கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக உலக வானிலையையும், அதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்த எல்-நீன்யோவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெரும்பாலான வானிலையாளர்களின் கருத்துப்படி, இவ் வருட மத்தியில், அதாவது இந்திய வருடக்கணக்கில் ஆடி மாதம், அது சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது.
இதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டுவது பின்வரும் காரணிகளைத்தான். என் நீன்யோவின் தாக்கத்தைக் கணக்கிடும் முக்கியக் காரணி, பசிபிக் கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியான நீன்யோ 3.4 என்று அழைக்கப்படும் இடத்தில் நிலவும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST). இந்தப் பகுதியின் வெப்பநிலை சராசரிக்கும் அதிகமாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும்போது எல் நீன்யோ உருவாகிறது. மிக அதிக வலுவான எல் நீன்யோ நிகழ்வுகளில் ஒன்றாக இருந்த இந்த தடவை, இந்தப் பகுதியின் வெப்பம் சராசரியை விட 3.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக கடந்த நவம்பர் மாதம் இருந்தது. வெப்பநிலை அதிலிருந்து படிப்படியாகக் குறைந்து, தற்போது 1.7 டிகிரி செல்சியஸ் மட்டுமே சராசரிக்கு அதிகமாக இருக்கிறது. இது எல் நீன்யோவின் தாக்கம் குறைந்து கொண்டு வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது. அடுத்தது வர்த்தகக் காற்றுகளின் வலுவும் வீசும் திசையும். எல் நீன்யோ நிகழ்வின் போது, கிழக்கு நோக்கி வீசும் வர்த்தகக் காற்று (Trade Winds) பலவீனமடைகிறது. இது பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் காற்றழுத்தம் குறைவதால் ஏற்படுகிறது. ஆனால், சென்ற சில மாதங்களில் வலுக்குறைந்து காணப்பட்ட வர்த்தகக் காற்றுகள் இப்போது வலுவடைந்து வருகின்றன. அதைத் தவிர, பசிபிக் பெருங்கடலின் நீரோட்டமும் மேற்கு நோக்கி வேகமாக நகர்ந்து, வெப்ப நீரோட்டைத்தை மேற்கு நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. என் நீன்யோவின் தாக்கத்தைக் குறிக்கும் இன்னொரு முக்கிய அளவீடான, காற்றழுத்தத்த மாறுபாட்டைக் குறிக்கும் தென்பகுதி அலைவின் (SOI), 30 நாள் சராசரி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது, முன்பு குறிப்பிட்ட படி ஆடி மாத வாக்கில் இந்த எல்-நீன்யோ ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. அதன் பிறகு எல் நீன்யோ நிகழ்வைப் பிரதிபலிக்கும் அளவீடான என்ஸோ (ENSO) ந்யூட்ரல் என்ற நிலைக்குத் திரும்பக்கூடும் என்பதே பெரும்பாலான வானிலை மாடல்களின் கணிப்பு.
எல் நீன்யோவின் தாக்கம்
ஓரிரு விதிவிலக்குகள் தவிர, இந்த முறை எல் நீன்யோவின் விளைவுகள் கிட்டத்தட்ட நிபுணர்கள் கணித்த மாதிரியேதான் இருந்தன. இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போட்டு, சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தது. இதுபோல உலகத்தில் பல பகுதிகளில் அதீத மழைப்பொழிவு, மற்ற சில பகுதிகளில் வறட்சி என்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது எல்-நீன்யோ. இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையை உருவாக்கியது. மழையை எதிர்பார்த்து இந்தோனேசியாவின் விவசாயிகள் காத்திருந்ததால், அங்கு நெற்பயிர் விதைப்பும், அறுவடையும் தாமதமாகி, உணவுப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியது. மார்ஷல் தீவுகள் வறட்சியின் காரணமாக அவசர நிலையைப் பிரகடனம் செய்தன (http://www1.ncdc.noaa.gov/pub/data/cmb/sotc/drought/2016/01/RMI-Proclamation-Declaring-State-of-Emergency-160203.pdf)
