கல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்:
- மாணவர்கள் மடிக்கணினியை, வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரைப் பயன்படுத்துகிறார்கள்
- ஆசிரியர்கள் பவர்பாயிண்ட் காட்சியளிப்பு மென்பொருளை போதனைக்குப் பயன்படுத்துகிறார்கள்
- ஆசிரியர்கள் படங்காட்டிக் கருவிகளை போதனைக்காகப் பயன்படுத்துகிறார்கள்
- சில முக்கியமான கரும்பலகை கிருக்கல்களை செல்பேசி காமிரா கொண்டு மாணவர்கள் படமெடுக்கிறார்கள்
- மேற்குலகப் பல்கலைக்கழகங்களில், பாட உதவி ஆவணங்கள், மார்க்குகள், கலந்தாய்வுகள் யாவும் பல்கலைக்கழக உள் இணையம் மூலம் நடக்கிறது
- இன்று, பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள், இணையம் மூலம் பல துறையிலும் பாடங்களை இலவசமாக வழங்கவும் தொடங்கியுள்ளனர். Udemy, Coursera மற்றும் MIT Open Education போன்ற முயற்சிகள் ஆரம்பித்துள்ளன
ஆக, மாணவர்கள் பாடம் கற்க வேண்டுமானால், அவர்களுக்கு இரு முறைகள்தான் உள்ளன;
- பள்ளியோ, அல்லது கல்லூரிக்கோ செல்ல வேண்டும்
- இணையத்தில், கணினி முன் உட்கார்ந்து ஆசிரியரின் விரிவுரை மற்றும் காட்சியளிப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்
நீங்கள் கல்வியை நோக்கிப் போக வேண்டும், கல்வி உங்களை நோக்கி வருவதில்லை. இந்த முறையில் உள்ள ஒரு பெரிய குறை என்னவென்றால், மாணவனுக்கு எதில் அதிக நாட்டமுள்ளதோ, அதைப் பற்றி, கல்விமுறை கவலைப் படுவதே இல்லை. வீட்டிற்கு வரும் உறவினர், நண்பர்கள் படிக்கும் மாணவர்களைக் கேட்கும் முதல் கேள்வி, அவர்களுக்கு எதில் நாட்டம் என்பது. கல்வித்துறை, இன்றும் 90 –களில் இணையம் மூலம் வியாபாரம் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்த வியாபார உலகம் போலவே காட்சியளிக்கிறது.
நாட்டத்திற்கேற்ப கல்வி
கதிரேசன் – வயது 14. அவனுக்கு விமானவியல் மிகவும் பிடிக்கும.
கதிரின் வீட்டிற்கு அன்றைய கணித வகுப்பு முடிந்ததும் ஒரு காட்சியளிப்பு அணுப்பப்படுகிறது. அதில் உள்ள வீட்டுப் பாடம் எல்லாம், விமானவியல் சார்ந்தது. அத்துடன், ஆரம்பத்தில், அன்றைய பாடத்தை விமான உதாரணம் கொண்டே சொல்லிக் கொடுக்கும் விடியோ.
ஆங்கிலப் பாடமும் விமானம் சார்ந்த விடியோவுடன் சொல்லிக் கொடுத்து, அத்துடன் வீட்டுப் பாடம் ஒன்றும் கொடுக்கப்படும்.
வேதியல் பகுதியில், விமானம் சார்ந்த உதாரணங்கள்.
இப்படி, நாட்டத்திற்க்கேற்ற கல்வி அளித்தால், மாணவர்கள் வெகு எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்வார்கள்
வேலாயுதம் – வயது 14 – கதிரேசனுடன் படிக்கிறான். விவசாயப் பிண்ணனியில் வளர்ந்ததால், அவனுக்கு விவசாயத்தில் நாட்டம். வேலுவுக்கு இயற்கணித, ஆங்கில, வேதியல் உதாரணங்கள் யாவும் விவசாயம் சார்ந்தவை. அவனுடைய வீட்டுப் பாடங்களும் விவசாயம் சார்ந்தவை.
இம்முறையான கல்வி எல்லோருக்கும் பயன்படும் என்றாலும், மாற்றம் என்பது கல்வித்துறையில் மிகவும் மெதுவாக நடக்கும் ஒன்று. இக்கட்டுரைத் தொடரில் உள்ள எல்லாத் துறைகளிலும் மிகவும் கடைசியில் கருவிகளைப் பயன்படுத்தும் துறை கல்வித்துறையாகத்தான் இருக்க வேண்டும்.
இடத்தை நோக்கிக் கல்வி
இந்த அணுகுமுறையில், முதலில் மாணவர்கள், எந்த இடங்களில் அதிகம் படிக்கிறார்கள், மற்றும் எத்தனை மணி நேரம், எந்தப் பாடத்தைப் படிக்கிறார்கள் என்று பல்கலைக்கழக கணினிக்கு அறிவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்களுடைய திறன்பேசியில் உள்ள பயன்பாடு மூலம் இந்த செய்திகளை மேலேற்றி விடலாம்.
பல்கலைக்கழக கணினியில் உள்ள நிரல் ஒன்று மாணவனின் வீட்டுப் பாட மார்க்குகள், அவன்/அவள் படிக்கும் முறைகள் (வீட்டிலா, காண்டீனிலா, பூங்காவிலா, நண்பர்களுடனா) என்று ஆராய்ந்து, இரண்டாவது செமஸ்டரிலிருந்து, ஆலோசனை வழங்கும். பல்கலைக்கழகம் இந்த விஷயத்தில் தலையிடாது. இவ்வகைச் சேவை பாரம்பரிய கல்வி முறைகளில் ஒரு சிறிய கருவி இணைய முன்னேற்றம் என்று சொல்லலாம்.
இன்று பெரிய நிறுவனங்கள், பல்கலைக்கழக பட்டதாரிகள் இந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகின்றன. ஆனால், கல்வித் துறையில் இவ்வகை புதிய கருவி இணைய முயற்சிகள் அதிக பயன் தராவிட்டாலும், முயற்சிக்க வேண்டும். இதனால், மாணவர்கள், ஒரு நடைமுறைக் கருவி இணைய முயற்சி எப்படி இயங்கும், அதன் பிரச்னைகள் என்னவென்று அறிய மிகவும் உதவும்.
இந்தக் கட்டுரைத் தொடரில் மிகவும் சின்ன கட்டுரை இதுதான். என்னைப் போல, படிக்கும் உங்களுக்கும் இது சற்று ஏமாற்றம் அளிக்கும் என்று தெரியும். ஆயினும், இக்கட்டுரையை வெளியிடுவதன் காரணம், புதிய முயற்சிகள் இத்துறையில் வேறூன்ற வேண்டும் என்ற ஆசையினால் தான். படிக்கும் பருவத்தில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஓரளவு புரிந்தால்தான், பணி புரியும் பொழுது, இத்துறையை முன்னேற்ற முடியும்.