மானுடன் ஆகிடில் கோகுலச் சேரியின்
மாட்டிடையருடன் வாழ்ந்திடுக இந்த ரஸ்கான்
விலங்காகிடில் என் வசம் ஏதிருக்கும்
நந்தனின் பசுக்களுடன்
நிதம் மேய்ந்து திரிக யான்
கல்லாகிப் போனால் இந்திரன் நிமித்தமாய்க்
கைக்குடையாய் நின்ற மலையாகுக யான்
பறவையாகிடில்
காளிந்திக் கரைக் கதம்பமரக் கிளையில்
கூடமைத்திடுக யான்.
நமது கிருஷ்ணபக்தி மரபின் சுடர்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் தாரகைகளில் ஒருவர் ரஸ்கான். இனிய சந்தங்களில் அமைந்த அவரது ஹிந்திக் கவிதைகள் பக்தர்கள், இலக்கிய ரசிகர்கள் என்ற இரு சாராருக்கும் இன்றும் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை அளிப்பதாக உள்ளன.
16ம் நூற்றாண்டில் ஒரு செல்வமிக்க இஸ்லாமிய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் கான், அவரது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய திருப்பு முனை ஏற்பட்டு, மாபெரும் கிருஷ்ண பக்தராகி ரஸ்கான் என்று பெயர் சூட்டிக் கொண்டார். ‘கான்’ என்ற சொல்லுக்கு ஹிந்தியில் சுரங்கம் என்று பொருள். ரஸ்கான் என்றால் ‘ரசத்தின் சுரங்கம்’. ரஸ்கானின் வாழ்க்கை வரலாறு குறித்து முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன. “அங்கு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது; தில்லி சுடுகாடாயிற்று. பாதுஷா வம்சத்தவனான ரஸ்கான் அந்நகரை விடுத்தான்” என்று அவரது ஒரு பாடல் கூறுகிறது. இதில் வரும் சம்பவம், ஜஹாங்கீருக்கும் குஸ்ருவுக்கும் ஏற்பட்ட அரசுரிமைப் போர்களைக் குறிக்கிறது என்று பல சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ரஸ்கான் தில்லியைச் சேர்ந்த ‘பாதுஷா’ வம்சத்தவர் என்றும் இன்றைய ஆப்கானிஸ்தானத்தின் காபூல் நகரில் பிறந்து வளர்ந்து தில்லியில் குடியேறிய ‘பதான்’ வம்சத்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எப்படியானாலும், அவர் இளம் வயதிலேயே இஸ்லாமிய மதநெறிகளை முற்றிலுமாகத் துறந்து கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டார். கோஸ்வாமி விட்டல்தாஸ் என்ற புகழ்பெற்ற வைணவ ஆசாரியாரின் சீடராகி, இந்து சாஸ்திரங்களையும் புராணங்களையும் கற்று, பக்திக் கவிதைகளை இயற்றினார். வாழ்நாள் இறுதிவரை கிருஷ்ண பூமியாகிய பிருந்தாவனத்தில் வாழ்ந்தார். ஆதாரபூர்வமான இத்தகவல்கள் குறித்து ஒருமித்த கருத்து நிலவுகிறது.
ரஸ்கான் கிருஷ்ண பக்தியில் ஈர்க்கப் பட்டது எவ்வாறு என்பது குறித்து வேறுபட்ட பதிவுகள் உள்ளன. சிவனடியார்களின் வரலாறுகளைக் கூறும் பெரியபுராணம் போல, வைணவ அடியார்களின் சரிதங்களைக் கூறும் ஹிந்தி நூல் “252 வைஷ்ணவோங்கீ வார்த்தா”. இந்த நூலில் உள்ள கதைப் படி, ரஸ்கான் தன் இளம் வயதில் ஒரு வியாபாரியின் மகன் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார். அவன் பின்னாலேயே எப்போதும் சுற்றிக் கொண்டு, அவன் சாப்பிட்ட எச்சிலை உண்டு, பித்துப் பிடித்தலைபவராக, ஊராரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். ஒருமுறை யாத்திரைக்கு வந்த வைஷ்ணவர்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் இவன் அந்த சிறுவன் மீது வைத்துள்ள பித்து போல அல்லவா நாம் பகவான் மீது வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். இது ரஸ்கானின் காதுக்கெட்டி, அவர் வைஷ்ணவர்களிடம் வந்து நீங்கள் கூறும் பகவான் யார் என்று கேட்க, மதுராவில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாத்ஜி என்ற கிருஷ்ணனின் திருவுருவப் படத்தை ஒரு வைஷ்ணவர் எடுத்துக் காண்பித்தார். அதைக் கண்ட மாத்திரத்தில் ரஸ்கானின் உள்ளம் உடனடியாக கண்ணனின் வசமாகி விட்டது. தனது உடைமைகளைத் துறந்து நினைவுகளையும் மறந்து அந்த வைஷ்ணவர்களைப் பின் தொடர்ந்து மதுராவைச் சென்றடைந்து விட்டார்.
