கோபியர் கொஞ்சும் சல்லாபன்

குழந்தை கிருஷ்ணன் இளம்காளையாக வளர ஆரம்பித்துவிட்டான். இருப்பினும் அவனுடைய குறும்புகள் அவன்கூடவே வளருகின்றன.  இக்கள்ளன் ஆய்ப்பாடி கோபிகைகளையெல்லாம் தன்னுடைய குறும்புகளாலும், காளைப்பருவ விளையாட்டுகளாலும் அவர்களோடு தான் செலவிடும் பொழுதுகளின் இனிமையினாலும் மயக்கிவைத்திருக்கிறான். இவ்விளம் பெண்கள் அவ்வப்போது வந்து யசோதையிடம் அவனுடைய செய்கைகளை முறையிடுகின்றனர். ஆய்ச்சியர் கூற்றாக  பெரியாழ்வாரின் இப்பாடல்களைக் கேட்கும் எவருமே இவை முறையீடுகள் என நம்ப மாட்டோம். இம்முறையீடுகள் அனைத்தும் அவர்கள் அவன்மீது கொண்ட தீராத மையலால், காதலால் விளைந்தது எனவும் அவற்றைப் பொய்யாகத் தாமே நம்பாத உண்மைகளாக்கி யசோதையிடம் முறையிட்டுத் தமது தாபத்தை ஒருவாறு தணித்துக்கொள்வது போலவும் பாசுரங்களைப்படிக்கும் நமக்கு எண்ணத்தோன்றுகிறது!
“யசோதையம்மா! நாங்கள் பாட்டுக்கு ஆற்றில் நீராடிக்கொண்டும், ஆற்றங்கரை மணலில் விளையாடிக் கொண்டுமிருந்தோம். இந்தக் கண்ணன் அங்கேவந்து சேற்றினைவாரி எங்கள்மீது வீசியெறிந்தான். நாங்கள் நீராடும்போது களைந்து கரையில் வைத்திருந்த எங்கள் சேலைகளையும் வளையல்களையும் எடுத்துக்கொண்டு காற்றினும் விரைவாக ஓடி வீட்டினுள் புகுந்து கொண்டுவிட்டான். அவற்றைத் திரும்பத்தருவேன் என்றோ தரமாட்டேன் என்றோ கூறவும் இல்லை! நாங்கள் இவன் செய்த இந்தச்செய்கையால் இன்று தொலைந்தோம் (அழிந்து விடுவோம்),” என்று இளம்பெண்கள் குழுவொன்று வந்து யசோதையிடம் புலம்புகின்றனர்.
ஆற்றில் இருந்து விளையாடு வேங்களை
    சேற்றில் எறிந்து, வளைதுகில் கைக்கொண்டு,
    காற்றிற் கடியனாய் ஓடி அகம்புக்கு
    மாற்றமும் தாரானால், இன்று முற்றும்;
        வளைத்திறம் பேசானால், இன்று முற்றும்.
    (பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-10)
இவர்கள் அவனிடம் செய்த வம்புக்கொன்றும் குறைச்சலில்லை! இருகைகள் கொட்டினால் தானே ஓசைஎழும்?
நுணுக்கமாக அவன் செய்த செயல்களைக் கண்ணுற்றிருக்கிறார்கள் இவர்கள். “காதுக்குண்டலங்கள், கரிய சுருண்ட குழல், கழுத்தாரம் (நாண்) முதலியன தாழ்ந்து அசையுமாறு குனிந்து எங்கள் சேலைகளை வாரிக்கொண்டு அந்தக் குருந்தமரத்தில் விரைந்துஏறிக் கொண்டுவைத்திருக்கிறான்,” என்கிறாள் ஒருத்தி. “நாங்கள் கெஞ்சிக்கேட்டும் தரமாட்டான் என்கிறான்; இவனால் நாங்கள் இன்று எங்கள் தாய்மார்களிடம் ஏச்சும் பேச்சும் கேட்கவேண்டும்; நாங்கள் இன்று தொலைந்தோம்,” என முறையிடுகின்றனர். நயவஞ்சகப் பேச்சில் இவர்கள் கண்ணனுக்கு நிகர்தான்.
குண்டலம் தாழ, குழல்தாழ, நாண்தாழ,
    எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
    வண்டமர் பூங்குழலார் துகில்கைக் கொண்டு
    விண்தோய் மரத்தானால், இன்று முற்றும்
        வேண்டவும் தாரானால், இன்று முற்றும்.
    (பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-10)
