எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்

perippa
எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார். பெரியப்பா என்றால் அப்பாவின் சித்தப்பா பையன். அவர் நாங்கள் வசித்த நகரத்திலிருந்து 10,15 மைல் தூரத்தில் இருந்த ஒரு சின்னக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அனேகமாக, எல்லா வாரங்களிலும் சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ  எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எத்தனை முறை வந்தாலும், எத்தனை அடிக்கடி வந்தாலும் அவரது வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உல்லாசத்தையும், விடுதலை உணர்ச்சியையும், சொல்லவொண்ணா சந்தோஷத்தையும் ஒவ்வொரு முறையும் அளித்தது. இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கி வந்தது கிடையாது. அவருடைய பொருளாதார நிலை அப்படி. ஆனால் அது ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை. அவர் எங்களுக்குச் சமமாக ஒரு சிறுவர் உலகத்தில் எப்பொழுதும் இருந்ததுதான்  எங்களுக்கு அவர் மேல் இருந்த ப்ரியத்துக்கு காரணம் என்று தோன்றுகிறது.
சிறிய, ஒல்லியான, குள்ள உருவம். முகத்திலும், கண்களிலும், வாயிலும் எப்போதும் ஒரு ஆச்சரிய பாவத்தோடு கூடிய சிரிப்பு. அந்தச் சிரிப்பு  பெரியவர் உலகத்தைச் சேர்ந்த சிரிப்பு அல்ல. குறும்பும், பெரியவர்களிடம் பிடிபட்டு விட்ட அவஸ்தையை மறைக்கிற மாதிரி அசட்டுச் சிரிப்புமாய், ஒரு மாதிரி இருக்கும். பெரியவர்கள் உலகில் அது வெறும் அசட்டுச் சிரிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும் என்ற ஐயம் நாங்கள் வளர்ந்த பிறகு எங்களுக்குத் தோன்றியது…
அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வர பல காரணங்கள் இருந்தன. என் அப்பாவின் மீது இருந்த அபாரமான சினேகிதம், எங்கள் அம்மாவின் விருந்தோம்பல், அருமையான சமையல், கல கல பேச்சு, எங்களுடன் இடை விடாத அரட்டை, எங்களைப் பார்க்கிற மகிழ்ச்சி என்று பல. ஆனால் யாருக்குமே தன்னுடைய தினசரி வாழ்க்கையின் சலிப்பிலிருந்து இளைப்பாறிக்கொள்ள ஒரு இடம் தேவைப்படும் அல்லவா? அந்த இடமாக எங்கள் வீடு இருந்ததும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது எனலாம். ஏனெனில் பெரியம்மாவுடன் வருகிற மிகச்சில தருணங்களில் பெரியப்பா எதையோ தொலைத்த மாதிரியே இருப்பார்.
எங்கள் பள்ளிக்கூட வம்பிலிருந்து, பார்த்த சினிமா, அரசியல், கடைசியாகப் படித்த கதை, சமீபத்தில் எங்கள் தெருவில் நடந்த வினோத சம்பவங்கள், எங்கள் நண்பர்கள் எல்லாமே அவருக்கு ரொம்ப சுவாரசியத்தைக் கொடுத்தன.
அடுத்த வாரம் வரும் பொழுது  முதல் வார பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியாக,
“ஏம்மா! உன் ஃப்ரண்ட் உன் நோட்டுப் புத்தகத்திலிருந்து காபி அடிச்சதை உங்க டீச்சர் கண்டுபிடிச்சிட்டாளோன்னு சந்தேகப் பட்டியே ?என்னாச்சு? கண்டுபிடிச்சாளா? அப்புறம் என்ன நடந்தது?”
“ஏண்டா மாதவா! அன்னிக்கி சைக்கிள்ல போகும்போது ஒரு கிழவி மேல மோதிட்டேன்னியே,அந்த தெருப்பக்கம் அப்புறம் போகல இல்ல? அந்த தெருக்காரன் யாரோ இங்க உளவு பாக்க வந்தான்னியே! எப்பிடி தப்பிச்சே?”
