ஜெயமோகனின் வெண் முரசு தொடரின் முதல் மூன்று நூல்கள் பற்றி ஏற்கெனவே ஒரு விரிவான பார்வையை முன்வைத்துவிட்டேன் . நீலம் குறித்தும் எழுதியாயிற்று . அதன் அடுத்த நூல்களான, பிரயாகை, வெண் முகில் நகரம், இந்திர நீலம், காண்டீபம் மற்றும் இதோ இப்போது முடிந்திருக்கும் வெய்யோன் ஆகியவை பற்றியதே.இந்தப்பதிவு.
கண் சிமிட்டும் நேரத்தில் இவ்வளவு புத்தகங்கள் வந்துவிட்டன காலத்தின் வேகத்துக்கு இணையாக ஓடுகிறார் ஜெயமோகன். உலகக் காவியங்களில் மகாபாரதமே பெரியது என்பது நமக்குத் தெரிந்ததுதான், ஆனால் வெண் முரசு நூல் வரிசையை படிக்கும்போது முதலில் தோன்றும் உணர்வு என்னவென்றால், மகாபாரதம் சுருக்கமான கதையாக இருக்கும் போலிருக்கிறதே என்பதுதான். மேலும் மகாபாரதத்தையே அதிக சிக்கல்கள் இல்லாத எளிமையான நூலாகவும் தோன்றச்செய்துவிடுகிறது, வெண் முரசு. மகாபாரதத்தை எவ்வளவுக்கெவ்வளவு விரிவாக்க முடியுமோ அந்தளவுக்கு விரிவாக்கி, தனிமனித சிக்கல்களையும், அரசியல் பின்னணியையும் விரித்தெடுத்துப் பேசுகிறது
வெண் முரசு மீது இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை. வெண் முரசை விவாதிப்பதற்கென்றே தளமும் குழுமங்களும் இருக்கின்றன. ஆனால் அவை விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகளைக் கண்டடைய முயற்சிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஜெயமோகனின் இந்த பெரும் முயற்சிக்கு தமிழ் இலக்கிய உலகின், குறிப்பாக அச்சு ஊடகங்களின் எதிர்வினை என்னைப் பொருத்தவரையில் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது
வெண் முரசுக்கு இவ்வளவு குறைவான விமர்சனங்கள் வந்திருப்பதற்கு ஒரு வகையில்அதன் வகைப்பாடு, ழானர் (genre) ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு யதார்த்தவாத, இயல்புவாத அல்லது நவீனத்துவ நாவலுக்கு வைக்கப்படும் இலக்கிய விமர்சன அளவுகோல்கள் இந்த நூல்வரிசைக்குப் பொருந்தாது. ஒரே சமயத்தில் இந்த வகைப்பாடுகளின் கூறுகளோடு, மாய யதார்த்த அம்சங்களும் மிகு கற்பனை (Fantasy ) வகை படைப்புகளின் அம்சங்களும் இதில் கலந்தே இருக்கின்றன. ஏதாவது ஒரு அம்சத்தை முன் வைத்து விமர்சிக்க வழி இல்லை எனலாம்.
இன்னொரு காரணம், புராணங்களின் மறுஆக்கங்களை படிக்கும் போது அதன் வாசகனுக்கு ஏற்படும் இயல்பான ஒரு திகைப்பு. மறு ஆக்கத்தின் ஆசிரியர் மூலத்திலிருந்து விலகும் போதெல்லாம், அதன் வாசகன் தான் ஏற்கெனவே அறிந்ததை மறக்க வேண்டியுள்ளது.அது பல சமயங்களில் இயல்பாக நடந்து விடுகிறது என்றாலும்,முக்கியமான இடங்களில் விலகல்கள் நடக்குமிடத்து நிச்சயமாக அவன் மனதில் இயல்பான கேள்விகள் பல எழுவதைத் தவிர்க்க முடியாமலாகிறது.
வெண் முரசு நாவல்கள் புராண-யதார்த்தம் (Puranic-Reality) எனும் ழானரைச் சேர்ந்தது என்று ஜெயமோகன் சொல்கிறார். அந்த வகைமையில் இதுவே முதல் படைப்பாக இருக்க வேண்டும், புராணத்தை மறுஆக்கம் செய்வது இன்றைய நவீன யுகத்துக்குரிய தரிசனங்களை நோக்கிச் செல்லும் எழுத்தாளனுக்கு ஏன் முக்கியமாகிறது? அதன் உளவியல் என்ன? அதன் அடிப்படைகள் என்ன? – இவையும் முக்கியமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஜெயமோகன் முதலிலிருந்தே சொல்லி வந்திருந்தாலும், சமீபத்தில், மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார் – மரபை மறு ஆக்கம் செய்தல் :.
என் நோக்கில் இலக்கியம் புராணங்களை ஏன் கவனிக்கவேண்டும்? அவை ஆழ்படிமவெளிகள், படிமத்தொகைகள் என்பதனால்தான். அவற்றின் கதைமாந்தரை மாற்றியமைத்து பார்ப்பது, இன்றைய அரசியலை அதன் மேல் போட்டுப்பார்ப்பது போன்றவை எவ்வகையிலும் பொருளற்றவை. அவை எளிய விளையாட்டுக்கள் மட்டுமே. அவற்றை எப்படி ஆழ்மனத்தை வெளிக்கொண்டுவர, தத்துவ விவாதங்களை நிகழ்த்த, பண்பாட்டை மறுஆக்கம் செய்ய நாம் கையாள்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி
இங்கு ஒன்று சொல்லலாம்- ஜெயமோகன் எழுப்பும் வினாக்களின் அடிப்படையில், வெண்முரசு நாவல் மூன்று தளங்களில் இயங்க முற்படுகிறது:
- மகா பாரத தொன்மத்தைத் தன் ஆழ்மன படிமமாகக் கொண்ட மானுட அகம்
- மகா பாரதத்துக்குப் பொருந்தும் சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்யப்படக்கூடிய தத்துவம்
- மகா பாரதக் கதையில் இடம்பெறும் வரலாறு மற்றும் பண்பாடு
இவை மூன்றும் இந்தியா என்ற நிலப்பகுதியுடனும்ம் இந்து என்ற சமய உணர்வுடனும் காலம்தோறும் இணைத்துப் பேசப்படுபவை. இந்துக்களின் தேசம் இந்தியா என்றும் பாரதம் இந்துக்களுக்கு உரியது என்றும் வலியுறுத்தப்படும் இந்நாளில்தான் வெண்முரசு எழுதப்படுகிறது. எனவே அது ஒரு தேசீயவாதப் பிரதி என்றும் இந்துத்துவப் பிரதி என்றும் விமரிசனங்கள் எழுகின்றன. இதை வெவ்வேறு விளக்கங்கள் வாயிலாக ஜெயமோகன் எதிர்கொள்வதைப் பார்க்க முடிகிறது புனைவு வெளிக்கு அப்பால், பாரதம் போன்ற ஒரு புராணத்தை மறுஆக்கம் செய்வது என்பது ஜெயமோகன் சொல்வது போல் ஆழ்மனத்தை வெளிக்கொணர்தல், தத்துவங்களை விவாதித்தல், பண்பாட்டை மறுஆக்கம் செய்தல் என்ற அளவில் நின்றுவிடுவதில்லை: அது பாரதம் எவருக்கு உரியது என்ற கேள்விக்கான பதிலையும் தேடிச் செல்வதாகும். நம் பண்பாடு மற்றும் அரசியல் தரப்புகளின் இரு தீவிர முனைகளிலும் இருப்பவர்கள் வெண்முரசு முயற்சியை பதட்டத்துடன் அணுக இதுவும் ஒரு காரணமாகிறது. இந்த அடிப்படையிலேயே வெண்முரசு புனைவின் எல்லைகளுக்கு வெளியே, பண்பாட்டு, அரசியல் வெளிகளுக்கும் உரியதாகிறது.
