரிடப்பட்டிருந்த முதல் மாடியின் அந்த அறையின் கதவைச் சத்தமின்றித் திறந்ததும், என்னைத் தாக்கியது அந்த மென் சோகப்பாடல். ஜன்னலோரத் திண்ணையில் அமர்ந்து, காதில் இயர் ஃபோனைக் பொருத்திக் கொண்டிருந்த அந்தப் பெண் தான் பாடிக்கொண்டிருந்தாள். கன்னங்களில் நீர் வழிந்து கோடிட்டிருந்தது.  அறையைச் சுற்றி நோக்கினேன். இன்னொரு ஜன்னலின் திண்ணையில் ஒரு இளைஞன் கண்களை மூடிப் பிரார்த்தனையில் இருந்தான். கைகளில் ஜபமாலை போல ஒன்று. காதுகள் அந்தப் பெண்ணையே நோக்கியிருக்க, எதிர் ஜன்னலின் அருகில் சென்று வெளியே நோக்கினேன். பஞ்சுக் குவியலின் மென் தூவலென வெளியே மழை துவங்கியது. கைபேசியின் படப் பெட்டியில் ஒரு புகைப் படம் எடுக்கலாம் என, குவி நோக்கி, திரையை அழுத்தினேன். அதிலிருந்து வெளிப்பட்ட சப்தம் பெரிதாய் ஒலித்து, அறையின் அமைதியை குலைத்தது.  மூடி வைத்து விட்டு, ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். சிறிது நேரம் அமைதியாக இருக்க முயன்றேன். கீழ்த்தளத்தில் கண்ட காட்சிகளும், தகவல்களும் குமிழியிட்டு மேலெழுந்து வந்து கொண்டேயிருந்தன. குமட்டியது. எழுந்துவிட்டேன்.  கீழிறங்கி வந்து வரவேற்பறையில் நின்று மழையைக் கவனிக்கத் துவங்கினேன். அந்த இடம் ரவாண்டா நாட்டின் இன அழிப்பு மியூசியம்.
ரவாண்டா ஒரு அழகிய ஆஃபிரிக்க தேசம். மலையும் மலை சார்ந்த நிலமும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டருக்கும் மேல் உயரத்தில் உள்ளதால், எப்போதும் மென் குளிர். காதலியின் அண்மை போல. விமானத்தில் இருந்து இறங்கியதும், நம்மை முதலில் கவர்வது – சுத்தமான சாலைகள்.  என்னை அழைத்துப் போக வந்திருந்த நண்பர் சொன்னார் – மாதத்தின் இறுதிச் சனியன்று, காலையில், துப்புரவு பணியாளர்களும், மக்களும் வெளியில் வந்து சாலைகளையும் பொது இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டுமென்பது அரசின் ஆணை என.  மக்கள் வருவதில்லை. ஆனால் வீடுகளிலும், கடைகளிலும் வேலை செய்யும் பணியாளர்கள் பொது இடங்களைச் சுத்தம் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.  வீடுகளின், மரங்களும் பூச்செடிகளும் சரியாகப் பராமரிக்கப் பட்டிருக்கிறதா என உள்ளூர் கவுன்சிலர் கவனிக்கிறார். அன்று தேதி இரண்டு. எனவே அதி சுத்தம்.
ரவாண்டாவுக்குத் தொழில் நிமித்தமாகச் செல்லுமுன், அது பற்றி எனது சகாவுடன் பேசி, ரவாண்டா பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ள முயன்றேன். ரவாண்டா ஆஃபிரிக்காவின் மிக நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படும் தேசம் எனச் சொன்னார். நாங்கள் எங்களது நிறுவனம் துவங்க முற்பட்ட போது, விண்ணப்பம் அளித்த நான்காம் நாள் துவங்க அனுமதி கிடைத்தது ஏன்றார். வியந்து போனேன். மொத்த ஆஃபிரிக்க கண்டத்தில் ரவாண்டா, கானா என்னும் இரு நாடுகள் தாம் மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுபவை. மிகக் குறைந்த ஊழல். இதற்கு முழுக்காரணமும் பால் ககாமேவைச் (Paul Kagame) சாரும். இனக்குழுச் சண்டைகள் நடந்து அது இன அழிப்பாக மாறிய போது, ரவாண்டாவை வென்று, ஆட்சியில் அமர்ந்து, மிகச் சிறப்பாக ஆட்சி செய்கிறார். மாலை மயங்கும் முன், தெருவில் ஆயுதம் தாங்கிய போலீஸும், ராணுவமும் நிற்கும். எனவே இரவில் பயமின்றி நடமாடலாம் என்றறிந்து கொண்டேன். அத்தனையும் உண்மை என்பதை அங்கெ இருந்த 3 நாட்களிலும் பார்க்க முடிந்தது.
