ஜெனரலும் அந்தச் சிறிய டவுனும்

மூலம்        :   சென் ஷி – சு
ஆங்கிலம்  :   பெயர் இல்லாத மொழி பெயர்ப்பு [அநாமதேயம் ]
தமிழில்      :   தி.இரா.மீனா
சென் ஷி – சு ஜியான்சியில் 1948  ல் பிறந்தவர். 1972 ல் எழுதத் தொடங்கிய வர்.இலக்கிய ஆராய்ச்சியில் தனி ஈடுபாடு உடையவர். இவருடைய ’தி ஜெனரல் அன்ட் தி ஸ்மால் டவுன் ’மற்றும் ’தி அங்ரி வேவ்ஸ் ’ ஆகிய சிறுகதைகள் தேசிய விருது பெற்றவை.

chinese_general

எங்களுடையதைப் போன்ற ஒரு சிறிய டவுனில் எந்தச் சிறிய மாறுதல் என்றாலும் அது பலருடைய கவனத்தையும் ஈர்த்து விடும்.
“ஹலோ !ரிங்வார்ம் மலை  அடிவாரத்தில் உள்ள சிறைச்சாலை அருகே ஒரு புதிய வீடு கட்டப் படுகிறதே. ஏன் என்று யாருக்காவது தெரியுமா?அது யாருக்குச் சொந்தமானது?ஒரு வேளை சிறைச்சாலையைப் பெரிது படுத்து கிறார்களோ?”
ரிங்வார்ம் மலையடிவாரம் என்பது டவுனிலிருந்து ஆயிரம் மீட்டர் தொலை வில் உள்ளது. அது  கல் மண் பிரதேசம் போன்றது.
“நீயும் முட்டாள்தானா? ” அங்கிருந்த கடையின் சொந்தக்காரர் கடையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்து கேலியாகக் கேட்டார். அவர் ஒரு நாவிதர். வழுக்கைத் தலையாக இருந்த போதும் இருக்கும் முடியை எண்ணெய் தடவி வாரியிருந்தார்.
அந்தச் சிறிய டவுனில் அவர் பிரபலமானவர். எல்லாச் செய்திகளையும் உடனடியாகப் பரப்புபவர்.கடையில் இருந்த போதும் டவுனில் நடக்கும் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.எந்தச் செய்தியாக இருந்தாலும் அவருக்கு உடனடியாகத் தெரிந்து விடும்.ஜனங்கள் தமக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்லும் போது “ நாவிதர் சொல்வது போல ” என்றே ஆரம்பிப்பார்கள். எந்தச் செய்திக்கும் நாடகம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பது அவர் வழக்கம். ஏதாவது முக்கியமான விஷயம் அவருக்குத் தெரிந்து விட்டால்  அதைத் தன் கடையில் இருந்து கொண்டு சொல்ல மாட்டார். கடையை விட்டு வெளியே வந்து குறுக்குச் சந்துகளில் எல்லாக் கடைகளும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்று கொண்டு அதைச் சொல்வார்.
“பந்தயம் கட்டுகிறேன்.உங்கள் யாருக்கும்  தெரியாது. அது ஜெனரலுக்கான வீடு. அவர் சீக்கிரம் இங்கு குடி வரப் போகிறார்.”
“என்ன ? ஜெனரலா?நம்முடன் வந்து இருக்கப் போகிறாரா?”
அந்தச் செய்தி சிறிது  குழப்பத்தைக்  கிளப்பியது. மிகவும் பின் தங்கிய பகுதியில் வசிக்கும் எங்களுக்கு ஜெனரல் போன்றவர்கள் வருவது எல்லாம்        பரபரப்பான செய்தி.இன்னும் சொல்லப் போனால் அது எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அந்தஸ்து.
அவர் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு அந்த உற்சாகத்தை எச்ச ரிப்பது போலச் சொன்னார் ”உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளா தீர்கள்.அது ஒன்றும் பெரிய விஷயமில்லை”அங்கு இருந்தவர்களுக்கு என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.
“இது பரம ரகசியம். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்.யாரிடமும் வெளியில் சொல்ல வேண்டாம்.ஜெனரல் வேலையில் இருந்து நீக்கப் பட்டார். அவர் இங்கு புகலிடத்திற்கு  வருகிறார்.”
“புகலிடத்திற்கா! ஏன்?”
“அவர் ஒரு துரோகி “
ஜனங்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள்.தங்கள் கௌரவம் தாக்கப் பட்டது  போல உணர்ந்தனர்.
“பெயருக்கு அவர் ஓய்வு பெற்ற அதிகாரி” அந்த நாவிதர் இன்னும் ஜனங்களைத் தன் பக்கம் கவர விரும்பினார்.”அவர் இன்னும் ஜெனரல் பதவியில் தான் இருக்கிறார்.”
பிறகு மிக மெல்லிய குரலில் சொன்னார்.”ராணுவ பதவிப் பெயர் அல்லது கட்சியின் உறுப்பினர் அந்தஸ்து என்ற இரண்டில் ஒன்றைத் தான் இப்போது அவர் தக்க வைத்துக் கொள்ள முடியும்.நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான்.அவர் ஒரு அதிகாரி.கட்சி உறுப்பினரும் கூட. அவர் ராணுவத்தில் இருப்பதை ஏன் விரும்புகிறார் என்று  நீங்கள்  நினைக்கிறீர்கள்? ” தங்களுக்குள் அந்தக் கேள்வியைப் பற்றி அவர்கள் யோசிக்கட்டும் என்று சட்டென்று பேச்சை நிறுத்தினார்.என்ன சொல்வது என்று தெரியாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
போர்ட்டர் வேலை செய்யும் ஓர் இளைஞன்  கூட்டதிற்குள் இருந்து வெளியே வந்து அந்த அமைதியைக் கலைத்தான்.”அவர் தன் கட்சி உறுப்பினர் பதவி யைத் தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்  என் அபிப் ராயம்” என்றான். அது கௌரவம் அல்லவா? என்ற எண்ணத்தில் சிலர் அவனை ஆதரித்தனர்.
நாவிதர் அது ஏற்க முடியாதது என்பது போல உதட்டை மடித்துக் கொண் டார்.
