எங்கே பார்த்தாலும் கம்ப்யூட்டரின் உபயோகம் இருக்கிறது. டிவிக்குள் இருக்கிறது. கை கடிகாரத்தில் இருக்கிறது. காரில் இருக்கிறது. இப்பொழுது அந்த கணினிகள் மெல்ல மெல்ல புத்திசாலிகளாகவும் நுண்ணறிவு கொண்டதாகவும் மாறும் காலம். எப்பொழுது ப்ரேக் பிடிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவெடுக்காமல் காரே தீர்மானிக்கும் அறிவு படைத்ததாக இருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்று உங்கள் டயட்டை ஃப்ரிட்ஜ் தீர்மானிக்கும். அந்தப் பாதையில் ஒரு படியை மைக்ரோசாஃப்ட் எடுத்து வைத்தது. டீனேஜ் பெண்ணை இண்டெர்நெட்டுக்கு அனுப்பியது. அந்த கணிப்பெண் என்னவானாள் என்னும் கதையை சென்ற இதழில் பார்த்தோம்.
கற்பிக்கப்பட்ட மதிநுட்பம் என்னும் தொழில்நுட்பத்திற்குள் செல்வதற்கு முன் ஜான் சேர்ல் ( John Searle) எழுதிய ‘The Construction of Social Reality’ (Searle 1995) நூலை வாசித்து சுருக்கி விடலாம்.
நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை. எம்.எஸ்.தோனி டி20 அணித்தலைவராக நீடிக்க வேண்டும் என்று என்னுடைய சுய விருப்பம் சார்ந்து தேர்ந்தெடுப்பது அகவழி அணுகுமுறை.
இன்னொரு விதமாக இதைப் பிரிக்கலாம். ஒரு பக்கம் நிதர்சனமான உண்மைகள். இதற்கு உதாரணங்கள் – மலை, மரம், ஓடை, ஆறு, குளம். இன்னொரு பக்கம் சமூக நிர்ப்பந்தங்கள் (‘social reality). இதை திருமணம், நிலம், வீடு, வேலை, போர், புரட்சி, அரட்டை, தண்ணி பார்ட்டி, சங்கம், சட்டமன்றம், உணவகம், விடுமுறை, வக்கீல், பேராசிரியர், மருத்துவர், வரி என்று பல கோணங்களில் சேர்ல் பார்க்கிறார். இவற்றோடு திட்டமிட்ட சமூக அடுக்குகளான பல்கலைக்கழகம், அரசாங்கம், நிறுவனம் போன்றவற்றை இணைக்கும் போது கணினிக்கு சுலபமாக புரியவைக்க முடியாத, சமூகத்தில் பூடகமாக உறைந்திருக்கும் உண்மைகள் உலவவிடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு பிரயோகத்தைப் பார்க்கலாம்: “நீங்க வந்து கல்யாணத்தை நடத்தித் தரணும்.”
இந்த சொற்றொடரை கணினியிடம் கொடுத்து புரிந்து கொள்ளச் சொன்னால், ‘சொல்லப்பட்டவரின் பொறுப்பில் இந்தத் திருமணத்திற்கான செலவுகளும் பணிகளும் திட்டமிடலும் தரப்பட்டிருக்கிறது’ என்று புரிந்துகொள்ளும். இதையே, ஐம்பது வயதில் இருக்கும் தமிழரிடம் புரிந்துகொள்ளச்சொன்னால், ‘கல்யாணத்திற்கு வருமாறு முகஸ்துதி செய்து அழைக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பார்.
இந்த மாதிரி சமூக உண்மைகளும், அகவழி அணுகுமுறைகளும், தனக்கு மட்டுமே பொருத்தமான மதிப்பீடுகளும் மிக மிக முக்கியமானவை. இது ஆளாளுக்கு மாறுபடும். இடத்திற்கு தக்கவாறு மாறுபடும். ஒரே நபரே மாமியார் வீட்டில் ஒரு அணுகுமுறையும் அலுவலில் வேறொரு அணுகுமுறையும் நண்பர்களோடு கொண்டாட்டத்தில் இன்னொரு அணுகுமுறையும் வைத்திருப்பார். இந்த நபருக்கு எப்போதும் ஒரேயொரு வழிதான் என்று கணினியால் தீர்மானிக்க முடியாது. சமயத்திற்கு தக்கவாறு சமயோசிதமாக பேச வேண்டும்.