அன்றைக்குச் சில மாதங்கள் முன்பு தான், நாட்டின் தலைவர் பால் ககாமே ஒரு மக்கள் கணிப்பை வென்றிருந்தார். ஒருவர் ஒரு நாட்டின் தலைவராக இரண்டு முறைகள் தான் இருக்க முடியும் என்னும் விதியைத் தளர்த்தி, அதை ஐந்தாக்கிக் கொள்ள மக்களின் அனுமதி கேட்டிருந்தார். 98% மக்கள் அதை சரியென்றிருந்தார்கள். கிழக்கு ஆஃபிரிக்க நாடுகளில், இது இப்போது ஒரு மோஸ்தராக மாறிக்கொண்டிருக்கிறது. உகாண்டாவின் முஸூவேணி, ஜிம்பாப்வேயின் இராபர்ட் முகாபே, ரவாண்டாவின் பால் ககாமே என அனவரும் நாற்காலிகளில் ஒட்டிக் கொண்டு விலக மறுக்கிறார்கள்..  நண்பரிடம், “இது என்ன புதிதாய் துவங்கியிருக்கும் கிழக்கு ஆஃபிரிக்க வியாதியா?”, என்றேன். அதை அவர் ரசிக்கவில்லை. மற்ற நாடுகள் எப்படியோ, ரவாண்டாவுக்கு, பால் ககாமே இன்னும் 10-15 ஆண்டுகள் தேவை. அந்த அளவுக்கு, இந்தச் சமுதாயத்தில் இன அழிப்பின் கொடுமைகள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்றார்.
26 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் (தமிழகத்தில் பாதி) பரப்பளவு கொண்ட குட்டி நாடு ரவாண்டா.. இதன் மக்கள் பல்வேறு பழங்குடிக் குழுக்களைச் சார்ந்தவர்கள்.. ஆதியில் வந்தவர்கள் ட்வா என்னும் குள்ளமான மனிதர்கள். இவர்கள் வேட்டையாடி உண்னும் குழுக்கள். பின்னர் வந்தவர்கள் இன்று பெரும்பான்மை மக்கள் என அறியப் படும் ஹூட்டு பிரிவைச் சார்ந்தவர்கள். டூட்ஸிகள் எனப்படும் சிறுபான்மையினர் இறுதியில் வந்தார்கள் என ஒரு கருத்தும், ஹூட்டுகளும் டூட்ஸிகளும் வேறு வேறு இனமல்ல.  டூட்ஸிகள் மாடு மேய்ப்பவர்கள், ஹூட்டுகள் வேளாண்மை செய்பவர்கள். எனவே இது இனப் பாகுபாடல்ல, பொருளாதாரப் (தொழில்) பாகுபாடு என்றும் சொல்கிறார்கள்.
பலமுறைகள் கலந்தும் முயங்கியும். இந்த நாட்டு மக்களினம், முதலில் குழுக்களாகப் பிரிந்தது. பின்னர் 1700 களில் எட்டு அரசுகளாக உருவாகியது. அதில் ஒரு அரசான டூட்ஸி ந்யிகின்யாவின் ஆட்சியில் தனிப் பெரும் அரசாக உருவெடுத்தது. அதன் முக்கிய மன்னனான கிகேலி ர்வாபுகிரி (Kigeli Rwabugiri) பல நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதில் ஆயர் குடியினரான டூட்ஸி மக்கள் சமூகத்தின் மேற்படியில் அமரத் தொடங்கினர். ஹூட்டுக்கள் டூட்ஸி குழுத் தலைவர்களுக்கு வேலை செய்யத் தொடங்கினர்.  டூட்ஸிக்களுக்கும், ஹூட்டுகளுக்கும், சமூகப் பொருளாதார, அரசதிகாரப் பிரிவினைகள் துவங்கின.