நீராடி ஆற்றில் நீரெடுத்துப்போக வந்த பெண்கள் அங்கு மரத்தின் ஒருகிளையிலமர்ந்து குழலூதும் கண்ணனைக் கண்ணுற்றனர். “கண்ணா, நீ இங்கிருந்து போய்விடு; நாங்கள் நீராடவேண்டும்,” என்கின்றனர்.  அவனும் இளம்காளைப்பருவத்தினன். இவர்களைச் சிறிது சீண்டிப்பார்ப்போமே என்று, “ஏன்? இந்த இடம் உங்களுக்கு மட்டுமே உரிமையோ? நான் போகமாட்டேன்,” என்கிறான். சிறிது வாக்குவாதத்தின் பின்பு ஒருபெண், “வாருங்களடி, அவன் சிறுவன்தானே; அவன்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும், நம்பாட்டுக்கு நாமும் நீராடுவோம்,” எனக்கூற வழக்கம்போலச் சேலைகளையும், அணிகலன்களையும் களைந்து கரையில் வைத்துவிட்டு அனைவரும் நீராடுகின்றனர்; போதாக்குறைக்கு ஆற்றுநீரை அள்ளியள்ளிக் குறும்பாக அவன்மேலும் வீசுகின்றனர். அவர்களுக்குத் தம் இளமையிலும் அழகிலும் மிகுந்தபெருமை; இளம்வாலிபனான கண்ணன் அங்கிருப்பது அவர்களுடைய இந்த விளையாட்டுக்கு இன்னும் சுவைகூட்டுகிறது. சிறிதுநேரம் நீரில் விளையாடியவர்கள் அவனை வம்பிற்கிழுக்கிறார்கள்; அவனிடம், “கண்ணா, நான் அழகா, இந்த என்தோழி அழகா, நீயே சொல், ” எனவெல்லாம் அவனைச் சீண்டத் துவங்குகின்றனர்.
இளமையின் துடிப்பினால்  நீராடுகின்ற பெண்கள் செய்யும் இந்தக் குறும்புகளுக்காக (அட்டூழியங்களுக்காக?) அவர்களைத் தண்டிக்கலாம் என்றுதான் கிருஷ்ணன் அவர்கள் ஆடைகளைக்கவர்ந்து சென்றுவிட்டான். தாழ்மையும் பணிவுமே அனைவருக்கும் முக்கியமான பெருங்குணம் என உணர்த்த கிருஷ்ணன் செய்த விளையாட்டு இது என்பர் பெரியோர்.
கிருஷ்ணன் காளியன்தலைமீது நடனமாடி அவனை அடக்கியதும், கழுதை உருவில் வந்த அசுரனைக்கொன்றதும், பேய்ச்சியான பூதனையின் முலைபருகி, அவள் உயிரையே கவர்ந்ததும்  இந்தப்பெண்கள் எல்லாம் கண்டும் கேட்டும் நடந்த நிகழ்வுகள்தாம். அவன் அசகாயசூரன் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவன் ஆடியும்பாடியும் விளையாடிக்களித்ததால், அவனிடம் அளவுக்குமீறி உரிமை எடுத்துக்கொண்டு என்னவேண்டுமாயினும் செய்யலாம் என எண்ணிவிட்டார்கள் இவர்கள்! அதன் விளைவுதான் இது! அதனால்தான் அவர்களுக்குக் கிருஷ்ணன் ஒருபாடம் கற்பிக்க முயன்றான்.
“உன்மகன் ஒரு முதலையின் வாயிலகப்பட்ட யானை, ‘ஆதிமூலமே’ எனக்கூவியழைத்ததும் ஓடோடிச் சென்று சக்கராயுதத்தினை ஏவி முதலையைக்கொன்று அதனை மீட்டான். ஏங்கள் சேலைகளை எடுத்து வைத்துக்கொண்டு தராமல், எங்களை மட்டும் ஏன் இவ்வாறு நாங்கள் அழியுமாறு வருத்துகிறான்?” என்று வருந்தினர்களாம்.
தாழை தண்ஆம்பல் தடம்பெரும் பொய்கைவாய்
    வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புஉண்
    வேழம் துயர்கெட, விண்ணோர் பெருமானாய்,
    ஆழிபணி கொண்டானால், இன்று முற்றும்;
        அதற்கருள் செய்தானால், இன்று முற்றும்.
    (பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-10)
இவற்றை நாம் படிக்கும்போது, விளையாட்டுப்போக்குடைய இளம் இடைச்சியர் பெண்கள், ‘இவன் அத்திருமாலே’ என எங்ஙனம் அறிந்தனர் எனும் வினா எழலாம். இடைப்பெண்களின் கூற்றாக அமைந்த இவை பெரியாழ்வார் வாக்கு. கிருஷ்ணனின் தெய்வத்தன்மையை இடையிடையே கூறிப் பாடிமகிழ்வது அவருடைய பக்தியின் உரிமை. கிருஷ்ணலீலைகளை அறியப்புகுந்த நாம் விகற்பம் கற்பிக்காது அந்த லீலைகளின் தொடர்ச்சியானவற்றை மட்டுமே கருத்தில் கொண்டால், மிகவும் சுவையான ஒரு பாமாலையைப் படித்து மகிழலாம்.