மேலும், மேற்கூறிய மரபை மறு ஆக்கம் செய்தல் என்ற கட்டுரையில்,
புராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள். புராணங்களே அவற்றுக்கெல்லாம் முழுமையாக இடம் கொடுத்தே எழுதப்பட்டுள்ளன. புராணங்களை அரசியல் விளக்கமளித்து எழுதுவதும் என்னைப்பொறுத்தவரை மேலோட்டமானதுதான். அவை ஆழ்படிமங்களை சமூகமனதில் நிறுவுகின்றன. கவித்துவமான படிமங்களை ஒரு சமானமான மொழியாகவே ஆக்கித்தருகின்றன. அவற்றைக்கொண்டு ஆன்மிகமான, தத்துவார்த்தமான தேடல்களை அவை நிகழ்த்துகின்றன. அந்தத் தளத்திற்குச் சென்று அவ்வுரையாடலை முன்னெடுக்கவேண்டும்
என்றேன் என்றும் எழுதுகிறார்.
வெண்முரசின் அரசியல், பண்பாட்டு இலட்சியங்கள் எதுவாக இருந்தாலும் அதன் இயங்குதளம் அரசியலோ, பண்பாடோ அல்ல; மொழியும் அதனால் சாத்தியப்படும் கதைசொல்லலுமே என்று உணர்த்தி, முதலும் முடிவுமாக தான் ஒரு கலைஞன் என்றே ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொள்கிறார். எங்கும் உள்நோக்கமும் மறைந்திருக்கும் செயல்திட்டமும் காணப் பழகிவிட்டோம். இந்த நிலையில், தன் படைப்பூக்கத்தின் போக்கில் தான் பாரதப் பண்பாட்டை மறுஆக்கம் செய்வதாக ஜெயமோகன் சொல்வதை அவநம்பிக்கையுடன் எதிர்கொள்பவர்களைக் குறை சொல்ல முடியாது. தனி மனித அரசியல், பண்பாட்டு நோக்கங்களால் தீர்மானிக்கப்படாத மறு ஆக்கத்தை ஜெயமோகனின் படைப்பூக்கம் நிகழ்த்துகிறது என்பதை எவ்வாறு ஒருவர் உணர முடியும்? ஒரு புனைவாக மட்டுமே வெண்முரசை ஜெயமோகன் முன்னிருத்தியிருந்தால் இது போன்ற கேள்விகள் அவசியமற்றவை என்று ஒரு வேளை சொல்ல முடியும், ஆனால் அவரே பண்பாட்டு மறுஆக்கம் என்று சொல்லும்போது இது எதையும் தவிர்க்க முடியாமல் போகிறது.
வெண் முரசு நாவல் உணர்த்தும் பண்பாடு, அரசியல் போன்றவற்றைப் பேச இது நேரமல்ல. முழு நாவலும் நிறைவடைவதற்கு முன் நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. எனவே, பெருமளவு, புனைவுக்குரிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டே வெண் முரசு நூல்களைப் பற்றி ஒரு விமர்சனத்தை இப்போது முன்வைக்கலாம என்று தோன்றுகிறது.
” புராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள்,” என்று ஜெயமோகன் சொன்னாலும்வெண் முரசிலும் இது குறிப்பிடத்தக்க அளவில் நடக்கத்தான் செய்கிறது (இதனால் எத்தகைய ஆழ்படிமங்கள் சமூக மனதில் நிறுவப்படக்கூடும் என்ற கேள்வி நம்மை மீண்டும் அரசியல் மற்றும் பண்பாட்டு விவாதத்துக்குக் கொண்டு செல்வது தவிர்க்கப்பட முடியாதது). துரியோதனன் மற்றும் திருதராஷ்ட்ரனின் பாத்திர அமைப்புகள் நல்ல உதாரணம். பாரதத்திலும், துரியோதனனின் மேன்மையான நற்குணங்கள் சொல்லப்படாமல் இல்லை. ஆனால் பாரதத்தைச் செலுத்தும் விசைகளில் மிக முதன்மையானது, துரியோதனன் பாண்டவர்களின் திறன்கள் மீதும் அவர்கள் மீதும் தன் குலப்பெரியோரும் மக்களும் காட்டும் அபிமானம் குறித்த பொறாமைதான். அவனது இந்தக் குணம் திருதராஷ்டிரன் தவிர மீதி அனைவராலும் கவனித்து வெறுக்கப்பட்டாலும், துரியோதனனிடம் கனிவும் அளவுகடந்த நம்பிக்கையும் கொண்ட திருதராஷ்ட்ரன் அவனது குணத்தைக் கண்டிக்கவோ அவனது நடத்தையில் தாக்கம் ஏற்படுத்தவோ இயலாதவனாகவே இருக்கிறான். இதுவே மகாபாரதத்தின் அடிப்படை முடிச்சும் சிக்கலும்.
ஆனால் வெண் முரசில் ஜெயமோகன், இந்த விஷயத்தில் துரியோதனன் சார்பாகவே ஒரு மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு அவனை ஒரு நாயகனாக்கவே முயல்கிறார். இதற்காக மூலத்தில் இல்லாத சில சம்பவங்களைச் சேர்க்கவும் செய்கிறார். புதிய சம்பவங்களைச் சேர்ப்பதில் குறை காண ஏதுமில்லை. ஒரு மறு ஆக்கம், அப்படியே மூலத்தை ஒட்டியே எழுதப்படுமானால், அது எழுதப்படுவதற்கான காரணமே இல்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யும் போது அதில் மூன்று விஷயங்களைக் கவனிப்பேன். ஒன்று அந்த சம்பவங்களைச் சேர்ப்பதற்கு மூலத்தில் ஒரு சிறு அடிப்படையாவது இருக்க வேண்டும். இரண்டாவது, இந்த விலகலும், அதை ஒட்டி வரும் சம்பவங்களும் இந்த மறு ஆக்கத்தின், அதுவரையிலான கதைப் போக்கின் தர்க்கத்துக்கும், இதில் வரக்கூடிய பாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் பொருந்தி இயல்பாக உருவாகி வந்திருக்க வேண்டும், வலிந்தோ ஜோடிக்கப்பட்டதாகவோ செயற்கையாகவோ அமைக்கப்பட்டிருப்பதைப் போல வாசகன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கிவிடாமல் இருக்க வேண்டும். மூன்றாவதாக, மூலத்தை விட்டு விலகும் இடங்கள் பாத்திரப்படைப்புக்கும் கதைக்களனுகும் மேலும் செறிவு அளிப்பதாக இருக்க வேண்டும். வெண் முரசு நாவலின் சில பகுதிகள் இந்த அம்சங்களில் என்னைப் பொறுத்தவரை முழு திருப்தியைத் தரவில்லை என்றே சொல்வேன். இதில் அப்படி வரும் சில சம்பவங்களையும், அது குறித்த எண்ணங்களையும் முன்வைக்கிறேன்.