1884 பெர்லின் மாநாட்டின் வழியாக, ரவாண்டா ஜெர்மனிக்கு அளிக்கப் பட்டது. ஜெர்மனி, உள்ளூர் அரசர் வழியாக ரவாண்டாவை ஆண்டு வந்தனர். முதலாம்  உலகப் போருக்குப் பின், ரவாண்டா பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஜெர்மனியைப் போலன்றி, பெல்ஜியம் நேரடியான நிர்வாகத்தில் ஈடுபட்டது.  ரவாண்டாவை நவீனப்படுத்தும் முயற்சிகள் துவங்கின. அதில் ஒரு அங்கமாக, நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, நிலம் தனியார் மயமாக்கப் பட்டது. இந்த சீர்திருத்தத்தில், பொருளாதாரத்தின் மேற்படியில் இருந்த டூட்ஸிகள் பயனுற்றார்கள்.  ஹூட்டுக்கள் தம் நிலங்களை குறைந்த இழப்பீட்டுத் தொகைக்கு இழந்து, டூட்ஸிகளின் கீழ் நிலமற்ற வேளாண் கூலிகள் ஆனார்கள். பெல்ஜியம் அடுத்து செய்த (சீர்?)திருத்தம் தான் ஒரு பேரழிவை அறிவியற்பூர்வமாகச் செய்ய உதவியாக இருந்தது.
மக்களை ஹூட்டு, டூட்ஸி, ட்வா மற்றும் குடியேறிகள் எனப் பிரித்து அடையாள அட்டை கொடுத்தார்கள். இந்த அட்டை கொடுக்கப் படும் போது, 10 மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர் டூட்ஸி எனவும், அதற்கும் கீழுள்ளவர் ஹூட்டு எனவும் பிரிக்கப் பட்டதாக ரவாண்டா அரசின் இன அழிப்பு மியுசியத்தில் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது.. அதன் பின், மக்கள் பிறப்பின் அடிப்படையில் டூட்ஸி, ஹூட்டு, ட்வா எனப் பிரிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு, ஒரு பணம் படைத்த ஹூட்டு, தன்னை டூட்ஸி என மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இது போன்ற வழிகள் அடையாள அட்டைக்குப் பின்பு நிரந்தரமாக அடைக்கப்பட்டன.
பின்னர், பெல்ஜிய ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க சபை ரவாண்டாவில் பிரபலமாயிற்று. இச்சபை, மெல்ல மெல்ல ஹூட்டுக்களின் தரப்பில்rwanda city பேசத்துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, ஹூட்டுக்களின் மேம்பாடு பற்றிய குரல்கள் வலுக்கத் துவங்கின. 1957 ல், பஹூட்டு கோட்பாடு என்னும் முதல் ஆவணம் வெளியாயிற்று. இது புள்ளியியல் அடிப்படையில், அதிகாரம் டூட்ஸிகளிடம் இருந்து, ஹூட்டுகளுக்கு மாற வேண்டும் எனக் கோரியது. 1959 ல் அடுத்த திருப்பு முனை. டொமினிக் ம்போனியுமுட்வா (Domnique Mbonyumutwa) என்னும் ஹூட்டு தலைவர், தலைநகர் கிகாலியில் தாக்கப் பட்டார். அவர் கொல்லப்பட்டார் என்ற தவறான தகவல் பரவ, ஹுட்டுக்கள், டூட்ஸிகளைக் கொல்லத் துவங்கினர். டூட்ஸிகளும் பதில் தாக்குதல்களைத் துவங்கினர். ரவாண்டப் புரட்சி என்னும் இந்தத் தகராறு துவங்கியது. இந்தக் கால கட்டத்தில், பெல்ஜியர்கள், பெரும்பான்மை ஹூட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் துவங்கினர். 1960 ல், டூட்ஸித் தலைவர்கள் மாற்றப்பட்டு, ஹூட்டுக்கள் அந்த இடங்களில் நிரப்பப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பெருவாரியாக ஹூட்டுக்கள் வென்று ஆட்சியமைத்தனர். 1962ல் ரவாண்டா, ஹூட்டுக்களின் தலைமையில் சுதந்திரம் பெற்றது.