இன்ன பிற……
அம்மாவிடம்”ஏம்மா? ஜயம்! நீ பண்ற ரவா தோசை மட்டும் எப்பிடி இப்பிடி மொறு மொறுன்னு இருக்கு? பாக்கி பேர் வீட்டில பண்றது ஒரே நொளுக் நொளுக்கனு இருக்கே? அது என்ன டிரிக்கு?” என்பார்.
உடனே அம்மா வெற்றிச் சிரிப்போடு “ அண்ணா! இந்தாங்கோ! இன்னொன்னு போட்டுக்கோங்கோ” என்பாள்.
அப்பாவிடம்”ஏம்பா! நம்ம முருகன் டாக்கீஸ்ல பழய எம்.கே தியாக ராஜ பாகவதர் படம் வந்திருக்கே! போலாமா? அப்புறம் அந்த… இன்னொரு…… படம் கூட போகணுன்னயே!” குரலை தாழ்த்திக் கொண்டு அசட்டுச் சிரிப்போடு அங்குமிங்கும் பார்த்தபடியே கேட்பார்.
ஹோமியோபதி வைத்தியத்திலிருந்து பவுடர் டப்பா ஏஜென்ஸி வரை என்னென்னொவோ  செய்து பணம் சம்பாதிக்க ப்ரம்ம ப்ரயத்னம் செய்தார்,கடைசி வரை அது வெறும் முயற்சியாக மட்டுமே இருந்தது.
“என்ன பெரிப்பா! உங்க ஊர்ல உங்களக் கண்டாலே ஓடறங்களாம், பவுடர் டப்பாவை தலைல கட்டிடுவீங்களோங்கற பயத்தில  யாரும் வீட்டை விட்டே வெளில வரதில்லையாமே?”என்று அவரை கிண்டலடித்தால்,
“ஹீ ஹீ” என்று அவரும் சிரித்துக் கொண்டே “ஆனாலும் விடறது இல்லயே! கதவைத் தாப்பா போட்டுண்டு இருந்தா கூட கதவை தட்டியாவது விக்கப் பாப்பேன்” என்று அவரும் அந்த கிண்டலில் சேர்ந்து கொள்வார்.அவரை எப்பிடி வேண்டுமானாலும், கேலியோ, கிண்டலோ பண்ணலாம், தப்பாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்.
(இப்போது யோசித்துப்பார்த்தால், குழந்தைகளுக்கே உரிய குரூரத்தில் நாங்கள் சொன்னதை, அவர் எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.நாங்கள் பண்ணினது ரொம்ப தப்பு!)
“நீங்க டிராயிங்க் மாஸ்டர்ங்கறீங்களே! ஒரு படம் கூட வரைஞ்சு நாங்க பாக்கலை! எங்களோட கையெழுத்து பத்திரிகையிலே  நான் எழுதின கதைக்கு படம் வரையுங்களேன் பாப்போம்!” அண்ணா சவால் விட்டான்.
“அப்பிடியாப்பா! அது என்ன கதை ? சொல்லு பாப்போம். காரெக்டர் பத்தியெல்லாம் சொல்லு, அப்பதான கரக்டா வரய முடியும்! மர்மக் கதையா? பலே! பலே!  சொல்லு!” என்றார்.
அண்ணா கதையைச் சொல்லும் போது, ரொம்பவே சுவாரசியமாக கேள்விகளெல்லாம் கேட்டு, நடு நடுவே சந்தேகங்கள் வேறு கேட்டு, கதை கேட்பதை, கதை சொல்பவனுக்கு ஒரு சந்தோஷமான அனுபவம் ஆக்கினார்.
ஆனால் படம் மட்டும் வரையவேயில்லை. நாலைந்து வார நச்சரிப்புக்குப் பிறகு, ஒரு கப், ஒரு சாசர், படம் வரைந்து அதில் சூடாக காபி இருப்பது போல ஆவி பறக்க விட்டிருந்தார்.
“இதுவா அந்த கதைக்குப் படம்?” நான் சந்தேகமாக கேட்டேன்.
“ஆமா! இல்லையா பின்ன?அந்த கதையிலே ஹீரோ காபி குடிக்கற மாதிரி ஒரு சீன் வல்லே?அந்த காபிதான் இது!”
