விவசாயிகளும், நபாப்களும்

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் நாட்டில் வேளாண் தீவிரவாதம்

1. அறிமுகம்

வட்டார வரலாறைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சியாக இந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம். மதராஸ் ப்ரஸிடென்ஸியின் செங்கல்பட்டில்,  18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் “ஜாகிர்” என அழைக்கப்பட்ட நிலப்பகுதிகளோடு தொடர்புடையவை நாங்கள் தரும் தகவல்களின் பெரும்பகுதி. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியான, இந்நாளைய செங்கல்பட்டு மாவட்டத்தைக் கொண்ட 2000க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கியது இந்த ஜாகிர். இருப்பினும், ஜாகிர் எனும் பெயரைக் காட்டிலும்  தொண்டைமண்டலம் எனும் பெயரையே இந்நிலப்பகுதியைக் குறிக்கப் பொருத்தமானதாகக் கருதி இந்த நூலில் பயன்படுத்துகிறோம்.
Chola_Pandiya_Kongu_Naadu_Thondai_Nadu_Tamils_TN_Map_TamilNad_Pallavas_Kings_Regions_Territories
இப்பயன்பாட்டிற்குக் குறைந்தது இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக, இந்நிலப்பகுதியில்  குறுகிய வரலாற்றுக் காலமே நிலவிய (பொது வருடம் 1650 – 1760களில்) ஜாகிர் எனும் வருவாய்த் துறைச்சொல், இங்கு இருந்த முஸ்லிம் ஆட்சியைச்  சார்ந்தது . வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தத் துறைச்சொல்லானது இந்நிலப்பகுதியின் சமூகக் கலாச்சாரத் தனித்தன்மையை வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. இதற்கு மாறாக, தொண்டைமண்டலம் எனும் பெயரோ, தொன்மையான தோற்றத்தைக் குறிப்பதாகவும், இங்கிருந்த சமூகக் கலாச்சார வட்டாரத்தைச் சுட்டுவதாகவும் உள்ளது.
பண்டைய காலத்தில் இருந்தே தமிழ் நிலப்பகுதி நான்கு பெரும் மண்டலங்களாக அவதானிக்கப்பட்டது: தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், மற்றும் கொங்கு மண்டலம். இந்த மண்டலப் பகுதிகள் எந்தவொரு குறிப்பிட்ட அரசாட்சி எல்லைகளையும் நிச்சயம் பிரதிபலிக்கவில்லை; ஏனெனில், உள்ளபடியே அரசாட்சிப் பகுதிகளாக இருந்த தமிழ்ப் பேரரசுகள் (உம்: பாண்டிய, சோழ, மற்றும் கொங்கு சேர அரசாட்சிகள்)  மண்டல எல்லை வரையறைக்குள் அரிதாகவே பொருந்துகின்றன.
இருப்பினும், 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரபூர்வப் பதிவுகளும், இலக்கிய மூலங்களும் மண்டலம் என்பது ஒரு சமூகக் கலாச்சார நிலவரையறையாக இருந்திருக்கக் கூடும் என்பதைத் தொனிக்கின்றன.   மண்டலம் எனும் இப்பெயர்ச்சொல்லானது பண்டைய திணை [1] எனும் கருத்தின் மேல் படிந்து எழுந்ததாக இருக்கக்கூட சாத்தியம் உண்டு.
எங்களுடைய முக்கியமான அக்கறை, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குமண்டலம் பற்றியது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதனுடைய அதிகாரபூர்வ ஆட்சிமுறையை மதராஸ் பிரெஸிடென்ஸியில் ஒருங்கிணைத்து, நிலைப்படுத்திக் கொண்டிருந்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். இந்த ஒருங்கிணைப்பின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் தொண்டை மண்டலத்தில்தான் நடந்தேறின. இக்காரணத்தால், ஆய்வுக்குட்பட்ட இந்தக் காலக்கட்டம் நவீனத் தமிழ்வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இந்தக் காலக்கட்டத்தில்தான், “கம்பெனியானது” வருவாய், நிர்வாகம், நீதித்துறையின் கோட்பாடுகளையும், செயல்முறைகளையும் நடைமுறை ஆய்வுக்கு உள்ளாக்கியது. இந்தக் கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளில் பெரும்பாலானவை அடுத்த நூற்றைம்பது ஆண்டு காலனிய ஆட்சியில் இருந்ததோடு, அந்த ஆட்சியையும் வெகுவாகக் கடந்து சுதந்திர இந்தியாவிலும் தொடர்கின்றன.
உதாரணமாக, 1980களின் மத்தியில் இருந்த வருவாய் நிர்வாகப் பணிக்குழுவின் மையக் கோட்பாடுகள் 1800களில் முறையாக்கப்பட்டவையே. அதேபோல, 1970களில் இருந்த கிராமங்களுக்கான நிர்வாகக் கட்டுப்பாடுகளின் அடிப்படை 1810ல் உருப் பெற்று விட்டது. கடைசியாக,  நிலங்களைத் தனியார் உடமையாக ஆக்குவது பட்டாக்கள் வழியே நடத்தப்படலாம் என்று  ’நவீன’காலக் கருத்தானது 1800களில்தான் நடைமுறைக்கு வந்தது.