இந்தத் தகராறுகளினூடே, ஹூட்டுக்களின் தாக்குதலுக்கு அஞ்சி, டூட்ஸிகள் ரவாண்டாவை விட்டு வெளியேறத் துவங்கினர். அருகில் உள்ள நாடுகளான புருண்டி, உகாண்டா, தான்ஸானியா, ஸயர் (இன்றைய காங்கோ) போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  உலகப் போர்களுக்குப் பின்பு, புவியியல் எல்லைகள் வரையறுக்கப் பட்டு விட, தஞ்சம் புகுந்தவர்கள் அகதிகள் என்றழைக்கப்பட்டனர். எனவே, அவர்கள் மீண்டும் தங்கள் நாடுகளுக்குச் சென்றாக வேண்டிய நிலை உருவாகியது. அகதிகள், தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆயுதம் தாங்கிய குழுக்களை உருவாக்கத் துவங்கினர்.  பாச்சைகள் (cockroaches) என்னும் பெயரில் இவை பின்னர் போர்க் குழுக்களாக மாறின. பாச்சைகள் என்னும் சொல், பின்னர் டூட்ஸிகளைக் குறிக்கும் ஒரு இழி சொல்லாக மாறியது.
1964 களின் இறுதியில், கிட்டத் தட்ட 3 லட்சம் டூட்ஸிகள் ரவாண்டாவில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  டூட்ஸிகளுக்கெதிரான இந்த வன்முறை, 1973 க்குப் பின்பு, ஜ்வெனல் ஹப்யாரிமனா (Juvenal Habyarimana) என்னும் ஒரு ஹூட்டு தலைவர் ஒரு புரட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்த பின்பு குறைந்தது.
ரவாண்டாவின் மக்கட் தொகை,1934ல் 16 லட்சமாக இருந்தது. இது 1989 ல் 71 லட்சமாக உயர்ந்தது. தற்போது 1.3 கோடி. வேறு எந்த இயற்கை வளமும் இல்லாத போது, இந்த மக்கட் தொகைப் பெருக்கமும், ரவாண்டாவின் இனப்படுகொலைக்குக் ஒரு காரணமாக இருக்கலாம் என்னும் ஒரு கொள்கையை, ஜெரார்ட் ப்ரூனியர் (Gerard Prunier) என்னும் வரலாற்றாசிரியர் முன் வைக்கிறார். வியாபார நிமித்தம், ரவாண்டாவின் பல்வேறு சந்தைகளில் பணியாற்றும் போது இது ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. சின்ன நாடு எனினும், இதன் மக்கட் தொகை சதுர கிலோமீட்டருக்கு இந்திய அளவை எட்டுகிறது. குறைவான வருமானம், பெட்ரோல் போன்ற வளங்கள் இல்லாமை, அதிக மக்கட்தொகை – பேரழிவுக்குச் சாதகமான சூழல்.
அண்டை நாடான உகாண்டாவில், 1981 – 86 வரை, உகாண்டாவின் புதர்ப் போர் நடந்தது. சர்வாதிகாரி மில்டன் ஓபாட்டே வை எதிர்த்து, முஸூவேணியின் (இன்றைய தலைவர்) தலைமையில், தேசிய எதிர்ப்புப் படை (National Resistance Army) போரிட்டது. இந்தப் போரில் மில்டன் ஓபாட்டே வீழ்த்தப்பட்டு, முஸூவேணி தலைவரானார். இந்தப் போரில், உகாண்டாவில் இருந்த ரவாண்டா அகதிகள், ஃப்ரெட் (ர்)விகியாமா (Fred Rwigiyama) தலைமையில், முஸுவேணியுடன் சேர்ந்து போரிட்டார்கள். அதற்கு நன்றிக்கடனாக, போருக்குப் பின், ரவாண்டா அகதிகள் சேர்ந்து ஒரு ரகசியப் படை உருவாக முஸூவேணி உதவி செய்தார். அது ரவாண்டா தேசபக்த சக்தி (Rwandan Patriotic Force – RPF) என அழைக்கப்படலாயிற்று. 1990 அக்டோபர் மாதம், விகியாமா, ரவாண்டாவின் மீது படையெடுத்தார். ஆனால், படையெடுப்பின் மூன்றாம் நாளே அவர் கொல்லப்பட்டார். நட்பு நாடுகளான ஃப்ரான்ஸும், ஸையர் (இன்றைய காங்கோ) வும் படைகள் அனுப்பி உதவி புரிந்தன. ரவாண்டா தேசியப் படை பின் வாங்கி மீண்டும் உகாண்டாவுக்குள் சென்றது.
