1980களில் வளர்ந்தவர்கள் நாங்கள். முதன் முதலாக எப்போது பரிசோதனை சாலைக்குள் நுழைந்தோம் என்று யோசித்து பார்த்தால் அது +1 அல்லது +2 இல்தான். அதற்கு முன்னால் எப்போதாவது ஏதாவது ஒரு ஆசிரியருக்கு ஒரு ஆர்வக் கோளாறால் ஏதாவது ஒரு பரிசோதனையை செய்து காட்டுவார். ஆனால் அதெல்லாம் ரொம்ப அபூர்வம். சரியாக +1 அல்லது +2 இல்தான் அறிவியல் பரிசோதனைகளை செயல்முறைகளாக செய்ய ஆரம்பித்தோம்.
அதற்கு முன்னால் எல்லாமே ‘செய்யப்பட்டதாக’த்தான் புத்தகங்களில் இருக்கும். ஆனால் அதை அப்படி மனப்பாடம் செய்துவிட வேண்டும். அதை ’செய்ய வேண்டும்’ என்று கேட்கக் கூடாது. கேட்டால் என்ன கிடைக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இது ஏன் என்று யோசித்து பார்த்தால் அதன் காரணத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் சென்றுதான் பார்க்க வேண்டி இருக்கிறது.
பிரிட்டிஷ் கல்வி இந்தியாவில் இரண்டு உத்தேசங்களைக் கொண்டிருந்தது: ஒன்று: ஐரோப்பியா மானுட பண்பாட்டுக்கு வழங்கும் அருட்கொடைகளை குறித்து இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு: இந்தியர்களிலிருந்து நல்ல குமாஸ்தாத்தனமான கூலிகளை உருவாக்குவது. இதில் இந்தியர்கள் தங்கள் அறிவை புத்தாக்கத்துடன் செலவிடக் கூடிய ஒரே துறையாக இருந்தது சட்டத்துறைதான். அன்றைய இந்தியாவின் அனைத்து அறிவாளிகளும் சொல்லி வைத்தது போல பாரிஸ்டர் படிப்பும் சட்டபடிப்பும் படிக்க போனது அந்த காரணத்தால்தான் இருக்க வேண்டும்.
இந்தியாவில் நவீன கல்வி அமைப்பில் அறிவியலை கற்பிப்பது என்பது உண்மையைத் தேடும் ஆர்வத்தை இந்தியர்களிடம் வளர்ப்பதற்கு அல்ல. மாறாக அவர்களை தொழில்நுட்ப கூலிகளாக மாற்றுவதற்கு மட்டும்தான். இதை பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி (கூடவே இந்தியாவுக்கான ஆலோசனை கமிட்டி) சுற்றறிக்கை சொல்கிறது: ‘இந்தியர்கள் தூய அறிவியலுக்கான தேடல்களை பிரிட்டிஷாரிடம் விட்டுவிட வேண்டும். அறிவியலை பயன்படுத்துகிற விஷயத்தை மட்டும் அவர்கள் தெரிந்து கொண்டால் போதும்.” செயல்முறை அறிவியல் என்பதே 1895 இல் கூட கல்கத்தா போன்ற முதன்மை நகரங்களில் இருந்த கல்லூரிகளில் முதுகலை வகுப்பில்தான் புகுத்தப்பட்டது. ஆக நாங்கள் பள்ளிகளில் படிக்கும் போது செயல்முறை அறிவியல் பள்ளிக் கூட அளவில் புகுத்தப்பட்டு நூறு ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.
இதனால் விளைவு என்ன? நம் அறிவியல் முழுக்க முழுக்க மேல்நாட்டு எடுத்துக்காட்டுகளால் ஆனது. எந்த முக்கியமான ஆராய்ச்சிக்கும் கண்டடைவுக்கும் அங்கு கொடுக்கப்பட்ட வரலாற்று எடுத்துக்காட்டுகள் மேற்கத்திய நாடுகளில் உள்ள விஷயங்கள்தான். அறிவியல் என்றாலே அதற்கு இந்தியாவுடன் வேர் பிடித்த தொடர்பு இல்லை என்பதாகத்தான் நமக்கு அறிவியல் சொல்லிக் கொடுக்கப்பட்டது. எனவே செயல் முறை அறிவியல் என்பது வேறு வழியே இல்லாமல் +1, +2 (அல்லது பழைய இண்டர்மீடியட்) வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. செய்து கண்டுபிடித்து மகிழ்ந்து கண்டடைய வேண்டிய அறிவியலை மனப்பாடம் செய்து வளர்ந்தோம்.