“இல்லை. ராணுவத்தில் நீடிப்பது தான் சரியானது ”ஒரு வயதான டெய்லர் சொன்னார்.”ஒரு மனிதனுக்கு  சாப்பாட்டுக்குப் பணம் வேண்டும்.பணம் இல்லாவிட்டால் எப்படி வாழ முடியும்?அவரிடம் சக்தி இருக்காது. அவரைப் போன்ற ஒரு வயதான மனிதன் எப்படி வேலை செய்ய முடியும்?நீங்கள் செய்வீர்களா? ”
“நீங்கள் சொல்வது சரிதான். நல்ல மூளை உங்களுக்கு!” நாவிதர் அவர் தோளைத் தட்டிச் சொன்னார்.பாராட்டில் டெய்லர் முகம் சிவந்து போனார்.
“அப்படித்தான் உயர் அதிகாரிகள் நினைத்து அவருக்கு ஓய்வு ஊதியம் கொடுத்தனர்.ராணுவச் சீருடை அணியவும் அனுமதி கொடுத்துள்ளனர்.அவர் மிகப் பெரிய அதிகாரி என்பதால் சம்பளம் அதிகம் என்று உனக்குத் தெரியாதா?” என்று பக்கத்தில் இருந்த போர்ட்டரைப் பார்த்துச் கேட்டார்.
மக்கள் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பணம் என்ற பேச்சு வந்தவுடன் தான் கடையைத் திறக்காதது நாவிதருக்கு நினைவுக்கு வந்தது.தன் கடைக்குக்  கிளம்பினார்.
அப்போது அவரைச் சிலர் வழி மறித்து”ஜெனரல் எப்போது இங்கு வருவார் என்று சொல்லுங்கள் “ என்றனர்.
“உங்களுக்குக் கொஞ்சமும் மூளை இல்லையா?வீட்டைப் பார்க்கவில் லையா? அது  அரை குறையாக இருக்கிறது.கட்டி முடிக்கப் பட்டவுடன் அவர் வந்து விடுவார்.” என்று பொறுமை இழந்து சொன்னார்.
ஜெனரலின் நிலைக்காக வருத்தப் பட்டுத் தங்களுக்குள் பேசியபடி ஜனங்கள் கலைய மனமில்லாமல் பிரிந்தனர்.இந்தச் செய்தி நகரத்தின் எல்லாப் பகுதிக ளிலும் பரவியது.

அந்த டவுனில் இருக்கும் இரண்டு தெருக்கள் ஒரு ஜீப் தாராளமாகப் போகும் அளவுக்கு மட்டுமே இடம் கொண்டது. தெருக்களின் இரு பக்கத்து பாதைகளும் கூழாங்கற்களோடு இருந்தன. வீடுகளின் வெள்ளை வர்ணம் உதிர்ந்திருந்தது.இவை எல்லாம் அந்த இடத்தின் பழமையைக் காட்டின.
அந்த டவுனில் முழங்கால் அளவுக்கான தண்ணீர் உடைய ஒரு குளம் இருந்தது.துரதிர்ஷ்டவசமாக அதைச் சுற்றிலும் ஏராளமான கழிவுகள் குவியலாக இருந்தன.
ஜெனரலை முதலில் பார்த்த போது மக்கள் அதிர்ந்து போனார்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக நினைத்தார்கள் ’இந்த ஜெனரல் டிஸ்மிஸ் செய்யப் பட்டதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.திறமையில்லாத இவர் போன்றவர்களை ஜெனரல் என்று சொல்வது கூட அசிங்கம்!’.
ஜெனரல் என்பவர் எப்படி இருப்பார்?அந்தப் பதவியில் இருந்த யாரையும் நாங்கள் பார்த்ததில்லை. ஜெனரல் என்பவர் நரைமுடி உடையவராக, நேரான புருவத்துடன், தொப்பையுடன் இருக்க வேண்டும். உயரமாகவும், பலசாலியாகவும்,பார்க்கக் கவர்ச்சியாகவும்,சினிமாவில் வருபவரைப் போலவும் இருக்க வேண்டும்.ஆனால் இந்த மனிதர் குட்டையாகச் சுருங்கிப் போய் இருந்தார்.தவிரக் கொஞ்சம் கூன் போட்டு இருந்தார்.ஒரு கால் சிறிது வளைந்தும் இருந்தது.
தன் தோற்றத்தில் அவருக்குத் திருப்தி இல்லை. ஆனால் தான்  நன்றாக இருப்பதாக காட்டிக்  கொள்ள வேண்டும் என்று நினைத்து   மேக்கப் போட்டிருந்தார்.அவர் எப்போது தெருவில் நடக்கும் போதும் அவர் சீருடை இஸ்திரி போடப் பட்டு மடிப்பு கலையாமல்  இருந்தது.ஒரு சிப்பாயைப் போல் இருந்தார்.அவர் தொப்பியில் இருந்த சிவப்பு நட்சத்திரம் மற்றும் காலரில் இருந்த இரண்டு சிவப்பு முத்திரைகளும் மிகப் பிரகாசமாக இருந்தன.பருவநிலை எப்படிப் பட்டதாக இருந்தாலும் அவர் தன்  காலர் பட்டன்களைப் போடத் தவறுவதில்லை. சண்டையில் பாதிக்கப்பட்டு ஒரு கால் வளைந்து இருந்த போதும் அவர் நிதானமாகவே நடந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் பட்ட அவமானத்தை நினைவூட்டுவதாகவே இவை எல்லாம் இருந்தன.
நாங்கள் அவரை அடிக்கடி கண்காணிப்போம்.அதில் பாராட்டோ ,இகழ்ச் சியோ இல்லை. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் . அவர் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை.வந்த இரண்டாம் நாளில் இருந்தே கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் நடந்தார்.
கையில் பளபளக்கும் மரக் கம்புடன் தெருவின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு வருவார்.அவர் சீனா முழுவதும் நடந்திருக்க வேண்டும் என்று யாரோ கேலியாகச் சொன்னார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் சந்தோஷமாக வசிக்கும் டவுனைப் பற்றி பொருத்தம் இல்லாத  சில கருத்துக்களை அவர்  சொன்னார். உதாரணமாக ”கொஞ்சம் பணம் செலவழித்து தெருவின் இரண்டு புறத்திலும் நீங்கள் ஏன் தார்ச் சாலை போடக் கூடாது? ”அல்லது ”குளத்தின் மறுபுறத்தில்  ஒரு பெரிய குழி தோண்டி அதில் ஏன் குப்பைகளைப் போட்டு உரம் ஆக்கக் கூடாது?” என்று கேட்டார். எங்களுடைய புத்திசாலியான வட்டாரத் தலைவர்கள்  ”அதற்கெல்லாம் பணத்துக்கு எங்கே போவது?எங்கள் சம்பளம் எல்லாம் மிகவும் குறைவு”அல்லது”எங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை” என்று சொல்வார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள்.