இந்தப் போக்கு முதலில் வண்ணக்கடல் நாவலில் இருந்தே தொடங்குகிறது. அதில் பாண்டு இறந்தபிறகு, குந்தியும்,,பாண்டவர்களும் அச்தினபுரிக்கு வந்தபின் பீமனும் துரியோதனனும் இணைபிரியா தோழர்களாகக் காட்டப்படுகிறார்கள். ஆனால் கானகத்தில் துரியோதனன் ஒரு கரடியால் தாக்கப்படும்போது பீமனால் காப்பாற்றப்படுகிறான், அங்கிருந்து தொடங்குகிறது துரியோதனனின் பீமன் மீதான அசூயை. பாரதத்தில் இந்த சம்பவம் இல்லை. இருவரும் தோழர்கள் என்று காட்டப்பட்டப் பிறகு இப்படியான ஒரு சம்பவம் தேவைப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதற்குப் பின் வருவதுதான் செயற்கையான திருப்பங்கள். வளர்ந்து கொண்டேபோகும் பாண்டவர்கள் மீதான குரோததத்துக்கு ஜெயமோகன் பிரயாகை நாவலில் பாரதத்தில் (இங்கு பாரதம் என்று சொல்லும்போது, அதன் critical edition ஐயே குறிப்பிடுகிறேன்) இல்லாத மேலும் இரு சம்பவங்களை இணைத்தும், குந்தியை பாரதத்தில் வரும் பாத்திர வார்ப்புக்கு நேர்மாறாக நாடாளும் பெரு விழைவு கொண்டவளாகப் படைத்தும் இந்த பூசலை வளர்க்கிறார். பாண்டவர்கள் வென்று வரும் சௌவீர மணிமுடியை அஸ்தினபுரி அரசன், பீஷ்மர், ஆகியோருக்குக் காண்பிக்கும் முன்னரே குந்தி தான் அணிந்து மகிழ்வதாக சித்தரித்து இருப்பது ஒன்று. இன்னும் அதிகமாக, மதுராவின் மீது ஏகலவ்யனின் படையெடுப்பை முறியடிக்க பலராமரும் கிருஷ்ணனும் முறையே துரியோதனன் மற்றும் குந்தியிடம் உதவி கேட்பது ஆகியவற்றைச் சொல்லலாம். இதில் துரியோதனனின் கோரிக்கையை தருமன் நிராகரிக்கிறான். கிருஷ்ணனின் கோரிக்கையை குந்தி ஏற்று, படைகளை கிருஷ்ணனுக்கு உதவியாக அனுப்புகிறாள். போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும் வெற்றி பெறுகிறார்கள். இதில் உள்ள குறைபாடு என்றால் (இப்படி ஒரு சம்பவம் மூலத்தில் இல்லை என்பதை விட்டுவிடுவோம்). அஸ்தினபுரியின் படைகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்பதுதான். இதில் குந்தி அச்தினபுரியின் பேரரசி என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறாள். ஆனால் அச்தினபுரியை ஆளும் திருதராஷ்ட்ரனின் பட்டத்து ராணியான காந்தாரிதானே அச்தினபுரியின் அரசி, குந்தி அல்லவே? அஸ்தினபுரியின் அதிகார வரிசைக்கு (hierarchy) முற்றிலும் புறம்பான ஒரு சம்பவமாகவே இது புனையப்பட்டுள்ளது.
இந்த வெற்றி துரியோதனின் பகைமையை மேலும் வளர்த்து பாண்டவர்களை வாரணவதம் அனுப்பி அங்கு அவர்களை அரக்கு மாளிகையில் தீக்கிரையாக்க முயற்சிக்கும் அளவுக்கு கொண்டுபோகிறது. ஆனால் இங்கும் இரண்டு விலகல்களும் முரண்களும் உள்ளன. ஒன்று வாரணவதம் சதிக்கான பொறுப்பு முற்றிலும் சகுனி மற்றும் அவரது உதவியாளர் கனிகர் மீது ஏற்றப்பட்டு அதற்காக துரியன் குற்ற உணர்வு கொள்பவனாகக் காட்டப்படுகிறான். இன்னொன்று, இதற்கு முன்னால் வரும், பீமனுக்கு உணவில் விஷம் கலந்து அவனை கங்கையில் எறியும் சம்பவம். இந்த சம்பவத்திலும், துரியோதனனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாதது போலவே ஆசிரியர் காட்டுகிறார். முழுக்க முழுக்க துச்சாதனனும் துச்சலனுமே ஏற்பாடு செய்யும் சதி வேலையாக இது காட்டப்படுகிறது. துச்சாதனன் தன் அண்ணன் மீது வைத்திருக்கும் பெரும் பக்திக்கு சான்றாக இது அமைந்தாலும், துரியோதனன் அறியாத வண்ணம் ஒரு செயலை துச்சாதனன் உட்பட இளைய கௌரவர்கள் செய்யத் துணிவது அவர்கள் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும் சித்தரிக்கப்படும் விதத்துக்கு முற்றிலும் முரணாகவும், பொருந்தா வண்ணமும் உள்ளது.