ஆனால் இப்போது ஒரு புதிய தலைமுறை உருவாகிறது.
ஐந்தாம் வகுப்பிலேயே மாணவர்கள் ‘ப்ராஜெக்ட்’ செய்கிறோம் என்கிறார்கள். அப்படி ஒரு வார்த்தையையே எங்கள் கல்லூரி காலங்களில்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அதை கூட பொதுவாக பொறியியல் மாணவர்கள்தான் அதை சொல்வார்கள். இப்போதோ ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். கால்குலேட்டரில் இருக்கும் சோலார் பானல்களை கழற்றி குட்டியாக சோலார் ரோபாட்டை செய்ய முயற்சி செய்யும் மாணவர்களை பார்க்கிறோம். ப்ரவுஸிங் செண்டரில் கூட்டமாக சென்று யூட்யூபில் கண்ட படங்களை பார்க்காமல் என்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என அறிவியல் கல்வி பிரபலங்கள் சொல்லும் ப்ராஜெட்களை செய்யும் மாணவர்களை பார்க்கிறோம்.
இன்று குறைந்தது சில அரசு பள்ளிகளிலாவது அரவிந்த் குப்தா என்கிற பெயர் பிரபலமாகியிருக்கிறது. பள்ளி ஆசிரியர்களும் வேறு வழியே இல்லாமல் இந்த மாதிரி செயல்முறை அறிவியல் விஷயங்களில் ஈடுபாடு காட்ட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
எப்போதிருந்து இந்த மாற்றம்?
இதை யோசித்தால் ஒன்று தெரிகிறது. எங்களிடம் கறாரான தரவுகள் இல்லை. 2000-களில் வளரும் பதின்ம சிறுவர்களின் பெற்றோர்கள் நாங்கள். 1980-90களின் அறிவியலை மையமாகக் கொண்டு கல்வி கற்றவர்கள். எங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் விவாதித்ததையே இங்கு பகிர்ந்து கொள்கிறோம். புள்ளிவிவரங்களைத் தேடுவோர் இதை மேலும் உறுதி செய்யலாம். சரி பார்க்கலாம்.
1998-க்கு பிறகு இந்த ஒரு அலை எழுந்தது என்றே தோன்றுகிறது. 1998 இல் பொக்ரானில் இந்தியா செய்த அணு பரிசோதனைக்கு பிறகு அப்துல் கலாம் என்கிற பெயர் இந்தியாவில் முழுக்க பிரபலமாகியது. அவர் எழுதிய ’அக்னி சிறகுகள்’ தொடர்ந்து அதிக விற்பனையாகும் நூல்களில் ஒன்றாக இருக்கிறது. அதே போல அணு குண்டு பரிசோதனையை ஒட்டி எழுந்த ஒரு தேசிய எழுச்சி பேரலையை அவர் நன்றாக பயன்படுத்தி கொண்டார். அவரும் யக்ஞ சுந்தர ராஜனும் இணைந்து எழுதிய ’இந்தியா 2020’ அறிவியல் தொழில்நுட்பத்தையும் நம் சமுதாயத்தையும் ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கான மக்கள் திட்டம் ஒன்றை இந்தியாவின் படிப்பறிவு கொண்ட சமுதாயத்தின் முன் வைத்தது.
அதை படிக்கிற எவருக்கும் அவர் வெறும் ராணுவ தொழில்நுட்பவாதி அல்ல என்பது தெரியும். தொழில்நுட்பத்தை மானுட நலனுக்காக பயன்படுத்த வேண்டுமென்பதை அவர் சொன்னார். ராக்கெட் தொழில்நுட்பத்தை வைத்து போலியோ தாக்கிய குழந்தைகளுக்கு எப்படி காலிபர்கள் தயாரிப்பது என்பதை அவர் சொன்னார். அவர் ஆற்றிய உரைகளில் தொடர்ந்து அறிவியலை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை சொன்னார். அதற்கு பள்ளிகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை சொன்னார். நம் கண்கள் முன்னால் பள்ளிகள் தோறும் கலாம் பெயரில் அறிவியல் கழகங்கள் உருவாவதை கண்டோம். என்ன ஒரு தலைகீழ் மாற்றம்! அறிவியல் படிப்பில் கூட தூய அறிவியல் ஆகாது எனவே ரொம்ப பின்னாட்களில் தொழில்நுட்ப பயிற்சி மட்டும் இந்தியர்களுக்கு போதும் என்கிற காலனிய மனநிலை மாற ஒரு கலாம் தேவைப்பட்டிருக்கிறார். இப்போது தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ச்சி என்பதற்கான அடிப்படையில் அறிவியல் அணுகப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அதை இந்திய மனது உணர கலாம் என்கிற ஆளுமை உருவாகி வந்திருக்கிறார்.
