இது எந்த இடம்?
இங்கு நான் எப்பிடி வந்தேன்?
அந்த நீளமான சாலையின் ஒரத்தில் நின்றபடி யோசித்தான்.
தலைக்கு மேல் பளீரிட்ட தூய நீல வானம் மாதிரி மனம் நினைவுகளே இல்லாமல் துடைத்துப் போட்டாற் போல் இருந்தது.
அங்கு நிற்கிற அந்த நிமிஷத்து நிஜத்தைத் தவிர அவனுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரவில்லை என்று உணர்ந்த நிமிடம், பயத்தில் நெஞ்சை அடைத்தது.
“ சே!சே! பயப் படாதே! பயப்படாதே! அப்பிடி எதுவும் மறக்காது! இதோ இப்ப தெரிஞ்சுடும்! ரிலாக்ஃஸ் ரிலாக்ஃஸ்!!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பயத்தைப் புறந்தள்ள முயன்றான்.
சாலையின் இடது புறம் கரும் பச்சையில் ராக்ஷ்ச வளர்த்தியில் நெற் பயிர்கள் ,நெடும்தூரம் வரை.
வலது புறம் சாலை மட்டத்திலிருந்து பத்து அடிக்குக் கீழே சல சலவென்று ஒரு சின்ன ஆறு ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு படித் துறை தெரிந்தது.
நதிக்கு அந்தப் புறத்தில் தென்னந்தோப்புகள், மூங்கில் கொல்லைகள், நிறைய கரும்புப்பயிர்கள்.
சாலையின் இரு மருங்கிலும் புளிய மரங்கள் வெகு உயரே கை கோத்து பந்தல் போட்டிருந்தன…பின் காலை சூரியனை சலித்து, ஒளித் துணுக்குகளைத் தரையில் விசிறியிருந்தது.
ஒரு சமயம் தி.ஜானகிராமன் கதையில் வருகிற தஞ்சாவூர், கும்பகோண கிராமங்களை நினைவு படுத்துகிறாற் போல் தோன்றியது.
அடுத்த நிமிடம் இந்த வயல் வரப்பு வழியாக நடந்து போனால், நாஞ்சில் நாடனின் கும்ப முனியையும் அவரின் தவசிப் பிள்ளையையும் பார்த்துப் பேசி விட்டு வரலாம் என்று தோன்றியது. அவர்களின் ஜுகல் பந்தி பேச்சுகளை நினைத்த கணம் அவனுக்குள் இந்தக் கஷ்டத்திலும் ஒரு சின்னப் புன்னகை பூத்தது.
இது எந்த இடம் என்று தெரிந்தால் தன் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது, தான் ஓரளவு நல்ல இலக்கிய வாசகன் என்று…தி.ஜாவையும், நாஞ்சில் நாடனையும் தெரிகிறதே
சின்னச் சிரிப்பு சத்தம் கேட்டது.
“யாரது, யாரது?” நடுங்கிக் கொண்டே கேட்டான்.
‘யாருமில்லை! நாந்தான் உன் மனக் குரல்!’
“யப்பா! நீயாவது சொல்லு! உனக்கு ஏதாவது நினைவு வருகிறதா? “
‘இவ்வளவு யோசிச்சயே நீ யாரு? அதை யோசிச்சயா? அது தெரிந்ததா?’
அப்போதுதான் மண்டையில் அடித்தாற் போல் உறைத்தது.
“‘அய்யோ! நான் யாரு? யாரு? கடவுளே! ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலையே, கடவுளே இது என்ன கஷ்டம்!”
‘நான் யார் என்பதெல்லாம் ரொம்ப கஷ்டமான கேள்வியப்பா! பெரிய பெரிய ஞானிகளும், முனிவர்களும் கூட அந்தக் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கலே! நீ எம்மாத்திரம்?’ மனக் குரலில் ஒரு எகத்தாளம்.
இவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
“இதப் பாரு! எனக்கு ஏதாவது உதவி பண்ணமுடியும்னா பண்ணு! இல்ல சும்மா இரு! இந்த எள்ளல் கலந்த தத்துவ விசாரணை எல்லாம் வேண்டாம்!”