நாங்கள் எல்லாரும் சேர்ந்து “பெரிப்பா” என்று கத்தினோம்.
இப்படி இருக்கையில் எங்கள் அம்மாவின் பெரிய அத்தை ஊரிலிருந்து வந்திருந்தாள். அத்தை நல்ல வெள்ளை வெளேரென்று உயரமாய், கம்பீரமாய் இருப்பாள். வேக வேகமாக, பட படவென்று பேசுவாள், கீச்சுக் குரலில். கோபம் வந்து கத்தும் போது குரல் இன்னும் கீச்சாகும். ஆங்கிலத்திலும், சரித்திரத்திலும் முது கலைப் பட்டங்கள் பெற்று கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தாள். நகைச்சுவை என்பது மருந்துக்கும் கிடையாது. அது என்ன என்கிற மாதிரி முழிப்பாள். ’மாதிரி’ இல்லை, உண்மையிலேயே புரியாது. ஆனால், தானாக ஏதாவதுச் சொல்லிவிட்டு ரொம்ப நேரம் கிக்கிக்கென்று சிரித்துவிட்டு, எல்லாரையும் சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்ப்பாள், நீங்க சிரிக்கலையா என்பது போல்.
எப்போதாவது எதற்காவது கண்ணைச் சுருக்கிக் கொண்டு சிரிக்கும் போது , கொஞ்சம் அழகாகவே தெரிவாள். பொதுவாக மனிதர்களைப் பிடிக்காது(வெகு சிலரைத் தவிர).
அம்மாவுடைய அத்தை என்றாலும் நாங்களும் அவரை அத்தை என்றே அழைப்பது வழக்கம்.
துரதிருஷ்டவசமாக அத்தை வந்திருந்த போது, பெரியப்பாவும் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த இரண்டு வினோதமான கதா பாத்திரங்களும் சந்திக்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் விளையக் கூடிய பூகம்பத்தைப் பற்றி நாங்கள் யாரும் ஒரு நொடி கூட சந்தேகிக்கவேயில்லை.
உள்ளே அத்தை பெட்டியுடன் நுழையும் போது நாங்கள் எல்லாரும் கூடத்தில் உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தோம்.
“என்னடா பசங்களா? எப்பிடி இருக்கேள்? நன்னா படிக்கறேளா? அப்பா எங்கே ஆபிஸ் போயிட்டாரா? அம்மா என்ன பண்றா?” பதிலையே எதிர்பார்க்காமல் இடைவெளி இல்லாமல் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பெரியப்பாவை கண்ணைச் சுருக்கிக் கொண்டு ஒரு பார்வை பார்த்தாள். அதற்குள் அம்மா “வா அத்தை ,வா! வழி தெரிஞ்சுதா?” என்றாள்.
“வழி தெரியாமயா வந்திருக்கேன்? ” கீக்கீக்கென்று சிரித்துக் கொண்டேயிருந்தாள் அத்தை.
இரண்டு பேரும் சமையலறைக்குப் போனார்கள்.
“மாப்பிள்ளை எங்கே ஆஃபீஸா?ஆமா! அது யாரு ஹாலிலே குழந்தைகளோடே?”
“அதுவா அத்தை, அது என்னோட மச்சினர்!”
“போடி அசடு! நான் உன் மச்சினரைப் பாத்திருக்கேன்.இது யாருடி அசட்டுச் சிரிப்பு சிரிச்சிண்டு”
(*அதாவது எங்க அம்மாவுக்கே தன் மச்சினரை தெரியாது என்கிறாள்!!!!)
“இல்ல ,அத்தை! இது எங்க சின்ன மாமனாரோட பிள்ளை! அதாவது இவரோட சித்தப்பா பையன்! இவர் வந்து…..”