விகியாமாவின் மரணத்துக்குப் பின், ரவாண்டா தேசியப் படையின் அடுத்த தலைவரான பால் ககாமே படைக்குத் தலைமையேற்றார். 1991 ஜனவரியில் மீண்டும் தாக்குதல்களைத் துவங்கினார். கெரில்லா முறைப் போர். தாக்கி, சில நாட்களுக்கு ஒரு நகரைப் பிடிப்பது.. பின்பு,  பின் வாங்குவது என.. 1992 ஜூன் வரை இம்முறையில் தாக்குதல்களை நடத்தி பெரும் சேதம் விளைவித்தார். 1992ல், ஐந்து கட்சிகள் இணைந்துஒரு தற்காலிக அரசை நிறுவ ஒத்துக் கொண்டன. பால் ககாமே தாக்குதல்களை நிறுத்தி விட்டு, தான்ஸானியாவின், ஆருஷா என்னும் அழகிய நகரில் பேச்சுவார்த்தைகள் நடத்தத் துவங்கினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், ஒரு இடைக்கால அரசு அமைக்கும் முடிவு (broad based transitional government) எட்டப்பட்டது. அதில் ககாமேயின் ரவாண்ட தேசபக்த சக்தியும் பங்கெடுக்கும் எனவும் தீர்மானமாயிற்று. இது ஆருஷா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. இந்த ஆருஷா ஒப்பந்தத்தைச் செயல்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை – UNAMIR (United nations assistance mission for Rwanda) என்னும் பிரிவை உருவாக்கி, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையை ரோமியோ டலேர் என்னும் கனடிய ஜெனரலின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள். ஒப்பந்தப்படி, டலேரின் அமைதிப்படையும், பால் ககாமேயின் ரவாண்ட தேச பக்தி சக்தியும், தலைநகர் கிகாலியின் பாராளுமன்றத்துக்கு அருகில் வந்து தங்கினர்.
ஆனால், ஆருஷா ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மாபெரும் தடைகள் இருந்தன. ஜுவெனல் ஹப்யாரிமனாவின் மனைவியும், அவர் சகோதரரும், நாட்டின் படைத்தளபதிகளுடன் இணைந்து, ஒரு அடிப்படைவாதக் குழுவை உருவாக்கினார்கள். இவர்கள்  கங்குரா (kangura) என்னும் ஒரு அடிப்படைவாதப் பத்திரிகையைத் துவங்கினார்கள்.  அதில் ஹூட்டுக்களுக்குப் பத்துக் கட்டளைகள் என்ற பெயரில் மிக வெளிப்படையாக டூட்ஸிகளை எதிரிகள் என வரையறுத்தார்கள். டூட்ஸிகளும், டூட்ஸிகளை மணந்தவர்களும், அவர்களை ஆதரிக்கும் அல்லது நடுநிலை வகிக்கும் ஹூட்டுக்களும் துரோகிகள் என வரையறுக்கப்பட்டார்கள்.  குடியரசைக் காக்கும் கூட்டணி என்னும் ஒரு தீவிரவாத வலதுசாரிக்குழு, ஹப்யாரிமனாவின் கட்சிக்குள்ளேயே உருவானது. இது சில சமயங்களில், ஹப்யாரிமனா, டூட்ஸிகளுக்கு எதிராகச் செயல்படுவதில் தயக்கம் காட்டுகிறார் என, அவரையே விமரிசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.