ஜெனரலைப் பற்றி எங்களுடைய உணர்வுகள் ஒரு கலவையாக இருந்தன. அவர் அவமானப் பட்டிருந்தாலும் அவருக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. அவருடைய அபிப்ராயங்கள் நல்ல நோக்கத்துடன் இருந்தாலும் நாங்கள் யாரும் அவருடன் நட்பு கொள்ளத் தயாராக இல்லை.
எங்களின் மனநிலையை  ஓரளவு புரிந்து கொண்டு விட்ட பிறகு அவர் அபிப்ராயம் சொல்வதை நிறுத்தி விட்டார்.தெருக்களின் சந்திப்பில் தனக்கு என்று ஒரு இடத்தைத் தேர்ந்து எடுத்துக் கொண்டார்.அங்கிருக்கும் ஒரு பழைய கற்பூர மரத்தடியில் ,நாவிதரின்  கடைக்கு எதிரில் மணிக்கணக்காக கையில் குச்சியுடன் நின்றிருப்பார்.எதுவும் பேசாமல் மங்கலான கண்களில் நீர் வர நிற்பார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரி யாது
அவர் நிற்கும் விதம் வேடிக்கையானது.அங்கு கடை  வைத்திருக்கும் வியா பாரிகள் அவரை அடிக்கடி நிமிர்ந்து பார்ப்பார்கள். வழிப்போக்கர்களும் தான்.கண்ணாடிக் கதவின் பின்புறத்தில் இருந்து கொண்டு நாவிதரும் கேலியாகக் கேட்பார்”அவர் யாரைப் போல இருக்கிறார் ?சொல்லுங்கள் ”
“ஒரு காவல்காரன் போல?” யாரோ சொன்னார்கள்.
நாவிதர் தலையாட்டி மறுத்தார்.
“அப்படியானால் ஒரு டிராபிக் போலீஸ் “ மற்றொருவர் சொன்னார்.
அவர் தன் தலையை மறுபடியும் ஆட்டினார். “யாராவது ஹங்கோ போனதுண்டா?சன்மின் சாலையின் எல்லையில் ஒரு  வெண்கலச் சிலை கையில் குச்சியோடு இருக்கிறது.அது இவரைப் போலத்தான் இருக்கும். அப்படியே! ”
ஒரு வெண்கலச் சிலை போல் ஜெனரல் நிற்பதைப் பார்த்து ஜனங்களுக்குப் பழகிப் போய் விட்டது.தெருக்களின் முனையில் இருக்கும் செருப்பு தைப்பவர்கள், வேலையாட்கள் போல அவர் ஆகி விட்டார்.பொதுவாக இவர்களைப் போன்றவர்களைப் சில நாட்களுக்குப் பார்க்க முடியா விட்டால் நாம் எதையாவது இழந்ததைப் போல உணர்வோம்.
ஆனால் அவர் சிலை இல்லை. மனிதன்.புத்தி கூர்மையான மனிதன்.ஒரு நாள் ஜனங்கள் அவருடைய  உறுதியான மனநிலையை உணர்வார்கள்.
ஒரு மாமிசக் கடையின் எதிரில் ஒரு ஞாயிற்றுக் கிழமை சில ரவுடிகள் முதுகில் கூடைகளோடு கேலி பேசிக் கொண்டு  திரிந்தனர்.
ஜெனரல் வழக்கம் போல அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்.அவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்து  அவர் கைகள் லேசாக நடுங்கின.நெற்றி நரம்புகள் கோபத்தால் புடைத்தன. திடீரென்று சாலையைக் கடந்து அங்கிருந்த ஒருவனின் முதுகில் குச்சியால் தட்டினார்.கூட்டத்தின் நடுவே நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த அவன் திரும்பினான்.  கோபம் கொப்பளிக்கும் கண்களை உடைய முதியவரைப் பார்த்தான்.தன் கூச்சலை நிறுத்தினான்.”ஐயா! நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.அவன் புதியதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவன்.அந்த முதியவர் பெரிய உயர் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
“ஒழுங்காக நின்று பேசு!”
கொஞ்சம் பயந்தவனாக அந்தச் சிப்பாய் தன் குல்லாயைச் சரி செய்தான் காலரைச் சரி செய்தான்.பவ்யமாக தலையைக் குனிந்து கொண்டு அவர் காலணிகளைப் பார்த்தான்.
“நீ எந்தப் பிரிவில் வேலை பார்க்கிறாய்?உன் வேலை என்ன?”
“நான் காரிஸன் நிலையத்தில் சமையல்காரனாக இருக்கிறேன்.”
சில கணங்கள் அமைதியில் கழிந்தன.
’அட்டென்ஷன் ’ஜெனரல் கத்தினார். அவருடைய குரல் உடனடியாகக் கூட்டத்தை அமைதிப் படுத்தியது.எல்லாத் தலைகளும் அந்த இரண்டு சிப்பாய்களையே பார்த்தன.அவர்கள் பயந்து நின்றிருந்தனர்.
’டர்ன் லெப்ஃட் !குவிக் மார்ச் ”அவர் இரண்டாவது கட்டளை கொடுத்தார்.
அந்த இடம்  அமைதியானது.ஏதோ சக்தியால் உந்தப் பட்டது போலக் கூட்டம் அமைதியாக வரிசையில் நின்று முன்னேறியது.அவர் ஆயிரக் கணக்கான படைகளை நிர்வாகம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தபடி  அந்த  இடத்தைக் கடந்தது.

இதை அடுத்த சில நாட்களில் நடந்த அதிர்ச்சியான ஒரு சம்பவம் டவுனையே உலுக்கி விட்டது.
ஜெனரல் உடல் நலக் குறைவு ஏற்படும் போதெல்லாம் சிறிது தொலைவில் இருக்கிற ராணுவ ஆஸ்பத்திரிக்குப் போவார்.அது அவருக்குத் தரப்பட்ட மரியாதை.அவசர நிலை வரும் போது அவர் டவுன் ஆஸ்பத்திரிக்குப் போவது வழக்கம்.