துரியோதனனின் இந்தப் பகைமை வளர்ந்து திரௌபதி சுயம்வரத்தில் பாண்டவர்களின் வெற்றிக்குப் பின் உச்சத்திற்குப் போகிறது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் துரியோதனன் மற்றும் கர்ணன் உட்பட பிற கௌரவர்கள் காம்பில்யத்தின் மீது படைஎடுப்பதில் முடிகிறது. அதில் தோற்று திரும்பியவர்கள் திருதராஷ்ட்ரனின் கோபத்தை சந்திக்கிறார்கள். பிறகு பாண்டவர்களுடனான திருமணப் போட்டிகள் நடக்கின்றன. துரியன் பீமனை முந்தி காசி இளவரசி பானுமதியை வெல்கிறான். பகைமை தொடர்கிறது. ஆனால், இதன் பிறகு இவர்களுக்குள் உள்ள போட்டியை விரும்பாமலும் வாரணவதம் சதியில் துரியோதனனின் பங்கு இருக்கும் என்று தன் உள்ளம் சந்தேகித்ததை உறுதி செய்து கொள்ளும் திருதராஷ்ட்ரன், தன் மக்கள் துரியோதனன், துச்சாதனன் மற்றும் கர்ணன் ஆகியோரை மூர்க்கமாகத் தாக்கி கிட்டத்தட்ட கொன்றே விடுகிறார். இந்தக் காட்சி மிக செயற்கையாக நம்பவே முடியாத வண்ணம் புனையப்பட்டுள்ளது. அதைவிட நம்ப முடியாதது இந்தத் தாக்குதலுக்குப் பின் துரியோதனன் குணத்தில் வரும் மாற்றம். அங்கிருந்து பாண்டவர்களின் மீதான தன் பகையையே அவன் மறந்துவிடுவதாகவும், அவர்கள் எது கேட்டாலும் கொடுத்துவிட சித்தமாக உள்ளதாகவும் அவன் பாத்திரம் மாற்றப்படுகிறது. கர்ணன் திருதிராஷ்டிரனால் தாக்கப்பட்டதை அறியும் குந்தி அவர் மீது மேலும் வன்மம் கொள்கிறாள். துரியோதனன் இந்த சம்பவத்துக்குப் பின் உடலிலும் உள்ளத்திலும் மென்மையடைந்து (பானுமதியுடனான அவன் மணமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்) விடுகிறான். குடியிலும், கொண்டாட்டத்திலும் (உண்டாட்டத்திலும்) தான் அதிக நேரம் செலவழிப்பவனாகக் காண்பிக்கப்ப்டுகிறான்.
இன்னொரு முக்கியமான அம்சம் இங்கே சொல்லியாக வேண்டும். வெண் முரசில், திரௌபதியின் மீது துரியோதனன் கர்ணன் இருவருக்கும் ஏற்படும் விழைவு. மகாபாரதம் பொதுவாகவே மண்ணாசையின் கதை என்றே வர்ணிக்கப்படுவது. ராமாயணத்தை பெண்ணாசையின் கதை என்றும் சொல்வதுண்டு. ஆனால் இங்கு ஜெயமோகன், வெண் முரசில் மண்ணாசையுடன் பெண்ணாசையும் அடிப்படையில் இருப்பதாக புனைந்துள்ளார். கர்ணன் மீது திரௌபதிக்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாக சமண பாரதம் ஒன்றில் மட்டுமே ஒரு குறிப்பும் ஒரு உபகதையும் உண்டு என்று தெரிகிறது. மகாபாரதத்தின் தரப்படுத்தப்பட்ட பதிப்பிலோ வேறு எந்த version இலோ இது கிடையாது. கர்ணனுக்கும் ஏன் துரியோதனனுக்குமே இப்படி ஒரு ஈர்ப்பு உள்ளதாக புனையப்பட்டுள்ளதும் பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமைக்கு இந்த உணர்வு ஒரு பின்னணியாக இருந்து கொ ண்டே இருப்பதும், அவ்வளவு ரசிக்கத்தக்கதாக இல்லை இது ஏறத்தாழ அவதூறு பேசும் வம்புப்பேச்சின் அளவுக்கே போய் விடுகிறது. .இந்த கர்ணன் திரௌபதி ஈர்ப்பு குறித்து ஐராவதி கார்வே அவர்களின் பார்வையை இங்கு நினைவு கூறலாம்.
இந்தப் பொருந்தாத சம்பவங்களும் பாத்திரங்களின் குணாம்சங்களில் வரும் செயற்கையான மாறுதல்களும் உச்சம் பெறுவது வெய்யோனில். இது கர்ணனின் திருப்தியற்ற மணவாழ்வையும் அவன் கௌரவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் வெய்யோனின் மகனாதலால் அளித்தே வாழ்பவன் என்பதையும் முதன்மையாகச் சொல்லும் படைப்பு. ஆனால் இதில்தான் கௌரவர்களுக்கும் பாண்டர்களுக்குமான பகை திரும்பி வரவே முடியாத புள்ளிக்கு சென்று முடிவதும் விவரிக்கப்படுகிறது. இந்திரப்ரஸ்தம் அமைக்கப்பட்டதும் அங்கு நடக்கும் விழாவுக்கு கௌரவர்கள் சென்று அவமானம் அடைந்து திரும்புவதும் இதில் வருகிறது. ஆனால் வேய்யோனில், விளங்கிக் கொள்ள முடியாத காரணங்களுக்காக, பாரதத்தின் மூலத்திலிருந்து பெரும் மாற்றங்களை செய்திருக்கிறார் ஜெயமோகன். இந்திரப்ரஸ்தத்திற்கு கௌரவர்கள் மற்றும் ஏனைய அரசர்கள் அனைவரும் செல்வது தருமன் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ராஜ சூய யாகத்துக்காக என்பதுதான் மூலத்தில் உள்ளது.. ஆனால் இங்கு ராஜசூய யாகம் பற்றிய பேச்சே இல்லை. அந்த நகரத்தின் அணையாப் பெருஞ்சுடரை ஏற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு விழாவுக்காக 56 தேசத்திலிருந்தும் அரசர்கள் வருகிறார்கள்.. துரியோதனன் இப்போது பாண்டவர்களின் நட்பை விழையும் ஒருவன், பாண்டவர்கள் மட்டுமல்ல பாரத வர்ஷத்திலேயே போர்கள் இல்லாத ஒரு நிலையை காண விரும்பும் ஒரு மகாத்மாவாக இருக்கிறான்.அவனிடம் காணப்படும் இந்த மாற்றங்களுக்கெல்லாம் அன்று திருத்ராஷ்ட்ரனிடம் பட்ட அடிதான் காரணம். இந்தத் தருணத்தில் ,பீமன் வந்து அவர்களை விழாவுக்கு அழைக்கும் விதத்திலேயே அவனை அஸ்தினபுரியின் அரசனாக மட்டுமே அழைக்கிறான் என்றும், நெருங்கிய உறவினனாக அல்ல என்றும், துரியனை சுற்றியிருக்கும் அனைவருக்கும் புரிகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் புரிவதில்லை. ( மூலத்தில் இந்த யாகத்துக்கான அழைப்பை விடுக்க அஸ்தினபுரிக்கு வருவது நகுலன்.இதிலேயே நுட்பமான செய்தி ஒன்று இருக்கிறது.) இதை நம்ப வாசகனுக்கு மிகப் பெரிய நம்பிக்கையுணர்வு தேவைப்படுகிறது. .இதில் இன்னுமொரு பெரிய அனர்த்தம், அந்த விழாவுக்கு ஜராசந்தன் வருவதும், வழியில் அவனைக் கண்ட கர்ணன், கௌரவர் படகில் அவனை ஏற்றிக் கொள்வதும், அவர்கள் எல்லோரும் ஒன்றாக இந்திரப்பிரச்தத்திற்குப் போவதும். மூல பாரதத்தில் தருமனின் இந்திரப்பிரஸ்தத்தில் ராஜ சூய யாகமே ஜராசந்தனை வதம் செய்த பின்னர்தான் நடைபெறுகிறது. ஆனால், இங்கு ராஜ சூய யாகம் அல்லாமல் நடைபெறும் ஒரு விழாவுக்கு ஜராசந்தனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு, அவனும் வருகிறான். அதுவும் துரியனின் தோழமை பூண்டு.
