செத்த மீன்
— கு.அழகர்சாமி
ஒரு மீன் வரைந்து ’கலர் அடி’ என்பார்
டீச்சர்.
குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.
‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.
குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.
கத்துவார் டீச்சர் இம்முறை
’கட்டத்துக்குள் அடி’ என்று.
பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.
சரி
–இர.மணிமேகலை
அகராதியைப் புரட்டிப்பார்க்கிறேன்
ஆம் இல்லை இரு சொற்கள்
பக்கங்களை நிறைத்திருந்தன
மேலும் புரட்டியதில்
‘சரி’ தென்பட்டது
யாரிடம் பேசுவது
என்ன பேசுவது
எப்படிப்பேசுவது
பாடங்கள் பதிவாகியிருந்தன ஏடுகளில்
மனைவிமை ஏற்றபின் கண்ணாடி பிம்பத்தில்
முகம் காணாமல் போயிருந்தது
வட்டக்குங்குமம் ஒளிரத்தொடங்கியிருந்தது.
காலம்
மேசையில்
உறைந்து கிடக்கின்றன வார்த்தைகள்
சுற்றிலும் தவளைகள்
உனக்கான வார்த்தைகள்
என்னுள் தேர்வாகின்றன
மனம் துளைபட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன்
கடந்து செல்லும் சாலையெங்கும்
சிரிப்பு சலங்கைகட்டுகிறது
கட்டிடங்கள் நிறைந்த சாலை
எந்த நேரத்திலும் முடிந்துவிடும்
அச்சத்துடனேயே கடக்கிறது
காலம்
நீயோ
நாம் காலம் கடந்தவர்களென்கிறாய்
மூன்று கவிதைகளும் அருமை வாழ்த்துக்கள் அழகர்சாமி மற்றும் மணிமேகலை