அதே சமயம், நாம் அடுத்துவருகிற பகுதிகளில் பார்க்கப் போகிறபடி,  பண்டைய சமூக அரசியல் அமைப்புகளில், கோட்பாடுகளில், செயல்பாடுகளில் பெரும்பாலானவை 1800கள் வரை கூடப் பிழைத்திருந்தன. உதாரணமாக, “ஜாதி”, “நாட்டார்” நிர்வாக அமைப்பு, தர்மகர்த்தர்கள், அதிகாரம் குறித்த கோட்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதாரத்தோடு நெய்யப்பட்டு அடர் பிணைவுள்ள கருத்தியல் சமூகக் கட்டுமானமாக இருந்தது.
இத்தகைய சமூகக் கட்டமைப்பு புதிய ஆட்சியாளர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாத விஷயமாக இருந்தது.
18ம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியானது தெளிவாகவே இந்த இரண்டு பிரபஞ்சங்களுக்கு இடையேயான மோதல்களின் காலமாகவே இருந்தது. [இந்த நூலில்] பின்பு காட்டப்போவது போல, இந்த மோதல்களின் காலத்தினைப் பின்பற்றி வந்த அடுத்த ஒன்றரை நூற்றாண்டு காலம் சமரசங்களின் காலமாக இருந்தது. மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைந்து கொள்வதையும், மாற்றங்களை உட்கிரகித்துக் கொள்வதையும் கொண்டிருந்தன இந்த சமரசங்கள்.
அதற்குச் சமமான அளவில், ’வட்டாரச் சூழ்நிலை’யோடு பொருந்துவதற்காக, புதிதாக உருவாகி வரும் சமூக-அரசியல் மரபுகளை மாற்றுவதோ அல்லது இம்மரபுகளை முன்னதாகவே தடுத்து விடுவதும்கூட அடிக்கடி நடந்தன. அப்படி ஒன்றைச் சுட்டுவதனால், ஜாதி, புரவலர் மற்றும் பாத்தியப்பட்டவர் (patron-client system) போன்ற அமைப்புகள் கணிசமான அளவு மறுவரையறுப்புகளை அடைந்தன. இன்னொரு பக்கத்தில், சமத்துவம் மற்றும் தனியுரிமை குறித்த நெறிமுறைகளும், ஜனநாயக அமைப்புகளுடனேயே,  வட்டார சமூகக் கட்டமைப்பில் இணைத்துப் பின்னப்பட்டன.
இங்கனம், சுதந்திரம் பெற்ற இந்திய அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் அமைப்பும், அதிகார அமைப்பும், மற்றைய நிறுவனங்களும் – இவை அனைத்தும் புதுமையும் பழமையும் கலந்தவை. இருப்பினும், இந்தக் கலவையின் ஊடும் பாவும்தான் அக்காலத்திய வட்டார வரலாற்றுக்கு ஏற்ப வெவ்வேறுவித நெய்வுகள் கொண்டனவாக மாறின. நெசவில் உள்ள இந்த வேறுபாடுகள்தான் இன்றைய இந்தியாவின் அதிகார பிரமுகர்களில், அரசியல் செயல்முறைகளில், வேளாண்மை உறவுகளின் பல வேறுபாடுகளின் மையத்தில் உள்ளவை.
வரலாற்று மாற்றங்களும், வரலாற்றுத் தொடர்ச்சிகளும் ஒன்றோடு ஒன்று கூடிவாழும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் இருப்பதிலேயே கவனத்தைச் சட்டென ஈர்ப்பது இத்தமிழ்ச் சமூகமாக இருக்கலாம். நிறைய சுட்டிகள் இது குறித்து உள்ளன. உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் அனைத்துவித மொழியியல் மரபுகளிலும், தமிழ் பண்பாடுதான்,  தொலையாமல் விடாப்பிடியாக தொடர்ந்து வரும் பல அம்சங்களை அதன் காலனியத்துக்கு முந்தைய காலத்தோடு பகிர்ந்து கொண்டு வருகிறது.
அதிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உண்மை, தமிழ்க் கலாச்சாரமானது தனித்துவம் வாய்ந்த தொடர்புப் பரிமாற்றங்களை இஸ்லாமிய கலாச்சாரத்தோடும் கொண்டிருந்தது என்பது. இந்நாட்டின் ஆரம்பகால முஸ்லிம் குடியேற்றங்களில் சில தமிழகத்தில் நடந்தபோது, அரசியலில் முஸ்லிம்களின் தலையெடுப்பை ஒரு குறுகிய காலம் அது கண்டது; அதுவும்கூட ஒப்பீட்டளவில் தமிழகத்தின் ஒரு சிறுபகுதிக்குள்ளாகக் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இக்காரணங்களால், 18ம் நூற்றாண்டுத் தமிழ்க் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் பொது ஆண்டின் முதல் ஆயிரம் ஆண்டுகளைச் சென்று சேர்ந்தவை.
தமிழ்ச் சமூகத்தின் மற்றொரு பிரதான அம்சமாக இருப்பது காலனிய அரசியல்-பொருளாதார, நிர்வாக, மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நடந்த புதுப் பண்பாட்டைப் புகுத்தும் செயல்பாடுகளின் தனித்துவப் போக்கு.
