பாலை நிலத்து நினைவலைகள்

Dog_Bag_Hand_Carry_Passport_Lost

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிற இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட்டையோ அல்லது வேறு ஆவணங்களையோ தொலைத்துவிட்டால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. பெயரளவுக்கு இயங்கும் இந்திய தூதரகங்கள் இந்தியக் குடிமகன்களை நடத்தும் விதத்தைப் அறிந்தால் சாதாரண இந்தியன் கண்ணீர் விட்டு அழுவான். முன்பின் அறிந்திராத இடத்தில் ஆவணங்களைத் தொலைத்துவிட்டு தூதரக உதவி கேட்டுவரும் முதியவர்கள், சிறு பிள்ளைகளுடன் பயணம் வந்தவர்களை தூதரக ஊழியர்கள் விரட்டோ விரட்டு என்று விரட்டுவார்கள். எரிந்து விழுவார்கள். சிறிதும் மனசாட்சியின்றி இங்குமங்கும் அலைய விடுவார்கள் எனபதே நான் பெரும்பாலும் கேள்விப்பட்ட, நேரில் கண்ட நிகழ்வுகள். விதிவிலக்காக உதவி செய்யும் தூதரக அதிகாரிகளும் இருந்தார்கள் என்பதனை மறுப்பதற்கில்லை. அவர்களுக்கு எனது மனமார்ந்த வந்தனங்களும், நன்றிகளும் உரித்தாகுக.
அண்மையில் “உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் இனி அந்தந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களை அனுகினால் அவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் விரைந்து வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்த செய்தியொன்றினைப் படித்தேன். அந்தச் செய்தி உண்மையானதாக இருப்பின் சந்தேகமில்லாமல் சுஷ்மாஜி ஒரு தேவதையேதான். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இதனைவிடவும் ஒரு இனிய சேதி இருக்க முடியாது என்பேன்.
இந்தியர் ஒருவர் ஏதெங்கிலும் ஒரு வளைகுடா நாட்டில் பணிபுரிய வேண்டுமானால், அந்த வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஸ்பான்சர் செய்ய வேண்டும். அரபியில் கஃபில் என்றழைப்பார்கள். ஏகப்பட்ட சிரமங்களுக்குப் பின் விசா பெற்று, துபாயிலோ அல்லது சவூதி அரேபியாவிலோ வந்திறங்குக் இந்தியத் தொழிலாளி உடனடியாக தங்களது பாஸ்போர்ட்டை அந்த கஃபிலின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அவர்கள் தங்குமிடங்களையும், வேலை செய்யும் இடங்களையும் கஃபிலே தீர்மானம் செய்வார். அதாகப்பட்டது உணவு, உடை, இருப்பிடம் என அத்தனைக்கும் கஃபிலைச் சார்ந்துதான் அந்த்த் தொழிலாளி இருக்க வேண்டும். ஒப்பந்தப்படி இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பணி செய்து முடிந்த பிறகு, இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய வேளையில்தான் அவரது பாஸ்போர்ட்டை அந்தத் தொழிலாளி மீண்டும் கண்ணில் பார்க்க முடியும். அதுவரைக்கும் அவர் ஏறக்குறைய அந்த வளைகுடா ஆசாமியின் அடிமைதான்.
பாதுகாப்பு காரணங்கள் கருதி வளைகுடா நாடுகளில் இந்த வழக்கம் இருக்கிறது என்றாலும், பெரும்பாலான சமயங்களில் அது தவறான வழிகளிலேயே கஃபில்களினால் செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை அந்த நாட்டு அரசாங்கங்கள் அறிந்திருந்தாலும் அதிகம் கண்டு கொள்வதில்லை. தங்களின் உடலுழைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பணிபுரியச் செல்பவர்களில் பெரும்பாலோர் ஏழை மக்கள். அதிகம் படிப்பறிவில்லாதவர்கள்.  அதையும் விட, விசா வழங்கும்போது சொல்லப்பட்ட வேலைக்கு முற்றிலும் மாறாக கூலி வேலை செய்யவும், பாலைவனங்களில் ஒட்டகம் மேய்க்கவும், இன்னபிற கீழ்த்தர வேலைகளுக்கு பல அப்பாவி இந்தியர்கள் ஆட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த இரண்டரை ஆண்டுகளில் பல கண்ணீர்க் கதைகளை நேரிலேயே கண்டிருக்கிறேன். கேட்டிருக்கிறேன்.