இந்தோனேசியாவில் விவசாயிகள், வயற்குப்பைகளை எரிப்பதால் தோன்றும் தென்கிழக்காசியாவின் புகைமண்டலம், இம்முறை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
இது போதாது என்று, சில விசித்திரமான விளைவுகளுக்கும் இந்த எல் நீன்யோ காரணமாக இருந்திருக்கிறது. உதாரணமாக, வியாட்னாம் நாட்டில் வளமான பகுதிகளில் ஒன்று மேகாங் ஆற்றின் முகத்துவாரம். நமது காவிரி டெல்டாப்பகுதியைப் போல, விவசாயத்தில் சக்கைப்போடு போடும் இந்தப் பகுதியில் இம்முறை எல் நீன்யோவின் காரணாக போதுமான மழை இல்லாமல் ஆற்றின் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால், அந்த ஆற்றின் முகத்துவாரப்பகுதிகளில் கடலில் இருந்து வெள்ளம் புகுந்தது. உள்நாட்டில் ஆற்றுப்படுகையில் கிட்டத்தட்ட 50 முதல் 60 கிலோமீட்டர்கள் வரை உப்பு நீர் ஊடுருவி விட்டது. இதன்காரணமாக, முகத்துவாரப்பகுதிகள் முழுவதும் உப்புப் படிந்து பயிர் வளர்ச்சியைப் பாழாகிவிட்டது.இதற்குத் தீர்வுகாண வியாட்நாம் அரசு நிபுணர்களை அழைத்து ஆலோசனை கேட்டுவருகிறது.
ஏற்கனவே உயர்ந்து வரும் உலக வெப்பநிலையோடு எல் நீன்யோவின் விளைவுகளும் சேர்ந்துகொண்டதால், கடந்த ஒரு வருடங்களாக பல மாதங்கள் சராசரியை விட அதிக வெப்பநிலையைப் பதிவு செய்தன. உச்சகட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம், இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலைகளிலேயே (அதாவது 20 நூற்றாண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை அளவுகளில்) மிகப்பெரிய சராசரிக்கும் அதிகமான விலக்கைப் பதிவு செய்தது. அந்த மாதத்தில் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை 1.35 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று நாஸா (NASA) தெரிவித்திருக்கிறது. இதன் நேரடி விளைவு ஆர்டிக் பகுதியில் உருவாகும் பனிப்பறை அளவுகளில் தெரிந்தது. அங்கு குளிர்காலத்தில் சராசரியைவிட ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் குறைவாக பனிப்பறைகள் உருவாகியிருக்கின்றன. இது கோடையின் போது மேலும் உருகக்கூடும் என்பதால், பெருங்கடல்களின் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கூடும்.
அளவுக்கு அதிகமான இந்த வெப்பநிலை, பெருமளவு கடல்களையே பாதிக்கின்றன என்பதின் மற்றொரு உதாரணம். பவழப்பாறைகளின் சலவை (Coral Bleaching) என்று அழைக்கப்படும் நிகழ்வு. கடல் மட்டத்திற்குக் கீழே உயரும் வெப்பத்தால், பவழப்பாறைகள் அதன் மேலுள்ள பாசிப்படிவத்தை இழக்கின்றன. அதனால் பசுமையாகக் காணப்படும் பவழப்பாறைகள் வெள்ளை நிறத்தை அடைகின்றன. (படம் காண்க). இதுவரை மும்முறை ஏற்பட்டிருக்கும் இந்த நிகழ்வு மூன்று முறையும் எல் நீன்யோ ஆண்டுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடவை, போன இரண்டு முறைகளை விட நீண்டகாலம், அதாவது கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலத்திற்கு (2014லிலிருந்து 2017 வரை) இந்த நிகழ்வு தொடரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அட்லாண்டிக், இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள கிட்டத்தட்ட 4600 சதுர மைல்கள் அளவுள்ள பவழப்பாறைகள் இதனால் பாதிப்படைந்துள்ளன. இப்படி பவழப்பாறைகள் உயிரிழப்பதால், கடல் சீற்றத்திலிருந்து பவழப்பாறைகளால் பாதுகாக்கப்படும் சிறிய, தீவு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்திலும், கடல் சுற்றுப்புற சூழ்நிலையிலும் இதன்மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடல்வாழ் மீன்பிடிப்பை நம்பியிருக்கும் சுமார் 500 மில்லியன் மக்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தில் சமோவாத் தீவின் அருகே எல் நீன்யோவால் பாசிகளை இழந்து வெண்மையாக மாறிக்கொண்டிருக்கும் பவழப்பாறைகளைக் காணலாம்