என்று என்னவோ சொல்வதற்குள் குறுக்கிட்டு
“சித்தப்பா பிள்ளை, பெரியப்பா பொண்ணுன்னு என்னவோ நூறு உறவு சொல்லிண்டு! நீ ஒரு அசடு!! வரவாளுக்கெல்லாம் காபி, டிபன்னு உபசாரம் பண்ணிண்டு”
எங்களுக்கு ஹாலில் காதில் நன்றாக விழுந்தது, வீடு ஒன்றும் பெரிய அரண்மனை இல்லை, ஒரு அறையில் பேசினால் மற்றொரு அறையில் கேட்காமல் இருக்க.
ஆனால் பெரியப்பா இதற்கெல்லாம் அசருகிற ஆசாமி அல்ல,அவருடைய வழக்கமான ஆச்சரிய முக பாவத்தோடு கூடிய சிரிப்புக் குரலில் கேட்டார் “யாருப்பா இந்த அம்மாள்? ரொம்ப சூடா பட படன்னு பேசறாளே!!”
“அம்மாவோட பெரிய அத்தை, பெரியப்பா!”
“உங்க திருவாரூர் தாத்தா வோட( எங்கள் அம்மாவின் அப்பாவைக் குறிப்பிடுகிறார்) தங்கையா இது? அவர் பாவம் ரொம்ப சாது, நல்லவராச்சே!” குரலில் சிரிப்பு குறையவேயில்லை.
“உங்க அப்பா கல்யாணத்தில இந்த அம்மாளைப் பார்த்த ஞாபகமே இல்லையே! நாங்க எல்லாம் அந்த பாண்ட் வாத்யம், வாண வேடிக்கையோட நடந்த மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தைப் பார்த்தே பிரமிச்சுப் போயிருந்தோம். கல்யாணப் பந்தல் போட்டிருந்தான் பாரு! அவன் ஒரு மஹா கலைஞன்! பந்தலின் மேற்கூரையில் உள்புறம் முழுக்க நீலத் துணி, அதில முத்துக்களைப் பதிச்சு, ஒரு அழகான வானத்தை உருவாக்கியிருந்தான். ரொம்ப ஜோரா இருந்தது”
என் அம்மா  பெருமையிலும், மகிழ்ச்சியிலும் திளைத்து,
“ அதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா அண்ணா?” என்றாள்.
அத்தை குறுக்கிட்டு “ அதெல்லாம் சரி! நீங்க எங்க பக்கத்திலேதான் இருக்கேளா? அடிக்கடி வருவேளோ?”
“ம்….வாரத்துக்கு ஒரு தரம் அவசியம் வருவேன்” அத்தையை எரிச்சலூட்டவே, பெரியப்பா சொன்னது மாதிரி இருந்தது, எங்களைப் பார்த்து ஒரு கண் ஜாடை வேறு!
அன்று சாயங்காலம் பெரியப்பா ஊருக்குப் போய் விட்டார், அத்தைக்குப் பயந்து அல்ல, அவருக்கு மறு நாள் வேலை இருந்ததால் கிளம்பிவிட்டார்.
அந்த முறை அத்தை வந்திருந்த போது, அவளுடைய ரசனைக்கேற்ப எங்கள் ஊரின் ப்ரசித்தி பெற்ற கோயில்கள்,பக்கத்து ஊரில் உள்ள கோயில்கள் எல்லாவற்றையும் பார்த்து முடித்திருந்தாள். அந்தக் காலங்களில் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளுக்குச் செய்கிற ஒரு முக்கியமான விருந்தோம்பல் உபசரிப்பு ஒன்று பாக்கி இருந்தது. அதுதான் சினிமாவிற்குக் கூட்டிப் போவது. ஆனால் அத்தைக்கு சினிமா என்றால் கட்டோடு பிடிக்காது.
“சே! சே! என்ன கண்றாவி!அதையெல்லாம் யாரு பாப்பா?கண்டபடி டிரஸ் போட்டுடுண்டு, கன்னா பின்னான்னு  பாட்டும், டான்ஸும் … தூ. தூ.” என்பாள் முகத்தை சுளித்தபடி.