ஒரு  நாள் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.மனைவியின் துணையுடன் டவுன் ஆஸ்பத்திரிக்குப் போனார்.அவர் போன போது அங்கு பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு  பெண் அவரிடம் வேகமாக ஒடி வந்து அவர்  கையைப் பிடித்துக் கொண்டாள். ”ஐயா! என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்! நான் பல மைல்கள்  நடந்து இங்கு காலையிலேயே வந்து விட்டேன். ஆனால்..”
உள்ளே அவ்வளவாக வெளிச்சம் இல்லை.என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.ஜெனரல் சிறுவனின் தலையைத் தொட்டுப் பார்த்தார். கொதித்தது. ”சீக்கிரம்!இவனை உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்!”சத்தமாகச் சொன்னார்.பிறகு வேகமாக டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்.அங்கிருந்த டாக்டரிடம்”ஒரு அவசரகேஸ்!” என்று படபடப்போடு சொன்னார்.
டவுன் மேயரின் மனைவிதான் அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்.அவள் வேலை, தகுதி , தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் ஆகியவை டவுனில் அவள்  ஒரு முக்கிய பெண்மணி என்று காட்டியது.அவர் உள்ளே போன போது அவள் தன் உறவினரோடு அவளுடைய  மகளின் வரதட்ச ணையைப்  பற்றி வம்பளந்து கொண்டிருந்தாள்.பேச்சு சுவாரஸ்யத்தில் தன் ஸ்டெதஸ்கோப்பை எடுக்க மறந்து விட்டாள்.ஜெனரல் உள்ளே வந்ததைப் பார்த்ததும் கோபமாக ” முதலில் பதிவு செய்ய வேண்டும்” என்றாள். பிறகு தன் உறவினரைப் பார்த்துச் சிரித்தாள்.
“அவன் முன்பே பதிவு செய்து விட்டான்!”
“அப்படியானால் நீங்கள் காத்திருக்க வேண்டும்”
“அவன் முதலில் பதிவு செய்தவன்”
அவள் திரும்பினாள் ”வாங்,நீ டோக்கன் எண் ஒன்றைக் கூப்பிட்டாயா?”
ஊசி குத்திக் கொண்டிருந்த நர்ஸ் “உம். கூப்பிட்டேன்”என்றாள்.
டாக்டர் அந்த ஏழைப் பெண்ணைப் பார்த்தபடி “உன் எண்ணைக் கூப்பிட்ட போது  நீ வரவில்லை. திரும்பவும் நீ வரிசையில் தான் காத்திருந்து வர வேண்டும் ”என்றாள்.
“நான் இங்குதான் இருந்தேன். பையனுக்கு நிமோனியா என்று எங்கள் ஊர் டாக்டர் சொன்னார் ”அந்தப் பெண் இயலாமையாலோ என்னவோ அழுகையை அடக்க முடியாமல் சொன்னாள்.
“நீங்கள் கூப்பிட்டது அவள் காதில் விழவில்லை போல இருக்கிறது”ஜெனரல் சொன்னார்.
“அவளுக்கு  எங்கள் சட்டதிட்டங்கள்  பற்றித் தெரிய வேண்டும். ஆஸ்பத்தி ரிக்கு என்று சில விதிகள் இருக்கின்றன.அதை நாங்கள் கடைப் பிடிக்க வில்லை என்றால் பிரச்னைதான் .இல்லையா? ”ஸ்டெதஸ்கோப்பைக் கழற்றி மேஜையில் வைத்து விட்டு ஜெனரலைப் பார்த்தாள்.
”ஆனால் இது அவசர கேஸ்.நீங்கள் இத்தனை  கண்டிப்பாக இருக்கக் கூடாது. இந்த நோயாளியின் எண் இப்போது என்ன?”உறவினரைச் சுட்டிக் காட்டி ஜெனரல் கேட்டார்.
“ஓ! நீங்கள் பிரச்னை செய்ய வந்திருக்கிறீர்கள்?நீங்கள் இந்தக் குழந்தையின் அப்பாவா? தாத்தாவா? ”
“உங்களுக்கு வெட்கமாயில்லையா?”
“என்ன?வெட்கமா?நான் ஏன் வெட்கப் பட வேண்டும்?நான் என்ன கட்சி எதிரியா , துரோகியா? ”
ஜெனரல் தன் குச்சியை உயர்த்தினார்.
அந்தப் பெண் கத்தியவாறு தன் தலையை கைகளால் மறைத்துக் கொண் டாள்.
அந்த அறை நிசப்தமானது.அவள் உறவினர் வெளியேறி விட்டாள். யாருக் கும் ஜெனரலின் குச்சியைப் பறிக்கத் தைரியம் வரவில்லை.அது மேலே சுழன்றபடி இருந்தது.டாக்டரை அது தாக்கும் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.
ஆனால் அந்தக் குச்சி விழவில்லை.அதற்கு  பதிலாக குச்சியைத்  திருப்பி இரண்டாக ஒடித்தார்.
“வீட்டில் ஏதாவது மருந்து இருக்கிறதா?” மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
அவர் நிமோனியாவுக்கான மருந்தைத்தான் கேட்கிறார்  என்று புரிந்து கொண்டு அவள் தலையாட்டினாள்.
“நீ என்னை நம்புகிறாயா?அப்படியானால் எங்களுடன் வா!’என்று அந்த பெண்ணிடம் நடுங்கும் குரலில் கேட்டார்.
இந்த விஷயம் வேகமாகப் பரவியது.பயந்தாங்குள்ளிகள் கூடத் தங்கள் அதிருப்தியை இப்போது காட்டத் தொடங்கி விட்டனர்.
நாங்கள் உலகத்தோடு அதிகம் தொடர்பு இல்லாதவர்கள்.அதனால்  எதைப் பார்த்தும் பயப்படும் தன்மை உடையவர்கள்.ஆனால் இந்த சம்பவம்  துல்லியமாக எங்களுக்கு ஒரு தீர்ப்பு சொல்ல உதவியது.மற்றவர்கள் கஷ்டப் படும் போது  ஒரு துரோகி உதவி செய்கிறான். ஒரு கம்யூனிஸ்ட் ஜனங்களை பயமுறுத்துகிறான்.அப்படியானால் அவர்களின்  பெயர் மாறுவது தானே பொருத்தமாகும்?
அதை அடுத்து ஓரிரு நாட்களுக்கு ஜெனரல் மரத்தடிப் பக்கம் வரவில்லை. ஜனங்கள் அவரைப் பற்றி ரகசியமாகப் பேசினார்கள்.அவர் உடல்நிலை மோசமாகி விட்டதாகச் சொன்னார்கள் அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு ராணுவ ஆஸ்பத்திரிக்கு அரசாங்க ஜீப்பில் செல்லும்  உரிமையும் அவர் இழந்தார்.