மத்திய அமெரிக்கப் பகுதியான கரிபியன் நாடுகளில் வறட்சி, வடக்கு பிரேசிலில் வழக்கத்தை விடக் குறைவான மழையளவு ஆகியவற்றை ஒருபுறமும் தெற்கு பிரேசில், வட அர்ஜெண்டினா, பராகுவே ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு அதிகமான மழையால் பெருவெள்ளத்தையும் இந்த என் நீன்யோ உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட 200,000 பேர் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதைப் போலவே ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் அதிக மழைப்பொழிவையும், அதனால் பெரு வெள்ளத்தையும் உருவாக்கி, எதியோப்பியா, சோமாலியா போன்ற ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியின்றி தத்தளித்துக்கொண்டிருக்கும் நாடுகளில் கடும் வறட்சியையும் இது ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக பல நாடுகளின் பொருளாதாரங்களை பாதித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு புறம் வெப்பம், மறுபுறம் அதிக மழைப்பொழிவு ஆகிவற்றின் காரணமாக ஸிக்கா, மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் உருவாகவும் ஒரு காரணமாக எல் நீன்யோ இருக்கிறது.
பல பாதிப்புகளைச் செய்தாலும், சில இடங்களில் இந்த எல் நீன்யோ நிகழ்வு நன்மைகளையும் செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக வறட்சியையே சந்தித்துவந்த கலிபோர்னியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வட கலிபோர்னியாவில், மழைப்பொழிவின் காரணமாக ஏரிகள் நிரம்பிவருகின்றன. அல்மெடன் ஏரியின் முந்தைய தோற்றமும் தற்போது நீர் நிரம்பிய நிலையில் அதன் தோற்றமும் கீழே.
(நன்றி – லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்)
அதுபோலவே ஃபால்சம் ஏரி, சாஸ்தா ஏரி ஆகியவையும் நிரம்பி விட்டன. 2011க்குப் பிறகு சாஸ்தா ஏரி அதன் கொள்ளளவில் 85 சதவிகிதத்தை எட்டியதால், அதிலிருந்து நீரை வெளியேற்றும் நிலையும் இதனால் ஏற்பட்டது. அதேபோல் ஃப்ளோரிடாவிலும் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இம்முறை இருந்தது. சராசரியாக 7 டர்னடோக்களைச் சந்திக்கும் இந்தப்பகுதியில் இந்த தடவை 18 டர்னடோக்கள் உருவாகின. கடந்த எட்டு ஆண்டுகளாக கடும் வறட்சியைச் சந்தித்துவந்த சிலியில் சராசரியை விட அதிக மான மழை பெய்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அண்டாரா பாலைவனம் ஒரு வருடத்தில் பெறும் மழையளவை ஒரே நாளில் பெற்றிருக்கிறது. தொடர் மழையோடு, ஆண்டெஸ் மலையில் ஏற்பட்ட பனிப்பொழிவும் பனிச்சறுக்கு விளையாட்டிற்கான வசதிகளை அதிகரித்ததால், அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஊக்கத்தைத் அடைந்திருக்கிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில் வழக்கமாக எல் நீன்யோவின் போது வறண்ட வானிலையே காணப்படும். இம்முறையும் பெரும்பாலான பகுதிகள் வறண்டு காணப்பட்டாலும், இந்தியப் பெருங்கடலில் நிலவிய வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலையால் உள்நாட்டின் பல பகுதிகளில் வழக்கமான மழைப்பொழிவு இருந்தது. இதனால் பாதிப்பு ஓரளவு குறைந்தது.
வழக்கமான எல் நீன்யோவின் தாக்கத்திற்கு சில விதிவிலக்குகளும் இருந்தன. 1998ல் உருவான எல் நீன்யோவைப் போல் மழைப்பொழிவை தெற்கு கலிபோர்னியா பகுதியில் இம்முறை எல் நீன்யோ ஏற்படுத்தவில்லை. தென் கலிபோர்னியா பகுதியில் உருவான உயர் காற்றழுத்தம் இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் பின்பகுதியில்தான் இப்பகுதி மழைப் பொழிவைச் சந்தித்தது. ஆனால், இம்முறை இது போன்ற விதிவிலக்குகள் மிகக் குறைவு. இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், எந்த இரண்டு எல் நீன்யோ விளைவுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுதான்.