இது செயற்கை நுண்ணறிவின் மிகப் பெரிய சோதனை. எப்போதும் ஒரே மாதிரி நட என்று கட்டளையிட்டால், கணினிக்கு எந்த சிக்கலும் இருக்காது.
இப்போது சேர்ல் சொல்லும் மற்ற இரு பிரிவுகளையும் பார்த்துவிடலாம். தற்சார்பற்ற உண்மையையும் தனக்கு மட்டுமேயான உண்மையையும் இரண்டு புலன்களில் உணரலாம்: அவையறிந்த கற்பித ஆராய்ச்சி (epistemic) மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி (ontological ).
எனவே, நான்கு வகைகளாக நம்முடைய நம்பிக்கைகளையும் ஆசைகளையும் உத்தேசங்களையும் பிரிக்கலாம்:
1. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை
2. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை
3. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை
4. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை
நான்கு வகைகளுக்கும் உதாரணங்களைப் பார்ப்போம்:
1. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை : எண்பதுகளில் விளங்கிய தமிழ் இசையமைப்பாளர்களை ஒப்புநோக்கினால், சந்திரபோஸை விட இளையராஜா முக்கியமானவர்.
2. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை : இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றில் கர்னாடக ராகங்களைக் காண முடியும்.
3. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை : எண்பதுகளில் விளங்கிய தமிழ் இசையமைப்பாளர்களை ஒப்புநோக்கினால், சந்திரபோஸை விட இளையராஜா நிறைய பாடல்களுக்கு இசையைமத்திருக்கிறார்.
4. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை : இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது என்னால் நன்றாக வேலையை கவனித்து, ஆழமாக அந்தப் பிரச்சினையில் மூழ்கி, சிக்கலை விடுவிக்க முடிகிறது.
மேலே சொன்ன உதாரணங்கள் எளிமையானவை. ஆனால், இதைக் கொண்டு மற்ற இடங்களில் கணினி எவ்வாறு அர்த்தம் செய்து கொள்ளும் என்பதில் சிக்கல் நிறையவே இருக்கிறது.
ஒன்றை வைத்து மற்றொன்றை புரிந்து கொள்ள கணினிக்குக் கற்றுக் கொடுக்கப் பார்க்கிறோம். நிறைய பேர் இளையராஜாவைக் குறித்துப் பேசுகிறார்கள். எனவே, அவர் முக்கியமானவர் என்னும் விதியை அதற்கு கற்றுக் கொடுக்கலாம். அல்லது எவ்வளவு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியிருக்கிறாரோ, அந்த அளவிற்கு முக்கியமானவர் என்று சொல்லி வைக்கலாம். அதனுடன் எத்தனை வெள்ளிவிழாப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எத்தனை தடவை வானொலியில் அவரின் பெயர் உச்சரிக்கப்பட்டது என்று நிறைய விதிகளை உருவாக்கிக் கொண்டே போகலாம்.
இந்த விதிகளைக் கொடுத்துவிட்டு, எனக்கேற்ற முடிவை (இளையராஜாவே சிறந்த இசைஞானி) என்னும் கற்பிதத்தை எந்த எந்தப் பாதைகளில் கணிதை கொடுக்கிறது என்று பார்க்கவேண்டும். இது சோதனை முடிவு. அதாவது, நமக்கு முடிவு ஏற்கனவே தெரியும். விடை தெரிந்த கேள்விக்கு, கணிதையும் அதே சரியான விடையைக் கொடுக்கிறதா என்று பயிற்சி கொடுக்கும் படலம்.
இதன் அடுத்த கட்டம் – பரிசோதித்துப் பார்க்கும் படலம்.