இன்றைக்கு அறிவியல் கண்காட்சிகள் ஒரு பெரிய ஃபாஷனாகியிருக்கின்றன. ஒரு காலத்தில் கையை காலை ஆட்டி அடுக்கு மொழியில் பேசுவதை நம் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பேச வைப்பது ஒரு ஃபாஷனாக நமக்கு இருந்தது. அதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. இங்கும் ஒன்றிரண்டு அறிவியல் ‘ப்ராஜெட்கள்’ எல்லோராலும் மீண்டும் மீண்டும் செய்யப்படலாம். ஆனால் பல பள்ளிகளில் ஒரு பெற்றோராக பார்வையாளராக நான் பார்க்கும் போது, அண்டை வீட்டுக் குழந்தைகள் ‘நாங்க ப்ராஜெக்ட் செய்யப் போகிறோம்’ என ஞாயிற்று கிழமைகளில் சேர்ந்து கலந்து பேசி செயல்படுவதை பார்க்கும் போது நம் கல்வி முறை மாறுவதை காணமுடிகிறது.
கொஞ்சம் யோசிக்கும் போது மற்றொன்றும் தோன்றுகிறது. சோவியத் யூனியனுடனான விண்வெளி போட்டி அமெரிக்காவில் பெரும் கல்வி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒருவிதத்தில் எந்த வாழ்க்கை முறை தெரியும் வெளிப்படையான விளைவுகளை காட்டப்போகிறது – எவர் முதலில் சந்திரனில் இறங்க போகிறார்கள்? ஸ்புட்னிக் உண்மையில் மார்க்ஸியத்தின் வெற்றியை கூறுகிறதா? என்பது போன்ற கேள்விகள் அலையடித்தன. அமெரிக்கா தான் இந்த அடிப்படையான போராட்டத்தில் வெல்லவே தன் நாட்டின் அறிவியல் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டி வந்தது. சோவியத் யூனியனுடன் விண்வெளி போட்டியில் இறங்க வேண்டிய அளவுக்கு அமெரிக்க கல்வி முறை போதுமான அறிவியலாளர்களை உருவாக்கவில்லை என்பது பெரிய அளவில் பேசப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் அறிவியல் மற்றும் கணித கல்விக்கு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்க ஏற்பாடுகளை செய்தது. ஏறக்குறைய இதனை ஒத்த ஒரு உணர்ச்சிகரமான மாற்றத்தை அல்லது மாற்றத்துக்கான சாத்தியத்தை கலாம் நமக்கு செய்து கொடுத்திருக்கிறார்.
இதுதான் கலாம் நமக்கு கொடுத்த மிகப் பெரிய கொடை என நாங்கள் கருதுகிறோம். அவர் ஐன்ஸ்டைன் போல அறிவியலாளரா? டார்வின் போல ஒரிஜினலாக எதையாவது கண்டடைந்தாரா? பிறகு ஏன் இந்தியா இவரை கொண்டாடுகிறது என கேட்பவர்களுக்கு இதுதான் பதில். அவர் நம் கல்விமுறையின் பார்வையை அடிப்படையில் மாற்றியிருக்கிறார். தொழில்நுட்பத்திலிருந்து மக்கள் நலன் உருவாகிறது. நல்ல தொழில்நுட்பம் நல்ல அறிவியல் கல்வியிலிருந்தும் நல்ல மதிப்பீடுகளிலிருந்தும் உருவாகிறது என்பதை எப்படியோ நம் கல்வி அமைப்புகளின் ஆணி வேரில் உள்ளேற்றிவிட்டார். அமெரிக்காவை போல அரசாங்கம் இதற்காக நிதி ஒதுக்கவில்லை. ஆனால் இது ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. குழந்தைகள் இன்று பள்ளி அளவில் அறிவியல் கண்காட்சிகளை நடத்துவது மிக அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதிலும் பல குறைகள் இருக்கலாம். வழக்கமான ஏமாற்றுத்தனங்கள் இருக்கலாம். ஆனால் இன்று ஒரு தேவை உணரப்படுகிறது. நம் குழந்தைகளின் அறிவியல் கல்வி செயல்முறை விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற தேவை உணரப்பட்டுள்ளது.
