ஞான. வித்யா, ப. ஆனந்த் கவிதைகள்

1. கற்பனைக்கு வெளியில்

துயரங்கள் தாளாமல்
கற்பனைக்குள் தப்பி ஓடி
வாழ்வின் எல்லா அழகுகளையும்
தரிசனங்களையும் அடைந்து
அவற்றைக் கவிதைகளாய் எழுதிக் குவித்து
வெளிவந்து பார்க்கிறேன்
கற்பனைக்குள் செல்லாத நான்
ஒரு கழிவிரக்கக் கவிதை எழுதிக்கொண்டிருப்பதை..

2. நிழல் எல்லைகள்

ஒரு பெருமரத்தின் அடியில் நின்று
அதன் நிழலை எல்லையெனக் கொண்டு
விளையாடிக்கொண்டிருந்தனர்,
நேரம் நகர
நிழல் நகர்ந்து
எல்லைகள் மாறுவது அறியாமல்..
இருள் மெல்லக் கவிய
அவரவர் பார்வையில் நிழல் மறைந்த நேரம்
ஆட்டம் அர்த்தமற்றதென புரிந்தது…

ப.ஆனந்த்

 painting-abstract-autumn

1. என்னின்று

 
அம்மாவின் தராசு
நழுவிய விழுமியங்களின்
சிதறிய நாற்றுக்களுக்கு 
நடுவே
நலமாய்தான் வளர்கிறாள் 
என் மகள்
ஓர் தாய் ஓர் தந்தையோடு
என்
பெண்மையின் கூர்முனை 
மேலெழும்பி மிதக்க 
தகைந்து 
தானிறங்கி நிற்குதென்
தாய்தட்டு
 

2. காற்றாடியின் கைப்பிடி

 
மூன்றே வயதுதான் 
என் கபிலனுக்கு
கெட்டிக்காரன்
என் விரல் விடுத்து
தனியே நடைபயில்கிறான்
 
ஆறே வயதுதான்
என் கபிலனுக்கு
தைரியசாலி
என் அணைப்பின்றி
தனியே உறங்குகிறான்
 
பன்னிரு வயதுதான்
என் கபிலனுக்கு
வித்தகன்
படிப்பில் மட்டுமல்ல
பட்டம் விடுவதிலும்
 
வான்வெளியெங்கும்
விரிந்து பட்டம்
தன் எல்லைகள் தேடி
உயர உயர,
 
பறந்துவிடுமோவென்ற
அச்சத்துடன்
இறுக சுற்றினேன் நான்
என் கைப்பிடித்திருந்த நூலை.
 

ஞான வித்யா