அ.முத்துலிங்கம்: "மஹராஜாவின் ரயில் வண்டி"

கிரிதரன் ”குறிப்பிட்ட நேரத்தில் சரியாக இணைந்திருக்கும் கூடியிருக்கும் நண்பர்களுக்கு நன்றிகள். இன்றைக்கு நாம் உரையாட எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை, அ.முத்துலிங்கம் அவர்களின் “மஹராஜாவின் ரயில் வண்டி”. நானே ஆரம்பிக்கிறேன்.
ஆங்கிலத்தில் coming of age கதைகள் என்றொரு வகை உண்டு. பெரும்பாலும் சிறுவர் சிறுமியர் தங்களது பாதுகாப்பான குடும்பச் சூழலை விடுத்து வெளியே வந்து பழகும் வாய்ப்பில் எதிர்கொள்ளும் முதல் அதிர்ச்சிகளும், புதிய அனுபவங்களும் சார்ந்த கதைகள். அந்த புதிய அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் அவர்கள் மறக்க முடியாதவையாக மாறிவிடுவதால் இந்த coming of age நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
ஸ்டீபன் கிங் எழுதிய The Body, Carrie போன்றவை அந்த மாற்றங்களைக் காட்டும் வகை. ஸ்வாமியும் நண்பர்களும், டாம் சாயர் போன்ற சிறுவர் புத்தகங்கள் சுவாரஸ்யத்தை மட்டும் மையமாகக் கொண்டவை என்பதாலும் வாழ்க்கையை மாற்றிவிடும் தீவிரத்தன்மை இல்லாததாலும் அவை சிறுவர் கதைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஜெயமோகன் எழுதிய கிளிக்காலம், நட்சத்திரங்களை எண்ணிப்பார்த்தல், சுராவின் ஸ்டாம்ப் போன்றவை இந்த வகையில் வரும்.