மதராஸ் ப்ரெஸிடென்ஸியின் காலனிய வரலாறானது இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு பிராந்தியங்களின் வரலாறுகளோடு ஒப்பிடுகையில் கணிசமான வித்தியாசங்களைக் காட்டுகிறது. பிரிட்டிஷாரின் பிராந்திய ஆதிக்கம் தமிழகத்தில் அநேகமாக ஒரு முணுமுணுப்புகூட இல்லாமல் சாதிக்கப்பட்டமை, மற்ற பிராந்தியங்களில் இதே ஆதிக்க நிலையை அடையும் வழி மேலதிக வன்முறைகளும், மிக்க துன்பங்களும் கொண்டதாக இருந்ததுடன் முரண்படுகிறது.
எடுத்துக்காட்டாக, கர்நாடகப் போர்களில் முக்கியப் பங்காற்றிய கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழரல்லாதவரே. வடக்கு தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான ஆற்காட்டு நவாபுகள்கூட, கன்னடம் பேசும் மைசூர் பிராந்தியத்தின் ஹைதர் மற்றும் திப்பு, ஃப்ரெஞ்சு, ஆங்கிலேயர், மற்றும் சிறிய அளவில் மராத்தியர்களுக்கு முக்கியத்துவம் தந்த ராணுவ சச்சரவில் வெறும் பிணைக்காய்களாகவே  இருந்தனர்.
அது போலவே, இந்தத் துணைக்கண்டத்தின் வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதையும் அதிர்வுறச் செய்த 1857ன் எழுச்சியானது, ஒரு சிறு எதிரொலியைக்கூட மதராஸ் ப்ரெஸிடென்ஸியில் காணவில்லை. இறுதியாக, சுதந்திரக் கிளர்ச்சியேகூட பிராமணரல்லாதோர் இயக்கத்தில் இருந்து எழுந்த தனி வகையான பிராந்தியப் பிரச்சினைகளால் ஓரம்கட்டப்பட்டது. இந்தத் தேசம் முழுவதிலும், இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் காங்கிரஸுக்கு எதிராக வந்த ஒரே ஒரு,  பொருளுள்ள உள்நாட்டு சமூக, அரசியல் எதிர்ப்பு,  ஜஸ்டிஸ் பார்ட்டி மற்றும் சுயமரியாதை இயக்கம் எனும் உருவங்களாகத் தமிழகத்தில்தான் வந்தது.
சுதந்திரத்துக்குப் பிந்தைய சகாப்தமும் இதே புதிரான வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாடெனும் மாநிலம் மட்டுமே கலாச்சாரத்திலும், சமூகவியலிலும், அரசியலிலும், காங்கிரஸுக்கு  ஒரு தொடர்ந்த பிராந்திய மாற்றாக 1980கள் வரை இருந்தது. ஈவெ ராமசாமி நாயுடுவின் (sic) சுயமரியாதை இயக்கத்தின் சந்ததிகளான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக)க்களின் அதிவேகமான வளர்ச்சி மற்றும் எழுச்சியையும், பின்னர் அவர்களுக்குக் கிட்டிய அரசியல் ஆதிக்கத்தையும் தவிர்க்க முடியாமல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், அவருக்குப் பின்பு வந்த காமராஜ நாடார் போன்றோரின் சக்திமிகுந்த, ஈர்ப்புத்திறன்கொண்ட தலைமையும், அரசியல் சாமர்த்தியமும் தோல்வியையே அடைந்தன.
அதிகாரத்திற்கு வருபவர்கள் எவரோ அவரின் விசித்திரமான அதிர்ஷ்டங்களே தமிழகத்தில் நடந்த இந்த நிகழ்வுகளின் அடிநீரோட்டங்களாக இருந்து வருகின்றன. முதலாவதாக, கடந்த ஐம்பது வருடங்களில் மாநில அளவில் மிகக் குறைந்த தலைவர்களே “தலைவர்” என ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இந்தக் காலக்கட்டத்தில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றவர்களாக ஒரு அரை டஜன் மக்களை பிரித்துக்காட்டுவது சாத்தியமாக இருக்கலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவையோ அதிமுகவையோ சேர்ந்தவர்கள். கவர்ச்சி மிகுந்த தலைவர்களான இவர்கள்கூட பத்தாண்டுகாலம் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் கஷ்டங்களைக் கண்டார்கள்.
அனைத்து அரசியல் குழுக்களின் மிகப்பெரிய அம்சமாக இருந்து வருவது அதிகாரத்திற்கு வந்தவுடன் துண்டாகிப் போவதென்பது (fissiparity). இவற்றுக்கு முரணாக, குறிப்பிட்ட மாவட்டங்களிலும், குறிப்பிட்ட ஜாதிக் குழுமங்களிலும் பல தலைவர்கள் தொடர்ச்சியாக நீண்ட காலச் செல்வாக்கினைக் கொண்டிருந்தார்கள்.
சுருக்கமாக, அரசியல் இயக்கங்கள் குறித்த ஒரு முரண்பாடான சித்திரம் இருக்கிறது: அதிகாரத்தைக் கைப்பற்றும் பாதையில் இருக்கையில் உறுதியான விசுவாசமும் ஒற்றுமையும், அதன் கூடவே அதிகாரப் பங்கீட்டுக்கான போராட்டம் கடுமையாகும்போது வளர்ந்து விடும் பிளவு மனப்பான்மையும்.
ஒருவேளை, தமிழகத்தில் பிரிட்டிஷ் ’ராஜ்’ எனும்  காலனிய அரசை முதலில் நிலைநாட்டுவதும், திடப்படுத்தியதும் எளிதாக இருந்ததற்கான காரணத்தின் ஒரு பகுதி இதுவாக இருக்கலாம். ஆனால், மற்ற காரணங்களும் கட்டாயம் இருக்கவேண்டும். அவற்றை அவிழ்த்தறிய வேர் வரை சென்று பல அறிஞர்களால் நடத்தப்படும் வரலாற்றாய்வுகள் தேவையாகின்றன.