“தான் யாருன்னு தெரியலை! ஆனால் உனக்குள் இருக்கும் தானுக்குத்தான் எத்தனை கர்வம்! ஒரு பத்து வரி முன்னாலே உன்னுடைய இலக்கிய ரசனைக்கு நீயே காலரைத் தூக்கி விட்டுக்கறெ! இந்த’ நான்’ மறந்தாலும் ‘தான்’ மறையாது போல இருக்கே!”
எனக்கிருக்கிற கஷ்டத்தில் இந்தக் கசையடி தேவைதானா என நினைத்துக் கொண்டே” இந்த நினைவுகள், எனக்கு ஏதாவது துப்புக் கொடுக்கிறதான்னு பாத்தேன்!” என்று பலவீனமான குரலில் சொன்னான்.
சொல்லும்போதே ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. சுஜாதாவின் அறிவியல் புனைக் கதைகளில் வருவது போல, கால யந்திரத்தில் பயணித்து, காலம், இடம் எல்லாம் மாறி வந்திருக்கிறேனோ?
சைக்கிள் மணிச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
சைக்கிளில் ஒரு பெரிய மூட்டையோடு ஒருவன் உற்சாகமாகப் பாடிக் கொண்டு வந்தான்.
“வாளை மீனுக்கும், விலங்கு மீனுக்கும் கல்யாணம்,…………………..ஊர்கோலம்”
அவன் பக்கத்தில் வருவதற்குள் அந்தப் பாட்டு முடிந்து அடுத்தது ஆரம்பித்தது.
“ஊதா………….ஊதா…………ஊதா கலர் ரிப்பன்”
அந்த நிமிஷத்தில் உண்மை பளிச்சிட்டது.
“சினிமாவே சுவாசமாய், சினிமாவே வாழ்க்கையாய் இருக்கிற தெய்வத் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன். நிகழ் காலத்தில்தான் இருக்கிறேன்”
அவனை” ஏம்பா! இது எந்த ஊரு? எனக் கேட்க வாயெடுப்பதற்குள் கடந்து போய் விட்டான்.
“அவன் என்னைப் பார்த்தானா? முகத்தில் ஒரு மாற்றமும் இல்லாமல் கடந்து போனானே!”
திடீரென்று ஒரு பயங்கரமான பீதியில் உறைந்து போனான், தான் செத்து கித்துப் போய் ஆவியாய் இருக்கிறோமோ, அதான் அவன் என்னைப் பார்க்கவில்லையோ?
அந்த ஒரு நிமிட பயத்தில் உள்ளம் படபடத்து மயக்கம் வரும் போல இருந்தது.
“சீச்சீ! கால் ரெண்டும் தரையில் நன்றாக பதிந்திருக்கு! மேல வீசுகிற காத்தை நல்லா உணர முடிகிறது. அவன் ஏதொ ஞாபகத்தில் போயிருப்பான்”
“ என்ன சத்தத்தையே காணும்?” தன் பயத்தைப்போக்க மனக் குரலை வினவினான்.
“இல்ல, இதுவரை உன் எண்ணங்கள் போன போக்கில் ஏதாவது க்ளு கிடைத்ததான்னு பாத்தேன்
- நீ ஒரு நல்ல இலக்கிய வாசகன் (தி.ஜா,நாஞ்சில்.சுஜாதா)
- நீ இன்னும் சாகலை
- தமிழ் நாட்டுக்காரன்! உனக்கு அதோட புவியியல், பண்பாடு, இலக்கியம் எல்லாம் தெரிகிறது.
- கடவுளை நம்புகிறவன்! ஒண்ணு ரெண்டு தடவை கடவுளேன்னு சொன்ன”
ஒவ்வொரு க்ளுவுக்கும் அதன் குரலில் கேலி ஏறிக் கொண்டே போயிற்று..அவன் அதை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தான் “.இந்த சமயத்தில் இதை விட்டால் எனக்கு உதவ யாரும் இல்ல”என்று சமாதானம் செய்து கொண்டான்.
அது தொடர்ந்தது ”ஆனா மேற்படி விஷயங்களை வச்சு நீ யார்னு கண்டு பிடிக்கிறது கஷ்டம். இன்னும் கொஞ்சம் யோசி! ஏதாவது பிடிபடுகிறதான்னு பாப்போம்!’