ஒருநாள் ராத்திரியில் போர்ட்டருடன் சில இளைஞர்கள் ஜெனரலின் வீட்டிற்கு வந்தனர்.அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

1976 ம் வருடம் மோசமாக ஆரம்பித்தது.மிகக் கடுமையான குளிர்.வானம் எப்போதும் மூட்டத்துடன் இருந்தது. தரை வழுக்குவதாகவும், ஈரமாகவும் இருந்தது.எங்களின் சின்ன டவுன் எப்போதையும் விட தனிமைப் பட்டுப் போயிருந்தது.
பருவ நிலை மோசமாக  இருந்தாலும் ஜனங்களுக்கு விதி உதவி செய்வது போல இருந்தது.சில  விஷயங்களால் ஜனங்கள் உற்சாகம் அடைந்தனர்.
புத்தாண்டை அடுத்து நாவிதர் ஒரு நாள் முக்கிய செய்தியோடு வந்தார்.ஜனங்கள் உடனடியாக அவரைச் சுற்றிக் கூடினர்.”உங்களுக்குத் தெரியுமா? ஜெனரல் துரோகி இல்லை என்பது நிரூபணமாகி விட்டது” தொண்டையைச் செருமிக் கொண்டு தொடங்கினார்.
“உண்மையாகவா?எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“நீங்கள் என்னை நம்ப மாட்டீர்களா? ”தன்னைக்  கேள்வி கேட்டவரைப் பார்த்தார்.தன் தகவல்கள் மீது சந்தேகம் வருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. “சரி. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால் அவரையே கேளுங்கள்” என்றும் சொன்னார்.
“நான்தான் அவரிடம்  சொன்னேன்.” போர்ட்டர் பேசிக் கொண்டே முன்னே நடந்தார். முகம் சிவந்திருந்தது. அவருக்கு பலர் மத்தியில் பேசிப் பழக்கமில்லை. ”நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த போது ராணுவத்தில் இருந்து இரண்டு மனிதர்கள் வந்தனர் .ஜெனரல் மீது தவறில்லை என்றும் அந்த வழக்கு சரியாகி விட்டது என்றும் அப்போது சொன்னார்கள்.அவர் எந்த நம்பிக்கை துரோகமும் செய்யவில்லை ”
“ஹூம் ! வேடிக்கைதான்.ஒரு அனுபவம் நிறைந்த புரட்சியாளரை நீண்ட காலம் இப்படி  தண்டித்தது. ரொம்ப நாட்களுக்கு முன்பேயே நான் ஜெனரல் மிக நல்ல மனிதன் என்று சொல்லி வந்திருக்கிறேன். நிஜமாகவே..” நாவிதர் வேதனையாகப் பேசினார்
’உண்மையாகவே துன்பங்கள் மனிதனைச் சோதிக்கின்றன’ஜனங்கள் வருத்தப் பட்டனர்.அவருக்காகப் பரிதாபப் பட்டனர்.
“அப்படியானால் அவர் விரைவில் நம்மை விட்டுப் போய் விடுவாரா? டெய்லர்  சிறிது தயக்கத்தோடு கேட்டார்.
முன் யோசனை உள்ள மனிதன் !ஜெனரலைப்  பற்றி நினைத்து அவர்கள் வருத்தம் அடைந்தனர்.
“சரி! இது இயற்கைதான்.நம் டவுன் மிகச் சிறியது.சிறிய கோயிலில் பெரிய புத்தர் எப்படி இருக்க முடியும்?” நாவிதர் தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே  கேட்டார்.
ஜனங்கள் கவலைப் பட்டனர்.எப்போதும் இப்படித்தான். பிரியும் போதுதான் ஒரு பொருளின் அருமை தெரிகிறது.
“நீங்கள் எவ்வளவு அற்பமானவர்கள் !”கட்சிக்கும் ,மாநிலத்திற்கும் அவர் இப்போது மிக அவசியமாகத் தேவைப் படுகிறார்.நீங்கள் எப்போதும் அவரை வாழ்த்தி வந்திருக்கிறீர்கள். இப்போது அவர் வெற்றி அடைந்த பிறகு இப்படிப் பேசலாமா? இது சுயநலம் இல்லையா?’ போர்ட்டர் கோபத்தோடு கேட்டார்.
ஆமாம்.ஜெனரல் தன்னுடைய  மிக முக்கியமான வேலையைச் செய்ய வேண்டும். எங்கள் பகுதிக்கு  மேயர் ஆகுங்கள் என்று நாம் அவரிடம்  கேட்க முடியுமா? முடியாது.எனவே அவர் நம்மை விட்டுப் போவது சந்தோஷத்திற்கு உரியதுதான்.
ஜனங்கள் மலைப் பகுதியை ஆவலோடு பார்த்தார்கள்.அந்த மரத்தடியில் முன்பு போல வந்து நிற்பார் என்று எதிர்பார்த்தார்கள்.அவரைப் பார்க்க ஏங்கினார்கள்.முடிந்தால் அவருடன் பேசவும் விரும்பினார்கள்.
அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு அதிகமானது. ஜெனரல் நேற்றுதான் வந்திருப்பதால் அவரால் நடக்க முடியாது என்றும்  எல்லோரும் அவரைப் போய் சந்திக்கலாம்  என்றும் யாரோ ஒருவர்  அபிப்ராயம் சொன்னார்.
ஏன் போகக் கூடாது?கூட்டம் ரிங்வார்ம் மலையை நோக்கி நடந்தது.
ஆளரவம் இல்லாமல் ஒதுக்கப் பட்டிருந்த அந்த மலை இப்போது ஜனங் களால் நிறைந்து இருந்தது.அந்கு மரமும் இல்லை. மாடுகளுக்குப் புல்லும் இல்லை.தவிர பல ஆண்டுகளாகத் தூக்கில் இடப்பட்டவர்கள் மட்டும் அங்கு புதைக்கப் படுவார்கள்.சாதாரணமாக அந்த அச்சுறுத்தும் மலைக்குப் போக நிறைய யோசிப்பார்கள்.