krishna-stealing-the-cloths-of-the-gopis

o0o

மகிழ்ச்சியான மனோநிலையில் அக்காலத்து மகளிர் தமது வீடுகளில் பொழுதுபோக்காக இயற்றிப் பாடிக்களித்த சில பாடல்களையும் இதன் தொடர்பாகக்கண்டு நாம் ரசிக்கலாமே! (இவற்றினை எனது பாட்டியார் பாடுவார்; இவை காலத்தால் அழிந்துவிடாமலிருக்க இங்கு இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்! இதற்காக சொல்வனத்திற்கு நன்றி!)
பாக்குமரத்தடியே நாங்கள் பெண்கள்
    பகடைகள் ஆடையிலே
    பகடைக்காய்களை ஒளித்தான்- கிருஷ்ணன்
    பகடைக்காய்களை ஒளித்தான்
    யசோதை உந்தன் பாலன் கண்ணனை
    என்னென்று நாங்கள் சொல்லுவோம்
 
வெள்ளிக்கிண்ணம் கொண்டு நாங்கள் பெண்கள்
    வெண்ணெய்க்குப் போகையிலே
    கிண்ணத்தைப்பிடித்திழுத்தான்- கிருஷ்ணன்
    கிண்ணத்தைப்பிடித்திழுத்தான்
    யசோதை உந்தன் பாலன் கண்ணனை
    என்னென்று நாங்கள் சொல்லுவோம்
 
    தங்கக்குடம் கொண்டு நாங்கள் பெண்கள்
    தண்ணிக்குப் போகையிலே
    பின்னலைப் பிடித்திழுத்தான்- கிருஷ்ணன்
    கிண்ணத்தைப்பிடித்திழுத்தான்
    யசோதை உந்தன் பாலன் கண்ணனை
    என்னென்று நாங்கள் சொல்லுவோம்
கிருஷ்ணன் என்ன வாளாவிருந்து விடுவானா?  தன்பங்குக்கு அவனும் கோபியருடன் வாக்குவாதம் செய்கிறானாம்; சுவாரசியமான அடுத்த பாடல் இது!
கோபியர்:
கண்டபடி ஏசுகிறாய் கள்ளனே கண்ணா!
    கட்டியே பிடித்திழுத்து கள்ளனே கண்ணா!
    கொண்டுபோவோம் ராஜனிடம் கள்ளனே கண்ணா!
    சேதிகூறியே விலங்கிடுவோம் கள்ளனே கண்ணா!
 
    நோன்பு செய்யும் பெண்கள் மனம் கள்ளனே கண்ணா!-இப்போ
    தேம்பிடவும் நீதியில்லை கள்ளனே கண்ணா!
    வீம்பு செய்யும் உன்னையிப்போ கள்ளனே கண்ணா!- பெரும்
    பாம்பினால் கடிக்கச் செய்வோம் கள்ளனே கண்ணா!
 