ஆனால் அந்த முறை “ஆதி சங்கராசார்யா” படம் வந்திருந்தது. ஜீ.வீ.ஐயர் என்பவர் சமஸ்க்ருதத்தில் எடுத்தது.(அனேகமாக எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்திருந்தது என்றே ஞாபகம். இல்லாவிட்டால் சமஸ்க்ருதம் எங்களுக்கு எப்பிடி புரிந்திருக்கும்? சரியாகத் தெரியவில்லை). எங்களூரிலும் வந்து, ஓரளவு நன்றாகவே ஓடிக்கொண்டிருந்தது. அம்மா சொன்னாள் “அத்தை! உனக்கு இந்தப் படம் பிடிக்கும்! ஆதி சங்கரர் பத்தி! எல்லா புண்ய ஷேத்ரமும் காட்றானாம். ரொம்ப நன்னா இருக்காம்! போய்த்தான் பாரேன்!”
“அப்பிடியா?ஆதி ஸங்கர பகவத் பாதாள் பத்தின படம்னா பாக்க வேண்டியதுதான்! கன்னா, பின்னா சீன் ஒன்னும் கிடையாதோன்னோ?”
“இல்ல அத்தை இல்ல! ரொம்ப நன்னா இருக்காம்!”
“நீயும் வாயேண்டி! நாம எல்லாம் போகலாம்!”
அம்மாவுக்கு தன் சம்சார சாகரத்திலிருந்து படம் போவது என்பது அவ்வளவு சாமானியமான விஷயம் இல்லை.
“மாப்பிள்ளை இன்னிக்கு மத்தியானம்தான் ஊரிலிருந்து வரார். வரும் போதே பசியோட வருவார். நீ போயிட்டு வா, அப்புறம் நான் போய்க்கறேன்”
யார் அத்தையோடு படம் போவது என்ற முக்கியமான கேள்வியின் போது  என் அண்ணா, தம்பி இருவரும் மாயமாக மறைந்து விட்டார்கள், ஜகஜ்ஜாலகில்லாடிகள்! இந்த மாதிரி வம்புகளில் ஒரு முறை கூட மாட்டாத அதி சாமர்த்யசாலிகள்! தங்கை சின்னக் குழந்தை.  கடைசியாக அம்மா என்னைப் பார்த்தாள். இது என் தலையில்தான் விடியும் என்கிற ஞானம் இருந்ததால்,
“இரும்மா! எங்கே அந்த படம் ஓடறதுன்னு, பேப்பரில் பாக்கறேன்!” என்றேன் என் வயதுக்கு மீறிய பக்குவத்துடனும்,முதிர்ச்சியுடனும்.
“மாட்னி ஷோவே போங்கோ! சாயங்கால ஷோன்னா வரும் போது இருட்டிடும் “
“ஐயொ அம்மா! அது சிடியில எங்கயும் ஓடல, எங்கயோ அவுட்டர்ல ஓடறது!அந்த இடத்துக்கு நான் போனதேயில்லை! என்ன பண்றதும்மா?” என்றேன், பேப்பரைப் பார்த்துக்கொண்டே.
அம்மா ”இரு! நான் ஏதாவது வழி கண்டு பிடிக்கறேன்!”என்றாள்.
“என்னம்மா! ஜெயம்! என்ன சமாசாரம்?” என்று கேட்டுக்கொண்டே பெரியப்பா உள்ளே நுழைந்தார்.
“நல்ல வேளையா போச்சு அண்ணா நீங்க வந்தது! நீங்க ஆதி சங்கரர் படம் போறேளா ரமாவோட? அவளுக்கு அந்த இடம் தெரியாதாம்”
“பேஷா போலாமே!”
“அத்தையும் வரா” என்றேன் மெதுவாக.
“ஐயொய்யோ! அந்த அம்மாளுமா?” என்றார் பீதியுடன்.
அதிர்ஷ்டவசமாக அத்தை துணி உலர்த்த மாடிக்குப் போயிருந்தாள்,அதனால் இந்த சம்பாஷணையை தவற விட்டிருந்தாள்.
அத்தை துணி உலர்த்தி விட்டு கீழே வந்ததும் பெரியப்பாவைப் பார்த்தாள்,”என்ன! திரும்பவும் வந்தாச்சா?”என்றாள், புருவத்தை சுளுக்கிக் கொண்டே.