நல்லெண்ணத்துடன் வரும் துரியோதனனை பாண்டவர்கள் சந்தேகப்படுவது என்ற ஒரு காரணத்துக்காகவே இந்த ஜராசந்தன் வருகை திணிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. முதலில் பீமனின் கௌரவர்கள் மீதான பகை (அவனுக்கு விஷமளித்த நாள் முதல் உருவானது, வாரணவதம், காம்பில்யப் போர் ஆகிய சம்பவங்களுக்குப் பின் அதிகரிப்பது), மாறுவதாக வெண் முரசில் எந்த சம்பவமும் இல்லை, அவன் அவர்களை அழைக்க வரும்போது இளைய கௌரவர்களுடன் கொஞ்சி விளையாடுவது தவிர. இது மிகச் சாதாரணமானது. அந்தப் பகை ஜராசந்தன் இந்திரப் பிரஸ்தத்துக்கு வராமல் இருந்தால்கூட அப்படியேதான் இருக்கும். ஆனால் நாவலில் ஜராசந்தனின் இந்த வருகையை துரியோதனின் களங்கமற்ற அறியாமை மீது பாண்டவர்கள் கொள்ளும் சந்தேகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகக் காட்டுவது இயல்பாக இல்லை. இந்த ஒரு அற்ப காரணத்துக்காக நாவலில் ஜராசந்தனின் வதமும் தள்ளிப் போடப்படுகிறது, ராஜ சூய யாகமும் கைவிடப்படுகிறது. மேலும் முன்னரே சொன்னது போல பீமனை நஞ்சருந்தச் செய்து கங்கையில் தள்ளிவிடும் சம்பவமே இந்தப் பகைமையின் முதல் கல். அது வீசப்படுவதும் கௌரவர்களால். ஆனால் இங்கு எதிர்வரும் போருக்கான பொறுப்பு நைச்சியமாக பாண்டவர்கள் மீது ஏற்றப்படுகிறது. இதற்கான தர்க்கப்பூர்வமான நகர்வு வெண் முரசு நாவல்களிலேயே இல்லை என்பதே அதன் பலவீனம். ஆனால் நாவல் வரிசை தொடரும் என்ற நிலையில் இந்த ஜராசந்த வதைப் படலத்தை ஜெயமோகன் எப்படி கொண்டு வருகிறார் என்பதையும்ஆவலுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.
இன்னொன்றும் சொல்ல வேண்டும், துரியோதனன் மனைவியின் ஆளுகைக்குட்பட்ட ஊமைக் கணவனாகவே காட்டப்படுகிறான். இந்திரப்ரஸ்தத்திற்கு பானுமதியும் வந்திருக்கிறாள், ஆனால் துரியன் தான் செய்யவிருக்கும் சமாதான முயற்சிகள் குறித்து அவளிடம் ஏதும் சொல்வதாகக் காட்டப்படுவதில்லை. இங்கே இதற்கு முன்னால் வரும் சில அத்தியாயங்களில் அஸ்தினபுரியின் அரசை நடத்தும் பொறுப்பே பானுமதியின் கையில்தான் உள்ளது என்பது போலவும் காட்டப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் முரணாக, இங்கு பானுமதி சுத்தமாக மறக்கடிக்கப்படுகிறாள்.
மேலும் வெண் முரசு நாவலின் பின்னணியாக அதன் ஆசிரியர் கொண்டுவரும் அரசியல் காரணங்களும் ஏற்கும்படி இல்லை. அதுவரை வந்த அரசியல் சமநிலைகளுக்கும் விவரிப்புகளுக்கும் நேர் எதிராக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திரும்புகிறது கதைப் போக்கு.. மஹாபாரத காலத்தின் அரசியல் என்று ஆசிரியர் விவரிப்பது ஏற்கெனவே இருக்கும் தொன்மையான க்ஷத்ரிய குலங்களுக்கும் உருவாகிவரும் புதிய சக்திகளுக்கும் இடையேயான போட்டி என்பது. இதில் மகதம், அச்தினபுரி, காந்தாரம், மற்றும் பாஞ்சாலம் ஆகியவை தொன்மையான க்ஷத்ரிய குலங்கள் என்றும், புதியதாக உருவாகி வரும், அரச குலங்கள் என யாதவ அரசுகளையுமே ஜெ காட்சிபடுத்துகிறார். ஆனால் வெய்யோனில் திடீரென்று அந்தத் தொன்மையான க்ஷத்ரிய குல வாரிசான ஜராசந்தன் பாதி அசுர குலத்தவன் என்றும் க்ஷத்ரியர்களுக்கு எதிரானவன் என்றும் மாற்றப்படுகிறான். இதற்குக் காரணமாக, அவன் இளமையில் ஜரையிடம் (ஜராசந்தன் இருபாதிகளாக இருந்தபோது ஒன்றாகச் சேர்த்தவள்) பால் குடித்து வளர்ந்தவன் என்றும் கானகத்தில் இளமையைக் கழித்தவன் என்றும் ஒரு புனைவைக் கட்டுகிறார். இந்த இடத்தில் மழைப்பாடலில் ஜரசாந்தனின் தந்தை ப்ருஹத்ரதனுக்கு காந்தாரியை மணமுடிக்க கேட்டு வரும் காந்தார அமைச்சரிடம் தன தொன்மையான குல மேன்மையைக் காட்ட குதிரைச் சவுக்கைப் பரிசாகக் கொடுத்து அனுப்புவதை நினைவுகூரலாம். அத்தகைய குலத்தில் வந்த ப்ருஹத்ரதனுக்கு காசி இளவரசிகள் மூலமாகப் பிறக்கும் ஜராசந்தனை பாதி அசுர குலத்தவனாகக் காண்பிப்பது சற்றும் பொருந்தவில்லை. மேலும், (இது பற்றி வண்ணக்கடளிலேயே ஒரு குறிப்பு உண்டு என்றாலும்) இதுவரை தொன்மையான மற்ற க்ஷத்ரிய குலங்கள் பாண்டவர்களை யாதவகுலத்தவர்களாகவே பார்க்கிறார்கள் என்றே புனையப் பட்டதும் இங்கு மாறி, அவர்கள் ஜராசந்தன் போன்ற அசுர குலத்தவர்களை ஏற்றுக் கொள்ளாத தூய க்ஷத்ரிய குலத்தவர்கள் என்று ஒரு மாற்றம் செய்யப்படுகின்றது. இதுவும், அதுவரை வந்த கதைப் போக்கிற்கு மாறான ஒரு நிலைப்பாடாகத் தெரிகிறது.இது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவும் கதைசொல்லலின் ஒழுங்கைக் குலைப்பதாகவும் ஆதாரமற்றதாகவும் தோன்றுகிறது.