am1

அ.முத்துலிங்கத்தின் மஹாராஜாவின் ரயில் வண்டி இந்த வகைப்பாட்டில் வந்த ஒரு கற்பனாவாதக் கதை எனலாம். கதைசொல்லி ஒரு 14 வயது சிறுவன். அவசரமான ஏற்பாட்டில் ஜோர்ஜ் மாஸ்டர் வீட்டில் தங்க நேர்கிறான் அவன். ஒரு பகலும் ரெண்டு இரவுகளும் தங்கியிருக்கவேண்டி வந்தவனை அந்தப் புறச்சூழல் முழுவதுமாய் ஆட்கொள்கிறது. கேரளத்திலிருந்து வந்த ஜோர்ஜ் குடும்பத்தில் அவரது மனைவியும் 13 வயது ரொஸலினும் உண்டு. கதைசொல்லிக்கு அந்தக்குடும்பச் சூழலும், சம்பிரதாயங்களும் மிக புதுமையாக இருக்கின்றன. கதையின் தொடக்கத்தில் பெண்ணுடன் அறிமுகமானதும் அவள் உடல் வயதை மீறியிருப்பதைக் கதைசொல்லி கண்டு கொள்கிறான்.
ஒரு வேற்றுக்குடும்பப் பெண்ணுடன் தங்கியிருக்கும் வாய்ப்பைப் பெறும்போது அவளது வயதுக்கேற்ற பூரிப்பை ரசிக்கிறான். பழக்கப்படாத அறை, அவசரமாக தயார் செய்யப்பட்ட குளியலறை, அங்கு கிடந்த பெண் உடைகள், தலைமுடிகள் எனத் தொடக்கத்திலேயே ஏதோ ஒரு கனவுலகில் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. அந்தப்பெண்ணும் நள்ளிரவில் வந்து பூனைக்குட்டிகளைக் கூடையில் விட்டுச் செல்கிறாள்; காலை உணவின் போது ஜெபிக்கத் தவறும் அவனைக் குறுகுறுப்போடு பார்க்கிறாள்; மொத்தத்தில் வயதுக்கேற்ற சந்தோஷங்களும், ஆண் பெண் என அறியத் தொடங்கும் பருவத்தின் ஈர்ப்பும், நெருங்கிப் பழகும் பாந்தமும் கதைசொல்லிக்கு மிகவும் தனித்துவமான அனுபவங்கள்.
கேரளாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விடுமுறைக்காக வந்தவளாக இருக்கலாம் எனக் கடைசியில் யூகித்தாலும், கதை நெடுக அவள் கேரளாவை விதந்தோதிப்பேசுவதை அவன் கவனிக்கிறான். கேரளாத்தண்ணி ரெண்டு மணி நேரத்தில் ஐஸாகிவிடும், திருவனந்த ரயில் பாதை எங்கள் தாத்தா வழியே எனக்கு வரும் சொத்து எனவும், கருப்பு நிறப்பூனை அரிஸ்டாட்டில் போலிருப்பதால் அரிஸ்டாட்டில் எனப்பெயர் வைத்ததும் பதின்பருவத்தில் சிற்றூரில் வளர்ந்த கதைசொல்லிக்கு பிரமிப்பாக இருந்திருக்கும்.
மேலும், மாலையில் ஒன்றாக உட்கார்ந்து தேனீர் குடிக்கும்போது ரொஸலின் கிதார் வாசிப்பதையும், மிதமாக சக்கரைத் தூவப்பட்ட பிஸ்கட்டின் மணமும் அவனால் மறக்க முடியாத ஒன்றாகிறது. அந்த ரெண்டு நாட்களும் அவனுக்குக் கிடைக்கும் அனுபவம் கற்பனையில் எங்கோ சஞ்சரித்ததைப் போலிருக்கிறது. அநேகமாக சிற்றூரிலிருந்து பெரிய ஊருக்கு முதல்முறை வந்தவனாக இருக்கவேண்டும். அந்த பிரமிப்பு நீங்குவதற்குள் ஜோர்ஜ் போன்ற கேரள குடும்பத்தின் மேனாட்டு வளர்ப்பை அவனால் கற்பனை செய்யக்கூட முடியாது. அப்படி ஒரு குடும்பத்தில் கழித்த ஒவ்வொரு நிமிடமும் மிதந்தபடி இருக்கிறான்.
கடைசி நாளன்று அப்பெண்ணுக்கும் ஜோர்ஜுக்கும் ஏதோ சண்டை வருகிறது. அவளுக்கு வேறொரு பையனுக்கும் இருக்கும் உறவை கண்டிப்பதில் சண்டை என்று ஊகிக்கத் தோன்றுகிறது. ஆனால் நள்ளிரவில் கதைசொல்லி கேட்கும் குரல்கள் அவளது அதீத விளையாட்டுத்தனத்தின் இயல்பாகவும் இருக்கலாம். சாப்பிடும்போது ஆங்கிலத்திலேயே நடக்கும் சம்பாஷணை “அந்த ரொட்டியை இந்தப்பக்கம் நகர்த்துங்கள்” என மிருதுவானக் குரலில் நடக்கும் உரையாடல்கள், அவியல் போன்றவை கூட அந்நியமானவையாக இருப்பவனுக்கு நள்ளிரவில் கேட்ட குரல்கள் மிகுந்த கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சொல்லப்போனால், வாழ்வின் மீதி நாட்கள் முழுவதும் சீனி தூவிய பிஸ்கெட் சாப்பிடும்போதெல்லாம் கிதார் மணம் வருவதை அவன் ஆச்சர்யத்துடன் எண்ணிப்பார்க்கிறான்.
ஞாபகங்கள் எப்படிப்பட்ட வடிவங்களையெல்லாம் எடுக்கிறது? அதுவும் சிறுவயது ஞாபகங்களும், பதின்வயது கிளர்ச்சிகளும் பலவித அனுபவங்களாக நம் ஆழ்மனதில் பதிந்துவிடுவதை காட்டும் படைப்பு. ஒருவிதத்தில் கனவில் நடப்பவை போலவே அந்த இரு நாட்களும் கதைசொல்லிக்கு இருக்கிறது. இருவேறு குடும்பப்பின்னணிகள், இருவேறு ஊர்களிலிருந்து சந்திக்கும் பதின்ம வயது ஆணும் பெண்ணும் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பகிரும் நல்ல கதை. மிக மென்மையாக இருவிதமான மனிதர்களின் பதின்வயதைக் காட்டியிருக்கிறார் அமு.”
“கொஞ்சம் மூச்சை விட்டுக்கொள்ளுங்கள் கிரி! நீளமாக பேசிக்கொண்டே போய்விட்டீர்கள்!” என்கிறார் பிரபு.
அனைவரும் சற்றே நகைக்கின்றனர்.
பிரபு,
“கவிதை என்பதை அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல் என்று சொல்வார்கள். முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது.
கதை சொல்லி இரண்டு நாட்கள் தங்க நேர்ந்த ஜார்ஜ் மாஸ்டரின் வீட்டில் அவனுக்குக் கிடைத்த அனுபவங்களின் novelty என்ன? உண்மையில்  அந்த அனுபவங்களில் விசேஷமான தன்மை எதுவும் இல்லை. அவன் அதிர்ச்சியாக இருந்தது என்று பதிவு செய்யும் சம்பவங்கள் எல்லாம் மிக சாதாரணமானவை. அவர்கள் வீட்டின் பிரம்மாண்டம், அந்த பெண் அம்மாவிற்கு முத்தம் கொடுப்பது, அவர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வது போன்று.
பின் அது ஏன் இவனால் விசேஷமானதாக நினைவு கூறப்படுகிறது? ஒன்று, ஒரு ஏழை அல்லது கீழ் நடுத்தரவர்க்க குடும்பத்திலிருந்து ஒரு செல்வ செழிப்புள்ள வீட்டில் தங்க நேர்வது. மற்றும் காமம் கிளர்ந்தெழ தொடங்கும் பருவத்தில் பெண்ணின் அருகாமை அளிக்கும் கிளர்ச்சி. பிறந்த நாளிற்குப் புது துணி கூட எடுக்காத எங்கள் வீட்டில் இருந்து நான் முதன் முதலில் போன ஒரு பர்த்டே பார்ட்டி எனக்கு இன்னமும்  துல்லியமாக நினைவிருக்கிறது. அவர்கள் வீட்டின் பிரம்மாண்டம், அங்கு நான் கண்ட மிகப் பெரிய  நடராஜர் சிலை, வீணை போன்று.
திருவனந்தபுரத்தின் மகாராஜா ரயில் வண்டி பற்றிய குறிப்பும், தனிமங்களின் பட்டியலில் 92 தான் இருந்தது என்ற குறிப்பையும் வைத்து  கதை நடக்கும் காலம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு என்று யூகிக்கலாம். அங்கு பின் நடந்த உள்நாட்டுப்போர்களில் ரோஸ்லினும், கதை சொல்லியும் என்ன ஆனார்கள்? எதுவும் ஆகாமலும் இருந்திருக்கலாம்…
தனிப்பட்ட முறையில் இந்தக் கதை எனக்குப் பெரிய உணர்வெழுச்சி எதுவும் அளிக்க வில்லை. ஓர் எளிய நினைவு கூறலுக்கு மேலாக இந்த கதை மேலெழவில்லை என்றே தோன்றுகிறது.  இதை விடச்சிறந்த கதைகளை முத்துலிங்கமே எழுதி இருக்கிறார்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.