“என்ன மாமி! சௌக்யமா? “என்றார் பெரியப்பா,  அதைக் கவனிக்காத மாதிரி.
“போனவாரத்துக்கு இந்த வாரம் சௌக்யத்துக்கு என்னக் குறைச்சல் வந்துடப் போறது?”என்று நொடித்தாள் அத்தை.
மத்தியானம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நானும், அத்தையும் முன்னால் போனோம். பெரியப்பா அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்ததால் அதை முடித்துவிட்டு, எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். அத்தை முதலில் கவனிக்கவில்லை. கொஞ்ச தூரம் போன பிறகு யதேச்சையாக திரும்பி பார்த்தாள்.
“ஐயய்யோ! இந்த மனுஷன் எதுக்குடி நம்ம பின்னாடியே வந்துண்டிருக்கு? ஊருக்குப் போறதா என்ன?”என்றாள்
“இல்ல அத்தை, அந்த தியேட்டர் இருக்கிற இடம் எனக்குத் தெரியாது! நம்மளுக்கு உதவியா இவர் வரட்டுமேன்னு அம்மாதான் சொன்னா”
“அட ராமச்சந்திரா! இதுவுமா நம்மளோட சினிமாவுக்கு வரது?”கீச்சென்று கத்தினாள்.
“உங்க அம்மாவுக்கு மூளையே கிடையாது! அசடு! அசடு!” கீச்சு ஜாஸ்தியாகியது.
“அத்தை! அத்தை! ப்ளீஸ்! கத்தாதீங்கோ!அவர் பாட்டும் வரட்டுமே! நம்மளுக்கு என்ன தொந்தரவு?ரோட்ல எல்லாரும் பாக்கறா,பேசாம வாங்களேன்”
அத்தை உர்ரென்று வந்தாள். பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றோம்.
அத்தை கேட்டாள் ”ஏண்டி உங்க அப்பா  ஜம்னு எவ்வளவு ஸ்மார்ட்ஆக  இருக்கார். கெட்டிக்காரத்தனமா பேசறார், இது நிஜமாவே அவரோட கஸினா?”
பெரியப்பா ஜாடை காட்டி கூப்பிட்டு “ஏம்மா! இந்த அம்மாள் காலேஜ் புரொஃபசர்ன்னயே! இவ்வளவு முன்கோபியா இருக்காளே! ஸ்டூண்ட்ஸ்லாம் பாவம்தான் இல்ல?இவா குடும்பம்…” என்று இழுத்தார்.
“இல்லை!பெரியப்பா! ரொம்ப வருஷமா தனியாத்தான் இருக்கா!”
“புரியறது,புரியறது. புத்திசாலி! தப்பிச்சுப் போயிட்டான்னு நினைக்கிறேன்!” மெதுவான குரலில் சிரிப்போடு சொன்னார், அப்புறம் ஏதோ யோசித்தவர் போல கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். பின்னர்,
“சரி! எந்த பஸ்ல போகலாம்? டைரக்ட் பஸ் ரொம்ப கம்மி! ரண்டு பஸ் மாறி போலாமா?” என்றார்.
“அங்கே என்னடி பேச்சு?”
“இல்ல அத்தை! எந்த பஸ்ல போலாம்னு  கேட்கறார்.”
“அட கஷ்ட காலமே! இவருக்கு பாதை தெரியும்னயே! இப்ப எந்த பஸ்ங்கறார், இவரை நம்பியா நாம் வந்தோம்?   இவரை நம்பி உங்க அம்மா அனுப்பிச்சாளே ! அவ ஒரு அசடு அசடு!” குரலில் உச்ச ஸ்தாயி கீச்சு திரும்பியும் வந்து விட்டது.
“பாரு முழிக்கற முழியே சரியில்லை! பித்துக்குளி களை!”
“ஐய்யோ அத்தை! சும்மா இருங்களேன்” என்பதற்குள் பஸ் வந்தது, ஏற ஓடினோம்.
முக்கியச் சாலையில் பஸ் எங்களை இறக்கி விட்டுச் சென்றது.
“ பெரியப்பா எப்பிடி போணும்?”