மற்ற விஷயங்களுடன், இந்த நூலானது  இந்தப் பிரச்சினைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது.
தொண்டை மண்டலத்தில் 1795-96 ஆம் வருடங்களில் நடந்த சில சம்பவங்களே இந்த நூலின் மைய உந்துதல். அவற்றுக்குப் பின்புலனாக அப்போதிருந்த சமூக அமைப்பு பற்றிய ஒரு சுருக்கச் சித்திரத்தை இங்கு கட்டிக் கொடுக்கிறோம், இதன் சில அம்சங்கள் கடைக்காலச் சோழர் காலத்திலிருந்து நிலவுபவை (அதாவது, 10 இலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையான காலம்), வேறு சில 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
இந்த ஆய்வைப் போன்ற ஆய்வுகள், இன்றைய சமூக ஆய்வியல்களில் உள்ள மூன்று முக்கியமான இடைவெளிகளை நிரப்ப உதவுமென நாங்கள் கருதுகிறோம்.
முதலில், நவீன காலத்துக்கு முந்தைய  தென்னிந்திய சமூகத்தின் சில அத்தியாவசியமான அம்சங்களைப் வேர் வரை சென்று புரிந்து கொள்ள இந்த ஆய்வு நமக்கு உதவும். இப்போது, ‘மத்திய காலம்’ என்று அழைக்கப்படுகிற காலகட்டத்திலிருந்து, ‘நவீன’ என்று அழைக்கப்படும் காலகட்டத்துக்கு தென்னிந்திய சமூகம் நகர்ந்ததின் இயல்பைத்  துல்லியமாக அறிவதில் ஒரு தகவல் இடைவெளி  இருக்கின்றது.
உதாரணமாக, தென்னிந்தியா பற்றிய பர்டன் ஷ்டைனின்  (1980) ‘பல் கூறு அரசு’ (segmentary state) எனும் கோட்பாடு குறித்த சர்ச்சைகளில் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் சான்றுகளின் போதாமையை எதிர்கொள்கின்றனர். [2]
இந்த ஆய்வு, மத்தியகாலத்துக்கோ, அதற்கு முந்தைய காலங்களுக்கோ எந்தக் கூடுதல் சான்றாதாரங்களையும் கொடுக்காத அதே நேரத்தில், 18ஆம் நூற்றாண்டின் தகவல்களினடிப்படையில், சில சுவாரசியமான, பின்னோக்கிய ஊக நீட்டல்களாலான தொடரைக் கொடுக்க முயல்கிறது. மாற்று வரலாற்றியலை அவசியமானதாகக் கொள்ளவேண்டிய ஒரு சர்ச்சையில் தர்க்கரீதியாகக் காலூன்றும் இடங்களை இத்தகைய ஒப்பீட்டுயூகங்கள் கொடுக்கும்.
இரண்டாவதாக இந்த ஆய்வு, தென்னிந்திய சமூகம் குறித்த ஒரு ஆய்வானது, பரந்த நிலப்பகுதியைச் சாராமல், வட்டார (குறு) நிலப்பகுதியைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று வழக்காடுவதை எங்களுக்கு சாத்தியமாக்குகிறது. ஒரு சமூக ஆய்வாளரை மயக்கும் படுகுழியான சகட்டுமேனிக்கு பொதுமைப்படுத்துதல் எனும் போக்கைத் தவிர்க்க எங்களுக்கு இத்தகைய அணுகுமுறை உதவுகிறது.
உதாரணமாக, ‘பல்கூறு அரசு’எனும் கோட்பாடு குறித்த வரலாற்றியல் சர்ச்சைகளில்,  சூழலின் இயல்பால் வேறுபட்ட நிலப்பகுதிகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் கவனிக்கப்படுவதில்லை.
இந்த சர்ச்சைக்கான ஆவணங்கள் காவேரிப் படுகைப் பகுதியிலிருந்து பெறப்பட்டவை எனும் போது, அதன் வழி பெறப்படும் ஊக முடிவுகள் பெரும்பாலும் தமிழ் நாட்டின் இதர நிலப்பகுதிகளுக்கோ அல்லது ‘தென்னிந்தியாவுக்கே’கூட [3] நீட்டிக் காட்டப்பட்டன.
இந்த சர்ச்சைகளை, தமிழ்நாட்டு வட்டாரங்களின் மாறுபடும் தன்மைகளைக் கருதும் தளத்துக்கு இந்த ஆய்வானது கீழிறக்கச் செய்யும் என நம்பப்படுகிறது.
மூன்றாவதாக, ஓர் இடைவெளி இருக்கிறதே. அது அவ்வளவெல்லாம் காலம் அல்லது இடம் குறித்த இடைவெளியில்லை. மாறாக, அது அறிதலில் உள்ள இடைவெளியே.
இன்றைய இந்தியாவில் சமூகவியல் ஆய்வுகள், சில கோட்பாட்டுக் கூறுகளையே பெரிதும் நம்பியிருப்பவை. அக்கூறுகளாவன, நிலப்பிரபுத்துவம், சுரண்டல், உற்பத்திச் செயற்பாடு, முன்னேற்றம், வளர்ச்சி, மரபு, நவீனத்துவம், இத்தியாதிகள்.. அவை போலவே, ஜனநாயகம், சமத்துவம், ஸோஷியலிஸம், தனிமனித உரிமைகள், இயற்கையான நீதி போன்ற இரவல் விளக்கங்களைச் சார்ந்தே இருக்கின்றன அரசியல்வாதிகள் மற்றும் சமூக மாற்று வடிவமைப்பாளர்களின் சொல் அலங்காரங்களும்.
இந்த இடைவெளியை அடையாளம் காணாமையால் எழும் இன்னல்கள் அளவிடமுடியாதவை என்பதோடு, இந்த இன்னல்கள் சமீபத்தில்தான் கவனத்துக்கே வந்திருக்கின்றன. இதை வலியுறுத்திச் சொல்கிற ஃபாக்ஸ்  (Fox) (1977:ix) இப்படி எழுதுகிறார்  —