கிருஷ்ணன்:
    பாம்பினில் படுத்தவன்டீ கோபியே பெண்ணே!- பெரும்
    பாம்பின்மேல் நடித்தவன்டீ கோபியே பெண்ணே!
    பாம்பினைப் பிடித்துக்கொண்டு கோபியே பெண்ணே!- எந்தன்
    பக்கமதில் வந்திடுவீர் கோபியே பெண்ணே!
எப்படியிருக்கிறது நமது குட்டனின் சாமர்த்தியமான பதில்?!

o0o

Krishna_Gokul_Nawka charithram

சிறுவயதிலிருந்து ஆயர்பாடியில் அனைவரிடமும் மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு விளையாடி, மகிழ்ந்து, மகிழ்வித்தவன் கிருஷ்ணன். அவன் வரவினால், பிறப்பினால்தான் ஆயர்பாடியே புதுக்களை பெற்றது! ஆகவே வளர்ந்து இளம்காளையாக உலவும்போதிலும் அவனுடைய விளையாட்டுகள் தொடர்கின்றன. இளம்பெண்களின் அந்தரங்கத்திலும் குறுக்கிடுகிறான்; இல்லை! இல்லை! அந்தரங்கம் உண்டுபண்ணுவதே அவன்தான்!! அவர்கள் நீராடும் பொய்கைகளிலும் விளையாடும்  தோட்டங்களிலும் ஒளிந்துகொண்டு குறும்புகள் செய்கிறான். இவ்விளம்பெண்களுக்கும் அவனுடைய இந்தக் குறும்புகள் தேவையாக இரசிக்கத்தக்க விதத்தில் உள்ளன. ஆயினும் பொய்க்கோபம் கொண்டு பேசுவதாக பாவனை செய்கின்றனர்.
புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் கோழிகூவும் முன்னரே எழுந்து இவனுடைய தொல்லை இல்லாமல் ஆற்றில் குடைந்து குளிரக்குளிர நீராடலாம் எனப் பெண்கள் விரைந்து வந்துள்ளனர். என்னவாயிற்றோ ஏதாயிற்றோ தெரியவில்லை, ‘ஆழியஞ்செல்வன்’ எனப்போற்றப்படும் சூரியன் தனது தேரில்  இவர்களுக்கு முன்பே வந்துவிட்டான்.
“கோதை! என்னடி செய்யலாம் இப்போது?”
“வேறு வழியில்லை; நீராடவேண்டுமே; வாருங்கள்; அந்தக் கிருஷ்ணன் எங்காவது ஒளிந்து கொண்டிருப்பான்; நம் ஆடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடுவான். அதற்குள் நாம் நீராடி முடித்துவிடலாம்.”
அவன் வம்பிழுப்பான் எனத் தெரியுமல்லவா? இருபெண்கள் ஏன் ஆடைகளுக்குக் காவலாகக் கரையில் இருக்கக் கூடாதோ? வேண்டுமென்றே இவர்களும் அவனுடைய குறும்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்; அவற்றைத் தேடிச் செல்கிறார்கள்!!
நீரில் இறங்கிவிட்டால் பின் பொழுதுபோவது தெரிகிறதா? குளிர்ந்தநீரில் குடைந்து ஆடும் குதூகலத்தில் நாழிகை செல்வது புரியவில்லை இப்பெண்களுக்கு!
“ஐயோ! பாரடி பதுமை! நமது ஆடைகள் களவுபோய்விட்டன! இவன் எப்போது இங்கே வந்துசேர்ந்தான்? அதோ பார், குருந்தமரத்து உச்சியில் அவைகளைச் சுருட்டிக் கிளைகளில் கட்டி வைத்துவிட்டு அவன் வாகாக உட்கார்ந்துகொண்டு குழலூதுவதைப்பாரடீ,” எனக் கிரீச்சிடுகிறாள் ஒருத்தி.
“கோதை, உனக்குத்தான் அவனிடம் செல்வாக்கு உண்டே! நீ போய்க் கேளடீ, கொடுப்பான்.”
நீரிலேயே நின்றவண்ணம் (ஆடைகளைத்தான் அவன் திருடிக்கொண்டுவிட்டானே!) கோதை யாசிக்கிறாள்: “அப்பனே, அரவப் படுக்கையில் திருக்கண் வளரும் எம்பிரானே! நீ இவ்வாறு எங்கள் ஆடைகளை எடுத்துக்கொண்டு விட்டதால், நாங்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கிறோம். இனிமேல் இந்தப்பொய்கைக்குத் தப்பித்தவறிக்கூட வரமாட்டோம். தயைகூர்ந்து இப்போது இவற்றைத் திரும்பத் தந்துவிடுவாய்.”
கோழி யழைப்பதன் முன்னம்