வருகிறாள் குட்டிப் பெண்
இப்படி பல மாறுதல்களைத் தட்பவெப்ப நிலையில் ஏற்படுத்தி, பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், எல் நீன்யோவின் தாக்கம் இன்னும் இரண்டொரு மாதங்கள் மட்டுமே இருக்கும் என்பது ஒரு ஆறுதலான விஷயம். அப்படியெல்லாம் ஆறுதலடைய வேண்டாம் எல் நீன்யோ விளைவு மறைந்தாலும் அதன் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடித்திருக்கும் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றன. அட, அதற்குப் பிறகு வழக்கமான வானிலைதானே என்று கேட்பவர்களைப் பார்த்து அவர்கள் இன்னும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள். அது என்னவென்றால், என் நீன்யோ என்ற குட்டிப்பையனுக்குப் பின்னால், குட்டித்தங்கையான லா நீன்யா உருவாகக்கூடும் என்பதுதான். நீன்யோ 3.4 பகுதிகளில் வெப்பநிலை குறைந்து வரும் வேகத்தை வைத்துத்தான் இந்தக் கணிப்பு சில வானிலையாளர்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் பின்பகுதியில் இப்பகுதி வெப்பநிலை சாரசரியை விடக் குறைந்து லா நீன்யாவாக மாறக்கூடும் என்பது அவர்களின் கருத்து. கடந்த கால வரலாற்றை நோக்கும் போது ஒரு மிக வலுவான எல் நீன்யோவைத் தொடர்ந்து லா நீன்யா வருவது வழக்கமான நிகழ்வுதான் என்பதையும் சுட்டுகின்றனர் இவர்கள்.
ஆனால், இப்போதைக்கு இது பற்றி உறுதியாக எதுவும் தெரிவிப்பதற்கு இல்லை. ஜூன் – ஜூலை மாத வாக்கில்தான் இதைப் பற்றி சரியாகக் கணிக்க முடியும்.
சரி லா நீன்யாவால் என்னவிதமான பாதிப்பு ஏற்படும் ? எல் நீன்யோவிற்கு நேரெதிரான விளைவுகள்தான் லா நீன்யாவால் உருவாகும். அதாவது இப்போது மழை பொழிகின்ற பகுதிகளில் வறட்சியும், வறட்சி நிலவுகின்ற பகுதிகளில் அதிக மழைப்பொழிவும் உண்டாகும். இந்தியாவைப் பொறுத்த வரையிலும் இது ஒரு நன்மையைத் தரும் நிகழ்வு. லா நீன்யோ வருடங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழைப்பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவ மழையின் அளவு அதிகமாகவே இருக்கும். இதே போல, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் லா நீன்யா நல்ல மழைப் பொழிவைத்தரும். ஆனால், ஏற்கனவே கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு, எல் நீன்யோவாலும் மழைப்பொழிவைப் பெறாத தென் கலிபோர்னியா போன்ற பகுதிகளுக்கு இது நல்ல செய்தியல்ல. லா நீன்யா இந்தப் பகுதிகளின் வறட்சியை மேலும் கடுமையாக்கக்கூடும். மேலும் எல்-நீன்யோவைப் போலவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் லா நீன்யா நிகழ்வும் நீடிக்கக்கூடியதால், இப்போதைக்கு சாதாரணமான வானிலையை இந்த உலகம் சந்திக்கப்போவதில்லை. இதன் காரணமாக, உலக நாடுகளும் மக்களும் அதீதமான வானிலையில் வாழ பழகிக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகிறது.
எல் நினொ என்பது வெறும் வானிலை சார்ந்த வார்த்தையாக மட்டுமே எனக்கு தெரிந்திருந்தது. அவை பற்றிய விரிவான விளக்கமும் அதன் விளைவுகள் பற்றிய விளக்கமும் பயனுள்ளதாக இருந்தது. விளக்கப்படங்கள் அருமை. நன்றி கிருஷ்ணன்.