கடந்த சில வருடங்களில், மேலை நாடுகளல்லாத நாடுகளில் ஆராய்ச்சி செய்வோர் பல்கலைகளில் நிலவும் ஏகாதிபத்தியத்தைப் பற்றி சர்ச்சைகளை எழுப்புகிறார்கள். அவர்கள், உள்நாட்டுக் குடிமக்களுக்கு அங்கு நடக்கும் ஆய்வுகளால் ஒரு பயனும் கிட்டாதிருப்பதைக் கவனிக்கத் துவங்கி இருக்கிறார்கள். யூரோப்பியர்களின் ‘அரவணைப்பு நோக்கம்’ உள்நாட்டு ஆராய்ச்சிகளை இகழ்ச்சியோடு பார்ப்பதில் உள்ள அபாயங்களைப் பார்க்கத் துவங்கி இருக்கிறார்கள். மேற்கின் தொழில்மயச் சமுதாயத்தின் பெருஞ்செல்வத்தின் அடிப்படையிலேயே நடக்கும் ஆராய்ச்சிப் பரிமாற்றங்களில் இருக்கும் தற்செயல் தன்மையை திசைதிருப்ப முனைகிறார்கள்.

ஃபாக்ஸ் (அதே பக்கத்தில்) மேலும் சொல்கிறார்  —

“அறிவாளர்களின் ஏகாதிபத்தியம்” என்பது யூரோப்பிய மேலும் அமெரிக்கர்களின் சமூக வரலாறுகளின் அடிப்படையில் உருவான கோட்பாடுகளையும், வரையறுப்புகளையும் ஏற்றுமதி செய்து, அவற்றின் வழியே மேற்கல்லாத, தொழில் துறை மயமாகாத சமூகங்களைப் புரிந்து கொள்ள முயல்வது. நகரப் பண்பாட்டு மையப்பார்வை, அல்லது ஜனநாயகத் தேர்தல் முறைகள், அல்லது கூட்டாட்சி முறைகளை வைத்து இந்தியா, ஆஃப்ரிக்கா, மேலும் லத்தின் அமெரிக்க எதார்த்தத்தை அளவிடுதல், ஏதோ மேலைப் பாணிகளே பூர்வ மாதிரிகள்  அல்லது அப்பழுக்கற்றவை போலும், மற்றெல்லாம் இவற்றிலிருந்தே கிளைத்தவை என்றோ, பிறழ்ந்து  போனவை என்றோ பாவிப்பதும்,…

ஃபாக்ஸ் (அதே பக்கத்தில்) இறுதியாகச் சொல்கிறார்  —

யூரோப்பிய அரசியலமைப்புக் கோட்பாடுகளின்படி (மெயினையும் (Maine), மார்கனையும் (Morgan) பின்பற்றி) உறவுமுறை/ எல்லைப் பாகுபாடு ஆகிய பரிமாணத்திலோ, அல்லது (விட்ஃபோகலைப் (Witfoegal) பின்பற்றி) மேற்கத்திய/ கிழக்கத்திய எனும் பிரிப்புகளாலோ மேற்கல்லாத சமூகங்கள் மதிப்பிடப்படும்போது, அந்தப் பாகுபாடுகள் சிறிதும் தொடர்பற்றவையாகவோ, அல்லது வழிதவறச் செய்கிறவையாக இருக்கிற போதும், அந்த [மேற்கல்லாத] சமூகங்களின் அரசியல் அமைப்புகள் மேற்கத்திய பாகுபாடுகளை வைத்தே அலசப்படுகின்றன. ….