        குடைந்துநீ ராடுவான் போந்தோம்
    ஆழியஞ் செல்வ னெழுந்தான்
        அரவணை மேல்பள்ளி கொண்டாய்,
    ஏழைமை யாற்றவும் பட்டோம்,
        இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,
    தோழியும் நானும் தொழுதோம்
        துகிலைப் பணித்தரு ளாயே.
        (நாச்சியார் திருமொழி- 3)
கிருஷ்ணன்  இதைக்காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் குழலூதிக்கொண்டிருக்கிறான். ஒன்றுமே அறியாதவன்போல் வெறுமனே நடிக்கிறான்!
“கிருஷ்ணா! இராமனாக வந்து வில்லாற்றலால் இலங்கையை அழித்தவனே! இதுவென்ன சிறுபிள்ளைத்தனம்? நாங்கள் ஆடையின்றி எவ்வாறு இப்போது நீரிலிருந்து வெளிப்பட்டு, ஊரார் கண்ணில் படாதவாறு வீடு செல்வது? எங்கள் தாய்மார்களுக்குத் தெரிந்தால், எங்களை வீட்டிலேயே சேர்த்துக்கொள்ள மாட்டார்களே.
“பார், இங்கே எத்தனைபேர் நீராடிக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு எங்கள் ஆடைகள் பறிபோனது தெரிந்தால் பெண்களாகிய எங்களுக்கு எத்தனை அவமானம்? மரம் ஏறுவதில் வல்லவர்களான குரங்குகளுக்கு அரசன் நீ என்று எங்களுக்குத் தெரியும் கிருஷ்ணா! நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம்; கருணையில்லையா? ஆடைகளைத் திரும்பத் தா.”
போதாத குறைக்கு, நீரில் உள்ள வாளைமீன்களும் கயல்மீன்களும் இவர்கள் கால்களை ‘வெடுக்,வெடுக்’கென்று கடிக்கின்றன. இத்துன்பம் தாங்கமுடியவில்லை.
“இரு இரு! என் அண்ணன் இதைப்பற்றி அறிந்தால், உன்னை வேல்கொண்டு துரத்துவான் பார் கிருஷ்ணா! என்னவாகும் தெரியுமா?” என்பவளுக்கு, அடிமனதில் தன் ஆசைக்கிருஷ்ணன் அடிவாங்குவதைப்பற்றி எண்ணிக்கூடப் பார்க்க இயலவில்லை! “எதற்கு இந்த வீண்வம்பு? பேசாமல் கொடுத்துவிடேன் எங்கள் ஆடைகளை,” எனக் கெஞ்சுகிறாள்.
இப்பெண்கள் நீரிலேயே நின்றுகொண்டு கால்களை மாற்றி மாற்றி வைத்துத் தவிப்பதனால் தாமரைத்தண்டுகளும் கால்களில் சுற்றிக்கொண்டு வேதனை செய்கின்றன. அது தேள்கொட்டுவது போல வேதனை தருகிறது. எப்படியாவது எழுந்து ஓடிவிடலாம் என்றால் வீடும் மிகுந்த தொலைவில் உள்ளது. நிர்வாணமாக எப்படி ஓடுவது?!
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
        தாள்களெங் காலைக் கதுவ
    விடத்தே ளெறிந்தாலே போல
        வேதனை யாற்றவும் பட்டோம்
    குடத்தை யெடுத்தேர விட்டுக்
        கூத்தாட வல்லஎங் கோவே
    படிற்றையெல் லாம்தவிர்ந்தெங்கள்
        பட்டைப் பணிந்தரு ளாயே
        (நாச்சியார் திருமொழி- 3)   
எல்லாரும் கூடியிருக்கும் இப்பொய்கையிலிருந்து எவ்வாறு ஆடையின்றிச் செல்வது? இதுவே இவர்கள் தவிப்பு. கண்ணனுடன் இவ்வாறு சண்டைசெய்து ஆடைகளைத் தொலைத்தோம் என்றால் யார், எந்தத்தாய்மார் நம்பப்போகிறார்கள்? இவன் செய்யும் அழிம்புகள் மிகவும் கொடியன. “இதனை முளையிலேயே கிள்ளி எறியாது உன் தாய் யசோதை உன்னை வளர்த்துவிட்டாள் பார்!” என்று அவளையும் சேர்த்துக் குறைகூறி நிற்கின்றனர் இவ்விளம் பெண்கள்.
இவ்வாறு இடைக்குலப் பெண்களாகத் தன்னையும் தன் தோழிமார்களையும் பாவித்துக்கொண்டு பாடிமகிழ்ந்தாள் ஆண்டாள்.