பாஸ்போர்ட்டைத் திரும்பத் தர மறுக்கும் கஃபில்களின் பிடியில் இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சிக்குண்டு தவிக்கிறார்கள். அதையும் விட வீட்டு வேலை செய்யச் சென்ற பல்லாயிரக்கணக்கான இந்தியப் பெண்களின் கதைகள் கல்லையும் கரைய வைப்பவை. நித்தமும் வன்புணர்வுக்கும் இன்னபிற கொடூரமான கொடுமைகளுக்கும் ஆளாகிச் சிக்குண்டு தவிக்கும் அப்பெண்கள் முறையான ஆவணங்களின்றி ஒருபோதும் இந்தியா திரும்பவே முடியாது. ஏறக்குறைய பொறியில் சிக்கிய எலியாகத் தப்பவே முடியாத சூழ்நிலை அவர்களுடையது. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அந்தப் பெண்கள் தனியாக வீட்டை விட்டுப் போகவும் முடியாது. அவர்கள் வேலை செய்யும் கஃபிலாக இரக்கப்பட்டு அவர்களைத் திருப்பி அனுப்பினால்தான் உண்டு. அதற்கும் மேலாக “எக்ஸிட் விசா” அடிக்கவும் கஃபிலின் தயவு தேவைப்படும். அவன் சுணங்கினால் “எக்ஸிட் விசா” எட்டாக் கனிதான்.
இதுவெல்லாம் நான் கற்பனை செய்து சொல்கிற விஷயமில்லை. வளைகுடா நாட்டில் வேலை செய்த, செய்து கொண்டிருப்பவர்களைக் கேட்டால் உண்மை விளங்கும். இந்தச் சூழ்நிலையில்தான் சுஷ்மாஜி என் கண்ணுக்கு ஒரு காக்க வந்த தேவதையாகத் தெரிகிறார்.
எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.
சதாம் ஹுசைன் குவைத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட வளைகுடாப் போர் முடிந்த பிறகு, 1992-ஆம் வருடத்தில், சவூதி அரேபியாவின் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ரியாத்திற்குப் போய் நிறுவனத்தில் சேர்ந்த நாளே என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டார்கள். பெரிய நிறுவனமானதால் வருடத்திற்கொருமுறை நான் இந்தியாவிற்குப் போகலாம்; வ்ரலாம். அப்படிப் போகையில் பாஸ்போர்ட்டை எனக்குக் கொடுப்பார்கள் என்பது ஒப்பந்தம்.
எங்கள் நிறுவனத்தின் அலுவலகம் ரியாத்தில், சித்தீன் ஸ்ட்ரீட்டில், மிலிட்டரி ஹாஸ்பிடலுக்கு அருகில் இருந்தது. ஆனால் நான் வேலை செய்ய வேண்டிய இடம் அல்-பத்தா எனப்படும் நகர மையத்திற்கருகில் இருந்த ரியாத் முனிசிபாலிட்டி. அந்த நேரத்தில் ரியாத் முனிசிபாலிட்டியை கணிப்பொறி மயமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ப்ராஜக்ட்டில்தான் எனக்கு வேலை. பெரும்பாலும் அரபிக்களே வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் நானும், இன்னொரு ஹைதராபாத்காரனும், பிஹாரி ஒருவனும் மட்டுமே இந்தியர்கள். நான் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர். பிஹாரி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர். ஹைதராபாதி ப்ரோகிராமர். எங்கள் அத்தனை பேருக்கும் ஒரு லெபனானி மேனேஜர்.
லெபனானி மேனேஜருக்கு ஐம்பது வயது இருக்கலாம் அப்போது. வேலையில் சேர்ந்த நாளிலில் இருந்து எனக்கும் லெபனானிக்கும் ஒத்து வரவில்லை. என்னுடைய இடத்துக்கு அந்த ஆளுக்குத் தெரிந்த இன்னொரு லெபனானியை கொண்டுவர அந்த ஆள் முயற்சி செய்து கொண்டிருக்கையில் என்னை அங்கு கொண்டு போய் சொருகிவிட்டார்கள். அல்லது விதி சொருகி விட்டது. டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் கொஞ்சம் வயசானவராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது அவரது எண்ணம். நானோ இருபத்து ஏழு வயசுடைய, பால் வடியும் முகம் கொண்ட பாலகன். ஒத்து வரவில்லை.
