ஏன் மேகக் கணினியம் & எப்படி மேகத்திரளில் பிணையலாம்?

இதுவரை…
மேகக்கணிமையின் பயனர்கள், தொழில்நுட்பங்கள், பண்புகள், சேவை அமைப்புகள் ஆகியவற்றை ஓரளவு விரிவாகப் பார்த்திருக்கிறோம்.
இனி…
மேகக்கணிமையின் பயனர்களை நுகர்வோர்கள், வணிகப்பயனர்கள் என்று பிரிக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்பகுதியில் இவ்விருவகைப் பயனர்கள் மேகக்கணிமையை நோக்கி எவ்வாறு நகர்வது என்று கொஞ்சம் பார்க்கலாம்.
’நகர்வது’ என்றால்? பொதுவாகவே கணிமைப் பயன்பாடென்பது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு மென்பொருளை இயக்குவது என்ற பொருள்படவே அறியப்படுகிறது. மக்கள் பயன்படுத்தி வந்த பிரபல கணிமைக்கருவிகள் பலவும் இவ்வகையிலேயே இருந்திருக்கின்றன. எனவே, மேகக்கணிமையைப் பாவிப்பதென்பது, தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒன்றுக்குப் போவதுபோலத்தான். அதனாலேயே, இந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்த ஒரு செயல்பாடாகிறது. இம்மாற்றத்தையே நகர்வு என்று குறிப்பிடுகிறேன்.
நுகர்வோரைப் பொறுத்தமட்டில் அவர்கள் மேகக்கணிமைக்கு நகர்வது என்பது ஒரு மென்பொருள் சார்ந்த எளிதான தெரிவு. நான் இக்கட்டுரையை என் கணினியில் உள்ள மைக்ரோசாஃப்ட் வேர்டு மென்பொருளில் எழுத வேண்டுமா, அல்லது கூகுள் டாக்ஸில் எழுத வேண்டுமா என்ற தெரிவு. உங்கள் ஆவணத்தை எந்தக் கணினியிலும் உடனடியாக எடுக்க முடிதல், மலிவு விலை, கணினியில் மென்பொருள் நிறுவத் தேவையின்மை, உடனுக்குடன் சேமிக்க இயலுதல், இணைய இணைப்பு என்று பல்வேறு கோணங்களில் நோக்கி நான் இம்முடிவை எடுப்பேன். முடிவெடுத்த பிறகு மேகக்கணிமையைப் பயன்படுத்துவதில் பெரிய தயாரிப்புகள் ஏதும் இல்லை. வேர்டு உங்கள் கணினியிலேயே நிறுவப்பட்டிருப்பதால் அதில் சில சிறப்பியல்புகள் இருக்கலாம். அவை உலாவியில் பயன்படுத்தக்கூடிய கூகுள் டாக்ஸில் இல்லாமல் இருக்கலாம். மற்றபடி, புதியதொரு மென்பொருளைப் பயன்படுத்தும்போது இயல்பாக வரும் சில பிரச்னைகள், கேள்விகள் தவிர மேகக்கணிமையின் பயன்பாட்டில் பெரிய சிக்கல்கள் இல்லை. அதனால்தான் இன்று நுகர்வோர் பலர் எளிதாக மேகக்கணிமை நோக்கி நகர்ந்துவிடுகின்றனர்.
இதுவே வணிகப்பயனர்கள் என்றால் கதையே வேறு. என் நண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் பயனர் தொடர்பு நிர்வாக வலைச்செயலியைப் பராமரிக்கும் அணிக்கு அவன் மேலாளர். இந்த வலைச்செயலி அவனது நிறுவனத்திலேயே முழுமையாக உருவாக்கப்பட்டு இதுவரை பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த வலைச்செயலியை அந்நிறுவனத்தின் சர்வர் வன்பொருளிலேயே நிறுவி இயக்குகின்றனர்.