o0o

இந்தச்செயலை சாமானிய மானுடப்பிள்ளைகள் செய்தால் ‘அநியாயம்’, ‘அட்டகாசம்’ என்றெல்லாம் கூறி, அவர்களைப் பஞ்சாயத்துவைத்து நல்வழிப்படுத்துவர். இளம்பெண்களின் உள்ளங்கவர்ந்தவனும் கோபியர் கொஞ்சும் சல்லாபனுமான கிருஷ்ணன் செய்தால், ரசித்து, மகிழ்ந்து, பாடிக் கொண்டாடுகின்றோமே! என்ன விந்தை! அதுதான் அந்தக் கிருஷ்ணன் எனும் பெயரின் பெருமை எனலாமா? அல்லது இளையோர் மனத்தை அறிந்த கிருஷ்ணன் வேண்டுமென்றே செய்து (வழி)காட்டிய காதல்விளையாட்டுக்கள் இவை என்பதா? அல்லது சான்றோர் கூறுவதுபோல இவையனைத்துக்கும் தத்துவக் கருத்துக்கொண்ட உட்பொருள் வேறொன்றுள்ளது எனக்கொண்டு தெளிவதா? இவையனைத்தையும் அவ்வாறே அப்படியே (at face- value) எடுத்துக்கொண்டுவிட்டால், பின் குழப்பமேது?
மேலும் குழம்பாமல், இத்தகைய கிருஷ்ணலீலைகள் பிறப்பித்த அழகான இசைவடிவங்களைப் பற்றிச் சிறிது காணலாமா? மேலைநாடுகளில் ஆபரா (Opera) என ஒரு இசைவடிவம் உண்டு. இதனை இசைநாடகம் என ஒருவாறு மொழிபெயர்க்கலாம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரும்மம் ஒருவரே நமது கர்நாடக சங்கீதத்தில் இவ்வாறான கதைவடிவம் கொண்ட இரு இசைநாடகங்களைச் சுவைபட இயற்றி வழங்கி உள்ளார். அவற்றுள் ஒன்று தான் அதிகம் நடிக்கப்படும் நௌகா சரித்திரம். சுவையும் பொருளும் இசைநயமும் மிகுந்த இசைநாடகம் இது.
கோபிகைகள் தங்கள் அழகிலும் இளமையிலும்  வீண்பெருமை கொண்டு, அதனால்தான் கிருஷ்ணன் தங்களிடம் மயங்கி இருக்கிறான் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணனை ஆசைவார்த்தைகள் கூறி, ஒரு படகில் ஏற்றிக்கொண்டு  யமுனைநதியில் உலவிவரச்செல்கின்றனர். பெருமைபொங்க, “யார் நமக்கு சமானம்?” என்று பாடிக்கொண்டு படகைச் செலுத்துகின்றனர்.  தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு அவர்கள் புறப்படுவதனை,
‘ச்ருங்காரிஞ்சு கொனி வெடலிரி
    ஸ்ரீ க்ருஷ்ணுனு தோனு’ என விவரிக்கும் சுருட்டிராகப் பாடலுடன் இசைநாடகம் துவங்குகிறது.
‘சூடரே செலுலார யமுனாதேவி
    சொகஸல்ல சந்தோஷமுன’– ‘யமுனையின் அழகைப்பாருங்களடி’ எனும் பந்துவராளி ராகப்பாடலில் “சல்லநி மலயமாருதமே கிருஷ்ண ஸ்வாமினி கூடுநதி சதமே”- ‘நாம் கிருஷ்ணனைக் கூடுவது திண்ணம்’ என்று தம் அழகில் கர்வம் கொள்கிறார்கள் கோபிகைகள் என்கிறார் தியாகராஜர்.
கிருஷ்ணனையும் (அவன் பெருமைகளை இகழ்ந்து) அவமதிக்கத் துணிகின்றனர். (இந்த இசைநாடகம் பக்தி உள்ளம்கொண்ட ஒரு மகானால் இயற்றப்பெற்றது என நினைவில் கொள்க).
அவன் செய்த செயல்களுக்காகப்பழிவாங்க அவனை உடன் அழைத்து வந்துள்ளதுபோல் நடந்து கொள்கின்றனர்.