உதாரணத்திற்கு தமிழ் சினிமாவில் எண்பதுகளில் எஸ்.பி. முத்துராமன் முக்கியமான இயக்குநரா? அல்லது மகேந்திரன் சிறந்த இயக்குனரா? என்னும் கேள்விக்கான விடையை அதே கணிதையிடம் கேட்பேன். அதற்கு என்ன விடை சொல்கிறது என்று பரிசோதனை நடத்துவோம்.
நாம் என்னதான் எல்லா விஷயத்தையும் பாகுபடுத்தினாலும், நம் சாய்வுகளையும் உள்நோக்கங்களையும் கருத்துகளையும் திணித்தாலும் இவற்றுக்கும் அப்பால் நிஜத்தில் அந்த முடிவுகளுக்கு சுதந்திரமான உருவகிப்புகள் இருக்கின்றன. மேலே சொன்ன நான்கு பாதைகளுக்கும் இரண்டு உருவகிப்புகள் இருக்கின்றன – ஒன்று: இயல்பானது; மற்றொன்று: நோக்குபவர் சார்பானது.
இதற்கு உதாரணமாக திருகாணியை முடுக்கி விடுவதைச் சொல்கிறார் ஜான் சேர்ல். ஸ்க்ரூடிரைவரை பார்த்தவுடன் எல்லோருக்கும் தெரியும். அது ஆணிகளை முறுக்க உதவும் என்பது பார்ப்பவரை சார்ந்து புரிந்து கொள்வது. ஒன்றும் தெரியாத எந்திரன் ரோபாட்டிடம் அதே திருகாணியைக் கொடுத்தால், இரும்புக் கம்பி இருக்கிறது என்று சொல்லும்; ஒரு பக்கம் தட்டையாகவும் மற்றொரு பக்கம் மரத்தினால் அந்த இரும்பு மூடப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளும். கணினியால் இயல்பானவற்றை பட்டியலிட முடியும். நம்மால், அதன் பயன்களை நம் பார்வை சார்ந்து பட்டியலிட முடியும்.
அதாவது, இது ஆடிக் கொண்டிருக்கும் கைப்பிடி பாத்திரத்தை ஆடாமல் ஸ்திரமாக வைக்க உதவும் கருவி என்பது ‘மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை’. இது கணிதைக்கு சட்டென்று விளங்காது. இதைப் புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். திருகாணி கொண்டு ஆணிகளை முறுக்கலாம் என்று ஒரு விதி சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, அந்தத் திருகாணியில் நூறு வகைகள், அளவுகள், வடிவங்கள் இருக்கின்றன என்று ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும். அதன் பின் பாத்திரம் ஏன் ஆடும் என்பதையெல்லாம் பட்டியல் போட வேண்டும். இதற்குள் நீங்களே சென்று பாத்திரத்தை முறுக்கிவிட எண்ணுவீர்கள்.
மனிதருக்கு மட்டுமே உணரக்கூடிய விஷயங்களை ‘மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை’ எனலாம். கொட்டாங்குச்சியில் வயலின் செய்யலாம் என்பது இந்த வகை உண்மை. ஸ்க்ரூடிரைவரைக் கொண்டு கொலை செய்யலாம் என்பது ராஜேஷ்குமார் உண்மை. ’நட் கழண்டுருச்சா’ என்று எவராவது உங்களைப்பார்த்துக் கேட்டால் ஸ்க்ரூடிரைவரை உங்கள் கையில் கொடுக்கக் கூடாது என்பது இன்னும் ‘செயற்கை நுண்ணறிவு’ கொண்டு இயங்கும் கணிதைகள் கண்டுகொள்ளாத உண்மை.
ஆனால், நம்மைப் போல் சிந்திக்கவும் பேசவும் பார்க்கவும் ஏன் கணினிக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
துணைபுரிந்தவை:
1. Jacob, Pierre, ‘Intentionality’, The Stanford Encyclopedia of Philosophy (Fall 2010 Edition), Edward N. Zalta (ed.)
2. Pigliucci, M. ‘Lawrence Krauss: another physicist with an anti-philosophy complex’ Rationally Speaking Blog.
3. Searle, John R. The Construction of Social Reality. London: Penguin Books, 1995.