Cloud_Computing_internet-of-things-and-supply-chain-logistics

அவனது நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களும் சேவைப் பிரதிநிதிகளும் அன்றாடம் பயன்படுத்தும் செயலி இது. அவர்களது பணியைச் செவ்வனே செய்து முடிக்க இச்செயலி அவர்களுக்கு இன்றியமையாதது. இதில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால் உடனே சட்டையைப் பிடிக்க வருவார்கள். எனவே எவ்விதத் தடங்கலும் இல்லாமல் இச்செயலி தொடர்ந்து இயங்க வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், இந்நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகெங்கும் விற்பனை மேற்கொள்வதால் இச்செயலி இருபத்து நான்கு மணிநேரமும் உலகின் பல மூலைகளிலிருந்தும் இயங்கவேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்நிறுவனம் இச்செயலியை மேகக்கணிமைக்கு நகர்த்துவதைப் பற்றி யோசித்தது. காரணங்கள் பல:
1. அவர்களது வீச்சையும் விற்பனையையும் அதிகமாக்கவேண்டும்
2. அவர்களது தேவைக்கேற்ப இதன் பயனர் எண்ணிக்கையைக் கூட்டவும் குறைக்கவும் முடியவேண்டும்
3. வன்பொருள், மென்பொருள் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கவேண்டும்
4. இச்செயலியில் புதிய பயன்பாடுகளைச் சேர்க்கவேண்டுமென்றால் அதிக காலமும், செலவும் ஆகிறது. இதைக் குறைக்கவேண்டும்
நுகர்வோரைப்போல இந்நிறுவனத்தின் பயனர்கள் சட்டென்று ஒரு முடிவெடுத்து ஒரு மேகக்கணிமைச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கமுடியுமா? அல்லது என் நண்பன் அப்படி ஒரு முடிவெடுத்து தடாலடியாக ஒரு புதிய செயலியை அவர்களுக்களித்து அவர்களை மாறச்சொல்ல முடியுமா? வாய்ப்பே இல்லை. அவர்களது அன்றாடப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை, சேவை என்று பலவும் அடிபடும்.
மேலும், இச்செயலி சேகரிக்கும் தரவுகளை அந்நிறுவனத்தில் பல்வேறு துறைகள் பலவிதங்களில் பயன்படுத்துகின்றன. இத்துறைகளெல்லாம் இனி தரவுகளுக்கு எங்கே போகும்? புதிய மேகக்கணிமைச் செயலி இத்தரவுகளை அதே சட்டகத்தில், அதே நேரத்தில், அதே தரத்தில் அளிக்க இயலுமா? இதுதான் மேகக்கணிமை எதிர்கொள்ளும் சவால்.
வணிகப்பயனர்களின் மிகப்பெரிய அவசியம் வணிகத் தொடர்ச்சி. அதாவது, உள்கட்டமைப்பில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் நடக்கிற வணிகம் நடந்தே ஆகவேண்டும். வணிகத் தொடர்ச்சியைப் பாதிக்காமல் எவ்வாறு மேகக்கணிமைக்கு நகர்வது? மேகக்கணிமையில் எந்த சேவை அமைப்பு அவர்கள் விரும்பும் முன்னேற்றங்களை அதிக பாதிப்பில்லாமல் அளிக்கக் கூடும்? இக்கேள்விகளுக்கு ஏற்ற விடைகளை அளிக்காமல் வணிகப்பயன்பாட்டில் மேகக்கணிமை நோக்கி நகர்வது சாத்தியமே இல்லை.
இனி, அந்நிறுவனம் எப்படி இதை அணுகியது என்பதை விளக்க முயற்சி செய்கிறேன். இங்கு சரியான அணுகுமுறை என்று ஏதுமில்லை. அந்த நிறுவனத்திற்கு மிகச்சரி என்று படுவது இன்னொரு நிறுவனத்திற்கு வெகுசொதப்பலாக இருக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டே மேலும் படியுங்கள்.
1. அவர்களிடம் ஏற்கனவே உள்ள வலைச்செயலியை அவர்களது சர்வரிலிருந்து அப்படியே அமேசான் அல்லது மைக்ரோசாஃப்ட் மேகத்தின்மேல் ஏற்றிவிட முடியுமா? முடியும். வன்பொருள் பராமரிப்புச் செலவுகள் குறையும். தேவைக்கேற்ப பயனர் எண்ணிக்கையைக் கூட்ட குறைக்க முடியும். தேவைக்கேற்ப கணினித் துணுக்குகளைச் சேர்த்துக்கொண்டால் போதும். ஆனால் அவர்கள் விரும்பும் முன்னேற்றங்கள் அனைத்தையும் அடையமுடியாது. குறிப்பாக, செயலி இன்னும் அதேதான் என்பதால் புதிய பயன்பாடுகள் சேர்ப்பது இன்னும் அதே வழியில்தான் நடந்தாகவேண்டும். இதனால் நேரம் விரயமாகிறது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. எனவே, அமேசான் போன்ற உள்கட்டமைப்புச் சேவை அமைப்பு அவர்களுக்குச் சரிவராது.