அதற்காக எனக்கு சரக்கு இல்லை என்று அர்த்தமில்லை. ஏகப்பட்ட இண்டர்வ்யூக்களுக்குப் பிறகே என்னை தேர்ந்தேடுத்தார்கள். பொதுவான இந்திய மென்பொருள் ஆசாமிகளைப் போல என்னுடைய சப்ஜெக்ட் எனக்கு நன்றாகவே தெரியும். எனவே அவரால் என்னுடைய வேலையில் குறை சொல்ல முடியவில்லை. இருந்தாலும் புலியும், சிங்கமும் போலத்தான் நடந்து கொண்டோம். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
இப்படியிருக்கையில் ஒருநாள்,  “நம்முடைய மெயின் அலுவலகத்தில் ஒரு புதிய கணிப்பொறி வந்திருக்கிறது. நீ அதில் ஆரக்கிள் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து விட்டு வா” என்று அனுப்பி வைத்தார். DEC Alpha என்று நினைவு. தொண்ணூறுகளிலெல்லாம் சாஃப்ட்வேர் பெரிய டேப்புகளில்தான் வரும். கூடவே வண்டி, வண்டியாக இன்ஸ்டலேஷன் மேனுவல்கள். இருந்தாலும் அது ஒன்றும் பெரிய வேலையில்லை.
நான் டேப்பை லோட் செய்து ஆரக்கிளை இன்ஸ்ட்டால் செய்ய ஆரம்பித்தேன். எடுத்த உடனேயே “Warning….so and so library is missing…” என்று மெசேஜ் வந்தது. இருந்தாலும் இண்ஸ்ட்டலேஷன் நிற்காமல் தொடர்ந்து நடந்து வெற்றிகரமாக இன்ஸ்ட்லேஷனும் ஆகிவிட்டது. இருந்தாலும் எனக்கு சந்தேகம். இந்தப் பிரச்சினையுடன் கூடவே டேட்டாபேஸை உருவாக்கினால் ஒருவேளை டேட்டாபேஸ் கரப்ட் ஆகிவிட்டால் என்ன செய்வது என்கிற சந்தேகத்துடன் இரண்டு, மூன்று நாட்கள் மேனுவல்களுடன் போராடிக் கொண்டிருந்தேன். இப்போது இருப்பது போல இண்டர்நெட்டெல்லாம் அன்றைக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 96-க்குப் பின்னால்தான் இண்டர்நெட் என்கிற சமாச்சாரமே பொதுவெளிக்கு வந்தது இல்லையா?
அதையும் விட, இப்போது ஊர் ஊருக்கு இருக்கும் ஆரக்கிள் சப்போர்ட்டெல்லாம் அப்போது இல்லை. சவூதி அரேபியாவிற்கான ஆரக்கிள் சப்போர்ட் லண்டனில் இருந்தது. நடுராத்திரிக்கு அவர்களுக்குப் ஃபோன் செய்து பேச வேண்டும். அவன் அதைச் செய்; இதைச் செய் என்பான். எதைச் செய்தாலும் அந்த எர்ரர் போவதாக இல்லை. அது வெறும் வார்னிங் மட்டும்தான். பிரச்சினை எதுவும் இல்லை என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். அதை விடுங்கள்.
நான் மூன்று நாட்கள் ரியாத் முனிஸிபாலிட்டுக்கு வராததைக் கண்ட ஹைதராபாதி என்னைப் பார்ப்பதற்காக மெயின் ஆஃபிஸில் நான் மல்லாடிக் கொண்டிருந்த சர்வர் ரூமுக்கு வந்தான். அவனிடம் பிரச்சினையை விளக்கிக் கொண்டிருந்த நேரத்தில் புயல் போல உள்ளே நுழைந்தார் எனது லெபனி மேனேஜர். கொஞ்சம் அவருடைய குணாம்சத்தையும் இங்கு சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
ஐந்தரை அடி உயரம் கொண்ட, சிவந்த நிறமுடைய, குண்டான என்னுடைய லெபனி மேனேஜர் கொஞ்சம் முன் கோபக்கார ஆசாமி. நல்ல மனுசன்தான். ஆனால் இந்தியர்களைக் கொஞ்சம் தாழ்வாக நினைக்கிற அரபி. அது கூடப் பிரச்சினையில்லை. அந்த வயதில் நானும் ஒரு முன்கோபிஷ்டன். அதையும் விட மாங்காய் மடையன் (Deadly combination!), மேற்படி மேனேஜருடன் சரிக்குச் சரி மல்லுக்கட்டுவேன் என்பதனையும் கூச்சத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அது பெருமையான விஷயமில்லை என்பது இப்போது தெரிகிறது. குழைந்து பேசும் இந்தியர்களையே பார்த்த “உயர்வான” அரபியிடம் ஒரு பிச்சைக்கார இந்தியன் சரிக்குச் சரி பேசுவது இனிக்கவா செய்யும்?