“இதோ இந்த இடது பக்கம் ஒரு ரோடு போறதில்லையா , அதுல போணும்!”
அது சந்து என்பதற்கு சற்று அகலமாகவும், தெரு என்பதற்கு சற்று குறுகலாகவும் இரண்டும் கெட்டானாக இருந்தது.
அந்த சந்தின் இரண்டு பக்கமும், சில ஓட்டு வீடுகளும், தகர வீடுகளும், நிறைய குடிசை வீடுகளும் இருந்தன.
குறுக்கும், நெடுக்கும் நாய்களும், பன்றிகளும், கோழிகளும், சைக்கிள் டயரை ஓட்டிக் கொண்டு விளையாடும் சிறுவர்களும், வீட்டு வாசலில் பாத்திரம் தேய்ப்பவர்களும், குளிப்பவர்களும், துணி துவைப்பவர்களும் என ஏக களேபரமாக இருந்தது.
முன்னால் பெரியப்பா, நடுவில் நான், என்னை ஒட்டி அத்தை என ஒரு வினோத ஊர்வலம் போல நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். இவர்களிருவரின் வாக்கு வாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.. தெருவே எங்களை வேடிக்கை பார்ப்பது போல எனக்குத் தோன்றியது.
பதினைந்து நிமிட நடைக்குப் பின்னும் பெரியப்பா நடந்து கொண்டே இருந்தார்.
“ இதுக்கு நிஜமாவே இடம் தெரியுமா? இல்ல குருட்டாம் போக்கில போறதா? கொஞ்சம் கேளேண்டி?”
“இதோ இதோ வந்தாச்சு! அடுத்த ரைட்ல திரும்பி, கொஞ்சம் நடந்தா தியேட்டர் தான்!!”
ஒரு ரூபாய் பத்து காசு டிக்கட் எடுத்து பால்கனிக்குப் போனோம்.அங்கு ஆண்,பெண் எல்லாரும் சேர்ந்து உட்காரலாம்.( 40 காசு, 70 காசு டிக்கட் எல்லாம் ஆண்கள் தனி, பெண்கள் தனியாக உட்கார வேண்டும், கம்பார்ட்மெண்ட் போல் பிரித்து வைதிருப்பார்கள்).
நானும், அத்தையும் உட்கார்ந்த பிறகு எங்கள் பக்கத்தில் இடம் இருந்தது. அத்தை பார்த்த பார்வையில் பெரியப்பா பின்னாடி கொஞ்சம் தூரம் தள்ளி உட்கார்ந்தார்.
படம் ஆரம்பித்தது, அத்தை உணர்ச்சி வசப்பட்டு “ஆஹா!’ என்றும், உச்சு கொட்டியும்  படத்தோடு லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எங்களுக்கு  இரண்டு, மூன்று வரிசை முன்னால், நாலைந்து கல்லூரி மாணவர்கள், பாகவதர் கிராப்பும், பெல் பாட்டம் பாண்டுமாக. ஒவ்வொருக் காட்சிக்கும் கிண்டல், கேலி. “வந்துட்டாருய்யா! மொட்டை! இனிமே பாட்டு பாடிக்கிட்டே ஊர் ஊரா போவாரு பாரேன்! ஏஏய் மொட்டை!”என்று கத்தல்.
அத்தை “யாரது! இப்பிடிச் சத்தம் போடறது?உங்களையெல்லாம் இங்கே யாரு வரச் சொன்னா? உங்களுக்கு வேணுங்கற படத்தை போய்ப் பாரேன் யாரு வேண்டான்னா? இங்கே உட்கார்ந்து ஏன் எல்லாருக்கும் தொந்தரவு குடுக்கறேள்? உங்க மூளைக்கெல்லாம் இது புரியாது! ம், ம்.. கிளம்பு கிளம்பு”  என்று எழுந்து நின்று கொண்டு கத்தினாள்.
“ஆமா! அம்மா சொல்றதும் சரிதானே! சாமியாரு, ஏதோ நல்ல புத்திமதி சொல்றாரு.கேக்கலாமில்ல!” என்று நாலைந்து ஆதரவுக் குரல்கள்.