‘ஜலகமாடுவேள வலுவலு தா சி மம்மலயிம்பக லேதா?’- (முன்னொரு சமயம்) நாங்கள் நீராடும்போது எங்கள் ஆடைகளை ஒளித்துவைத்து நீ எங்களை வருந்தச் செய்யவில்லையா?- என்று ஒரு சௌராஷ்டிர ராகக் கீர்த்தனையில் அவர்கள் கேட்கிறார்கள்! பிறகு,  கிருஷ்ணனுடன் மனம்போனபடியெல்லாம் விளையாடி மகிழ்கிறார்கள். கிருஷ்ணன் நம் மோகவலையில் அகப்பட்டுக் கொண்டான் என்று கூறி அகந்தை கொள்கிறார்கள்.
அனைத்தும் அறிந்த கிருஷ்ணன் இதனை அறியாதிருப்பானா? ஆகவே ஒரு நாடகத்தை நிகழ்த்தி அவர்களைத் தம்நிலையை உணரச் செய்கிறான். படகு நடு ஆற்றில் சேர்ந்ததும்  மழையையும் புயலையும் உருவாக்குகிறான். மழை, மின்னல் இவற்றால் கோபிகள் பயத்தில் தவிக்கின்றனர்; படகில் நீர்புகுகிறது. அது மூழ்கிவிடுமே எனும் பயத்தில் தங்கள் அணிகலன்களை யமுனைக்குக் காணிக்கையாகக் கொடுத்தும், ஆடைகளையே ஒவ்வொன்றாகக் கழற்றித் துளைகளை அடைக்கவும் முயலுகின்றனர் கோபியர். சிறுவனான கிருஷ்ணனைவேறு அழைத்து வந்துவிட்டோமே எனும் பச்சாதாபத்தில் உருகுகின்றனர் அவர்கள்.
அல்லகல்லோல மாயேனம்மா யமுனாதேவி மாயார்த்துதெல்ல தீர்ப்பு மாயம்மா– என்ற அழகான பாடல்; ‘அல்லகல்லோலமாயிற்றே யமுனாதேவியே!  எங்கள் துயர்களைத் தீர்த்துவையம்மா!’
கோபிகளை இவ்வாறு மேன்மேலும் தவிக்கவிட்டுப் பின் முழுவதும் நிர்வாணமாகிக் குளிரிலும் மழை, புயலிலும் தவிக்கும் அவர்கள், அவனையன்றி வேறு புகல் இல்லை எனப் பூரணசரணாகதி ( total surrender) அடையும்போதில் கிருஷ்ணன் அவர்களை மன்னித்தாட்கொள்கிறான்.
அவர்களும் தம்நிலை உணர்ந்து அவனை அலங்கரித்து “கந்தமு புய்யருகா,” எனப்பாடி மகிழ்ந்து சந்தனம்பூசி, மலர்களால் பூஜித்து வணங்குவதாக இந்த இசைநாட்டிய நாடகம் முடிவடைகிறது.
(இந்தக் கீர்த்தனைகளின் அருமையான ஒலிப்பதிவு திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் அற்புதமான குரலினிமையில் குறுந்தகடாக வெளிவந்துள்ளது).
இதுபோலக் கிருஷ்ணனின் குழந்தைப்பருவத்து, வாலிபப்பருவத்து விளையாட்டெல்லாம் பாடல்களாகவும் , பிரபந்தங்களாகவும், இசைநாடகங்களாகவும் உருப்பெற்று இந்தப் பாரத தேசம் முழுமையும் வலம்வந்து தேசமே அவனை கொஞ்சிக் காதலித்துக் கொண்டாடுகிறது. ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், நாராயணதீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பற்றி நாமெல்லாரும் அறிவோம். ஒடிஸி நடனத்தின் முக்கிய அங்கமே ச்ருங்கார ரசம் ததும்பும்  ஜயதேவரின் அஷ்டபதிகள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
சிறிது ஆழ்ந்து சிந்தித்தோமேயாயின் இதன் பொருள் நமக்கு நாம் வேண்டுமளவிற்கு விளங்கலாம்!
 

    கட்டுரைக்கு உதவிய நூல்: ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்- பதிப்பாசிரியர்:  டி.எஸ். பார்த்தசாரதி.

 

                (கிருஷ்ணலீலைகள் வளரும்)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.