ஆனால் இப்போது சிறையின் பின்னால் உள்ள வீடு ஏதோ புனித ஸ்தலம் போல ஆனது.வீட்டின் வாசல் கதவை அடைந்த போது அவர்கள் உள்ளே மிகவும் மெலிந்து இருந்த ஜெனரலைப் பார்த்தார்கள்.எல்லோரும் அங்கேயே நின்றனர். மேலே போக தைரியம் இல்லை. வெட்கமும் ,ஒருவித பயமும் இருந்தன.நாவிதர்  கூடப் பேச முடியாமல் நின்றார்.ஜனங்கள் அவரைப் பேசத்  தூண்டினர்.அதனால் அவர்  ’ஜெனரல் ! ’என்று கூப்பிட்டார். ஆனால் கூப்பிட்டது அவருக்கே கேட்கவில்லை.
அவர்கள் அனைவரையும் பார்த்த போது ஜெனரலுக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆச்சர்யப் பட்டார்.கண்கள் விரிந்தன.அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகு அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ரிங்வார்ம் மலை டவுனில் இருந்து வெகு தூரம் இல்லை என்றாலும் ஜனங்கள் முதல்முறையாக அதைச் சந்தோஷத்துடன் பார்த்தார்கள். ஜெனரலின் வீட்டிற்குப் பின்னால் வரிசையாக குழிகளில் நடப்பட்டிருந்த மரக் கன்றுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
“நிறைய மரங்களை நடப் போகிறீர்களா ஜெனரல் ?”
“ஆமாம்.இந்தச் சிறு குன்றின் நிறத்தை மாற்றப் போகிறேன்.பழ மரங்கள் இங்கு வளர முடியாதது வேதனைக்கு உரியது.என்றாலும் பைன் மரங்களை இங்கு நாம்  வளர்க்க முடியும்.”
“அப்படியானால்  நீங்கள் இங்கு துறவி போல வாழப் போகிறீர்களா?”
“துறவியா?”
“ஆமாம்.”
“ஐயோ! என்ன ஐடியா? ஹா..ஹா.”ஜெனரல்  மனம் விட்டு சிரித்தார்.இருமல் வந்தது. சிறிது வினாடிக்குப் பின்பு தொடர்ந்தார்.”இந்தச் சிறிய கன்றுகள் பெரிய மரங்களாக வளரும் வரை அவற்றைப் பாதுகாப்பது தான் என் இலட்சியம்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள். நாம் கால்வாய் கட்டி நீர்த் தேக்கம் செய்வோம்.அது உங்களுடைய வயல்களுக்குப் பயன் படும்.இந்த மலை பசுமையாகும். கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்.சில பூச் செடிகளையும்  நடலாம். சில பறவைகளையும், விலங்குக ளையும்  வளர்த்தால் இங்கு ஒரு பூங்காவே உருவாகி விடும்.நான் பூங்காவின் காவலனாக இருப்பேன்.”என்றார். பிறகு போர்ட்டரின் முதுகைத் தட்டி “இளைஞனான நீ உன் மனைவியோடு இங்கு வந்து சந்தோஷமாக இருக்கலாம்.நான் கண்டிப்பாக கேட்டைச் சரியான நேரத்தில் தான் மூடுவேன்” என்று சொல்லிச் சிரித்தார்.
“அப்படியானால் உங்கள் வீட்டிற்குப் பின்னால் நின்று கொண்டு அவர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் குச்சியால் அடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்”என்று நாவிதர் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

’எப்படி அவருக்கு நாம் விடை கொடுப்பது? என்ன பரிசுப் பொருளைத் தரலாம்?எப்படி அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வது ’இப்படி  டவுனில் உள்ள எல்லாரும் தமக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.ஜெனரலை டின்னருக்கு அழைக்கும் வரிசையில் சிலர் தமக்குள் சண்டையும் போட்டுக் கொண்டனர்.
ஆனால் அதிபர் ஜொவ் திடீரென்று இறந்து விட்டதாக செய்தி வர  டவுன் ஸ்தம்பித்தது. எவ்வளவோ செய்ய வேண்டிய நேரத்தில் அவர் இறந்து போனதை நினைத்து ஜனங்கள் கலங்கினர்.அதிபரின் இறப்பு அறிவிக்கப் பட்ட  காலைப் பொழுதில் ஜெனரல் மனைவியோடு தன் வழக்கமான மரத்தடிப் பகுதிக்கு வந்தார்.
சூரியன் கூட அன்று ஒளி இல்லாமல் இருந்தது.மிகவும் பனியாக கொட்டி யது.டவுன் பெரிய சோகத்தில் மூழ்கி இருந்தது.
மரத்தடியில் நின்ற ஜெனரல் மிக வருத்தமாக இருந்தார். கண்ணைச் சுற்றி கருவளையம் படர்ந்து இருந்தது.அப்போது அவர் வெண்கலச் சிலை போலவே நிமிர்ந்து நின்றார்.
’தோழர்களே..’அவர் குரல் செருமி இருந்த்து.அவர் பேசுவது பலருக்குக் காதில் விழவில்லை.கீழே குனிந்து தன் பையில் இருந்த  துக்கம் காட்டும் கருப்புச் சின்ன பட்டைகளை  எடுத்தார்.அவர்களைப் பார்த்து’தயவு செய்து..’ என்று கஷ்டப் பட்டு சொன்னார்.
அதற்கு மேல் அவர் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை.ஜனங்கள் ஒருவர் ஒருவர் பின் ஒருவராக வந்து அதை வாங்கிக்  கையில் அணிந்தனர்.
“இது யாருடைய  திட்டம்?”என்று அப்போது ஜெனரலின் தோளைத் தொட்டபடி யாரோ கேட்டார்கள். அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அது மேயர்தான்.
ஜெனரல் அமைதியாக இருந்தார்.
“யாரும் துக்கம் அனுசரிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?”
ஜெனரல் அவர் கண்ணைக் கூட உயர்த்திப் பார்க்கவில்லை.
கோபம் அடைந்த மேயர்  ஜனங்களைப் பார்த்து “யாரும் அசையக் கூடாது.எல்லோரும் கையில் உள்ள சின்னத்தைக் கழற்றுங்கள்”கட்டளை இட்டார்.
யாரும் சம்மதிக்கவில்லை.
என்ன , எதிர்க்கிறீர்களா? ஏய் ,டெய்லர் !முதலில் நீ கழற்று!”