விதி வலியது. சரியாகச் சிக்கிக் கொண்டேன்.
எதனால் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என்கிற காரணத்தை விளைக்கிக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு கோபம் தலைக்கேறி என்னைக் கண்டபடி விளாசத் துவங்கினார். நானும் விடுவேனா என்ன? சரிக்குச் சரி சமர் ஆரம்பமாகியது. அதைக் கண்ட ஹைதரபாதி அங்கிருந்து தப்பியோடினான்.
எங்கள் மேனேஜருக்குக் கோபம் வந்தால் வாய் ஒருபுறம் கோணி ‘வ்…வ்…வ்’ என்று இழுக்க ஆரம்பித்துவிடும். நான் கத்த, அவர் வ்…வ்..வ்..விளாச ஒரே களோபரம். கொஞ்ச நேரத்தில் இன்னும் கோபம் தலைக்கேறி, “வ்..வ்…வ்…உன்னை சவூதி போலிசில் பிடித்துக் கொடுத்துவிடுவேன். முகமது நபியை கேவலமாகச் சொன்னாய் என்றால் உன்னை மிதித்து சட்டினியாக்கிவிடுவார்கள்….இப்பவே நான் போலிசுக்கு ஃபோன் செய்கிறேனா இல்லையா பார்…வ்..வ்..வ்.” என்று கதைவை படாரென மூடிவிட்டுப் போனார்.
அவ்வளவு நேரம் வீறாப்பாய்ப் பேசிக் கொண்டிருந்த எனக்குக் குளிர் ஜுரம் வந்துவிட்டது. கை, கால், தொடை, இண்டு, இடுக்கு எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கும் மேலாக, இத்தனை நேரம் எங்கோ ஒளிந்து கொண்டிருந்த ஹைதராபாதி  உள்ளே நுழைந்து,
“அப்பே சாலே…க்யா கமால் கர்தியாரே தும்னே?….ஆஜ் தேரா கா#$# மார்னேவாலேஹே…தேக் கே ரஹோ பேட்டே….” என்று பீதியைக் கிளப்பினான்.
அதைக் கேட்டதும் உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டி, வாய் ஒருபுறம் ‘வ்…வ்…வ்…’ என்று இழுக்க ஆரம்பித்தது. சவூதி போலிஸ்காரர்கள் எந்த நேரத்தில் வந்து கையில் விலங்கு மாட்டி இழுத்துப் போவார்களோ என்று நாளெல்லாம் நடுங்கியபடி ஒரு மூலையில் ஒளிந்து உட்கார்ந்திருந்தேன்.
நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருவழியாக இன்ஸ்டலேஷன் செய்து முடித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இது நடந்து ஒருவாரம் கழித்து இந்தியாவில். புது தில்லியில் நான் பணிபுரிந்த நிறுவனம் அமெரிக்க விசாவை ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பி வைத்திருந்தார்கள். நான் எதுவும் அப்ளை செய்யாமலேயே விசா வந்தது எனக்கு ஆச்சரியாமாக இருந்தது என்றாலும் சவூதி அரேபியாவை விட்டுத் தப்பிக்கும் இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட மனமில்லை.
அப்போதெல்லாம் அமெரிக்க H1B விசாவை ‘ப்ளூ பேப்பர்’ என்பார்கள். நீல நிறக்காகிதத்தில் அச்சடிக்கப்பட்டதால் அப்படி பெயர் வந்திருக்கலாம். H1B விசாவில் அமெரிக்காவிற்கு வந்தவர்களில் நான் முதல் அல்லது இரண்டாவது பேட்ச்சாக இருக்க வேண்டும். அதற்கு முன்னால் J1 எனப்படும் பிஸினஸ் விசாதான் இந்திய மென்பொருளாளர்க்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். J1 விசாவில் ஆறுமாதம் மட்டுமே அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். அதற்குப் பிறகு இந்தியா திரும்பி மீண்டுமொரு J1 அடிக்க வேண்டும். அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக பில் க்ளிண்டன் H1B விசாவைக் கொண்டு வந்தார். பின்னர் நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
எனக்கு வந்த விசாவை எடுத்துக் கொண்டு புது தில்லி வந்து, அமெரிக்கன் எம்பஸியில் ஸ்டாம்ப் அடித்துக் கொண்டு பறக்க வேண்டியதுதான் மிச்சம். ஆனால் அதற்கு எனது பாஸ்போர்ட் கையில் வர வேண்டும். என் பாஸ்போர்ட்டை ரிலீஸ் செய்யும் அதிகாரம் எனது மானேஜருக்கு மட்டுமே உண்டு என்பதுதான் சிக்கலே.