இன்னொரு கதையில், அவர் உயிருக்குயிராக உருகி உருகி ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆயினும் அவள் அவரை முற்றாக உதாசீனம் செய்கிறாள். இந்த மன உளைச்சலில் உழன்று கொண்டிருக்கும் போது ஸ்ரீமத்பாகவதத்தின் பாரசீக மொழிபெயர்ப்பை அவர் படிக்க நேர்கிறது. கோபிகைகளின் தூய அன்பைப் பற்றிய வர்ணனைகளைப் படிக்க படிக்க, உலக பந்தங்களின் மீது விரக்தி ஏற்பட்டு கிருஷ்ணனைத் தேடி மதுரா செல்கிறார். வேறொரு கதையில், மெக்கா யாத்திரை செல்லும் முஸ்லிம்களின் கூட்டத்துடன் போய்க் கொண்டிருக்கும் ரஸ்கான் வழியில் வந்த பிருந்தாவனத்தைப் பார்த்து அங்கேயே தங்கி விடுகிறார். நான் வருவதற்கில்லை நீங்கள் போய்வாருங்கள் என்று சொல்லி விடுகிறார். அவருக்கு வேண்டாதவர்கள் உடனே இதை பாதுஷாவிடம் சென்று புகார் சொல்ல, பாதுஷா கோபமடைகிறார். இந்த செய்தி கேட்டு, கீழ்க்கண்ட பாடலை அவர் பாடியதாகக் கூறப் படுகிறது:
“திருடர்கள் புரட்டுவேலை பண்ணுகிறார்கள்
ரஸ்கான் ஒன்றும் செய்வதற்கில்லை
எப்படியும், வெண்ணை திருடித் தின்றவனின்
பாதுகாப்பு உள்ளவன் அவன்.
ஸுஜான் ரஸ்கான், ப்ரேம-வாடிகா என்ற இரண்டு நூல்கள் ரஸ்கான் இயற்றியதாக அறியப் படுகின்றன. இந்த நூல்களின் பாடல்கள் அனைத்தும் ஆக்ரா – மதுரா பிரதேசங்களின் வட்டார வழக்கான வ்ரஜபாஷா என்ற ஹிந்தி மொழி வழக்கில் உள்ளன.
இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில், பாரசீகம், அரபி, உருது ஆகிய மொழிகளே கோலோச்சின. இந்துக்களின் மையமான அறிவுப் பண்பாட்டு மொழியான சம்ஸ்கிருதமும், அதை அடியொற்றிய வட இந்தியாவின் தேசபாஷை மொழிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தன. இந்தச் சூழலில் தான், பக்தி இயக்கத்தை வளர்த்தெடுத்த அடியார்களும் கவிஞர்களும் தங்களது தேசபாஷைகளில் மனமுருக்கும் வசீகரமான பக்திக் கவிதைகளைப் புனைந்தனர். இதனால் அந்த மொழிகள் காப்பாற்றப் பட்டது மட்டுமின்றி இலக்கிய அந்தஸ்தையும் அடைந்தன. அத்துடன், சம்ஸ்கிருதத்தின் சொற்களஞ்சியத்தை எடுத்துக் கொண்டு தேசபாஷைகளில் எழுதப் பட்ட பக்திக் கவிதைகள் மக்களிடையே எளிதாகப் பரவின. இதன் அடிப்படையில் தான் ஸூர்தாஸர், நாபாதாஸர் முதலான புகழ்பெற்ற எட்டு கிருஷ்ணபக்த கவிகள் (14-15ம் நூற்.), மதுராவின் மண்ணிலும் யமுனையின் பெருக்கிலும் முளைத்தெழுந்த வ்ரஜபாஷா மொழியில் தங்கள் கவிதைகளைப் புனைந்தனர். வல்லபாசாரியாரின் முக்கிய சீடர்களான இவர்கள் “அஷ்ட சாப்” என்று அழைக்கப் படுகின்றனர். இவர்களுக்குப் பின்வந்த ரஸ்கான் போன்ற கிருஷ்ணபக்த கவிகளும் இந்தப் பாணியையே பின்பற்றினர். மற்ற கவிகளைப் போலவே, ரஸ்கானின் கவிதைகளிலும் பாரசீக, அரபி மொழிகளின் தாக்கம் சிறிது கூட இல்லை என்பதை அக்கவிதைகளை இன்று வாசிக்கும் போது நாம் காணமுடியும். அந்தக் காலகட்டத்திய வரலாற்றுச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, தங்களது ஆன்மீகத்தின், இந்துப் பண்பாட்டின் தனித்தன்மையைப் பறைசாற்றும் வகையிலேயே தங்கள் கவிதை மொழியை அவர்கள் கையாண்டுள்ளனர் என்பது புலனாகிறது.
ரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் கோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது. இவ்வாறிருக்க, வேண்டுமென்றே இவ்வாறு சூஃபியிசத்துடன் தொடர்புபடுத்துவது ஒரு திட்டமிட்ட திரிபுவாதம் மட்டுமே.
கிருஷ்ண லீலையின் பல்வேறு வண்ணங்களை ரஸ்கான் தனக்கேயுரிய பாணியில் பாடிச் சென்றிருக்கிறார். அத்தகைய பலவகையான பாடல்களும் சேர்ந்தமைந்த தொகுப்பு நூல் ‘ஸுஜான் ரஸ்கா²ன்’. இதில் அனேகமாக எல்லா பாடல்களிலும் ‘ரஸ்கான்’ என்ற முத்திரைச் சொல் உண்டு. ‘ரசத்தின் சுரங்கம்’ என்று தன்னையும், கிருஷ்ணனையும் வேறுபாடின்றிக் குறிக்கும் வகையில் இரண்டு பொருளிலும் இச்சொல்லை ரஸ்கான் பயன்படுத்தியிருப்பது அழகு. அற்புதமான ஓசைநயம் கொண்ட இப்பாடல்கள் ‘ஸவையா’ அல்லது ‘கவித்த’ எனப் படும் நான்கு அடிகள் அமைந்த சந்தத்திலும், பத³ அல்லது பதா³வலீ எனப்படும் நீண்ட அடிகள் கொண்ட யாப்பு வடிவிலும் உள்ளன.
சேஷன் கணேசன் மகேசன் தினேசன்
சுரேசன் எனப்பலர் நித்தமும் பாடுவர்
அனாதி அனந்தம் அகண்டம் அசேதம்
அபேதம் என்றே நல்வேதங்கள் கூறிடும்
நாரதன் முதல் சுகன் வியாசன் வாயறாது
அரற்றியும் தோற்றனர் அறிந்திலர்
அத்தகையோனை ஆயர் சிறுமியர்
அரை மட்கலம் மோரைக் காட்டி
ஆடவைக்கின்றனர்.
ரஸ்கானின் மோகமூட்டும் அழகைக்
கண்டன இக்கண்கள்
இனி அவை என்வசத்தில் இல்லை
வில்லாக இழுத்துப் பிடிக்கிறேன்
அம்பாக அவை பறந்து செல்கின்றன.