மேற்கத்தியப் பாதியில் இருந்து எழுந்த இந்த கோட்பாட்டு வகைப்பிரிப்புகளை ஆழமான அணுகுமுறையில் மறுபரிசீலனை செய்ய இந்த புத்தகமானது வழி செய்யும் என்பது எங்களுடைய எதிர்பார்பார்ப்பு; இந்த புத்தகம் அப்படி ஒரு அலசல் வெளிக்குத் தன்னளவில் செல்லவில்லை என்றாலும், வாசகர்கள் இதில் இருந்து சில அனுமானங்களைப் பெறும் வாய்ப்பு அதிகம். [4]
இனித் தொடரப்போகும் பகுதிகளில் தொண்டைமண்டலத்தில் 1795-96 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு பெரும் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ஒரு வழக்காடலை விரித்துரைக்கப் போகிறோம்.
தற்கால சமூக மானுடவியலிலோ, அல்லது சமூகவியல் ஆராய்ச்சியிலோ வழக்காடல்களைப் பற்றிய ஆய்வுகள் காணக் கிட்டுவது புதியதில்லை. ஆனால், இந்திய மற்றும் மேற்கத்திய சமூகங்களின் வரலாற்று ஆய்வுகளில் குறிப்பிட்ட வழக்குகளையோ, கிளர்ச்சிகளையோ பற்றிய சமூகப் பொருளாதார அலசல்கள் அடிக்கடி காணக் கிட்டுவன அல்ல. எங்கள் அறிவுக்கு தெரிந்த வரை, மத்திய கால யூரோப்பில் மக்கள் கிளர்ச்சிகளைப் பற்றி மோல்லட்டும் (Mollat), ஓல்ஃபும் (Wolff) (1973)ல் செய்திருக்கிற ஆய்வு அரிதானதும், முன்னோடிகள் இல்லாததுமான ஒன்று. இந்தியாவைப் பொறுத்த வரை, வரலாற்றாளர்களுக்கும், சமூகவியலாளர்களுக்கும் [எங்களுடைய] இந்த ஆய்வு பல உள்ளறிதல்களைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
எங்கள் ஆய்வுக்குட்பட்ட இந்த வழக்கு வட தமிழ்நாட்டில், திருமழிசை என்னும் கிராமத்தில் முதலில் துவங்கி, பின் அந்தப் பகுதியிலிருக்கும் பல நூறு கிராமங்களுக்குப் பரவியதால், இதைத் ‘திருமழிசை வழக்காடல்’ என்றே குறிக்கப் போகிறோம்.
இந்த வழக்கைப் பற்றிய ஆய்வு தன்னளவில் படிப்பினைகளைக் கொடுக்கும் நடவடிக்கை; ஆனால், ஒரு வட்டாரம் மற்றும் அதனுடைய வரலாற்றினை சமூகப் பொருளாதாரப் பரப்பில் விரித்து, அதனுள் தன்னை இணைக்கும் நெசவு வேலையை இந்த ஆய்வு மேற்கொள்வது அவசியம்.
அந்த நோக்கில், அதன் காரணமாகவே, எங்களது முக்கிய கவனம் இந்த வழக்கைப் பற்றியே இருக்கிறது என்றாலும், இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழலை உருவாக்கிய பின்புலத்தையும் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் (அத்தியாயம் 2).
புதிய ஆட்சியாளர்களுக்கும் அந்த சமூகத்துக்கும் இடையேயான இந்த வழக்கு குறித்து நடந்த முதல் கட்ட பரிமாற்றங்கள் பற்றிய ஒரு ஆய்வுரை இந்தப் பின்னணி விவரணையைத் தொடர்ந்து வருகிறது (அத்தியாயம் 3). நான்காம் அத்தியாயம் இந்த வழக்கைப் பற்றிய விரிவான உரையாடலைக் கொடுக்கிறது.
 
அத்தியாயம் 5 இல், 19ஆம் நூற்றாண்டின் சம்பவங்களை வைத்து இந்த வழக்கின் பின் விளைவுகளைக் கவனிக்கிறோம். அத்தியாயம் 6, மேலும் விரிவான தளத்தில், 18ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சமுதாயத்தில் கருத்தியல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரபஞ்சத்தை மட்டும் வைத்து நோக்காமல், சில சமூகவியல் கோட்பாடுகள், மற்றும் சமீபத்திய வரலாற்றுப் படைப்புகளின் படிப்பினைகளையும் கொண்டு, இந்த வழக்கைப் பற்றிய அலசலை மேற்கொள்கிறது.