டெய்லர் அதிர்ச்சி அடைந்தார். தன் கையில் உள்ள கருப்புச் சின்னத் தையும்,மேயரின் கோபமான முகத்தையும் ஒரு விநாடி பார்த்து நடுங்கி னார்.அன்று விடியற் காலையில் ஜெனரல் தன் வீட்டிற்கு வந்து  கருப்பு நிறக் கட்டுத் துணியைக் கொடுத்து சின்ன பட்டைகளைச் செய்து தரும்படி வேண்டியதை நினைத்துப் பார்த்தார்.அதிபரின்  இறப்பு அவரையும் பாதித்து இருந்தது.ஜெனரலின் நோக்கத்தை அறிந்தார். இருவரும் சேர்ந்தே துக்கத்தோடு பட்டைகளைத்  தயாரித்தனர்.
இந்த அற்ப அதிகாரி இப்போது வந்து கையில் உள்ள சின்னத்தைக் கழற்றச் சொல்கிறார்.இது வெறும் சின்னமில்லை.மறைந்த ஓர் அதிபருக்குக் காட்டும் விசுவாசம். .மரியாதை. இதை விட வேறு வகையில் ஒருவரை அவமானம் செய்ய முடியுமா? அவர் எப்போதும் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை  விதிகளின் படி நடக்கிறவர். சில சந்தர்ப்பங்களில் அவமானம் அடைந்த கசப்பான சம்பவங்கள் இருந்தாலும்  இது போல எதுவும் இருந்ததில்லை. இதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.
ஜெனரலின் கண்களைப் பார்த்தார். அது தீ போல ஜொலித்தது.அது அவர் மனதைப் பிளந்தது.”அதிபர் ஜொவ்க்கு அஞ்சலி செலுத்துவது சட்டத்திற்குப்  புறம்பானதா?என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.நான் ஒரு டெய்லர்.எங்கே போனாலும் என்னால் பிழைத்துக் கொள்ள முடியும். பட்டினியில் செத்து விட மாட்டேன்.மன்னியுங்கள். நான் சின்னத்தைக் கழற்ற முடியாது.”என்று உறுதியாகச் சொன்னார்.
“அதிபர் ஜொவ்வுக்கு அஞ்சலி செலுத்துவது சட்டத்திற்கு எதிரானது இல்லை”
“நாங்கள் சின்னத்தைக் கழற்ற மாட்டோம்”
சாந்தமான,சாதாரணமான ஜனங்களுக்குக் கோபம் வந்தது.கிளர்ச்சியில் ஒன்றிணைந்து  நின்றனர்.நேர்மை  இல்லாத வகையில் ஜெனரலை இவ்வளவு நாள் ஒதுக்கி வைத்து இருந்தது அவர்கள் அடி மனதில் இருந்த நியாய உணர்வை வெளிக் கொண்டு வந்தது.அவர்களுக்குள் இவ்வளவு காலமாக இருந்த கோழைத்தனத்தையும்,பணிவையும் சிதற அடித்தது.
என்ன செய்வது என்று தெரியாத மேயர் ஜெனரலின் பக்கம் திரும்பினார்.
ஆனால் ஜெனரல் அவரைப் பார்க்கக் கூட இல்லை.அமைதியாகவும் ஆழமாகவும் தன் போராட்டத்தை வெளிப்படுத்திக்  காட்டும் நிலையில் நின்றார்.
அவர் மனைவிக்கு மட்டும் ஜெனரலின்  உடலும் ,மனமும் எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்று தெரியும்.உடல் உபாதைகள் இருந்த போதும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவர் கலங்காமல் நிமிர்ந்து நின்றார். இதயம் நொந்து போய் இருந்தாலும் அவர் மனைவி எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
“இதற்கெல்லாம் நீங்கள்  தண்டனை அனுபவிப்பீர்கள்” கோபத்தில் முகம் சிவக்கச் சொல்லி விட்டு மேயர் போய் விட்டார்.
திடீரென்று ஜெனரல் மூச்சு விட சிரமப் பட்டார். அப்படியே கிழே விழுந்தார்.
இதை அடுத்த சில நாட்களுக்குப் பிறகு நாவிதருக்கு அதிர்ச்சியான  ஒரு செய்தி கிடைத்தது. யாருக்கும் அவர் அதைச் சொல்லவில்லை செய்த புதிய தவறு காரணமாக ஜெனரல் அந்த டவுனில் ஒரு ’கௌரவ ’ ஜெனரலாக மட்டுமே இருப்பார்.தனக்குக் கிடைத்த இந்தத் தகவலை  அவர் யாருக்கும் சொல்லாமல் இருந்தது இது தான் முதல் தடவை.இதை யாருடனும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு  அவருக்கு பலமில்லை.

மாறும் பருவநிலை போல சில நாட்கள் மகிழ்ச்சிக்குப் பிறகு ஜனங்கள் மனநிலை துன்பத்திற்கு உள்ளானது.
ரிங்வார்ம் மலை மீண்டும் அமைதியானது.தினமும் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஜெனரலை பார்த்து விட்டுப் போனார்கள்.அவர்கள் முகத்தில் சந்தோஷமே இல்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஜெனரல் படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லை.கோமாவால் பாதிக்கப் பட்டார். சில சமயம் நினைவோடும், நினைவு தவறியும்..ஜூரம் அதிகமானது.உத்திரத்தைப் பார்த்தவாறு எதையா வது முணுமுணுத்துக் கொண்டு இருந்தார்.
ஒரு நாள் திடீரென்று அவர் மனம் தெளிவானதைப்  போல இருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தார்.”நான் உங்களை எல்லாம் விட்டுப் போக மாட்டேன். நான் பூங்காவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன். நீங்கள் மரங்கள் நட வேண்டும். சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.ஒரு நீர்த் தேக்கம் கட்ட வேண்டும்.நீங்கள் எப்போதும் என்னை விட்டு விடக் கூடாது. சரியா? நல்லது ..”கஷ்டப்பட்டு ஆனால் உறுதியாகப் பேசினார்.
ஜெனரல் இறந்து போனார். ஆனால் அவர் நினைவுகள் அழிக்க முடியாத நல்ல  எண்ணத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.
பிறகு அதிகாரிகளிடம் இருந்து ஓர் ஆணை வந்தது.ஜெனரலின் உடல் அந்த இடத்திலேயே தகனம் செய்யப் பட வேண்டும் என்று.அவருடைய மரணம் உறவினர்களுக்கு ,நண்பர்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை. எதிலும் மரண அறிவிப்புச் செய்தியும இல்லை.துக்கம் அனுஷ்டிப்பும் இல்லை.இது முட்டாள்தனமான முடிவு என்றாலும் அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. ஆனால் ஜனங்கள் யாருக்கும் இதில் உடன்பாடில்லை.