பாலைப் பறிப்பதற்காக என் சேலையை இழுக்கிறாய்
எடுத்துக்கொள் எவ்வளவு பால் பருகிவிட முடியும் உன்னால்
சுவைத்துப் பார்க்க என்று வெண்ணைய் கேட்கிறாய்
உண்டுகொள் எவ்வளவு வெண்ணெய் உண்ணமுடியும் உன்னால்
உன் மனதில் உள்ளது என்னவென்று தெரியும் ரஸ்கான்
எதற்காக வீணில் வார்த்தைகளை வளர்க்கிறாய்
ஆவின்சுவையை* சாக்குவைத்து நீ தேடியலையும் சுவை,
அட கண்ணா, அச்சுவை என்றும் உனக்குக் கிடைக்கப் போவதில்லை.
(ஆவின்சுவை – பால். அச்சுவை என்று இங்கு குறித்தது கண்ணனுக்காகத் தவித்தலையும் கோபிகையின் தாபத்தின் சுவை. அது கோபிகைக்கு மாத்திரம் கிடைக்குமேயன்றி கண்ணனுக்குக் கிடைக்காது)
ப்ரேம-வாடிகா (அன்புச் சோலை) என்பது 52 பாடல்களைக் கொண்ட சிறு நூல்.தோ³ஹா எனப் படும் இரண்டடிப் பாடல்களால் ஆன இந்த நூல் முழுவதும் கிருஷ்ண ப்ரேமையின் மகிமையை விதந்தோதுகிறார் ரஸ்கான்.
அன்பின் வாழ்விடம் ஸ்ரீராதிகா
அன்பின் வண்ணம் நந்தன் திருமகன்
அவர்களே அன்புச்சோலையின்
மாலியும் மாலினியும்*.
(* தோட்டக்கார தம்பதிகள்)
அன்பு அன்பு என்கிறார்கள் எல்லாரும்
ஆனால் யாரும் அன்பை அறியவில்லை
ஒருவராவது அன்பென்பதை அறிந்திருந்தால்
உலகம் ஏன் அழுது மடியவேண்டும்.
சென்றடைய முடியாதது நிகரற்றது அளவிறந்தது
அன்பு.
பெருங்கடல்.
ரஸ்கான் சொல்கிறான்:
அதன் கரைவரை வந்தவர்கள்
ஒருபோதும் திரும்பிச் செல்வதில்லை.
அன்பெனும் வாருணீ மதுவருந்தி
கடலரசனானான் வருணன்
அன்பினால் விஷமருந்தி
அகிலம் துதிசெய நின்றான் கிரீசன்.
உலகியல் வேதநெறி
நாணம் கடமை ஐயம் எல்லாம்
அன்பு அடித்துச் செல்லட்டும்
அன்பிற்கு முன் எதற்கு விதிகளும் தடைகளும்.
அதிசய வினோதம் செய்கிறது
அன்பு எனும் ஆடி
என் உருவை ஒளித்து
பொருத்தமற்ற வேறாகக் காட்டுகிறது.
வாழ்நாழ் முழுவதும் கண்ணனின் பேரன்பில் கரைந்து வாழ்ந்த ரஸ்கானின் சமாதி மதுராவிலிருந்து சிறு தொலைவில், மஹாவன் என்ற இடத்தில் உள்ளது. இன்றும் அங்கு ரஸ்கானின் பாடல்களை பக்தர்கள் மெய்சிலிர்ப்புடன் பாடி மகிழ்கிறார்கள்.
அந்த (இடையனின்) கோலுக்காக கம்பளிக்காக
மூன்றுலகின் அரசாட்சியை விடுவேன்
அஷ்ட சித்திகளும் நவநிதிகளும் போகட்டும்
நந்தனின் பசுக்களை மேய்த்தால் போதும்
என்று காணும் ரஸ்கானின் கண்கள்
வ்ரஜபூமியின் சோலைகளை வனங்களை தடாகங்களை
கோடிப் பொன்மாளிகைகளையும்
(யமுனையின்) இந்தப் புதர்மண்டிய மணல்திட்டுகள் முன்
அர்ப்பணிப்பேன்.
o0o
துணைபுரிந்த நூல்கள்:
1. ரஸ்கா²ன் கா அமர் காவ்ய – து³ர்கா³ஶங்கர் மிஶ்ர, நவயுக்³ ப்ரகாஶன், லக்னவூ (ஹிந்தி)
2. The Hindi Classical Tradition: A Braj Bhāṣā Reader, By Rupert Snell