நேரே எனது மேனேஜரிடம் போய், “எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கிறது. நான் இந்தியாவிற்குப் போக வேண்டும். என் பாஸ்போர்ட்டை ரிலீஸ் செய்யுங்கள்” என்றேன்.
எனது மானேஜருக்கு சந்தேகம். லெபனியாக இருந்தாலும் அவர் ஒரு கனேடிய குடிமகன். அதுகுறித்து அவருக்குப் பெருமை அதிகம். நேரம் வரும்போதெல்லாம் அதுகுறித்து பெருமை பாடாமல் இருந்ததில்லை. அப்படியாகப் பட்ட ஆசாமியிடம் ஒரு “பிச்சைக்கார” இந்தியன் அமெரிக்காவிற்குப் போகிறேன் என்றால் பொறுத்துக் கொள்ளவா செய்வார்? அவரைப் பொறுத்தவரைக்கும் அமெரிக்கா, கனடாவெல்லாம் “பிச்சைக்கார” இந்தியர்கள் போகத் தகுந்த இடமில்லை.
“நீ பொய் சொல்கிறாய். இன்னும் ப்ராஜெக்ட் முடியவில்லை. எனவே உன்னுடைய பாஸ்போர்ட்டை ரிலீஸ் செய்ய மாட்டேன்” என்றார்.
கடுப்புடன் எனக்கு வந்த விசா பேப்பர்களை அவர் முன்னால் தூக்கிப் போட்டேன். நம்ப முடியாமல் வரிக்கு வரி அதனைப் படித்துவிட்டுத் திரும்பவும் “பாஸ்போர்ட்டை ரிலீஸ் செய்ய மாட்டேன்” என்றார் பிடிவாதமாக.
“எனக்கு எப்படி என்னுடைய பாஸ்போர்ட்டை வாங்க வேண்டும் என்று தெரியும்” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
இரண்டு நாட்கள் ஆபிஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஒப்பந்த வேலைக்கு வந்துவிட்டு சவூதியில் அப்படியெல்லாம் செய்ய முடியாது. இருந்தாலும் எனக்கு வேறுவழி தெரியவில்லை. I was very desperate. ஆபிஸிலிருந்து ஆளனுப்பினால் எனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தேன்.
மூன்றாவது நாள் ஒரு டாக்ஸி பிடித்து இந்தியன் கான்ஸ்லேட்டுக்குப் போனேன். அப்போதைய சவூதி கான்ஸ்லேட் ஏதோவொரு பொந்தில் இருந்தது. அதே தூங்கி வழியும் இந்திய அரசு அலுவலகம் போன்ற தோற்றம். ஒப்பு நோக்க இந்தியன் எம்பஸி, கான்ஸ்லேட்டுகளையும் விட பாகிஸ்தானிய எம்பஸி, கான்ஸ்லேட் கட்டிடங்கள் மிக நேர்த்தியானவை. பிடிக்காவிட்டாலும் சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது? இப்போது எப்படியோ தெரியவில்லை. மாறியிருந்தால் சரி.
இந்தியன் கான்ஸ்லேட் ஒரு சத்திரம் மாதிரி இருந்தது. கொடுமைக்கார கஃபில்களிடமிருந்து தப்பி வந்த இந்தியர்கள் அங்குமிங்கும் படுத்துக் கிடந்தார்கள். எம்பஸிக்காரர்களாகப் பார்த்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தால்தான் உண்டு. அது சாமானியமாக நடக்கக் கூடிய காரியம் இல்லை. எனவே அங்கு பணிபுரிந்த அலுவலகர்கள் பெரும் எரிச்சலுடன் எந்த இந்தியனைப் பார்த்தாலும் எரிந்து விழுவார்கள்.