இவ்வளவு யோசனைக்கு நடுவிலும் அவன் நடந்து கொண்டே இருந்தான். நடக்க நடக்க பாதை வளர்ந்து கொண்டே போவது போல தெரிந்தது.
ஒருவேளை 60, 70களின் கதைகளில் வருகிற மாதிரி அம்மாவோ, வேறு யாரோ தண்ணீர் தெளித்து “எழுந்திருடா காலேஜுக்கோ, வேலைக்கோ நேரமாச்சுன்னு“ எழுப்பி விட்டவுடன் இத்தனையும் கனவுதானோன்னு தெளிவேனோ?
ஆனால் இது நிச்சயம் கனவில்லை. ஏனெனில் என்னைச் சுற்றியுள்ள அத்தனை வண்ணங்களும் துல்லியமாகத் தெரிகின்றன. வானத்தின் நீலம், நெற்பயிர்களின் கரும் பச்சை, தூர கரும்புகளின் நீலம் கலந்த பச்சை, புளிய மரத்தின் வெளிறிய பச்சை அனைத்தும் அழகாகத் தெரிகின்றன. சலசலவென ஓடுகிற ஆற்றின் மெல்லியச் சிணுங்கல் சத்தம், புளிய மர இலைகளும், கிளைகளும், உராய்கிற சத்தம், அக்கரைத் தோப்பில் குயில் கூவுகிற சத்தம் எல்லாம் தெளிவாகக் கேட்கின்றன. வயல்களின் பசுந்தழை வாசனை, கடந்து போன மாடு போட்ட சாணி வாசனை, அக்கரையில் எங்கோ வெல்லம் காய்ச்சுகிற வாசனை அத்தனையும் உணர்கிறேன். இது நிச்சயம் கனவல்ல.
வெல்ல வாசனை! அம்மா கோகுலாஷ்டமிக்கு வெல்லச் சீடை பண்ணும் போது வருகிற வாசனை!
“அம்மா அம்மா நீ எங்கே இருக்கம்மா? நான் யாரும்மா?” அழுகை அழுகையாக வந்தது.
அம்மா அடை வார்த்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.
“இந்தாடா, இன்னும் ஒண்ணு போட்டுக்கோ! வெல்லமும், வெண்ணையும் போட்டுக்கோ! அடுத்த அடைக்கு சாம்பார் தரேன்” அவன் ஒரு பத்து வயசு பையனா இருக்கிறான். தொண்டையை அடைத்து விக்குகிறது
“ஏண்டா, தண்ணிய குடியேன்”
அம்மா முழுக்க முழுக்க ஏண்டா, வாடா என்றே சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அம்மா, அம்மா, ப்ளீஸ்! என் பெயரை ஒரு தரமாவது சொல்லேன்” என்று அவன் கத்துவதற்குள் அந்த மனச் சித்திரம் மறைந்தது.
“அடை சாப்பிடறது, தோசை சாப்பிடறது எல்லாம் ஞாபகம் வச்சுக்கோ! நீ யாரு, அதை தெரிஞ்சுக்கத் தேவையான விஷயத்தை மட்டும் மறந்து போ! சரியான ஆளுப்பா நீ” மீண்டும் மனக் குரல்.
அதை அதட்ட வாய் திறப்பதற்குள் வயல் வரப்பு வழியாக யாரோ பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்டது. இந்த முறை தவற விடக் கூடாது என்ற முடிவுடன் அவர்கள் பார்க்கும்படியாக வரப்புக்கு நேராக நின்று கொண்டான்.
ஒருத்தி வேறு எங்கோ பார்த்துக் கொண்டு வந்தாள். அந்த தாவணி போட்ட பெண் அவனை நேராகப் பார்த்தபடி வந்தாள்.
“யக்கொவ்! இதைப் பாரேன்! எவ்வளவு அழகா நீலக் குருவி! நம்ம பக்கத்திலெ இதை மாதிரி பாத்ததேயில்ல!” என்றாள்.
Excellent story-telling; crisp unexpected ending. Congratulations.