oOo

அடிக்குறிப்புகள்

 1. அது ஒரு பரந்த வட்டாரம் எனும் கருத்தைத் தவிர, மண்டலம் என்ற சொல்லின் மேலும் கறாரான அடிப்படைகளை அடையாளம் காண்பது கடினமான செயல்.  சுமாராகப் பொது வருடம் 2ஆம் நூற்றாண்டிலிருந்து 7 ஆம் நூற்றாண்டு வரை உள்ள கால கட்டத்தில் படைக்கப்பட்டனவாகக் கருதப்படும் அகத்துப்பால் இலக்கியங்களில் இருக்கிற பத்துப்பாட்டுகளில் காணப்படுகிற திணை என்கிற சமூக-சூழலியல் அளவை அல்ல இது. உதாரணமாக, அகத்துப்பால் இலக்கியத்தில் திணை கோட்பாடு பற்றி சிவத்தம்பி (1974) எழுதுகிற, சமூக-பொருளாதார விளக்கங்களைப் பார்க்க. மேலும், சில மண்டலங்கள் நிச்சயமாக சூழலைப் பொறுத்து பலதரப்பட்ட நிலங்களைக் கொண்டிருந்தன. மண்டலம் என்பதை ஒரு அரசியல் அளவையாகக் கருதுவதும் கடினம். ஏனெனில், தமிழ் அரசுகளின் நிஜமான எல்லைகள் மண்டலம் எனத் தெரிய வரும் எல்லைகளோடு பொருந்தியது அபூர்வமாகவே நிகழ்ந்தது.
 2. இந்த வழக்கைப் பற்றி நாம் சுருக்கமாக இங்கு எழுதப் போகிறோம் என்றாலும், இந்தக் கட்டத்தில் ஒன்றைச் சுட்ட வேண்டியது அவசியமாகிறது. இதுவரை ஆய்வுகள் நடத்தியவர்களான ஷ்டைன் (1980), கராஷிமா (Karashima) (1984), சுப்பராயலு (1973), ஹால் (Hall) (1980) ஆகியோரில் எவரும் எந்த நிலப்பகுதிக்கும் தொடர்ந்த காலகட்டத்திற்கான சான்றுகளை அளித்ததில்லை. லட்டனின் (Ludden) (1985) ஆய்வு ஒன்றுதான் தமிழ் நாட்டின் தாமிரபரணி படுகைப் பகுதியில் பொது சகாப்தம் 800 லிருந்து 1800 வரையான காலகட்டத்தின் மீது கவனம் செலுத்துகிறது. லட்டனின் ஆய்வு கூடத் தமிழ்ச் சமூகம் பண்டை சமுதாயத்திலிருந்து நவீன சமுதாயத்துக்கு மாறிய விதத்தைக் கேள்விகளுக்கு உட்படுத்தவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது ஒருக்கால் தென்னிந்தியாவின் வரலாற்று ஆய்வுகளில் ஒரு மிக முக்கியமான இடைவெளியாக இருக்கலாம். நவீன காலத்தைப் பற்றிய வாஷ் ப்ரூக் (Washbrook) (1976) மற்றும் வேறுசிலருடைய ஆய்வுகளோடு, மேற்கண்ட ஆய்வாளர்களின் முயற்சிகளை இணைக்கத் தேவையான ஆய்வுகள் இல்லாததையும் நாம் கவனிக்க வேண்டும்.
 3. பொது சகாப்தம் 1800க்கு முன்பு வரலாறு குறிப்பிட்ட வட்டாரங்களில் மையம் கொண்டிருந்தது என்பதைப் பற்றிப் போதுமான அங்கீகாரம் ஆய்வுகளில் இல்லை. ஒருக்கால், லட்டன் (1985), மர்டன் (Murton) (1979), மேலும் மிசுஷிமா (Mizushima) (1986) ஆகியோரின் ஆய்வுகளை இந்தப் போக்குக்கு மாறான அரிய நிகழ்வுகளாக நாம் காணலாம். நவீன காலத்தைப் பொறுத்த வரை, நிறைய ஆய்வுகள் கிட்டுகின்றன, ஃப்ரைகென்பர்க் (Frykenberg) (1969), நீய்ல்ட் (Neild) (1976) ஆகியோரின் ஆய்வுகள் இத்தகையவை.

 

 1. சந்தேகத்துக்கிடமின்றி, இந்த ஆய்வு இப்படிப்பட்ட பாதைகளில் கிளை பிரிந்து போவதற்கு இடம் தராது. எங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால், திட்டம் போடுவோர், சமூக சீர்திருத்தவாதிகள், புரட்சிவாதிகள், பொருளாதார வல்லுநர்கள், மேலும்  வரலாற்றாளர்களும்கூட பேசிய பல கருத்துகளின் வரலாற்றுணர்வு இன்மையை (ahistoricity)யை அம்பலப்படுத்த மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான்.

oOo

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

[மூலப் புத்தகத்தில் இது இல்லை.]
அ. நபாப் என்கிற சொல் நவாப் என்கிற சொல்லை ஒத்தது, ஆனால் அர்த்தம் வேறு. இது இங்கிலிஷில் சற்று விமரிசனம் கலந்த சொல்லாகப் புழங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவைக் கைப்பற்றிய காலத்தே,  அரசு என்று ஏதும் தலையிட இல்லாததாலும், சட்டம் என்று எதுவும் கையைக் கட்டாததாலும், இந்தியாவின் பற்பல நிலப்பிரதேசங்களிலிருந்தும் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து இங்கிலாந்துக்கு அனுப்பிச் செல்வந்தர்களாக வாழ்ந்தவர்களை நபாப் என்று அந்நாட்டவர் குறிப்பிட்டனர். பின்னாளில் குறுகிய காலத்தில் ஏகமாகச் செல்வம் திரட்டியவர்களையும் குறிக்க இந்தச் சொல் பயன்பட்டது. பொதுவாக நெறி முறைகளை மீறிச் செல்வம் குவித்து, ஆடம்பர வாழ்வு வாழ்வோர் என்ற விமரிசனம் இதில் தொக்கி நிற்கிறது. இது இந்தியச் சொல்லான நவாப் என்பதன் அரசியல் அர்த்தம் இல்லாதது.
 