சினிமா கொட்டகை கவுண்டர் போலிருந்த இடத்திற்குப் போய், “கான்ஸ்லேட் உயரதிகாரியைப் பார்க்க வேண்டும். என்னுடைய அலுவலகம் என்னுடைய பாஸ்போர்டைத் திருப்பித் தர மறுக்கிறது” என்றேன். உள்ளே உட்கார்ந்திருந்த பெண்மணி என்ன நினைத்தாரோ, “சரி…நீ அந்தக் கதவு வழியாக உள்ளே வா…” என்றார்.  இந்திய அரசு அலுவலகங்களுக்கே உரிய, கன்னா பின்னாவென்று ஃபைல்கள் அடுக்கப்பட்ட, மங்கலான பாதை வழியே என்னை அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு அலுவலர் முன்னர் என்னை நிறுத்தினார்.
குப்தேவோ அல்லது கோட்போலேவோ என்று பெயருடைய ஆசாமி. மராட்டிக்காரர். என்னை நிமிர்ந்து பார்த்து, “என்ன விஷய்ம்?” என்றார் எரிச்சலுடன்.
நான் விஷயத்தைச் சொன்னேன். உடனடியாக அந்த ஆசாமியின் முகம் மாறியது. எள்ளும், கொள்ளும் வெடிக்க என்னைப் பார்த்து, “நீயெல்லாம் எதுக்கய்யா இங்கு வந்து எங்கள் உயிரை வாங்குகிறாய்?” என்று எகிறினார்.
நான் முன்பே சொன்னபடி அந்த வயதில் நானொரு முன்கோபிஷ்டன். கோபம் பொறி பறக்க, வாய் கோண, வ்….வ்…..வ்….வ்வென்று விளாசித் தள்ளினேன். “கஷ்டப்படுகிற இந்தியனுக்கு உதவி செய்யாமல் நீயென்ன ரோமத்தைப் பிடுங்கவா இங்கிருக்கிறாய்?” என்றேன். ஆசாமி வெலவெலத்துப் போய்விட்டார். கூச்சலைக் கேட்டு செக்யூரிட்டி ஆசாமிகள் ஓடி வந்தார்கள்.
எப்படியோ சமாதானமாகி, என்னிடமிருந்து என்னுடைய மேனஜருக்கு மேலதிகாரியின் ஃபோன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, அவரைக் கூப்பிடுவதாகச் சொன்னார். “நீ கூப்பிடாவிட்டால் நான் நேரே கான்ஸ்லேட்டிடம் போவேன்” என்றேன். நான் போகக்கூடிய ஆள்தான் என்று அவருக்குப் புரிந்திருந்தது. சொன்னது மாதிரியே என் மேனேஜருக்கு மேலிருக்கும் உயரதிகாரிக்குப் ஃபோன் செய்து என்னுடைய பாஸ்போர்ட்டை ரிலீஸ் செய்யச் சொல்லியிருக்கிறார்.
அந்த உயரதிகாரியும் லெபனான் ஆசாமி. மெக்கினாஸ் கோல்டில் நடித்த ஒமார் ஷெரிஃப் போன்ற தோற்றமுடையவர். மறுநாள் என்னையும், என்னுடைய மேனேஜரையும் அவரது அறைக்கு அழைத்து விஷய்த்தைக் கேட்டார். அப்படியும் என்னுடைய பாஸ்போர்ட்டைக் கொடுக்க எங்கள் மேனேஜன் மறுத்துவிட்டான்.
இதற்கிடையில் அமெரிக்க கம்பெனியிலிருந்து ஃபோனுக்கு மேல் ஃபோன் போட்டு என்னைத் துளைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். ஆபிஸிற்கும் ஒழுங்காகப் போவதில்லை. என்னுடைய நண்பர்கள் நேரடியாக டைரக்டரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். எங்களுடைய கம்பெனி டைரக்டர் ஒரு பிரிட்டிஷ்கார வெள்ளையர். பொதுவாக யாரும் அந்த ஆசாமியிடம் நேரில் பேசப் பயப்படுவார்கள்.
பாகிஸ்தானிய செகரட்டரியின் கூச்சலை உசாதீனப்படுத்தி நேரே அவரது அறைக்குப் போய் அவரது கதவைத் தட்டி உள்ளே நுழைந்தேன்.
“என்ன விஷயம்?” என்ற அவரிடம், விஷயத்தை விளாக்கினேன்.
“So you want to go to US? Very nice. I will let your manager to release your passport. All the best!” என்றார் புன்னகையுடன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.