2. ஹிரோகு, கூகுள் போல ப்ளாட்ஃபார்ம் சேவையை வாங்கி அதன்மேல் புதியதோர் செயலியைக் கட்டமைக்க முடியுமா? முடியும். பராமரிப்புச் செலவுகள் உள்கட்டமைப்புச் சேவையைவிடச் சற்று அதிகம்தான். ஆனாலும், மற்ற முன்னேற்றங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. புதுச்செயலி தயாரானதும் அதன்மேல் புதிய பயன்பாடுகள் சேர்ப்பது சுலபமாக இருக்க இயலும் (எதிர்பார்ப்புதான்). ஆனால், அந்நிறுவனத்தின் வீச்சையும் விற்பனையையும் அதிகரிப்பது எப்படி? புதிய செயலியில் எந்த புதிய காயகல்பத்தைச் சேர்ப்பது? அவர்களுக்கு இதில் அவ்வளவு தெளிவும் நிபுணத்துவமும் இல்லை.
3. சரி, சிறந்த பயனர் தொடர்பு நிர்வாக வலைச்செயலி ஏதேனும் மென்பொருள் சேவையாகக் கிடைக்கிறதா? நிச்சயமாக. சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் விற்பனை மேகமும் சேவை மேகமும் அவர்களது தேவைகளுக்கு அருகிலுள்ளது. பராமரிப்புச் செலவுகள் அந்நிறுவனத்தின் சொந்தக்கடையைக் காட்டிலும் சற்று குறைவு. பயனர்களைச் சேர்க்கவேண்டுமென்றால் சேல்ஸ்ஃபோர்ஸில் சில நிமிடங்கள் வேலை. தேவைக்கேற்ப அது கணிமைத் திறனை ஏற்றிக்கொள்ளும். பயனர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சேவைக்கட்டணம்.
புதிய பயன்பாடுகள் சேர்ப்பதென்பது எளிது. சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற மென்பொருள் சேவைகள் பல ஆண்டுகாலமாக இத்துறையில் பல சவால்களைச் சந்தித்திருப்பதால் அவர்கள் தனிப்பயனாக்கி திருத்தியமைக்கக்கூடிய பல்வேறு சிறப்பியல்புகளை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல, விற்பனையை எளிதாக்கவும் புதிய விற்பனை வாய்ப்புகளை முன் உணர்ந்து சொல்லவும் வழிவகைகள் வைத்திருக்கிறார்கள். எனவே, என் நண்பனின் நிறுவனம் மேகம் நோக்கி நகர இது ஒரு பொருத்தமான வழியாக இருக்கிறது.
(குறிப்பு: இது சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்திற்கான விளம்பரமல்ல. நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தில் பங்கேற்ற ஒரு மேகக்கணிமை நிறுவனம் இது. அவ்வளவே! வேறொரு சூழலில் இதே சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் மிகத்தவறான தேர்வாக இருக்கலாம்).
சரி, இனி சேல்ஸ்ஃபோர்ஸ் விற்பனை மேகத்திடமிருந்து அந்நிறுவனத்தின் இதர துறைகள் விற்பனை மற்றும் பயனர் தரவுகளை எவ்வாறு பெறுவது? சேல்ஸ்ஃபோர்ஸ் சேவைசார் கட்டமைப்பாக API சேவைகளை அளிக்கிறது. இதன்மூலம் அத்துறைகள் அதே தரவுகளைப் பெற இயலும். ஆனால் இதில் வணிகத் தொடர்ச்சி அடிபடும். ஏனெனில் அத்துறைகள் அவர்களது கட்டமைப்பை மாற்றி இனி சேல்ஸ்ஃபோர்ஸிடம் ஊடாடவேண்டும். இதைச்செய்ய அத்துறைகளுக்குக் கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும். அவர்களுக்கு வேறுவேறு வேலைகள் இருக்கிறதல்லவா!