ஆருஷா ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும், டூட்ஸிகளுக்கெதிரான கலவரங்கள் நின்றபாடில்லை. அரசிலும், ராணுவத்திலும் தீவிரவாதிகளை வெளியேற்ற முயன்ற ஹப்யாரிமனாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவருக்கெதிரான சதிகள் துவங்கின.  1993ன் துவக்கத்தில், அரசின் / ராணுவத்தின் தீவிரவாத அமைப்பு, அழிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரிக்கத் துவங்கியது எனவும், அதில் ஹப்யாரிமனாவின் பெயரும் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. தீவிரவாத அமைப்பு, RTLMC என்னும் ஒரு வானொலி நிலையத்தைத் துவங்கி, மிக வெளிப்படையாக டூட்ஸிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், பாடல்கள், அசிங்கமான நகைச்சுவைகள் என ஒலிபரப்பத் துவங்கியது. மக்களுக்கு, பாதுகாப்புப் பயிற்சி என்னும் பெயரில் ஆயுதமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தெளிவாகத் திட்டமிட்டு, ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் டூட்ஸிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பட்டியல்கள் தயாராக்கி வைக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு தொடர்பும் உண்டு. அது அண்டை நாடான புருண்டி. ரவாண்டாவையும், புருண்டியையும் ஒரு மலைத் தொடர் பிரிக்கிறது. இரு நாடுகளிலும் ஹூட்டுக்களும் டூட்ஸிகளும் வசிக்கின்றனர். இரண்டிலும் ஹுட்டுக்கள் பெரும்பான்மை; டூட்ஸிகள் சிறுபான்மை. 1993 ஜூன் மாதம், அந்த நாட்டின் அதிபராக முதல்முறையாக, மெல்க்யார் ன்டடாயே(Melchior Ndadaye) என்னும் ஹூட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 93 அக்டோபரில், புருண்டியின் தீவிரவாத டூட்ஸி ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது ரவாண்டாவின் ஹூட்டுகளுக்கு மேலும் வெறியேற்றியது, டூட்ஸிகளை சுத்தமாக அழித்தொழிக்கும், ”இறுதித் தீர்வு” என்னும் முடிவை எட்டினர் ஹூட்டு சக்தியினர். ராணுவம் ஏ.கே 47 போன்ற ஆயுதங்களை வாங்கி வீரர்களுக்கும், தீவிரவாதக் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கத் துவங்கினர். இந்த ராணுவக் கொள்முதலால், பல நாடுகள் பயன்பெற்றன. இதில் மிகமுக்கியமான ஆயுத ஒப்பந்தத்தை, Boutros Boutros Ghali என்னும் எகிப்தின் வெளியுறவு அமைச்சர் செய்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் பின்னர், ரவாண்டா அழிவின் போது, ஐக்கிய நாடுகளின் தலைவராக இருந்தவர்.
1994 ஜனவரியின், அமைதிப்படையின் தலைவர் ரோமியோ டலேருக்கு, ராணுவத்தின் இறுதித் தீர்வு நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்கள் ஒரு உளவாளி மூலம் தெரியவருகின்றன. அதை, ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு அனுப்பி, அதைத் தடுக்க முயற்சிகள் எடுக்க அனுமதிக்குமாறு எழுதுகிறார். 5000 வீரர்கள் கொண்ட அமைதிப்படையால், ரவாண்டாவில் அமைதியை நிலைநாட்ட முடியும் என வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி மறுத்தவர் பின்னர் ஐக்கிய நாடுகளின் தலைவரராக ஆன கோஃபி அன்னான். இந்த முடிவின் பின்னர் பல்வேறு நாடுகளின் அரசியல் நிலைமைகளும், நிதி போன்ற விஷயங்களும் இருந்திருக்கலாம். அந்த முடிவின் கட்டாயங்கள் என்னவாக இருந்தாலும், அந்த முடிவு 8 – 10 லட்சம் மக்களின் மரண சாசனமாக மாறியது என்பது உண்மை. இதை ரோமியோ டலேர் மிகக் காட்டமாகத் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஏப்ரல் 6, 1994 – ரவாண்டாவின் வரலாற்றில் கருப்பு நாள்.  ரவாண்டாவின் தலைவர் ஜுவனல் ஹப்யாரிமனாவையும், அண்டை நாடான புருண்டியின் தலைவர் சைப்ரியன் ந்டர்யாமிராவையும் (cyprien Ntaryamira) தான்ஸானியாவில் இருந்து கொண்டு வந்த விமானம், ரவாண்டாவின் தலைநகரம் கிகாலியில் இறங்கும் போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.  இதைச் செய்தது ககாமேயின் ரவாண்டா தேச பக்திப்படை என அறிவித்து, ரவாண்டா ராணுவமும், தீவிரவாதக் குழுக்களும் இறுதித் தீர்வைச் செயல்படுத்தத் துவங்கினர். இந்த அழிவுகளை, ரவாண்டா அதிபரின் காவற்படையினர்  முன்னெடுத்து நடத்துக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.