வெண் முரசில் வரும் திரௌபதியின் பாத்திரப்படைப்பும் விவாதிக்கத்தக்கது. பொதுவாக திரௌபதி தன் வாழ்வைத் தான் தீர்மானிக்க முடியாத பாத்திரமாகவே விவரிக்கப்படுபவள். ஐந்து கணவர்களைக் பெறுவது முதல் அவள் படும் அல்லல்கள் கடைசிவரை ஓய்வதில்லை. இதில் எதையுமே அவள் முடிவு செய்வதில்லை என்பதே ஒரு பொதுவான புரிதல் . ஆனால் ஜெயமோகனின் பாஞ்சாலி அப்படி படைக்கபட்டவளல்ல..பாஞ்சாலி கதாபாத்திர உருவாக்கம், சில இடங்களில் ஜொலிக்கிறது. உதாரணமாக அவளது வேறுபட்ட விழைவுகளே அவள் ஐந்து கணவர்களை அடையக் காரணம் என்று சித்தரிக்கப்படும் விதம். அவளுக்கும் அவளது சுயம்வரத்தில் நாண் ஏற்றி குறியை தகர்க்க வைக்கப்பட்டிருக்கும் கிந்தூரம் எனும் வில்லுக்குமான தொடர்பு போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால் இந்திரப்ரஸ்தம் அமைக்கப்படும் இடமும் விதமுமே அவளது தேர்வு என்று புனையப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. உண்மையில் இந்திரப்ரஸ்தமாக மாறும் காண்டவப் பிரஸ்தம், வழங்கப்படுவதில் பாண்டவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இங்கு பாஞ்சாலியின் விருப்பப்படியே அந்த இடம் அவளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு பாஞ்சாலத்தின் ஐந்து குலத்தவர்களில் ஒன்றான துர்வாச குலத்தின் முனிவருக்கு நாகர்களின் மேலுள்ள பகையின் காரணமாக, தட்ச நாகர்கள் வாழும் காண்டவ வனத்தை அழிக்கும் விழைவை அவர், தன சிஷ்யயையான பாஞ்சாலியிடம், புகட்டுவது போலப் புனையப்பட்டுள்ளது.
இங்கு ஒரு மாற்று வரலாறாக, வெண் முரசு முழுவதுமே நாகர்கள் இடையறாது முக்கிய பாத்திரங்களாக வருவதும் இந்த பாரதவர்ஷத்தின் பூர்வ குடிகள் அவர்களே என்றும் இந்த நிலமே நாகலந்தீவு, என்றழைக்கப்பட்டிருநதது என்பதும் ஒரு பெரும் புனைவாக அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடவேண்டும். ஒருவேளை இந்த நாகர்களின் வரலாறு தான் ஜெயமோகன் தன் மறு ஆக்கத்தில், முன்வைக்கும் முக்கியமான வரலாறு, மற்றும் பண்பாடு குறித்த ஒரு மாற்றுப் பார்வை அல்லது அவர் சொல்லும், பண்பாட்டு மறுஆக்கமோ? அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில், ஜெயமோகனின் பார்வை, அவர் மீது சுமத்தப்படும், “இந்துத்துவ” அடையாளங்களைவிட அதிகம், இந்திய இடதுசாரி முற்போக்கு வரலாற்றாசிரியரின் பார்வையாகவே உள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும் (ஆனால் வரலாற்றின் அறியப்படாத இன்னொரு பக்கமாக ஜெயமோகன் அளிக்கும் சித்திரம், அவர் ஆதரிப்பதாக கருதப்படும் தரப்புகள் உட்பட எந்தத் தரப்புக்கும் நிறைவை அளிப்பதாகத் தெரிவதில்லை என்பதுடன் ஒரு பண்பாட்டையே மறு உருவாக்கம் செய்வது என்பது தனி ஒரு இலக்கியப் பிரதியின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று எனவும் தோன்றுகிறது.).
வெண்முரசில் இந்த நாகர்கள் பன்னகர்கள் என்றும் உரகர்கள் என்றும், இரண்டு இனங்களாக பிரிந்திருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள் . அதனுள் மேலும், கௌரவ்ய, வாசுகி, திருதராஷ்டிரிய, ஐராவத மற்றும் தட்ச குலங்களாகவும் பிரிக்கப்படுகிறார்கள். பல்வேறு பாத்திரங்களின் கூற்றாக இவை சொல்லப்படுகின்றன. ஒரு முழுமையான மாற்று வரலாறாக வெய்யோனில் இவை கர்ணனுக்கு காண்டவ / இந்திரப் பிரஸ்த்தத்தை விட்டு வெளியேறும், முது நாகினி மற்றும் மீதமிருக்கும் நாகர்களாலேயே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வரலாறும் மிகக் குழப்பமாக உள்ளது. உதாரணமாக, நாகர்கள் குறித்த வெய்யோன் பகுதி 50ல் வரும் கதைக்கும் பகுதி 62 மற்றும் 63ல் வரும் கதைக்கும் உள்ள முரண்பாடுகளைக் காணலாம். இதன் மேலும் ஒரு பிழையாக நாகர்களின் ஒரு குலம் தட்ச குலம் (காண்டவ வனத்தில் வாழ்வது) ) என்று தட்சப் பிரஜாபதியின் பெயரால் அமைக்கப்படுகிறது.. இந்தக் குலம் தக்ஷகக் குலம் என்பதே சரியானது ஆங்கிலத்தில் தட்சப் பிரஜாபதி, daksa என்றும், நாகக் குலத்தின் தலைவன், Thakshaka என்றுமே குறிப்பிடப்படுகிறார்கள். வெட்டம் மானியின் puranic encyclopediaவிலும் அப்படியே உள்ளது. ஆனால் ஜெயமோகன் ஏனோ இதை தட்சன் என்றும் தட்ச குலம் என்றுமே குறிப்பிடுகிறார்.
இந்த நாககுலத்தோர், தங்களுக்குப் பாண்டவர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்காக கர்ணனிடம் அடைக்கலம் புகுகிறார்கள் இளம் தட்சனான அஸ்வ சேனன் அர்ஜுனனின் அம்புகளால் உருக்குலைந்து போயிருப்பதைப் பார்க்கும் கர்ணன் அது உண்டாக்கும் பெரும் அற உணர்ச்சியால்,நாகர்களின் பக்கம் நிற்க உறுதி பூணுகிறான்.. அதற்காக அவன் இழப்பது அவனது மெய்யான தம்பிமார்களையும், பாரத வர்ஷத்தின் அரசப் பதவியையும் அதற்கும் மேலாக (மீண்டும் ) பாஞ்சாலியின் கரத்தையும் என்று அறிந்தும் அவனது பேரறம் அவனை நாகர்களின் பக்கம் நிற்க வைப்பதையே ஒரு உச்சமாகக் கொண்டு வெய்யோன் முடிவடைகிறது. அத்தருணத்தில் நம்முள் இயல்பாக எழும் ஒரு கேள்வி இந்தப் பேரறத்தான், கௌரவர்கள் வாரணவதத்தில் பாண்டவர்களை கொல்ல முயன்றதை கேள்விப்பட்டவுடன் எப்படி இயல்பாக அதைத் தாண்டி விடுகிறான் என்பதுதான். .இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்த உச்சம் வலிந்து செய்யப்பட்டதுதான் என்பதும் கர்ணனின் பின்னிருந்து செயல்படுவது ஆசிரியர் முயன்றிருப்பது போல மேலான அறம் அல்ல செஞ்சோற்றுக் கடன் என்பதும்தான்.. அதுதான் அவனை கௌரவர்களின் தீச்செயல்களைப்பார்க்க விடாமல் செய்கிறதே அன்றி, இங்கு சொல்லப்படுவது போன்ற ஒரு அறம் சார்ந்த நிலைப்பாடல்ல .