காலனியாதிக்கத்துக்கும் மேற்கத்திய பண்பாட்டு மேலாதிக்கத்துக்கும் உட்பட்ட ‘மூன்றாம் உலகநாடுகள்’ என அழைக்கப்படும் நாடுகளின் அறிவியல் கல்விக்கு, இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த ‘கலாம் விளைவு’ ஒரு நல்ல எடுத்துக்காட்டு மாதிரியாக இருக்கக் கூடும். மெல்ல மெல்ல மாணவர்கள் உள்ளூர் தாவரங்களை பார்க்கத் தொடங்குவார்கள். இக்கட்டுரையாளர்களில் நண்பர் முனைவர் உமையொருபாகன்,. வேதியியலாளர். நூருல் இஸ்லாம் கல்லூரி முதல்வர். அவர் ஒரு உரையாடலில் சொன்னார் ”செம்பருத்தி பூ ரசத்தை ஏன் டைட்ரேஷனில் எண்ட்பாயிண்ட் இண்டிக்கேட்டராக பயன்படுத்தக் கூடாது என நம் மாணவர்கள் யோசிக்கிற காலம் வருமா?”. நிச்சயமாக விரைவில் இந்த கேள்விகள் மாணவர்களிடம் எழும். இப்போதே ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் உள்ளூர் மாணவர்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் பலவற்றை குறித்து செய்திகள் வருகின்றன. இவற்றில் பத்து சதவிகித கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படும் நிலையை எட்டினால் கூட ஒரு கணிசமான தொழில்நுட்ப புரட்சியை காணலாம்.
விரைவில் இந்தியாவில் அரசு பள்ளிகளில் விண் தொலைநோக்கிகள், வானவியல் கழகங்கள், நுண்ணோக்கி மூலம் தம் மண்ணின் நுண்ணுயிரிகளை அறியவும் ரசிக்கவுமான மனநிலை ஆகியவை ஏற்படும். தேவையான ஜனநாயகப்படுத்துதலை மின்னணு தொழில்நுட்பமும், இணையமும் செய்கின்றன. உத்வேகத்தை கலாம் ஏற்படுத்தியிருக்கிறார். நாம் காண்பது ஒரு மிக நுட்பமான சமூக உளவியல் மாற்றம். அதுவும் மிக அடிப்படையான பள்ளி கல்வி அமைப்பில். நாங்க ப்ராஜெக்ட் செய்யப் போகிறோம் என குழந்தைகள் சொல்லும் போது நாங்கள் அடையாத ஒரு அறிதல் நிலையை எங்கள் அடுத்த தலைமுறை குழந்தைகள் அடைந்துவிட்டன என்பதில் ஒரு மெல்லிய கர்வம் கூட ஏற்படுகிறது. கூடவே ராமேஸ்வரத்தில் ஒரு அடக்கத்தலத்தில் துயில்கின்ற அந்த பரட்டை தலை மாமனிதரிடம் கண்ணீர் மல்கும் நன்றியும் ஏற்படுகிறது.
மிக அருமையான கட்டுரை.
ஆயிரம் பக்கங்கள் புரிய வைக்க முடியாத ஒரு விஷயத்தை இன்று ஒரு அனிமேஷன் புரிய வைத்து விடுகிறது.
இனி வரும் காலங்களில் உண்மையான அறிவியலை நம் மக்கள் கற்று மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறார்கள். எப்படி ஒரு எலெக்ட்ரானிக்ஸ் துறையானது சீனாவை இந்த அளவுக்கு மாற்றியதோ ,அதே மாதிரி ஒரு நேனோ தொழிற்னுட்பமொ அல்லது நுண்ணுயிரியல் தொழில்நுட்பமோ இந்த இந்தியாவை மாற்றும் , அதே நேரத்தில் நம்மை பிடித்த சனியனான அரசியல் வியாதிகளும் ஒழிந்து ஒரு சுபிட்சமான தேசம் உருவாகும்.