அதற்குப் பதிலாக என் நண்பனின் அணி ஒரு இடைநிலை மென்பொருளை உருவாக்க முடிவு செய்தது. எப்போதெல்லாம் சேல்ஸ்ஃபோர்ஸ் பக்கம் தரவுகள் மாறுகிறதோ அப்போதெல்லாம் இந்த இடைநிலை மென்பொருள் பழைய தரவுத்தளத்திலேயே இம்மாற்றங்களை உடனுக்குடன் சேமிக்கும். இதனால், இதர துறைகள் எப்போதும்போல் பழைய தரவுத்தளத்திலிருந்தே தரவுகளை எடுத்துக்கொள்ளலாம். வணிகத் தொடர்ச்சிக்குக் குந்தகம் விளையாது. அத்துறைகளுக்கு நேரம் கிடைக்கும்போது அவர்கள் சேல்ஸ்ஃபோர்ஸுக்கு மாறிக்கொள்ளலாம்.
சரி, இனி பழைய வலைச்செயலியின் பயனர்களின் கதி? திடீரென்று ஒருநாள் அவர்களை சேல்ஸ்ஃபோர்ஸுக்கு மாறச்சொன்னால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? அங்கே வணிகத் தொடர்ச்சி அடிபடுமா? ஆம். இதுவும் நிறுவனச்சூழலில் ஒரு மிகப்பெரிய பிரச்னை. மாற்றம் எப்போதும் மக்களுக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில் மாற்றம் அவர்களது பணிச்சுமையை அதிகரிக்கிறது; ஆக்கத்திறனைக் குறைக்கிறது; மன உளைச்சலும்கூட ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையை எதிர்நோக்கிய அவர்கள் எல்லாப் பயனர்களையும் தடாலடியாக மாற்ற முயலவில்லை. மாறாக, ஒரு சிறு குழுவை உருவாக்கி அவர்களை முதல் சேல்ஸ்ஃபோர்ஸ் பயனர்களாக அங்கீகரித்தனர். அவர்களுக்குப் போதிய அளவு பயிற்சியளித்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவுசெய்தனர்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியளித்ததா? கதைக்குப் பொருத்தமாக, அவர்கள் வெற்றிபெற்றனர் என்று டுமீல் விட்டுவிட்டுப் போய்விடலாம்தான். ஆனால் உண்மையில் இந்நிறுவனம் இன்னும் இம்மாற்றத்தைச் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. வெற்றியா தோல்வியா என்பதை நானும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் அவர்களது அணுகுமுறை சரியானது என்று நான் கணிக்கிறேன்.
தனி மேகம், பொது மேகம் பற்றி விளக்குவதாகச் சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன். ஆனால் இப்படி ஒரு நடைமுறை உதாரணம் அளிக்காமல் அவற்றைப் பற்றிப் பேசுவது அதிகம் பயனளிக்காது என்று உணர்ந்ததால் அதை அடுத்த பகுதிக்குத் தள்ளிவைத்திருக்கிறேன். ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்!
 
இப்பகுதியில் வரும் கலைச்சொற்கள்
சேவை அமைப்பு: Service model
வணிகப்பயனர்கள்: Business users
பயனர் தொடர்பு நிர்வாகம்: Customer relationship management (CRM)
வலைச்செயலி: Web application
செயலி: Application
வணிகத் தொடர்ச்சி: Business continuity
உள்கட்டமைப்புச் சேவை: Infrastructure as a service (Iaas)
ப்ளாட்ஃபார்ம் சேவை: Platform as a service (Paas)
மென்பொருள் சேவை: Software as a service (Saas)
துணுக்கு: Computing Instance / Droplet
விற்பனை மேகம், சேவை மேகம்: Sales cloud, Service cloud (Salesforce.com offerings)
தனிப்பயனாக்கங்கள்: Customizations
சேவைசார் கட்டமைப்பு: Service-oriented architecture
இடைநிலை மென்பொருள்: Middleware

One Reply to “ஏன் மேகக் கணினியம் & எப்படி மேகத்திரளில் பிணையலாம்?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.