ஒரு பொதுக் கருத்தாகச் சொல்வதானால் இந்தத் தொடரில் , இதுவரை வந்துள்ள 9 நாவல்களில், மூன்று கிட்டத்தட்ட பாரதத்தின் முக்கியமான பாதையை விட்டு விலகுகின்றன, இதில், வண்ணக்கடலுக்குப் பிறகு, நீலம், ஒரு நல்ல மாற்றாக இருந்தது, ஆனால் , பிரயாகை, மற்றும் வெண் முகில் நகரம் ஆகியவற்றுக்குப் பின், இந்திர நீலம் ,மற்றும்,காண்டீபம், இரண்டுமே தொடர்ச்சியாக, , மகாபாரதத்தின், முக்கியக் கதையிலிருந்து விலகிப் பயணிப்பவை ஆக அமைவது, சற்று தொய்வை ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது
அடுத்து இந்தத் தொடரில் ஒரு மெய்நிகர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு செய்யப்பட்டிருக்கும் விவரணைகள் மற்றும் பட்டியலிடுதல் என்ற இரு அம்சங்களைப் பார்க்கலாம்.. மகாபாரத காலத்தின் நிலவமைப்புகள், ஆறுகள், கதைமாந்தர்களின் நடை உடை பாவனை என்று மிகப்பெரிய ஒரு நிகர் உலகை இங்கே உருவாக்கி காட்டியிருக்கிறார் ஜெயமோகன். இது பல இடங்களில் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தாலும், சில இடங்களில் சற்று அதிகப்படியாக போய்விடுகிறதோ என்றும் எண்ணாமலிருக்க முடியவில்லை. கதாபாத்திரங்களின் மெய்நிகர் வாழ்வைச் சொல்லுமிடத்து அவர்களின் ஆடைகள், அணிகலன்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன. கர்ணன், கர்ணன் பட சிவாஜி போலவே மீசையை அடிக்கடி நீவிவிட்டுக் கொள்வது உட்பட.ஆனால் காவிய நாயகர்கள் ஏப்பம் விடுவதையும் அவர்களுக்கும் அபான வாயு பிரிவதையும் எல்லாம் எழுத வேண்டுமா என்று தோன்றாமலில்லை. முன்னர் ஒரு கட்டுரையில், ஜெயமோகனே, திரௌபதி தன் முந்தானையை சரி செய்து கொண்டாள் என்பது போல எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு அந்தச் செயலைப்போல பலவற்றை விவரித்து எழுதியுள்ளார். இதுவெல்லாம் ஒரு வாசகனுக்கு மெய்நிகர் அனுபவத்தை அளிக்கவே என்று புரிகிறது, ஆனால் அளவுக்கு மிஞ்சினால்..?
காலம் இடம் வயதுகள் குறித்த குழப்பங்கள் மகாபாரதத்திலேயே அதிகம்தான். ஆனால், இங்கே ஜெயமோகன் அவற்றில் நாடும் துல்லியம் மேலும் குழப்பத்தை எற்படுத்துகிறது. ஒரு உதாரணம்,பாஞ்சாலியின் சுயம்வரத்தின்போது துருபதனை பார்க்கும் தருமன், “இந்தப் பதினேழு வருடங்களில் அவர் நிரம்ப மாறியிருக்கிறார் என்று சொல்கிறான். இது துருபதனை துரோணருக்காக அர்ஜுனன் வென்ற நிகழ்வுக்குப்பின் 17 வருடங்களுக்குப் பின் இந்த சுயம்வரம் நிகழ்கிறது என்பதைக் காட்டுகிறது. அப்படிக் கணக்கிட்டால், அந்தத் தோல்விக்குப்பின் துருபதன், தவமெல்லாம் செய்து, யாகத்தில் பாஞ்சாலியைப் பெற ஒரு இரண்டு வருடம் என்று கொண்டால் கூட, சுயம்வரத்தின் போது அவளுக்கு வயது 15தான், ஆனால் பாஞ்சாலியின் தோற்றத்தையும் மனத்திட்பத்தையும் வர்ணிக்கும் விதத்துக்கும் அவள் வயதுக்கும் அது பொருத்தமேயில்லாமல் இருக்கிறது முக்கியமாகத் தோற்றம். இந்தக் கேள்விகளையெல்லாம், பாஞ்சால, யாக நெருப்பிலிருந்து வரும்போதே, யுவதிஆக வருகிறாள் என்று காட்டுவதன் மூலம் வியாசர் தவிர்த்துவிடுகிறார் இல்லையா?
இன்னொரு விஷயமாக ,ஆசிரியரின் தற்காலப் பயணங்கள்,இந்தக் காவியத்தில் பிரதிபலிப்பதைச் சொல்லலாம். அவர் வடகிழக்குப் பகுதியில் பயணம் செய்யும்போது மர வேர்களால் ஆன ஒரு உயிர்ப்பாலத்தைக் காண்கிறார். அது அவரே அறிந்தோ அறியாமலோ அவரது புனைவிலும் வருகிறது. சல்லியனின் தலைநகரான சகலபுரியில் தேக்கு மரமும் சால மரமும் இணைந்த ஒரு மரக் காவல் கண்காணிப்புக் கோபுரம் வழியாக- ஆனால் இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது, தேக்கும், சால மரமும் ஒரே இடத்தில் .முக்கியமாக, சகலபுரியில் (அது இன்று Sialkot என்கிற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பகுதி) வளர வாய்ப்பேயில்லை. தேக்கு மரங்கள் விந்தியத்துக்கு வடக்கேயும், சால மரங்கள் விந்தியத்துக்குத் தெற்கேயும் வளர்வதில்லை என்பது ஒரு புவியியல் உண்மை. இதைப் படிக்கும்போது அதை மறக்க வேண்டி உள்ளது. இதுதான் அதிகமாக நுண்விவரங்களை அளிப்பதில் உள்ள பிரச்சினை. சரி, சல்லியன் அதீத முயற்சி செய்து அப்படி ஒரு கோபுரத்தை அமைத்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதே போல சஞ்சயன் என்ற திருதராஷ்ட்ரனின் உதவியாளர் பாத்திரம் முக்கியமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் சில பகுதிகள் கழித்து அந்தப் பாத்திரம் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது போலுள்ளது.