நான் தலையில் கை வைத்துக் கொண்டு குனிந்து உட்கார்ந்து கொண்டேன், யாராவது அடிக்க வந்து விடுவார்களோவென்று பயமாக இருந்தது. திரையிலிருந்து ஆதி சங்கரர் எங்களைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அமர்க்களத்தில் ஒன்றும் காதில் விழவில்லை. சற்றுப் பொறுத்து திரும்பிப் பார்த்தால் பெரியப்பா சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
அந்த களேபரம் ஓய்ந்ததும், பக்கத்தில் இருந்தவளின் கைக் குழந்தை வீலென்று அழ ஆரம்பித்தது.
“ஏம்மா இவ்வளவு சின்னக் குழந்தையை எதுக்கு சினிமாவுக்கு கூட்டிண்டு வந்தே? வீட்ல விட வேண்டியதானே! உஷ்! என்ன கஷ்டம்!”
“வூட்லே யாரும் இல்லயே வுடறதுக்கு?”
“பின்னே நீ ஏன் வந்தே? மத்தியான வேளை வெய்யில்ல வீட்ல அக்கடான்னு கிடக்காம உனக்கு என்ன சினிமாவும், டிராமாவும் வேண்டிக் கிடக்கு? உனக்கோ இது புரியவும் போறதில்ல!”
சினிமா தியேட்டர் இரண்டாக பிளந்து நான் உள்ளே போய் விட மாட்டேனா என்றிருந்தது. அன்று எப்படி எங்களை யாரும் அடிக்கவோ, உதைக்கவோ இல்லை என்று நான் ரொம்ப நாள்  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.
திரும்பி வந்த கதையை எழுத எனக்குத் தெம்பு இல்லை. அத்தை அம்மாவிடம் ஆதி சங்கரர் படம் பார்த்த கதையை பரவசமாக சொல்லிக் கொண்டிருந்தாள். மறு நாள் ஊருக்குக் கிளம்பி போனாள்.
இதற்கப்புறமும் பெரியப்பாவுடைய வாராந்தர விஜயங்கள் தொடர்ந்தன, அதன் வழக்கமான உல்லாசமான , கேளிக்கைத் தருணங்களுடன். எனக்கு கல்யாணம் ஆகி நான் போகும் வரை நான் பெரியப்பாவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.
கல்யாணம் ஆகி ஒரு நாலு வருடங்கள் கழித்து நானும், என் கணவரும்  தமிழகக் கோவில்களுக்கு போவதற்காக எங்களூர் பக்கம் வந்திருந்தோம். அந்தப் பயணத்தில் எங்கள் பெரியப்பா இருந்த ஊரைத் தாண்டி  நாங்கள் போகிற பஸ் போகும் என்று தெரிந்து இவரிடம் சொன்னேன் “இந்த பஸ் எங்க பெரியப்பா ஊர் வழியா போகும், இதொ இப்ப அந்த ஊர் வரும் பாருங்களேன்!” என்றேன்.
கையிலிருந்த பேப்பரிலிருந்து  கண்ணை எடுக்காமல்”ஓஹோ!” என்றார் .
பேருந்து போகிற சாலை அந்த ஊர் அக்ரஹார வீடுகளின் கொல்லைப் புறத்தை அணைத்துக் கொண்டு போகும் என்று தெரிந்து ஒரு எதிர்பார்ப்போடு சன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். ‘யாரது! பெரியப்பா வீட்டுக் கொல்லை வாசலில், டப்பா கட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு? பெரியப்பாவேதான்!’
பஸ் வரும் சத்தத்தைக் கேட்டு தலை நிமிர்ந்தவர் பஸ் அவரை கடந்த வினாடியில் என்னைப் பார்த்தார். ஆச்சரியத்தில் விரிந்த விழிகளோடு, முகமெல்லாம் சிரிப்பாக என்னைப் பார்த்து ஏதோ சொன்னார். அந்தச் சித்திரம் எப்போதைக்குமாய் என் நெஞ்சில் பதிந்தது.
அதற்கப்புறம் பெரியப்பாவை நான் பார்க்கவேயில்லை.

3 Replies to “எங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.