4 Replies to “விவசாயிகளும், நபாப்களும்”

 1. தமிழகத்தின் வேந்தர்கள் மூன்று.. வெள்ளாளர்கள் குலத்தை சேர்ந்தவர்கள்.. அரச குலத்தவர்கள் மிக மிக சிறுபான்மையரே.. உதாரணமாக சோழ தேசத்தை ஆண்ட கட்டி முதலிகள், நூறு குடும்பத்துக்குள்தான் இருக்கும்..
  மாலிக்கஃபூர் படையெடுப்பில் சுந்தரபாண்டியன் வம்சம் அழிந்த பொழுது, அவரது தம்பி வம்சம் கொங்கு பாண்டியராக தொடர்ந்திருந்தார்.. அவரது வாரிசுகள் இன்று வெகு சிலரே..
  சோழனின் உறவினர் வம்சமான கொங்கு சோழர், இன்றும் கோவை சேவூரில் தங்கள் வரலாற்றை சேவூர் ஈஸ்வரன் கோயில் திருவிழாவில் நிலை நாட்டி வருகிறார்.. அவரது குலம் சில நூறு குடும்பங்களே..

 2. தொண்டை நாடு பிற்காலத்தில் உருவானது.. அதற்கு முன், சோழ தேசத்தின் ஒரு பகுதி.. சோழனுக்கும், தாசிக்கும் பிறந்த மகனான ஆதொண்ட சோழன், தனக்கும் ராஜ்யத்தில் பங்கு வேண்டும் என்று நின்றதால், காஞ்சீபுரத்தை சுற்றிய வனத்தை பிரித்து கொடுத்தனர்.. ஆதொண்ட சோழன், பின்பு பல்வேறு தேசங்களில் இருந்து மக்களை தன் தேசத்தில் குடியமர்த்த முயன்றான்.. ஆனால் இங்குள்ள மக்கள் குடியேற தயாரில்லை .. அதனால் துளு தேசத்திலிருந்தும், இன்னும் பிற தேசத்திலிருந்தும் மக்களை குடியமர்த்தினான்.. பிற்காலத்தில் இதுவே பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டது..
  சேர நாடு என்பது மலையாளம் கிடையாது.. மலை சூழ்ந்த நாடு.. அதாவது இன்றைய கொங்கு நாடு.. மலையாளம் என்பது இதன் ஆட்சிக்குட்பட்ட பகுதி.. சேர நாட்டிலிருந்து சத்ரியர்களை வரவழைத்து ஆட்சி செய்தனர் நம்பூதிரிகள்.. (ஆதாரம் கேரளோள்பதி).. பிற்காலத்தில் வீர கேரளன் மலையாளத்தை ஆண்டு வந்திருக்கின்றனர்..

 3. சேரர்கள் ரோம சாம்ராஜ்ஜியத்துடன் வாணிபம் செய்த கொடுமணல் பகுதி கொங்கு நாட்டில் உள்ளது.. அங்குள்ள காணி தெய்வம் சேர கோத்திரத்தார்களுக்கும்ம், பாண்டிய கோத்திரத்தார்களுக்கும் குல தெய்வமாக இன்றும் உள்ளது..
  அதே போல, கிரேக்க பயணி டால்மி குறிப்பிட்ட முசிறி என்பது கேரளா முசிரி கிடையாது.. அது துறையூர் அருகே இருக்கும் முசிறி.. அவரது குறிப்பிலிருந்தே இது தெரியும்..
  கேரளா சேர நாடு என்பது திருவாங்கூர் மன்னர், பிரிட்டிஷாரிடம் மானியம் வாங்குவதற்காக உருவாக்கிய பொய் வரலாறு.. அவர்களுக்கு சேரமான் பெருமாள் என்று பட்டம் இருக்கிறது என்பதை வைத்து இந்த கதையை உருவாக்கினர்.. அதை, ராம்நாடு சேதுபதி அவர்கள், தன்னுடைய திவானை வைத்து வஞ்சி மாநகரம் என்னும் புத்தகத்தை எழுதி, இந்த பொய் வரலாற்றை அம்பலப்படுத்தினார்.. அந்த புத்தகத்தில் தெளிவாக கொங்கு நாடுதான் சேரநாடு என்று ஆதாரத்தோடு கொடுத்துள்ளார்கள்.. இந்த புத்தகம் வந்த ஆண்டு 1901 .. இன்டர்நெட்டில் கிடைக்கிறது..

 4. அன்புடைப் பெரியீர்
  அனைவருக்கும் வணக்கம்
  சேர சோழ பாண்டியர்கள் மட்டும் தான் தமிழக அரசுகளா? பல்லவர்கள் தமிழர்கள் அல்லரா? அது போகட்டும்
  பாண்டியர்கள் – மதுரை திருநெல்வேலி இராமநாத புரம் அடங்கிய பிரதேசம். பொதுவாக வானம் பார்த்த பூமி. இவர்களுக்கு ஏன் இரட்டைக் கயல்கள் சின்னம் ஆயிற்று
  சோழ நாடு – காடுகளற்ற மருத நிலத்தை உடைய நாடு. இவர்களுக்கு ஏன் வலது முன்னங்காலைத் தூக்கிய நிலையில் புலிச் சின்னம்
  சேர நாடு – இன்றைய மலையாளப் பகுதி .. இருப்பதை விட்டுப்பறப்பதை யாராவது தேடுவார்களா. வானத்தை நோக்கிய நிலையில் வில் அம்பு ஏன் அவர்களுக்குச் சின்னமாயிற்று??
  பல்லவர்களுக்கு -பன்றிக் கொடி ஏன்? இது தொண்டை மண்டலம் எனப்பெயர் பெற்றது, தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்பது முது மொழி அல்லவா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.