நான் மேலே சொல்லும் எல்லா குறைகளும் இருந்தாலும் வெண் முரசு நாவல் தொடர் ஏன் முக்கியமானது என்றால், அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டும் புனைவின் பெரும் ரசவாதமும், அவரது மொழியழகும், சொல்லாட்சியும். இதற்கு பலப்பல இடங்களையும் சொற்றொடர்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அவர் புதிய சொற்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறார், எரி குளம் ,பிறவிநூல், தீச்சொல், நாற்களம், அதற்கு மேல், பிராயச்சித்தம் எனும் சொல்லுக்கு ஈடாக அவர் வழங்கியுள்ள பிழையீடு எனும் சொல், மேலும் மூலக் கதைக்கு பெரும் துணை புரியும், மூலக் கதையையே வேறு கோணத்தில் அலச வைக்கும் உப கதைகளும் அபாரம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ஒவ்வொரு நிகழ்வும் கதையும் எந்தப் பாத்திரத்தின் பார்வையிலே சொல்லப்பட வேண்டும் என்பதில் அவரது தேர்வும் அற்புதமானது. வெண் முகில் நகரம் நாவலின் நிகழ்வுகள், பூரிசிரவஸ், சாத்யகியின் பார்வையில், இந்திர நீலத்தில் ருக்மிணியின் மணம் அவளின் வளர்ப்புத்தாய், அமிதையின் பார்வையில் என்று நிறையச்சொல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக பாரதத்தில் ஒரு சின்ன பாத்திரமாக வரும் பூரிசிரவசை வெண் முகில் நகரத்தில் ஒரு முக்கிய, மறக்க முடியாத பாத்திரமாக்கி விட்டதிலும், வெய்யோனில், ஜயத்ரதனின் கதையும், அவனது தந்தையின் பாத்திரமும், அந்த தீர்க்கதமஸ் முனிவரின் கதையும்,ஜெயமோகனின் மேதைமைக்கு சான்றுகள்.
புராணங்களின் மறு ஆக்கங்களைக் குறித்த அவரது மூன்றாவது கருத்தான ஆழ்படிமங்களை (இவை தொல் படிமங்கள் என்று இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்) ஆன்மீகத் தளத்துக்கும், தத்துவார்த்தத தளத்துக்கும் நகர்த்திப் பார்க்கும் தன்மை என்று சொல்வதற்கு உதாரணமாக அமைந்த இடங்களும் இந்த நாவல் வரிசையைத் தவற விடகூடாத ஒன்றாகச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
என்னை மிகவும் கவர்ந்த இரண்டு இடங்களைச் சொல்கிறேன். ஒன்று, பாஞ்சாலி என்றாலே ஐவரின் பத்தினி, என்பதை சாக்த வழிபாட்டின் ஒரு வெளிப்பாடாக மாற்றி, ஐந்து திரிகளிலும் அனல்ஒளி கொண்டு எழும் தீபம் ஆடியின் அனல் என்றாகி வரும் வெண்முகில் நகரம் நாவலின் 19வது பகுதி.
இரண்டாவதாக, இந்திரநீலத்தில் பார்க்கும் அனைவரின் மனத்திலும் பெரும் விழைவினை உருவாக்கும், என்றும் அடைய முடியாத , அடைந்தாலும் நிறைவை ஒரு போதும் வழங்காத, பெரும் செல்வத்தின் குறியீடான அந்த சியமந்தக மணி கிருஷ்ணனின் எட்டாவது மனைவி காளிந்தியின் கைகளில் தன் உயர் மதிப்பையெல்லாம் இழந்து வெறும் கூழாங்கல்லாக மாறும் இடம்.
நிறைகளை விடக் குறைகள் அதிகமாகச் சொல்லியிருக்கிறேனோ என்று தோன்றலாம். அதிலும் இதில் நான் சொல்பவற்றில் பெரும்பாலானவை, ஜெயமோகன் அவர்களிடமே நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் விவாதித்து அவரால் அநேகமாக பதில் சொல்லப்பட்டவை. இருப்பினும் நான் திருப்தியடையாத இடங்களை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். இந்த இடங்களில் பெரும்பாலானவை மூல மகாபாரதத்தை விட்டு விலகும் இடங்கள்தான் என்றும் தோன்றலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் விலகல் எல்லாமே பிழைகள் என்றோ குறைகள் என்றோ சொல்லவில்லை. முன்னரே சொன்னதுபோல், நான் இந்த விஷயத்தில் மூன்று விஷயங்களை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறேன்-
ஒன்று, ஒரு புதிய சம்பவத்தைச் சேர்ப்பதற்கு மூலத்தில் ஒரு சிறு அடிப்படையாவது இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, விலகலும் அதை ஒட்டி வரும் சம்பவங்களும் இந்த மறு ஆக்கத்தின், அதுவரையிலான கதைப் போக்கின் தர்க்கத்துக்கும் பாத்திரங்களின் குணாம்சங்களுக்கும் பொருந்தி இயல்பாக உருவாகி வந்திருக்க வேண்டும்.
மூன்றாவதாக, மூலத்தை விட்டு விலகும் இடங்கள் பாத்திரப்படைப்புக்கும் கதைக்களனுக்கும் மூலத்தைவிட அதிக செறிவு அளிப்பதாக இருக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறிய பகுதிகள் சிலவற்றையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.
இத்தனை சொல்லும் அதே சமயத்தில், இதெல்லாம் முற்றிலும் புறவயமான ஒன்றல்ல என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விகள் எதுவும் எழாமலேயே இந்த நூல் வரிசையை ஆழ்ந்து படிப்பவர்கள் ஏராளம் உண்டு என்பதையும் நான் அறிவேன். நான் சொல்லும் இந்தக் குறைகளை எல்லாம் மீறி, இத்தொடரின் அடுத்தப் பகுதி எப்போது வரும் என்று நானும் காத்திருக்கிறேன் என்பதே உண்மை. இந்த வரிசையைப் படித்தவர்கள் மீது அது உண்டாக்கும் பிடிப்பு அத்தகையது. அதுவே அதன் வெற்றி .வெண் முரசு தொடரை தமிழ் கூறு நல்லுலகு, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ, இன்னமும் கொஞ்சம் அதிகம் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்பதே என் ஆசை.
மிக சிறப்பான விமர்சனம். சில குறைகளை சுட்டிகாட்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் சிலவற்றை தொட்டு காட்டியுள்ளீர்கள். இவைகளை தாண்டியும் வெண்முரசு ஒட்டு மொத்தமாக அடுத்தது எப்ப வருமோ என்று ஏங்க வைத்து கொண்டே உள்ளது.
நல்ல விமர்சனம்.வெண்முரசு பல தளங்களில் மாறிச் செல்கிறது.திரௌபதியின் ஆளுமை ஜெயமோகன் எழுத்தின் யட்சி நீலி சாயலில் வருவது சற்று மிகையானதே.மறு ஆக்கம் என்றாலும் நவீனப்படுத்துகையில் மூலக்கதையிலிருந்து விலகுவது குழப்பம் தான்.நிலக்காட்சிகளும் தற்காலச்சூழலை நினைவூட்டுவதாகவே பல இடங்களில் உள்ளது.அதிகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்ற ஆக்கம்.வெண்முரசினை தினமும் தொடர்வது ஓர் உவகையான சவாலே.