ஜனங்கள் அமைதியாக இருந்தார்கள். உறுதியாக இருந்தார்கள். தங்களுக்கு பிடித்த வழியில் செயல் பட்டார்கள். சம்பிரதாயமான் முறையில் சிறப்பாக இறுதிச் சடங்கை நடத்தத் தீர்மானித்தார்கள்.உடனடியாக செயலிலும் இறங்கினார்கள்.
டவுனில் இருந்த மிக வயதான மனிதர் ஒருவர் சவப் பெட்டி தந்தார். சவச்சீலையை டெய்லர் தந்தார்.நாவிதர்  ஜெனரலின் முகத்தை அழகு படுத்தினார்.சவப் பெட்டியில் பிணத்தை வைத்த பிறகு விளக்கு ஏற்றப் பட்டது.தன் வாழ்க்கையைக் காப்பாற்றின ஜெனரலுக்கு நன்றி சொல்லும் வகையில் அந்தப் பையன் பெற்றோர்களோடு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டான். அவருடைய மகன் போல இருந்தான்.அந்த டவுனில் இருந்து மட்டுமில்லை. பக்கத்து கிராமங்களில் இருந்தும் பலர் வந்து ஜெனரலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதிச் சடங்கின் போது வானம் கூட  இருண்டிருந்தது.மேகமூட்டம் இருந்தது.தன் அஸ்தி மலையின் எல்லாப் பகுதிகளிலும் தூவப் பட வேண்டும் என்று ஜெனரல் உயிலில் எழுதி இருந்தார்.முதலில் ஊர்வலம் டவுனுக்குச் சென்றது.தலையில் கொள்ளிச் சட்டியோடு  இளைஞர்கள் ஊர்வலமாக எல்லா வீதிகளுக்கும் சென்றனர் .கடைசியாக அந்த மரத்தடிக்கு வந்து  நின்றனர்.பலர் அவரைப் பற்றி பேசினர்.
இந்த ஊர்வலத்திற்கு இரண்டு பேர் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஒருவர் ஜெனரலின் மனைவி.தன் கணவர் ஒரு கம்யூனிஸ்டு அவர் விருப்பப் படி எரிக்கப் படவேண்டும் என்றாள்.அவள் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ,ஜனங்கள் அவளிடம் கண்ணீரோடு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.”ஜெனரல் புரிந்து கொள்வார். கோபிக்க மாட்டார்.ஊர்வலத்திற்குப் பிறகு அவர் எரிக்கப் படுவதற்கு  நாங்கள்  எதிர்ப்புத் தெரிவிக்க  மாட்டோம்.தயவு செய்து எங்கள் விருப்பத்திற்கு அனுமதியுங்கள்”என்று கெஞ்சினர்.அவள் கண்ணீரை அடக்க முயற்சி செய்தாள்.மற்றொரு எதிர்ப்பாளர் மேயர்.தன்னுடைய ரகசிய ஜன்னலின் வழியாக நடப்பதைப் பார்ப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி யில்லை.”உங்களைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்!” என்று பல்லைக் கடித்தார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு , ’நால்வர் குழு’ உடைந்தது.அதற்கு  நாவிதரோ, டெய்லரோ காரணமில்லை.மேயரும் அவரைச் சார்ந்தவர்களும் தான்.
ஜனங்கள் அந்தச் சிறிய டவுனை நவீனமாக்குவதற்கு முதலில் செய்தது ஜெனரலின் விருப்பத்தை பயிற்சிப் படுத்தியதுதான்.
அந்த வருடத்தின் கடைசியில் ரிங்வார்ம் மலை,மற்றும் பக்கத்தில் உள்ள  மலைப் பகுதிகளில் ஜனங்கள் மரக் கன்றுகள் நடுவதற்காக பல குழிகளைத் தோண்டினார்கள்.அந்தக் குளம் அருகே உள்ள குப்பைக் குவியல்  அகற்றப் பட்டது. இரண்டு தெருக்களுக்கும் தார் போடப் பட்டது.டவுனின் தண்ணீர் சேகரிப்பு பகுதியோடு குளம் இணைக்கப் பட்டது.கோடை விழா தொடங்குவதற்கு முன்பாகவே பல ஆயிரம் ஜனங்கள் சேர்ந்து அந்த திட்டத்தின் முதல் பகுதியை முடித்தனர்.
சிலச் சில சண்டைகள் ,கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாம் நன்றாகவே முடிந்தது.என்றாலும் ஒரு சம்பவம் டவுனை அசைத்தது.
கர்ப்பூர மரத்தின் அடியில் ஜெனரலுக்கு நினவுச் சின்னம் வைக்க வேண்டும் என்று போர்ட்டரும் ,அவர் நண்பர்களும் சொன்னார்கள்.நாவிதர் இரண்டு விதமான மனநிலையில் இருந்தார்.ஜனங்கள் இது குறித்துச் சண்டை போட்டனர். அப்போது டெய்லர் கூட்டத்திற்குள் வந்தார்.கையால் மரத்தைச் சுட்டிக் காட்டியபடி தழுதழுத்த குரலில் பேசினார்”இங்கே பாருங்கள்,இந்த மரத்தை விட அவருக்கு சிறந்த நினைவுச் சின்னம் இருக்க முடியுமா?இது வயதான மரம். பட்டை உரிந்து போய் விட்டது.ஆனால் அதன் வேர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றன.அந்த சிறு கிளைகளையும் ,வலிமை யான இலைகளையும் பாருங்கள்..”பேச முடியாமல் தொண்டை கரகரக்க நிறுத்தினார்.
திடீரென்று மரம் ஜெனரல் போல ஆனதாக ஜனங்கள் நினைத்தார்கள்.காலர் பட்டன் தெரிய பச்சைச் சீருடையோடும், தொப்பியில் சிவப்பு நட்சத்திரத் தோடும், காலரில் முத்திரையோடும் அவர் நிற்பது போல இருந்தது.தன் குச்சியைத் தழுவி ,நிமிர்ந்து நின்று கொண்டு, அடிக்கொரு தரம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு  அமைதியாக அந்தச் சிறிய டவுனில் நடக்கும் மாற்றங்களை  அவர் பார்ப்பது போல இருந்தது.
இந்தக் கற்பனையில் அவர்கள் தங்கள் மன வேறுபாடுகளை மறந்தனர்.
————————————-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.